எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 01, 2011

கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி

பிள்ளை வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கும் விஷயம் தெரிந்து என் மாமாக்கள், பெரியப்பா, அண்ணாக்கள் எல்லாரும் வந்துவிட்டனர். வீடே ஒரே பரபரப்பு. ஒருபக்கம் வேண்டாம், விட்டுடலாம் என்ற கட்சி, இன்னொரு பக்கம் அதெல்லாம் வேண்டாம், நேரிலே போய்ப் பார்த்தால் சரியாகும் என்ற கட்சி. என்ன செய்யறதுனு அப்பாவுக்குப் புரியலை. ஏற்கெனவே என் கணவரோட பெரியப்பா பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி அந்தக் கல்யாணத்திற்குத் தான் அவர் புனாவிலிருந்தே வந்திருந்தார். அந்தக் கல்யாணத்திற்கு வரச் சொல்லி அந்தப் பெரியப்பாவும் பத்திரிகை அனுப்பி இருந்தார். ஆனால் போவதா, வேண்டாமானு அப்பாவுக்குப் புரியலை. அந்தக் கல்யாணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கையில் மீண்டும் ஒரு பத்திரிகை வந்தது. தப்பாய் அனுப்பிட்டாங்களோனு பார்த்தால் விலாசம் எல்லாம் சரியா இருந்தது. ஆனால் முன்னால் விலாசம் எழுதின கையெழுத்து இல்லை. அதோட இந்தக் கவர் நன்கு ஒட்டி இருந்தது. கல்யாணப்பத்திரிகைக் கவரை ஒட்ட மாட்டாங்களே! அதை நான் தான் வாங்கினேன். ஏதோ விஷயம் இருக்குனு உள் மனதுக்குப் புரிய அப்பா ஸ்கூலில் இருந்து வரும் வரைக்கும் காத்திருந்தோம். எங்க வீட்டில் ஒரு பழக்கம். கடிதம் யாருக்கு வந்ததோ அவங்க தான் பிரிச்சுப் படிச்சுட்டு அப்புறமா மத்தவங்களோட பகிர்ந்துக்கறது எல்லாம். என் சிநேகிதிகளின் கடிதம் என்றாலும் கூட அப்பாவோ, அம்மாவோ பிரிக்க மாட்டாங்க. நான் வர வரைக்கும் காத்திருக்கும்.

அப்பா ஸ்கூலில் இருந்து வந்ததும், கடிதம் வந்திருப்பது அறிந்து பிரித்துப் பார்த்தார். அதிலே ஒரு இணைப்புக் கடிதத்தில் கல்யாணத்துக்குக் கட்டாயமாய் வருமாறும், வந்து பேசிக்கொண்டு நிச்சயத்தையும் செய்து கொண்டு போகலாம் என்றும் எழுதி இருந்தது. அதுவரையிலும் என் மாமனார் பேரில் வந்த கடிதங்களில் எல்லாம் எழுதப் பட்ட எழுத்து இல்லை என்பது அப்பாவுக்கும் புரிந்தது. ஒருவேளை மாப்பிள்ளையே எழுதி இருப்பாரோ? என்றால் அவங்க அப்பா, அம்மா சொல்லாமல் நாம் எப்படிப் போறது? மறுபடி குழப்பம். உள்ளூரிலேயே இருந்த பாட்டி, மாமாக்கள், பெரியப்பா, பெரியம்மா போன்றோருடன் மீண்டும் வட்டமேஜை மாநாடு நடந்தது. பெருவாரியான விருப்பம் போகும்படியே சொல்ல அப்பாவும் சரினு சம்மதிச்சுப் போகறதுக்கு ஆயத்தம் செய்தார்.

கல்யாணத்துக்கு முதல்நாளே போய்விடுவதாயும், அன்றே பேச்சு வார்த்தைகளை முடித்துக்கொண்டு, எல்லாமும் கூடி வந்தால் கல்யாணத்தன்று சம்பிரதாயத்துக்குப் பாக்கு,வெற்றிலை மாற்றிக்கொண்டு பின்னர் ஒரு நல்லநாள் பார்த்து லக்னப்பத்திரிகை வாசிக்க ஏற்பாடு செய்யலாம் என்று பெரியப்பா கூற அப்பாவும் அரை மனசாக் கிளம்பினார். ஏனெனில் லக்னப்பத்திரிகை வாசிக்கும் விழா நிகழ்வைப்பெரிய அளவில் செய்ய அப்பா திட்டம் போட்டுக்கொண்டிருந்தார். இப்போ இந்தப் பேச்சு வார்த்தை எப்படி முடியும் என்று கூற முடியாத நிலையில் எல்லாருமே போகவும் முடியாது. எல்லாரும் போயிட்டு அங்கே ஒண்ணும் சரிப்பட்டு வரலைனா அவமானமும், வருத்தமும் மிஞ்சும். அப்பா மட்டும் போயிட்டுப் பாக்கு, வெத்திலை மாத்திண்டு வந்ததும், திரும்ப லக்னப்பத்திரிகை விழாவுக்குப் பிள்ளை வீட்டில் சம்மதிக்கணும். அது அவங்க வீட்டில் அவங்க பொறுப்பில் செய்யவேண்டியது. இதான் அப்பாவுக்கு யோசனை. மேலும் தஞ்சைப் பக்கம் பாக்கு,வெற்றிலை மாற்றுவதோடு சரினும், ரொம்பப் பெரிசா எல்லாம் பண்ணறது இல்லை என்றும் என்னோட மாமனார், மாமியார் சொல்லி இருந்தாங்க. ஆண்கள் மட்டுமே கூடிப் பேசிப் பாக்கு,வெற்றிலை மாத்திப்பாங்க என்றும், பெண்கள் அந்த விசேஷத்துக்கு அதிகமாய்க் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் சொல்லி இருந்தாங்க.

அப்பா கல்யாணத்துக்கு முதல் நாளே காலையிலே கிளம்பிட்டார். சாயந்திரம் மாப்பிள்ளை அழைப்பின் போது சத்திரத்துக்குப் போயிடுவேன்னு சொல்லி இருந்தார். ஆகவே அன்னிக்குப் பேசி முடிச்சுண்டு, பாக்கு,வெற்றிலை மாற்றவும், கல்யாண முஹூத்தத்துக்கும் நாள் குறித்துக்கொண்டு வருவதாயும் மாப்பிள்ளையின் பெரியப்பா பெண்ணின் கல்யாணம் முடியும் வரை தங்கப் போறதில்லை என்றும் சொல்லி இருந்தார். ஆகவே நாங்க அப்பாவை மறுநாளே மதியம் சாப்பாட்டுக்கே எதிர்பார்த்தோம். ஆனால் அப்பா அன்று வரவில்லை. என்னனு புரியலையே என்று யோசித்தோம். வந்தால் தான் தெரியும் விஷயம்,. இப்போ மாதிரி தொலைபேசியா? செல்பேசியா? ஆகவே கட்டாயமாய்க் காத்திருக்கணும். மறுநாள் காலையில் தான் வந்தார். வந்தவர் உடனே எதுவும் பேசவில்லை. வந்து, எப்போதும் போல் கொண்டு போன பையை ஸ்வாமி அலமாரிக்குக் கீழே வைத்துவிட்டுக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மெதுவாய்ச் சொன்னார். இன்னியிலே இருந்து பதினைந்தாம் நாள் கல்யாணம். நிச்சயம் பண்ணியாச்சு என்று.

அம்மாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஒரே பெண்ணின் நிச்சயத்தின் போது தான் உடனிருக்கவில்லை என்ற வருத்தமும். என்றாலும் கேட்டாள்: என்னிக்கு லக்னப் பத்திரிகை வாசிக்கிறாங்களாம்?

அதெல்லாம் நேத்தே வாசிச்சாச்சு. நேத்துச் சாயங்காலம் முடிச்சுட்டாங்க. மாப்பிள்ளைக்கு லீவு கிடையாதாம். கல்யாணம் முடிஞ்சதுமே ஒரு வாரத்திலே திரும்பப் புனா போகணுமாம், அவங்க பெரிய பொண்ணு கூட பிலாயிலே இருந்து வந்திருக்காங்க. அவங்களும் சீக்கிரம் திரும்பிடுவாங்களாம். எங்க பெரிய பொண்ணு இருக்கிறச்சேயே கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்லிட்டாங்க.

ஏன் இப்படிப் பண்ணிட்டீங்க?" அம்மா.

பின்னே? என்னை என்ன பண்ணச் சொல்றே? அவங்க இது போதும்னு சொல்லிட்டாங்க. சரி, சரி ஆகட்டும், இன்னிக்கு நல்லநாள்னா ஆகவேண்டிய வேலையை ஆரம்பிக்கலாம். பக்ஷணம் எல்லாம் நிறைய வைக்கணும், பெரிய குடும்பம். சமையல்கார மாமிக்குச் சொல்லி அனுப்பணும், முன்னாடி நீ மன்னியைக் கூப்பிட்டு என்னிக்கு மஞ்சள் இடிக்கிறது? தோழிப்பொங்கல் என்னிக்குனு எல்லாம் முடிவு பண்ணிக்கோ.

கல்யாண வேலை ஆரம்பம் ஆனது. அது சரி, திடீர்னு எப்படிக் கல்யாணத்துக்கு ஒத்துண்டாங்க? இதன் பின்னணியில் நடந்தவைக்குக் காத்திருங்கள். இந்தியா- இலங்கை மாட்ச் முடியட்டும். சொல்றேன். வேடிக்கை என்னவென்றால் எனக்கே இப்போத் தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் முழுசாத் தெரியும். அதுவரைக்கும் ஆங்காங்கே ஒருத்தரொருத்தர் சொன்னதும், கேட்டதும் தான். மாட்சி முடிஞ்சதும், எல்லாமும் எழுதறேன். நாளைக்கு மாட்சுக்கு இன்னிலேருந்தே தயாராயிட்டு இருக்காங்க எல்லாரும். சும்மாவே சனி, ஞாயிறுன்னா ஈ ஓடும் வலை உலகிலே. இப்போக் கேட்கவே வேண்டாம். யாருமே வரமாட்டாங்க!

31 comments:

 1. தோழி பொங்கல் ?? இதைக் கேள்வி பட்டது இல்லையே நான் ??

  தஞ்சாவூர்காரா லக்ன பத்திரிக்கை பெரிய அளவில் செய்ய மாட்டாங்கறது பழைய செய்தி. இப்ப எல்லாம் தூள் பறக்குது ..

  உங்களுக்கே இப்பதான் விஷயம் தெரியுமா ?

  அப்ப அடுத்தப் பகுதி திங்களா ??

  ReplyDelete
 2. தோழிப் பொங்கல் என்பது தென் மாவட்டங்களுக்கு மட்டுமே உரியதுனு தான் நினைச்சேன். ஆனால் அது முன்னால் வழக்கத்தில் இருந்திருக்கு என்பதும் அப்புறமாப் புரிந்து கொண்டேன். கல்யாணம் நிச்சயம் ஆனதும் தாய் மாமன் பெண்ணுக்குச் செய்யும் சீர் வரிசைகளை ஒரு நல்ல நாள் பார்த்துப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துப் புதுப்புடைவை எடுத்துக் கொடுத்துக் கைநிறைய வளையல்கள் அடுக்கச் செய்து, (ஹிஹிஹி, கண்ணாடி வளையல்தான்) விருந்து சமைத்துப் போட்டு, பூச்சூட்டிப் பின்னர் அவள் தோழிகளோடும், மற்ற உறவினர்களோடும் கிட்டத்தட்ட ஊர்வலமாய் நடக்கும் ஒண்ணு. இதிலே பெண்ணை அவங்க வீட்டிலே இருந்து அழைத்துப் போறச்சேயும், ஒவ்வொரு வீட்டு வாசல்லேயும் ஆரத்தி எடுத்துப் பெண்ணுக்கு வளையலோ, ரவிக்கைத் துணியோ வச்சுத் தருவாங்க. திரும்பி வரச்சேயும் இப்படியே வீதிவலம். ஹிஹி, நாங்க அதெல்லாம் போகமாட்டேன்னு சொல்லிட்டோமுல்ல/ சும்மா சாஸ்திரத்துக்கு மாமா வீட்டுக்குப் போனேன். கல்யாணமே மாமா வீட்டு வாசல்லே தான் பந்தல் போட்டு நடந்தது! :))))))))) ஆனால் இப்போவும் சில குடும்பங்களில் நல்ல நாளில் பெண்ணுக்கு வளையல்களை அடுக்கும்போது கொஞ்சம் விமரிசையாகச் செய்கின்றனர். இரண்டு வருஷம் முன்னால் கூட இரண்டு மூன்று கல்யாணங்களில் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கல்யாணப்பெண்ணுக்கு வளையல் அடுக்கிட்டு வந்தேன். வளைகாப்பு வளையல் தனி. இது தனி. விவரிச்சுச் சொல்லணும்னா தனிப் பதிவாத் தான் போடணும்! :)))))))

  ReplyDelete
 3. தஞ்சாவூர்காரா லக்ன பத்திரிக்கை பெரிய அளவில் செய்ய மாட்டாங்கறது பழைய செய்தி. இப்ப எல்லாம் தூள் பறக்குது ..//

  தெரியும், எங்க வீட்டிலேயே என் கல்யாணத்துக்கு அப்புறமாப் பத்து வருஷம் கழிச்சு என்னோட முதல் மைத்துனன் கல்யாணத்திலே லக்னப்பத்திரிகை வாசிக்கிறதைப் பெரிய அளவிலே பண்ணினோம். ஹிஹிஹி, என் அப்பாவுக்கு அப்போவும் கோபம், முதல் பிள்ளைக்குப் பண்ணலைனு கோவிச்சுண்டிருந்தார். :))))))))))))) ஜாலியா இருந்தது! :P

  ReplyDelete
 4. நீங்க பக்கத்துல உக்காந்து சொல்றாப்ல இருக்கு.

  தொடர்ந்து படிச்சுகிட்டு வர்றேன். இன்னைக்குத்தான் கமெண்ட் போடுறேன். திங்கள்கிழமை யுகாதி. செவ்வாய்க்கிழமை வந்து படிக்கிறேன்.

  :))

  ReplyDelete
 5. இதை நாள் கோலம்னு சொல்லுவோம் நாங்க. :)

  ReplyDelete
 6. வாங்க புதுகை, மெதுவா நிதானமா வந்து படிங்க. நன்றிங்க வரவுக்கும் கருத்துக்கும்.

  ReplyDelete
 7. வாங்க எல்கே, நாள்கோலம்?? கேட்டதில்லை. விபரமா எழுதுங்க. இங்கே தாய்மாமன் வீட்டுச் சீர் தான் முதல்லேவரணும், அவங்க பட்டுத் தான் முதல்லே கட்டணும்னு எல்லாம் உண்டு. மாமாக்களுக்கு இது ஒரு கெளரவப் பிரச்னையாகவும் ஆகும். சிலர் தங்கத்திலே நகைகளும் கொடுப்பாங்க.

  ReplyDelete
 8. என்னிக்கு மஞ்சள் இடிக்கிறது? //
  இது என்ன?
  அட இந்தியா இலங்கை யுத்தமே நடந்தால்தான் என்ன? அதுக்குன்னு இந்த பதிவை படிக்காமலா போயிடுவோம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  ReplyDelete
 9. தொடர..இப்பல்லாம் முதல்லேயே ப்ளாகர் பூதம் ஐடி கேக்கறதில்லை. அப்பறமா கேக்கறேன்ன்னு சொல்லிட்டு அப்பறமும் கேக்கறதில்லை. எப்படி தொடருவதாம்? இப்படி ஒரு பின்னூட்டம் போட வேண்டி இருக்கு. எல்லாம் ம்ம்ம்? அஜீத் லெட்டர்!

  ReplyDelete
 10. \\என்னவென்றால் எனக்கே இப்போத் தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் முழுசாத் தெரியும்.\\

  உங்களுக்கே இப்பதான் தெரிஞ்சதா!! ;))

  நாங்களும் மேட்ச் முடிச்சிட்டு வரோம் ;)

  ReplyDelete
 11. தோழி பொங்கல் - நீங்க எழுதின பதில் படிச்சேன்...எங்க கல்யாணங்களிலும் இது போல இருக்கு... பேரு தான் வேற... பெரும்பாலும் கல்யாணத்துக்கு சில நாள் முன்னாடியோ இல்ல முந்தின நாளோ செய்வாங்க... இது செஞ்ச பின்ன வீட்டை விட்டு வெளிய போக கூடாது கல்யாண மண்டபம் போகும் வரை...

  //அவங்க பட்டுத் தான் முதல்லே கட்டணும்னு எல்லாம் உண்டு//
  நானும் கல்யாண நலங்குக்கு (மாங்கல்ய தாரணத்துக்கு முன் தினம் மாலை) மாமா சீர் செய்யும் பட்டு தான் கட்டினேன்...நெறைய ஒற்றுமைகள் இருக்கும் போலியே...

  //சிலர் தங்கத்திலே நகைகளும் கொடுப்பாங்க//
  ஹி ஹி...அதெல்லாம் வசூல் பண்ணிடுவோமே...:))
  (பவள வளையல்... Its my treasure forever..For some "spl" reason, sentimentally attached to it...:)

  //எனக்கே இப்போத் தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் முழுசாத் தெரியும்//
  அட ராமா... இப்படி கன்னா பின்னானு சஸ்பென்ஸ் வெச்சா எப்படி???

  எனக்கென்னமோ மாமா தான் அந்த லெட்டர் எழுதி இருப்பார்னு தோணுது... பாப்போம்...:)))

  ReplyDelete
 12. சரி நம்ப லக்ன பத்திரிக்கை இன்னிக்கு !!!
  (இதை TMS / KANNADASAN COMBO நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணீத்திங்கள் பின்னிசையில் படிக்கணும் PLEASE !!)
  நிகழும் விக்ருதி ஆண்டு பங்குனி திங்கள் 19ம் நாள் நிகழவிருக்கும் பரதபுத்திரர் , தம்பபானி புத்திரர்களின் கோப்பை சுயம்வரத்தை தொலையிலிருந்து காண வெஸ்ட் மில்டொன் கம்முனிட்ய் ஹாலுக்கு (லக்னம் !!! ???? ங்கே!!) குடும்பம் , பந்துமித்ர, நண்டு சிண்டுகளுடனும் தாரை தப்பட்டை சகிதம் பாப்கார்ன், கோக், அண்டகுடுத்துக்க குஷன் (அண்ட் போத்திக்க ரஜாய் தேவைப்பட்டால் ) எல்லாத்துடனும் வென்றவரை விஸில் அடித்து வாழ்த்தி , தோத்தவரை நாலு வசை, தர்ம அடிபோட்டு கும்ம வந்து வரன் வதுக்களை ஆசிர்வதிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் !!
  பூமா க்கு ஸ்பெஷல் வேண்டுகோள் – னோ டான்ஸ் ப்லீஸ்

  ReplyDelete
 13. தோழிப்பொங்கல் ” கேட்டு எத்தனை வருஷ யுகம் ஆன மாதிரி இருக்கு!! அப்படியே PKM கல்யாண வாஸனை!! மஞ்சள் இடிக்கறது , குலதெய்வத்துக்கும் குடிடயானவன் குடும்பத்துக்கும் நெல் பருப்பு அளந்து போடுவா!! அம்மனுக்கு புடவை மஞ்சத்துணில, காசு பிள்ளையாரப்பனுக்கு சுப்ரமண்ய சாமிக்கு தேங்காயும் வெல்லமும் )))!! சுமங்கலி ப்ரர்தனை அண்ட் சமாராதனை !! ம்… நிறைய வருஷம் ஆச்சு !!! இப்பல்லாம் வளை அடுக்கறது கூட வளைகாப்புக்குனு மட்டும்னு ஆயிடுத்தோ!! Interesting…. ம்… மேல என்னாச்சு

  ReplyDelete
 14. @திவா, மஞ்சள் இடிக்கிறது என்பது கல்யாணத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர் நாள்பார்த்து குறைந்தது ஐந்து சுமங்கலிகள் சேர்ந்து பிள்ளையார் பிடிச்சுப் பூஜை செய்து, மஞ்சள் கிழங்குகளை உரலில் போட்டு உலக்கையால் கல்யாணத்துக்கு என இருக்கும் பாடல்களைப் பாடிக்கொண்டே மாறி மாறி இடிப்பார்கள். அதுக்கு முன்னாடி உரல் உலக்கைக்கும் மஞ்சள், குங்குமம் எல்லாம் உண்டு. அரிசிமாவை நன்கு அரைச்சுக் கோலம் போட்டு கிழக்குப்பார்த்துச்சிலரும் மேற்குப் பார்த்துச் சிலரும் நின்று கொண்டு மாறி மாறி உலக்கையால் அந்த மஞ்சளை இடிப்பார்கள்.

  இடிச்ச மஞ்சளை நன்கு நீர் விட்டுக் குழைத்துக் கல்யாணப் பெண்ணுக்குப் பூசும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. சுமங்கலிகளுக்குச் சாப்பாடு போடுவதும் சில வீடுகளில் உண்டு. சிலர் வெற்றிலை,பாக்கு, ரவிக்கைத்துணி வைச்சும் கொடுப்பாங்க. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை. அது தனி. இந்த மஞ்சள் இடிப்பது நடந்ததுக்கு அப்புறம் தான் கல்யாணச் சீர் பக்ஷணங்கள் செய்ய அடுப்பை மூட்டுவாங்க. அடுப்புக்குத் தனியாய்க் கோலம், செம்மண், பூ, பிள்ளையார் எல்லாமும் உண்டு. வீடே கல்யாணக் கோலம் பூண்டிருக்கும்.

  இப்போ எல்லாமே கல்யாண காண்ட்ராக்டர் தானே! :(((((((( அதனால் பழக்கவழக்கங்கள் மறைந்து வருகின்றன. ஒரு விதத்தில் அவற்றை எல்லாம் சொல்லவேண்டியே இந்தப்பதிவுகளும். :))))))))))))))))

  ReplyDelete
 15. அட இந்தியா இலங்கை யுத்தமே நடந்தால்தான் என்ன? அதுக்குன்னு இந்த பதிவை படிக்காமலா போயிடுவோம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

  ஆஹா, ஆஹா, ஆஹா, I am honoured!!!!!!!!!!!!!

  ReplyDelete
 16. அப்பறமா கேக்கறேன்ன்னு சொல்லிட்டு அப்பறமும் கேக்கறதில்லை. எப்படி தொடருவதாம்? இப்படி ஒரு பின்னூட்டம் போட வேண்டி இருக்கு. எல்லாம் ம்ம்ம்? அஜீத் லெட்டர்!//

  @திவா, வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டிக்கு வேணும்!! ஹாஹாஹாஹாஹா, (ஒரு மாறுதலுக்கு ஹாஹானு சிரிச்சேன், ஹிஹிஹினு சிரிச்சு போர் அடிக்குது)

  ReplyDelete
 17. வாங்க ஜெயஸ்ரீ, உங்க லக்னப் பத்திரிகை அம்சம், அட்டகாசம்!

  அந்தக் கடைசி வரிகள், படிச்சுட்டுக் கண்ணிலே தண்ணீர் வருது. விளையாட்டாய் எழுதினாலும் உண்மை அதுதானே. எப்போ என்ன னு எதுவும் சொல்ல முடியலை!:((((((

  ReplyDelete
 18. உங்களுக்கே இப்பதான் தெரிஞ்சதா!! ;))

  நாங்களும் மேட்ச் முடிச்சிட்டு வரோம் ;)//

  ஹிஹிஹி, ஆமாம் கோபி, மாட்ச் முடிச்சுட்டு வாங்க,.ஒண்ணும் அவசரம் இல்லை!:)))

  ReplyDelete
 19. வாங்க ஏடிஎம், அநேகமா எல்லாக் கல்யாணங்களிலும் ஒற்றுமைகள் உண்டு. இந்தியா முழுவதிலுமே. வட இந்தியக் கல்யாணங்களிலும் சில ஒற்றுமைகளைப் பார்க்கலாம். அம்மி மிதித்தலும், சப்தபதியும் இல்லாத கல்யாணமே கிடையாது. சப்தபதி முடிஞ்சாத் தான் கல்யாணம் நிறைவு பெற்றது என்பது பலருக்கும் இன்னும் தெரியவில்லை. புரியவும் இல்லை. நீதிமன்றமும் சப்தபதி முடிஞ்சாத்தான் கல்யாணம் முடிஞ்சது என ஒத்துக்கொள்ளும், சட்டமும் அதுவே. இதுவும் பலருக்கும் தெரியவில்லை. தாலி கட்டிட்டாலே கல்யாணம் ஆயிடுத்துனு சொல்றாங்க. இப்போதெல்லாம் எல்லாக் கல்யாணங்களிலும் ஒரு சின்ன சொற்பொழிவே நிகழ்த்திடறாங்க. இது இந்தக் காலத்துக்குத் தேவையும் கூட.

  ReplyDelete
 20. எனக்கென்னமோ மாமா தான் அந்த லெட்டர் எழுதி இருப்பார்னு தோணுது... பாப்போம்...:)))//

  ஏடிஎம், ஆமாம், கடிதம் எழுதினது அவர்தான். இல்லைனு எல்லாம் சொல்லலை. ஆனால் அது எப்படி, எப்போ, எங்கே , ஏன் என்பது தான் சஸ்பென்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஹாஹாஹாஹாஹா

  ReplyDelete
 21. இப்பலாம் எங்க சம்ப்ரதாயங்களுக்கு முக்கியத்துவம் தராங்க ? முதல் நாள் நிச்சயமும் , ஜான வாசமும்தான் இருக்கும். இப்ப நெறைய பேரு ஜானவாசத்தை கட் பண்ணிட்டா .

  அடுத்த நாள், ஆபிஸ் போறவா சீக்கிரம் போகணும்னு எல்லாம் பண்ணறா. மாங்கல்ய தாரணம் ஆன உடனே கைக் குலுக்க வராங்க. அவர்களைத் தடுத்தா கோபம் வேற வருது . என்ன பண்ண :(

  ReplyDelete
 22. தோழிப்பொங்கல் ” கேட்டு எத்தனை வருஷ யுகம் ஆன மாதிரி இருக்கு!! அப்படியே PKM கல்யாண வாஸனை!! மஞ்சள் இடிக்கறது , குலதெய்வத்துக்கும் குடிடயானவன் குடும்பத்துக்கும் நெல் பருப்பு அளந்து போடுவா!! அம்மனுக்கு புடவை மஞ்சத்துணில, காசு பிள்ளையாரப்பனுக்கு சுப்ரமண்ய சாமிக்கு தேங்காயும் வெல்லமும் )))!! சுமங்கலி ப்ரர்தனை அண்ட் சமாராதனை !! ம்… நிறைய வருஷம் ஆச்சு !!! இப்பல்லாம் வளை அடுக்கறது கூட வளைகாப்புக்குனு மட்டும்னு ஆயிடுத்தோ!! Interesting…. ம்… மேல என்னாச்சு//

  ஜெயஸ்ரீ, பெரியகுளத்துக்கும் மேல்மங்கலத்துக்கும் ஆறு கி,மீ. தானே! :))))))))குலதெய்வத்துக்கு நெல் அளக்க அப்போ நிலங்கள் இல்லை. என் கல்யாணத்துக்கு முன்னாடியே வித்தாச்சு. ஆனால் கருப்பண்ணசாமிக்கும், படாளத்தம்மனுக்கும் முதல் பத்திரிகை வைச்சது நினைவிருக்கு. கருப்பண்ணசாமிக்குப் பாக்குப் பழம் மாத்தணும், ஊருக்குப் போகணும்னு அம்மா சொல்லிண்டே இருந்தா. எங்கே பதினைந்தே நாட்களில் கல்யாணம், இப்போ முடியாதுனு மஞ்சள் துணியில் முடிஞ்சு வைச்சா. அது செய்யாமலேயே போய், அப்புறமா அப்படியே நின்னு போச்சு. என்னோட அண்ணா, தம்பி கல்யாணங்களிலும் செய்யலை.

  அம்மா போனதும் தான் குலதெய்வ வழிபாட்டைப் பத்தியே குடும்பத்திலே எல்லாருக்கும் நினைவு வந்தது. இத்தனைக்கும் மதுரைக்குப் போயிண்டு, வந்துண்டு தான் இருந்தாங்க எல்லாரும். இப்போவும் ஒரு பெரியப்பா பிள்ள என்னோட அண்ணா அங்கே தான் இருக்கார். ஒட்டு மொத்தக் குடும்பமும் குலதெய்வத்தை மறக்க, அப்புறம் என் மன்னியோட அம்மாவுக்கு சொப்பனத்தில் வந்து சொல்ல, அதுக்கப்புறமா இப்போ வருஷா வருஷம் குடும்பத்தோட படை எடுக்கிறாங்க. குடும்பம்னா பெரியப்பா பிள்ளை, மன்னி அவங்க குழந்தைகள், எங்க அண்ணா, தம்பி குடும்பங்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து தான் போறாங்க.

  ReplyDelete
 23. பெண் வாரிசுகளும் அவங்க குடும்பத்தோட வரணும்னு அந்த மாமி மூலமேகேள்விப் பட்டு எங்க பெரியப்பா பெண்கள் எல்லாரும் போயிட்டு வந்தாங்க. எங்களுக்குப் போகவே முடியாமல் கடைசியா என் பெண்ணை மட்டும் எங்க பையர் கல்யாணத்துக்கு வந்தப்போ அனுப்பினோம். நாங்க இரண்டு பேரும் பையர் மருமகளோட 2007-ம் வருஷம் டிசம்பரில் போயிட்டுப் பாக்குப் பழம் மாத்திக் கருப்புக்கு நிலைமாலை சார்த்தி படாளம்மனுக்கு அபிஷேஹம்செய்து கொண்டு பிரார்த்தனையை முடிச்சோம். :))))))))

  ReplyDelete
 24. உண்மைதான் எல்கே. ஆனால் இந்த விஷயத்தில் நாங்க கொஞ்சம் கண்டிப்பாக கூடாதுனு சொல்லிடறோம். அப்புறமாப் பெண்ணையும், பிள்ளையையும் தனியாக உட்கார்த்தி வைத்துச் சிறிது நேரம் கொடுத்து எல்லாருடைய ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுக்கொள்ள விடுகிறோம். ஆனாலும் யாருக்குப் புரிகிறது?? அது என்னமோ உண்மைதான்.

  ReplyDelete
 25. கல்யாணமாம், கல்யாணம் தொடர் மிகவும் அருமை.

  நான்கு நாள் கல்யாணம், அதற்கு முன்பே நல்ல நாள் பார்த்து வளையல் போடுவது ,மஞ்சள் முடிந்து பெட்டியில் புது துணிகள் எடுத்து வைப்பது.

  நல்ல நாள் பார்த்து குலதெய்வ வழிபாடு,சுமங்கலி பிராத்தனை,முன்னோர் வழிபாடு எவ்வளவு சடங்குகள். இந்த தலை முறைக்கு எல்லாம் காரண காரியங்களோடு சொல்லவேண்டும்.
  புரிந்துக் கொள்வார்கள் அவர்கள்.

  உங்கள் கல்யாணம் மிகவும் எதிர்ப்பார்ப்போடு இருக்கிறது.

  தொடர்ந்து படித்து வருகிறேன்.

  ReplyDelete
 26. காத்திருக்கிறோம்.

  உங்கள் வழக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

  ReplyDelete
 27. சீதாலக்ஷ்மி மாமி :)
  உங்களோட பெயர் புராணமும், கல்யாணம் தொடர் படிச்சேன், இன்று தான் ஆத்தில் இருந்து கமெண்ட் போட முடிந்தது. உங்கள் பெயர் போலவே எனது அம்மாவின் பெயரும் சீதா தான் - பாட்டி (என் கொள்ளு பாட்டி பெயர்). சின்ன வயதில் என் பெற்றோர் கல்யாண ஆல்பம் பார்க்கும் போது 'சீதா கல்யாண வைபோகமே என்று பாடி கேலி செய்வதுண்டு. உங்களுக்கும் அப்படி பாடலாம் போல உள்ளது.
  வருட கணக்கை வைத்து பார்க்கும் போது உங்களுக்கு என் அம்மா age group இருக்கும் என்று நினைக்கிறேன். மாமாவிற்கும், உங்களுக்கும் சஷ்டியப்தபூர்த்தி முடிந்ததா? என் நமஸ்காரங்கள் உங்கள் இருவருக்கும்.

  ReplyDelete
 28. Yippe.......ye..... India won the world Cup atlast :))))) Well done !!

  ReplyDelete
 29. ஒவ்வொரு சம்பிரதாயங்களும் சுவாரஸ்யமா இருக்கு.. விடாம எழுதுங்க கீதாம்மா :-))

  ReplyDelete
 30. சூப்பர் ஆ இருக்கு

  நிறைய மர்ம முடிச்சுகள் போல !

  எப்போ அடுத்த பார்ட் வரும் என்று எதிர்பார்க்க வைக்கிறது

  ஆமா கீதாம்மா ! கல்யாணம் எல்லாம் சொர்கத்தில் நிச்சயிக்க படுகின்றன என்பது பற்றி தங்களின் கருத்து!

  ReplyDelete
 31. மர்மமெல்லாம் அவிழ்ந்தாச்சு ப்ரியா, படிக்கலை போல, அதனால் என்ன?? மெதுவாப் படிங்க. அவசரம் ஒண்ணுமில்லை. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது ஓர் ஆங்கிலப் பழமொழியின் தமிழாக்கம்னு நினைக்கிறேன்.

  ReplyDelete