எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 13, 2013

கூடி நின்னு கூட்டப் போறீங்களா, குழம்பப் போறீங்களா?

அடுத்த பதிவுக்குப் போறதுக்கு முன்னாடி,பொங்கலுக்கான சிறப்புக் குழம்பு வகைகளைப்பார்க்கலாம். தஞ்சை மாவட்டத்தில் சில வீடுகளில் தனிக்கூட்டு எனச் செய்து காய்களைத் தனியே வேக வைத்துக் கூட்டைச் சேர்த்துத் தனித்தனியாகக் கலப்பார்கள்.  போன வருஷமே அதைக் குறித்து எழுதி இருக்கேன்.  ஆனால் அந்தப் பதிவில் போய் யாரும் பார்க்கவில்லை.  ஒரு சிலர் கேட்டிருப்பதால் இங்கே பகிர்கிறேன்.  பதிவு போணியும் ஆகுமில்ல! :P

தனிக்கூட்டு:

இது தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பொங்கலன்று செய்யப்படுகிறது. இதைத் தவிர சுமங்கலிப் பிரார்த்தனை என்னும் விசேஷங்களிலும் தஞ்சை மாவட்டக்காரர்கள் செய்வார்கள். இதற்கு 5 முதல் ஏழு காய்கள் வரை உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ள வேண்டும். காய்களைத் தனியாக வேக வைத்து இந்தக் கூட்டு கிரேவியைத் தனியாகச் செய்து கொண்டு பின்னர் காய்களில் போட்டுக் கலப்பார்கள். விபரமாக இப்போது பார்க்கலாம்.

இதற்குத் தேவையான காய்கள்:

வாழைக்காய் பெரிதாக ஒன்று அல்லது மீடியம் சைசில் இரண்டு.

கத்திரிக்காய் கால் கிலோ

பறங்கிக்காய் கால் கிலோ

அவரைக்காய் கால் கிலோ

சேனைக்கிழங்கு கால் கிலோ

சர்க்கரை வள்ளிக்கிழங்கு கால் கிலோ

பச்சை மொச்சை தோலுரித்தது இரண்டு கிண்ணம்

கறுப்புக் கொண்டைக்கடலை(காய்ந்தது) ஒரு சிறு கிண்ணம்

மொச்சை காய்ந்தது ஒரு சிறு கிண்ணம்

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு சின்ன மூடி

தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருகப்பிலை, தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்.

கிரேவி தயாரிக்க

புளி கால் கிலோ ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும், உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் நூறு கிராம் தூள் செய்தது. வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்.

அரைக்க

மிளகாய் வற்றல் பத்து, நூறு கிராம் தனியா, கடலைப்பருப்பு 2 டேபிஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு இரண்டு டீஸ்பூன், தேங்காய் துருவல், பெருங்காயம் ஒரு சின்ன துண்டு. ஒரு சின்ன மூடி. வறுக்க எண்ணெய்.

முதலில் காய்களைத் தனித்தனியாக உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாகச் சிவக்க எண்ணெயில் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.

அடிகனமான வாணலி அல்லது கடாயில் புளிக் கரைசலை ஊற்றி உப்பையும் மஞ்சள் தூளையும் போட்டுப் புளி வாசனை போகக் கொதிக்க விடவும். அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து ஒரு கொதி விடவும். சேர்ந்து வரும்போது, இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணையைப் போட்டு நூறு கிராம் பொடி செய்த வெல்லத்தையும் போடவும். நன்கு கொதிக்க விடவும். ரொம்பத் தளர்த்தியாகவும் இல்லாமல், ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் கரண்டியால் எடுக்கும் பதம் வரும் சமயம் இன்னொரு வாணலியைப் பக்கத்தில் வைத்துத் தேங்காய் எண்ணெயை ஒரு பெரிய கரண்டி ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மொச்சை, கொண்டைக்கடலை, தேங்காய்க் கீற்றுகள், கருகப்பிலை போன்றவற்றை நன்கு வறுத்துக் கொதிக்கும் கூட்டு கிரேவியில் கொட்டிக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கவும்.

காய்களுக்கு ஒவ்வொன்றாகத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு கூட்டு கிரேவியை ஒரு பெரிய கரண்டி ஊற்றிக் கலந்து கொள்ளவும். வேக வைத்த எல்லாக் காய்களையும் இம்முறையில் கலக்கவும். பொதுவாகக் காய்கள் நான்கு என்றால் இந்தத் தனிக்கூட்டையும் சேர்த்து ஐந்தாக வழிபாட்டில் படையலுக்கு வைப்பார்கள். இல்லை எனில் காய்கள் ஆறு+தனிக்கூட்டு என ஏழு இருக்கவேண்டும். ஒற்றைப்படையில் வைக்கவேண்டும் என்பதே முக்கியம்.

பொங்கல் வழிபாடு முடிந்ததும், மீதம் இருக்கும் எல்லாக் காய்களைப் போட்டுக் கலந்த கூட்டுக்களை ஒன்றாய்ச் சேர்த்து மீதம் இருக்கும் தனிக்கூட்டு கிரேவியையும் கலந்து நறுக்காமல் காய்கள் மீதம் இருந்தால் அவற்றையும் நறுக்கிப் போட்டு நன்கு கொதிக்க வைப்பார்கள். இதை எரிச்ச கறி என்று சொல்வதுண்டு. சில வீடுகளில் பொங்கல் கழிந்து ஒரு மாதம் வரையும் கூட இந்த எரிச்ச கறி மீதம் தொடர்ந்து வரும். தினம் தினம் இதைக்கொதிக்க வைக்கவேண்டும். அடுத்தது கூட்டாகச் செய்யாமல் காய்களை எல்லாம் போட்டுச் செய்யும் குழம்பு.  இதுக்குத் திருவாதிரைக் குழம்பு செய்முறைதான்.  அதுவும் போன வருஷம்போட்டேன்.  அதிலிருந்து மீள் பதிவு.

பொங்கல் அன்று சில வீடுகளில் செய்யும் குழம்பு. சிலர் வீட்டில் கூட்டுப் போல் கெட்டியாகவும் இருக்கும். மதுரை, தஞ்சை மாவட்டங்களில் இதற்குத் துவரம்பருப்பையும் குழைய வேக வைத்துச் சேர்ப்பார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் பருப்பே போடாமல் செய்வார்கள். இதற்குப் பெரும்பாலும் நாட்டுக்கறிகாய்களே சுவையாக இருக்கும். பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, செளசெள் எல்லாம் இரண்டாம் பட்சமே. கிடைக்காத இடம் என்றால் கிடைக்கும் வேறு காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான காய்கள்:
வெள்ளைப் பூஷணிக்காய் ஒரு கீற்று
பறங்கிக்காய் ஒரு கீற்று
வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று சின்னது என்றால் 2
கத்திரிக்காய் 5ல் இருந்து 8க்குள்
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிய கிழங்கு என்றால் ஒன்று
பச்சை மொச்சை உரித்தது ஒரு கிண்ணம்
அவரைக்காய் 100 கிராம்
சேனைக்கிழங்கு கால் கிலோ
சேப்பங்கிழங்கு(விரும்பினால் கால் கிலோ)
சிறுகிழங்கு கால் கிலோ
கொத்தவரைக்காய் 100 கிராம்

இதோடு பீன்ஸ், காரட், செளசெள இதெல்லாம் விரும்பினால் சேர்க்கலாம். எல்லாக் காய்களையும் இரண்டு அங்குல நீளம் ஒரெ மாதிரியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தனியாக வைக்கவும்.

கால் கிலோ துவரம்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்துக்க் குழைய வேகவைக்கவும். புளி நூறு கிராம் ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும். இவை எல்லாம் தயாராக இருக்கட்டும். இப்போது அரைக்க வேண்டியவை

அரைக்க:
மி.வத்தல் பத்து அல்லது பதினைந்து
கொத்துமல்லி விதை 100 கிராம்
கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஒரு டீ ஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்
அரிசி ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் ஒரு மூடி

ஒரு சிலர் எள்ளும், கடுகும் அரைக்கும்பொருட்களோடு சேர்ப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவரவர் விருப்பம். தாளகம் என்றால் பாதிமூடி அரைக்கையில் சேர்த்தாலும் தாளிக்கையில் பல்,பல்லாகக்கீறியும் போடுவதுண்டு. மேலே சொன்ன பொருட்களை ஒவ்வொன்றாகச் சமையல் எண்ணெயில் வறுக்கவும். வறுத்த பொருட்களை ஆறவிட்டு மிக்சியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும்.

தாளிக்க: தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, மி.வத்தல்.கருகப்பிலை, கொத்துமல்லி.

காய்களைக்கழுவி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். புளி கரைத்த நீரைக் கொதிக்க வைத்து வேக விட்ட காய்களை சேர்க்கவும். புளிக்கரைசலுக்குத் தேவையான உப்பையும் போடவும். நன்கு கொதிக்கையில் வெந்த பருப்பைச் சேர்த்துக்கொண்டு, ஒரு கொதி விட்டதும், அரைத்து வைத்த பொடியைப் போடவும். இன்னொரு பக்கம் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெயைக் காய வைத்துக்கொண்டு அதில் கடுகு, மி.வத்தல் 2 கருகப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும். பச்சைக்கொத்துமல்லியைத் தூவவும். தாளகம் எனில் சிலர் துவரம்பருப்போ, பாசிப்பருப்போ சேர்ப்பதில்லை. இது அவரவர் வீட்டு வழக்கப்படி செய்ய வேண்டும்.


11 comments:

 1. நல்ல விவரங்கள். எல்லாம் சேர்த்து தயாரித்தால் போயிற்று.... :)

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. எங்க வீட்டுல தனி கூட்டு தான்!
  இப்பதான் உங்க லிஸ்ட் பார்த்துட்டு எங்களவரிடம் காய்கறி எழுதிக் கொடுத்தேன்.

  சிலசமயம் சேனை சேர்த்தால் தொண்டையில் அரிக்கும். அதனால் இப்போது சேனையை தவிர்த்து விடுகிறேன்.

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. ஹிஹி... கிட்டத்தட்ட இதுக்குத்தான் சாப்பிடலாம் வாங்க ல பதில் சொல்லியிருக்கேன்!

  ReplyDelete
 4. 5-7 காய்கறிகள் சேர்த்து எங்கள் ஊரிலும் கறி சமைப்போம் பொங்கலன்று.கூட்டுக்கறி என்று சொல்வோம்.உங்கள் பதிவு ஞாபகம் தருகிறது.இனிய பொங்கல் வாழ்த்துகள் !

  ReplyDelete
 5. ரெசிபி பிரமாதம். சரியான நேரத்துல கொடுத்து இருக்கீங்க. ரொம்ப நன்றி!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாங்க வெங்கட், பொங்கல் சுயம்பாகமா?லீவு உண்டா? :)))))

  ReplyDelete
 7. வாங்க ரஞ்சனி, தனிக்கூட்டு பத்தி உங்களுக்கும் தெரிஞ்சிருப்பது ஆச்சரியமே. எனக்குக் கல்யாணம் ஆகிற வரைக்கும் இப்படி ஒரு பெயரே தெரியாது, அதுக்கப்புறமும் பலர் கேட்டு ஆச்சரியப் பட்டிருக்காங்க. :))))

  பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வாங்க ஸ்ரீராம், பொங்கலும், குழம்பும் சாப்பிட்டாச்சா? வாழ்த்துக்கு நன்றி. :))))

  ReplyDelete
 9. வாங்க ஹேமா, முதல் வரவு?? வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. வாங்க மீனாக்ஷி, உங்களுக்கும் தனிக்கூட்டு பத்தித் தெரியுமா? சந்தோஷம்.உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. தனிக் கூட்டு வித்தியாசமாக இருக்கின்றது.

  ReplyDelete