எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 25, 2017

நவராத்திரி ஆறாம் நாளைக்கான தகவல்கள்!

இன்றைய தேவியைக் காத்யாயினி என்றும் அழைப்பார்கள். மஹேஸ்வரி என்றும் சொல்கின்றனர். பாம்பாசனத்தில் வீற்றிருக்கும் சண்டிகாவாகவும், ரக்த பீஜனை வதம் செய்த அன்னையாகவும் பாவிப்பது உண்டு. உலகாளும் மஹேஸ்வரியும் இவளே. இன்றைய  தினம் ஏழு வயதுப் பெண் குழந்தையைச் "சண்டிகா"வாகப் பாவித்து வழிபடுதல் வேண்டும்.

காளிகா க்கான பட முடிவு
காளிகா க்கான பட முடிவு


செந்தாமரை மலர்கள், பவளமல்லி, செம்பருத்தி மலர்கள், ரோஜா ஆகிய மலர்களால் அம்பிகையை வழிபடலாம். தும்பை இலையும் மிகவும் சிலாக்கியம். சிலர் குமாரியின் பெயரை காளிகா என்றும் சொல்லி வழிபடுவார்கள்.

உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். இவளுக்கான தோத்திரம்

“காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ”

என்பதாகும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி. இவளை வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை ஆகும். நவராத்திரியில் புதன்கிழமை இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார். பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, ஈசன் ஆடிய ஆட்டம் முனி தாண்டவம். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவளே காத்யாயனி ஆவாள்.

இன்றைய கோலம் பாவைகள் அல்லது தேவியின் திருநாமத்தைப் பருப்பு வகைகளால் எழுதியோ மஞ்சள் பொடி கலந்த கடலைமாவினால் அன்னையின் திருநாமத்தை எழுதியோ வைக்கலாம். காலை நிவேதனமாகத் தேங்காய்ச் சாதம், தேங்காய்ப் பால்ப் பாயசம் செய்யலாம். மாலை பாசிப்பருப்புச் சுண்டல் செய்யலாம். பாசிப்பருப்பை நன்கு கழுவிக் கொண்டு இரண்டு, மூன்று மணி நேரம் ஊற விடவும். பின்னர் ஒரு வாணலியில் நீரை ஊற்றிக் கொண்டு நன்கு கொதிக்கவிடவும். ஊறிய பருப்பை நீரை வடிகட்டி அதில் போட்டு ஒரு கொதி விட்டு உடனே உப்பைச் சேர்த்துக் கிளறிவிட்டுத் தட்டைப் போட்டு மூடி விட்டு அடுப்பை அணைக்கவும். அந்தச் சூட்டோடு அரை மணி நேரம் வைக்கவும். பின்பு நீரை வடிகட்டவும். பாசிப்பருப்பு கையால் தொட்டால் நசுங்கும் பதம் வந்திருக்கும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கருகப்பிலை போட்டு வதக்கிப் பின்னர் வடிகட்டிய பாசிப்பருப்பை அதில் சேர்க்கவும். நன்கு கிளறி ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடியை எப்போதும் போல் சேர்க்கவும்.  நன்கு கிளறியதும் தேங்காய்த் துருவலும் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும். பச்சைக் கொத்துமல்லி தூவவும். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழியலாம். வெள்ளரிக்காய், மாங்காய் கிடைத்தால் துருவியோ பொடியாக நறுக்கியோ சேர்க்கலாம்.  பின்னர் கீழே இறக்கி வைத்து விநியோகம் செய்யவும்.
சண்டிகா க்கான பட முடிவு


நமஸ்கார ஸ்லோகங்கள்

17. யா தேவீ ஸர்வ பூதேஷூ ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
ஸ்ம்ருதி என்றால் இந்த இடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி வேதங்களை நினைவு கூருதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல், நினைவு, சிந்தனை, யோசித்துப் பாகுபாடு அறிந்து புரிதல் என எடுத்துக் கொண்டால் நல்லது. அத்தகையதொரு நல்ல நினைவு நம்மிடம் தேவை அல்லவா?? தீயவற்றையே நினைத்தால் மனம் கெடுவதோடு மட்டுமல்லாமல், உடல் நலமும் கெட்டுப் போகுமே! ஆகவே நல்ல சிந்தனையை, நல்ல புத்தியை, நல்லவைகளையே நினைக்கும் மனதைக் கொடுப்பவள் தேவியே. இப்படி அனைவர் மனதிலும் சிந்தனை உருவில் , ஸ்ம்ருதியாக உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

18. யா தேவீ ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நம்ஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
தயை= கருணை, இரக்கம், பரிவு. இங்கே அனைத்துமே பொருந்தும். சகல ஜீவராசிகளிடத்திலும் கருணை காட்ட வேண்டும். பரிவு காட்ட வேண்டும். எளியோரிடம் இரக்கமும் பரிவும் இருக்க வேண்டும். இந்த தயை அனைவரிடத்திலும் இருந்தாலே நல்லது அல்லவா?? தயை உருவில் அனைவரிடத்திலும் உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

19. யா தேவீ ஸர்வ பூதேஷூ துஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
துஷ்டி=திருப்தி, சந்தோஷம். மனதில் போதுமென்ற எண்ணம் இருந்தாலே சந்தோஷம் வரும் அல்லவா?? இந்த உலகைப் படைத்த அன்னை உலகிலே மற்ற அனைத்து ஜீவராசிகளையும் மட்டுமல்லாமல், நாம் உண்ணக் கூடிய உணவாகக் காய், கனிகள் என அனைத்தையும் படைத்திருக்கின்றாள். ஒரு செடியில் இருந்து பூவைப் பறித்தால் மேலும், மேலும் பூக்க வேண்டும், பறிக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. காய்கள் பறித்தாலும், கனிகள் பறித்தாலும் அவ்வாறே. பசு மாடு பால் கொடுக்கின்றது. நாம் கொடுப்பதோ வைக்கோலும், தவிடுமே. மாடு அதிலேயே திருப்தி அடைகின்றது. கறந்த பாலைத் திரும்பக் கொடு என்னிடம் என்று மாடு கேட்க ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும்?? பறித்த காய், கனிகளைத் திரும்பக் கொடு என எந்தச் செடியாவது கேட்கின்றதா?? இல்லையே? நமக்கு எந்த விதமான மறுப்பும் இல்லாமல் நம் தேவைக்கு உதவும் இந்தச் செடி, கொடிகளையும், மிருகங்களையும், பறவைகளையும் பார்த்தாவது நமக்குப் போதுமென்ற மனம் வருகின்றதா என்றால் வரவில்லையே?? இந்தப் போதுமென்ற மனத்தைக் கொடுக்கும் தேவிக்கு, அந்த மனமாக உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இதாவது கொடுப்போம். ஆனால் போதுமென்று சொல்லாமல், மேலும் மேலும் அன்னைக்கு நமஸ்கரிப்போமே!

Sunday, September 24, 2017

நவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தகவல்கள்!

நவராத்திரி ஐந்தாம் நாளுக்கான தேவி ஸ்கந்த மாதா எனப்படுவாள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.



இவளை  வைஷ்ணவி எனவும் அழைப்பார்கள்.. மாத்ருகா வர்ண சொரூபிணி என வர்ணிக்கப்படும் சதாக்ஷியும் இவளே. சாகம்பரியும் இவளே! மஹாலக்ஷ்மியாகவும் அழைக்கப்படுகிறாள்.
சாகம்பரி க்கான பட முடிவு
சாகம்பரி க்கான பட முடிவு
படங்களுக்கு நன்றி கூகிளார் வாயிலாக விக்கி பீடியா!

கைகளில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகையில் வைஷ்ணவி எனப் படுவாள். இன்றைய தினம் சுகாசனம் எனப்படும் அமர்ந்த கோலத்தில் அம்பிகையை சாந்த துர்கையாக அலங்கரிக்கலாம். ஆறு வயதுப் பெண் குழந்தையை காளிகாவாகப் பாவித்து வழிபட வேண்டும். கடலை அல்லது கடலை மாவுடன் மஞ்சள் பொடி சேர்த்து மயில், அன்னம்,போன்ற பறவைக்கோலம் போடலாம்.

செவ்வரளி, சந்தன இலை போன்றவற்றால் மாலை கட்டியும் அர்ச்சனைகள் செய்தும் அம்பிகையை வழிபடலாம். இன்றைய நிவேதனமாகத் தயிர் சாதமே செய்யலாம். அல்லது சுண்டக்  காய்ச்சிய பசும்பாலில் குழைந்த சாதத்தைப் போட்டுக் கிளறி, நெய் சேர்த்துச் சர்க்கரையும் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரி, திராக்ஷையை வறுத்து சேர்க்கவும்.  மாலை கடலைப்பருப்புச் சுண்டல் செய்யலாம்.

கடலைப்பருப்பை லேசாகச் சூடு வர வறுத்து விட்டு இரண்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரில் வைக்காமல் நேரடியாக வேக வைக்கவும். கடலைப்பருப்பு நசுங்கும் பதத்தில் வெந்ததும் உப்புச் சேர்த்துக் கொண்டு இரண்டு நிமிடம் வேக விட்டுப் பின்னர் வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய், கருகப்பிலை சேர்த்துப் பெருங்காயமும் சேர்க்கவும். வெந்த கடலைப்பருப்பைப் போட்டு இரண்டு டீஸ்பூன் சாம்பார்ப் பொடியும் சேர்க்கவும். பின்னர் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். தேவையானால் எலுமிச்சம்பழம் பிழிஞ்சுக்கலாம்.  நவராத்திரி நாள் இல்லைனா, காரட், வெங்காயம் துருவிச் சேர்க்கலாம்.

நமஸ்கார ஸ்லோகங்கள்!

 14. யா தேவீ ஸர்வ பூதேஷு காந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

காந்தி என்றால் ஒளி, வெளிச்சம் என்றும் பொருள் வரும். தனிப்பட்ட முறையில் அலங்கரித்துக் கொள்ளுவதையும் குறிக்கும். அந்த அலங்கரிப்பினால் ஏற்படும் தனிப்பட்ட கவரும் தன்மையையும் குறிக்கும். இங்கே ஒளி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளி இல்லையேல் உலகில்லை அல்லவா?? பகலில் சூரிய ஒளி தேவைப்படுகின்றது. இரவில் மாற்றாக சந்திரன் ஒளி குளுமையாகக் கிடைக்கின்றது. வெறும் இருட்டு மட்டுமே இருந்தால் என்ன தெரியும்?? எதுவும் தெரியாது, புரியாது. நம் அனைவருக்கும் இவ்வாறு ஒளியின் அவசியம் தேவைப்படுகின்றது. அதை உணருவது நம் கண்களே அல்லவா?? நம் அனைவருக்கும் அந்தக் கண்களுக்கு ஒளியைத் தரும் தேவியாக உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

15. யா தேவீ ஸர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

உயிர் வாழ அனைவருக்கும் உணவு தேவை, அந்த உணவை எல்லாராலுமா உற்பத்தி செய்ய முடியும்? யாரோ உற்பத்தி செய்கின்றார்கள். நாம் விலை கொடுத்து வாங்குகின்றோம். அதற்குப் பணம் தேவை அல்லவா?? பணம் இல்லை எனில் எதையும் வாங்க முடியாது. தேவைக்குத் தக்க பணம் இல்லாமால் ஒருவராலும் இருக்க முடியாது. நாம் ஆசைப்பட்டு சேர்த்து வைக்கும் பணம் இல்லை இது,. தேவைக்கான பணமே இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்தச் செல்வத்தைத் தருபவள் லக்ஷ்மி தேவி தான். அந்த லக்ஷ்மி தேவி வடிவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

16. யா தேவீ ஸர்வ பூதேஷூ வ்ருத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
பொதுவாய் சொத்துக் குவிப்பையும், மேன்மேலும் வட்டி வாங்கிச் சேர்ப்பதையுமே குறித்தாலும், வளர்ச்சியைக் குறிக்கும் இந்த வ்ருத்தி என்னும் சொல்லானது இங்கேயும் நல் வளர்ச்சியை மட்டுமே குறிக்கின்றது. செழிப்பாக இருக்கும் மனிதன், குடும்பத்தையும், குடும்பம் சமூகத்தையும், சமூகம் நகரத்தையும் நகரம், மாவட்டங்களையும், மாவட்டங்கள் மாநிலங்களையும், மாநிலங்கள் நாட்டையும் எவ்வாறு செழிப்பாக்குகின்றதோ, அந்தத் தனி மனிதனின் செழிப்பு, வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் தேவை. அதைக் கொடுப்பவள் தேவியே. இங்கே வ்ருத்தி வடிவில் உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

நேத்திக்கும் சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போனாலும் அதே கடலைப்பருப்புச் சுண்டல் தான் (ஹிஹிஹி,வேறே வீடுங்க) கிடைச்சது! இன்னொரு வீட்டில் மத்தியானமே கூப்பிட்டுப்பாயசம் கொடுத்தாங்க! க்ர்ர்ர்ர்ர்ர் நம்ம வீட்டில் இல்லைனதும் பாருங்க, யாருமே கொலுவும் வைக்கலை! சுண்டலும் கொடுக்கலை. சுண்டல் கொடுக்காதவங்க வீட்டிலே இவங்களைப் பாட அனுப்பலாம்னு வல்லி சிம்ஹன் ஒரு வீடியோ அனுப்பினார். அதை எங்கள் ப்ளாக் வாட்சப் குழுவில் பகிர்ந்தேன். பேசாமல் அதையே இங்கேயும் போடலாமோ? :)))))

Saturday, September 23, 2017

நவராத்திரி நான்காம் நாளுக்கான குறிப்புகள்




நவராத்திரி நான்காம் நாளுக்கான தேவி கூஷ்மாண்டா எனப்படுவாள். உலகைப் படைத்தவள் என்னும் பொருளில் ஆதி சக்தி துர்கா தேவியை இந்தப் பெயரில் அழைத்து இன்று வழிபடுகின்றனர். சிலர் வாராஹியாகவும் வழிபடுவதுண்டு.

வாராஹி க்கான பட முடிவு
 வாராஹி க்கான பட முடிவு
படத்துக்கு நன்றி கூகிளார்

அன்னை ராஜராஜேஸ்வரியின் பஞ்ச பாணங்களிலிருந்து தோன்றியதாகக் கருதப்படும் வாராஹி அன்னையின் படைக்குத்  தலைமை வகித்தவள்.  சத்ருக்களிடமிருந்து துன்பம் நேராமல் பாதுகாக்க அன்னை வாராஹியை வழிபட வேண்டும். இன்றைய தினம்  மஹாலக்ஷ்மியாக சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும்படி அன்னையை அலங்கரிக்கலாம். ஷோடதசாக்ஷரி என்னும் பெயராலும் அழைக்கப்படுவாள்.  அக்ஷதை, மலர்கள் இரண்டாலும் கோலம் போடலாம். படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். கீழே குறுகி மேலே செல்லச் செல்ல அகலமாக இருப்பது போல் போட வேண்டும். வாழ்வில் படிப்படியாக உயர்வு ஏற்படும் என்பது ஐதீகம்.

செந்தாமரை, ரோஜா மலர்கள், கதிர் பச்சை, கஸ்தூரி மஞ்சள் பொடி போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம். ஜயதுர்கையாக நினைத்து வழிபடும் அன்னையை ரோகிணி என்னும் பெயரால் அழைக்கலாம். ஐந்து வயதுப் பெண் குழந்தையை ரோகிணியாகப் பாவித்து வழிபட வேண்டும்.  நிவேதனத்திற்குக் கதம்ப சாதம் செய்யலாம். மாலை பட்டாணிச் சுண்டல் செய்யலாம். கதம்ப சாதம் என்பது கிட்டத்தட்ட சாம்பார் சாதம் போலத் தான். காய்கறிகள் நிறையப் போடணும் என்பதோடு நாட்டுக்காய்களாகவும் இருக்கவேண்டும். பூஷணி, பறங்கி, வாழைக்காய், முருங்கைக்காய்( விருப்பமானால்), கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, அவரை, கொத்தவரை போன்றவை போடலாம். மொச்சை இருந்தால் ஊற வைத்துச் சேர்க்கலாம்.

அரிசி ஒரு கிண்ணம் எனில் சரி சமமாகத் துவரம்பருப்புப் போடலாம். இரண்டையும் நன்கு குழைவாக வேகவிட்டுக் கொள்ள வேண்டும். புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொள்ள வேண்டும். காய்களை நீள வாட்டில் நறுக்கிக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து வேக விட வேண்டும்.. காய்கள் பாதி வேகும்போது புளி ஜலத்தைச் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்து பதமாகும் தருணம் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்க்கவும். ஒரு சிலர் சாம்பார்ப் பொடியே சேர்ப்பார்கள். ஆனால் மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தே.துருவல் எல்லாவற்றையும் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து போட்டால் இன்னமும் நன்றாக இருக்கும்.  கலவை கெட்டிப்பட்டு வரும்போது இந்த வறுத்த பொடியைப் போடலாம். சாம்பார்ப் பொடி எனில் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்க்கையிலேயே சேர்க்கவேண்டும்.

தனியே ஒரு வாணலியில் நெய்யை ஊற்றிக் கடுகு, மிவத்தல், கருகப்பிலை வறுத்துக் கொஞ்சம் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து அதைச் சாதக் கலவையில் கொட்டவும். கொத்துமல்லி தூவவும். இதற்குக் குழம்புக் கறிவடாம் இருந்தால் அதையும் வறுத்துச் சேர்க்கலாம். சிலர் இதற்கெனத் தனியாக வடைக்கு அரைத்து வடையை போண்டோ போல உருட்டிப் பொரித்துச் சேர்ப்பார்கள். அப்படியும் செய்யலாம். கொத்துமல்லி தூவவும்.

பட்டாணியை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு அடிக்கடி எடுத்து நன்கு கழுவவும். வழவழப்பு அப்போது தான் போகும். பின்னர் மறுநாள் குக்கரில் பட்டாணியை உப்புச் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் அல்லது உருளியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கொண்டு, கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய், தேங்காய்(கீற்றுக்களாக நறுக்கியது) போட்டுக் கொண்டு கருகப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். வெந்த பட்டாணியைச் சேர்த்துக் கலக்கவும். வழக்கம் போல் ஒரு டீஸ்பூன் சாம்பார்ப் பொடியைச் சேர்த்து நன்கு கிளறவும். இந்தச் சுண்டலுக்குத்ஹ் தேங்காய்த் துருவலை விடத் தேங்காயைப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

நமஸ்கார ஸ்லோகங்கள்

11. யா தேவீ ஸர்வ பூதேஷு லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
லஜ்ஜா= என்றால் வெட்கம், நாணம் என்று அர்த்தங்கள் வருகின்றன. என்றாலும் இந்த இடத்தில் இதற்கு அடக்கம், பணிவு என்பது பொருந்துமோனு நினைக்கிறேன். ஆங்கிலத்தில் modesty?? என்று சொல்லலாமோ?? நாம் செய்யும் தவறுகளுக்கு வெட்கப் படுவதோடு அல்லாமல், நாம் தான் அனைத்தும் செய்தோம், நம்மால் தான் எல்லாம் என்ற நினைப்பும் வரக் கூடாது. அடக்கமாய், பணிவாய், விநயமாய் இருக்கவேண்டும். அத்தகையதொரு கல்வியே தேவை இல்லையா?? கல்வியால் பெறக்கூடிய இந்த லஜ்ஜை என்னும் உணர்வாய் எந்தத் தேவி அனைவரிடத்திலும் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

12. யா தேவீ ஸர்வ பூதேஷு ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் நம் அனைவரிடத்திலும் ஷாந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.

இங்கே ஷாந்தி என்பது மெளனம், பொறுமை, பகை தீர்ந்து அமைதி அடைதல் என்ற அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர் நம்மிடம் கோபமாய் இருந்தாலோ மன வேறுபாடுகள் இருந்தாலோ அமைதியா இரு என்று சொல்கின்றோம் அல்லவா?? அந்த அமைதி தான் இங்கே. மெளனமும் ஒரு மொழியே. மெளனமாய் இருந்தால் அதைவிடச் சிறந்ததொரு பேச்சு வேறு கிடையாது. அனைத்தையும் உணர்த்தும் மெளனம். மெளனம் கடைப்பிடிக்கப் பட்டால் அங்கே ஷாந்தி தானாகவே வந்து சேரும். தேவையான சமயங்களில் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய மெளனம், அமைதி என்ற உருவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

13. யா தேவீ ஸர்வ பூதேஷு ஷ்ரத்தா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் நம்மிடம் சிரத்தை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.

ஷ்ரத்தா என்பது இங்கே வெறும் மத சடங்குகளில் நம்பிக்கை என்று மட்டுமே கொள்ளக் கூடாது. ஆழ்ந்த நம்பிக்கையையும் குறிக்கும். தீவிரமான கவனத்தையும் குறிக்கும். குருவின் உபதேசங்களில் நம்பிக்கை, குருவின் ஒவ்வொரு ஆணையும் நமக்கு நல்லதே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை, நாம் படிக்கும் பாடங்களில் உள்ளவைகளில் நம்பிக்கை, எடுத்த காரியத்தை முடிக்கும் கவனம், அந்தக் காரியம் நன்மையாய் முடியும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்புகளில் நேர்மறைப்பார்வை என்று எடுத்துக் கொண்டு, தேவி இவை அனைத்திலும் அந்த ஆழ்ந்த நம்பிக்கையாக உறைகின்றாளே, அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

நேத்திக்குச் சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போனால் ஒரே சோகக் கதையா ஆயிடுச்சு! ஒருத்தர் வீட்டிலே தான் சுண்டல்! இன்னொரு வீட்டில் புட்டு! சிலர் மத்தியானமே கூப்பிட்டுடறாங்க! சுண்டலுக்காகச் சாயங்காலமாக்  கூப்பிடக் கூடாதோ! என்ன போங்க! நம்ம வீட்டில் தான் கொலு இல்லைனா பலரும் இந்த வருஷம் வைக்கலையாம்! சுண்டல் கலெக்‌ஷன் டல்லு தான்! :)))))))

Friday, September 22, 2017

நவராத்திரி மூன்றாம் நாளுக்கான தகவல்கள்!

சந்திரகண்டா மூன்றாம் நாளுக்கான தேவி! மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க் கிழமைகளில் இந்த தேவியைத்  துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.

சந்திரகண்டா க்கான பட முடிவுசந்திரகண்டா க்கான பட முடிவு

இன்றைய தினம் நான்கு, ஐந்து வயதுப் பெண் குழந்தையைக் கல்யாணியாகப் பாவித்து வழிபட வேண்டும். நக்ஷத்திரக் கோலம் போடலாம். அல்லது முத்துக்களால் ஆன மலர்க்கோலமும் போடலாம்.  குழந்தைகள் சாப்பிடுவதால் நிவேதனத்துக்கு கோதுமை மாவினால் ஆன லாடும், சர்க்கரைப் பொங்கலும் செய்யலாம்.  செண்பகப் பூக்கள், மரு, செம்பருத்தி, தாமரை மலர்கள்,  குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம்.  மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் தேவியை அலங்கரிக்கலாம்.  வெப்பத்தைப் போக்கும் தேவி என்பதால் தயிர் சாதமும் நிவேதனம் செய்யலாம்.  மாலையில் வெள்ளைக்காராமணி அல்லது பச்சைப்பயறுச் சுண்டல் செய்யலாம்.

சர்க்கரைப் பொங்கல் இரண்டு பேருக்கானது: அரைக்கிண்ணம் பச்சரிசி, கால் கிண்ணம் பாசிப் பருப்பு. இரண்டையும் 250 மில்லிலிட்டர் பாலில் குழைய வேகவிடவும். நன்கு குழைந்ததும் வெல்லம் பொடியாக்கியது ஒன்றரைக்கிண்ணம் சேர்க்கவும். நெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு வெல்ல வாசனை போகக் கிளறவும். நன்கு சேர்ந்து வந்ததும் ஒரு கடாயில் இன்னொரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு, திராக்ஷையை வறுத்து நெய்யோடு சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கவும். கீழே இறக்கும்போது ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்து கீழே இறக்கவும்.

கோதுமை மாவு லாடு: அரைக்கிண்ணம் கோதுமை மாவு, ஒரு கிண்ணம் சர்க்கரை, அரைக்கிண்ணம் நெய், முந்திரிப்பருப்பு ஒரு கைப்பிடி, ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்.  அரைக்கிண்ணம் நெய்யை நன்கு சூடாக்கி கோதுமை மாவை அதில் சேர்க்கவும். நன்கு வாசனை வந்து மாவு பொரிந்து மேலே வரும். அப்போது ஒரு கிண்ணம் சர்க்கரையைப் பொடியாக்கிச் சேர்த்துக் கலக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். இன்னொரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்துக் கலந்த மாவில் கொட்டவும். மாவை நன்கு கலந்து ஆற விடவும். ஆறியதும் நிதானமாக உருண்டைகள் பிடிக்கலாம்.

தயிர்சாதம்: அரிசி ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு குழைய வேக வைக்கவும். 250 மில்லி லிட்டர் பாலை நன்கு காய்ச்சி வெந்த சாதத்தில் சூட்டோடு கொட்டிக் கிளறவும். சற்றே ஆறியதும் ஒரு கரண்டி  ஆடையுடன் கூடிய தயிரைச் சேர்க்கவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.  நல்லெண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம், இஞ்சி சேர்த்துக் கலந்து சாதத்தில் கொட்டவும். தேவையானால் முந்திரி, திராக்ஷை, மாதுளை முத்துக்கள் சேர்க்கலாம். இல்லை எனில் காரட், மாங்காயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

முதல்நாளே வெள்ளைக்காராமணியை ஊற வைத்து நன்கு கழுவி உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும். பின்னர் வடிகட்டிக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், பெருங்காயம் தாளித்துக் கொண்டு வெந்த காராமணியை/பயறைக் கொட்டி ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் துருவிய தேங்காய்த் துருவல் சேர்க்கவும். விநியோகத்துக்குச் சுண்டல் தயார்.

நாளைய தினம் நவராத்திரி மூன்றாம் நாள். அதற்கான விதிமுறைகள் மேலே கொடுத்திருக்கேன். என்றாலும் நாளைப் புரட்டாசி முதல் சனிக்கிழமை! விரதம் இருப்பவர்கள் இருப்பார்கள். பெருமாளுக்கு மாவிளக்குப் போடுபவர்கள் போடுவார்கள். ஒரு சிலர் நவராத்திரியில் போட்டால் அம்மனைச் சாரும் என்பதால் அடுத்து வரும் சனிக்கிழமைக்குக் காத்திருப்பார்கள். ஆனால் எப்படி இருந்தாலும் நாளைக்கு எள் சாதமோ அல்லது எள்ளுப் பொடியோ பண்ணலாம்.

எள் சாதம்! நான்கு பேருக்கானது

சுமார் 50 கிராம் கறுப்பு எள் சுத்தம் செய்து கழுவிக் களைந்து வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அந்த வாணலியிலேயே இரண்டே இரண்டு மி.வத்தலைத் தேவையான உப்புடன் பிரட்டி எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு நைசாகப் பிடிக்கவும்.  சாதத்தை உதிர் உதிராக வடித்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி நல்லெண்ணெய், கொஞ்சம் போல் (அரை டீஸ்பூன்) உப்புச் சேர்த்துக் கலக்கவும். செய்து வைத்திருக்கும் எள்ளுப் பொடியைத் தேவையான அளவுக்குப் போட்டுக் கலக்கவும். நன்கு கலந்ததும் மோர்க்குழம்பு அல்லது டாங்கர் பச்சடியுடன் பரிமாறவும்.

எள்ளுப் பொடி! கறுப்பு எள் 50 கிராம் மேலே சொன்னாப்போல் களைந்து கொண்டு வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு ஒரு சின்னக் கிண்ணம் வெல்லப் பொடியைச் சேர்த்து அம்மியில் அல்லது மிக்சியில் நன்கு பொடியாக்கவும். ஏலக்காய் விரும்பினால் சேர்க்கவும். பின்னர் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும். விநியோகம் செய்யத் தயார்!

நமஸ்கார ஸ்லோகங்கள்: தொடர்ச்சி!

7. யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப் படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப் படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப் படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8. யா தேவி ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைவரிடத்தில் ஆசை, அல்லது வேட்கை வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். த்ருஷ்ணா என்றால் பேராசை என்ற ஒரு பொருளும் உண்டு. எனினும் இங்கே குறிப்பிடப்படுவது தேவியை அடைய வேண்டும், அவள் பாதாரவிந்தங்களைத் தியானிக்க வேண்டும் என்று எண்ணும் பேராசை மட்டுமே. ஆகவே தேவியை அடைய நினைக்கும் பேராசையைத் தோற்றுவிப்பவளும் அவளாகவே இங்கே வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

9. யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

அனைத்து உயிர்களிடத்திலும் பொறுமை வடிவினளாக உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள். ஒன்றை அடைய வேண்டுமானால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?? அதற்காகப் பாடுபடவேண்டும், பொறுமை காக்கவேண்டும். தக்க தருணத்திலேதான் அடைய முடியும். அது வரை பொறுத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்புக்குக் கைகொடுக்கும் அன்னை பொறுமை வடிவினளாய் வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

10. யா தேவி ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.


ஏற்கெனவே நம்ம வலைப்பக்கம் போணியே ஆகாது! இப்போ நவராத்திரிங்கறதாலே எல்லோரும் சுண்டல் கலெக்‌ஷனிலே பிசி என்பதோட ஏற்கெனவே போட்டதையே மீள் பதிவாப் போடறேன்னு வரதில்லை போல! இருந்தாலும் விடுவோமா என்ன! யாருமே வரலைனாக் கூட பதிவைப் போட்டுட்டு நான் மட்டுமே படிச்சுப் பார்த்துப்பேனே! என்ன செய்வீங்க? :))))) அநேகமா இன்னிக்குச் சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போவேன்! நாளைக்குச் சொல்றேன் சுண்டல் வரும்படி பத்தி!

Thursday, September 21, 2017

நவராத்திரி இரண்டாம் நாளுக்கான குறிப்புகள்!

   ராஜராஜேஸ்வரி க்கான பட முடிவு
அன்னை ராஜராஜேஸ்வரி படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மணிராஜ் தளம்
நவராத்திரி இரண்டாம் நாளன்று அம்பிகையை  திரிபுரா வாக வழிபட வேண்டும். சிலர் கௌமாரியாகவும் வழிபடுவார்கள்.
 கௌமாரி க்கான பட முடிவு
படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மணிராஜ் தளம்:

 பெயர்கள் தான் வேறு, அம்பிகையின் ஸ்வரூபம் ஒன்றே. இன்றைய தினம் அம்பிகையை  ராஜ ராஜேஸ்வரியாக அலங்கரிக்க வேண்டும்.  மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிபுராவாகப் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் மஞ்சள், சிவப்பு மலர்கள் அம்பிகைக்கு ஏற்றது. கொன்றைப்பூக்கள் கிடைத்தால் விசேஷம். இன்று வழிபடவேண்டிய தேவி ப்ரஹ்மசாரிணி ஆவாள்,
 ப்ரஹ்மசாரிணி க்கான பட முடிவு
ப்ரஹ்மசாரிணி படத்துக்கு நன்றி கூகிளார்

ஆகையால் துளசி பத்ரம் கிடைத்தாலும் நன்று, மஞ்சள் வஸ்திரத்தைக் குழந்தைக்கு அணியத் தரலாம்.

அரிசி மாவு அல்லது கோதுமை மாவினால் கட்டங்கள் அல்லது பூக்கள் நிரம்பிய கோலம் போடலாம். மஞ்சள் நிறமுள்ள சாமந்திப் பூக்களும் மஞ்சள் நிறமுள்ள முல்லைப் பூக்களும் அர்ச்சனைக்கு உகந்தவை. இன்றைய நிவேதனம் காலையில் புளியோதரை. மாலையில் பயறுச் சுண்டல்.

புளியை எலுமிச்சை அளவு எடுத்து ஊற வைத்துக் கொண்டு சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு (நல்லெண்ணெய்) மி.வத்தல், கொத்துமல்லி விதை, பெருங்காயம் வறுக்கவும். இன்னொரு வாணலியில் எண்ணெய் விடாமல் எள், கடுகு, வெந்தயம் வறுக்கவும். இவற்றை வறுத்த மி.வத்தல், தனியாவோடு சேர்த்துப் பொடித்து வைக்கவும். கல்சட்டி அல்லது உருளி அல்லது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு முதலில் தேவையான மி.வத்தலைப் போட்டுக் கறுப்பாக ஆகும்வரை வறுக்கவும். இம்முறையில் மி.வத்தலில் காரம் அதிகம் புளிக்காய்ச்சலில் இறங்காது. மிளகாய் கறுப்பானதும் கடுகு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை என அவரவர் விருப்பம் போல் தாளிக்கவும். கருகப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். மஞ்சள் பொடி தேவையான அளவு சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் தேவைப்படும். கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றிக் கொண்டு உப்புச் சேர்க்கவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது வறுத்துப் பொடித்த பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். புளிக்காய்ச்சலுக்கு வெல்லம் சேர்ப்பவர்கள் சேர்க்கலாம். கொதித்துச் சேர்ந்ததும் கீழே இறக்கி வைக்கவும்.

சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி வைக்கவும். ஆறியதும் ஒரு டேபிள் ஸ்பூன் புளிக்காய்ச்சலைப் போட்டு நன்கு கலக்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் சாதம் அல்லது புளிக்காய்ச்சல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

பயறுச் சுண்டல்: முதல் நாள் இரவே பயறை ஊற வைக்கவும். மறுநாள் காலை இரண்டு மூன்று தரம் களைந்து வைக்கவும். பின்னர் சுண்டல் செய்யும் நேரத்தில் ஒரு குக்கரில் தேவையான அளவு ஜலம் வைத்துப் பயறை மீண்டும் நன்கு களைந்து உப்புச் சேர்த்து வேக வைக்கவும். நான்கு விசில் கொடுத்தால் போதுமானது. பின்பு குக்கரைத் திறந்து ஜலத்தை வடிகட்டி விட்டுச் சுண்டலுக்குத் தாளிக்க வேண்டும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும். வெந்த பயறை அதில் கொட்டவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார்ப் பொடி சேர்க்கலாம். சற்று நேரம் சுண்டலை வதக்கிக் கொண்டு தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். நன்கு கிளறவும். நிவேதனம் செய்த பின்னர் பரிமாறவும்.  

நமஸ்கார ஸ்லோகங்கள்: இதைத் தினமும் காலை, மாலை இருவேளையும் கூடச் சொல்லலாம். நவராத்திரிக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டாம்.
1. யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி ஷப்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த யோக மாயா என்பவளே காலி, காளி எனப்படுவாள். மாரி என்றும் சொல்லப் படுவாள். கருமாரி என்பவளும் இவளே. கருவிலே அந்த ஆதிநாராயணன் குழந்தையாக தேவகியின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவன், மாறி, அல்லது மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு விஷ்ணுமாயா வந்து சேருகின்றாள். ஆகவே கருமாறி வந்ததால் கருமாரி என்று சொல்லலாமோ??? இவள் கம்சனின் பிடிக்கும் அகப்படாமல் தப்பித்துச் செல்கின்றாள். பெண் குழந்தையாகிய இவளைக் கொல்ல இரு கால்களையும் பிடித்துக் கொண்டு கம்சன் வாளை உருவுகின்றான். என்ன ஆச்சரியம்?? அதோ! தேவி! பூர்ண அலங்கார பூஷிதையாக கம்சனின் தோளுக்கு மேலே, மேலே, மேலே, மேலே தோன்றுகின்றாள் அன்றோ!! கம்சனின் வாழ்வு முடியப் போகின்றது என எச்சரிக்கையும் கொடுத்து, அவன் திருந்த ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கின்றாள் அல்லவா?? அந்தக் கருணைத் தேவிக்கு நமஸ்காரங்கள்.

2. யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம் செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன, காட்டு மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச்சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக இருக்கின்றாளோ அந்தத் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த உலகம் இயங்க சக்தி தேவைப்படுகின்றது. விளக்கு எரியவும், மழை பொழியவும், காற்று வீசவும், வெயில் அடிக்கவும், நிழல் தோன்றவும் என அனைத்திற்கும் சக்தி தேவைப்படுகின்றது. இப்படி அனைத்துச் சக்திகளிலும் உறைந்திருப்பவள் அந்த ஆதிபராசக்தியானவளே. அவளுக்கு நமஸ்காரங்கள்.

3. யாதேவி ஸர்வ பூதேஷு புத்திரூபிணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். இங்கே புத்தி எனப்படுவது வெறுமே கற்றறியும் திறமையை மட்டுமே சுட்டுவது அல்ல. பார்க்க, கேட்க, நினைக்க, தெளிய, அறிய, சிந்திக்க, ஆலோசிக்க, பகுத்தறிந்து புரிந்து கொள்ள என அனைத்துக்கும் தேவைப்படுவது புத்தி என்று கொள்ள வேண்டும். இது சரியாக இல்லை எனில் ஏதாவது ஒரு குறை கட்டாயமாய் வாழ்க்கையில் ஏற்படுகின்றது. ஆகவே நம் தேவைகள் சகலத்துக்கும் சரியான புத்தியைக் கொடுப்பவள் அந்த அம்பிகையே!அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

4. யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைவரிடத்திலும், எல்லா உயிர்களிடத்திலும் நித்திரை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
இங்கே தூங்குவதைக் குறித்துக் கூடத் தேவியா என எண்ணினால் ஆம், தேவியே தான். அநேகமாய் நித்திராதேவி ஆக்கிரமித்துக் கொண்டாள் என பல எழுத்தாளர்களும் தூங்குவதைக் குறிப்பிட்டு எழுதுவதைக் கண்டிருக்கின்றோம் அல்லவா?? அந்த நித்திரையும் சாமானியமாய் மனிதருக்கு வந்து விடுகின்றதா என்ன??? எல்லாருமேவா நன்றாய்த் தூங்கி விழிக்கின்றார்கள்?? இல்லையே! பலருக்குத் தூக்கமே வருவதில்லை அல்லவா?? அப்படி நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடிய சக்தியாக உறையும் தேவியை தினமும் இரவில் நினைத்து நமஸ்கரித்து அனைத்தையும் அவள் பாதாரவிந்தங்களில் அர்ப்பணித்துப் படுத்தால் தேவி தூக்க வடிவில் நம்மை ஆக்கிரமிப்பாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

5. யா தேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம!

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் பசி வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். மனிதர் மட்டுமின்றித் தாவரங்களுக்கும், மிருகங்களுக்கும், பட்சிகளுக்கும், ஊர்வன என அனைத்து உயிர்களுக்கும் உணவு தேவைப்படுகின்றது. தேவையான சமயத்தில் உணவு கிடைத்தால் மட்டும் போதுமா?? அந்த உணவை உண்ணும் அளவுக்குப் பசியும் இருக்க வேண்டும் அல்லவா? பஞ்ச பட்ச பரமான்னமாகவே இருந்தாலும் பசி இல்லை எனில் சாப்பிட மாட்டோம். இந்த உலகில் எதுவும் போதும் என்றே நாம் சொல்ல மாட்டோம். உடையா, இன்னும் வேண்டும். ஒரு நேரத்துக்கு நாம் உடுத்துவது என்னமோ ஒரு உடைதான். நகையா இன்னும் வேண்டும், வீடா, இன்னும் பெரியதாய், பணம், காசா, எத்தனை இருந்தாலும் போதலை. ஆனால் ஒருவரைக் கூப்பிட்டு சாப்பாடு மட்டும் போட்டுவிட்டால் அவர் இன்னும் வேண்டும் என்று சொல்ல மாட்டார். வயிறு நிறைந்துவிட்டது போதும் என்றே சொல்லுவார். ஆகவே போதும் என மனிதரைச் சொல்ல வைக்கும் அந்த உணவை உட்கொள்ளத் தேவையான பசி இருத்தலே நல்லது. அந்தப் பசி வடிவான தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

6. யா தேவி ஸர்வ பூதேஷூ ச்சாயா ரூபேண ஸம்ஸ்திதா,
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் நிழல் வடிவில் பிரதிபிம்பமாய் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். வெயிலிலும், நிலவிலும் உயிர்வாழ் ஜீவராசிகள் அனைத்திற்கும் பிரதிபிம்பங்கள் தோன்றுவதுண்டு. அந்தப் பிரதிபிம்பமாய் உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.