அண்ணா பையர் இங்கே அரியலூர் அருகே உள்ள ஓர் கிராமத்தின் ஆசிரமத்தில் இருந்து ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். சுமார் 3 வருடங்களுக்கும் மேலாகப் பதிவு செய்துவிட்டுக் காத்திருந்ததாய்ச் சொன்னார். குழந்தைக்கு ஜனவரி 29 ஆம் தேதியன்று ஒரு வயசு பூர்த்தி ஆகிறது. சென்ற புதன்கிழமை அன்று சட்ட ரீதியான ஏற்பாடுகள் பூர்த்தி அடைந்த பின்னர் மதியம் சுமார் இரண்டரை மணி அளவில் குழந்தை அண்ணா பையர்/மருமகள் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆசிரமத்தில் குழந்தையை என்ன பெயர் சொல்லி அழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் "அபூர்வா!" என்று அழைக்கப் போவதாய்ச் சொன்னார்கள். குழந்தை அண்ணாவின் மருமகளிடம் ஒட்டிக் கொண்டு விட்டது. அண்ணா பையரிடம் போகக் கொஞ்சம் தயங்கினாலும் ஆசிரமத்தில் எல்லோரிடமும் போய்ப் பழக்கம் ஆனதால் தூக்கிக் கொண்டு விளையாட்டுக் காட்டினால் பேசாமல் இருக்கிறது.
அவங்க சுமார் பத்துப் பேர் வந்ததால் இங்கே வந்து தங்கவில்லை. நான் அழைத்ததற்கு முன்னரே சொல்லிவிட்டார்கள். அண்ணா பையர் தரப்பில் அவர் தங்கை, தங்கை கணவரும், மருமகள் சார்பில் அவர் தம்பி, தம்பி மனைவியும் குழந்தையுடன் வந்தார்கள். சட்ட ஆலோசனைக்காக மருமகள் உறவுப் பெண் ஒருவர் தன் கணவருடன் வந்திருந்தார். ஆகவே சத்திரம் பேருந்து நிலையம் அருகேயே ஒரு செர்வீஸ் அபார்ட்மென்ட் எடுத்துக் கொண்டு வந்து தங்கிக் கொண்டு போய் வந்தார்கள். புதன் கிழமை எல்லாம் முடிந்ததும் சென்னை செல்லும் முன்னர் அண்ணா பையரைக் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து காட்டிவிட்டுப் போகும்படி சொல்லி இருந்தேன். புதனன்று முழுவதும் ஆசிரமத்திலேயே சரியாகப் போய்விட்டது. வியாழனன்று குழந்தையை குழந்தை மருத்துவர் ஒருவரிடம் காட்டி இருக்கிறார்கள். குழந்தை எடை குறைவாக இருப்பதால் விரைவில் திட உணவு ஆரம்பிக்கச் சொல்லி இருக்கார் மருத்துவர். மற்றபடி குழந்தை நன்றாக இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். குழந்தை வளர்ப்புக்கு அவரின் ஆலோசனையையும் உணவு மற்ற விபரங்கள் பற்றியும் கலந்து ஆலோசித்து விட்டுத் தாயுமானவரிடம் போய் வாழைத்தார் வைத்து வழிபட்டுவிட்டு அன்றைய தினம் கழிந்து விட்டது. வியாழக்கிழமை மாலை நாளைக்கு நாங்கள் வரலாமா என அண்ணா பையர் கேட்டார். அவர் தங்கை குடும்பமும் மருமகளின் தம்பி குடும்பமும் சென்னை திரும்பி விட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை சாப்பிடவே வரச் சொன்னோம்.
மருமகளின் உறவுப் பெண்ணும் அவள் கணவரும் சொந்த வேலை இருப்பதால் வரவில்லை. குழந்தையை எடுத்துக் கொண்டு அண்ணா பையரும், மருமகளும் வந்தார்கள். நம்ம வீட்டில் ஒரு வருஷத்துக்குக் கோலம் போடக்கூடாது என்றாலும் முதல் முறையாகக் குழந்தையை எடுத்துக் கொண்டு வருவதால் வாசலில் கோலம் போட்டுச் செம்மண் இட்டுவிட்டு வந்ததும் ஆரத்தி எடுத்து வரவேற்றோம். குழந்தைக்கு வேற்று முகம் இல்லை என்றாலும் கூப்பிட்டால் வரவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டது. நன்றாக விளையாடுகிறது. பால் கொடுத்தால் பாட்டிலை அதுவே பிடித்துக் கொண்டு குடிக்கும்படி ஆசிரமத்தில் பழக்கி இருப்பதால் நாம் மடியில் போட்டுக் கொண்டு பிடித்துக் கொண்டு கொடுத்தால் தட்டி விட்டு விடுகிறது. நமக்குத் தான் ஆராய்ச்சி மூளையே! பெற்றோர் பற்றித் தெரியுமானு கேட்டதுக்கு ஆசிரமத்தில் சொல்ல மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். ஆனால் நமக்குக்குறித்துக் கொள்வதற்காகப் பிறந்த தேதி சொல்லி இருக்காங்க. நேரம் தெரியவில்லை. நம்மவர் போன வருஷப் பஞ்சாங்கத்தை எடுத்து அலசி அன்று உத்திரட்டாதி நக்ஷத்திரம் என்று சொல்லிவிட்டார். எதுவாய் இருந்தால் என்ன? பெற்றோரால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தைக்கு அதிர்ஷ்டம் என்பது கொஞ்சமாவது இருந்ததால் இங்கே வந்திருக்கிறது. பிறந்து மூன்றாம் மாதம் கொண்டு விட்டிருக்கிறார்கள். ஒன்பது மாதத்துக்கெல்லாம் அந்தக் குழந்தைக்குப் புதிய பெற்றோர்கள், வீடு, உறவு என அமைந்து விட்டது.
இதுவே ஆண் குழந்தை எனில் தத்து எடுத்துக் கொள்வது கஷ்டம் என்கின்றனர். முதலில் பெற்றோர்களே ஓர் உணர்ச்சிப்பெருக்கில் குழந்தையை விட்டாலும் ஆண் குழந்தை எனில் பின்னால் தேடிக் கொண்டு வருவதாகச் சொன்னார்களாம் அந்த ஆசிரமத்தில். எதுவாக இருந்தால் என்ன? பெண் என்றால் ஆல மரம். ஆண் என்றால் அரச மரம். இரண்டுமே நல்லது தான். ஆனால் ஆண் குழந்தை எனில் உறவு முறையில் குழந்தைகள் அதிகம் இருந்து தத்துக் கொடுத்தால் தான் உண்டு என்கிறார்கள். எல்லோருமே அப்படிச் சம்மதித்துக் கொடுக்க மாட்டார்கள். நாளை அந்தக் குழந்தைக்கு நங்கநல்லூரில் குருவாயூரப்பன் கோயிலில் வைத்து அன்னப் ப்ராசனம் நடக்கிறது.27 ஆம் தேதி அண்ணா பையர் ஹைதராபாத் திரும்புகிறார். 29 ஆம் தேதி ஹைதராபாதில் முதல் பிறந்த நாளைக் கொண்டாடுவாள் அந்தக் குழந்தை.
இன்று சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் என்பதால் இதைப் பகிர்ந்தேன். ஆண் குழந்தைகள் ஓர் வரம் எனில் பெண் குழந்தைகள் கடவுளே என்பார்கள். அதைப்போல் இந்தக் குழந்தையும் இப்போது வாராது வந்த மாமணியாய் வந்திருக்கிறது. என் மன்னிக்கும் அண்ணா பையர்/பெண் ஆகியோருக்கெல்லாம் இடக்கன்னத்தில் குழி விழும். அதைப் போல் இந்தக் குழந்தைக்கும் இடக்கன்னத்தில் குழி விழுகிறது. இந்த 2,3 நாட்களில் அண்ணாவின் மருமகள் தான் தனக்கு அம்மா என்பதைப் புரிந்து கொண்டும் விட்டது. இனி ஆயுசோடு நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் ஆசை.
அன்று முழுவதும் அவர்களோடு பொழுது போயிற்று. பின்னர் அவங்க கிளம்பிப் போனப்புறமா இதை எழுதலாமோனு கணினியை எடுத்தால் இணையமே வரலை. அதுக்கப்புறமா இணைய ஒருங்கிணைப்பாளருக்குத் தொலைபேசி அழைத்து அவங்க வந்து சரி பண்ணுவதற்குள்ளாக மாலை ஐந்து மணி ஆகிவிட்டதால் அப்புறமா உட்காரவே இல்லை. நேற்றும் யார், யாரோ வந்து போய்க் கொண்டிருந்தார்கள். மத்தியானம் கிடைக்கும் நேரம் தான் கணினியில் வேலை செய்ய உகந்ததாய் இருக்கும். அதற்கு இப்போது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. இந்த வாரம் தம்பி, அண்ணா அவர்கள் குடும்பம் வருவதாக இருந்தது தற்சமயம் இந்தக் குழந்தை வரவால் ஒத்திப் போடப் பட்டுள்ளது. அடுத்த மாதம் வராங்களா என்னனு தெரியலை.
Very happy to hear this mami. God bless the child and parents too 💐❤️
ReplyDeleteThank You ATM
DeleteVery happy to hear this mami. God bless the child and parents too 💐❤️
ReplyDeleteHi ATM
Deleteமனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...
ReplyDeleteபல்லாண்டு பல்லாண்டு எல்லா நலமும் பெற்று வாழ இறைவன் அருள் புரிவானாக...
சந்தோஷமா மகிழ்வா இருக்குக்கா பதிவை வாசிக்க .நல்லதொரு விஷயத்தை செய்திருக்காங்க .எங்கள் இருபக்க குடும்பத்திலும் இப்படி அமைந்தது 6 உம் பெண் குழந்தைகள் .மிக அருமையாக வளர்த்து சிலர் திருமணமும் ஆகியாச்சு ..பெண் குழந்தைகள் கடவுளுக்கு சமம் அவங்களை எக்காலத்திலும் கஷ்டப்படவிடக்கூடாதது ..இறை ஆசீர்வாதங்கள் உங்கள் அண்ணா குடும்பத்தினருக்கு .மற்றும் புதிய வரவிற்கும் :)
ReplyDeleteவாங்க ஏஞ்சல், உண்மையிலேயே மிக நல்ல விஷயம் தான். என் சித்தியின் பையர் ஒருத்தரும் சுமார் 15 வருஷங்களுக்கு முன்னரே ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டு வளர்த்து இப்போது +2 படிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டாள்.
Deleteவாழ்த்துக்கள். நெகழ்ச்சியாக உணர வைத்த பதிவு.
ReplyDeleteநன்றி கடைசி பெஞ்ச்!
Deleteஆஹா மிக மகிழ்ச்சியான பதிவு கீசாக்கா. உண்மையைச் சொல்கிறேன் எங்களுக்கும் ஆசை, இப்படி ஒரு குழந்தையை எடுத்து வளர்க்க, ஆனா ஏற்கனவே பிள்ளைகள் இருக்கும்போது, தத்தெடுப்பது நல்லதல்ல என்பது அம்மாவின் அறிவுரை.
ReplyDeleteகணவரின் நண்பர் குடும்பம், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, அக் குழந்தைக்குப் பத்து வயதாகி விட்டது, இவர்களுக்கு 2 வது குழந்தை அமையவில்லை, அதனால இப்போ 2 வயசுக் குழந்தை ஒன்றை தத்தெடுத்தனர், எங்கட வீட்டுக்குக் கூட்டி வந்தனர், என்னுடன் நன்கு ஒட்டி விட்டது அக்குழந்தை, நீங்கள் சொன்னதைப்போல அழகாக முள்ளுக்கரண்டியைப் பிடிச்சு பிறியாணி சாப்பிட்டது தெரியுமோ.. ஹா ஹா ஹா.. பார்க்க மிக கியூட்.
அபூர்வா மிக அழகிய பெயரும்கூட.... நன்றாக நலமோடும் வளமோடும் ஒற்றுமையோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் அக் குழந்தையை.
வாங்க சுனாமி. எல்லோருடைய வாழ்த்துகளும் ஆசிகளும் அந்தக் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்பதாலேயே பதிவு போட்டேன். மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும். எங்க உறவுகளில் நாலைந்து நெருங்கிய உறவினர் இப்படி தத்து எடுத்துக் கொண்டு வளர்த்து வருகிறார்கள். எங்க குடும்பத்துக்கு இது புதுசு இல்லை. நல்லபடியாகக் குழந்தை வளர்ந்து நன்றாய்ப் படித்து நல்லபடியாய் வாழ வேண்டும். அவ்வளவே!
Deleteஆகா...! மிகவும் மகிழ்ச்சி...
ReplyDeleteபெண்ணின் பெருத்தக்க யாவுள... அருமை...
நன்றி திரு தனபாலன்.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஎத்தனை அருமையான பதிவு.
உலகத்தில் இத்தனை நன்மைகள் நடக்கிறதே.
உங்கள் அண்ணா பையரும் மருமகளும் அந்தக் குட்டிக் குழந்தையும்
மிக இக நன்றாக இருக்கணூம்.
எங்கள் வீட்டிலும் இடது கன்னத்தில் மட்டும்
டிம்பிள் இருக்கும் குழந்தைகள் உண்டு.
பெரியவன், மகள் ,அவள் பையன், ஸ்விஸ் பேத்தி
இவர்களூக்கூ அந்த மாதிரி.'
ஆனல் தத்தெடுத்த குழந்தைக்கும் இப்படி
வாய்த்திருப்பது ஒரு பாசம் தான்.
பெண்குழந்தைகள் போற்றப்பட வேண்டியவர்கள்.
வாங்க வல்லி. உங்கள் ஆசிகள்/வாழ்த்துகள் எல்லாமே அவங்க எல்லோருக்கும் வேண்டும். ஆகவே தான் பதிவு போட்டேன். என் அண்ணா மருமகளை முக ஜாடையையும் ஒத்திருக்கிறது. தானாக அமைந்ததா, தேர்ந்தெடுத்தார்களானு தெரியலை. எப்படியோ நன்றாய் இருக்கட்டும். அது தான் நாம் வேண்டுவதும்.
Deleteமிகவும் நெகிழ்வாக இருக்கிறது. ஒதுக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு புது வாழ்வும் உறவுகளும் குடும்பப்பெயரும் கொடுத்து சுவீகாரம் செய்திருக்கும் உங்கள் அண்ணா பையரும் மருமகளும் என்றைக்கும் நல்லபடியாக வாழ்வார்கள்!
ReplyDeleteஎங்கள் குடும்பத்திலும் என் ஓர்ப்படியின் மகள் வட இந்திய ஆஷ்ரமம் ஒன்றிலிருந்து ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் நாத்தனார் பெண்ணும் அதன் கணவரும் அவர்களை மாதிரியே கறுப்பான பெண் தான் வேண்டும் என்று தேடிப்பிடித்து தத்தெடுத்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்!
வாங்க மனோ! இப்போதெல்லாம் இம்மாதிரி தத்து எடுத்துக் கொள்பவர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். ஒரு குழந்தைக்கு நல்ல படிப்பும், வசதியான வாழ்க்கையையும் தூக்கிக் கொடுப்பது சாதாரணமான விஷயம் அல்லவே! மனது பெரிய மனதாக இருக்க வேண்டும். உங்கள் ஓர்ப்படியின் மகள்/நாத்தனார் பெண் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துகள்.
Deleteகுழந்தை அபூர்வா வாழ்க வளமுடன்
ReplyDeleteகுழந்தையின் பெற்றேர்களுக்கும் வாழ்த்துக்கள்.(உங்கள் அண்ணா பையனுக்கும், மருமகளுக்கும்)
29ம் தேதி பெற்றோர் உற்றம், சுற்றத்தின் வாழ்த்துக்களைப் பெற்று வாழ்க பல்லாண்டு அபூர்வா.
பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் வருகை தந்ததுக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் நன்றி கோமதி.
Deleteபெண் குழந்தைகள் தெய்வம் தந்த வரம். அண்ணா பையருக்கு மருமகளுக்கும் வாழ்த்துகள். அபூர்வாவுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஎங்கள் பாஸ் பக்க உறவில் ஒரு குழந்தை இல்லா தம்பதியினர் இருக்கிறார்கள். அவர்களிடம் நாங்களும் இந்த யோசனை சொல்லிப் பார்த்திருக்கிறோம். ஏனோ அவர்கள் இதுவரை சம்மதிக்கவில்லை. இன்னொரு உறவினர் இதேபோல தத்து எடுத்து ஒரு பெண்குழந்தையை வளர்த்து வருகிறார். ஆனால் அது வெளிநாட்டு சாயல் கொண்ட குழந்தை. சீனியாரிட்டியில் எந்தக் குழந்தை கிடைக்கிறதோ அப்படிதான் என்றார்கள். சரியாய்த் தெரியவில்லை.
ReplyDeleteஶ்ரீராம், இது கணவன், மனைவி இருவருக்கும் மனது ஒத்துச் செய்ய வேண்டிய ஒன்று. அதே போல் மாமியார், மாமனார் இருந்தாலும் எல்லோரும் ஒத்துக் கொள்ள மாட்டார்களே! ஆகவே மிகவும் யோசித்துச் செய்யணும். சீனியாரிடி இருக்கானு தெரியலை. ஆனால் அவங்க விருப்பம்னு ஒண்ணு இருக்கு. இவங்க ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையாகத் தேடினார்கள். அப்போத் தான் குழந்தையும் ஒட்டிக்கும் என்பதால், விபரம் தெரிந்த குழந்தை எனில் கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்குமோ என்னும் எண்ணம். அந்த மாதிரிக் குழந்தை தமிழ்நாட்டின் எந்த ஆசிரமத்தில் இருந்திருந்தாலும் கொடுத்திருப்பார்கள் என அண்ணா பையர் சொன்னார். சென்னையைச் சுற்றி உள்ள ஆசிரமங்களில் கிடைக்காமல் இங்கே அரியலூரில் உள்ள ஆசிரமத்தில் கிடைக்கவே இவங்களுக்குத் தகவல் சொல்லி இவங்க சம்மதம் பெற்றவுடன் குழந்தையைப் பெற்றுக்கொள்ள நாள் குறித்து இவர்களை அழைத்து எல்லாவிதமான சட்டரீதியான சம்பிரதாயங்களை முடித்துக் கொண்டு குழந்தையைக் கொடுத்திருக்கிறார்கள். இது மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் ஆசிரமங்களில் ஒன்று.
Deleteமனது முழுவதும் மகிழ்ச்சி பொங்கியது. தத்து எடுத்துக் கொண்ட பெற்றோர்களுக்கும் அனுமதித்த பெரியவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க வெங்கட். மனம் மகிழ்ச்சி கொண்டதுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. எல்லோருடைய ஆசிகளும் வாழ்த்துகளும் அவங்களுக்கு இப்போத் தேவை.
Deleteஎன் நண்பரின் மகள் ஒரு குழந்தைக்கு பதில் இரட்டைக் குழந்தைகளை தத்து எடுத்திருந்தார் இப்போது அவர்கள் கலேஜ் செல்கிறார்கள் நல்லபணியில் இருந்தவர் குழந்தைகளுக்காக வேலையை உதறினார்
ReplyDeleteவாங்க ஐயா, நீண்ட நாட்கள் கழிச்சு வருகை தந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி. அண்ணாவின் மருமகள், அண்ணா பையர் இருவருமே டாக்டரேட் வாங்கியவர்கள். அண்ணா மருமகள் இந்தக் குழந்தைக்காகத் தன் வேலையை விட்டு விட்டாள்.
Deleteகீதாம்மா , உங்கள் அண்ணன் மகனும் , மருமகளும் குழந்தைக்கு வாழ்வளித்துள்ளனர் . பெருமையாக இருக்கிறது. எங்களுக்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகே குழந்தைச் செல்வம் கிடைத்தது. வாராது மாமணியாய் வந்த அந்த மழலை அனைத்து நலமும் வளமும் பெற்று தன் பெற்றோரும் ,உற்றோரும் மெச்ச வாழையடி வாழையாய் வாழ என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க வானம்பாடி, வாழ்த்துகளுக்கு நன்றி. குழந்தை இன்று அவள் பெற்றோர்களுடன் அவங்க இருக்கும் இடமான ஹைதராபாத் போகிறாள். முதலில் நாளைக்காலை விமானத்தில் செல்வதாக இருந்தது. அப்புறமாக் குழந்தை பயப்பட்டால் என்ன செய்வது என்பதால் ரயிலிலே போறாங்க. நல்லபடியாக் குழந்தை வளர்ந்து பெரிய பெண்ணாகி அனைவரையும் மகிழ்விக்க வேண்டும்.
DeleteSo happy to hear!
ReplyDeleteநன்றி வானம்பாடி.
Deleteநல்ல செய்தி! குழந்தை ஆயுளோடும், ஐஸ்வர்யதோடும் இருக்க வாழ்துகள்!
ReplyDeleteநன்றி பானுமதி!
Delete