எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 14, 2013

உங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா? 3எல்லார் வீட்டிலும் அவரவர் வழக்கப்படி பொங்கல் கொண்டாடி இருப்பீங்க.  இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கலாமா? பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா.  பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆடு, மாடுகளை மேய்த்தான் என்பது தெரியும். அதனாலும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிறோம்.  மேலும் இந்திரனுக்கும், வருணனுக்கும் உரிய திருநாளாக போகியைக் கொண்டாடுகிறோம்.  மழைக்கு தெய்வம் இந்திரன்.  ஆகவே நல்ல மழை வேண்டி இந்திரனையும், வருணனையும் வழிபடுகிறோம்.  அடுத்து பயிர்களின் விளைச்சலுக்கு வெப்பமும் வேண்டும் என்பதால் சூரியனை வழிபடுகிறோம்.  காச்யபர் என்னும் ரிஷியின் மகன் ஆன சூரியன் அவருடைய இன்னொரு மனைவியின் மகன் ஆன அருணன் உதவியோடு தன் பயணத்தைத் தினம் தொடங்குகிறான். இந்த சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில் தோன்றவும் இல்லை.  மறையவும் இல்லை. சூர்ய சதகம் என்னும் ஸ்லோகத்ஹ்டில் 18 மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம்.  ஸ்லோகம் எடுக்க கூகிளாரின் உதவியை நாடினால் மற்ற மொழிகளில் வருகிறது.  தமிழில் வரலை. :( ஆனால் சூரியன் உதயமோ அஸ்தமனமோ இல்லாதவன் என்றும் அவன் ஒளி பரவினால் அந்த இடத்தில் அப்போது பகல் எனவும் ஒளி பரவாத திசை இரவு எனவும் கூறுவதாய் அறிகிறோம்.  ஒரு கண்டத்தில் சூரியன் ஒளி வீசிப் பிரகாசிக்கும்போது இன்னொரு கண்டத்தில் நிலவு பிரகாசிக்கிறது என்பதையும் அந்தக் காலத்திலேயே அந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளனர். அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப் படும் முன்னரே நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.

நந்தி தேவருக்கு ஈசன் கொடுத்த சாபத்தினாலேயே மாட்டுப் பொங்கல் ஏற்பட்டதாய்க் கூறினாலும் விவசாயத்துக்குப் பெரும்  உதவி செய்யும் கால்நடைகளை வழிபடுவதே மாட்டுப் பொங்கல் ஆகும்.  முன்பெல்லாம் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமெல்லாம் தீட்டுவார்கள்.  இப்போதெல்லாம் அதைப் பார்க்க முடிவதில்லை. பொதுவாகவே மக்கள் மனதில் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே வருகிறது.  என்றாலும் இளைய தலைமுறை எப்படி அறிந்து கொள்வார்கள் என்பதினாலேயே இதை எல்லாம் எழுதியானும் வைக்கலாம் என்பது முக்கிய எண்ணம்.  மாடுகளைக் காலை வேளையில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வார்கள்,  மாலையானதும் அவை வீடு திரும்பும் நேரம் விளக்கு வைக்கும் நேரமாய் இருக்கும்.  அப்போது எழும்பும் தூசியை கோ தூளிகா மண்டலம் எனப்படும்.  இது உடலில் படுவதால் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை.  கிராமத்துத் திண்ணைகளில் குழந்தைகளோடு இந்தக் காற்றுப் படுவதற்காக மக்கள் அமர்ந்து காத்திருப்பார்களாம்.  இதைப் போலவே மாட்டுப் பொங்கல் அன்றும் கோதூளிகா மண்டலம் ஏற்படும் வண்ணம் தெப்பம் அமைப்பார்கள் என்று அறிகிறோம்.

பசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம்.  தெப்பச் சுவர் அரைசாணாவது இருக்க வேண்டும்.  என்றால் சாணம் எவ்வளவு எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  இந்தத் தெப்பத்ஹ்டில் நவதானியங்கள், மஞ்சள், பூக்கள், இவற்றைப் போட்டு நீர் நிரப்புவார்கள். தெப்பத்தின் நான்கு பக்கமும் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும்.  பின்னர் பொங்கல் செய்து படைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றுக்கும் தூபம், தீபம் காட்டி அவற்றோடு இந்தத் தெப்பத்தை மும்முறை வலம் வருவார்கள்.  அப்போது கிளம்பும் கோ தூளிகாவின் மகிமையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர்.  பின்னர் முடியும் நேரம் கால்நடைகளின் கால்களை தெப்பத்தின் மீது வைத்து தெப்பநீர் மதில் தாண்டி வெளிப்படச் செய்வார்கள். இது மிகவும் சிலாக்கியமான ஒரு வழக்கமாக அந்நாட்களில் இருந்து வந்ததாய்த் தெரிய வருகிறது.

பொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகையாகவும் கொண்டாடுவார்கள்.  முதல்நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும் அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச் சொல்வார்கள்.  மஞ்சள் கீறுகையில் சொல்லும் ஆசீர்வாத வாழ்த்துப் பாடல் கீழ்க்கண்டவாறு.  இதில் வரும் சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து என்பதின் அர்த்தம் ஏற்கெனவே சொல்லி விட்டேன்.  எனினும் திரும்பப் பகிர்கிறேன்.  அந்தக் காலங்களில் பெண்களை ஐந்திலிருந்து ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் செய்து வைப்பார்கள்.  அதில் வயதில் குறைந்த மாப்பிள்ளைகளும் அமையலாம்.  வயது முதிர்ந்த மாப்பிள்ளைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.  அப்படியான பெண்கள் பால்யத்திலேயே விதவையாகவும் ஆகி இருக்கிறார்கள்.  ஆகவே அது எல்லாம் நடக்கக் கூடாது என்பதாலேயே சிறு வயதுப் பிள்ளையாக உனக்கு ஈடாக இருக்கக் கூடியவனைத் திருமணம் செய்து கொண்டு அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனிடம் குடும்பம் நடத்திக் குழந்தைகள் பெற்றுச் சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தும் பாடலே இது.

தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும்
பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்
சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துக்
கொண்டவன் மனம் மகிழத் தையல் நாயகி போலத்
தொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக
மாமியான் மாமனார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்றப்
பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க
உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி
புது மாப்பிள்ளை மருமகளோடு புதுப் புது சந்தோஷம் பெருகி
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி என்றென்றும் வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும்!

5 comments:

 1. கோதூளிகா.எத்தனை அழகா இருக்கு கீதா. இப்ப என்றால் கதவெல்லாம் தூசுக்குப் பயந்து சாத்திவிடுவார்கள்.
  தஞ்சாவூரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தபோது காலைபிம்மாலை மாடுகள் மேய்ச்சலுக்குப் போகும் சத்தமும் குட்டுவண்டி மாடுகளின் சத்தமும் எழுப்பும்.காதுக்கு இனிமை மனதுக்குக் குளுமை. பதிவின் பாடலைப் பாட்டி பாடுவார். இரும்புத்தாலியாக் கட்டிண்டு இருக்கணும்னு வாழ்த்துவார்.இன்று என்னைவிடப் பெரியவர்கள் என்று யாரைத் தேடி போவது என்று தெரியவில்லை:)

  ReplyDelete
 2. சூரியனும் அருணனும் ஒரே ஆள் இல்லையா? வாழ்த்துப் பாடல் பிரமாதம். 'தொங்கத் தொங்கத் தாலி' வரிகள் மட்டும் நினைவில் இருக்கிறது. ஆனால் பாடலை முழுவதும் இப்படிக் கேட்டிருக்கிறேனா என்றும் நினைவில் இல்லை!

  ReplyDelete
 3. வாங்க, வல்லி, இப்போல்லாம் மாடுகளே பார்க்க முடியறதில்லையே! :((((இங்கே எனக்குப் பெரியவங்க இருந்தாலும் அவங்க ஒத்துப்பாங்களானு சந்தேகம். அதனால் நானே மஞ்சள் கீறிண்டேன். அம்புடுதேன். :)))))

  ReplyDelete
 4. சூரியன் காச்யபரின் ஒரு மனைவியின் பிள்ளை. அருணன் வேறொரு மனைவியின் பிள்ளை. பிறவியில் கால் கொஞ்சம் சரியில்லை. அதனால் மெதுவாகப் போவான் எனச் சொல்வார்கள். கருடன் அருணனின் உடன் பிறந்தவர். :))))))

  ReplyDelete
 5. மாட்டுப்பொங்கல் தெரியும்.

  கோதூளிகா, தெப்பம், வாழ்த்துப்பா எல்லாம் புதிதாக இருக்கின்றது.

  ReplyDelete