எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 22, 2017

நவராத்திரி மூன்றாம் நாளுக்கான தகவல்கள்!

சந்திரகண்டா மூன்றாம் நாளுக்கான தேவி! மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க் கிழமைகளில் இந்த தேவியைத்  துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.

சந்திரகண்டா க்கான பட முடிவுசந்திரகண்டா க்கான பட முடிவு

இன்றைய தினம் நான்கு, ஐந்து வயதுப் பெண் குழந்தையைக் கல்யாணியாகப் பாவித்து வழிபட வேண்டும். நக்ஷத்திரக் கோலம் போடலாம். அல்லது முத்துக்களால் ஆன மலர்க்கோலமும் போடலாம்.  குழந்தைகள் சாப்பிடுவதால் நிவேதனத்துக்கு கோதுமை மாவினால் ஆன லாடும், சர்க்கரைப் பொங்கலும் செய்யலாம்.  செண்பகப் பூக்கள், மரு, செம்பருத்தி, தாமரை மலர்கள்,  குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம்.  மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் தேவியை அலங்கரிக்கலாம்.  வெப்பத்தைப் போக்கும் தேவி என்பதால் தயிர் சாதமும் நிவேதனம் செய்யலாம்.  மாலையில் வெள்ளைக்காராமணி அல்லது பச்சைப்பயறுச் சுண்டல் செய்யலாம்.

சர்க்கரைப் பொங்கல் இரண்டு பேருக்கானது: அரைக்கிண்ணம் பச்சரிசி, கால் கிண்ணம் பாசிப் பருப்பு. இரண்டையும் 250 மில்லிலிட்டர் பாலில் குழைய வேகவிடவும். நன்கு குழைந்ததும் வெல்லம் பொடியாக்கியது ஒன்றரைக்கிண்ணம் சேர்க்கவும். நெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு வெல்ல வாசனை போகக் கிளறவும். நன்கு சேர்ந்து வந்ததும் ஒரு கடாயில் இன்னொரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு, திராக்ஷையை வறுத்து நெய்யோடு சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கவும். கீழே இறக்கும்போது ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்து கீழே இறக்கவும்.

கோதுமை மாவு லாடு: அரைக்கிண்ணம் கோதுமை மாவு, ஒரு கிண்ணம் சர்க்கரை, அரைக்கிண்ணம் நெய், முந்திரிப்பருப்பு ஒரு கைப்பிடி, ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன்.  அரைக்கிண்ணம் நெய்யை நன்கு சூடாக்கி கோதுமை மாவை அதில் சேர்க்கவும். நன்கு வாசனை வந்து மாவு பொரிந்து மேலே வரும். அப்போது ஒரு கிண்ணம் சர்க்கரையைப் பொடியாக்கிச் சேர்த்துக் கலக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். இன்னொரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்துக் கலந்த மாவில் கொட்டவும். மாவை நன்கு கலந்து ஆற விடவும். ஆறியதும் நிதானமாக உருண்டைகள் பிடிக்கலாம்.

தயிர்சாதம்: அரிசி ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு குழைய வேக வைக்கவும். 250 மில்லி லிட்டர் பாலை நன்கு காய்ச்சி வெந்த சாதத்தில் சூட்டோடு கொட்டிக் கிளறவும். சற்றே ஆறியதும் ஒரு கரண்டி  ஆடையுடன் கூடிய தயிரைச் சேர்க்கவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.  நல்லெண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம், இஞ்சி சேர்த்துக் கலந்து சாதத்தில் கொட்டவும். தேவையானால் முந்திரி, திராக்ஷை, மாதுளை முத்துக்கள் சேர்க்கலாம். இல்லை எனில் காரட், மாங்காயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

முதல்நாளே வெள்ளைக்காராமணியை ஊற வைத்து நன்கு கழுவி உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும். பின்னர் வடிகட்டிக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், பெருங்காயம் தாளித்துக் கொண்டு வெந்த காராமணியை/பயறைக் கொட்டி ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் துருவிய தேங்காய்த் துருவல் சேர்க்கவும். விநியோகத்துக்குச் சுண்டல் தயார்.

நாளைய தினம் நவராத்திரி மூன்றாம் நாள். அதற்கான விதிமுறைகள் மேலே கொடுத்திருக்கேன். என்றாலும் நாளைப் புரட்டாசி முதல் சனிக்கிழமை! விரதம் இருப்பவர்கள் இருப்பார்கள். பெருமாளுக்கு மாவிளக்குப் போடுபவர்கள் போடுவார்கள். ஒரு சிலர் நவராத்திரியில் போட்டால் அம்மனைச் சாரும் என்பதால் அடுத்து வரும் சனிக்கிழமைக்குக் காத்திருப்பார்கள். ஆனால் எப்படி இருந்தாலும் நாளைக்கு எள் சாதமோ அல்லது எள்ளுப் பொடியோ பண்ணலாம்.

எள் சாதம்! நான்கு பேருக்கானது

சுமார் 50 கிராம் கறுப்பு எள் சுத்தம் செய்து கழுவிக் களைந்து வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அந்த வாணலியிலேயே இரண்டே இரண்டு மி.வத்தலைத் தேவையான உப்புடன் பிரட்டி எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் மிக்சி ஜாரில் போட்டு நைசாகப் பிடிக்கவும்.  சாதத்தை உதிர் உதிராக வடித்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி நல்லெண்ணெய், கொஞ்சம் போல் (அரை டீஸ்பூன்) உப்புச் சேர்த்துக் கலக்கவும். செய்து வைத்திருக்கும் எள்ளுப் பொடியைத் தேவையான அளவுக்குப் போட்டுக் கலக்கவும். நன்கு கலந்ததும் மோர்க்குழம்பு அல்லது டாங்கர் பச்சடியுடன் பரிமாறவும்.

எள்ளுப் பொடி! கறுப்பு எள் 50 கிராம் மேலே சொன்னாப்போல் களைந்து கொண்டு வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு ஒரு சின்னக் கிண்ணம் வெல்லப் பொடியைச் சேர்த்து அம்மியில் அல்லது மிக்சியில் நன்கு பொடியாக்கவும். ஏலக்காய் விரும்பினால் சேர்க்கவும். பின்னர் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும். விநியோகம் செய்யத் தயார்!

நமஸ்கார ஸ்லோகங்கள்: தொடர்ச்சி!

7. யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப் படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப் படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப் படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

8. யா தேவி ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைவரிடத்தில் ஆசை, அல்லது வேட்கை வடிவில் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். த்ருஷ்ணா என்றால் பேராசை என்ற ஒரு பொருளும் உண்டு. எனினும் இங்கே குறிப்பிடப்படுவது தேவியை அடைய வேண்டும், அவள் பாதாரவிந்தங்களைத் தியானிக்க வேண்டும் என்று எண்ணும் பேராசை மட்டுமே. ஆகவே தேவியை அடைய நினைக்கும் பேராசையைத் தோற்றுவிப்பவளும் அவளாகவே இங்கே வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

9. யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

அனைத்து உயிர்களிடத்திலும் பொறுமை வடிவினளாக உறையும் தேவிக்கு நமஸ்காரங்கள். ஒன்றை அடைய வேண்டுமானால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா?? அதற்காகப் பாடுபடவேண்டும், பொறுமை காக்கவேண்டும். தக்க தருணத்திலேதான் அடைய முடியும். அது வரை பொறுத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்புக்குக் கைகொடுக்கும் அன்னை பொறுமை வடிவினளாய் வர்ணிக்கப் படுகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

10. யா தேவி ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்திலும் ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.


ஏற்கெனவே நம்ம வலைப்பக்கம் போணியே ஆகாது! இப்போ நவராத்திரிங்கறதாலே எல்லோரும் சுண்டல் கலெக்‌ஷனிலே பிசி என்பதோட ஏற்கெனவே போட்டதையே மீள் பதிவாப் போடறேன்னு வரதில்லை போல! இருந்தாலும் விடுவோமா என்ன! யாருமே வரலைனாக் கூட பதிவைப் போட்டுட்டு நான் மட்டுமே படிச்சுப் பார்த்துப்பேனே! என்ன செய்வீங்க? :))))) அநேகமா இன்னிக்குச் சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போவேன்! நாளைக்குச் சொல்றேன் சுண்டல் வரும்படி பத்தி!

17 comments:

 1. Naan padikkirene intha varushamum

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜெயஶ்ரீ, நன்றி!

   Delete
 2. சந்திரகாந்தா மன்னிக்கவும், சந்திரக்கண்டா தேவிக்கு நமஸ்கரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், சுண்டல் இல்லைங்கறதாலே நேத்திக்கு வரலையா? :) இன்னிக்கும் நோ சுண்டல்! :)

   Delete
 3. ""ஏற்கெனவே நம்ம வலைப்பக்கம் போணியே ஆகாது! இப்போ நவராத்திரிங்கறதாலே எல்லோரும் சுண்டல் கலெக்‌ஷனிலே பிசி என்பதோட ஏற்கெனவே போட்டதையே மீள் பதிவாப் போடறேன்னு வரதில்லை போல! இருந்தாலும் விடுவோமா என்ன! யாருமே வரலைனாக் கூட பதிவைப் போட்டுட்டு நான் மட்டுமே படிச்சுப் பார்த்துப்பேனே! என்ன செய்வீங்க? :))))) அநேகமா இன்னிக்குச் சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போவேன்! நாளைக்குச் சொல்றேன் சுண்டல் வரும்படி பத்தி!""

  :-)

  ReplyDelete
  Replies
  1. வாங்க நன்மனம், என்ன சிரிப்பு? சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போறதா? இன்னிக்கு அநேகமா 2 வீட்டிலே கலெக்‌ஷன் இருக்கும்! சுண்டல் கொடுக்கிறாங்களோ, புட்டுக் கொடுக்கிறாங்களோ தெரியலை! நாளைக்கும் அநேகமாப் போவேன்! சுண்டல் கிடைக்கும்னு நினைக்கிறேன். :) கருத்துக்கள் வரதில்லையே தவிரப் பார்வையாளர் கூட்டம் இருக்கு! எல்லாம் சுண்டலை நினைச்சுட்டு வந்திருப்பாங்க போல! :P :P :P :P :P

   Delete
 4. படித்தேன். தயிர் சாதம் இம்ப்ரூவ் பண்ணி செய்கிறேன். எள் சாதம்லாம் எங்க வீட்டுல (அம்மா, அப்பா உறவினர்கள்) இனிக்குமே. என் ஹஸ்பண்ட் ஆனா காரமா செய்வா, எனக்கு அவ்வளவு பிடிக்காது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. இன்னும் என்ன இம்ப்ரூவ் செய்வீங்க? சொல்லலாம் இல்லையா? எள் சாதம் இனிக்கும் எள்ப் பொடி செய்வதில்லை. மேலே எழுதி இருப்பதைச் சரியாப் படிக்கலையோ? இனிக்கும் எள்ளுப்பொடியை உருட்டிக் கொடுத்துடுவோம்.

   Delete
  2. சிமிலி உருண்டைனு சொல்லுவாங்க அதை!

   Delete
 5. மூன்றாம் நாள் குற்ப்பிகள் அறிந்தோம்...தேவிக்கு பாத நமஸ்காரங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க துளசிதரன்.

   Delete
 6. அக்கா உங்க சுண்டல் கலெக்ஷன் பத்தி நாளை ஆவலுடன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அந்த சோகக் கதையை ஏன் கேட்கறீங்க கீதா! :) ஒரே ஒரு வீட்டில் தான் கடலைப்பருப்புச் சுண்டல்!

   Delete
 7. நாளை சுண்டல் சாப்பிட ஆவலுடன் உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. எங்கே கில்லர்ஜி! எனக்கே கிடைக்கலை! :)

   Delete
 8. சந்திரகண்டா அன்னையை அறிந்து கொண்டேன்...

  கோதுமை லாடு ....ரெசிபி நல்லா இருக்கு ...செஞ்சு பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. அனுராதா ப்ரேம்குமார், கோதுமை லாடு நல்லா இருக்கும். செய்து பாருங்க! பிடிக்கும்.

   Delete