எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 28, 2008

கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் பகுதி 1


விநாயகப் பெருமான் அருளால் இப்போது தொடங்கும் தொடர் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் தொடரப் பிரார்த்திக்கிறேன்."அரியும் சிவனும் ஒண்ணு" பதிவில் குமரன், ராகவன், இ.கொ., திராச எல்லாரும் எழுதி இருக்கும் பின்னூட்டங்களுக்குப் பதிலோ, அல்லது அந்தப் பதிவின் தொடரோ இப்போது கொஞ்ச நாட்களுக்கு இல்லை. இதுவும், ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து 10 அல்லது 11-ம் தேதி வரையில் போட முடியாது. அது வரை போடுவேன், வந்தப்புறம் முடிக்கணும்னு ஒரு எண்ணம், இறைவன் சித்தம் எப்படியோ அப்படி! இது பல நாட்களாய் உருப்போட்டு வைத்த ஒரு விஷயம், அனைவரும் அறிந்த ஒன்றே, என்றாலும், இது நான் படித்த ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் எழுதப் போகிறேன். அந்தப் புத்தகமும் இப்போ கைவசம் இங்கே இல்லை. ஒரு வருஷம் முன்னால் எழுதி வைத்த குறிப்புக்களின் அடிப்படையிலேயே எழுதப் போகிறேன். எழுதப் போவது ராமாயணத் தொடர். வால்மீகி ராமாயணம் தான், ஆனால் ஆர்ஷியா சத்தார் என்னும் பெண்மணி இந்தத் தொடரை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்திருக்கிறார். கிட்டத் தட்டப் பத்து வருடங்கள் இதற்காக உழைத்துவிட்டுப் பின்னரே இதில் இறங்கி இருக்கிறார். மொழி பெயர்ப்புக்கும்,மொழி மாற்றத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆகவே என்னைப் பொறுத்த அளவில் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட மொழி மாற்றமே இது. ஆர்ஷியா சத்தார் பற்றிய ஒரு குறிப்பு இப்போது காணலாம்.

1960-ம் வருஷம் பிறந்த இவர் தெற்காசிய மொழிகளிலும், நாகரீகத்திலும் ஆராய்ச்சி செய்து அதற்கான முனைவர் பட்டம் ஷிகாகோ பல்கலைக் கழகத்தில் 1990-ம் ஆண்டில் பெற்றிருக்கிறார்.வடமொழி எனப்படும் சம்ஸ்கிருதத்தில் உள்ள "கதாசரிதசாகரா" மற்றும் வால்மீகி ராமாயணத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளது குறிப்பிடத் தக்கது. பெங்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்ப்பட்ட இவரின் இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் டைம்ஸ் ஆப் இந்தியா,இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற பத்திரிகைகளால் விமரிசிக்கப் பட்டுள்ளது. இதற்காக இவர் உழைத்திருக்கும் உழைப்புக் குறைத்து மதிப்பிடக் கூடிய ஒன்றல்ல. பழங்கால மொழியின் பேச்சு வழக்குத் தெரிந்து கொள்ள வேண்டும். நாகரீகங்கள், பழக்க வழக்கங்கள் தெரிய வேண்டும். அப்போது தான் அந்தக் குறிப்பிட்ட நூலின் உண்மையான உள் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியும். வால்மீகி ராமாயணத்தின் மூலத்தைத் தேடி அலைந்த இவருக்குக் குஜராத்தின் எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் அதன் பிரதி ஒன்று கிடைத்தது.

தான் கேட்டு அறிந்த ராமாயணக்கதைக்கும் இந்த வால்மீகி ராமாயண மூலப்பிரதியிலும் பல வேற்றுமைகள் இருப்பதை அறிந்து கொண்டார் ஆர்ஷியா சத்தார் அவர்கள். ஆகவே மேலும் பல பிரதிகளைத் தேடி அலைந்து ஸ்ரீஹரிப்ரசாத் சாஸ்திரியின் மொழி பெயர்ப்பு, என். ரகுநாதன் அவர்களின் ராமாயணம், ராபர்ட் கோல்ட்மேன் மற்றும் அவரின் மற்ற நண்பர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் "சக்கரவர்த்தித் திருமகன்", ஆர்.கே, நாராயணனின் ராமாயணக் கதை, பி.லால், கமலா சுப்ரமணியன், வில்லியம் பக் போன்றவர்களின் புத்தகம் போன்ற பல புத்தகங்களையும் ஆராய்ந்தார். பின்னர் வால்மீகியின் ராமாயண மூலப் பிரதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஒரே புத்தகமாய் வந்துள்ள இது கிட்டத் தட்ட 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. சரளமான மொழிபெயர்ப்பு. கதையின் மையக் கருத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டு கடைசியில் கதையைப் பற்றிய தன் கருத்தையும் சொல்லி இருக்கிறார்.அது கடைசியில் வரும். இப்போது வால்மீகி பற்றிய சிறு குறிப்பு. பின்னர் ராமாயணம், வழக்கம்போல் உத்தரகாண்டத்தில் லவ, குசர்கள் சொல்லுவது போலவே தொடங்கும்.

வால்மீகி முனிவர் நாரதரால் ஆசீர்வதிக்கப் படும் முன்னர் ஒரு கொள்ளைக்காரனாய்த் திகழ்ந்தார் என அனைவருமே அறிந்திருக்கலாம். காட்டில் செல்லும் வழிப்போக்கர்களைக் கொள்ளை அடித்தும், கொன்றும் அவர்களின் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த இவரை, நாரதர் ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. நாரதர் அவரிடம் அவர் செய்யும் கொலை,கொள்ளை போன்றவற்றைச் செய்யக் கூடாது எனப் போதிக்க இவரோ, என் பெரிய குடும்பத்தைக் காப்பாற்றவே நான் இம்மாதிரியான காரியங்களில் இறங்குகிறேன் எனச் சொல்கின்றார். நாரதர் அவரிடம் அப்போது "வலியா, நீ செய்யும் இந்த துஷ்கிருத்தியங்களின் பலனை நீ மட்டுமே அனுபவிக்க நேரிடும். எங்கே, இப்போது உன் குடும்பத்தினரிடம் சென்று இதன் துர்ப்பலன்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளுவார்களா எனக் கேட்டு வா!" என்று சொல்லி அனுப்ப, வலியனாக இருந்த வால்மீகியும் தன் குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவராய்ச் சென்று, "என் பாவத்தை ஏற்றுக் கொள்," என வேண்டிக் கேட்க, குடும்பத்துக் கடைசி உறுப்பினர் வரை யாருமே அவர் பாவத்தை ஏற்க மறுக்கவே, மனம் வருந்திய வலியன் திரும்ப நாரதரிடம் வருகிறான். நாரதர் மூலம் அவனுக்கு வித்யை கற்றுக் கொள்ள நேர்ந்ததுடன், ஒரு முனிவராகவும் உருவெடுக்கிறான்.

ஒருநாள் அவருக்கு, "மனிதர்களில் சர்வ உத்தமனாகவும், யாராலும் போற்றப் படக் கூடியவனாகவும் யாரும் இருக்கிறார்களா? இருந்தால் அவன் யார்?" என்ற கேள்வி தோன்றியது. உடனேயே நாரதரிடம் சென்று தன் இந்தச் சந்தேகத்தைக் கேட்கிறார். நாரதரும் அவருக்கு ஸ்ரீராமரின் கதையைச் சொல்லி, இவர் தான் மனிதர்களிலேயே உத்தமரும், யாவரும் போற்றத் தக்கவரும் ஆவார்." எனச் சொல்கின்றார். பின்னர் தன் மாலைக் கடன்களில் மூழ்கிய வால்மீகி கண்களில் ஒரு வேடன் இரு கிரெளஞ்சப் பட்சிகளைத் துரத்தும் காட்சியும், வேடனால் ஒரு கிரெளஞ்சப் பட்சி அடித்து வீழ்த்தப் பட்டதையும், தப்பிய மற்றதின் அழுகுரலும் படுகிறது. வேடனைக் குறித்து அவர் கூறிய சொற்கள் ஒரு இனிமையான அதே சமயம் சோகம் ததும்பிய சந்தத்தோடு கூடிய பாடலாக அமைந்தது. திகைத்துப் போன வால்மீகி செய்வதறியாது திகைக்க அவருக்கு நாரதரும், பிரம்மாவும் ஆசி கூறி இந்தப் பாடலை முதலாக வைத்து ராமனின் கதையை பாடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கின்றனர். இது ஒரு இதிகாசமாக இருக்கும் எனவும் சொல்லப் படுகிறது. இதிகாசம் என்றால் அதை எழுதுபவர்களும் அந்தக் குறிப்பிட்ட இதிகாசக் கதையில் ஒரு பாத்திரமாக இருப்பார்கள் என்று நம் நண்பர் திரு திராச அவர்கள் சொன்னார்கள். இந்த ராமாயணக் கதையில் வால்மீகியும் ஒரு பாத்திரமே! இனி நாளை வால்மீகி ஆசிரமம் செல்வோமா?

7 comments:

 1. அக்கா.. இந்த பதிவை எழுத...எத்தனை புத்தகங்களில் ஆராய்சியே நடத்தி இருக்கிறீர்கள்ன்னு புரியுது.உழைப்பிற்கும்,பகிர்ந்து கொண்டதற்க்கும் நன்றி.:)

  ReplyDelete
 2. // அவருக்கு, "மனிதர்களில் சர்வ உத்தமனாகவும், யாராலும் போற்றப் படக் கூடியவனாகவும் யாரும் இருக்கிறார்களா? இருந்தால் அவன் யார்?" என்ற கேள்வி தோன்றியது. உடனேயே நாரதரிடம் சென்று தன் இந்தச் சந்தேகத்தைக் கேட்கிறார் //

  ஸ்ரீ வால்மீகி நாரத பகவானிடம் கேட்ட முழுமையான கேள்வி
  ஸங்க்க்ஷேப ராமாயணத்தில் உள்ளது. சம்ஸ்கித மொழியில் உள்ள இந்த ராமாயண சங்க்ருஹத்தை
  ஸ்ரீமான் சிங்கப் பெருமாள் கோவில் மாட பூசி இராமானுஜாச்சர்யர் என்பவர் 1923 ல் அன்றைய
  கால தமிழ் நடையில் மொழிபெயர்த்திருக்கிறார். அதை இங்கே காணலாம்.
  http://pureaanmeekam.blogspot.com

  இராமாயணத்தினை எடுத்துச் சொல்ல எழுத முற்பட்டிருக்கிறீகள்.
  ' அஸாத்ய ஸாதக ஸ்வாமின், அஸாத்ய தவ கிம் வத ! " என
  அனுமனை நோக்கி பக்தர் வேண்டுவர். அந்த அனுமன், தாங்கள் துவங்கிய‌
  நல் வேள்விதனை, நற்பாதையில் நடத்தி பூர்த்தி செய்ய அனுக்ரஹம் செய்வார்.

  ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே
  ரகு நாதாய நாதாய ஸீதாயா: பதயே நமஹ.
  All the Best Blessings.
  சிவ.சூ. நா.
  சென்னை.

  ReplyDelete
 3. இப்பத்தான் இங்கே வர முடிந்தது....
  நல்ல ஆரம்பம்....வாழ்த்துக்கள்..

  @ ரசிகன், என்னது கீதாம்மா உங்களுக்கு அக்காவா?...இதெல்லாம் கொஞ்சம் இல்ல, ரொம்பவே ஓவர், ஆமா!!!

  ReplyDelete
 4. அட, வாங்க ரசிகரே, நீங்க கூட இதெல்லாம் படிப்பீங்களா என்ன? :P

  சூரி சார், உங்க ஆசிகளிலே நல்ல படியா முடிப்பேன்னு நம்பறேன்.
  மெளலி, என்ன புகை?

  ReplyDelete
 5. இராம நவமிக்காக இந்தத் தொடரா கீதாம்மா? முதல் பகுதியை இப்போது தான் படித்திருக்கிறேன். அடுத்தடுத்து நிறைய பகுதிகளைப் போட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது. ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருகிறேன்.

  ReplyDelete
 6. பொதுவாய் எழுதும் பதிவில் இராமன்
  மெதுவாய் எழுவான் கதையாய் - எதுவாய்த்
  திடினும் உசாத்துணை என்றே எழுதத்
  துடிக்கும் உமக்கேஎன் வாழ்த்து!

  ReplyDelete
 7. கொள்ளை அடிப்பார்; கொலைக்கும் துணிபவர்;
  கள்ளம் நிறைந்தார் வலியனை வெல்லும்
  தருணம் பொருந்தவே நாரதன் கேட்டான்
  'கருமப் பழியார் உடைத்து?'

  அல்லது ஆற்றுவான் ஈட்டும்பழி ஒப்புவர்
  இல்லை உவனிடம், உண்மையிது! - பொல்லாமை
  நீங்கி வலியவன் வால்மிகி ஆகினன்
  இங்கனம் இல்வாழ்வு துறந்து.

  முனிவராய் வாழ்ந்த வலியுமே கேட்டார்
  'இனியவர் யாருளர் இங்கு?' - இனிவரும்
  காதையில் தன்னை மறந்தார்; கலைத்ததே
  காடையின் கதறும் ஒலி!

  பறவை உயிரை பறித்த தருணம்
  துறவி பலுக்கும் இராகம் முதலில்
  அமைத்து படிக்கப் பணித்தார் உலகம்
  சுவைக்க இராமன் கதை
  (இந்த பாடல் முழுவதும் நிரைநேராகவே, புளிமா - இயற்சீர் வெண்டளை, அமைந்து விட்டது!) தெரிஞ்சவுங்க வந்து பிழை திருத்துனா நல்லது. இந்த வெண்பா விளையாட்டு ஒத்து வருமா? சரின்னா, தொடர்ந்து முயற்சிக்கிறேன். இல்லைனா, இணைப்புக் கொடுத்து எழுதிக்கிறேன். ;-)

  ReplyDelete