எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 11, 2008

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்!


முதன் முதல் நோன்பு ஆரம்பிக்கும் போது "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்" ஆரம்பிக்கும் கோதை நாச்சியார், பின்னர் 2-வது பாடலில் இந்த வையத்தில் எல்லாம் வாழ்வோர்களை அழைத்து, நோன்பைப் பற்றியும் அதற்கான விதிமுறைகளையும் கூறுகிறாள். அதற்கான அழகான தமிழ் வார்த்தை "செய்யும் கிரிசைகள்" என்று குறிப்பிட்டு விட்டுப் பின் நோன்பு நூற்குங்காலையில் தாங்கள் மேற்கொள்ளப் போகும் விரதத்தையும் கூறுகிறாள் இவ்வாறு:
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!" என்று உறுதி எடுத்துக் கொள்ளுகிறாள் அவ்வாறே உறுதி எடுத்துக் கொண்டு தன் தோழிகளையும் அழைத்துக் கொண்டு, நந்தகோபன் வீட்டு வாயில் காப்போனை அழைத்து மணிக்கதவம் தாள் திறக்கச் சொல்லிப் பின்னர், நந்தகோபனையும் யசோதையையும் எழுப்பிப் பின்னர், அவர்தம் மருமகளாம், திருமகள் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பிக் கண்னனையும் எழுப்பச் சொல்லி வேண்டுகிறாள். அதுவும் எப்படி?
"உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்!" என்று சொல்லுகிறாள். பொதுவாகக் காலையில் எழுந்து கொள்ளும்போது முதன் முதல் பார்க்க வேண்டிய விஷயங்களில் ஒன்று மனைவியின் முகம். நப்பின்னை பால் கொண்ட காதலால், ஏழு எருதுகளை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொண்டிருக்கும் கண்ணன் அவளை எவ்வாறு பிரிவான்? மனம் வருந்தும் அல்லவா? அதனால் நப்பின்னையையே வேண்டுகின்றாள் ஆண்டாள், "நப்பின்னாய், நீ உன் மணாளனைத் துயில் எழுப்பு! உன் அழகான செந்தாமரை போன்ற முகத்தைக் காட்டி, அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உன் வளையல் கரங்களால், வளையலில் இருந்தி இன்னிசை எழுப்பிப் பள்ளி எழுச்சி பாடு, அவனைத் திருப்திப் படுத்தி எங்களுடன் நீராட்டலுக்குத் தயார் செய்து அனுப்பி வை!"
"பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவோய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!"

இவ்வாறு நப்பின்னையை வேண்டிக் கொண்ட ஆண்டாள், பின்னர் கண்ணனைத் திங்களும், ஆதித்யனும் ஒரு சேர எழுந்தாற்போல் எங்கள் சாபம் தீர நீ எங்களை உன் அருட்கண்ணால் நோக்குவாய்!" எனக் கேட்டுக் கொள்கின்றாள். மழைக்காலத்தில் குகைக்குள் பதுங்கி இருக்கும் சிங்கத்துக்கு ஒப்பானவன் கண்ணன் எனச் சொல்லும் ஆண்டாள் தன் 24-வது பாடலில் கண்ணனின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம், ராம அவதாரம் இரண்டையும் குறிப்பிட்டுப் பாடிப் பின்னர் அடுத்த பாடலில் கண்ணன் பிறந்த கதையை வர்ணிக்கின்றாள். ஒருத்தி மகனாய்ப் பிறந்து, அந்த ஓர் இரவிலேயே ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்க்கப் பட்ட கண்ணனைப் பாடும் போது
"திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து ,மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். மாலுக்கு, மணிவண்ணனுக்கு, கோல விளக்குக்குப் பல்லாண்டு பாடும் விதமாய்
"சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே!" என்று சொல்லிப் பின்னர் 27-வது பாடலுக்கு வருகின்றாள் ஆண்டாள்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் அருளிச் செய்த இந்தத் திருப்பாவையின் 27-வது பாடல் இது. இது வரையிலும் "பாவை நோன்பு" நூற்றுக் கொண்டிருந்த நாச்சியார் ஆனவள் தன் நோன்பை முடிக்கிறாள். அதுவும் எப்படி? "கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா!" என்று கண்ணனைக் கூப்பிடுகிறாள். இங்கே கூடார் எனத் தீயவர்களைச் சொல்லும் சொல் மிக அழகாய் ஆண்டாளால் சொல்லப் பட்டிருக்கிறது. சாதாரணமாய்க் கெட்டவங்க என்று சொல்லுவதில் உள்ள கடுமை இங்கே குறைக்கப் பட்டுக் கூடார் என்று அவர்களைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் தன் மென்மையான போக்கையும், நாகரீகத்தையும் ஆண்டாள் வெளிப்படுத்தி இருக்கிறாள். இப்படிக் கூப்பிட்டு இறைவனைப் பாடிப் பணிந்து நோன்பு நூற்றுத் தாங்கள் அடையப் போகும் அணிகலன்களையும் அந்நாளைய வழக்கப் படி குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.
இந்த 27-ம் நாளிலே தாங்கள் கொண்ட பாவை நோன்பை முடிக்கும் விதமாய் இந்தப் பாடலை ஆண்டாள் பாடி இருக்கின்றாள். அது வரை நெய் உண்ணாமல், பால் உண்ணாமல்,மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த வந்த பெண்கள் அன்று முதல் நல்ல ஆடை அணிகலன்கள் மட்டுமில்லாமல் :
""அதன் பின்னே பால்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். சொல்லின் திறம் மட்டுமில்லாமல் கூடி இருந்து அனைவரும் உண்ணும் பாங்கையும் எடுத்து உரைக்கும் இந்தப் பாடல் இன்று அதாவது ஜனவரி 12-ம் நாளான இன்று.

இன்று மதுரை மாநகரில் அனைவர் வீட்டிலும் பால் பொங்கும், நெய் மணக்கும், பொங்கல் உண்ணும் மக்கள் அனைத்து இல்லங்களிலும். அனைத்துப் பெருமாள் கோவிலிலும் இன்று நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாய்க் கொடுக்கப் படும். முக்கியமாய் அழகர் கோயில் அழகருக்கு இன்று செய்யப் படும் நைவேத்தியம் ஆண்டாள் அவள் காலத்திலே வாய்மொழியாக வேண்டிக் கொண்ட ஒன்று ஆகும்.

"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?"

திருமாலிருஞ்சோலை நம்பியான அழகருக்கு நூறு தடா வெண்ணெயை உருக்கிக் காய்ச்சி, பதமாய் நெய்யாக்கி, அந்த நெய்யால் நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்து வைப்பதாயும், அழகரை அதை ஏற்றுக் கொள்ளுமாறும் தன் வேண்டுகோளை நிறைவேற்றுமாறும் கேட்டுக் கொள்கிறாள் ஆண்டாள். அவள் செய்கின்றாளோ இல்லையோ, அவள் பாமாலையால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றான். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருடன் ஐக்கியம் ஆகின்றாள் ஆண்டாள். வருஷங்கள் பறக்கின்றன. நூற்றாண்டுகள் செல்கின்றன. வைணவத்தை உய்விக்க வந்த எம்பெருமானாக ராமானுஜர் தோன்றி, வைணவத்தை மட்டுமில்லாமல் கோயில் வழிபாட்டு முறைகளையும் செம்மைப் படுத்தி வந்த சமயம் அது.

அப்போது ஆண்டாள் பாசுரத்தைப் படித்து வந்த ராமானுஜர், தற்செயலாகப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அழகனைக் கண்டார். அவன் அழகில் மெய்ம்மறந்தார். அன்று இரவு அவருக்கு ஆண்டாளின் வேண்டுகோளும், அவள் அதை நிறைவேற்றாததும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் செய்யவில்லை என்றால் என்ன? அதை நாம் நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டு கோயிலில் சொல்லி ஆண்டாளின் விருப்பம் போலவே நூறு தடா நிறைய வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்ய்ச் சொல்லி அழகனுக்குப் படைக்கின்றார். அழகன் மனம் மகிழ்ந்தானோ இல்லையோ, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மனம் மகிழ்ந்தாள். அழகர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றார் ராமானுஜர். ஆண்டாளின் திருக்கோயிலினுள் நுழைந்தார். நுழையும்போதே, ஒரு குரல், "என் அண்ணாரே!" எனக் குயில் போலக் கூவியது. சுற்றும் முற்றும் பார்த்தால் அழகிய ஆண்டாள் விக்ரகம் அசைந்து, அசைந்து வந்து ராமானுஜரைப் பார்த்து, " என் அண்ணாரே, தங்கையின் வேண்டுகோளை ஒரு அண்ணன் தான் நிறைவேற்றுவான். என் வேண்டுதலை நிறைவேற்றிய நீர் என் அண்ணார்!" எனச் சொல்லி மறைந்தாள். அன்று முதல் தென் மாவட்டங்களில் "கூடாரவல்லி" என்று செல்லமாய் அழைக்கப் படும் கூடாரவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. இப்போ எப்படினு தெரியாது!

7 comments:

 1. ம்ம்ம்ம்... மொக்கைக்கு ப்ராயச்சித்தம் பண்ணிட்டீங்க!
  //உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!// எழுத்துரு பிரச்சினைல உப்புமா ன்னு முதல்ல படிச்சேன்.
  :-)

  அப்புறம் தடா ன்னா என்ன/ அகராதி எடுத்து பாத்தா பானை மிடா ன்னு இருந்தது. போச்சுடா! அப்ப மிடா ன்னா என்ன?

  ReplyDelete
 2. பெரிய அண்டாக்களைத் "தடா" எனச் சொல்லுவார்கள் திவா, அதைக் குறிப்பிட மறந்துட்டேன். மதுரைப்பக்கங்களிலே கல்யாணம் போன்ற பெரிய விசேஷங்களுக்கு அண்டாக்களிலேதான் சாதமே வடிப்பார்கள்.

  ReplyDelete
 3. எல்லாம் சர், அது டிசம்பர் 12 இல்லை, ஜனவரி 12னு இருக்கனும்.

  என்ன அவ்வையே! என் கையால கொட்டு வாங்கனும்னு இருக்கே! :))

  ReplyDelete
 4. ஹிஹிஹி, வேதா, நன்னி, நன்னி!

  @அம்பி, திருத்திட்டேனே, டாங்ஸு, டாங்ஸு!

  ReplyDelete
 5. கீதாம்மா

  பதிவு சூப்பர்! "கூடார்" என்ற சொல்லுக்குச் சரியான விமர்சனம் பண்ணிட்டீங்க!:-)

  சூடகம் னா என்ன அணிகலன் கீதாம்மா? அதே போல் செவிப்பூவே பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க! முக்கியமான லேடீஸ் மேட்டர் - நகை! இதை டச் பண்ணாமப் போகலாமா? :-)

  கூடி இருந்து குளிர்தல் ரொம்ப முக்கியமான ஒன்று!
  அதான் நோன்பு முடிஞ்சி போச்சே! இனி அவங்கவங்க வழியைப் பாத்துக்கிட்டுப் போங்க-ன்னு போயிடலை! அனைவரும் கூடி இருந்து கண்ணன் அருளில் குளிர்வோம் என்று பக்தியிலும் டீம் ஸ்பிரிட் காட்ட ஆண்டாளால் மட்டுமே முடியும்! :-)

  ReplyDelete
 6. நூறு தடா சக்கரைப் பொங்கல், மதுரைல பண்ணுவீங்களா? ஒரு தடா இப்பிடித் தள்ளக் கூடாதா? இதுக்காக பதிவர் மாநாடு கூடப் போட்டுருவமே! :-)

  இந்த நூறு தடாக் கதையை முன்பு மாதவிப் பந்தலில் போட்டிருந்தேன்! எப்படி மூன்று நூற்றாண்டு முன்னால பிறந்தவளுக்கு பின்னாடி பொறந்தவரு அண்ணன் ஆனாரு-ன்னு! இந்தாங்க சுட்டி!
  பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை!

  ReplyDelete
 7. திருப்பாவை முழுவதையும் சுருக்கமாகவும் அருமையாகவும் சொல்லிட்டு பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானவளின் கதையையும் சொல்லிட்டீங்களே. அருமை அம்மா. நன்றி.

  ReplyDelete