எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 15, 2008

எழுத்தாளர் சுஜாதாவுக்குத் தாமதமான ஒரு அஞ்சலி!


எழுத்தாளர் சுஜாதாவுக்கு எல்லாரும் அஞ்சலி எல்லாம் தெரிவிச்சு எழுதியாச்சு. கூட்டத்தோடு கோவிந்தா சொன்னால் யார் பார்க்கப் போறாங்கனு நான் அப்போ ஒண்ணும் எழுதலை. அவரை நேரடியாக நான் பார்த்ததே இல்லை. சித்தப்பா வீட்டில் இருக்கும்போதும் அவர் அங்கே வந்ததில்லை. பின்னாட்களில் வந்திருந்தாரோ என்னமோ? நான் அவரைப் பார்த்ததே இல்லை. ஆனால் நான் பள்ளி மாணவியாக இருந்தப்போவில் இருந்தே அவர் எழுத்துக்களின் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது சித்தப்பா அசோசியேடட் ஆசிரியர் ஆக இருந்த "கணையாழி" பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் சுஜாதா அவர்கள் எழுதிக் கொண்டிருந்ததைச் சேமித்து வைத்திருந்தேன். உண்மையில் பொக்கிஷம் ஆன அது, பின்னால், அப்பா நான் கல்யாணம் ஆகிச் சென்னை வந்ததும்,அவற்றை எல்லாம் தனித்தனியான தாளாக இருந்ததால் வேணாம்னு நினைச்சு எடைக்குப் போட்டு விட்டார். நான் மதுரைக்குப் போனப்போ அதுக்காக ஒரு குருக்ஷேத்திர யுத்தம் நடந்தது தனிக்கதை!

அதற்குப் பின்னர் அவர் குமுதத்தில் எழுதிய நைலான் கயிறு படிக்கும்போதே சித்தப்பாவிடம் இது அந்த ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். தானேனு கேட்டிருக்கேன். அவர் கதைகளில் எல்லாம் பெண்களைப் பற்றிய வர்ணனை கொஞ்சம் மோசமாய் இருக்கும் என்று சொன்னாலும், கதைகளில் ஒரு உள்ளார்ந்த சோகமும் இருக்கும். அவர் படைத்த கணேஷ், வசந்த் அறிமுகம் ஆனது முதல் முதல் "ப்ரியா" கதையிலா? நினைவில்லை! பின்னர் அவர் எழுதிய பதினாலு ரூபாய்-தீவு படிச்சுட்டு எத்தனை ராத்திரி தூங்காமல் இருந்தேன் என்றால் சொல்ல முடியாது. நிஜமான நிகழ்வை அதன் தாக்கத்தோடு உணர்த்தி இருக்கின்றார். எப்போவும் தங்கைக்காகக் கஷ்டப் படும் அண்ணன் ஒருத்தன் இருப்பான் அவர் கதைகளில். பின்பு அவர் எழுதிய கற்றதும், பெற்றதும் தொடர்களில் தான் அவருக்கு ஒரு தங்கை இருந்ததும், சின்னவயதிலேயே இறந்ததும் தெரிய வந்தது. கனவுத் தொழிற்சாலை, திரைப்படத் தொழிலாளர்களின் நிலையை அப்பட்டமாய்க் காட்டியதென்றால், என் போன்ற விஞ்ஞான அறிவு இல்லாதவர்கள் கூடப் புரிந்து கொள்ளும் வண்ணம் அவர் எழுதிய "சிலிக்கான் சில்லுப்புரட்சி" அமைந்தது. தொடர்கதைகளிலோ அல்லது சிறுகதைகளிலோ மெல்லிய நகைச்சுவையும், திகிலும், உண்மைச்சம்பவங்களின் கலவையும் சேர்ந்து அவர் கொடுக்கும்போது, நம்மை ஆச்சரியப் பட வைக்கும். குதிரை கடித்தது பற்றிய அவரின் சிறுகதையும், டெல்லியில் இருந்து கோடை லீவுக்குத் தமிழ்நாட்டுக்குச் சிறப்பு ரயிலில் வந்த அனுபவம் பற்றிய கட்டுரையும் இன்றும் நினைத்து, நினைத்துச் சிரிக்க வைக்கும்.

"கொலையுதிர் காலம்" தொடர் தூர்தர்ஷனில் வந்தப்போ என் பெண் அதை பார்த்துவிட்டு தமிழில் இந்த மாதிரிக் கதைகள் எல்லாம் கூட வந்துட்டு இருக்கானு ஆச்சரியப் பட்டாள். பின்னர் அவளுக்கும், என் பையனுக்கும் சுஜாதா கதைகளின் அறிமுகத்தைக் கொஞ்சம் கொஞ்சம் செய்து வைத்தேன். "ஜீனோ" தொலைக்காட்சித் தொடராய் வந்து தமிழ்நாட்டையே ஆட்டி வைத்துக் கொண்டிருந்ததை, நான் குஜராத்தில் இருந்தப்போ எனக்குக் கடிதம் எழுதிச் சொன்னாள்.நாட்டுப்புறப்பாடல்கள் பற்றிய அவரின் ஆராய்ச்சியும், பழந்தமிழ்ப் பாடல்களைத் தேடிப் பிடித்துப் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைக் கண்டு வியப்பதும் அவர் தனக்கு மட்டுமில்லாமல் தன் வாசகர்களுக்கும் பகிர்ந்தளித்தார். கற்றதும், பெற்றதும் தொடரில் அவர் போட்ட ரீபஸ்களை நினைத்துக் கொண்டே, முதல் முதல் நான் வலைப் பதிவில் நுழைந்தபோது இ.கொ. போட்ட ரீபஸ்களையும் போய்ப் பார்த்தேன், க்ர்ர்ர்ர்ர்ர்ர்., சுஜாதாவோடதே ரொம்ப சுலபமா இருந்தது. அவர் தம்பியான டாக்டர் ராஜகோபாலனோடு(?) சேர்ந்து அவர் எழுதிய அத்வைதம் பற்றிய கட்டுரையும், ஆழ்வார்கள் பாசுரங்கள் பற்றிய அவரின் விளக்கங்களும், அதைக் கூடியவரை விஞ்ஞான விளக்கங்களோடு ஒப்பிடுவதும், அவரின் கூரிய அறிவுக்குச் சான்று. உதாரணம் சமீபத்திய 16-3-2008-ல் வெளிவந்த கல்கி பத்திரிகையில் வெளிவந்த திருமங்கை ஆழ்வார் பாசுர விளக்கமே சான்று:

பார் ஏழு, கடல் எழுமலை எழும் ஆய்,
சீர் கெழும் இவ்வுலக் ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர் அருள்
எனக்கு அருளுதியேல்,
வேண்டேன், மனை வாழ்க்கையை,
விண்ணகர் மேயவனே!"

என்னும் இந்தப் பாசுரத்தில் இறைவனைத் திருமங்கை ஆழ்வார், "ஏழு உலகங்கள், ஏழு கடல்கள், மலைகள் இவை எல்லாவற்றையும் ஆபரணமணிந்த ஓர் வயிற்றில் அடக்கி நின்று ஓர் எழுத்தும், ஓர் உருவும் ஆனவனே!" என இறைவனை விளிப்பதைக் க்வாண்டம் இயற்பியல், பிரபஞ்சம் அனைத்தையும் ஓர் சக்தி, ஓர் துகள் இரண்டிலும் அடக்கிவிடலாம் என்ற முடிவிற்குச் சென்ற நூற்றாண்டில் வந்திருப்பதை நினைவு கூருகிறார். இது போலப் பல பாசுரங்களிலும் இவர் இன்றைய விஞ்ஞானம் சொல்வதை நினைவு கூருகின்றார். முடிந்தால் அனைத்தையும் தேடிப் பிடித்துத் திரட்டி ஒரு தொகுப்பாய் ஆக்க வேண்டும் என ஆசை! பார்க்கலாம். விஞ்ஞானத்தின் எல்லையே மெய்ஞானம் என்பதை நன்கு உணர்ந்த இவர் போன்ற ஓர் எழுத்தாளர் இன்று நம்மிடையே இல்லை என்பதை இன்னும் நம்பத் தான் முடியவில்லை.

4 comments:

 1. தாமதமான அஞ்சலிக்கு யாரும் வர மாட்டாங்க போல :(((

  ReplyDelete
 2. Late ஆகிப்போன சுஜாதா எனும் மகத்தான வாத்தியாருக்கான வருகை + அஞ்சலி.

  ReplyDelete
 3. //பதினாலு ரூபாய்-தீவு //
  பதினான்கு நாட்(ள்)கள் இருபத்துநான்கு ரூபாய் தீவு இரண்டும் வெவ்வேறு கதைகள்
  :-)

  ReplyDelete
 4. லேட்டா எழுதினாலும் லேட்டஸ்டா எழுதியிருக்கீங்க.

  ReplyDelete