எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 03, 2017

விவசாயிகள் போராட்டம்! ஒரு பார்வை! மத்திய அரசின் வஞ்சனை! :)

தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசைப் பற்றி இப்போது பார்ப்போம்!

உதாரணமாகப் பேரிடர் காலங்களில் நிதி வழங்க மத்திய அரசின் ஒதுக்கீடு 47,029 கோடியும் மாநில அரசுகளின்  ஒதுக்கீடு 25% உம் இருக்கும்.  இதில் தமிழ்நாட்டுக்கென மத்திய அரசின் ஒதுக்கீடு3,751 கோடி ஐந்தாண்டுகளுக்கு.  இதில் மாநில அரசின் பங்கீடு 937 கோடி. இதில் இந்த நிதியாண்டில் மத்திய அரசு 679 கோடியும், தமிழக அரசு 169 கோடியும் ஒதுக்கியுள்ளது.  இந்தப் பேரிடர் நிதி பேரிடர்க்காலங்களுக்கு அவசரச் செலவுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டியது ஆகும்.  ஆனாலும் தமிழக வறட்சியைப் பேரிடராகக் கருதி மாநில அரசு மத்திய அரசை நிதி உதவி கேட்டது. அதில் 1900 கோடி ரூபாயை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.  இதை இந்த ஷரத்தில் கேட்கக் கூடாது என்றாலும் மத்திய அரசு நிதியைக் கொடுத்துத் தமிழகத்தை மேலும் வஞ்சித்துள்ளது.

அது போகப் பயிர் இழப்பிற்காகவும் நிதி உதவியை மாநில அரசு கேட்கிறது. இதை இந்த ஷரத்தில் கேட்கக் கூடாது என்பது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு ஷரத்துச் சொல்வதாக விஷயம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.  கிட்டத்தட்ட 50 பேருக்கும் மேல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சி இது தெரிந்தும் மத்திய அரசைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறது.  இதே போலப் பயிர்க்காப்பீடுத் திட்டத்தை விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்லாமலே மாநில அரசு மத்திய அரசைக் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் இருக்கையில் வெறும் 13,000 நபர்கள் மட்டுமே இந்தப் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினால் பலன் அடைந்துள்ளனர்.

பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு அளிக்க வேண்டிய நிதி உதவியை மத்திய அரசு கொடுத்து விட்டது. ஆனாலும் பயிர் இழப்புக்காக நிதியைக் கேட்டுப் போராடுவதாக மாநில அரசு கூறிக் கொண்டிருக்கிறது.  நிச்சயமாக இந்த நிதி உதவி மாநில அரசுக்குக் கிடைக்காது என்பது மாநிலத்தை ஆள்பவர்களுக்குப் புரியாமல் இருக்காது. என்றாலும் மத்திய அரசின் மேல் பழியைச் சுமத்துவது எளிது என்பதால் இப்படிச் செய்கிறது மாநில அரசு.

முதலில் இந்தப் பயிர்க்காப்பீடுத் திட்டம் எப்படிச் செயல்படும் என்று பார்க்கலாம்.  ஒரு விவசாயி ஒரு போகத்தில் எவ்வளவு செலவு செய்து பயிர் செய்கிறாரோ அந்தத் தொகையில் 5% பிரிமியம் கட்ட வேண்டும்.  அதிலும் 3..5% மத்திய, மாநில அரசு கட்டிவிடும். மீதம் இருக்கும் 1.5% விவசாயி கட்டினால் போதும்.  இடையில் பயிருக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது விளைச்சல் இல்லை என்றாலோ அந்த விவசாயிக்குப் போட்ட பணமும் விளைச்சல் இருந்தால் எவ்வளவு லாபம் வருமோ அதுவும் சேர்ந்து கிடைத்துவிடும்.  இது தான் மத்திய அரசின் முக்கியமான சூழ்ச்சி ஆகும்!  இந்தச் சூழ்ச்சித் திட்டத்தில் தான் விவசாயிகளைச் சேர்த்தால் அவங்களுக்கு லாபம் கிட்டி விடுமோ என்று மாநில அரசு இந்தத் திட்டத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவே இல்லை.

சொட்டு நீர்ப்பாசன வசதிக்காக 20 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்ய ஐந்தாண்டுக்கு 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி விவசாயிகள் வயிற்றில் அடித்திருக்கிறது மத்திய அரசு! இது மட்டுமா? நாபார்டு வங்கி மூலம் வட்டியில்லாக் கடன்கள் வழங்க ஏற்பாடு செய்தும் விவசாய வளர்ச்சி நிதியை 36,000 கோடியாக உயர்த்தியும்,  மண்ணின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்ய வசதியாக மண் பரிசோதனைத் திட்டத்தை ஏற்படுத்தியும், விவசாயச் சந்தைகளை ஒருங்கிணைத்தும், இ-சந்தை மூலம் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்து விவசாயத்தை அடியோடு ஒழிக்கப் பார்க்கிறது மத்திய அரசு!

வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிவாரணம், கடன் வசூலிப்பைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தல் போன்றவற்றில் எல்லாம் மற்ற மாநில அரசுகள் சேர்ந்து கொண்டு அவர்கள் மாநில விவசாயிகளுக்கு துரோகம் செய்திருக்கின்றன. நல்லவேளையாக நம் மாநில அரசு இந்த மோசமானப் பச்சைத் துரோகிகளின் பட்டியலில் சேராமல் கொடுத்த நிதியையும் பயன்படுத்தாமல், விவசாயிகளுக்கும் இந்த விஷயங்கள் போய்ச் சேராமல் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியும் அதற்கான சம்பளத்தை உயர்த்தியும் ஜவஹர் ரோஜ்கர் யோஜனா மூலம் மத்திய அரசு கிராம மக்களை வஞ்சித்து வருகிறது. இதையும் தாங்கள் என்னமோ தங்கள் கையிலிருந்து கொடுக்கிறாப்போல் இது மத்திய அரசின் நிதி உதவி என்பதே வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்கிறது மாநில அரசு. இதே போல் தான் 108 ஆம்புலன்ஸ் திட்டமும். இது ஒரு மத்திய அரசின் திட்டம். எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசின் திட்டம் என்ற பெயரிலேயே ஆம்புலன்ஸுகள் ஓடுகையில் இங்கே மட்டும் அப்படி இல்லை. மத்திய அரசின் பெயரே வெளியே தெரியாமல் கவனமாக இருக்கிறது மாநில அரசு.

அதோடு இல்லாமல் இத்தனை வருடங்களாக நம் மாநிலத்தில் தண்ணீர் வெள்ளமாக ஓடி நல்ல விவசாயம் செய்து லட்சக்கணக்கான ஏக்கரில் அறுவடைகள் நடந்து முடிந்திருக்கின்றன. குடிநீர்ப் பஞ்சம் என்பதே இல்லை. இப்போது தான் மோதி அரசு வந்ததும் எல்லாப் பிரச்னைகளும் தலை தூக்கி இருக்கின்றன. அதுவும் மோதியின் நயவஞ்சகமான சூழ்ச்சித் திறம் மிக்க போக்கினால்! தமிழகத்தை வஞ்சிப்பதால்!  இங்கே வருடா வருடம் ஏரிகள், குளங்கள், ஆறுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. மோதி அரசு வந்ததும் அவை எல்லாம் நிதி உதவி இல்லாமல் நின்று விட்டன.

மாநில அரசு தான் என்ன செய்யும்?  ஆந்திரா அரசு முட்டாள்தனமாக நதிநீர் இணைப்புக்கான திட்டம் அறிவிக்கப்பட்டதுமே அதில் சேர்ந்து இரண்டே வருடங்களில் பணிகளை முடித்து விட்டது. தமிழக அரசு அப்படி எல்லாம் இருக்க முடியுமா என்ன? எத்தனை இலவசங்கள் கொடுக்க வேண்டி இருக்கின்றன? அதற்கெல்லாம் நிதி ஒதுக்காமல் இம்மாதிரி முட்டாள்தனமான திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கிவிட்டு என்ன செய்யறதாம்? இவை எல்லாம் நீண்ட காலத் திட்டங்கள் ஆச்சே! அப்புறம் விவசாயிகள் புலம்பறதுக்கு விஷயமே இருக்காது! விவசாயிகள் எப்போதும் புலம்பணும். அரசு இலவச நிதி கொடுத்துக் கொண்டே இருக்கணும்! அதான் முக்கியம்! நீண்டகாலத் திட்டங்கள் போட்டு நிரந்தரத் தீர்வெல்லாம் தேவையே இல்லாத விஷயம்!   விலையில்லா ஆடுமாடுகள், லேப்டாப், மிக்சி, கிரைண்டர் போன்றவை கொடுக்க நிதிக்கு எங்கே போவது?  நதி நீர் இணைப்புக்குப் போய் இப்போது முக்கியத்துவம் கொடுக்க முடியுமா?  அல்லது ஸ்மார்ட் சிடிகளுக்கோ, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்குவது குறித்தோ முடிவு செய்ய நேரம் தான் இருக்கா? அதெல்லாம் வெட்கம் கெட்ட மற்ற மாநிலங்கள் மத்திய அரசோடு இணைந்து செய்ய வேண்டிய வேலைகள். நாம் யார்? தமிழர்கள்! தனித்தன்மை வாய்ந்தவர்கள்!

இதை வெளியிடலாமா வேண்டாமா என யோசனை! ஆனால் தில்லியில் விவசாயிகள் கஷ்டப்படுவதாகவும் மத்திய அரசு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று சொல்லுவதாலும் இதைச் சொல்லும்படி ஆகி விட்டது.  விவசாயிகள் கேட்பது நதிநீர் இணைப்போ, அல்லது சொட்டு நீர்ப்பாசன நிதியோ அல்லது நீர் மேலாண்மைத் திட்டங்களோ அல்ல. அவை எல்லாம் நீண்ட காலத் திட்டங்கள்! அவங்க கேட்பது உடனடி வறட்சி நிவாரண நிதி! கடன் தள்ளுபடி!  பணம் கொடுத்தால் போதும்! அவங்க துன்பம் தீரும்! அவ்வளவே. மறுபடி அடுத்த வருஷம் பார்த்துக்கொண்டால் போச்சு!  இதற்கும் தமிழ்நாடு தழுவிய போராட்டம் செய்வாங்க! :(  இப்போ உ.பி. கேட்டதுக்குக் கூடத் தான் மத்திய அரசு ஒத்துக்கொள்ளவில்லை.

நீர் மேலாண்மைக்காகவும் போராடுவதாக இன்றைய தொலைக்காட்சிச் செய்தி கூறுகிறது. ஆனால் நீர் மேலாண்மைக்காக ஏற்கெனவே திட்டங்கள் போடப்பட்டு நிதியும் ஒதுக்கிய பிறகு அதை மேலெடுத்துச் செல்வது யார் பொறுப்பு? அதுக்கும் மத்திய அரசு தான் வரணுமா என்ன? அப்போ மத்திய அரசின் ஆட்சியே இங்கே நடத்தச் சொல்லலாமே!  கீழ்க்கண்ட சுட்டியில் விபரங்கள் கிடைக்கும். படிக்கலாம்.


தேசிய நீர் மேலாண்மைத் திட்டம்

20 comments:

 1. ஏகப்பட்ட விவரம் சேகரித்துக் கொடுத்திருக்கிறீர்கள். மாநில அரசு - மத்திய அரசு அரசியல்கள் ஒரு பக்கம். நதிநீர் இணைப்புப் பற்றி ஏன் அப்புறம் பெரும் தலைகள் யாருமே பேசுவதில்லை? சந்திரபாபு நாயுடு வெற்றிகரமாக அவர் மாநிலத்தில் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். நதிநீர் இணைப்பில் நெகட்டிவ் பார்ட்டும் உண்டு என்றும் படித்த நினைவு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அங்கு சந்திரபாபு நாயுடு நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் அங்கு அதிருப்தி கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்த அமராவதி விவசயாத்தில் மிக மிக வளர்ந்த இடம்...கொழிக்கும் இடங்கள் எல்லாம் இப்போது தலைநகரம் என்ற வளர்ச்சிக்குக் கையகப்படுத்தப்பட்டது அதிருப்தி மக்களிடையே இருப்பதாகத் தெரிகிறது. அங்கு விவசாயம் நன்றாகவே இருப்பதாகத் தெரிகிறது. மகனின் கூடப்படித்த நண்பன் அங்கு அரசு வேலையில் இருக்கிறார். மாடுகள், கிராமம் என்று...நானும் முன்பு அடிக்கடி சென்றிருக்கிறேன். காய் எல்லாம் மிக சீப். ஆரஞ்சு, கரும்பு வயல் என்று அதுவும் ஆரஞ்சு எல்லாம் மிகவும் சுவையாக இருந்தது. நீர்வளமும் இருக்கிறது ஆந்திரப் பகுதியில். தெலுங்கானாதான் வறட்சி...அதுதான் பிரிந்துவிட்டதே..

   கீதா

   Delete
  2. வாங்க ஶ்ரீராம், இம்மாதிரி விஷயங்களை எழுதும் முன்னர் தகவல்கள் சேகரிப்புத் தான் முக்கியம் இல்லையா? சந்திரபாபு நாயுடுவின் நதிநீர் இணைப்பில் நெகட்டிவ் இல்லை. அமராவதியைத் தலைநகராக்குவதில் செழிப்பான விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதில் பலருக்கும் வருத்தம் என்று கேள்வி! :( அதைத் தான் நம் சகோதரியும் சொல்லி இருக்கிறார். :(

   Delete
  3. @தில்லையகத்து/துளசிதரன்/கீதா, நாங்க சிகந்திராபாதில் இருந்தபோதும் காய்கள், பால், அரிசி எல்லாமும் விலை மலிவாகவும் நல்ல தரமாகவும் கிடைத்தது! இப்போதெல்லாம் அப்படி இருக்காது! வறட்சியான தெலுங்கானாவோடு சேர்ந்து விட்டதே! :)

   Delete
 2. என்னமோ நடக்குது அதிகாரத்தை நாமதான் கொடுக்கிறோம் அதன் பிறகு ஊமையாகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. நமக்குத் தான் ஏமாளிப்பட்டம் எப்போவுமே தயார் நிலையில் உள்ளதே கில்லர்ஜி! :(

   Delete
 3. ரௌத்திரம் பழகு!!!

  வீராவேசமான பதிவு

  ReplyDelete
  Replies
  1. வாங்க நன்மனம்! என்ன வீராவேசமோ போங்க! :(

   Delete
 4. நீங்கள் எழுதியிருப்பது அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. பொதுவாக மக்கள் மனநிலை, 'சித்த மருந்து, பத்தியம்' ஒரு 10 மாத காலம் இருந்து, ஆரோக்கிய உடம்பைப் பெறலாமா, அல்லது அலோபதி மருந்து சாப்பிட்டு 3-4 நாளில் நிவாரணம் பெறலாமா என்ற கேள்வி வந்தால், அலோபதி மருந்து சாப்பிட்டுவிடுவோம் என்பதுதான் பதிலாக இருக்கும். எல்லோருக்கும் இலவசக் கல்வி, நிறைய பள்ளிகளைத் திறந்தது, மதிய உணவுத் திட்டம், இவற்றையெல்லாம் மக்களுக்காகச் செய்த காமராசரை, கண்மூடித்தனமாகத் தோற்கடித்தது விருது'நகர் மக்கள். இப்படி மக்கள் மனநிலை இருக்கும்போது, ஆட்சியாளர்கள், எந்த நீண்டகாலத் திட்டங்களையும் மனதில் கொள்வதே இல்லை. இந்தத் தேர்தலுக்கு 'இலவசம், காசு' என்று குறுகியகாலத் திட்டங்களையே போடுகின்றனர். எனக்கு, இந்தமாதிரி நீண்ட காலத் திட்டங்களைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு நம்ம ஆட்சியாளர்களுக்கு அனுபவமும் திறமையும் இருக்கா என்றே சந்தேகம்.

  மாநில அரசால் செய்யக்கூடிய, 'ஏரி, குள ஆக்கிரமிப்பு தவிர்த்தல்', 'தூர் வாருதல்', 'ஆறுகள், நீர் நிலைகள் மாசுபடுவதைத் தவிர்த்தல்' கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நிதி உதவி மற்றும் தன் பகுதியைத் தானே பார்த்துக்கொள்ளும் அளவு தன்னிறைவுக்கான தகுதியை வளர்த்தல் போன்றவற்றையே ஒன்றும் செய்யாமல், எப்போப் பார்த்தாலும் மத்திய அரசு காரணம் என்று அரசியல் செய்துகொண்டிருந்தால், மக்களுக்கு என்ன பிரயோசனம். உங்கள் ஆதங்கம் உண்மை.

  பக்கத்திலிருக்கும் பெங்களூரில், ஏரிகளைப் பாதுகாப்பதும், அவைகளைச் சுற்றி வேலி எழுப்புவதும், ஆக்கிரமிப்பை முடிந்த அளவு தடுப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. நம்மால இதைப் போல ஒன்றுமே செய்யமுடியவில்லையே?

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழன் நீண்டகாலத் திட்டங்களை மனதில் கொள்ளும் ஆட்சியாளர்கள் இருந்திருந்தால் எங்கேயோ போயிருப்போமே. அந்த வல்லமை எல்லாம் கிடையவே கிடையாது...

   நீங்கள் சொல்லியிருப்பது போல் நாம் பக்கத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா பார்த்து நீர் மேலாண்மைக்குக் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே உள்ளதுதான்...

   கீதா

   Delete
  2. பெங்களூரில் ஏரி, குளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமில்லை. ஒரு கிரவுண்ட் நிலத்தில் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்பு எழுப்ப முடியாது! இரண்டே இரண்டு குடியிருப்புகள் தான் ஒரு கிரவுண்ட் நிலத்தில் கட்டலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் முன்னர் தண்ணீர் வசதி, மின்சாரம், பாதாளச் சாக்கடை, சாலை வசதி போன்றவற்றை உறுதி செய்தால் தான் கார்ப்பொரேஷனின் அங்கீகாரம் கிடைக்கும்!

   Delete
  3. தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை என்பது சுத்தமாக மறந்து போன ஒன்று @தில்லையகத்து துளசிதரன்/கீதா! :(

   Delete
 5. இது முதலில் விளங்கவில்லை பிறகுதான் தெரிந்தது வஞ்சப் புகழ்ச்சி அணியில் ஒரு வகையோ

  ReplyDelete
  Replies
  1. வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்லை. ஆற்றாமை தாங்கவில்லை! :(

   Delete
 6. இவ்வளவு எழுதியும் நீங்கள் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பற்றி ஒன்றுமே எழுதவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்லியும் ஆணை இட்டும் நீதி மன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக உறுதி மொழி கொடுத்திட்டும் இது வரை அமைக்காதது ஏன் என்று உங்கள் பதிலை சொல்லுங்களேன்.

  பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் என்பது பயிர் செய்த நிலங்களுக்குத்தான் என்பது உங்களுக்கு தெரியும். தண்ணீர் இல்லாமல், மழையும் பெய்யாமல் பயிர் செய்யாமல் இன்சூரன்ஸ் துகை கிடைக்க ஏதாவது வழி உண்டோ?
  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. காவிரி மேலாண்மை வாரியத்துக்கான அதிகாரங்களே முதலில் வரையறுக்கப்படவில்லை. குறைந்த பட்ச அதிகாரத்தைக் கொண்டு செயல்படும் மேலாண்மை வாரியத்தின் முடிவுகளைக் கர்நாடக அரசு ஏற்குமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே மதிப்பதில்லை! ஆகவே மத்திய அரசு பாராளுமன்றக் குழு கூடித் தான் மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்களை வரையறுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. ஆனாலும் இந்தப் பிரச்னை ஒவ்வொரு வருஷத்தையும் போல் ஜூன் மாசம் ஆரம்பிச்சு செப்டெம்பர் வரை பேசப்பட்டுப் பின்னர் அக்டோபரில் மழை வந்ததும் வழக்கம் போல் மறக்கடிக்கப்படும். தண்ணீர் இல்லாமல், மழை இல்லாமல், பயிர் செய்யாமல் வறட்சி நிவாரண நிதி கிடைக்கும்! ஆடி காரில் பயணம் செய்யும் ஏழை விவசாயியான திரு அய்யாக்கண்ணு அதைத் தான் தில்லியில் தங்கிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

   Delete
  2. ஜேகே அண்ணா, தேசிய நதிநீர் ஆணையமே அமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. அப்படி எனில் அதில் காவிரி நதியும் சேர்ந்தது தான்! தனி ஆணையம் தேவையில்லை. ஆந்திராவைப் போல் உள்நாட்டு நதிகளை இணைக்காமலும், குஜராத்தைப் போல் தடுப்பணைகள் கட்டாமலும், ராஜஸ்தானைப் போல் மழைநீரைச் சேகரிக்காமலும், கர்நாடகத்தைப் போல் இருக்கும் நதிகளின் அணைகளைப்பராமரித்துப் பாதுகாக்காமலும், கேரளாவைப் போல் மணல் அள்ளுவதைத் தடுக்காமலும், மத்தியப் பிரதேசத்தைப் போல் மண் பரிசோதனை செய்து பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தாமலும், மஹாராஷ்டிராவைப் போல் வளர்ச்சிக்காப்பீட்டுத் திட்டங்களில் ஆர்வம் காட்டாமலும் இருக்கும் வரை, இலவசங்களை அள்ளித் தரும்வரை ஆறு, குளங்கள், ஏரிகள் தூர்வாராமல் இருக்கும்வரையிலும் தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்லாது! இதை ஒத்துக்கொள்ளவும் மனம் வேண்டும்! நம்மிடம் அதுவும் இல்லை!

   Delete
  3. ரயிலில் தண்ணீர் கொண்டு விநியோகம் செய்து கொண்டிருந்த மஹாராஷ்டிரா லதோரில் இப்போது தடுப்பணைகள் கட்டியதன் மூலம் தண்ணீர்ப் பிரச்னை ஓரளவுக் கட்டுப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். அப்படி ஆக்கபூர்வமான முயற்சிகளை நம் விவசாயிகள் செய்திருக்கின்றனரா?தஞ்சை ஜில்லா தவிர மற்ற மாவட்டங்களில் நஞ்சை நிலம் தனியாகவும் புஞ்சை நிலம் தனியாகவும் உண்டு. புஞ்சை நிலத்தில் புஞ்சைப் பயிர்கள் தான் உற்பத்தி செய்யப்படுகின்றனவா? நஞ்சை நிலத்தில் நஞ்சைப்பயிர்கள் தான் உற்பத்தி செய்கின்றனரா? தஞ்சாவூர், கும்பகோணம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தான் நெல் அறுவடை ஆனதும் வயலில் பயறு, உளுந்து தெளிப்பார்கள். அதுவும் வரப்புக்கரை ஓரமாகத் தான் இருக்கும். கரை உளுந்து மிகவும் ருசியாக இருக்கும் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் அப்படித் தான் செய்கிறார்களா?

   Delete
 7. சர்க்காஸ்டிக் பதிவு!!! நானும் விவசாயத்தில் கொஞ்சம் ஆர்வம் இருப்பதால் நீர்மேலாண்மை பற்றி பார்த்து தகவல்கள் எடுத்து வைத்திருக்கிறேன். எழுத மூட் இல்லாமல் அப்படியே பதிவுகள் பாதியில் கிடப்பில்...ஹிஹிஹீஹ்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கீதா! நானும் இன்னும் எடுத்து வைத்திருக்கிறேன். என்றாலும் எல்லாவற்றையும் சொல்லவில்லை! :)

   Delete