எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 02, 2008

துளசிதாசரின் ராமாயணம் உத்தர காண்டம்

துளசியின் ராமாயணம், கம்பராமாயணத்தைப் போலவே, ராமரை ஒரு அவதாரம் எனவும், சீதையை சாட்சாத அந்த மகாலட்சுமியே எனவும் கூறி வந்திருக்கின்றது ஆரம்பம் முதலிலேயே. ஆகவே ராவணன் கடத்தியதும், உண்மையான சீதை அல்ல, துளசியின் கருத்துப் படி. மாய சீதை தான் ராவணனால் கடத்தப் படுகின்றாள். அசோகவனத்தில் சிறையும் இருக்கின்றாள். பின்னர் அவள் தான் அக்னிப்ரவேசமும் செய்கின்றாள். உண்மையான சீதை பூமியிலே மறைந்திருந்து வாழ்வதாயும் அக்னிப்ரவேசத்தின் போது பூமித் தாய் உண்மை சீதையை வெளியே கொண்டுவருவதாயும் துளசி சொல்கின்றார். கிட்டத் தட்ட அதே தான் இப்போவும் சீதை நாடு கடத்தப் பட்டபோதும் துளசி சொல்கின்றார். ஆனால் அவதூறு பேசுவது அனைத்து மக்களும் என்றும் துளசி சொல்லவில்லை.

யாரோ ஒரு வண்ணான் சந்தேகப் படும் வகையில் நடந்து கொண்ட தன் மனைவியைக் கண்டிக்கும்போது, "நான் என்ன ராமனா?? பதினான்கு மாதங்களுக்கு மேல் இன்னொருவன் பாதுகாவலில் இருந்த மனைவியைத் திரும்ப அழைத்து வைத்துக் கொண்டதுபோல் வைத்துக் கொள்ள?" என்று கேட்டதாயும், அந்தப் பேச்சைக் கேட்ட தூதர்கள் ராமரிடம் வந்து சொன்னதும், ராமர் சீதையைத் துறக்க முடிவு செய்ததாயும் துளசி ராமாயணத்தில் வருகின்றது. என்றாலும் துளசியின் ராமாயணப் படி ராமர் இப்போது துறப்பதும் உண்மையான சீதை அல்ல. சீதை மேலுலகு செல்லும் நேரம் வந்துவிட்டதாய்க் கூறி ராமர் அவளை மேலுலகம் அனுப்புவதாயும், அவள் தோற்றம் மட்டுமே பூமியில் தங்கியதாயும், அந்தத் தோற்றத்தையே ராமர் காட்டுக்கு அனுப்பியதாயும் துளசியின் ராமாயணப் பாடல்கள் கூறுகின்றன.

அப்போது அந்த மாய சீதைக்குப் பிறக்கும் பையன்களே லவ-குசர்கள் என அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார் துளசி. இந்த சகோதரர்கள் மாபெரும் வீரர்களாய்த் திகழ்கின்றனர். இவர்கள் யாராலும் வெல்ல முடியாதவர்களாய் இருக்கின்றனர். ராமர் அசுவமேத யாகம் நடக்கும்போது அவர் திக்விஜயத்திற்கு அனுப்பும் குதிரையை இவர்கள் பிடித்து வைத்துக் கொள்ளுகின்றார்கள்.
குதிரையை மீட்காமல் அசுவமேத யாகம் செய்ய முடியாது. பெரும்போர் நடக்கின்றது. போர் புரிவது தன் உறவினருடன் என்பதை அறியாமலேயே இளைஞர்கள் இருவரும் போர் புரிகின்றனர். பரதன், சத்ருக்கனன், லட்சுமணன், விபீஷணன், அனுமன் என அனைவருமே இவ்விரு இளைஞர்களால் தோற்கடிக்கப் பட்டு கடைசியில் ராமரே வருகின்றார். ராமர் போர் புரியும் முன்னர் சற்று தூங்க, அந்த இளைஞர்கள் இடைப்பட்ட நேரத்தில் தாங்கள் பிடித்து வைத்த அனைவரையும், காட்டத் தங்கள் அன்னையை அழைத்து வருகின்றனர். சீதை அவர்களைப் பார்த்துவிட்டு, இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் உறவினர்கள். உங்கள் தந்தையின் சகோதரர்கள் என்று சொல்கின்றாள்.அதற்குள் அங்கே வால்மீகி வந்து தூங்கும் ராமரை எழுப்பி, லவ, குசர்களைக் காட்டி ராமரின் மகன்கள் எனச் சொல்வதாயும், மகன்களை ஏற்ற ராமர், சீதையை மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்ல, சீதை,பூமிக்குள் செல்வதாயும், அதன்பின்னர், ராமரின் மறைவு பற்றிய விபரங்கள் வால்மீகி சொல்லி இருப்பதை ஒட்டியே வருகின்றது. லவ, குசர்கள் குதிரையைப் பிடிப்பது, கட்டுவது, தங்கள் சித்தப்பன்மார்களிடமும், தந்தையின் நண்பர்களுடனும் போர் புரிந்து அனைவரையும் தோற்கடிப்பது போன்ற விபரங்கள் வால்மீகியில் இல்லை. ஆனால் துளசி ராமாயணத்தை ஒட்டிப் பல திரைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்திருக்கும் காரணத்தால் அனைவருக்கும் மேற்கண்ட நிகழ்ச்சிகளே நடந்தவை என நினைக்கும்படியாக மனதில் பதிந்து விட்டிருக்கிறது. இது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது.

No comments:

Post a Comment