எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 11, 2013

உங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா?

தீபாவளி வந்தாச்சானு மட்டும் தான் கேட்கணுமா என்ன?  பொங்கலும் வந்தாச்சானு கேட்கலாம் இல்லை?  அதான். இந்த வருஷம் எந்தப் பண்டிகைக்கும் தனிப் பதிவு போடவே இல்லை. :))) எல்லாம் நிறையப் போட்டாச்சு என்பதோடு அந்தச் சமயங்களில் இருந்த சூழ்நிலையும் ஒரு காரணம்.  இப்போக் கொஞ்சம் சாவகாசமா, அதோடு இரண்டு நாட்களாக மதியத்திலும் ஆச்சரியமாக மின்சாரம் இருக்கவே பொங்கல் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.  ஏற்கெனவே சிலது படிச்சிருக்கலாம்.  முன் பதிவுகளைப் போய்ப் பார்த்து வைச்சுக்கலை. பொறுத்து  அருள்க! :))))))
*********************************************************************************




சங்க காலத்தில் "தை நீராடல்", "பாவை நோன்பு" என்றெல்லாம் அழைக்கப் பட்டது பொங்கல் பண்டிகையாக இருக்கலாம் என்பது சிலர் கூற்று.  ஏனெனில் நல்ல மழையையும், விளைச்சலையும் காண்பதற்காகவே இயற்கை அன்னையை, பூமித்தாயைப் போற்றிக் கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.  சாண உருண்டையைப் பிள்ளையாராகக் கருதுவார்கள் என்பதை ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம்.  இந்தச் சாண உருண்டையை ஒரு சிலர் வரட்டியாகத் தட்டிப் பொங்கல் அன்று அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவதாகவும், மற்றும் சிலர் வழக்கப்படி சாண உருண்டைகள் சேகரிக்கப் பட்டு, பொங்கலுக்கு மறுநாள் ஒரு கூடையில் அவற்றைப் போட்டுக் கொண்டு சிறு குழந்தைகள் ஒன்று கூடிக் கிளம்புவார்கள்.  வீடு வீடாகச் சென்று கும்மியடித்துப் பாடிக் காசுகளை வாங்கிக் கொண்டு அதில் பொரிகடலை, நாட்டுச் சர்க்கரை வாங்கிக் கூடைப் பிள்ளையாருக்குப் படைத்துவிட்டுப் பின்னர் ஊர்ப்பொது வாய்க்காலில் அந்தச் சாண உருண்டைகளைக் கரைப்பார்கள்.  இந்த வாய்க்காலில் கரைக்கப்படும் சாணம் எருவாகி, ஊரின் நிலங்களுக்கு நீர் பாய்கையில் பயிர்களைச் செழிப்பாக வளர வைக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு மாதம் கோலத்தில் வைத்த சாணப்பிள்ளையார் அந்த மாதம் முழுதும் சுவரில் காய்ந்து கொண்டு இருப்பார்.  ஆனாலும் வாய்க்காலில் கரைக்கையில் சிறு குழந்தைகளுக்குத் துக்கம் தாங்க முடியாமல் அழுகை வந்துவிடும்.  அப்போது அவர்கள் பாடும் கும்மிப் பாடல் கீழ்க்கண்டவாறு:

வட்ட வட்டப் பிள்ளாரே, வாழக்காயும் பிள்ளாரே
உண்ணுண்ணு பிள்ளாரே ஊமத்தங்கா பிள்ளாரே
வார வருசத்துக்கு வரவேணும் பிள்ளாரே
போன வருசத்துக்குப் போயி வந்தீர் பிள்ளாரே
வாடாம வதங்காம வளத்தினோமே பிள்ளாரே
வாய்க்காலு தண்ணியிலே வளர விட்டோம் பிள்ளாரே
சிந்தாம சிதறாம வளத்தினோமே பிள்ளாரே
சித்தாத்துத் தண்ணியிலே சிந்துறோமே பிள்ளாரே
போய் வாரும் போய் வாரும் பொன்னான பிள்ளாரே
வர வேணும் வர வேணும் வருசா வருசம் பிள்ளாரே
என்று பாடி ஆடிக் கொண்டு பிள்ளையாரை வழியனுப்பி வைப்பார்கள்.

பொங்கல் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவது நம் மரபு.  முதல்நாளை போகி என்னும் "பழையன கழிதல்" நடைபெறும்.  ஊர்ப் பொதுவில் ஓர் இடத்தில் அவரவர் வீட்டுப் பழைய பாய், கூடைகள், முறங்கள் போன்ற இயற்கையான நாரினால் செய்யப் பட்ட பொருட்களைப் போட்டு எரிப்பார்கள்.  இப்போது போல் அப்போது ப்ளாஸ்டிக் குடங்களோ, ப்ளாஸ்டிக் பாய்களோ கிடையாது.  மக்கள் இயற்கையாய்க் கிடைக்கும் நார்களில் இருந்தும், பூமியில் கிடைக்கும் மண்ணிலிருந்துமே பாத்திரங்கள், பாய்கள், படுக்கைகள் செய்து பயன்படுத்தினார்கள்.  இவற்றை எரித்துப் புதியதாய்ப் பொங்கலுக்கு வாங்குவார்கள்.  இந்த வழக்கம் இன்று ரப்பர், ப்ளாஸ்டிக், தெர்மாகோல், பாலிதீன் பைகள் போன்றவற்றைப் போட்டு வலுக்கட்டாயமாய் எரித்து மூச்சு விடத் திணறும் அளவுக்குப் புகைமண்டலத்தை எழுப்பும் வழக்கமாக ஆகி விட்டது.  அதோடு முன்பெல்லாம் கிராமங்களில் இந்தப் பழைய பொருட்களைப் போட்டு எரிக்கும் தீயிலிருந்தே நெருப்பு எடுத்துப் போய்ப் பொங்கல் பானைக்கு அடுப்பு மூட்டும் வழக்கமும் இருந்து வந்தது.


தொடருவோமுல்ல!

படத்துக்கு நன்றி கூகிளாண்டவர்.  தகவல்கள், பல பத்திரிகைகளில் இருந்தும் ஆங்காங்கே கேட்டும் திரட்டியவை.

3 comments:

  1. காரணங்களை மறந்து வழக்கங்களை மட்டும் பின்பற்றி வருகிறோம்-யோசிக்காமல்!

    ReplyDelete
  2. பொங்கல் பற்றிய நினைவுகள் அருமை. பாட்டு நன்றாக இருந்தது.

    உங்களுக்கும் மாமாவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. உங்கள் பகிர்வு இனிய பழைய நினைவுகளைத் தந்தது.

    நமது கிராமத்திலும் முன்னைய காலத்தில் பழையன கழிதல் என கழிப்பார்கள். எரிப்பதில்லை.

    ReplyDelete