எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 04, 2007

விவேகானந்தர் நினைவு தினம் இன்று!

ஜூலை 4-ம் தேதி விவேகானந்தர் நினைவுநாள். விவேகானந்தர் பத்தி ஏதாவது எழுதணும்னு பார்த்தால் என்னிடம் உள்ள புத்தகங்களில் எதுவுமே கிடைக்கவில்லை. கூகிளில் தேட நேரம் இல்லை.ஒவ்வொரு நாள் பதிவு போடுவதே இப்போதெல்லாம் பெரும்பாடாக இருக்கிறது. அதுக்கு ஏற்றாற்போல் வழக்கமான நண்பர் குழாமும் அவங்க அவங்க வேலையிலே ரொம்ப பிசி!. என் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதறேன்.
************************************************************************************

முதன்முதல் வெளிநாடு சென்று அங்கே நம் நாட்டுக் கலாசாரத்தைப் பரப்பியவர்களில் ஒருவர் விவேகானந்தர். சிகாகோவில் அவர் ஆற்றிய உரை உள்ள புத்தகம் கூட இந்தியாவிலே விட்டுட்டு வந்திருக்கேன்.(ஏற்கெனவே நான் கொண்டு வந்திருக்கும் புத்தகங்களால் எடை ரொம்ப அதிகம் ஆயிட்டதுன்னு மறுபாதி ஒரே புலம்பல்) "என்னருமை அமெரிக்க நாட்டு சகோதர, சகோதரிகளே!" என அவர் தன் உரையை ஆரம்பித்த கணம் ஏற்பட்ட கைதட்டல் ஒலி வெகு நேரத்துக்குக் கேட்டதாய்ச் சொல்லுவார்கள். எவ்வளவு பரந்த மனம் இருந்தால் அனைவரையும் தன் சகோதர, சகோதரியாக எண்ணி இருப்பார்?

அவரை அமெரிக்க நாட்டிற்குப் போகப் பணம் உதவி செய்து அவரை அனுப்பி வைத்துப் பின் வரவேற்பு செய்தது ஒரு தமிழர்! யார் தெரியுமா? ராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்கள் தான். முதலில் ராஜாவே போவதாய்த் தான் இருந்தார். பின்னர் விவேகானந்தர் பத்திக் கேள்விப் பட்டு தன்னை விட அவரே தகுதியான நபர் எனத் தீர்மானித்து அவரை அனுப்பி வைத்தார். விவேகானந்தர் வெளிநாட்டில் இருக்கும்போது ஒரு பெண்மணி அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என விவேகானந்தர் அந்தப் பெண்மணியிடம் கேட்க அந்தப் பெண்மணி விவேகானந்தர் போல் ஒரு மகன் தனக்கு வேண்டும் எனவும் அதற்கு அவரைத் திருமணம் செய்து கொண்டால்தானே முடியும் எனவும் சொன்னாராம். அதற்கு விவேகானந்தர் அந்தப் பெண்மணியிடம், "தாயே, இந்த நிமிஷம் முதல் நான் உங்கள் மகன், என்னையே நீங்கள் உங்கள் மகனாக எண்ணிக் கொள்ளலாம்." என்று சொன்னாராம். அந்தப் பெண்ணிற்குப் பேச்சு எழவில்லை. இத்தனை சிறிய வயதில் இவ்வாறு நினைக்க மனம் எவ்வளவு பண்பட்டிருக்க வேண்டும்? இது போல் எத்தனையோ நிகழ்ச்சிகள் சின்னச் சின்னதாய் விவேகானந்தர் வாழ்வில் நடந்தவை இருக்கின்றன. முடிந்தால் எல்லாவற்றையும் தொகுத்துப் போடவும் ஓர் ஆசை இருக்கிறது.

விவேகானந்தர் வெளிநாட்டில் நம் கலாசாரத் தூதுவராய்ச் சென்று திரும்பி வரும்போது அவரை சேதுபதி மகாராஜாவைத் தவிர வேறு யாரும் வரவேற்கவில்லை. ஆஸ்தீக இந்துக்கள் அவர் கடல் கடந்து சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். 1905-ம் ஆண்டு பாரதியார் "காசி காங்கிரஸ்" மகாநாடு சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை ஆன சகோதரி நிவேதிதா தேவியைச் சந்தித்துத் தன் ஆன்மீக குருவாக ஏற்றார். ஆன்மீகத் தேடலில் தன்னிறைவு பெற்ற விவேகானந்தரின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும். விவேகானந்தர் இந்து மதத்தைக் காப்பாற்றியதாக சக்கரவர்த்தி ராஜாஜியும், புதிய நவீன இந்தியாவின் ஸ்தாபகர் என்று சுபாஷ் சந்திர போஸாலும், விவேகானந்தரின் நாட்டுப் பற்று மிகுந்த கட்டுரைகளைக் காந்தியும் மேற்கோள் காட்டி இருக்கின்றனர். காந்தி விவேகானந்தரின் எழுத்துக்களுக்கு அறிமுகம் தேவை இல்லை எனவும் கூறி இருக்கிறார். விவேகானந்தர் இறந்த பல வருஷங்களுக்குப் பின்னர், ரவீந்திர நாத் தாகூர், "இந்தியாவை அறிய வேண்டுமா? விவேகானந்தரின் எழுத்துக்களைப் படித்தால் அறியலாம். இத்தனை நேர்மறையான சிந்தனைகளுடன் உள்ள இளைஞர் அவரைத் தவிர யாரையும் பார்த்தது இல்லை!" என்று கூறி இருக்கிறார். அவருடைய பிறந்த தினம் ஆன ஜனவரி 12-ம் தேதி இந்தியாவில் இளைஞர்கள் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது. பூபேந்திர தத்தா என்ற சுதந்திரப் போராட்டப் புரட்சி வீரரின் சகோதரர் ஆன விவேகானந்தரைத் தன் குருவாக அரவிந்தரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். விவேகானந்தர் இளைஞர்களுக்குத் தான் அதிகம் எழுதி இருக்கிறார். அன்றைய நாட்களில் இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்புவதற்காக அவர் சொன்ன சொல்: விழிமின்! எழுமின்! கேண்மின்! இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும்.

11 comments:

 1. அருமையான நினைவூட்டல். விவேகானந்தர் ஒரு அற்புதமான மனிதர். இந்த தளத்தில் நிறைய படங்களும் விவரங்களும் இருக்கின்றன.

  http://www.vivekananda.org/

  இங்கு அவரின் சிகாகோ உரை ஒலி வடிவில் இருக்கிறது. உண்மையானதா என்று தெரியவில்லை

  http://www.theuniversalwisdom.org/category/speakers/swami-vivekananda/

  http://en.wikipedia.org/wiki/Swami_Vivekananda

  ReplyDelete
 2. நான் புட்டபர்த்தியில் வேலை செய்யும் போது கம்பெனியில் டீ காசு என்று தனியாக தருவார்கள் ஆனால் கம்பெனி கேன்டீனில் டீ இலவசமாக கொடுபார்கள்.இந்த முரண்பாடு என்னவோ செய்ய..உண்டியலில் காசு போட மனம் வராமல் அங்குள்ள புத்தகக்கடைக்குள் நுழைந்தேன்,அட்டைப்படம் நன்றாக உள்ள சில நூல்கள் வாங்கினேன்.அப்படி வாங்கியதில் ஒரு புத்தகம் தான் விவேகானந்தருடையது.படிக்கப்படிக்க புதிய சிந்தனைகள் வாழ்கையை எப்படி பார்ப்பது என்று லேசாக புரிய ஆரம்பித்தது.அதிலிருந்து மாதா மாதம் பல நூல்களை வாங்கிப்படிக்க ஆரம்பித்தேன்.
  என்னை ஓரளவு பண்படுத்தியது அவருடைய கருத்துக்கள் என்றால் மிகையில்லை.

  ReplyDelete
 3. நன்றாக ஞாபகப் படுத்திவிட்டீர்கள்
  அவர் சிகாகோவில் பேசிய பேச்சை தமிழ்
  இதில் பாருங்கள்
  http://merkondar.blogspot.com/2007/01/blog-post.html

  ReplyDelete
 4. நரேந்திரனாக இருந்து விவேகானந்தராக மாறியது இந்து மதததைத் திருத்தி இளைஞர்களை ஊக்குவித்து புதிய இந்தியா படைப்பதற்காகத்தான்.
  அன்னிபெசண்ட் அம்மையார் தம்முடைய தியோசாபிகள் கருத்துக்களைத்தான் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தியதை மறுக்கவே சென்னையிலே திண்டாட சேதுபதி அரசர் பயணச்சீட்டு வாங்கி அனுப்பினார்.
  சென்னையிலே விவேகானந்தர் வேதம் பற்றிப் பேச வேதத்தைப் பிராமணர்கள்தான் பேசலாம் என்று விவ்காரம் செய்தவர்களை என்னுடன் விவாதம் செய்யத் தயாரா என்று கேட்டுச் சாடினார்.
  இந்து மதத்தின் மூட நம்பிக்கைகள்,பெண்ணடிமைத்தனம்,
  பிராமண ஆதிக்கம்,சோம்பேரித்தனம்
  இவற்றைக் கடுமையாகச் சாடினார்.
  படிப்பு,உழைப்பு,உயர்வு என்று இளைஞர்கட்கு முன்னேற்றத்திற்குத் தன்னம்பிக்கையுடன் வழிகள் சொன்னார்.பழைய கிரேக்கத்தின் பெண்களின் சமத்துவத்தையும் உயர்வையும் இந்தியப் பெண்களிடம் புகுத்தி விட்டால் உலகுக்கே வழிகாட்டுவார்கள் என்றார்.

  ReplyDelete
 5. thanks naga, for the links. :)

  ReplyDelete
 6. அருமையான நினைவூட்டல்.

  Good post after an usual mokkai review about sivaji. :p

  ReplyDelete
 7. // விவேகானந்தர் இளைஞர்களுக்குத் தான் அதிகம் எழுதி இருக்கிறார்.//

  //விவேகானந்தர் பத்தி ஏதாவது எழுதணும்னு பார்த்தால் என்னிடம் உள்ள புத்தகங்களில் எதுவுமே கிடைக்கவில்லை.//

  ரெண்டு வரிகளையும் கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்! :)

  ReplyDelete
 8. நல்ல பதிவுங்க.....

  என்னிடம் சில புத்தகங்கள் இருக்கு, ஆனால் எல்லாம் ஊர்ல இருக்கு...

  போன வருடம் அவரின் சிந்தனைத் துளிகளை பதிவாக போட்டேன், அதே பதிவை மீண்டும் ஒரு முறை இன்றும் வெளியிட்டு உள்ளேன்.

  நேரம் அமையும் போது காணவும்.

  ReplyDelete
 9. @நாகு, ரொம்ப நன்றி லிங்க் கொடுத்து உதவியதற்கு. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் விஜயம் செய்வேன். :)

  @வடுவூர், உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அநேகமாய் அனைவரது வாழ்விலும் ஏதாவது ஒரு வழியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் விவேகானந்தரின் உரைகள்.

  @என்னார், ரொம்பவே நன்றி.

  @தமிழன், "சென்னையிலே திண்டாட சேதுபதி பயணச்சீட்டு வாங்கி அனுப்பினார்?" அன்னிபெசன்ட் அம்மையாருக்கும் விவேகானந்தருக்குமான தொடர்பு பத்தி நான் படிச்சதில்லை. சேதுபதி அரசர் தான் போகநினைத்தவர் விவேகானந்தரின் உரையைக் கேட்டதும் இவரே தகுதியான நபர் எனத் தீர்மானித்ததாய்த் தெரியும்.

  @அம்பி, "சிவாஜி" படம் பார்க்கலைன்னு வயித்தெரிச்சலா? இல்லாட்டி ஏன் இவ்வளவு புகை வருது? :P என் கிட்டே புத்தகம் ஏதும் இல்லைன்னு தான் சொன்னேன். கூட்டிக் கழிச்சு ஒண்ணும் பார்க்கவேணாம், அதான் உங்களுக்குக் கணக்கே வராதே! :P

  @புலி, நானும் இந்தியாவில் விட்டுட்டு வந்திருக்கேன், ஹிஹிஹி! வரேன் உங்க பதிவுக்கும்.

  ReplyDelete
 10. நினைவு நாள் பதிவு அருமை, கீதாம்மா!

  இளைஞர் நரேந்திரனுக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் நடந்த உரையாடல், இன்றைக்கும் சுவாரசியம் குன்றாத ஒன்று!

  //இது போல் எத்தனையோ நிகழ்ச்சிகள் சின்னச் சின்னதாய் விவேகானந்தர் வாழ்வில் நடந்தவை இருக்கின்றன. முடிந்தால் எல்லாவற்றையும் தொகுத்துப் போடவும் ஓர் ஆசை இருக்கிறது//

  காத்து இருக்கிறோம்!

  ReplyDelete