இந்த ஐந்து வருடங்களில் இன்று தான் காலை சுமார் ஒன்பது மணியிலிருந்து தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்திருக்கிறது. நடுவில் ஓர் அரைமணி நேரம் கன மழை! அதாவது இந்த ஊருக்கு கனமழை! :) சற்று நேரம் ஓய்வு கொடுத்திருந்த வானம் மறுபடி இப்போ ஆரம்பம். இது தொடரப் பிரார்த்திக்கிறேன். அதே சமயம் சென்னை மக்களுக்குத் தாங்கக் கூடிய அளவில் மழை பொழியட்டும்!
இன்னிக்கு ஒரு கிரஹப்பிரவேசத்துக்குப் போனோம். நல்ல அருமையான சாப்பாடு! சாம்பார் சாதமே பிடிக்காத எனக்குக் கூடப் பிடித்திருந்தது. ரசம் மிக அருமை! கேட்டுக் கேட்டு நிதானமாகப் பரிமாறினார்கள். அவசர கதியில் அடுத்தடுத்துப் பண்டங்களைப் போடுபவர்களையே பார்த்த கண்களுக்கு இவங்க நிதானமாக் கேட்டுக் கேட்டுப் போட்ட விதம் ரசிக்கும்படி இருந்தது. சாப்பிடும் வரை பொறுமையாகக் காத்திருந்து பரிமாறினார்கள். நமக்கெல்லாம் இப்படி அமைய மாட்டேங்கறாங்களேனு வருத்தமா இருந்தது. இதிலே இன்னொரு ஆச்சரியம் என்னன்னா தாம்பூலம் கொடுக்கும்போது ஆண்களுக்கும் துண்டு வைத்துக் கொடுத்திருந்தார்கள். பொதுவாகப் பெண்களுக்கு மட்டுமே எங்கேயும் தாம்பூலத்தோடு பரிசுப் பொருளோ அல்லது ரவிக்கைத் துணியோ வைத்துக் கொடுப்பார்கள். ஆண்களுக்குப் பெரும்பாலும் தேங்காய் மட்டும் கிடைக்கும். சில வீடுகளில் சாத்துக்குடி! இங்கே அதெல்லாம் இல்லாமல் நல்ல துண்டாக ஆண்களுக்கும், பெண்களுக்கு ரவிக்கைத் துணியும் தேங்காயோடு வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு நம்ம ஜிஎம்பி சார் நினைவில் வந்தார். அவர் தான் சொல்லிட்டே இருப்பார். எனக்கு யாரும் எதுவும் தருவதில்லை. என் மனைவிக்குத் தான் கொடுக்கிறாங்கனு சொல்லுவார். அவர் இங்கே வந்தப்போப் போய் வாங்கிட்டு வரணும்னு! ஆனால் அப்போதிருந்த உடல்நிலையில் வெளியே போகவே முடியலை! ரங்க்ஸ் வாங்கிட்டு வரேன்னு தான் சொன்னார் . குருக்ஷேத்திரத்தைத் தவிர்க்க வேண்டி வேணாம்னு சொல்லிட்டேன். :)
பள்ளிக் குழந்தைகளுக்குத் தேர்வு முறையைத் திரும்பக் கொண்டு வரணும். எதுவுமே எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல என்பதை அவங்களுக்குப் புரிய வைக்கணும்! பாடச் சுமையைக் குறைப்பது என்பது வேறு. இப்படி ஒரேயடியா எல்லோரும் தேர்வு அடைந்திருக்கிறார்கள் என்பது வேறு! இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கல்வியாளர்களுக்கே தெரியலையோ! முன்னெல்லாம் வீட்டுப்பாடம் செய்து வருவதற்கே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதோடு வகுப்பில் வேறே கேள்விகள் கேட்டு பதில் சொல்வதற்கு! திருத்தமான கையெழுத்துக்கு! இப்படி அநேகமான தேர்வு முறைகள் இருந்தன. இதைத் தவிர்த்தும் ப்ராக்டிகல்ஸ் என்னும் அறிவியலின் செய்முறைப் பயிற்சிக்கு எனத் தனியாக மதிப்பெண்கள் கொடுப்பார்கள். வருடம் முழுவதும் செய்திருக்கும் பயிற்சிகளின் அடிப்படையிலும் அவற்றில் நம்முடைய பங்களிப்பின் அடிப்படையிலும் அந்த மதிப்பெண்கள் அமையும்.
முழு ஆண்டுத் தேர்வின் போதும் இந்தப் பயிற்சிகளைச் செய்ய வைத்து மதிப்பெண்கள் கொடுப்பது உண்டு. நான் அறிவியல் பாடம் தேர்ந்தெடுக்காததால் எனக்கெல்லாம் இல்லை! இந்தப் பயிற்சிப் பாடங்கள் எழுதுவதற்கு எனத் தனியான நோட்டும் உண்டு! அதில் சரியாக எழுதி வரவில்லை எனில் அறிவியல் வகுப்பில் முட்டிக்கால் போட்டு உட்காரச் சொல்லுவார்கள். அல்லது பள்ளி மைதானத்தை மூன்று முறை சுற்றி வரச் சொல்லுவார்கள். இப்படியான தண்டனைகளை இன்று எந்த ஆசிரியராவது மாணாக்கருக்குக் கொடுக்க முடியுமா? அவ்வளவு ஏன்? ஏன் எழுதி வரவில்லை? என்றாவது கேட்க முடியுமா? எங்க பொண்ணு, பிள்ளைங்க படிக்கும்போதெல்லாம் ஆசிரியர்கள் அவங்க எந்தப் பாடத்திலாவது குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலோ சரியாகச் செய்யவில்லை என்றாலோ அவங்க நோட்டுப் புத்தகத்திலேயே, "என்னை வந்து நேரில் சந்திக்கவும்!" என்று எழுதிக் கொடுத்திருப்பாங்க. குழந்தைங்க உடனே வந்து சொல்லிடுவாங்க. நானோ, என் கணவரோ மறுநாள் போய் வகுப்பு ஆசிரியை, சம்பந்தப்பட்ட பாடத்தில் ஆசிரியை ஆகியோரைப் பார்ப்போம். தேவையானால் பிரின்சிபலைக் கூடப் பார்க்கச் சொல்லுவாங்க. இதுக்கெல்லாம் ஆசிரியர்கள் யாரிடமும் அனுமதி வாங்கிக் கொண்டு சொன்னதில்லை. குழந்தைகள் படிப்பில் சிறப்பாக இருக்கவேண்டி அவங்க தன் முனைப்பாகச் செய்வது இது! இதை எல்லாம் குற்றமாய் எடுத்துக்கறது என்பதை இப்போது தான் பார்க்க முடிகிறது.
அதைத் தவிர்த்துப் பள்ளியில் வருடா வருடம் டயரி ஒண்ணு கொடுத்திருப்பாங்க. அதில் குழந்தைகளின் அந்த வாரத்து நடவடிக்கைகள், படிப்பு சம்பந்தமான விபரங்கள், எந்தப் பாடத்தில் அவங்களுக்கு ருசி இல்லை, எந்தப் பாடம் அதிகம் படிக்க வேண்டி இருக்கு! எதில் கவனம் செலுத்தணும் என்பதிலிருந்து அவங்க உணவுகள் இப்படி இருக்கட்டும் என்று கூடச் சொல்லி இருப்பாங்க. இது பிரின்சிபலிடம் போய் அவருடைய கையொப்பத்துடன் வரும், நாம் பார்த்து அங்கீகரித்ததற்கு நாமும் குறிப்புகள் எழுதிக் கையெழுத்துப் போட வேண்டும். மற்றக் குழந்தைகளுடன் கலந்து பழகவில்லை என்றால் கூட அதைக் குறிப்பிட்டுக் காரணம் கேட்பாங்க. அல்லது அவங்களே குழந்தைகளுடைய கூச்ச சுபாவத்தை நீக்கும் வழிகளைச் சொல்லி இருப்பாங்க.
பெற்றோரும் மாணாக்கர்களும் ஆசிரியர்களின் கண்டிப்புப் பிள்ளைகளின் நன்மைக்கே எனப் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து ஆசிரியர் கண்டித்தால் மாணாக்கர்கள் தூக்குப் போட்டுக் கொள்ளுவதும், கிணற்றில் விழுவதும் அவர்களின் மனம் பக்குவம் அடையவில்லை, பெற்றோரின் வழிகாட்டுதல் சரியான முறையில் இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டும். மாணாக்கர்களும் இப்போதெல்லாம் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு மற்றப் போராட்டங்களில் பங்கேற்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர். இதை எந்த ஆசிரியரும் தடுத்ததாகத் தெரியவில்லை என்பதோடு பெற்றோரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
பாடங்கள் கற்று மனதில் பதிய வைக்க வேண்டிய வயதில் அரசியல்வாதிகளின் உணர்வு பூர்வமான பேச்சுக்களால் கவரப்பட்டுப் போராட்டங்களில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் தங்கள் எதிர்காலத்தைத் தொலைப்பதைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். அதிலும் சமீபத்தில் ஓர் பதினைந்து வயது கூட நிரம்பாத மாணவி பள்ளிச்சீருடையோடு வந்து போராட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டதைப் பார்த்தப்போ, பேசப்படும் விஷயத்தின் உள்ளார்ந்த காரண, காரியங்களை அந்தக் குழந்தை நன்கு அறிந்து கொள்ளவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. சொல்லிக் கொடுத்ததைச் சொன்னது! பாவம்!
அதோடு இப்போ எல்லாவற்றுக்கும் பிரதமரே காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு இதைத் தவிர வேறே வேலையே இல்லையா என நினைக்கத் தோன்றுகிறது. எத்தனை எத்தனையோ தீவிரமான நாட்டுப் பாதுகாப்பு, பொருளாதாரம், விவசாயம், கல்வி என விஷயங்கள் குவிந்திருக்க, இங்கே தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் மோதி தான் காரணம் எனச் சொல்கின்றனர். ஒரு பக்கம் பிஜேபியை வர விடமாட்டோம் எனச் சொல்கின்றனர். இன்னொரு பக்கம் கொல்லைப்புறம் வழியா வரப் பார்க்கிறது என்கின்றனர். இவங்க தான் தடுக்கப் போறாங்களே! அப்புறமும் ஏன் பயம்? கருத்துச் சுதந்திரம் இல்லைனு எல்லாவற்றுக்கும் சொல்றாங்க! கருத்துச் சுதந்திரம் இல்லாதப்போவே எல்லாத்துக்கும் மோதியைக் காரணம் காட்டிக் கொண்டிருப்பது எந்தச் சுதந்திரத்தில் சேர்த்தி? மற்ற அரசியல்வாதிகளைச் சொல்ல முடியுமா?
நானும் சொல்ல வேண்டியது தான்! எனக்கு ஆஸ்த்மா அட்டாக் வந்ததுக்கே மோதி தான் காரணம்! இல்லைனா வந்தே இருக்காது!