எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 01, 2008

கதை, கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி 81

காடே மெளனத்திலும், சோகத்திலும் ஆழ்ந்தது. ஆழ்ந்த அந்த மெளனத்தில், "ராமா, என்னை ஏன் பிரிந்தீர்?" என்ற சீதையின் கூவலும், ஓலமும் மட்டுமே கேட்டன. அருகாமையில் இருந்த வால்மீகியின் ஆசிரமத்தின் உள்ளே போய்த் தவத்திலும், வேள்வியிலும், தியானத்திலும் ஆழ்ந்து போயிருந்த ரிஷி, முனிவர்களின் நெஞ்சாழத்தைக் கசக்கிப் பிழிந்தது அந்த ஓலக் குரல். ரிஷிகளின் மகன்கள், நெஞ்சு பிளக்கும்படியான இந்தக் கதறலைக் கதறி அழும் பெண் யாரோ எனப் பார்க்க வேண்டி விரைந்து வந்தனர். அங்கே தேவேந்திரனின் இந்திராணியையும், அந்த ஈசனின் உமையவளையும் தோற்கடிக்கக் கூடிய அழகுடன் கூடிய ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கண்டனர். அழுதது அவள் தான் எனவும் தெரிந்து கொண்டனர். அவள் நிலையைக் கண்டு பரிதாபம் அடைந்து உடனேயே ஆசிரமத்தின் தலைவர் ஆன வால்மீகி ரிஷியை அடைந்து அவரிடம், "மிக மிக உயர்ந்த ஒரு பெண்மணி, ஒரு பேரரசனுக்குப் பட்ட மகிஷியோ என எண்ணும்படியான தோற்றம் உடையவள், சாட்சாத் அந்த மகாலட்சுமியே பூமிக்கு வந்துவிட்டாளோ என்று எண்ணும்படியாக இருப்பவள், அத்தகைய ஒரு மங்கையர்க்கரசி, நம் ஆசிரமத்தின் வாசலிலே நதிக்கரையிலே அழுது கொண்டு இருக்கின்றார். விண்ணிலிருந்து, மண்ணுக்கு வந்துவிட்ட தெய்வீகப் பெண்மணியோ என எண்ணுகின்றோம். அவர் சாதாரணப் பெண்ணாய்த் தோன்றவில்லை. என்றாலும் அவர் நிலைமை பரிதாபமாகவே உள்ளது." என்று சொல்கின்றனர்.

தன் தவவலிமையாலும், தியானங்கள் பல செய்தமையாலும், நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தையும் அறிந்து கொள்ளும் திறன் படைத்த வால்மீகி ரிஷியானவர், ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்திருப்பது சாட்சாத் அந்த ஸ்ரீராமனின் மனைவியான சீதைதான் என அறிந்து கொள்கின்றார். சீதை இருக்குமிடம் நோக்கி வேகமாய்ச் செல்கின்றார். சீதையைப் பார்த்து ஆறுதல் மொழிகள் கூறுகின்றார்:"ஜனகரின் மகளும், தசரதரின் மருமகளும், ஸ்ரீராமனின் மனைவியுமான சீதையே, உனக்கு நல்வரவு! உன் துயரங்களைத் துடைத்துக் கொள்வாயாக! உன் கணவனிடம் நீ மாறாத விச்வாசமும், பேரன்பும் பூண்டவள் என்பதை நான் நன்கறிவேன். மாதரசியே! கலங்காதே! நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நான் செய்த புண்ணியத்தின் காரணமாய் அறியப் பெற்றேன். உன் தூய்மையை நான் நன்கு அறிவேன், மாசற்றவளே! திருமகளுக்கு நிகரானவளே! நீ எந்தப் பாவமும் செய்யாதவள் என்பதையும் நான் நன்கறிவேன். இந்த ஆசிரமத்தில் ரிஷிகளின் பத்தினிமார்கள் வாழ்கின்றனர். அவர்கள் தவவழிகளை மேற்கொண்டவர்கள். உன்னைத் தங்கள் மகள் போல் கண்ணும், கருத்துமாய்ப் பாதுகாப்பார்கள். உனக்குத் தேவையான அனைத்தும் செய்து கொடுப்பார்கள். பெண்ணிற் சிறந்தவளே! உன்னுடைய பாதுகாவலனாக நான் பொறுப்பேற்கின்றேன். நீ என்னுடைய இந்த வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு இந்த ஆசிரமத்தை உன்னுடைய வீடாக நினைத்துக் கொண்டு, வேறொருவர் பாதுகாவலில் இருக்கின்றோம் என எண்ணாமல், இங்கேயே தங்கி, உன் மனம் அமைதி பெறவும், உன்னை மன அமைதி பெறச் செய்வதின் மூலம் நாங்கள் மனமகிழ்வு எய்தவும் கருணை புரிவாய்!" என்று வேண்டுகின்றார்.

சீதையும் சம்மதிக்கவே, வால்மீகி அவளை அழைத்துச் சென்று, ஆசிரமத்தின் உள்ளே சென்று, மற்ற ரிஷிகளின் பத்தினிமார்களுக்கு சீதையை அறிமுகம் செய்து வைக்கின்றார். சீதையின் மனத் துன்பத்தையும், கணவனை விட்டு அவள் இங்கே வந்திருக்கும் காரணத்தையும் எடுத்துச் சொல்லி சீதை எந்தவிதத்திலும் துயர் அடையாமல் அவளைப் பாதுகாக்கவேண்டும் என்றும் தனக்குக் காட்டும் மரியாதைகள் போல் அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சீதையை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும் சொல்லிவிட்டு, அவள் தன் பாதுகாவலில் இருப்பதாயும் தெரிவித்துவிட்டுத் தன் தவத்திற்குத் திரும்பச் சென்றார் வால்மீகி.

இங்கே, லட்சுமணன் சுமந்திரர் தேரை ஓட்டத் தேரில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அப்போது சுமந்திரரிடம் லட்சுமணன் பின்வருமாறு கேட்கின்றான்:"சீதையை ராமர் பிரிய நேர்ந்தது ஒரு கொடூரமான நிகழ்ச்சி, இதை விதி என்று சொல்லுவதா??? இந்த விதியில் இருந்து யாரும் தப்ப முடியாதா?? விதியின் செயலை யாராலும் மாற்ற முடியாதா? ராமரின் பலம் நாம் அறியாதது அல்ல. தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் தம் பலத்தால் அடக்கி, ஒடுக்கும் வல்லமை பெற்றவர். அப்படிப் பட்டவர் இப்போது குடிமக்களின் அவதூறுப் பேச்சால் தன் மனைவியை விலக்கவேண்டுமென்றால்??? சீதை காட்டில் வாசம் செய்தபோதையும் விட, ராவணன் வசம் சிறைப்பட்டிருந்ததையும் விட மிக, மிகக் கொடூரம் ஆன கடுமையான பிரிவு இது. இதைத் தாங்க இருவர் மனதும் எவ்வளவு கஷ்டம் அடைந்திருக்கும்??? நாட்டு மக்களின் அவதூறுக்காக சீதையைத் துறந்தது ராமருக்குப் பெரும் கஷ்டத்தையே தரக் கூடியது அல்லவா?? இதனால் அவருக்கு என்ன லாபம்??? நாட்டுமக்களுக்காக இத்தகையதொரு பெரும் தியாகத்தையும் அவர் செய்திருக்கவேண்டுமோ?" என்று சொல்கின்றான்.

சுமந்திரர் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. பின்னர் சற்று யோசித்துவிட்டுச் சொல்கின்றார். "இளவரசே! இப்போது இப்படி நடப்பதற்காக வருந்திப்பயன் ஏதும் இல்லை. இது இப்படித் தான், இவ்வாறுதான் நடக்கும் என்பதாக ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது. ஜோதிடர்கள் கூறி இருக்கின்றனர். தன் மனைவியை மட்டுமில்லாமல், பிரியத்துக்கு உகந்த சகோதரர்கள் ஆன உங்களைக் கூட ராமர் பிரிய நேரிடும் என்றும் சொல்லி இருக்கின்றனர். ராமர் பிறந்தபோது ஜோதிடம் பார்த்த ஜோதிடர்கள், ராமர் தனக்கென எந்தவிதமான சுகம் நாடாமல், மகிழ்ச்சியை நாடாமல் மற்றவர்களுக்கெனவே வாழ்வார் எனச் சொல்லி இருக்கின்றனர். இது மட்டுமில்லை, இளவலே! ஒருமுறை துர்வாசர் வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்தபோது, அவரைக் காண உங்கள் தகப்பனும், அயோத்தியின் அரசனும் ஆன தசரதச் சக்கரவர்த்தி வந்தார். அப்போது அவருடன் நானும் சென்றிருந்தேன். துர்வாசர் அப்போது உன் தகப்பனிடம் கூறிய செய்தி மிக மிக ரகசியம் ஆன செய்தி! மற்றவர்களுக்கு இதைத் தெரிவிக்கக் கூடாது என்று ஆணை இடப்பட்டது எனக்கு. எனினும் இப்போது நீ படும் துயரைக் காண முடியாமல் அந்த ஆணையை மீறி உனக்கு நான் இந்தச் செய்தியைச் சொல்கின்றேன் லட்சுமணா! இதைக் கேள்!" என்று சொல்ல ஆரம்பித்தார் சுமந்திரர்.


ஏற்கெனவேயே சொல்லிவிட்டோம், என்றாலும் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நினைவு படுத்த நாளைக்கு அந்த நிகழ்வு!

No comments:

Post a Comment