எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 29, 2008

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2


இடம் வால்மீகி ஆசிரமம். சிந்தனையில் இருந்த வால்மீகிக்கு ராமன் இன்னும் அரசாண்டு கொண்டிருப்பதும், அவனுடைய நல்லாட்சி பற்றியும் நாரதர் எடுத்து உரைத்தது நினைவில் இருந்தது. இப்படிப் பட்ட ஒரு உயர்ந்த மனிதனின் சரித்திரத்தைத்தான் சாட்சியாகவும் இருந்து கொண்டு எழுத நேர்ந்தது பற்றி அவர் மனமகிழ்ச்சி அடைந்தார். காவியம் இயற்றத் தீர்மானம் செய்த வால்மீகிக்கு அதுவரை நடந்த நிகழ்வுகளும், பேசப் பட்ட சொற்களும், அழுத அழுகைகளும், செய்த சபதங்களும், வாங்கிய வரங்களும், நிறைவேற்றப் பட்ட பிரதிக்ஞைகளும், நடந்த நடையும், செய்த பிரயாணங்களும் மனதில் வந்து அலைகடலில், மோதும் அலைகள் போல மோத ஆரம்பித்தன. அதே சமயம் இனி என்ன நடக்கப் போகிறது, என்ற உள்ளுணர்வாலேயும் உந்தப் பட்டார். எழும்பியது ஒரு அமர காவியம்! சூரிய, சந்திரர் உள்ளவரையும், நட்சத்திரங்கள் ஜொலிக்கும் வரையும், கடல் மணல் உள்ளவரையும், இப்பூவுலகில் மக்கள் வசிக்கும் வரையும் பேசப் படப் போகும், அனைவராலும் விவாதிக்கப் படப் போகும் ஒரு மகத்தான எழுத்தாக்கம் எழும்பி நின்றது.

ஆறு காண்டங்களில், 500 சர்க்கங்கள் எனப்படும் அத்தியாயங்களில், 24,000 ஸ்லோகங்கள் எழுதப் பட்டதாய்ச் சொல்லப் படுகிறது. இனி நடக்கப் போவதை உத்தரகாண்டமாக இயற்றினார். எல்லாம் முடிந்தது. இனி மக்களுக்கு இதை எடுத்துச் சொல்லும் பேறு பெற்றவர் யார்? தகுதியான நபர்கள் யார்? சிந்தித்த வால்மீகியை வந்து வணங்கினார்கள் இரு இளைஞர்கள். லவன், குசன், என்ற பெயர் பெற்ற இரு இளைஞர்களும் வால்மீகியின் சிஷ்யர்கள் தான். என்றாலும் இந்த மகத்தான காவியத்தின் முக்கிய கதாபாத்திரங்களும் அவர்களே, ஆனாலும் அவர்கள் அதை அச்சமயம் அறியமாட்டார்கள். தங்கள் குருவை வணங்கிய இரு இளைஞர்களுக்கும், இந்த ஒப்பற்ற காவியம் கற்பிக்கப் பட்டது. பிறவியிலேயே இனிமையான குரல்வளம் பெற்றிருந்த இரு இளைஞர்களும் அந்தக் காவியத்தை தங்கள் இனிமையான குரலில் இசைக்க ஆரம்பித்தனர். ரிஷிகளும், முனிவர்களும், நல்லோரும் கூடி இருக்கும் இடங்களில் அந்தக் காவியத்தைப் பாடலாகப் பாடிக் கொண்டு இரு இளைஞர்களும் சென்ற வழியில், ஸ்ரீராமரின் அசுவமேத யாகம் நடந்து கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.

யாகம் நடக்கும்போது ஏற்படும் சிறு இடைவேளைகளில் இச்சிறுவர்கள் பாடும் ராமாயணப் பாடல்களைக் கேட்டறிந்த ரிஷிகள், முனிவர்களோடு, பொது மக்களும் அந்தச் சிறுவர்களை வாழ்த்திப் பரிசுகளை அளிக்கின்றனர். செய்தி பரவி, நகரத் தெருக்களில் இருந்து, மெல்ல, மெல்ல அரண்மனையைச் சென்றடைந்தது. ஸ்ரீராமரின் செவிகளில் இந்தச் செய்தி விழுந்ததும், இளைஞர்களை அரண்மனைக்கு வரவழைக்கின்றார். இளைஞர்கள் பாட ஆரம்பித்ததும், கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வயம் இழந்த ஸ்ரீராமர் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கி மற்ற சபையோர்களுடன் சேர்ந்து அமர்ந்து அந்தக் காவியத்தைக் கேட்கலானார்.

இந்த இடத்தில் துளசி ராமாயணம், மற்றச் சில ஹிந்தியில் எழுதப் பட்டிருக்கும் ராமாயணக் கதையில் லவ, குசர்கள், ஸ்ரீராமரின் அசுவமேதக் குதிரையைப் பிடித்துக் கட்டி விட்டு, அதை விடுவிக்க வந்த ராம பரிவாரங்களைத் தோற்கடித்ததாயும், பின்னர் சீதை வந்து நேரில் பார்த்துவிட்டுத் தன் பதியின் சகோதரர்களே என அறிந்து கொண்டு, லவ, குசர்களிடம் அதைத் தெரிவித்ததாயும், ஸ்ரீராமருடனேயும், லவ, குசர்கள் சண்டை போடத் தயாராக இருந்ததாயும் வரும். அதற்குப் பின்னரே அவர்கள் அசுவமேத யாகத்தில் கலந்து கொண்டு ராமாயணம் பாடச் செல்லுவார்கள். ஆனால் வால்மீகி ராமாயணத்தில் ராமரின் கடைசித் தம்பியான சத்ருக்கனன் மட்டுமே லவ, குசர்கள் பிறந்த சமயத்திலும், அதற்குப் பனிரெண்டு வருடங்கள் பின்னால் அவர்கள் ராமாயணத்தை வால்மீகி மூலம் கற்றுப் பாடிப் பயிற்சி செய்து கொண்டிருந்த போதும் வால்மீகி ஆசிரமத்தில் தற்செயலாகத் தங்குகிறான். அவன் ஒருவனுக்கு மட்டுமே ஸ்ரீராமருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த விபரம் தெரிய வருகிறது, என்றாலும் அவன் கடைசி வரை அது பற்றிப் பேசுவதில்லை.

வால்மீகியும் ராமனை ஒரு அவதார புருஷன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை, என்பதும் கவனிக்கத் தக்கது. ஆனால் வால்மீகி ராமனை ஒரு சாதாரண, ஆசா பாசங்கள் நிறைந்த மனிதனாய்க் காணவில்லை. கட்டுப்பாடுகள் நிறைந்த ஒழுக்க சீலன் என்றும் எண்ணவில்லை. மாறாக "மனிதருள் மாணிக்கம்" என்றும் கிடைத்தற்கரிய அரிய மனிதன் என்றும் சொல்கின்றார். ஒரு முன்மாதிரியான மகன், சகோதரன், நண்பன், கணவன், இவை எல்லாவற்றுக்கும் மேல் குடிமக்களைத் தன் மக்கள் போல் எண்ணும் ஒரு ஒப்பற்ற அரசன். தன் கடமையைச் செய்வதற்காகவும், தன் குடிமக்களைத் திருப்தி செய்வதற்காகவும் எந்த விதமான ஒப்பற்ற தியாகத்தையும் செய்யத் தயாராய் இருந்தவன், தன் அன்பு மனைவியைக் கூட. அதை நாளை காண்போமா?


பி.கு: முதன் முதல் நாரதர் வால்மீகிக்குச் சொன்ன "சம்க்ஷிப்த ராமாயணம்" தவிர, வால்மீகி எழுதிய ராமாயணத்தின் மூலம் தவிர, நாம் அறிந்தவை, கம்ப ராமாயணம் தமிழில் என்றாலும் இது தவிர, துளசி ராமாயணம், ஆனந்த ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், அத்புத ராமாயணம், அமல ராமாயணம், ரகு வம்சம் உட்பட பல ராமாயணங்கள் இருக்கின்றன. சங்க காலத்திலும் பழைய ராமாயணம் ஒன்று இருந்திருக்கிறது. இது தவிர, தமிழ்க்காப்பியங்கள் ஆன சிலப்பதிகாரம், மணிமேகலையும் ராமாயணம் பற்றிக் குறிப்பிடுகிறது. அருணகிரிநாதரும் தன் பங்குக்கு ஒரு ராமாயணம் எழுதி இருக்கிறார். முடிந்த வரை சில வரிகள் கம்ப ராமாயணத்தில் இருந்தும், அருணகிரிநாதரின் ராமாயணத்தில் இருந்தும் குறிப்பிடப் படும். ஆனால் கம்பரும் சரி, அருணகிரியாரும் சரி ராமரை ஒரு அவதாரமாகவே வர்ணிக்கிறார்கள். படிப்பவர்கள் அனைவரும் உங்கள் கருத்துப் படி எடுத்துக் கொள்ளலாம். கதை கதையாம் காரணமாம் என்ற தலைப்புக் கொடுத்ததுக்கும் காரணம் இருக்கிறது. காரணம் இல்லையேல் காரியம் இல்லை என்பதை நிரூபிக்கும் ராமாயணக் கதை அதை எடுத்துச் சொல்லும் என நம்புகிறேன்.

6 comments:

 1. நாரதரால் சொல்லப் பட்டது "சந்க்ஷேப்த ராமாயணம்" என்று வந்திருக்கவேண்டும். தவறுக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 2. அருமை...உங்கள் எழுத்தின் மூலம் ராமாயணத்தை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் தலைவி ;)

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள், ஸ்ரீராம கிருபை வழி நடத்தட்டும்!

  ReplyDelete
 4. // கதை கதையாம் காரணமாம் என்ற தலைப்புக் கொடுத்ததுக்கும் காரணம் இருக்கிறது.//
  ஏன்னா அது என் ப்ளாகோட பெயர்.
  நான் ப்ளாகுக்கு பெயர் வெச்ச பிறகு எங்கே சமீபத்திலே இதை பாத்தோம்னு யோசிச்சேன். பொதிகைல வர நிகழ்ச்சி ன்னு தெரிஞ்சது. இப்ப நீங்களும் அதே தலைப்பு வெச்சு இருக்கீங்க. பரவாயில்லை. நான் காப்பிரைட் கேக்கலை. வீட்டுக்கு வரும்போது ஒரு காப்பி கொடுத்தா போதும் ரைட்!
  :P
  எப்படியும் அது காலங்காலமாக வழங்கி வருகிற சொலவடை.

  ReplyDelete
 5. ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே!.....

  ReplyDelete
 6. அண்மையில் யூட்யூபில் ஜகம் புகழும் புண்ய கதை லவகுசா படப்பாடலைக் கேட்டேன். அதனைக் 'கேட்டதில் பிடித்தது' என்று பதிவில் போட்டுவிடலாம் என்றால் அப்படி செய்வது தடுக்கப்பட்டிருந்தது. அதனால் ஒன்றுக்கு நான்கு முறை கேட்டேன். இன்று அதனைக் குறிக்கும் பகுதியை உங்கள் இடுகையில் படித்தேன். :-)

  ReplyDelete