எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 21, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

ஆபத்து நெருங்கிவிட்டது!

கண்ணா, இந்த நாக கன்னிகைகளைப் பற்றி நீ பூரணமாய் அறிந்திருக்கவில்லை. இவர்கள் உன்னைச் சுற்றிக்கொள்ளுவார்கள் ஒரு ஒட்டுண்ணியைப் போல. உன்னை இவர்கள் சுற்றச் சுற்ற இவர்கள் தரும் இன்பத்திலும், சந்தோஷத்திலும் நீ உன்னை மறந்துவிடுவாய். உன்னால் இவர்களைப் பிரியவே முடியாது. இவர்களை விட்டுச் செல்லவும் நினைக்கமாட்டாய்!”

“எனில் ஐயா, நீங்கள் அந்த தேவி மாதாவாக இருக்கும் அன்னை ராணியை உங்களை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருப்பதற்கு வெறுக்கவே இல்லையா?” கண்ணன் குரலில் ஆச்சரியம் கலந்திருந்தது. அன்று காலையில் தான் புநர்தத்தன் மூலம் இந்த நாககன்னிகைகள் அளிக்கும் இன்பம் பற்றி அறிந்திருந்தான். இப்போது இரண்டாம் முறையாக இந்த மன்னனிடமிருந்து! அதிலும் அனைத்திலும் நேர்மையுடனும், ஒரு புனிதத் தன்மையைக் காப்பாற்றிக்கொள்வதிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதனை அப்படியே தலைகீழாய் மாற்றி அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்கும் வண்ணம் மாற்றும் மாயவலை!

“என்ன??” இப்போது தெய்வீகத் தந்தையின் குரலில் ஆச்சரியம்! “அன்னை ராணியின் கொடுமைகளால் அவளை வெறுப்பதா? என்னால் அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை, வாசுதேவ கிருஷ்ணா! அவள் உடலில் தேவி மாதா புகும் வரையிலும் அவள் எனக்கு ஒரு இன்பத்தை அள்ளிக்கொடுக்கும் மனைவியாகவே செயல்படுகிறாள். எந்த விதத்திலும் எனக்குக் குறை வைப்பதில்லை. அந்த நேரங்களில் அவளுக்காக நான் என் உயிரைக் கூட அர்ப்பணிக்கத் தயாராய் இருக்கிறேன். இல்லை, கிருஷ்ண வாசுதேவா, அவளை என்னால் பிரிய முடியாது. நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். என் உயிரினும் மேலாக என்று வைத்துக்கொள்ளலாம். அவள் இறந்தாளானால் அவளோடு நானும் இறந்துவிடுவேன். அவள் இல்லாத உலகை என்னால் நினைத்துக் கூடப்பார்க்கமுடியவில்லை. தேவிமாதாவின் கட்டளையும் அதுவே. இவற்றிற்கு மேல் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?”

“அரசே, நீங்கள் மிகுந்த அநுபவமும், புத்திசாலியும், திறமைசாலியும் ஆவீர்கள். மேலும் நீங்கள் பரசுராமரின் சீடர் எனவும் சொல்கிறீர்கள். நான் ஒரு சின்னஞ்சிறு சிறுவன். நான் என்ன கூறமுடியும் உங்களுக்கு? போகட்டும், ஒரு நாககன்னிகையை உங்கள் மனைவியாக அடைந்ததின் மூலம், உங்கள் குலத்துக்கும், குலத்து முன்னோர்களுக்கும் செய்யவேண்டிய கடமைகளை உங்களால் நிறைவேற்ற முடியுமா? நிறைவேற்றிவிட்டீர்களா?”

“அவர்களைப் பற்றிய எண்ணங்களையே ஒடுக்கவேண்டியதே. இந்த நாககன்னிகைகள் கொடுக்கும் இன்பத்துக்கு முன்னால் அவை எல்லாம் தூசு மாத்திரம்!”

“ஐயா, நம்முடைய சநாதன தர்மத்தில் நம் சந்ததியில் வசிஷ்டர், அருந்ததி, போன்ற ரிஷி, ரிஷி பத்தினிகளும், அகஸ்தியர், லோபாமுத்திரை போன்ற ரிஷி, ரிஷி பத்தினிகளும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மனைவியோடு வாழ்க்கையை மட்டும் அநுபவிக்கவில்லை. தபஸ் செய்வதிலும், மனைவிக்குப்பங்கு கொடுத்தனர். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களிலும் மனைவியோடே பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் செய்த தீரச் செயல்களிலும் மனைவியின் பங்கு உண்டு. எல்லாவற்றிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே அநுபவித்தனர்! அவர்களைப் பற்றி நீங்கள் நினைக்கவில்லையா?”

“ம்ம்ம் ஒரு நாககன்னிகை இவை அனைத்தையும் அவளுக்குச் சொந்தமாக்கிக்கொண்டு விடுவாள். அவள் உனக்கு அளிக்கும் சுகங்களின் மூலம் உன்னையே விலைக்கு வாங்கிவிடுகிறாள். உன்னையும், உன் உடலையும் மட்டுமல்லா, கிருஷ்ணா, உன் எதிர்காலம், நம்பிக்கைகள், உன் பெற்றோர், உன் குலத்து முன்னோர்கள், உன் குலத்துப் பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் மறக்கடிக்கச் செய்து தன் பக்கம் மாற்றிவிடுகிறாள்.”

“மாட்சிமை பொருந்திய மன்னரே! தங்கள் அன்பான புத்திமதிகளுக்கு நான் மிகக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் நான் இங்கே ஒரு முக்கியமான காரியத்தை ஒப்புக்கொண்டு அதற்காகவே வந்துள்ளேன். என் குருவான சாந்தீபனிக்கு நான் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். புநர்தத்தன் என்னும் சாந்தீபனியின் குமாரன், தற்சமயம் உங்கள் இளவரசனாய் இருப்பவன். அவனை அவன் தந்தையிடம் திரும்பச் சேர்ப்பதாய்ச் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு அதற்கெனவே வந்துள்ளேன். அவன் இல்லாமல் நான் திரும்புவது என்பது ஒருநாளும் நடவாத காரியம்.”

“என்றால் விதி உன்னையும் விடப் போவதில்லை.”

“ஐயா, உங்கள் பெருந்தன்மைக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் இளகிய மனம் என்னைப் பரவசம் அடையச் செய்கிறது. நீங்கள் ஏன் எனக்கு உதவி செய்யக் கூடாது?”

“என்னால் முடியாது அப்பனே!”

“நான் ஒப்புக்கொண்டு வந்தபடி புநர்தத்தனை அழைத்துப் போகமுடியவில்லை எனில் நான் இறப்பதையே விரும்புகிறேன். என் கடமையைச் செய்யாமல் இருப்பதை விட இறப்பதே மேல். ஆனால் தந்தையே, நீங்கள் கட்டாயம் எனக்கு உதவப் போகிறீர்கள்.” என்றான் கண்ணன்.

ஒரு நிமிடம் தெய்வீகத் தந்தையான மன்னனுக்குத் தன் குருவான பரசுராமர் கட்டளை இடுவது போல் தோன்றியது. அவரும் மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்பார்களே! தீர்மானமாகவும், முடிவாகவும் இவ்வாறே அவர் பேசுவார். அவரால் இவ்விதமே பேசமுடியும். அப்படித் தான் இந்த இளைஞனும், தன் தெய்வீகத் தன்மையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறான். ஆம், இவனிடம் ஏதோ தெய்வீகம் உண்மையாகவே உள்ளது. சநாதன தர்மம்! நம் நாடு! ஆஹா, பூர்வ ஜன்மம் என்று சொல்லக் கூடிய அந்த நாட்கள்! நம் நாட்டிலே தான் இம்மாதிரியான வாக்குறுதிகளையும் கொடுத்து தர்மத்தை நிலைநாட்டும் மக்கள் பிறந்திருக்கின்றனர். இவனும் அதற்கெனவே பிறந்திருக்கிறானோ? எவ்வளவோ வருஷங்களாக மறந்திருந்த பிறந்த தாயகம் அந்த மன்னன் கண்களுக்கெதிரே தோன்றியது. நீண்ட பெருமூச்சு விட்டான்.

கண்ணன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பி விட்டான். மறுநாள் காலையில் வைவஸ்வதபுரியைச் சுற்றிப் பார்ப்பதில் கண்ணனும், உத்தவனும் பொழுதைக் கழித்தனர். கப்பலுக்குப் பரிசுப் பொருட்களை எடுக்கச் சென்றிருந்த ராதுவும் திரும்பிவிட, கண்ணன் அவன் கொண்டு வந்த பரிசுப்பொருட்களை பட்டத்து இளவரசி, இளவரசன் புநர்தத்தன், தெய்வீகத் தந்தையான அரசன் ஆகியோருக்கும், இளைய இளவரசியான ஆஷிகாவுக்கும் பிரித்துக் கொடுத்தான். ஆஷிகா ஏற்கெனவே அன்னை ராணியின் கட்டளையின் பேரில் கண்ணனைச் சுற்றிக்கொண்டிருந்தாள். கண்ணன் தனக்கே என நம்பிக்கொண்டிருந்தாள். பரிசுப் பொருட்களைக் கண்டதும் உவகையில் கூச்சலிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டாள்.

அன்று மதியம் உணவிற்குப் பின்னர் கிருஷ்ணனும், உத்தவனும் தப்புவதற்கான வழிமுறைகளைப் பற்றி மெல்லிய குரலில் விவாதித்துக்கொண்டிருந்தனர். "க்ரீஈஈஈஈஈச்" என்றொரு கூச்சல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினர் இளைஞர்கள் இருவரும். அங்கே இளைய இளவரசியான ஆஷிகா ஓடி வந்து கொண்டிருந்தாள். அவள் நீண்ட கூந்தல் சிறு சிறு பாம்புகளைப் போல் பின்னப் பட்டிருந்தது. அவை காற்றில் பறக்க அவள் ஓடி வந்தது அவள் தலையைச் சுற்றிலும் பாம்புகள் சூழ வந்தாற்போன்ற தோற்றத்தில் காட்சி அளித்தது. ஓடி வந்து கொண்டே என்னவோ சொல்லிப் புலம்பவும் செய்தாள் அவள். கண்ணனின் இருப்பிடம் வந்ததும் ஒரே பாய்ச்சலில் கண்ணனிடம் சென்று அவனைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள். புலம்பினாள். என்ன காரணம்?? கண்ணன் திகைத்தான். அவள் என்ன சொல்லி அழுகிறாள்? புரியவில்லை. புண்யாஜனா கப்பலின் ஊழியர்கள் கப்பலில் இருந்து தன்னுடன் அரண்மனைக்கு வந்தவர்களில் நாக தேசத்து மொழி தெரிந்தவர்களைக் கண்ணன் வரவழைத்தான். அவர்கள் கூறியது, கண்ணனைத் திகைப்பில் ஆழ்த்தவில்லை.

8 comments:

 1. என்னது இது நம்ம தமிழ் பட கதாநாயகி பண்ற ஐடியா மாதிரி இருக்கே

  ReplyDelete
 2. கண்ணனைக் கொல்ல சொல்லி கட்டளை போட்டு விட்டார்களா? இல்லை அதுக்குள்ளே இன்னேரு கப்பல் வந்து விட்டதா? கண்ணனைக் கைது செய்வது அவ்வளவு சுலபமா? என்ன. நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா வழக்கம் போல சஸ்பென்ஸ் வைச்சுட்டிங்க.

  ReplyDelete
 3. ஆகா...வந்துட்டாங்களா இளவரசி..அப்போ இனி வேகம் தான் ;)

  ReplyDelete
 4. ஹிஹி, நிறையத் தமிழ்ப்படம் பார்க்கிறீங்களோ?? தங்கமணி இல்லைனா?? :P:P:P

  ReplyDelete
 5. வாங்க பித்தனின் வாக்கு, நாளைக்குப் போட்டுடுவேன் அடுத்த பகுதியை!

  ReplyDelete
 6. வாங்க அம்மு மது, இந்தப் பதிவுகளுக்கு முதல் பின்னூட்டம்??? நன்றி

  ReplyDelete
 7. வாங்க கோபி, ரசிப்புக்கு நன்றி.

  ReplyDelete