எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 31, 2008

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் - பகுதி 5ரிஷ்யசிருங்கரால் புத்ரகாமேஷ்டி யாகம் நடந்து கொண்டிருந்த வேளையில் தேவர்களும், சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் பிரம்மாவை அணுகி, "உங்களால் ஆசீர்வதிக்கப் பட்ட ராவணன் என்னும் ராட்சசனின் தொல்லைகள் தாங்க முடியவில்லை. யாராலும் அவனை வெல்ல முடியாத வரம் வேறே பெற்றிருக்கின்றான். அவனைக் கண்டால் சூரியனும் மேகங்களுக்கிடையில் மறைந்து கொள்கின்றான். வருணனும் தன் பொழிவை மட்டுப் படுத்திக் கொள்கின்றான். வாயுவும் அடக்கியே வீசுகின்றான். சமுத்திர ராஜன் ஆன அலைகடலும் தன் அலைகளை அடக்கியே வைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இதற்கு என்ன வழி?" எனக் கேட்கின்றார்கள். பிரம்மாவும், "ஆம், நாம் இதனை அறிவோம், இந்த ராவணன், தன் மமதையால் தேவர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் எனக் கேட்டுக் கொண்டானே ஒழிய, மனிதர்களைத் தூசி மாத்திரம் நினைத்து அவர்களை அலட்சியம் செய்து விட்டான். ஆகவே அவன் பிறப்பு மனிதப் பிறவியாலேயே ஏற்படவேண்டும். இதற்கு ஸ்ரீமந்நாராயணனே அருள் புரிய வேண்டும்!" என்று சொல்ல, அப்போது முனிவர்களும், தேவர்களும் நாராயணனைத் துதிக்க, அவரும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுத் தான் மானுடனாய்த் தோன்றி, ராவணனை வதம் செய்வதாய் உறுதி அள்க்கின்றார். தன்னுடைய அம்சத்தை நான்கு பாகங்களாய்ப் பிரித்துக் கொண்டு, அப்போது புத்ர காமேஷ்டி யாகம் செய்யும் தசரதனுக்கு மகன்களாய்ப் பிறக்கத் தீர்மானித்துக் கொண்டார் மகாவிஷ்ணு.

உடனேயே பிரம்மாவும் தேவர்களுக்கும், யட்சர்களுக்கும் மானுடனாய்ப் பிறந்து ராவண வதம் செய்யப் போகும் விஷ்ணுவுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்க, மாயவித்தைகள் அறிந்தவர்களாயும், வீரம் செறிந்தவர்களாயும், தர்மமும், நீதியும் அறிந்தவர்களாயும், அறிவாளிகளாகவும், வானர உருவம் படைத்தவர்களாயும் உள்ள பல சந்ததிகளை உருவாக்கினார்கள். இந்திரன் தன் சக்தியால் வாலியை உருவாக்க, சூரியனால் சுக்ரீவன் உருவாக்கப் பட்டான். பிரம்மாவோ ஏற்கெனவேயே ஜாம்பவானைப் படைத்திருந்தார். நளனை விஸ்வகர்மா படைக்க, ராமதூதனாகவும், அன்றும், இன்றும், என்றும் ராமசேவையில் ஈடுபட்டிருப்பவனாகவும், எங்கெல்லாம் ராம கதை சொல்லப் படுகிறதோ, அங்கெல்லாம் மானசீகமாய் அந்தக் கதையைக் கேட்டு உருகவேண்டும் என்பதற்காகவே, தனக்கு அளிக்கப் பட்ட வைகுந்தப் பதவியைக் கூட மறுத்தவனும் ஆன அனுமனை வாயு படைத்தான். இப்படி வானரத் தலைவர்களும், வீரர்களும் உருவாக்கப் பட்டு வாழ ஆரம்பித்தனர். இவர்களுக்கு வேண்டிய உருவத்தை எடுத்துக் கொள்ளும் வல்லமையும், கடல், மலை போன்றவற்றைத் தாண்டக் கூடிய பலமும், மரங்களை வேரோடு பிடுங்கும் வீரமும் வாய்ந்தவர்களாக உருவாக்கப் பட்டார்கள். இவர்களை வாலி அரசனாய் இருந்து ஆண்டு வந்தான். இனி அயோத்தியில் என்ன நடந்தது?
************************************************************************************ உரிய காலத்தில் அரசியர் மூவருக்கும் குழந்தைகள் பிறந்தன. சித்திரை மாதம், சுக்கிலபட்ச நவமி திதியில், புனர்வஸு நட்சத்திரத்தில் ஐந்து கிரகங்கள் உச்ச நிலையில் இருந்த சமயம் ஸ்ரீராமர், கோசலைக்கும், புஷ்ய நட்சத்திரத்தில் கைகேயிக்கு பரதனும், ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் பிறந்தனர். நாடே கோலாகலத்தில் ஆழ்ந்தது. தேவர்கள் கோலாகலத்தில் ஆழ்ந்தார்கள். யக்ஷர்களும், கின்னரர்களும் பூமாரி பொழிந்தனர். கந்தர்வர்கள் தன் இனிமையான குரலினால் இனிமையான கீதம் இசைத்தார்கள். குலகுருவான வசிஷ்டர், கெளசலையின் மகனுக்கு ராமன், என்றும், கைகேயியின் மகனுக்கு பரதன் எனவும், சுமித்திரையின் மகன்களுக்கு முறையே லட்சுமணன், சத்ருக்கனன் என்றும் பெயரிட்டார். குழந்தைகள் பிறந்து வளர்ந்து வருகின்றன. சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டு வளர்ந்தார்கள் அரசகுமாரர்கள் நால்வரும். முறையாக அனைத்துச் சடங்குகளும் செய்விக்கப் பட்டு, அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற அரசகுமாரர்களுக்குத் திருமணப் பருவம் வந்து விட்டதை உணர்ந்த மன்னன், தன் மந்திரி, பிரதானிகளிடம் அது பற்றி ஆலோசிக்க ஆரம்பித்தான். அப்போது அரசவைக்கு வருகை தந்தார் விசுவாமித்திர முனிவர்.

ஸ்ரீராமரின் இந்தக் குழந்தைப் பருவத்தை அருணகிரிநாதர் தமது வருகைப் பருவப் பாடல்களில் பத்து முறை வருக என அழைத்துப் பாடி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். புத்தகம் கிடைக்கவில்லை! :( பிள்ளைப் பருவங்கள் பத்து என்று வைத்துப் பிள்ளைத் தமிழ் பாடுவதுண்டு, அந்தக் கணக்கிலேயும், திருமாலின் அவதாரங்கள் பத்தையும் கணக்கில் கொண்டும் இவ்வாறு பாடி இருக்கலாம் என்று ஆன்றோர் வாக்கு. அருணகிரிநாதரின் கூற்றுப் படி சூரியன் - சுக்ரீவன், இந்திரன் - வாலி, அக்னி -நீலன், ருத்திரன் - அனுமன், என்பதோடு மட்டுமன்றி, பிரம்மா தான் ஜாம்பவான் என்றும் சொல்கின்றார். சிவ அம்சமாகவே அனுமன் தோன்றியதாய்த் தம் திருப்புகழிலும் சொல்லி இருக்கிறதாயும் கேள்விப் பட்டிருக்கிறேன். திருப்புகழைப் பார்க்கணும்.
*************************************************************************************
இந்த வானரர்கள் பற்றி அனைவருக்குமே எழும் சில சாதாரண சந்தேகங்கள் இந்த ராமாயணத்தை எழுதியவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அவர் கண்ட தீர்வு இது தான்:

இந்தக் கதை நடந்த காலத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் கடவுளர், வானவர்,அசுரர்கள், ராட்சசர்கள் அவர்கள் பெற்ற வரங்கள், செய்த தவங்கள், சாபங்கள், மந்திர, தந்திரப் பிரயோகங்கள், அவற்றினால் ஏற்பட்ட நல் விளைவுகள் மட்டுமின்றி துர் விளைவுகள், பறக்கும் ரதங்கள், சக்தி வாய்ந்த ரிஷி முனிவர்கள், அதிசயமான வடிவம் கொண்ட பேசும் மிருகங்கள், பேசும் பறவைகள், வீரம் செறிந்த மனதனைப் போல் பேசும், வாழ்க்கை நடத்தும் குரங்குகள், இவற்றுக்கு நடுவில் ஒரு ஒழுக்கம் செறிந்த, சற்றும் கண்ணியம் தவறாத, அரச நீதியை மீறாத சொன்ன சொல் தவறாத ஒரு மனிதனின் வாழ்க்கைப் போராட்டமாகக் காணுகின்றார். கடைசி வரையிலும் தான் ஒரு அவதார புருஷன் என்பது தெரிந்து கொள்ளாத ஒரு சாதாரண மனிதனாகவே ராமன் வால்மீகியால் படைக்கப் பட்டிருக்கின்றான். அதனாலேயே பின்னர் வரும் சில தவறுகளுக்கும் அவன் காரணம் ஆகின்றான். ஒரு தேவதைக் கதையில் உள்ள அனைத்துச் சம்பவங்களுக்கும் இதில் குறை இல்லை. அதே சமயம் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று உணர்த்தவும் செய்கின்றது.

ஆசிரியரின் கருத்துக்கள், ஒவ்வொரு அத்தியாயத்திலும் முடிவில் வரும்.

முழுக்க முழுக்க வால்மீகி ராமாயணத்தையே எழுதப் போவதாய் இருந்தாலும் சில சமயங்களில் வேறு ராமாயணங்களும் குறிப்பிடப் படும். சன் தொலைக்காட்சியிலே "ராமாயணம்" தொடர் வருவதாய் வேந்தர் தெரிவித்திருந்தார், என் அண்ணா பெண்ணும் அதை உறுதி செய்தாள். என்றாலும் நான் அதைப் பார்ப்பதில்லை, அதன் தாக்கமும் இதில் வராது, முற்றிலும் மாறுபட்டே இருக்கும்.

5 comments:

 1. //நான் அதைப் பார்ப்பதில்லை, அதன் தாக்கமும் இதில் வராது, முற்றிலும் மாறுபட்டே இருக்கும்.
  //

  ஆம், அதன் தாக்கம் இல்லை. ஒத்துக்கறேன்.

  ராமர் பிறந்ததுக்கு சுண்டல் உண்டா? :D

  ReplyDelete
 2. ஐந்து பாகத்துக்கும் லேபிள் குடுங்க. சில பாகங்களை படிக்க விட்டு போய் திரும்ப படிக்கறவங்களுக்கு ஈசியா இருக்கும். :))

  ReplyDelete
 3. //ஆகவே அவன் பிறப்பு மனிதப் பிறவியாலேயே ஏற்படவேண்டும். //

  என்னது?, இராவணன் இறப்பு மனிதப் பிறவியாலேயேன்னு டைப் பண்ணறதுக்கு பதிலா பிறப்புன்னு வந்துடுத்துன்னு நினைக்கிறேன். பார்த்து சரிபண்ணுங்கம்மா

  ReplyDelete
 4. நல்ல முயற்சி.
  எளிமையாக அழகாக எழுதுகிறீர்கள்.
  பெரிய பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
  உங்கள் கருத்துக்களாகச் சொல்பனவற்றை பின்னூட்டங்களுக்குப்
  பதிலளிக்கும் போது வைத்துக் கொண்டால், கோர்வையாகக் கதையைப் படிப்பவர்களுக்கு சுலபமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. கீதா வணக்கம். இன்று தான் உங்கள் ராமாயணம் படிக்க முடிந்தது. எழுத்து நடை அருமையாக உள்ளது. பாராட்டுக்கள். ஒரு சந்தேகம். சீதை அக்னி பரீக்ஷையின் போது பிரம்மாவும் சிவனும் எல்லா தேவர்களும் ராமர் முன் தோன்றி நீயே மூல முதல்வன் என்று சொல்லும் பகுதி உள்ளதே? ஆர்ஷிய சத்தாரின் மொழிப் பெயர்ப்பிலும் உள்ளதே? கீதையில் நான் என்று எதையெல்லாம் கிருஷ்ணர் சொல்கிறாரோ...அதையெல்லாம் நீ என்று பிரம்மா ராமரை பார்த்து சொல்கிறாரே? வால்மீகி ராமரை மனிதனாகத் தான் சித்தரிக்கிறார். ஆனால் இரண்டு இடங்களில் மட்டும் அவர் ராமரை பரம் பொருள் என்று குறிப்பிடுகிறார். நீங்கள் சொல்வது குழப்பமாக உள்ளது! குறை கூறவில்லை. இது ஒரு நேர்மையான சந்தேகம். ராம காதை படிக்கவே எவ்வளவோ புண்ணியம் செய்ய வேண்டும். நீங்கள் அதை படித்து உணர்ந்து எழுதியிருக்கீர்கள். உங்கள் மேன்மையை நான் உணர்கிறேன். கருத்து பறிமாற்ற எண்ணத்தோடே இக்கேள்வியை கேட்கிறேன். பகுதி 5 வரை படித்து விட்டேன். தொடர்ந்து படிப்பேன்.

  ReplyDelete