எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 24, 2023

மாமியார் உடைத்தால்!

 போன பதிவில் குறிப்பிட்ட படங்களைத் தவிர்த்து மனோஜ் வாஜ்பாய் நடிச்ச  ச்ரிஃப் ஏக் பண்டா காஃபி ஹை படமும் தி க்ரேட் இந்தியன் கிச்சன் படமும் பார்த்து விட்டேன். கிரேட் இந்தியன் கிச்சனில் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவராம். இவர் நடித்த படம் எதுவும் பார்த்தது இல்லை. இதான் முதல் படம். மிக இயல்பாய் நடிச்சிருந்தார். அவர் கணவர், மாமனார், மாமியாரெல்லாம் யாரெனத் தெரியலை. ஆனால் படம் மிக நன்றாக இயல்பாக எடுக்கப்பட்டிருந்தது என்பதோடு எனக்கு என்னோட கல்யாண வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்களையும் நினைவூட்டியது. இப்படித்தான் சமையலறையே கதியாக எனக்கும் இருக்க நேர்ந்தது. ஆனால் ஆரம்ப காலங்களில் வேலைக்குச் சென்றேன். பின்னரும் அவசரத்திற்காக வெளியே சென்றதுண்டு. எல் ஐசி முகவர், தபால் அலுவலக சிறு சேமிப்பு முகவர், புடைவை வியாபாரம், குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுத்தல் எனச் செய்திருக்கேன். இதைப் பற்றி நிறைய எழுதியாச்சு என்பதால் நிறுத்திக்கறேன்.

எனக்கென்னமோ இந்தப் படம் முதலில் ஆங்கிலத்தில் வந்து  அம்பேரிக்காவில்  மட்டுமே வெளியிட்டதாக ஒரு நினைப்பு. ஆனால் இது முழுக்க முழுக்கத் தமிழ்ப்படம். நல்லவேளையாக வசனங்கள் புரிந்தன. சில படங்களில் என்ன மொழி என்றே தெரியாமல் வசனங்களை அரைக்குரலில் பேசுகின்றனர்.ஆனால் இது 2021 ஆம் ஆண்டில் முதலில் மலையாளத்தில் வந்து பின்னர் தமிழில் எடுத்திருக்காங்க. அதனால் சுவையோ, படத்தின் தரமோ குறையவில்லை. சாதாரணமாக வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு மாற்றும்போது நடிக, நடிகையருக்கு ஏற்பக் காட்சிகள், வசனங்கள் என மாற்றுவது உண்டு. பல படங்களை அப்படி மாற்றி இருக்காங்க. ஆனால் நல்ல வேளையாக இதில் மாற்றவே இல்லை. சமையலறையையே திரும்பத் திரும்பப் பார்த்தாலும் அலுப்புத் தட்டாமல் பட ஓட்டம் நம்மை உட்கார்ந்து பார்க்க வைக்கிறது. மலையாளத்திலும் கிடைக்குதானு பார்க்கணும். இப்போ ராக்கெட்ரி  படம் பார்த்துக் கொண்டு இருக்கேன். காலில் ஆங்காங்கே கோடையினால் ஏற்படும் புண்களால் அதிக நேரம் லாப்டாப்பை வைச்சுண்டு உட்கார முடியலை. அவ்வப்போது வந்து போகிறேன். மின் நூல்கள் வெளியிட வேண்டிப் பதிவுகளில் இருந்து தொகுத்து வைக்கணும். ஆனால் அதற்கு உட்கார முடியலை.

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மோதியின் பேச்சுக்குக் கிடைத்த வரவேற்பை ஆச்சரியத்துடன் பார்த்தோம். இந்தியாவின் நிலைமை முன்னெப்போதையும் விட இப்போது மதிப்பும், மரியாதையும் கொண்டு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் ஒரு சிலருக்கு இது இப்போதும் குற்றமாகவே தெரிவது ஏன் எனப் புரியவில்லை. அதே சமயம் தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையும் தலைகீழாக இருப்பதையும் காண முடிகிறது. ஆனாலும் அதைக் கண்டிப்போரும் இல்லை. எல்லோரும் மத்திய அரசின் நிலையையே முக்கியமாக மோதியையே குறை கூறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்! இது பற்றி விரிவாக எழுதப் போனால் சர்ச்சைக்கு உரிய பதிவாகிவிடும். ஆகவே நிறுத்திக்கிறேன்.

Saturday, June 10, 2023

படமெல்லாம் பார்த்தேனே!

 மிசஸ் அன்டர்கவர் பார்த்துட்டேன். படம் நன்றாகவே இருந்தது. சாதாரண மனிதன் என்னும் பெயரில் பழிவாங்கும் வில்லன். அவனை யாரெனக் கண்டு பிடிப்பதே இந்தத் தனிப்படையின் வேலை. ராதிகா ஆப்தே குடும்பப் பெண்ணாகவும் தான் ஓர் ரகசிய ஏஜென்ட் என்பதை அறிந்து கொண்டும் அடக்கி வாசித்ததையும் பின்னர் பொங்கி எழுந்ததையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கார். தன் கணவன் தனக்குச் செய்யும் துரோகத்தைக் கண்டு பிடித்ததும் அவர் மனம் படும் பாட்டைக் கண்களிலேயே காட்டி விடுகிறார். படம் முடிவில் எடுத்துக்கொண்ட மிஷன் முடிஞ்சதும் மறுபடி எல்லாம் அப்படியே தொடரும் எனச் சொல்லுகின்றனர். அது ராதிகாவின் வேலை முடியாதத்தைக் காட்டுகிறது. ராதிகாவின் கணவனாக நடிப்பவர் மனைவியிடம் மன்னிப்புக்  கேட்பதும் ரசிக்கும்படி இருந்தது. 

அடுத்து ஊஞ்சாயி. இதுவும் பார்த்துட்டேன். விட்டு விட்டுப் பார்த்தாலும் அதிக நாட்கள் இல்லாமல் மூன்றே நாட்களில் பார்த்து முடித்துவிட்டேன். படம் நல்ல விறுவிறு. அனைவரின் நடிப்பும் போட்டி போட்டுக்கொண்டு நன்றாக அமைந்து விட்டது. அமிதாப் தன் உடல்நிலையை மறைப்பதும் அது சமயம் பார்த்துத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதும், நண்பர்கள் அதுக்காக அவரைக் கடிந்து கொள்வதும் அருமை எனில் நீனா குப்தா ஆசை ஆசையாய் மகளுடன் அவள் பிறந்த நாளில் தங்கி மகிழ்வுடன் சில நாட்களைக் கழிக்கவேண்டும் என்னும் எதிர்பாப்புடன் வந்து விட்டுப் பின்னர் அடைந்த ஏமாற்றம், அனுபம் கேர் தன்னுடைய ஹவேலியை வர்ணித்துக் கொண்டு வந்து ஆசை ஆசையாய் விட்டுச் சென்ற உறவினர்களிடம் உறவைப் புதுப்பிக்க முயல அது அவருக்குக் கெட்ட பெயரை உண்டாக்க, தன் உறவினர்களின் மாறிய மனதை நினைத்து வருந்திய அனுபம் கேர் அங்கே தங்கவே வேண்டாம் என முடிவு செய்து கிளம்புவது ஒரு சோகம். 

கடைசியில் எப்படியோ மலை ஏற்றத்தில் இணைந்து விடுகின்றனர். அப்போது தான் மாலா திரிவேதி என்னும் பெயரில் லக்னோவில் வந்து சேர்ந்து கொண்ட பெண் இறந்து போன டானியின் (படத்தில் பூ பேன்) பால்ய சிநேகிதி என்பதும், இருவரும் திருமணம் செய்ய நினைத்ததும், பின்னர் முடியாமல் போனதும் வெளிப்படுகிறது. அதிலிருந்து மாலா திரிவேதியும் இவர்கள் மூவருடன் தானும் பூபேனின் கடைசி ஆசையை நிறைவேற்றவே வந்திருப்பதாய்க் கூறுகிறர். மலை ஏற்றத்தின் போது நடக்கும் நிகழ்வுகள் அந்தக் குழுவின் தலைமையாகச் செயல் படும் பெண் அமிதாபையும் அவர் எழுதும் கதைகளையும் குற்றம் கூறுவது, அமிதாபின் தன்மானம் அடிபட்டுப் போவது எல்லாமும் இயல்பாகப் பொருந்தி இருக்கு.இந்த இரு படங்களுக்குப் பின்னர் வேறே படம் இன்னமும் பார்க்க ஆரம்பிக்கவில்லை. தமிழ்ப்படங்கள் பார்க்க யோசனை. விடுதலை, ருத்ரன் எல்லாமும் இருக்கிறது. ஆனால் நடிகர்கள் எல்லோருமே புதுசு. தாஜ் பார்க்கலாமா என ஆசை. பார்ப்போம்.

*********************************************************

வந்து விட்டது. வந்தே விட்டது. மறுபடியும் அக்கி. இம்முறை வலது முழங்கைப் பக்கம். இதோடு இது நான்காம் முறை. அவ்வப்போது மனதில் கவலையும் பயமும் வரும். இந்தச் சூட்டுக்கு எங்காவது அக்கி வராமல் இருக்கணுமேனு. கடைசியில் பார்த்தால் இரண்டு நாட்களாக வந்திருக்கு. முதலில் வேர்க்குரு என்றே நினைச்சேன். அப்புறமாப் பார்த்தால் கண்ணெல்லாம் வைச்சுண்டு இருக்கு. ரங்க்ஸ் பார்த்துட்டு உறுதி செய்தார். நல்லவேளையாகக் கண்ணால் பார்க்க முடியாத இடத்தில் இல்லை. போன இரு முறைகளும் முதுகில் வந்திருந்தது. அதற்கு முன்னர் முதல் முறை முகத்தில்/நெற்றியில் வந்திருந்தது. இப்போது இங்கே! :(

Monday, May 29, 2023

செங்கோலின் வரலாறு!

இன்னிக்குச் சோதனைக்குக் கொடுத்திருக்கேன். என்ன முடிவு வரப் போகுதோ தெரியலை. கீழே விழுந்ததில் ஏற்பட்ட வலி கணிசமாகக் குறைந்து விட்டது. இப்போக் கொஞ்சம் இல்லை நிறையப் பரவாயில்லை. போன வாரமே விழுந்த அன்னிக்கேக் காட்டிட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். தசை வலி தானே சரியாயிடும்னு நினைச்சு நாட்களை வீணாக்கிட்டேன். :( நாட்டில் ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் திகிலை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருக்கார். அது தொடர்பான விசாரணகள் நடந்து முடியும் முன்னரே அடுத்தடுத்து இந்த அதிகாரிகள், வி.ஏ.ஓ. போன்றோருக்கு உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள். அரசு அதிகாரிகளாகப் பணி புரிவோர்க்கு எந்நேரமும் ஆபத்துத் தான் காத்திருக்கிறது. அதிலும் நேர்மையான அதிகாரிகள்னால் கேட்கவே வேண்டாம். பதவியில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டி உள்ளது. திருடனாகப் பார்த்துத் திருந்தினால் தான் உண்டு. 

இன்னிக்கு அக்னி நக்ஷத்திர முடிவு நாள். வெயில் என்னமோ கொளுத்துகிறது. காற்று ஆரம்பித்தாலும் அவ்வளவு மும்முரமாய் இல்லை. பருவக்காற்று இன்னமும் சுறுசுறுப்பாகத் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கலை. ஏசியைப் பகலில் எல்லாம் வைச்சுக்கறதில்லை. அப்புறமா அந்த அறையிலிருந்து வெளியே வரும்போது வெளிச்சூடு தாக்கிவிடும் என்பதால் இரவில் மட்டும் தான் ஏசி. அதையுமே விடிகாலையில் மூன்று மணி போல் அணைச்சுடுவோம். எழுந்திருப்பதற்குள்ளாக உடல் வெளியே உள்ள வெப்ப நிலைக்குப் பழகணுமே! 22 டிகிரியில் வைச்சுட்டு இருந்தோம். அப்புறமா அணைச்சுட்டு மின் விசிறியைப் போட்டால் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஆகவே இப்போ 24 டிகிரிக்கு வைச்சுட்டுக் கூடவே மின் விசிறியையும் போட்டுக்கறோம். அறை முழுவது நல்ல சில்லென்ற காற்று. காலம்பர அணைச்சாலும் எதுவும் தெரியலை. இதிலே மின்சாரம் வேறே மிச்சம் ஆகும் என்கின்றனர். பார்ப்போம்.

என்னோட சித்தி பையர் சத்யாவில் ஏசி வாங்கி இருக்கார். இன்ஸ்டாலேஷன் சார்ஜஸ் 850 ரூபாயோ என்னமோ சொன்னாங்களாம். வீட்டுக்கு வந்து ஏசியைப் பொருத்தும்போது அது இதுனு சொல்லிக் கடைசியில் கிட்டத்தட்ட 2000 ரூபாய்க்குக் கொஞ்சம் கீழே ஆகி இருக்கு! சேவையும் ரொம்பவே சுமார் என்கிறார். இதனாலேயே நாங்க இந்த ஆஃபர் கொடுக்கும் கடைகளுக்கே செல்லுவதில்லை. நேரடியாக எல்ஜியைத் தொடர்பு கொண்டே இரண்டு ஏசிக்களையும் வாங்கினோம். பதிவாக ஒருத்தர் வந்து எப்போதும் வேலைகளைச் செய்து கொடுப்பார். வேறே யாரையும் கூப்பிடறதில்லை.

செங்கோல் பற்றிப் பலரும் பலது சொல்கின்றார்கள். உண்மையில் இது 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினத்தன்று திருவாவடுதுறை ஆதீனம் அவர்களால் நேருவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதை நேரு அலஹாபாதில் ஆனந்த பவனத்தில் உள்ள காட்சிப் பொருட்களோடு வைத்திருந்ததாய்க் கேள்வி. மவுன்ட்பேட்டனிடம் யாரும் கொடுக்கவும் இல்லை. பின்னர் அவர் நேருவிடம் கொடுக்கவும் இல்லை. அப்படி நடந்ததாக ஒரு சலவைக்கல்வெட்டு வாட்சப்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பெயரால் சுற்றுகிறது. எது உண்மை என்பது அந்தச் சமயம் இருந்தவங்களுக்குத் தான் தெரியும். 

பிரதமர் தலைமை வகித்துப் பங்கேற்கும் விழாக்களுக்கு ஜனாதிபதியை அழைப்பது மரபு/சம்பிரதாயம் இல்லை. ஏனெனில் ஜனாதிபதி பிரதமரை விட உயர்ந்த பதவி. முதல் குடிமகன். ஜனாதிபதி பார்லிமென்ட் திற ப்பு விழாவுக்குப் பங்கேற்கச் செல்லாததில் எந்தவிதமான அரசியல் காரணங்களும் இல்லை. பார்லிமென்டில் குறிப்பிட்ட சில சமயங்கள் மட்டுமே ஜனாதிபதி கலந்து கொள்வார். அதன் முறை/சம்பிரதாயமும் கூட. இந்தக் காரணங்களால் தான் அவரை அழைக்கவில்லை என்றாலும் அவரின் வாழ்த்துச் செய்தி அரசுக்கு வந்துள்ளது.

முன்னர் இப்போதைய முதலமைச்சரின் தந்தை முதலமைச்சராக இருந்தப்போ அவருக்கும் செங்கோல் வழங்கப்பட்டது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கு? அதற்கு இப்போது சொல்லும் சப்பைக்கட்டு அது கட்சிப் பணத்தில் இருந்து வாங்கியதாம். இது அப்படி இல்லையாம்? கட்சிக்கு ஏது பணம்? கட்சித்தொண்டர்களான பொதுமக்களிடம் வசூலித்தது தானே? அது கொடுக்கலாம். இது வலிந்து ஓர் ஆதீனத்தால் எழுபது வருடங்கள் முன்னரே அப்போதைய பிரதமருக்குப்  பரிசாகக் கொடுக்கப்பட்டது இப்போது மீட்கப்பட்டுப் பொதுவில் உள்ள சொத்துக்களில் ஒன்றாக ஓர் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. எது சரி? இது மதவாதமாம்! எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுவதே உண்மையான மதச் சார்பின்மை. ஆனால் இங்கேயோ சநாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னால் மதச் சார்பின்மை. சநாதனத்தைக் கொண்டாடினால் மதவெறி! என்னவோ போங்க! ஒண்ணுமே புரியலை, உலகத்திலே!

ராஜராஜ சோழன் சிவபாத சேகரனாகத் தான் கடைசிவரை வாழ்ந்தான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். அதற்காக யாரும் அவனுக்கு மதவெறி என்று சொன்னதாகத் தெரியலை. ஜைன, பௌத்த மடங்களுக்கும், மற்ற மதங்களுக்கும் உரிய மரியாதையையும் கொடுத்து வந்தான். தில்லை வாழ் அந்தணர்கள் தான் சோழ அரசனுக்குப் பட்டம் கட்டும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் வேறுபாடுகள் பார்க்காமல் திருப்பணிகள் செய்து வந்தனர் சோழ அரசர்களும், மற்ற அரசர்களும். உண்மையான மதச் சார்பின்மை என்பது முன் காலத்தில் இருந்தது. இப்போது சுயநலம் பிடித்தவர்களால் ஆளப்படும் நாட்டில் மதச்சார்பின்மை என்பது பொருளற்றுப் போய்விட்டது.

Thursday, May 25, 2023

நானெல்லாம் படம் பார்த்து!

 இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் படங்களைப் பார்க்க வாய்ப்பு இருந்தும் அவ்வளவு மனம் ஒன்றவில்லை.முன்னால் இரண்டு படங்கள் பார்த்துட்டு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னர் கொஞ்ச நாட்கள் படங்களே பார்க்கும் ஆவல் வரலை. திடீர்னு ஒரு நாள் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் படிக்கையில் இந்த யூ டர்ன் படம் கண்ணில் பட்டது. சரினு பார்க்க ஆரம்பித்தேன். விறுவிறுப்பான படம் தான். நடிகர்கள் யாரும் யாரெனத் தெரியலை. முற்றிலும் புதிய நடிகர்கள். ஆனாலும் நடிப்பும், கதையும், காட்சிகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிப்போய்ப் பார்க்க வைத்தது. அப்படியும் 2,3 நாட்களாகத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து முடித்தேன். குறிப்பிட்டதொரு தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இடத்தில் பாலத்துக்கு மேலே யூ டர்ன் எடுக்கவே கூடாத இடத்தில் இரு சக்கர, நாலு சக்கர வாகனப் பயணிகள் அங்கே போட்டிருக்கும் கான்க்ரீட் பாறைகளை நகர்த்தி விட்டு வழி உண்டாக்கிக் கொண்டு யூ டர்ன் எடுத்துச் செல்கின்றனர். அப்படிச் செல்கின்றவர்கள் ஒவ்வொருவராக அன்றே இறக்கின்றனர்.

பத்திரிகையாளராக இருக்கும் ராதிகா பக்க்ஷிக்கு இதைக் குறித்து ஆய்வு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. சாலைப் பயணங்களில் நடைபெறும் விபத்துக்களையும் அதோடு கூடவே ஆய்வு செய்கிறாள். அப்போது இந்த யூ டர்ன் பற்றித் தெரிய வந்ததும் அது குறித்த தேடலில் மும்முரமாய் இறங்குகிறாள்விசித்திரமான சம்பவங்கள் மட்டுமின்றி போலீஸ் ஆய்வாளர் அர்ஜுன் ராதிகாவே இவற்றுக்குக் காரணமாய் இருப்பாளோ என சந்தேகப்படுகிறார். கடைசியில் உண்மையை ராதிகாவும் அர்ஜுனுமாகச் சேர்ந்து பேசுகையில் இருவருக்குமே புரிய வருகிறது. நம்பவே முடியாத உண்மை. மிச்சத்தை இணையத் திரையில் காணுங்கள்.

அதுக்கப்புறமாப் பார்த்தப்போ "கோஸ்டி" நன்றாக இருக்குமெனப் போட்டிருந்தாங்க. காஜல் அகர்வால் தான் கதாநாயகி. காஜல் அகர்வால் குழந்தையாய் இருந்தப்போ ஐபிஎஸ் அதிகாரியாய் இருந்த அவர் தந்தை ஒருபோக்கிரிகள் கோஷ்டித்தலைவனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்துத் தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார்.  ஆனால் காஜல் அகர்வாலின் தந்தை இறக்க அதன் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்கணும்னு நினைச்சு அவரும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆகிறார். இந்த வழக்கை எடுத்துக் கொண்டு ஆய்வுகளைத் தொடர்கிறார். ஆனால் இவரை ஒரு தீவிரமான போலீஸ் அதிகாரியாகக் காண முடியாமல் காமெடி என்னும் பெயரில் சொதப்பி இருக்காங்க. படம் ஹிந்தியில் இருக்குமோனூ பார்த்தால் கிடைக்கலை. தமிழில் தான் பார்க்க வேண்டி வந்தது. அறுவைனா அறுவை அம்புட்டு அறுவை. பேய், பிசாசுங்க எல்லாம் வந்தாலும் திகிலாக எல்லாம் இல்லை. தலையில் அடிச்சுக்கத் தான் தோன்றியது. இதில் தேவ தர்ஷினியைப் போட்டு வீணடித்திருக்கிறார்கள். யாரோ யோகி பாபுவாம். முதலில் உயிரோடு வந்து விட்டுப் பிறகு பேய், பிசாசாக வருகின்றனர். காமெடி என்னும் பெயரில் இது ஒரு கொடுமை. படத்தை அதற்கு மேல் பார்க்கப் பிடிக்கலை என்பதால் விட்டுட்டேன். காஜல் அகர்வாலும் ஒரு போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரமோ, தீவிரமான மனப்பான்மையோ இல்லாமல் அச்சுப்பிச்சென்று நடித்திருக்கார். அவரோடு கூட ஊர்வசியும், இன்னொருத்தரும். மூன்று பேரும் காமெடி என்னும் பெயரில் அறுவை போடுகின்றனர்.

விடுதலை, பத்துத்தல, அயலி, அயோத்தி, ருத்ரன் எனப் பல தமிழ்ப்படங்கள் இருந்தாலும் பார்க்கத் தோன்றவில்லை. எப்படி இருக்குமோனு ஒரு பயம். அயோத்தி பற்றி நிறைய விமரிசனங்கள் வந்தன. பார்க்க வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்.

***********************************************


நேற்றுப் பல மாதங்களுக்குப் பின்னர் வெளியே ஒரு பூணூல் கல்யாணத்துக்குப் போனோம். ஆத்து வாத்தியார் பிள்ளைக்குப் பூணூல். குழந்தைக்கு ஏழு வயது தான் இருக்கலாம். மழலை மாறவில்லை. மொட்டை அடித்துக்கொண்டு பூணூல் போட்டுக்க வந்தபபோத் தூக்கி எடுத்துக் கொஞ்சத் தான் தோன்றியது. அந்தச் சத்திரத்துக்குள் போக எக்கச்சக்கமான படிகள். வாசல் படிகளில் ஏறும்போதே ஒரு இடத்தில் படி உடைந்து அதைக் கவனிக்காமல் ஏறிச் சறுக்கிக் கொண்டு போய்ப் பக்கத்துக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டேன். அதில் நடு நெஞ்சில் நல்ல அடி பட்டுப் படுக்கவோ, உட்காரவோ முடியலை. இரும முடியலை.வலிக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருக்கேன். அதன் பிறகு பூணூல் நடக்கும் மண்டபம் போக ஒரு பத்துப் படிகள். அங்கிருந்து சாப்பிடும் இடம் போக ஐந்தாறு படிகள். எல்லாமாகச் சேர்ந்து கசரத் வாங்கியதில் முடியலை. சாப்பாடு வேறே சரியில்லை. 

மெனு என்னமோ நல்ல மெனு தான்.பால் பாயசம், தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, உ.கி.பொடிமாஸ், அவரைக்காய்க் கறி, பூஷணிக்காய்க் கூட்டு,மாங்காய் ஊறுகாய், வடை, பதிர்பேணி, புளியோதரை, வறுவலுக்குப் பதிலாக மிக்சர், கதம்ப சாம்பார், ரசம்,மோர். பறிமாறினவங்க யாருக்கும் பரிமாறவே தெரியலை. சாம்பாரை முடிச்சுட்டு ரசத்துக்கு மணிக்கணக்கா உட்கார்ந்திருந்தேன். ரசம் ஊற்றுபவர் அந்த வழியாகவே நாலைந்து தடவைகள் போய் வந்தும்,எனக்கு ரசம் ஊற்றவே இல்லை. பின்னர் கத்தினத்துக்கப்புறமா வந்து அரைக்கரண்டி ரசத்தை ஊத்திட்டு அந்தப்பக்கம் பரிமாறுபவர்களோடு மும்முரமாய்ப் பேச ஆரம்பிச்சுட்டார். வந்த கோபத்துக்கு எழுந்துடலாம்னு தோணியது. ஆனால் இந்தப்பக்கம் நாலு பேர், அந்தப்பக்கம் நாலு பேர்னு எழுந்துக்க முடியாத நிலைமை. சாப்பிட்டோம்னு பேர் பண்ணினேன்.சாப்பாடு வயித்துக்கும் ஒத்துக்காமல் ஒரே தொந்திரவு. மிளகு ரசம் வைச்சுச் சாப்பிட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. நம்ம ரங்க்ஸுக்குக் கூட்டிப் போகவே இஷ்டமில்லை. வராதேனு சொன்னேனே என்று சொல்லிக் கொண்டே இருந்தார். :(

Wednesday, May 03, 2023

நெல்லையின் கேள்வியும் எனக்குத் தெரிந்த பதிலும்!

 ஒரு சென்சிடிவ் கேள்வி. ஆனால் நான் நிறைய நாள் யாரிடமாவது கெட்கணும்னு நினைத்திருந்தேன். வைணவத்தில் ஆழ்வார் பதின்மர், ஆண்டாள் மதுரகவியாழ்வாரும் அவர்கள் செய்த திவ்யபிரபந்தங்களைச் சேவிப்பத் உண்டு. இதேபோல் திருமுறைகளை  எல்லா பிராமணர்களும் சேவிப்பதில்லை என்பதைக் காணுகிறேன்,  அவர்கள் பூஜை அறையிலும் கூட நாயன்மார்களோ அல்லது திருமுறைகளை உண்டாக்கியவர்களையோ வணங்குவதில்லை. இதன் காரணம் என்ன?கீதா சாம்பசிவம் போன்று இதன் பாரம்பர்யத்தைத் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

நெல்லைத் தமிழன் கேள்வி.

பிராமணர்கள் தினந்தோறும் தேவார, திருவாசகங்களை ஏன் படித்து வணங்குவதில்லை. நாயன்மார்களுக்கும் அவர்கள் ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? நல்லதொரு கேள்வி. கிட்டத்தட்டப் பிற்காலச் சோழர்கள்/பாண்டியர்கள் காலம் வரையிலும் சைவம் செழிப்பாகவே இருந்தது. மாறி மாறிப் பாண்டியர்களும்/சோழர்களும் கோயில்களில் திருப்பணியைச் செய்தார்கள். தேவார/திருவாசகங்களை ஓதுவதற்கென  சிவத்திருமடங்களில் பொதுமக்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். அரசும் பல நிவந்தங்களை இதற்காக ஒதுக்கி இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்டத் தென்னாட்டில் முஸ்லீம்கள் படை எடுப்பு வரையிலும் சரியாகத் தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு சுமார் 40/50 ஆண்டுகள் ஒரு தலைமுறையே எந்தவிதமான இறை வழிபாடுகளும் செய்ய முடியாமல் இருந்திருக்கின்றனர். கோயில்களில் திருவிழாக்கள் நடந்தன என்பதே அப்போதைய இளைஞர்களுக்கு ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்கிறது. 

இந்நிலை நீடிக்காமல் விஜயநகரப் பேரரசும், நாயக்கர், மராத்தியர் ஆட்சிக்காலங்களும் மக்களுக்கு மீண்டும் பக்தி மார்க்கத்தைக் காட்டிக் கோயில்களைச் செப்பனிட்டுப் புதுப்பித்து விழாக்களை எல்லாம் ஒழுங்கு செய்து மக்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள். என்றாலும் மக்கள் முழு மனதுடன் இறை வழிபாட்டில் ஈடுபட வில்லை.அவர்களுக்குள் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டிருக்கிறது. முன்னர் ஒரே வீட்டிலேயே அண்ணன் சிவ பக்தனாகவும், தம்பி வைணவ பக்தனாகவும் இருந்த காலம் போய் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டு உள்ளது.

அந்நாளைய படிப்பில் சைவத்திருமுறைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களே கோயில் சிவாசாரியார்களாக இருக்க முடியும் என்னும் நிபந்தனைகள் எல்லாமும் இருந்திருக்கிறது. சாமானிய மனிதன் தமிழ் கற்றால் கூடத் தமிழ் இலக்கணம், இலக்கியம், சங்க இலக்கியம் என நிறுத்திவிடாமல் பன்னிரு திருமுறைகளையும் கூடக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவற்றைப் பண் அமைத்துப் பாட வேண்டும் என்னும் நிபந்தனையும் கூட இருந்திருக்கிறது. இது நம் தமிழ்த்தாத்தா அவர்கள் தமிழ் கற்கும்போது கூட இருந்திருக்கிறது என்பதை அவருடைய சுய சரிதையின் மூலம் காணலாம். தமிழ் கற்க இவ்வாறெல்லாம் நிபந்தனைகள் இருக்க ஆங்கிலப் பள்ளிகள் நாளாவட்டத்தில் பெருகின. அவை ஆங்கிலத்தைப் போதித்ததோடு நிற்காமல் தமிழின் முக்கியத்துவத்தை மெல்ல மெல்லக் குறைத்தார்கள். முன்னெல்லாம் சிவ தீக்ஷை பெற்றவர்களே தமிழில் பண்டிதர்கள் ஆகலாம் என்றிருந்தது மாறித் தமிழை ஓரளவுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்னும் நிலைமைக்கு மாற்றியது அக்கால ஆங்கில அரசு. அதே சமயம் இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழர்களும் சரி, மற்றத் தமிழர்களும் சரி தேவார/திருவாசகங்களைப் படித்து ஓதி சிவ தீககை பெற்றே மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் முற்றிலும் வேறான நிலைமை.


இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் வைணவப் பிரிவினையின் மூலம் வைணவர்கள் விஷ்ணு ஒருவனே தெய்வம்! என்னும் கொள்கையையும் தூக்கிப் பிடித்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்குள் வடகலை/தென்கலைப் பிரிவுகள் தோன்றினாலும் ஸ்ரீராமானுஜர் காலத்துக்குப் பின்னால் தமிழுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தினமும் கோயில்களில் பட்டாசாரியார்களே சந்நிதிக்குள் பாசுரங்கள் பாடும் முறையை ஏற்படுத்தினார்கள். அதைத் தவிரவும் பாசுரங்கள் பாடுவதில் வல்லவர்களைத் தேர்ந்தெடுத்துத் தனி கோஷ்டி முறையை உருவாக்கி இதற்கென்றே தனிப் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.

சைவர்களில் சைவர் எனத் தனியாக இருந்தவர்கள் ஆதி சைவர்களும், சிவாசாரியார்களுமே. இருவருமே ஒன்றே எனச் சிலர் சொன்னாலும் பலர் மறுக்கவும் செய்கின்றனர். இவங்க சிவனைத் தவிர்த்து வேறே கடவுளை வணங்குவதில்லை.  அதே சமயம் பிராமணர்களில் ஸ்மார்த்தர் என்னும் புதியதொரு பிரிவு தோன்றியது. இவர்கள் ஆதி சங்கரரைத் தங்கள் குருவாக ஏற்றவர்கள். அவருடைய ஷண்மத தத்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு எந்தக் கடவுள்களிடமும் பேதங்கள் கிடையாது. சர்வம் சிவ மயம் என்றாலும் சர்வம் விஷ்ணு மயம் என்றாலும் ஏற்பவர்கள். பஞ்சாயதன பூஜை என்னும் ஷண்மத வழிபாட்டில் முக்கியமான பூஜை முறையைப் பலரும் ஏற்று அதன்படி பூஜை செய்பவர்கள். இவர்களில் சிவ பூஜை மட்டுமே செய்பவர்கள் உண்டு. அவர்கள் தங்களுக்கான உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்வார்கள். மற்றவர்களை ஏற்க மாட்டார்கள்.

இந்த ஸ்மார்த்தர்கள் என்னும் பிரிவினர் கோயில்களில் வழிபாடுகளைச் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். ஆனால் வைணவர்களில் அப்படி இல்லை.ஆகம நடைமுறைகள் தெரிந்த பட்டாசாரியார்கள் என அனைவருமே கோயிலின் கர்பகிரஹத்தில் வழிபாடு செய்வார்கள். வழிபாடு செய்பவர்களுக்குத் துணையாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பிரபந்தங்களை ஓதத் தெரிந்தவர்கள். ஆனால் அதே சமயம் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்கள் பன்னிரு திருமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள். ஓதவும் தெரியும். ஆனாலும் எப்போது எனத் தெரியாத காலத்திலேயே சிவன் கோயில்களில் ஓதுவார்கள் தோற்றுவிக்கப்பட்டுச் சைவ மடங்களால் ஆதரிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இருக்கும் கோயில்களின் கால வழிபாட்டின்போது தேவார/திருவாசகங்களை ஓதும் பேறு பெற்று இன்று வரை பல கோயில்களிலும் ஓதி வருகின்றனர். இவர்களில் ஸ்மார்த்தர்களும் சேர்ந்து கொள்வார்கள். பலருக்கும் ஓதத் தெரிந்திருந்தாலும் சிவன் கோயில் நடைமுறைப்படி ஓதுவார் தான் ஓத வேண்டும் என்றிருப்பதால் அவர்தான் ஓதுவார். கூடவே நாமும் தெரிந்தால் சொல்லலாம்.

சிதம்பரத்தில் ஒவ்வொரு காலத்துக்கும் தருமபுரம் ஆதீனத்தால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் வந்து பன்னிரு திருமுறைகளை ஓதுவதை இன்றும் பார்க்க முடியும். அங்கே உள்ள தீக்ஷிதர்கள் ஸ்மார்த்தர்கள் ஆனாலும் அவர்கள் ஈசனின் நேரடிச் சீடர்கள் என்பதால் அவர்கள் கர்பகிரஹத்தில் வழிபாடுகள் செய்ய உரிமை பெற்றவர்கள் என்பதோடு அனைவருக்குமே பன்னிரு திருமுறைகளை ஓதவும் தெரியும். பெரும்பாலும் அபிஷேஹ காலத்தில் ஸ்ரீருத்ரம் சொல்லிக் கொண்டோ அல்லது திருமுறைகளை ஓதிக்கொண்டோ அபிஷேஹம் செய்வார்கள்.எல்லாக் கோயில்களிலும் பன்னிரு திருமுறைகளை முறைப்படி சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் அந்த அந்தக் கோயிலைச் சேர்ந்த மடங்களால் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் பங்கு கொள்பவர்களே பிராமணர்கள் தாம். அனைவரும் சேர்ந்து தேவார முற்றோதல் என்னும் நிகழ்ச்சியை அடிக்கடி தொடங்கி நிறைவும் செய்வார்கள். கட்டாயப்பாடமாகப் பன்னிரு திருமுறைகளை வைக்காமல் விருப்பப் பாடமாக வைத்திருப்பதால் இதில் ஆர்வம் உள்ளவர்களே கலந்து கொள்கின்றனர். திருப்புகழும் அப்படித் தான் எல்லாக் கோயில்களிலும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.


ஆனாலும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்தியே ஆகவேண்டும். வைணவர்களுக்கு மகாவிஷ்ணுவிடம் உள்ள பற்றும், பாசமும், பக்தியும் சைவர்கள்னு சொல்லிக் கொள்ளும் ஸ்மார்த்தர்களுக்கு இல்லை என்றே சொல்லணும். மிகச் சின்ன வயசிலேயே வைணவ பக்தி நெறிமுறைகள் போதிக்கப்படுகின்றன என்பதற்கு என் முகநூல் நண்பர் திரு கேசவபாஷ்யம் வி.என். அவர்களின் புதல்வன் "ஆத்ரேயனே" சான்று. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்து வருகிறேன். இங்கேயும் "சிந்துஜா ஹரிகதை" போன்ற மேதைகள் உள்லனர் என்றாலும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.. வைணவர்கள் மறந்தும் பிறன் தொழமாட்டார்கள் என்பதற்குச் சிதம்பரம் கோயிலின் பெருமாளே சாட்சி. ஆனால் மற்றவர்கள் எல்லாவற்றையும் ஏற்பார்கள். இந்துக்களின் இன்றைய நிலைமைக்கு அது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  சிவன் கோயில்களில் ஸ்வாமி பல்லக்கைத் தூக்குபவர்கள் பிராமணராய்த் தான் இருக்கணும்னு கட்டாயம் இல்லை. ஆனால் விஷ்ணு/பெருமாள் கோயில்களில் அவர்களைத் தவிர வேறே யாரும் பெருமாளின் பல்லக்கைத் தொடக் கூட முடியாது. பிராமணர்கள் அலகு குத்திக்க மாட்டாங்க, கடினமான வேலைகளைச் செய்ய மாட்டாங்க என்பவர்கள் அந்த ஸ்ரீபாதம் தாங்கிகளின் தோள்பட்டையைப் பார்த்தால் தெரியும்.

வேறு கருத்துள்ளவர்கள் சொல்லலாம்.

Friday, April 28, 2023

தாத்தாவை நினைவு கூர்வோம்!

 உ.வே.சா. வாழ்க்கையின் சிறப்பு

உ.வே.சா. என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுலகிற்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநானூற்றிற்கும் புறநானூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பதிப்பித்துத் தந்தவர் என்னும் பெருமை உடையவர். உ.வே.சா. மேலும், தன்னுடைய சொத்துகளையும் விற்றுப் பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார்.


சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா. பெரும் காரணமாவார். சங்க கால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவருடைய உழைப்புப் பெரிதும் உதவியது.


இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளைப் பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களைக் குறித்த முழுபுரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது.


சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்க முயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கிடையில் கற்றுப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887-ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிட்டாா். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக் கருவூலமாக இருக்கின்றது.


நன்றி விக்கிபீடியா

சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி அவ்வுலக (ஆன்மீக) வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம்.


இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராகச் இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.


தமிழாசிரியர் எங்குக் கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாகக் குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப் பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உ.வே.சா. பதிவுசெய்கிறார்

Friday, April 21, 2023

மாறி வருவது உலகமா? மனிதர்களா?

 விலைவாசி எல்லாமே அதிக பக்ஷமாக 100% ஏறி இருக்கும் போல! ஜனவரியில் 75 ரூபாய்க்கு விற்ற எள்ளுருண்டைகள் இப்போ 120 ரூபாய்க்கு விற்கிறது. இனிப்புப் பண்டங்கள் எல்லாமும் கிலோ  500 ரூக்கு விற்கின்றன. உணவுப் பண்டங்கள், தேநீர் எல்லாமும் விலை அதிகரித்துள்ளது. இதற்கான அடிப்படைப் பண்டங்கள் விலையும் கூடி இருக்கணும். அதைப் பார்க்கணும். ஆனால் பெரிய அளவில் இதற்காக யாரும் எதுவும் சொல்லவில்லை என்பது எனக்கு அதிசயமாகவே இருக்கு. எரிவாயு விலை கூடிக் கொண்டே போவதற்கும் ஆங்காங்கே அரசியல் கட்சிகள் கொஞ்சம் கத்துவதோடு சரி. பொதுமக்களிடமிருந்து ஏன் எதிர்ப்பே காணோம்? 

இக்காலத்துப் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதே புரியலை. சமீபத்தில் கேள்விப் பட்ட செய்திகளில் இருந்து பெண்கள் திருமணத்துக்கு முன்னரே எக்கச்சக்கமாக நிபந்தனைகள் விதிக்கின்றனர். கணவனாக வரப் போகிறவன் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதோடு இல்லாமல் தான் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் அழைத்தால் உடனே எடுத்துப் பேசணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். அதோடு இல்லாமல் தனக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கணும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். மாமனார் மாமியார் கூடவே இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண்களின் பெற்றோர் பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்க வேண்டும். அன்றாட நிகழ்வுகள் கணவனுடன் பேசுவதில் இருந்து எல்லாமும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளப்படும். அவங்க ஆலோசனைகளைக் கேட்டுத்தான் தன் குடும்பத்தில் எல்லாமும் செய்வார்கள். இதில் மாமியார், மாமனார் வெளி ஆட்கள். அவங்க தலையிடக் கூடாது.

இவங்களுக்கு எல்லாம் கூடப் பிறந்த ஆண் சகோதரர் இருந்து அவரைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் இதே போல் நிபந்தனைகள் விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் பெரும்பாலான பெண்கள் ஒற்றைப் பெண்களாகவே இருக்காங்க. அவங்களுக்குக் கூடப் பிறந்தவங்க இல்லை என்பதால் எதிலும் தான், தனது என்னும் நினைப்பே முன்னால் நிற்கிறது. கணவனும் ஓர் மனிதன் அவனுக்கும் பெற்றோர் உண்டு; பாசம் இருக்கும் என்பதோடு பெற்றோரைப் பார்த்துக்கும் கடமையும் உண்டு என்றெல்லாம் நினைப்பே வரதில்லை.

இந்தப் பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததோ அல்லது யாரேனும் கூடப் பிறந்தவங்க நிறையப் பேர் இருந்து அவங்களுக்குச் செய்ததோ அவங்க வாழ்க்கை மூலம் இதெல்லாம் தெரிந்து கொண்டார்கள் என்பதோ இல்லை. அப்படி இருக்கையில் அவங்களுக்கெல்லாம் எப்படித் திருமணம் நிச்சயம் ஆகும்போதே மாமனார்/மாமியார் வேண்டாதவங்க என்னும் எண்ணம் உண்டாகிறது? அவங்களைப் பார்த்துப் பழகி அவங்க குணம் பிடிக்கலைன்னா ஒத்துக்கலாம். பார்ப்பதே இவங்க நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளில் தான். அப்போவே இவங்களால் எப்படி இம்மாதிரி எல்லாம் முடிவுக்கு வர முடியுது? பெண்கள் தங்களுடைய விட்டுக்கொடுத்தல், அனுசரித்துப் போதல் இதை எல்லாம் கடைப்பிடிப்பதே இப்போதெல்லாம் அவமானம் என நினைக்கின்றனர். 

இன்னொருவர் சொல்லி இருந்தார். குழந்தை பிறந்தாலும் கூட இவங்க எல்லாம் அந்தக் குழந்தையை முழு மனதோடு பராமரிப்பதும் இல்லை என்பதே! பெரும்பாலான பெண்கள் மொபைல் மோகத்திலும் டிக்டாக்கிலும், ஸ்ம்யூல் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று அதைச் சமூகத் தளங்களில் வெளியிடுவதிலும் உள்ள ஆர்வத்தை வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் காட்டுவதே இல்லை. முக்கியமாக அவங்க இன்னொரு மொபைல் வாங்கிக் குழந்தைக்கும் அதைப் பார்க்கப் பழக்கப்படுத்தி விடுகின்றனர். குழந்தை அழுதால் போதும் மொபைலை ஆன் பண்ணிக் குழந்தை கையில் கொடுத்துவிட்டு இவங்க தங்கள் வேலைகளில் மூழ்கி விடுகின்றனர். இது நெருங்கிய நண்பர் ஒருத்தர் வீட்டில் அவர் மருமகள் செய்வது என மனம் நொந்து போய்ச் சொல்லி இருந்தார்.

அதோடு மொபைல் அதிகம் பார்ப்பதால் குழந்தைகளுக்குச் சூடு அதிகம் ஆகிக் கண்களை அவை பாதிக்கும் அவலமும் ஏற்படுகிறது. முகநூலில் ஒரு நண்பரின் பேத்திக் காலை எழுந்ததும் கண்களைத் திறக்க முடியாமல் அவதிப்பட்டுக் குழந்தையால் பத்து மணி வரை கண்களைத் திறக்க முடியலை எனவும் பின்னர் மருத்துவரிடம்போனதில் அவர் சோதனை செய்துவிட்டு மொபைல் அதிகம் பார்ப்பதால் ஏற்பட்ட விளைவு எனவும் மொபைல் பார்ப்பதைக் குறைக்குமாறும் அறிவுரை சொல்லி இருக்கார்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தியில் பெண்கள் பெரும்பாலும் சமைப்பதே இல்லை எனவும் ஸ்விகி, ஜொமோட்டோ மூலமே உணவுப் பண்டங்களை வாங்கிக்கறாங்க என்பதும் தெரிய வருகிறது. இவை எல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே சாப்பிடும் குழந்தைகளுக்கு விரைவில் உடல் பருமன் ஆகிவிடுகிறது என்பதோடு பத்து வயதுக்குள் பூப்பும் அடைந்து விடுகின்றனர். எவ்வளவு தொல்லை இது என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.  நாங்க இந்த ஸ்விகி, ஜொமோட்டோவுக்கே போவதில்லை. வெளியில் வாங்குவது என்றாலும் குறிப்பிட்ட ஒரு ஓட்டலின் உணவு தான் எங்களுக்கு ஒத்துக்கும். எனக்கு முடியலைனா அங்கே போய் வாங்கி வருவோம். அதிலும் பெரும்பாலும் இட்லிதான்.

இதை எல்லாம் பார்த்தும் கேட்டும், படித்தும் அனுப்வரீதியாக அனுபவங்கள் அடைந்தும் வருவதால் இனி வரப்போகும் சமுதாயம் எத்தகையதொரு நிலைமையில் இருக்கும் என்பதை எண்ணினால் மனம் சஞ்சலம் அடைகிறது. என்ன ஒண்ணு! இதை எல்லாம் பார்க்க  நாங்கல்லாம் இருக்க மாட்டோம்.