எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, January 14, 2014

என் கேள்விக்கு என்ன பதில்?? தொடர்ச்சி -- (அடுத்த ஐந்து கேள்விகள்)

6. இப்போதெல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே இசை கேட்டுப் பழகுகின்றனர்.  அதிலும் பள்ளிப் பிள்ளைகள் கூட வீட்டுப்பாடம் செய்கையிலேயோ, படிக்கையிலேயோ இசையை, அது சினிமா இசையாய் இருந்தாலும் கேட்டுக் கொண்டே செய்கின்றனர்.  உங்கள் காலத்தில், அல்லது உங்களுக்கு இசை கேட்டுக் கொண்டே பாடம் படிக்கும் வழக்கம் உண்டா?

7. நாடகங்கள், மேடை நாடகங்கள், தெருக்கூத்து போன்றவற்றில் ஆர்வம் உண்டா? அவற்றை ரசித்திருக்கிறீர்களா?  திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் உண்டா?  நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த திரைப்படம் எது?  விரும்பிய/விரும்பும் நடிகர் யார்?  பார்க்க முடியாமல் ஆசைப்பட்ட படம் எது?

8. குழந்தைப் பருவத்தில் உங்களைக் கவர்ந்த இசைக்கும், பதின்ம வயதில் கவர்ந்த இசைக்கும், இப்போது உங்களைக் கவரும் இசைக்கும் வேறுபாடுகள் உண்டா?  இருந்தால் அவை என்ன?  அவற்றால் உங்கள் மனம் முதிர்ச்சி அடைந்திருப்பதாய் நினைக்கிறீர்களா?


9. பதின்ம வயதில் உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு எது?  விளையாட்டு எது? பாரம்பரிய இசை கற்றுக்கொள்ளப் பிடித்ததா?  வாத்திய இசைக்கருவிகள் இசைக்கத் தெரியுமா? அல்லது இவை எதுவும் இல்லாமல் புத்தகப் புழுவாகவே இருப்பது பிடித்திருந்ததா?  கதைகள், கட்டுரைகள் கற்பனையில் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டா?  அவை இப்போதும் தொடர்கிறதா?


10. உங்கள் பதின்ம வயதில் நாட்டில் ஏதேனும் முக்கியமான யுத்தங்கள் ஏற்பட்டனவா?  அப்படி எனில் அது உங்களைத் தனிப்பட்ட முறையில் எவ்விதம் பாதித்தது?  நீங்கள் குடியிருந்த நகரத்தையும், உங்கள் நாட்டையும் எவ்விதத்தில் பாதித்தது?

12 comments:

 1. 6. இதைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், எனது அப்பா அருமையாக பாடுவார் கணீர் குரலில்... அதனால் பழைய பாடல்களின் வரிகள் எல்லாம் எனக்கு அத்துபடி... எனது பதிவுகளை வாசித்தாலே தெரிந்திருக்கும்...!

  7. பள்ளி மேடை நாடகம் ஒரே ஒரு முறை நடித்ததுண்டு... (TTR வேடம்...!) வாரத்திற்கு இருமுறை வீட்டில் அனைவரும் பக்கத்து கொட்டகையில் தவறாமல் அனைத்து பழைய படங்களையும் பார்த்து விடுவோம்... விரும்பிப் பார்த்த திரைப்படம் சொல்வது கடினம்... நடிகர் - உங்களுக்கு பிடிக்காத சிவாஜி (?) முதற்கொண்டு அனைவரையும் பிடிக்கும்...! அனைவரது நடிப்பை மட்டும் ரசிப்பேன் என்பது தான் உண்மை...

  8. அன்றைய இன்றைய கவரும் இசைக்கு வேறுபாடுகள் கண்டிப்பாக இல்லை... செந்தமிழ் தேன் மொழியாளையும் ரசிப்பேன்... ஊதா கலர் ரிப்பனையும் ரசிப்பேன்...

  9. பிடித்த பொழுதுபோக்கு - பாடல்கள் கேட்பது, விளையாட்டு - கபடி, சிலம்பு, வாத்திய இசைக்கருவிகள் இசைக்கத் தெரியாது - ரசிக்க மட்டுமே...! புத்தகப் புழுவாக என்றுமே இருந்ததில்லை...கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் சரி... கவிதை ரசிக்க மட்டுமே...!

  10. நாட்டில் நடந்த யுத்தங்கள் ஞாபகம் இல்லை... உள்ளே நடந்த யுத்தங்களால் தான் வலைப்பக்கம் வந்ததே...! அது ஒரு பெரிய கதை - ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு சொந்த அனுபவம் உண்டு... அதை வேறு விதமாக பதிவு செய்கிறேன் - அவ்வளவே... ஹிஹி...

  ReplyDelete
 2. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வாங்க டிடி, பொறுப்பா, பொறுமையா பதில் அளித்தமைக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. தங்களின் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மூழுநீள நகைச்சுவைப்பதிவாகவே தரணும் போல பேரெழுச்சி மனதில் ஏற்படுகிறது.

  ஆனால் என் கண் ஒத்துழைக்க மறுக்கிறது.

  அதனால் இப்போது வேண்டாம்.

  அன்புடன் VGK

  ReplyDelete

 5. 6) இசை கேட்கும் பழக்கமும் இருந்தது, படிக்கும் பழக்கமும் இருந்தது - தனித் தனியாக! 7 மணி விவித்பாரதி ஜெய்மாலாவோ, உங்கள் விருப்பமோ, சாயா கீத் அல்லது ஆப் கே பர்மாயிஷ் அல்லது பினாகா கீத்மாலா... இவை கேட்கப்படும்போது புத்தகம் கீழே வைக்கப்பட்டு விடும்!

  7) ஒரே கேள்வியில் எத்தனை துணைக் கேள்விகள்? சில சமயங்களில் ரேடியோவில் ஞாயிறு ஒரு மணி நேர நாடகங்கள் கேட்டதுண்டு. தவிர்க்க முடியாமல் தனிக்குடித்தனம், மெரீனா போன்ற நாடகங்களும் சென்றதுண்டு. ஹார்லிக்ஸ் சுசித்ராவின் குடும்பம் கேட்டதுண்டு... விரும்பி அல்ல... தொடர்ச்சியாக அல்ல. நான் பார்த்த திரைப்படமெல்லாம் விரும்பித்தான் பார்த்தேன்!!! :)))) திரையில் ஆடும் உருவங்களே அப்போ கவர்ச்சிதானே... நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தை மிகப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஏனென்று சொல்லத் தெரியாது! விரும்பிய நடிகர் முதலிடத்தில் சிவாஜி, இரண்டாமிடத்தில் எம் ஜி ஆர்! தற்சமயம் யாருமில்லை!

  8) எப்போதுமே மெலடிதான் பிடிக்கும். இசை கேட்பதில் முதிர்ச்சி என்றெல்லாம் சிக்கலாக யோசிப்பதில்லை. எப்போதுமே குத்துப் பாடல்கள், இரைச்சல் பாடல்கள் பிடிக்காது. அவ்வளவுதான்!

  9) பதின்ம வயதில் பிடித்த பொழுதுபோக்கு வெட்டிப் பொழுது போக்குவதுதான். பெரும்பாலும் லைப்ரேரியில் இருப்பேன்-பல சமயம் லைப்ரேரியனாகவே! கிடார் வாசிக்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. கற்றுக் கொண்டதில்லை. புத்தகங்கள் நிறையப் படிப்பேன். படிக்கிறேன். கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியிருக்கிறேன்!

  10) பெரிய யுத்தம் எங்கள் தெரு நண்பர்கள் குழுவுக்கும், ஹவுசிங் யூனிட்டின் அந்தக் கோடித் தெருக் குழுவுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. பாதித்தது என்றால் சில நண்பர்களையும் கொஞ்சம் ரத்தத்தையும் இழந்ததுதான்!!! :))

  அப்பாதுரை... சென்னையில் மழை நிச்சயம் பெய்யப் போவதில்லை. என்ன செய்யலாம்?

  ReplyDelete
 6. பாடல் எப்போதும் கேட்க பிடிக்கும். அப்பா, அம்மா எல்லாம் இசைபிரியர்கள் அதனல் காலத்துக்கு ஏற்ற மாதிரி வீட்டில் கிராமபோன், டேபரிக்காடர் எல்லாம் உண்டு, ரேடியோவில் இசை கச்சேரி வைக்கும் காலங்களில் அப்பாவின் சொத்து ரேடியோ.
  விவித்பாரதி, சிலோன் வானொலி கேட்பது பிடிக்கும்.

  விகடனில் வந்த ”ஆசை இருக்கு தாசில் பண்ண ” என்ற் விகடனில் வந்த நாடகத்தை பள்ளியில் நானும் என் வகுப்பு தோழி சியாமளாவும் நடித்தோம், அதில் உடை எனக்கு மடிசார், அம்மாவின் பட்டுப்புடவை நகைகள் அணிந்து நடித்தேன், உடை நன்றாக பொருத்தமாய் இருந்தது ஆனால் வசனம் அது தான் சொதப்பல், டீச்சர் பின்புறம் இருந்து எடுத்து எடுத்துக் கொடுப்பார். எப்போதும் நடனம் வரும் வசனம் பேசுவது கொஞ்சம் பயம், அம்மா அழைத்து போகும் படங்கள் பார்ப்பேன். நன்றாக நடித்து இருந்தால் வீட்டில் என்ன்மாய் நடித்து இருந்தார்கள் என்று விவாதிக்கப்படும்.
  நான் சிறுமியாக இருந்த சமயம் ஜெய்சங்கர், ஜெயலலிதா படங்கள் அதிகம் பார்த்து இருக்கிறேன்.

  எப்போதும் இனிமையான பாடல்கள் கேட்க பிடிக்கும். குழந்தைகள் விருப்பத்திற்கு ஏற்ப சில புது பாடல்கள் கேட்டு ரசிப்பேன்.

  இளமை பருவம் முழுவதும் மகிழ்ச்சியாக விளையாட்டுதான் கல்லாமண்ணா, தாயம், கண்ணாமூச்சி, சமையல் செய்து சாப்பிடுவது, கோவில் கட்டி விளையாடுவது, டாகடர், டீச்சர் விளையாட்டு, திருடன், போலீஸ் விளையாட்டு, கோ கோ விளையாட்டு, குலை குலையாய் மந்திரிக்கா விளையாட்டு , பாண்டிவிளையாட்டு. கொஞ்சம் பெரியவள் ஆனதும், சீட்டு, ரிங்பால், டிரேட், கேரம்போர்ட் கதை புத்தகம் படித்தல் , இடை இடையே அம்மாவின் சொல்படி, கோலம், பாட்டு, கைதையல் எம்பிராய்டரி, கொஞ்சம் பாடம் படித்தல் என்று பொழுது நன்றாக போனது.
  பள்ளி பருவத்தில் 71லில் பங்களா தேஷ் போர் தான் நினைவுக்கு இருக்கிறது.

  ReplyDelete
 7. 6. பாட்டு கேட்டுகிட்டே படிச்சா உதை விழும்

  7. கல்லூரியில் நாடகம் போட்டதுண்டு. அப்புறம் விருப்பமில்லை. என்றும் எப்பொழுதும் ரஜினிதான்.

  8. அப்ப பாடல் வரிகளைக் கேட்க முடிந்தது. இப்ப இசை மட்டுமே கேட்கிறது

  9. அந்த சமயத்தில் ஊர் சுற்றல் புத்தகம் (அது எதுவா இருந்தாலும் சரி) படிக்கறது. அப்புறம் கிரிக்கெட் விளையாடறது. மிருதங்கம் கத்துக்க ஆசை.ஆனால் வாய்ப்புக் கிடைக்கலை. கவிதை கல்லூரியில் துவங்கியது. இப்பவும் தொடர்கிறது..

  10. கல்லூரி சமயத்தில்தான் கார்கில் நடந்தது..

  ReplyDelete
 8. 6. எப்போதுமே சினிமா பாட்டுக் கேட்டபடி படிக்கப் பிடிக்கும். ஆனால் ரேடியோவை மட்டுமே நம்பியிருந்தபடியால் படிக்கிற நேரமும் விவித்பாரதியும் ஒத்துவந்த நினைவில்லை. கல்லூரி காலத்தில் டேப் ஒலிக்கப் படித்ததுண்டு.

  7. நாடகத்தில் நிறைய ஆர்வம் உண்டு. சம்ஸ்க்ருத நாடங்கள் நடித்த அனுபவமும் (ஆளே வரமாட்டார்கள், ஒரு நாடகம் நடித்தால் ஐந்து ரூபாயும், பூரி கிழங்கும் கிடைக்கும். சுகமோ சுகம்). ஏழாவது எட்டாவது படிக்கும் பொழுது மனோகர் நாடகங்கள் ஒன்றிரண்டு பார்த்து பிரமித்திருக்கிறேன். விரும்பிப் பார்க்கும் திரைப்படம் தமிழில் ஆயிரத்தில் ஒருவன். ஆங்கிலத்தில் groundhog day. கணக்கே இல்லாமல் பார்த்திருக்கிறேன். விரும்பிய நடிகர் எம்ஜிஆர். விரும்பும் நடிகர் என்று யாருமில்லை. பார்க்க ஆசைப்பட்டு முடியாமல் போன படம் பலே பாண்டியா. இன்று வரை பார்க்கவில்லை.

  8. திரையிசை என் சிறுவயதிலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது. பின்னாளில் ஜேஸ், மேற்கத்தியப் பாரம்பரிய சங்கீதம். இசையினால் முதிர்ச்சியடையாத மனம் மனமேயில்லை என்பது என் அபிப்பிராயம். உலகின் அத்தனை சோகங்களுக்கும் சிக்கல்களுக்கும் நல்ல இசை ஒரு நிவாரண சாதனம்.

  9. ஹாக்கி, க்ரிகெட். இசையில் விருப்பம் இருந்தாலும் கற்றுக்கொள்ள வசதியில்லை. இசைக்கருவி வாசிக்கக் கற்றுக் கொண்டது பின்னாளில். கதை கட்டுரைகள்.. நியாயமான கேள்வி. தொடர்கிறது, எப்போது நிற்கும் என்பது தான் தெரியவில்லை.

  10. பதின்மத்தில் எந்தப் போரும் வந்ததாக நினைவில்லை.


  இந்த செட் கேள்விகளை எப்படி தவறவிட்டேன். சத்தம் போடாமல் நைசாக ஒரு பதிவு போட்டுவிட்டீர்களா?

  ReplyDelete
 9. பலமுறை பார்த்த இன்னொரு படம் நினைத்தாலே இனிக்கும். பரங்கிமலை ஜோதி, அண்ணா சாலை அலங்கார் தியேடர்களில். ஸ்ரீராம் எந்தத் தியேடரில் பார்த்தாரோ தெரியவில்லை.

  ReplyDelete
 10. கோமதி அரசு அவர்களின் பதில்களை ரசித்தேன்.

  ReplyDelete
 11. தெருக்கூத்து நேரில் பார்த்த நினைவேயில்லை.

  ReplyDelete
 12. இப்போதெல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே இசை கேட்டுப் பழகுகின்றனர்.  அதிலும் பள்ளிப் பிள்ளைகள் கூட வீட்டுப்பாடம் செய்கையிலேயோ, படிக்கையிலேயோ இசையை, அது சினிமா இசையாய் இருந்தாலும் கேட்டுக் கொண்டே செய்கின்றனர்.  உங்கள் காலத்தில், அல்லது உங்களுக்கு இசை கேட்டுக் கொண்டே பாடம் படிக்கும் வழக்கம் உண்டா?

  ~ இல்லை. நான் ஒரு மாதுரியான பையன், ரிஷ்யசிருங்கர் மாதிரி!

  நாடகங்கள், மேடை நாடகங்கள், தெருக்கூத்து போன்றவற்றில் ஆர்வம் உண்டா? அவற்றை ரசித்திருக்கிறீர்களா?  திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் உண்டா?  நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த திரைப்படம் எது?  விரும்பிய/விரும்பும் நடிகர் யார்?  பார்க்க முடியாமல் ஆசைப்பட்ட படம் எது?

  ~ பள்ளி நாடகத்தில் வசிஷ்டர். தாடி கழண்டு விட்டது. கல்லூரி பருவத்தில் ஒய்.ஜி.பட்டு டேரக்ஷநில் ரசிக ரஞ்சினி சபாவில் சபாஷ் வாங்கினேன்.

  குழந்தைப் பருவத்தில் உங்களைக் கவர்ந்த இசைக்கும், பதின்ம வயதில் கவர்ந்த இசைக்கும், இப்போது உங்களைக் கவரும் இசைக்கும் வேறுபாடுகள் உண்டா?  இருந்தால் அவை என்ன?  அவற்றால் உங்கள் மனம் முதிர்ச்சி அடைந்திருப்பதாய் நினைக்கிறீர்களா?

  ~ இருக்கே. அதற்கு மேல் சொல்லத்த் தெரியவில்லையே.


  பதின்ம வயதில் உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு எது?  விளையாட்டு எது? பாரம்பரிய இசை கற்றுக்கொள்ளப் பிடித்ததா?  வாத்திய இசைக்கருவிகள் இசைக்கத் தெரியுமா? அல்லது இவை எதுவும் இல்லாமல் புத்தகப் புழுவாகவே இருப்பது பிடித்திருந்ததா?  கதைகள், கட்டுரைகள் கற்பனையில் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டா?  அவை இப்போதும் தொடர்கிறதா?

  ~ சைக்கிளில் சுற்றுவது, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது, அரட்டை, இசை அறியேன். எழுத வராது, அப்பவும், இப்பவும்.


  10. உங்கள் பதின்ம வயதில் நாட்டில் ஏதேனும் முக்கியமான யுத்தங்கள் ஏற்பட்டனவா?  அப்படி எனில் அது உங்களைத் தனிப்பட்ட முறையில் எவ்விதம் பாதித்தது?  நீங்கள் குடியிருந்த நகரத்தையும், உங்கள் நாட்டையும் எவ்விதத்தில் பாதித்தது?

  ~ இரண்டாம் உலக யுத்தம், இன்னும் சின்ன வயதில் பேப்பரும் கிடைக்காது; அரிசியும் கிடைக்காது. அப்பா ஆபீஸுக்கு குண்டூசிக்கு பதிலாக கருவேல முள். என் உபயம். பழுப்பு கடுதாசி ஆபீசில். குப்பைத்தொட்டையில் போட வந்த கடுதாசிகளின் பின்பக்கம் எனக்கு ரஃப் நோட்டு. அம்மா கம்பும், கேழ்வரகும் சமைப்பாள். தினை பாயசம் பிரமாதம். நான் இருந்தது உசிலம்பட்டி. பாதிக்கப்படவில்லை.

  ReplyDelete