எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 19, 2008

ராமாயணத் தொடரை ஒட்டிய சில எண்ணங்கள் - காதல்!

அடுத்து இளைஞர்களின் மனதைக் கவரும் காதல். ராமருக்கும், சீதைக்கும் காதல் என்பது கம்பராமாயணத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு காட்சி. வால்மீகி எந்த இடத்திலும் இருவரும் காதல் கொண்டதாய்ச் சொல்லவே இல்லை. எனினும் திருமணத்திற்குப் பின்னர் இருவரும் அன்புடனும், ஆனந்தத்துடனும் வாழ்ந்து வந்ததாகவே சொல்கின்றார். ஆனால் கம்பரோ இருவரும் ராமன் மிதிலைக்குள் நுழைந்ததுமே சீதையைப் பார்ப்பதாகவும், கன்னிமாடத்தில் இருக்கும் சீதையும், ராமரைக் காண்பதாகவும், மிக அழகாய் காதலர்களின் நோக்கை இவ்வாறு வர்ணிக்கின்றார்.

“எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்று வழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்.”

என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது இருவரின் கண்கள் மட்டுமில்லாமல், உணர்வும் ஒன்றுபட்டது என்று சொல்லுகின்றார். காதலின் சிறப்பை இதை விடச் சிறப்பாகச் சொல்லவும் முடியுமோ??? வால்மீகியை முழுதும் உள்வாங்கிக் கொண்டே கம்பர் இந்தக் காவியத்தை வடித்திருந்தாலும், அவரின் சொல்லாற்றலால் வால்மீகியைவிடச் சிறந்து விளங்குகின்றார் என்றே சொல்லலாம் அல்லவா??

காதல் இங்கோடு நிற்கவில்லை, ராமாயணத்தில். முதலில் வருவது சூர்ப்பநகை ராமர் பால் கொண்ட காதல். இதைக் காதல் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே திருமணம் ஆனவளே சூர்ப்பநகை. ஒரு மகனும் இருக்கின்றான். ஆனால் அவனைத் தற்செயலாக லட்சுமணன் தர்ப்பைப் புல் அறுக்கும்போது கொல்ல நேருகின்றது. இது தெரிந்தோ, அல்லது தெரியாமலேயோ வருகின்றாள் சூர்ப்பநகை. வந்ததுமே ராமரின் வடிவைக் கண்டு அதிசயித்துப் போவதோடு, சீதையைக் கண்டும் பொறாமை கொள்கின்றாள். ராமரை எவ்வாறேனும் அடைந்தே தீருவது என்றும் எண்ணுகின்றாள். சகோதரர் இருவரும், சூர்ப்பநகையின் இந்த நடவடிக்கையைக் கண்டு முதலில் பரிகாசமாய்ச் சிரித்தாலும், பின்னர் சீதையை அவள் கொல்ல முயல்வது கண்டு சூர்ப்பநகை தண்டிக்கப் படுகின்றாள். உடனேயே சூர்ப்பநகையின் காதல், அல்லது காமவெறி பழிவாங்குதலில் முடிகின்றது. ராவணனின் கவனத்தைச் சீதை பால் திருப்புவதில் இவளுக்குப் பெரும்பங்கு இருக்கின்றது. இதில் முக்கோணக் காதல் என்று சொல்லமுடியாவிட்டாலும் ராவணன் சீதைபால் கொண்ட காதலை ஒருதலைக்காதல் என்றே சொல்லலாம். சீதையை அவன் மிகவும் விரும்புகின்றான். எனினும் சீதை அவனை விரும்பவில்லை. ராவணனுக்கு அது தெரிந்தே இருக்கின்றது. என்றாலும் கடைசிவரையில் சீதையை வற்புறுத்தித் துன்புறுத்தாமல், அவளாக இணங்கி வரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றான். சீதை மனம் மாறித் தன்பால் திரும்புவாள் என்று காத்திருக்கின்றான். சீதையோடு கூடி சந்தோஷமாய் வாழவேண்டும் என்றும் நினைக்கின்றான். இது ராவணனின் காதலின் மேன்மையை ஒரு பக்கம் காட்டினாலும், பிறன் மனைவியை விரும்பியது என்ற பெருந்தவற்றின் காரணமாய் அவன் இறுதியில் தண்டிக்கப் படுகின்றான்.

“அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின் இருந்து வாழ்வார் பலர்.”

என்பதற்கொப்ப, பிரிந்து இருக்க நேரிட்டாலும் சீதையோ, ராமரோ ஒருவரை ஒருவர் நினைந்து ஏங்கிப் பிரிவாற்றாமையால் துடித்துக் கொண்டிருந்தனர் என்பது இங்கே தெளிவாய்ச் சொல்லப் படுகின்றது. இல்வாழ்க்கையில் கணவனும், மனைவியும் சேர்ந்து உண்மையான மெய்யன்பும், மெய்யறத்தோடும் வாழுவதையும், அவ்வாறு வாழ்ந்தவர்களே ராமனும், சீதையும் என்பதும் இங்கே சொல்லப் படுகின்றது. அன்பிற்கும், பாசத்துக்கும், காதலுக்கும் ஒரு இலக்கணமாய் வாழ்ந்த ஆதர்ச தம்பதிகள் என்று ராமரையும், சீதையையும் சொல்லலாம் அல்லவா??ஆகக் காதல் என்பதன் அர்த்தம் இங்கு தெளிவாய்ச் சொல்லப் படுகின்றது. வெறும் உடல் கவர்ச்சி மட்டும் காதல் இல்லை என்பதும், காதல் என்பது எத்தகைய தியாகத்துக்கும், பரஸ்பரம் புரிதலுக்கும், விட்டுக் கொடுத்தலுக்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் சுட்டுகின்றது. இதற்கு சீதை அக்னிப்ரவேசம் செய்வதையே உதாரணம் காட்டலாம். ராமருக்கு நன்கு தெரியும் சீதை தன்பால் அன்பு கொண்டிருக்கின்றாள் என்பதும், தன்னைத் தவிர பிறரை விரும்பமாட்டாள் என்பதும். சீதையும் நன்கு அறிவாள் தான் இல்லாமல் தன் பதி துன்புற்றிருப்பார் என்பதும். நாமே பார்த்தோம் சீதையைப் பிரிந்த ராமர் எவ்வாறு புலம்பி அழுதார் என்றும், நிராசையுடனும், அவநம்பிக்கையுடனும் பேசினார் என்பதும். மனைவியை மீட்கவே ராமர் பாலத்தைக் கட்டிக் கடல் கடந்து வந்து இலங்கேஸ்வரனை வென்று சீதையை மீட்கின்றார். அத்தகைய அன்பு வைத்த சீதையை மறுதலிக்க முக்கிய காரணமே எந்தவிதமான ஆட்சேபங்களோ, சந்தேகங்களோ இல்லாமல் தான் அவளை மீண்டும் அடையவேண்டும் என்ற எண்ணமே தான். எங்கே தான் உடனே ஏற்றுக் கொண்டால் பெரியவர்களால் வீண்பழிச்சொல் ஏற்பட்டுப் பின்னர் வேறு வழியில்லாமல் சீதையை இழக்க நேரிடுமோ என்ற முன் ஜாக்கிரதையே ராமரை அவ்வாறு சீதையை அக்னிப்ரவேசம் செய்யச் சொல்கின்றது. சீதையும் தன்மேல் பழி இல்லை என்பதாலேயே, கணவரின் கருத்துப் புரிந்து கொண்டதாலேயே அக்னிப்ரவேசத்துக்குத் தயார் ஆகிவிடுகின்றாள். எந்தவிதப் பழியும் இல்லாமல் கணவனோடு சுகமாய் வாழ எதையும் தியாகம் செய்யத் தயார் என்று நிரூபிக்கின்றாள் சீதை.

இன்றைய நாட்களில் சிறு விஷயத்துக்கும் விட்டுக் கொடுக்காமல், தன்னுடைய சுய கெளரவம் இதனால் பறி போகின்றது என்றும், சுதந்திரம் போய் விட்டது என்றும் எண்ணும் பெண்கள் நடுவில் சீதையின் இத்தகைய மாபெரும் தியாகத்தைப் புரிந்து கொள்ளும் உணர்வு இருப்பது கொஞ்சம் கஷ்டமே. என்றாலும் தீர ஆலோசித்தால் சீதை செய்ததில் உள்ள நியாயம் புரியும். தன் கணவனின் ராஜ்யத்திற்காகவும், அவன் ஒரு அரசன் என்பதால் அவன் நிறைவேற்ற வேண்டிய முக்கிய கடமைகளில் குடிமக்களைப் பேணுவதும், அவர்கள் விருப்பத்தின்படி நடப்பதும் முக்கியம் என்பதாலுமே அவன் தன்னை வேறு வழி இல்லாமலேயே நிராகரிக்க வேண்டி வந்தது என்றும் புரிகின்றது சீதைக்கு. அதைத் தன் வாயாலேயே சொல்லவும் செய்கின்றாள். அன்பு என்பது கொடுப்பதில் தான் உள்ளது என்றும், ஒரு மடங்கு கொடுத்தால் பல மடங்காய்த் திரும்பி வரும் என்றும், கொடுக்கக் கொடுக்க நிரம்பி வழிவதும் அன்பு ஒன்றே என்பதும் புரிய வரும். காதல் என்பது வெறும் சுக,போகங்களில் பங்கு பெறுவது மட்டுமல்ல என்பதும், தன் துணைக்கு எந்நாளும், எந்தக் காரியத்திலும் கைவிடாமல் துணையாக நின்று பெருமை சேர்ப்பதே காதல் என்றும் புரிய வைக்கின்றார்கள். ஆனால் ராவணனோ எனில் பிறன் மனைவியை விரும்புவதால் அவன் அடைவது தோல்வியே.


“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.”

என்னும் குறளுக்கு ஏற்ப ராமன் ஏக பத்தினி விரதனாகக் கடைசிவரை இருந்ததே, பெரும்பாலான இளைஞர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் கருத்து. இந்தப் பிறன்மனை நோக்காத பேராண்மை எக்காலத்துக்கும் பொருந்தும். ராவணன் மனைவியான மண்டோதரி, சீதைக்கு நிகரான பெருமை வாய்ந்தவளாகவும், நிரம்ப சிவபக்தி கொண்டவளாயும் இருக்கின்றாள். எனினும் அவன் அவளோடு திருப்தி அடையவில்லை. மற்றவர் மனைவியை அடைவதில் தான் இன்பம் என்றும் பெருமை என்றும் எண்ணுகின்றான்.

அஹல்யா, த்ரெளபதி, சீதா, தாரா, மண்டோதரீ ததா
பஞ்ச கன்யா ஸ்மரேந்நித்த்யம் மஹா பாதக நாஸநம்"

என்று தினமும் காலையில் வணங்கிப் போற்றும் ஐந்து கன்னிகைகளில் ஒருத்தியாக மண்டோதரி இருந்தும் ராவணன், பிறன் மனை விழைதல் என்னும் மாபெரும் தவற்றைச் செய்துவிட்டு அதன் காரணமாகவே அனைத்தையும் இழக்கின்றான். (இதில் வரும் "தாரா" தேவகுருவின் மனைவி தாரா ஆவாள். பலரும் நினைக்கும்படியாக வாலியின் மனைவி "தாரை" இல்லை. வாலியின் மனைவி தாரை ஒரு வானரப் பெண்மணி, இவள் தாரா!)

5 comments:

 1. //வெறும் உடல் கவர்ச்சி மட்டும் காதல் இல்லை என்பதும், காதல் என்பது எத்தகைய தியாகத்துக்கும், பரஸ்பரம் புரிதலுக்கும், விட்டுக் கொடுத்தலுக்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் சுட்டுகின்றது. //

  நன்கு சொன்னீர்கள் கீதாம்மா. அன்பு ஒன்றே எவ்வளவு கொடுத்தாலும் எடுத்தாலும் பெருகக் கூடியது. சீதாவின் மனநிலையை நன்கு விளக்கியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 2. இந்த 5 பேர் பற்றி பதிவு எழுதும் எண்ணம் இருக்கா?

  ReplyDelete
 3. @கவிநயா, மிக்க நன்றி, புரிதலுக்கு.

  @மதுரை, ஏற்கெனவே அஹல்யை, சீதை, திரெளபதி பற்றி எழுதி இருக்கேனே, தெரியாது?? :P:P:P:P

  தாரா பற்றியும் நேயர் விருப்பம் வந்திருக்கு. மண்டோதரி பற்றியும் தகவல்கள் சேகரிக்கிறேன். முடிந்தால் ஒரு வரிசையாக எல்லாரையும் திரும்ப எழுத முயற்சிக்கிறேன். ரொம்ப நன்றி.

  ReplyDelete
 4. இலக்குவன் சூர்ப்பனகையின் மகனைத் தற்செயலாகக் கொல்கிறான் என்பது எனக்கு புதிய செய்தி அம்மா. மேல் விவரங்களை எங்கே படிக்கலாம்? உங்கள் இராமாயணத் தொடரிலா?

  ReplyDelete
 5. வணக்கம் மேடம் எப்படி இருக்கீங்க?

  ராமாயணம் வலியுறுத்தூம் கருத்துக்களில் ஒன்றாக எனக்குத் தோன்றுவது, 'பிறன்மனை நோக்காத பேராண்மை மட்டும் போதாது; பிறன்மனை சீண்டாத (eve teasing) ஒழுக்கமும் வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ ராமன் இரண்டு பெண்களைச் சீண்டினான். கூனி - அவன் ராஜ்ஜியத்தைப் பறிக்க வைத்தாள்; சூர்ப்பனகை - அவன் மனையைப் பறி கொடுக்கச் செய்தாள்.

  ReplyDelete