எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, December 08, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் பகுதி 3

உக்ரசேனனின் தம்பியான தேவகனுக்கு தேவகி என்றொரு மகள் இருந்தாள். ஷூரனின் மகன் ஆன வசுதேவனுக்கு தேவகன் மகள் ஆன தேவகியைத் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. வசுதேவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி ரோகிணி என்றொரு மனைவி இருந்தாள். என்றாலும் அரசியல் காரணங்களுக்காகவும், அரசர்களும், தலைவர்களும் எப்போதும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாலும், வாரிசுகள் விருத்திக்காகவும் இவ்வாறு இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்ளுவது அந்தக் காலத்தில் சகஜமாய் இருந்து வந்திருக்கின்றது. வசுதேவரின் ஐந்து சகோதரிகளில் மூத்தவள் ஆன குந்தியைக் குந்தி போஜனுக்குத் தத்துக் கொடுத்திருந்தார்கள் அல்லவா? அந்தப் பெண்ணை ஹஸ்தினாபுரத்தின் மன்னன் ஆன பாண்டுவுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் பட்டிருந்தது. அந்தப் பெண்ணிற்கு மூன்று குழந்தைகளும், அவளின் இளையாள் ஆன மாத்ரிக்கு இரு பையன்களும் இருந்தனர். பாண்டு இறந்ததும், குந்தி தன் குழந்தைகள் மூன்று பேரோடும், தன் இளையாள் ஆன மாத்ரியின் குழந்தைகள் இருவரையும் சேர்த்தே வளர்த்து வந்தாள்.சிந்து நதிக்கரையில் இருந்த சேதி நாட்டு மன்னன் ஆன தாமகோஷனுக்கு வசுதேவரின் மற்றொரு இளைய சகோதரி ஆன ஷ்ரூதஷ்ரவா வைத் திருமணம் செய்து கொடுத்திருந்தது. அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான் . அவன் பெயர் சிசுபாலன் என்பதாகும். இந்தச் சிசுபாலனுக்குத் தன் தாயின் சொந்த சகோதரன் ஆன வசுதேவரை விடவும் கம்சன் மேலும், ஜராசந்தன் மேலும் அதீதமான பக்தியும், மரியாதையும் உண்டு. அவர்களாலேயே தானும் ஒரு சக்கரவர்த்தி ஆகலாம் என்றும் நினைத்து வந்தான்.

வட மதுரையில் யாதவர்களின் அப்போதைய தலைவன் ஆன உக்ரசேனன் அரசனாய் இருந்து வந்தான். உண்மையில் குடிமக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப் படும் இந்த ஜனநாயக முறை அரசியலில் கம்சனுக்கு நம்பிக்கை இல்லை. தன் மாமனாரும் மகத நாட்டின் சக்கரவர்த்தியும் ஆன ஜராசந்தனைப் போல் தானும் சக்கரவர்த்தி ஆகவேண்டும் என்பதே கம்சனின் கனவு. அதற்காகவே அவன் பெரு முயற்சிகள் எடுத்து வந்தான். மகனின் அரசியல் பிடிக்காமல் உக்ரசேனன் ஒதுங்க, கம்சனின் இஷ்டப் படியே அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். கிருஷ்ணர் பிறந்த சூழ்நிலையைப் பார்ப்போமா இப்போது?? வசுதேவரின் குலம் ஆன ஷூரர்களுக்கும், கம்சனின் குலம் ஆன அந்தகர்களுக்கும் அடிக்கடி ஏதாவது சிறு சிறு மோதல்கள் தொடர்ந்தன. அடிப்படையில் இருவரும் யாதவர்களே என்றாலும், குடும்பச் சண்டைகள் தொடர்ந்தன.ஆகவே இரு குடும்பத் தலைவர்களும் இணைந்து உக்ரசேனனின் தம்பியான தேவகனின் மகள் தேவகியை, ஷூரர்களின் தலைவனாக விளங்கி வந்த வசுதேவருக்குத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயித்து, வேத கோஷங்கள் முழங்க திருமணமும் நடந்து முடிந்தது. திருமணத் தம்பதிகள் இருவரையும் அவர்களின் ஜோடிப் பொருத்தத்தையும் பார்த்துப் பார்த்து மொத்த யாதவ குலமே மகிழ்ச்சியில் ஆழ்ந்து போய் இருந்தார்கள். தம்பதியரை ஊர்வலமாக அழைத்துச் செல்ல மிக அழகாக அலங்கரிக்கப் பட்டு ரதம் தயார் ஆகிக் கொண்டிருந்தது அப்போது திருமணத்துக்கு வந்த பல ரிஷி, முனிவர்களிலும் தேவலோகத்து ரிஷியான நாரதர் வந்திருந்தது மிகச் சிறப்பாய்க் கருதப் பட்டது. திருமணம் முடிந்ததும், முறைப்படி அப்போது அரசனாய் இருந்த கம்சனைச் சென்று பார்த்தார் நாரதர். கம்சனும் அரசகுலத்தார் கடைப்பிடித்து வந்த முறைகளை ஒட்டி வந்தவரை வரவேற்று உபசரித்தான். அவருடைய ஆசிகளைக் கோரினான்.

2 comments:

  1. //அரசர்களும், தலைவர்களும் எப்போதும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாலும், வாரிசுகள் விருத்திக்காகவும் இவ்வாறு இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்ளுவது அந்தக் காலத்தில் சகஜமாய் இருந்து வந்திருக்கின்றது.//

    அரசியல் காரணங்களுக்காகவும் திருமணங்கள் நடைபெறும். சில பலம் வாய்ந்தவர்கள் அரசுக்கு பிரச்சினை ஆகக்கூடாது என்று அந்த குலத்தில் பெண் எடுத்து விடுவார்கள். அப்புறம் மாப்பிள்ளை மீது போர் தொடுக்க பிரச்சினை கொடுக்க முடியாதல்லவா?

    ReplyDelete
  2. @திவா, நீங்க சொல்லும் காரணமும் தான்.

    ReplyDelete