எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 30, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

விருந்தாவனம் சொர்க்கபூமியாக மாறி விட்டிருந்தது. ராதைக்குப் பர்சானா வாழ்க்கையை விடக் கானா பங்கு பெறும் இந்த விருந்தாவன வாழ்க்கையை நினைக்க நினைக்கத் தேனாய் இனித்தது. கானாவுடன் ஆன தன் நட்பு மேன்மேலும் இறுகுவதை நினைந்து அவள் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. இன்னொருவனுடம் திருமணத்திற்கு நிச்சயிக்கப் பட்டவள் என்ற எண்ணமே அவளிடம் இப்போது இல்லை. ஏன், கண்ணனுக்கே அது நினைவில் இல்லை என்றே சொல்லலாம்.

2893=நம்மாழ்வார் பாசுரங்கள்
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள்மணவாளனை,
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4

ஐயனுடன் ஆன திருமண வாழ்க்கையைப் பற்றிய கனவே அவளிடம் இப்போது இல்லை. ஐயனை மறந்தே விட்டாள் என்றே சொல்லலாம். பர்சானாவில் ஒரு வானம்பாடியைப் போல் பறந்து திரிந்து கொண்டிருந்த ராதை, இங்கே விருந்தாவனத்திலும் அதே மாதிரியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டாள். ஆனால் பர்சானாவில் அவள் தாய்வழிப்பாட்டி ராதையைத் தன் கண்ணின் கருமணியை விட அருமையாகப் பாதுகாத்து அன்போடு வளர்த்தாள். இங்கே அவளின் மாற்றாந்தாய்மார்களிடம் சாதாரண அன்பே கிட்டாதபோது, அவள் கண்ணின் கருமணியாவாது எங்கனம்?? மாற்றாந்தாய்மார் ராதையின் தந்தையிடம் ராதையின் போக்கைப் பற்றிச் சொல்லிக் கண்டிக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் ராதையின் தந்தையோ இந்த விஷயம் தூசி மாத்திரம் எனக் கருதினார். ஏனெனில் கோபியர் அனைவருமே கண்ணனிடம் பித்துக் கொண்டு அலைந்தனர். அதே சமயம் வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு குடும்பவாழ்க்கையையும் ஒழுங்காகவும், அழகாகவும் நடத்தி வந்தனர்.

2940
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என
வள்ளலேகண்ணனேயென்னும், பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்
கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7

ஆகையால் இது கண்ணனின் உருவ அமைப்பும், அவன் பழகும் விதமும் அனைவரையும் கவரும் வண்ணம் இருப்பதைக் கவனித்திருந்த ராதையின் தந்தை ஐயனோடு ராதையின் திருமணம் முடிந்துவிட்டால் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால்??????? கண்ணனோ பெரிய பையனாய் வளர்ந்து கொண்டிருந்தான். இப்போது காட்டிற்கு ஆநிரைகளை அழைத்துச் சென்று மேய்த்து வரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தான். யசோதைக்கோ தன் மகன் சென்று வரும் அழகைக் காணவே, அதைப் பற்றிப் பெருமை அடிக்கவே நேரம் போதவில்லை.

244/ பெரியாழ்வார் பாசுரங்கள்
சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூ
கோலப்பணைக்கச்சும்கூறையுடையும் குளிர்முத்தின்கோடாலமும்
காலிப்பின்னேவருகின்ற கடல்வண்ணன்வேடத்தைவந்துகாணீர்
ஞாலத்துப்புத்திரனைப்பெற்றார் நங்கைமீர். நானோமற்றாருமில்லை. (2


251:
கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்கு
கட்டியசோறும்கறியும்தயிரும் கலந்துடன்உண்டாய்போலும்
ஊட்டமுதலிலேன்உன்தன்னைக்கொண்டு ஒருபோதும்எனக்கரிது
வாட்டமிலாப்புகழ்வாசுதேவா. உன்னைஅஞ்சுவன்இன்றுதொட்டும். 8.

இது இவ்வாறிருக்க, கண்ணனின் லீலைகளின் தாக்கம் விருந்தாவனத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஒரு சமயம் பசுக்களின் கூட்டத்தில் இருந்த ஒரு பசு திடீரென ஏதோ பிசாசு பிடித்தது போல் நடந்து கொண்டு அனைவரையும் முட்டித் தள்ள ஆரம்பித்தது. கோபியர் அதனருகே செல்லக் கூடமுடியவில்லை. கோபர்கள் யாராலும் அதைப் பிடித்து அடக்கிக் கட்டிப் போடமுடியவில்லை. கண்ணன் தன் சகாக்களோடு விளையாடும் இடத்திற்கு ஒருநாள் வந்த அந்தப் பசுவைக் கண்ட மற்றப் பையன்கள் பயந்து, அலறி, விழுந்தடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள். கண்ணனையும் ஓடிவரச் சொல்லிக் கத்தினார்கள். நம் கண்ணனா கேட்பவன்?? அந்தப் பசுவுக்கு எதிரேயே நின்று கொண்டு அதைத் தன்னிடம் ஓடிவரும்படியாக அழைத்தான் கண்ணன். மேலும் ஆஹா, ஓஹோ என சப்தங்கள் செய்து அந்தப் பசுவை மிரட்டியதோடு அல்லாமல் அது கோபம் கொள்ளும்படியும் செய்தான். பசு கோபத்தோடு கண்ணனை முட்டித் தள்ள தருணம் பார்த்திருந்தது.

கண்ணனோ எவ்வாறோ அதன் கவனத்தைத் திருப்பி விட்டுப் பின்னால் மெல்லச் சென்று அதன் கழுத்திலிருந்து தொங்கிய கயிற்றை எடுத்து அருகே இருந்த மரத்தோடு சேர்த்துக் கட்ட., தனக்குப் பின்னால் ஏதோ சதி நடப்பதை உணர்ந்த பசு கோபத்தோடு திரும்பிக் கண்ணன் மேல் பாய, கண்ணன் சரியான நேரத்தில் சட்டென விலக, வந்த வேகத்தில் மரத்தில் முட்டிக் கொண்ட பசுவின் மண்டை உடைந்தது. பசு இறந்தது. இது என்னமோ புத்தி சாதுரியத்தோடும், யோசனையோடும் கண்ணன் செய்தான் எனினும் மற்ற கோப, கோபியர் இதை ஓர் மாபெரும் அதிசயமாகவும் கண்ணன் தங்களைக் காக்கவந்த கடவுள் எனவும் கருதி அவனைப் போற்றிப் புகழ்ந்த வண்ணம் இருந்தனர். இம்மாதிரியான செயல்களும் அவற்றில் கண்ணன் ஈடுபட்டு வெற்றி அடைந்து வருவதும் மெல்ல மெல்ல மதுராவுக்குச் சென்று அங்கிருந்து கம்சன் காதுக்கும் போய்ச் சேர்ந்தது. கண்ணனோ எனில் தான் ஏதோ அதிசயம் நிகழ்த்தியதான அறிகுறி துளிக்கூட இல்லாமல் சாதாரணமாய்த் தானுண்டு தன் வேலை உண்டு என இருந்தான். நாட்கள் சென்றன.

கண்ணன் வளர்ந்து மெல்ல மெல்ல வாலிபப் பருவத்துக்கு வந்து கொண்டிருந்தான். பலராமனோ ஒரு மல்லன் போல் உருண்டு திரண்ட தோள்களோடு மிக மிக வலிமையோடு வளர்ந்திருந்தான். கண்ணன் சிறுவனாய் இருந்த காலத்திலேயே அவனோடு சேர்த்து வளர்க்கவேண்டி கண்ணனின் சிற்றப்பன் ஆன தேவபாகன், தன்னுடைய மூன்றாவது குமாரன் ஆன உத்தவனை கோகுலத்துக்கு அனுப்பி வைத்திருந்தான். கண்ணனோடு கூடவே அவனும் விருந்தாவனத்திற்கும் வந்திருந்தான். இவர்களோடு ஸ்ரீதாமா என்னும் சிறுவனும் கண்ணனோடு பாலியத் தோழனாக இருந்தான். நால்வரும் சேர்ந்து கொண்டு ஒருநாள் காட்டை நோக்கிச் செல்லும்போது, யாராலும் அடக்க முடியாத காளை ஹஸ்தினைக் கண்ணன் அடக்குகின்றேன் என்று பந்தயம் வைத்திருப்பது பற்றிப் பேச்சு வருகின்றது.

பலராமன் நாளைக்குக் கடைசிநாள் எனவும், கண்ணனால் அந்தக் காளையை அடக்கவே முடியாது என்றும் இந்தப் பந்தயத்திலிருந்து விலகும்படியும் சொல்லுகின்றான். கண்ணனோ கேட்கவில்லை. நாளை வரை நேரம் இருக்கே. நாளை மாலைக்குள் காளையை அடக்கிக் காட்டுகின்றேன் என்று சொல்ல, உத்தவனோ தான் விளையாட்டுக்குச் சொன்னதாகவும், இந்தக் கடுமையான பந்தயம் வேண்டாம் என்றும் சொல்ல, ஸ்ரீதாமா அதை ஆமோதிக்கின்றான். நந்தனுக்குத் தெரிந்தால் நந்தனும் இதை ஆதரிக்க மாட்டார் என்றும், அதிலும் நந்தனின் உயிரான கண்ணன் காளையை அடக்கப் போகும் விஷயம் தெரிய வந்தால் நந்தன் உயிரையே விட்டு விடுவான் என்றும் சொல்லுகின்றான்.

படங்கள் உதவி: கூகிளார். நன்றி.

Wednesday, May 27, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

இதையே இன்னொரு விதமாயும் சொல்லுவதுண்டு. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய ஆடைகளைக் களைந்து விட்டு கண்ணனைப் பரிபூரணச் சரணாகதி அடைந்தால், அவன் தன்னிடம் உள்ள ஞானமாகிய ஆடையைக் கொடுத்து நம்மை உய்விப்பான் எனவும் சொல்லுவதுண்டு. எந்த அர்த்தத்தில் இருந்தாலும் இது ஒரு மிக அரிதான, தத்துவார்த்தமான பொருளை உள்ளடக்கியது. ராதையும், கிருஷ்ணனும் கூடி இருந்து களிப்பது என்பதே நம்மிடம் உள்ள ஜீவசக்தியானது பரமாத்மாவின் ஆத்ம சக்தியோடு இணைவதையே குறிக்கும். கண்ணனின் ஜீவசக்தி ராதை. கண்ணனின் ஜீவசக்தி அவன் படைத்த நாம் எல்லாருமே ஆவோம். நம்மைப் படைத்துக் காத்து, உய்விக்கும் வழியும் இவ்விதம் காட்டுகின்றான் கண்ணன். அவனையே பரிபூரணமாய் சரணாகதி அடைவதன் மூலம் நாம் பேரின்பத்தைப் பெறமுடியும். (கூடியவரையிலும் வார்த்தைகளை எளிமையானதாய்ப் புரிந்து கொள்ளும்படி சொல்ல முயன்றிருக்கிறேன். தத்துவார்த்தமான விளக்கம் எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது.)

நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5.

அதே சமயம் கண்ணன் நம்மிடம் மட்டும் தனியான அன்பு வைத்திருக்கின்றான் எனச் செருக்கும் கொள்ளலாகாது. அப்போது கடவுள் நம்மிடமிருந்து மறைந்துவிடுவான். இங்கே கடவுள் மறைவான் என்பது நம்மிடம் உள்ள நற்குணங்கள் மறைவதையே குறிக்கும். என்றாலும் அன்றாட வாழ்க்கை நெறிக்கு ஏற்ப இதைப் பார்த்தோமானால் ஒவ்வொரு கோபரும், ஒவ்வொரு கோபியும் கண்ணன் தன்னிடம் மட்டுமே தனியான அன்பு காட்டுவதாய்ச் செருக்கடைந்தனர். இதை நாராயண பட்டத்திரி

“நிலீய தேஸெள மயி மய்யமாயம்
ரமாபதிர் விஸ்வ ம்நோபிராம:
இதிஸ்ம ஸர்வா: கலிதாபிமாநா:
நிரீக்ஷ்ய கோவிந்த திரோஹிதோ பூ:”

என்று சொல்லுகின்றார். ஸ்லோகத்தின் அர்த்தம், என் லக்ஷ்மீகாந்தனாகிய கண்ணன், என் அருமைக் காதலன், என்னிடம் மாத்திரம் தனிப்பட்ட அன்பு பூண்டிருக்கின்றான்.” என எண்ணிச் செருக்குற்றிருந்தனர். கண்ணன் அவர்களிடமிருந்து மறைந்துவிட்டான். அப்போது ராதை மட்டும் செருக்கடையாமல் இருந்ததால் அவளை மட்டும் தனியே அழைத்துச் சென்றுவிட்டான். இங்கே ராதை பூரண ஞானம் பெற்றவர்களைக் குறிப்பாள். சாதாரண மனிதர்களாகிய நாம் இறை அருளையும், இறைவனையும் பூரணமாய்ப் புரிந்து கொண்டுவிட்டதாய்ச் செருக்குக் கொள்கின்றோம் அல்லவா? அதே ஞானியரும், யோகியரும் அவ்விதம் செருக்கடைவதில்லை. அவர்களுக்குப் பரிபூரணப் பேரானந்தம் கிட்டியும், அதை வெளிக்காட்டுவதில்லை. ஆகவே இறைவன் அவர்களோடு எப்போது இருக்கின்றான்.

‘ராதாபிதாம் தாவதஜாத கர்வாம்
அதிப்ரியாம் கோபவதூம் முராரே:
பவாநுபாதாய கதோ விதூரம்
தயா ஸஹ ஸ்வைரவிஹார காரீ:”

பட்டத்திரி சொல்கின்றார். “முராரியே, ராதை மட்டும் கர்வம் கொள்ளாதிருக்கத் தாங்கள் ராதையை அழைத்துக் கொண்டு தனியே சென்று ராஸக்ரீடையை நடத்தினீர்கள் அல்லவோ?”

பின்னர் கோபியர் கண்ணனைக் காணாமல் விசனமுற்றனர். இதோ கண்ணன், இதோ அவன் புல்லாங்குழலின் இனிய கீதம்! என ஒருத்தி சொல்ல, மற்றொருத்தி, இல்லை, இல்லை, இதோ என்னோடு கண்ணன் விளையாடுகின்றானே எனச் சொல்ல மற்றும் சிலர் கண்ணன் எங்களை விட்டு விட்டு விளையாடப் போய்விட்டானோ என அழுது அரற்றினார்கள். எந்நேரமும் கண்ணன் நினைவிலேயே இருந்த அவர்கள் தங்கள் மனக்கண்ணால் கண்ணனைக் கண்டு இதோ என்னெதிரில் இருக்கின்றானே என மயங்கினர். அப்போது தனியே அழைத்துச் சென்ற ராதைக்குக் கண்ணன் தனக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாய் அஹங்காரம் மேலிடக் கண்ணன் முற்றிலும் மறைந்தான். ராதை அழ ஆரம்பித்தாள். ராதையின் அழுகுரல் கேட்ட கோபியர் ஓடோடி வந்து பார்க்க கண்ணன் ராதையிடமும் இல்லைஎனக் கண்டு அனைவருமே தேட ஆரம்பித்தனர்.

பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6.

கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9.

இங்கே கர்வம் கொண்ட ராதை, கடவுளைக் கண்டு ஆனந்தித்த ஞானியருக்கும், யோகியருக்கும் பரிபூரண ஆனந்தத்தை உணர்ந்து அனுபவித்த பின்னரும் ஒரு சிலருக்கு அதனால் ஏற்படும் கர்வத்தைக் குறிக்கும். இறைவனின் கருணையால் தங்களுக்குக் கிட்டிய பேரானந்தத்தை எண்ணி கர்வம் மேலிடுவதைக் குறிக்கின்றது. தங்கள் யோகத்தாலும், ஞானத்தாலும் அன்றோ இத்தகைய பெரும்பேறு? என எண்ணத் தோன்றியதைக் குறிக்கும்.


அனைவரும் கண்ணனைத் தேடி அலைந்தனர். காட்டில் நாற்புறமும் இருட்டுச் சூழ்ந்து கொண்டது. ஆனால் கண்ணன் இல்லை. யமுனைக்கரையில் அலையாய் அலைந்தனர். பிரலாபித்தனர். கண்ணனின் அருங்குணங்களைப் போற்றிப் பாடினார்கள். புகழ்ந்து பாடி இத்தகையதொரு அருமையான செல்வம் நம்மிடையே இருந்தும் நாம் நமது அறியாமையால் தொலைத்தோமே என எண்ணிக் கலங்கினார்கள். இது கஷ்டம் வரும்போது மட்டும் நாம் இறைவனைத் தேடி, அவனின் பெருங்கருணையை யாசிக்கும் சாமானியரின் குணத்தை இங்கே சுட்டும். என்றாலும் அப்படி இருந்தாலும் இறைவன் கருணை புரியவே செய்கின்றான். வருத்தத்தாலும், துக்கத்தாலும் மனம் கலங்கி இறைவனின் பேராற்றலை எண்ணிக் கண்ணீர் விட்ட வண்ணம் இருந்த கோபியர் மனம் மகிழும் வண்ணம் கண்ணன் அவர்கள் எதிரில் தோன்றினான். ஆஹா, மீண்டும் கண்ணனைச் சந்திப்போமா? அவன் அருட்பெருங்கருணை நமக்குக் கிட்டுமா என எண்ணிக் கலங்கித் தவித்த கோபியருக்குக் கண்ணன் மீண்டும் தரிசனம் கொடுத்ததும் திகைத்துத் திணறித் திக்கு முக்காடிப் போனார்கள். இறைவன் நம்மைக் கைவிட்டுவிட்டான். நாம் வாழ்க்கைப் பெருங்கடலில் மூழ்கிவிட்டோம் என எண்ணிக் கலங்கும் நமக்கு எங்கிருந்தோ ஒரு உதவிக் கரம் நீண்டு, அந்தக் கரத்தின் உதவியால் நாம் மீண்டு வருவதை இது குறிக்கும். இறைவனின் பெருங்கருணையைக் கண்ட கோபியர் பேரானந்தம் அடைந்து என்ன செய்வது என அறியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றனர்.

கதிவிதா க்ருபா கேபி ஸர்வதோ
த்ருத தயோதயா: கேசிதாஸ்ரிதே
கதிசிதீத்ருஸா மாத்ருஸேஷ்வபீத்
யபிஹிதோ பவாந் வல்லவீ ஜநை:”
இறைவனின் கருணை என்பது இயல்பானது. இயற்கையானது. சற்றும் வித்தியாசமில்லாமல் எல்லாரிடமும் பொங்கிப் பிரவாஹிக்கும் வல்லமை கொண்டது. எனினும் இங்கே கோபியர் சொல்லுவது என்னவென்றால் தயை என்பது பலவிதமாய் இருந்தாலும், இயற்கையாய் தயை புரியும் சிலரைப் போல், அல்லாமல், அண்டியவர்களிடம் மட்டும் கருணை புரிபவர்களைப் போலும் அல்லாமல், கண்ணா, நீ எங்களிடம் இரக்கம் இல்லாமல் இருந்துவிட்டாயே? என உரிமையோடு கோவிக்கின்றனர். என்றாலும் கண்ணன் அவர்கள் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு , “ஏ, கோபியர்களே, உங்களைப் போல் பிரியமானவர்கள் எனக்கு வேறு யாரும் இல்லை. உங்கள் தவறை நீங்கள் உணரவேண்டும் என்றே நான் சற்று நேரம் மறைந்து இருந்தேன். நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். இனி என்பால் உங்கள் பிரேமையும், உங்கள் பால் என் பிரேமையும் பல்மடங்குப் பெருகும். கவலை வேண்டாம். உங்களைக் கைவிடவே மாட்டேன்.” என உறுதி அளிக்கின்றான்.

Sunday, May 24, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!


இந்த ராஸக்ரீடையைப் பற்றி பாகவதம் என்ன சொல்லுகின்றது என்பதை நாராயணீயம் ஸ்லோகங்கள் மூலம் பார்ப்போமா? கண்ணனின் வேணுகானத்தில் இருந்து கிளம்பிய மனதை மயக்கும் இன்னிசையால் கோபியர் கவரப்பட்டனராம்.

“ஸம்மூர்ச்சநாபிருதித ஸ்வரமண்டலாபி:
ஸம்மூர்ச்சயந்த மகிலம் புவநாந்தராலம்:
த்வத்வேணுநாத முபகர்ண்ய விபோ த்ருண்ய:
தத்தாருஸம் கமபி சித்த விமோஹமாபு:

கண்ணனின் குழலில் இருந்து கிளம்பிய இன்னிசையின் ஸ்வரங்களால் உலகு அனைத்துமே மயங்கியது. ஏதோ சொப்பன லோகத்தில் சஞ்சரிப்பது போல் உணர்ந்தனர் அனைவருமே. இளம் மங்கையரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்கள் அனைவரும் விவரித்து உரைக்க முடியாத ஒரு பேரின்பத்தைப் பெற்றதாய் உணர்ந்தனர். அனைவரும் வனத்திற்கு வந்து கண்ணன் காத்திருக்கும் இடத்தில் கூடினார்கள்.

சந்த்ரகரஸ்யந்த லஸத்ஸுந்தர யமுநாதடாந்த வீதீக்ஷு!
கோபி ஜனோத்தரீயை ராபாதித ஸம்ஸ்தரே ந்யஷீதஸ் த்வம்!!

யமுனை நதிக்கரையே நிலவொளியால் அழகு மிகுந்து ஒரு சொர்க்கபூமியாகக் காணப் பட்டது.
கோபிகைகள் தங்கள் மேலாடைகளை விரிப்பாய் விரித்து அமரத் தாங்களும் அமர்ந்தீர்கள். இங்கே கோபிகளின் ஆடைகளைக் கண்ணன் களைகின்றானே என்ற ஒரு கேள்வி எழுகின்றது. ஆடை துறத்தல் என்பதின் உள் நோக்கம் இங்கே அனைத்தும் துறத்தல் என்று ஆகும். பொதுவாய் ஆடை இல்லாமல் யாரும் அவர்களைப் பார்க்க விரும்ப மாட்டார்கள் அல்லவா? ஆடை ஒரு கெளரவம், அந்தஸ்து தருகின்றது. ஆடை அகங்காரத்தையும் சேர்த்தே தருகின்றது. அத்தகையதொரு ஆடையானது இறைவனிடம் நம்மைச் சேரவிடாமல் நம் புத்தியை, மனதை மூடுகின்றது, மூடிக் கொள்கின்றது. அதன் வெளிப்புற அலங்காரங்களையும், இனிமையான பேச்சுக்களையும் கேட்டு மயங்கும் நாம் இறைவனிடம் சேருவதில்லை. நம் அகங்காரமே நாம் என எண்ணிக் கொண்டு அதிலேயே மூழ்கிப் போகின்றோம். ஆடை அனைத்தையும் துறத்தல் என்பது இங்கே வெட்கத்தை விட்டு இறைவனைச் சரணாகதி அடைவதைக் குறிக்கும் ஒன்று. ஆண்கள் இரு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிட்டாலும் பெண்கள் பொதுவாக அப்படி வணங்குவதில்லை. ஆனால்? இங்கேயோ? ஆடைகளைத் துறந்து நிர்வாணமாய் நிற்கும் கோபியர் ஆடையை வேண்டிக் கண்ணனிடம் தங்கள் கைகளை மேலே தூக்கிக்கொண்டு வணங்கி வேண்டுகின்றனர். இங்கே கோபியர் நாம் அனைவருமே. கோபர்கள், கோபியர் அனைவருமே இங்கே கோபியராய் உருவகம் செய்யப் பட்டுள்ளனர். கண்ணனின் அரசாட்சியில் கண்ணன் ஒருவனே ஆண்மகன். மற்றவர் அனைவரும் பெண்களே. இதையே மீராபாயும் தன்னைப் பெண் என்பதால் பார்க்க மறுக்கும் ஹரிதாஸரிடம் கூறுகின்றாள்.

ஆகவே நம் புத்தியை மயக்கும் அகங்காரம் என்னும் ஆடையைத் துறந்து கண்ணனைச் சரணம் என அடைந்தோமானால் அவன் நம்மைக் காத்து அருளுவான். மோட்சம் கொடுப்பான் என்பதே இதன் தாத்பரியம். மேலும் இதில் பின்னால் வரும் ஒரு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடாகவும் நாராயண பட்டத்திரி சொல்லுகின்றார். கெளரவ சபையில் அனைவர் முன்னாலும் அவமானப் படுத்தப் பட்ட திரெளபதிக்கு ஆடைகளை அளிக்க வேண்டும் அல்லவா? அதற்கு முன்னேற்பாடாகக் கண்ணன் இங்கே தன் அடியாரான கோபியரின் ஆடைகளைக் களைந்தான் என்றும் சொல்லுகின்றார். ஆகவே இதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு படிக்கவேண்டும் அனைவரும் என வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

Saturday, May 23, 2009

நான் கடவுளைக் கண்டேன், ஒரு குழந்தை வடிவிலே!


நம்ம வாழ்க்கையில் அதுவும் உப்புச் சப்பற்ற வாழ்க்கையில் ஒரு குழந்தை நுழைந்தால் ஏற்படும் அதிசயங்களை என்னவெனச் சொல்லுவது? அன்றாட வேலைகளில் மாற்றம் ஏற்படுவதோடு மட்டுமில்லை. அதை அந்தக் குழந்தையின் வசதிக்கு ஏற்றாற்போல் நாமே மாத்திக்கிறோம். அதைப் பெரிசா எடுத்துக்கறதில்லை. அது சிரிச்சால் நாமும் சிரிக்கிறோம். அது அழுதால்?? நம் மனமும் அழுகின்றது. நம்ம வேலையைச் செய்ய அது அனுமதி கேட்டுட்டே செய்யறோம். அதில் நமக்கு எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் நம் சுயத்தை இழக்க மனப்பூர்வமாய்ச் சம்மதிக்கின்றோம். இதே எல்லார் கிட்டேயும் இப்படியா இருக்கோம்?

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
!" என்ற பாரதியின் வரிகளின் அர்த்தம் பாரதி எப்படி அனுபவிச்சிருப்பார்னு சொல்லுகின்றது. குழந்தையே ஓர் அற்புதம். அதுவும் பெண் குழந்தையின் அற்புதங்களைச் சொல்லி மாளாது. ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு அழகு.திடீர்னு சின்னக் குழந்தையாய் நடந்துக்கும், ஒரு சிநேகிதி போலப் பழகும், ஒரு சமயம் அதனிடம் தன்னை மீறி வெளிப்படும் தாய்மை உணர்வு. நீங்க பேசாமல் உட்கார்ந்திருந்தால் வந்து உங்களைச் சமாதானம் செய்து விளையாட வைப்பதும், நீங்க தும்மினால், "Bless You " என்று சொல்லுவதும், எல்லாத்திலேயும் மேலே நம்மைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதும். அப்பா! அதிலே ஏற்படும் ஆனந்தமே தனிதான். பெற்ற குழந்தைகள் பெயர் சொன்னால் கோபம் வருமே. ஆனால் இப்போ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

கடும்புயலுக்குப் பின்னர் வெளிக்கிளம்பும் சூரியனைப் பார்த்தால் ஏற்படும் சந்தோஷ உணர்வை விட அதிகமாய் அந்தக் குழந்தை நம்மைப் பார்த்துச் சிரிக்கும் போது ஏற்படுகின்றது. வீட்டில் உள்ள சாமான்கள் எல்லாம் கண்டபடி வாரி இறைத்திருப்பதும் ஓர் அழகு. நாம் பலகாலம், சின்ன வயசிலே இருந்து ரொம்பப் பத்திரமாய் பொக்கிஷம் போல் வைச்சிருக்கும் டயரியை அது எடுத்துக் கிழிச்சால் கோபம் வரதில்லை. ஆனால் நமக்கு அது முக்கியம்னு யாரு சொல்லிக் கொடுத்திருப்பாங்க? தெரியலை. திரும்பக் கொடுத்துட்டு, "I am sorry, I didn't mean to" என்று சொல்லும்போது கண் தளும்புகிறது.

"குழலினிது, யாழினிது" என்று சொன்ன வள்ளுவனும் இதைக் காட்டிலும் பெரிசாய் அனுபவம் பெற்றே சொல்லி இருப்பான். எத்தனை இனிமையான சங்கீதமாய் இருந்தாலும் இதுக்குப் பின்னர் தான். இந்தக் குரல் நம்மை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்கின்றது. துன்பத்தில் இருந்து ஆனந்தத்துக்கு அழைத்துச் செல்கின்றது. உங்கள் உடல் துன்பம், மனக் கஷ்டம் என்பதையே மறக்கச் செய்கின்றது. எல்லாத்துக்கும் மேலே வாழ்க்கையை உயிர்ப்புடனும் வைக்கின்றது. உடல், உள்ளம் இரண்டும் புதிய ஜீவசக்தியால் நிரம்பி உள்ளது. குழந்தையின் முகத்திலே கோடித் துன்பம் போகும் என என் அம்மா சொல்லுவா. அது எத்தனை உண்மை! இப்போ நாங்க எல்லாருமே பேசறது மழலை தான். திரவமான ஆகாரங்கள் எதாய் இருந்தாலும், அது இப்போ எங்களுக்கு, "கமகம்" தான். பால், காஃபி, டீ, குடிக்கும் தண்ணீர் எல்லாமும். அதே போல் சாப்பிடும் திடப் பொருள் எல்லாம், "மம்மம்" தான். தோசை, இட்டிலி, சப்பாத்தி, சாதம், பொங்கல் எல்லாமுமே. வேறே பேரே கிடையாது இன்னும் கொஞ்ச நாட்களுக்கு. அப்புறமும் நாங்க இரண்டு பேர் மட்டுமே கொஞ்ச நாட்கள் இதைச் சொல்லிட்டு இருப்போம். :(((((((( என்றாலும் மறக்காது.

"அவ்வுலகம் சென்று வந்தேன்
அமுதம் குடித்து வந்தேன்,
பொன்னுலகம் போவதற்குப்
புது உடல் வாங்கி வந்தேன்"
என்பது இங்கே சரியாய் இருக்குமோ? ஆனால் எல்லாத்திலேயும் ஒண்ணே ஒண்ணுதான் நம்மாலே முடியலை. அவள் என்ன கேட்டாலும் வாங்கித் தர ஆசைதான். உலகத்தின் உச்சியில் இருக்கிறாப்போல் இருக்கு. யானை கேட்டாலும் வாங்கிக் கொடுத்துடலாம். ஆனால் அந்த யானையைப் பானைக்குள் அடைனு சொல்றது தான் முடியலை! :)))))))))))) கிருஷ்ணதேவராயரும், தெனாலி ராமனும் பட்ட கஷ்டம் எப்படி இருக்கும்னு புரியுது. உங்களுக்கு யாருக்கானும் தெரிஞ்சால் சொல்லுங்க. :)))))))))))))

Friday, May 22, 2009

அனைவருக்கும் நன்றி.

எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றி. கண்ணன் வருவான் தொடர் இன்னும் இரு நாட்களில் தொடர எண்ணம் இறைவன் சித்தம் எப்படியோ அப்படியே. இவ்வளவு நீண்ட நாட்கள் எழுத முடியாமல் போனதில்லை. :( எனினும் இதுவும் ஒரு அனுபவம், இதுவும் கடந்து போகும். மீண்டும் அனைவருக்கும் நன்றி.

Friday, May 15, 2009

இறைவன் கொடுத்த வரம்!

ஒவ்வொரு மூச்சும் இறைவன் கொடுத்த வரம் தான். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இதை ஒவ்வொரு கணமும் உணர்கின்றேன். இந்த மாதிரி அட்டாக் வரும் ஒவ்வொரு முறையும் அதுவா, நானா என்றே இருக்கிறது. ஆனாலும் இறைவன் அருளால் சமாளித்துக் கொண்டு வருகிறேன். என்றாலும் இம்முறை ரொம்பக் கஷ்டமாய் இருக்கு. வெயில் காரணம்னு நினைக்கிறேன். இது வரையிலும் எழுதி வைத்தவைகளை ஷெட்யூல் பண்ணி வச்சுப் போட்டாச்சு. இனிமேல் எழுதணும். அதுக்கு இப்போ தெம்பு இல்லை. வழக்கமான வேலைகள் எல்லாமே மாறிப்போயிருக்கு. மறுபடி தினசரி நடைமுறைக்கு வர எத்தனை நாளாகுமோ தெரியாது. தாங்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுக்கும் இறைவனுக்கும் நன்றி. தொலைபேசியில், தனி மடலில், பின்னூட்டங்களில் என நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.

Wednesday, May 13, 2009

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்!



---------- Forwarded message ----------
From: revathi narasimhan <bounces@list.moveon.org>
Date: Tue, May 12, 2009 at 1:35 PM
Subject: revathi narasimhan sent you a video
To: Geetha Sambasivam <sivamgss@gmail.com>


Dear Geetha,

Your friend revathi narasimhan sent you the following video from CNNBC: "Geetha Sambasivam Announced as 2009 Mother of the Year."

Watch it here:

http://news.cnnbcvideo.com/?nid=T9_JhLH71S0jgjv.04vMMjE0NDM5OTQx&referred_by=16855196-Jx_Khmx

** This message certified virus-free by ViruMail 2.1 **


கொஞ்சம் ஓவராய் இருக்கோ?? இருக்குனு அம்பி சொல்றார். பங்களூர் புகையிலே இங்கே எனக்கு இன்னும் வீசிங் ஜாஸ்தியாகுது. எல்லாரும் பார்த்து எஞ்சாய் பண்ணுங்கப்பா! திவா தெரியலைனு சொல்றார். எக்ஸ்ப்ளோரரிலே நல்லாவே தெரியுது. பிரவுசர் நெருப்பு நரியும், லினக்ஸ் இயங்குதளமும் இருந்தால் தெரியாதோனு நினைக்கிறேன். ஆகவே உஜாலாவுக்கு மாறிட்டுப் பார்த்துத் தாராளமா உங்க பின்னூட்டம், முன்னூட்டம், பாராட்டு, வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். கொஞ்சம் உடம்பு சரியானாப்போல ஒரு எண்ணம். நன்றி, வல்லி சிம்ஹனுக்கு!