எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 25, 2021

கௌரவப் பிரசாதம்! இது எனக்குப் போதுமா?

 என்னைப் பார்க்கிறவங்க யாராக இருந்தாலும் வீட்டில் எல்லா வேலைகளையும் நான் தான் செய்வேன் என்றோ தினசரி சமையலும் நான் தான் செய்வேன் என்றோ நம்புவது இல்லை. இது இப்போ ஆரம்பிக்கலை. கல்யாணம் ஆனப்போவே மாமியார் வீட்டில் யாருக்கும் நான் வேலை எல்லாம் செய்வேன் என்பதில் நம்பிக்கை இருந்ததில்லை. காய் நறுக்கத் தெரியுமா? தேங்காய் துருவத் தெரியுமா? தோசை வார்க்க வருமா?  இட்லி மாவு அரைக்கும்போது குழவியை எந்தத் திசையில் சுற்றுவாய்? தயிர் கடைவது என்றால் என்னனு தெரியுமா? தயிர் மத்தைப் பார்த்திருக்கியா? அதைப் பார்த்திருக்கியா?  இது தெரியுமா?" என்றெல்லாம் கேட்டார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்பதை நம்பவும் இல்லை. எல்லாம் செய்து தான் காட்டினேன். அப்போவும் இன்னிக்கு என்னமோ பண்ணிட்டே! தினம் தினம் பண்ணணுமே! அதுக்கு உன்னால் முடியுமா? என்பார்கள். இது கேட்டுக் கேட்டு எனக்கே அலுத்துப் போய்ப் பின்னர் இந்தக் காதில் வாங்கி இன்னொரு காதால் வெளியே தள்ளிவிட ஆரம்பிச்சேன்.

50 வயதுக்குப் பின்னர்   கொடி போல் இருந்த உடல் பூஷணி போல் ஆக ஆரம்பிக்கையில் யாருமே இதுக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை என்றோ நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்றோ ஒத்துக்கொள்ளவில்லை. சில நெருங்கிய சொந்தங்கள்/நட்புக்கள்  பார்க்கும்போதெல்லாம் வீட்டில் எல்லா வேலையையும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்துடு! உட்காராதே! மத்தியானம் தூங்காதே! அள்ளிப் போட்டுக் கொண்டு சாப்பிடாதே! அளவாகச் சாப்பிடு!" என்றெல்லாம் உபதேசிப்பார்கள். அதோடு இல்லாமல் அவங்க வீடுகளில் எல்லாம் குழந்தை இருந்ததால் "குழந்தையோடு நாங்க ஓடி ஆடறோம். நீ தனியா இருக்கே! வேலையே இல்லை; அதான் உடம்பு பெருத்துப் போகிறது!" என்பார்கள். என்னத்தைச் சொல்ல! 

அம்பத்தூரில் இருந்தவரைக்கும் காலை/மாலை இருவேளையும் வீட்டைச் சுற்றிப் பெருக்கி, மாடிப்படி பெருக்கி, கொல்லைக் கிணற்றடி பெருக்கி எனக் காலை ஒன்றரை மணி நேரம், மாலை ஒன்றரை மணி நேரம் இதுக்கே சரியாகிவிடும். வாரம் ஒரு நாள் மொட்டை மாடி சுத்தம் செய்தல், தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்தல்(இரண்டு பேருமாகத் தான் செய்வோம்) என்று வேலைகள் இருக்கும். அதோடு தோட்டம் பெருக்குதலும் சேர்ந்து கொள்ளும். பின்னாட்களில் எனக்கு வீசிங் தொந்திரவு அதிகரித்ததால் தோட்டம் பெருக்குதலுக்கு மட்டும் ஆள் போட்டோம். ஆனாலும் வீட்டைச் சுற்றி நான் தான் பெருக்கிக் குப்பைகளை அள்ளிப் போடுவேன். வேப்பிலைகள், அசோக மர இலைகள், மாவிலைகள், மற்ற மரங்களின் இலைகள்னு கீழே விழுந்து ஒரே அல்லோலகல்லோலமாக இருக்கும். பெருக்கலைனா நம்ம சுப்புக்குட்டியார் அந்த இலைகள் காய்ந்தனவற்றில் புகுந்து படுத்துக்கொண்டு ஓய்வு எடுப்பார். எங்கேயானும் மிதிச்சுடப் போறோமேனு அது வேறே கவலையா இருக்கும். இது போதாது எனத் தென்னை ஓலை மட்டைகள், தேங்காய்கள் எனக் கீழே விழும்.

அவற்றை ஒதுக்குதல், தென்னங்குச்சியைக் கிழிச்சு எடுத்து விளக்குமாறுக்குச் சேர்த்தல் என வேலை இருக்கும். இந்த விளக்குமாறுக்கு ஓலை கிழிப்பதை நம்ம ரங்க்ஸ் நான் செய்தால் ஒத்துக்க மாட்டார்."தென்னை மரங்களெல்லாம் நீ எங்கே பார்த்திருக்கே? இதைப்பத்தி எல்லாம் உனக்கு என்ன தெரியும்? நான் தான் ஓலை கிழிப்பேன்!" என்று அவர் உட்கார்ந்து செய்வார். அவர் இல்லாதப்போ நானும் பண்ணுவேன். அதைப் பார்த்துச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும் அவருக்கு. நான் சரியாய்ப் பண்ணலையாம். போகட்டும்னு விட்டுடுவேன். இப்படி இருந்து கொண்டிருக்கும்போதே இங்கே ஶ்ரீரங்கம் வந்ததும் எல்லோருக்கும் நான் சமைக்கிறேனோ இல்லையோ எனச் சந்தேகம் வந்தது. அதற்கேற்றாற்போல் இரண்டு வருஷங்கள் முன்னர் அக்கி வந்தப்போ சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டோமா, அது சில மாதங்கள் வரை நீடித்தது. மருத்துவர் கண்டிப்பாக வேலை செய்யக் கூடாது என்று சொன்னதால் வாங்கித் தான் சாப்பிட்டோம். பின்னர் அம்பேரிக்கா போனதும் அங்கே நான் தான் சமைத்தேன். இங்கே வந்த பின்னரும் கொரோனா/தொடர்ந்து லாக்டவுன் என்று வர நான் தான் சமைக்கிறேன். இப்போத் தான் கண் அறுவை சிகிச்சை என்று முடிவாகி விட்டதால் ஒரு மாசத்துக்காவது சாப்பாடு கொடுக்க ஆள் வேண்டும் என்று தேடுகிறோம்.

இரண்டு, மூன்று பேரிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்துட்டோம். எல்லோருமே பீட்ரூட்டை விடுவதில்லை. அவங்களுக்கு அது தான் விலை மலிவு போல் இருக்கு. அடுத்து முட்டைக்கோஸ்! சென்ற வாரம் ஒரு நாள் ஒரு புது காடரர் சாப்பாடு உள்பட 50 ரூபாய் என்று சொல்லி இருந்தார். முகநூலில் நண்பர் ஒருத்தர் ஶ்ரீரங்கம் என்பதால் எனக்குப் பகிர்ந்திருந்தார். அவரிடம் சாம்பார், ரசம், கறி, கூட்டு வாங்கலாம் எனப் பேசினோம். ஒருத்தருக்கு 40 ரூபாய் என்றார். சரினு இரண்டு நபர்களுக்குத் தேவை என ஆர்டர் கொடுத்தோம். காலை பத்து மணிக்குள் வந்துவிடுவதாகச் சொன்னார்கள். அதே போல் ஒன்பதே காலுக்கெல்லாம் சாப்பாடு வந்து விட்டது. பயந்து கொண்டே வாங்கினேன். நல்ல வேளையாக அலுமினியம் ஃபாயிலில் கட்டி இருந்தார்கள். அதுக்குள்ளே நம்மவருக்கு இரவுக்கும் வாங்கிப் பார்க்கும் ஆசை வந்துவிட அவரிடம் இரவு என்ன என்று கேட்டார். பூரி, கிழங்கு என்று சொல்ல சரினு இரண்டு செட் பூரி கிழங்குக்கு ஆர்டர் கொடுத்துட்டார். நல்லவேளையாக சாதம் கூடவே வைத்திருந்தேன்.

இரவு பூரி வந்தது. கிழங்கு ப்ளாஸ்டிக் பையில் கட்டி இருந்ததைப் பார்த்தாலே பிடிக்கலை. பூரிகள் மட்டும் அலுமினியம் ஃபாயில் பேப்பரில் கட்டப்பட்டு இருந்தன. கிழங்கைப் பிரித்து ஒரு பாத்திரத்தில் கொட்டினால் ஏதோ வாசனை. குமட்டியது. வாயில் விட்டுப் பார்த்தால் உப்பு, காரம் சரியாய் இருந்தாலும் ஏதோ மாற்றம். சாதம் இருந்ததால் அதைத் தயிர் விட்டுப் பிசைந்து வைத்துவிட்டு ஊறுகாயும் எடுத்து வைத்துக் கொண்டு பூரிகளைப் பிரித்தால் உள்ளே ஆறு பூரிகளும் பொடிப் பொடியாக உதிர்ந்திருந்தன. கையில் எடுத்தால் ரொம்பவே கடினமாகவும் இருந்தன. அதிலிருந்து எப்படியோ 3 பூரிகளைப் பிரித்து எடுத்து அவருக்குப் போட்டுவிட்டுக் கிழங்கையும் ஊற்றினேன். அவரும் வாசனை சரியில்லை எனச் சொல்லிக் கொண்டே பூரியை எடுத்தார். எனக்கும் உடனே புரிந்து விட்டது. பூரி மாவில் ரவையை தாராளமாகப் போட்டு ரொம்பக் கெட்டியாகப் பிசைந்து மொறுமொறுவென எடுத்திருக்காங்க. அதைக் கட்டவும் நொறுங்கி விட்டன. கிழங்கில் என்ன பிரச்னை என்று பார்த்தால் கடவுளே!

வெங்காயம் போட்டுக் கிழங்கு பண்ணவில்லை. அதுக்குப் பதிலாக முட்டைக்கோஸை நறுக்கி வெங்காயத்துக்குப் பதிலாக வதக்கி உருளைக்கிழங்கையும் போட்டுப் பண்ணி இருக்காங்க. அதிலே உப்பு மட்டும் போட்டிருந்தாங்களே தவிர்த்து வேறே வாசனைக்குக் கருகப்பிலையோ, பச்சை மிளகாயோ, அல்லது காரப்பொடியோ, பெருங்காயமோ சேர்க்கவே இல்லை.  உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்த்து அதிலே தண்ணீர் சேர்த்து முட்டைக்கோஸுடன் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொடுத்து விட்டார்கள். இத்தனைக்கும் நான் சாப்பாடு கேட்கும்போதே பீட்ரூட், முட்டைக்கோஸ், நூல்கோல், காலிஃப்ளவர் சாப்பிட முடியாது. தைராயிட் பேஷன்ட் எனச் சொல்லி இருந்தோம். அப்படி இருந்தும் சாப்பாட்டில் பீட்ரூட்டைச் சேர்த்து விட்டு நாங்க என்ன காய் என்று கேட்கையில் அவரைக்காய் என்று சொல்லிவிட்டார். இரவுக்கும் கிழங்குனு சொல்லிட்டு தண்டனையாகி விட்டது. நல்லவேளையா சாதம் இருந்ததோ பிழைச்சோம்.

அதுக்கப்புறமா அவரிடம் வாங்கலை. சாம்பார், ரசம் வரைக்கும் ஓகே. அளவும் இருவருக்குப் போதுமானதாக இருந்தது. என்றாலும் இந்த டிஃபனில் பட்டு விட்டதால் மேற்கொண்டு தொடரப் பயம். இப்போதைக்குச் சமைத்துக் கொண்டிருக்கேன். பின்னர் பார்க்கணும். இன்னும் நேரம் இருக்கே. அடுத்த மாதம் தம்பி குடும்பம் வருவாங்க. அதன் பின்னர் தான் எதுவாக இருந்தாலும் முடிவு எடுக்கணும். அது வரைக்கும் என் சமையல் தான்! ரசம் வைச்சாலும் போதும். ஊறுகாய் இருப்பதால் ஏதோ சாப்பிட்டுக்கலாமே! வர வர உப்பு, புளி, பருப்பு அடையாளம் தெரிஞ்சால் போதும், சமையல்காரராக ஆகிவிடலாம்னு எல்லோரும் கிளம்பிடறாங்க. இன்னொரு மாமி  நேரில் பேசும்போது தேன் வழிந்தது. சாப்பாட்டுக்குத் தொலைபேசினால் நான் வெளியே இருக்கேன். அதனால் 2,3 நாட்கள் சாப்பாடு கிடையாதுனு சொல்லிட்டாங்க. இங்கே வீட்டுக்கு வந்தப்போக் கேட்டதுக்கு என்கணவர் சமைப்பார், பிள்ளைக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டேன். அதனால் உங்களுக்குச் சாப்பாடு கிடைச்சுடும் என்றெல்லாம் சொன்னாங்க. கடைசியில் இல்லைனு கையை விரிச்சுட்டாங்க. பேசாமல் நம்ம ரங்க்ஸையே சமைக்கச் சொல்லிட வேண்டியது தானோ!இஃகி,இஃகி,இஃகி!

51 comments:

  1. ஹாஹ்ஹா :) சேம் பின்ச் :) இந்த  வீட்டு வேலை செய்ற விஷயத்தில் எனக்கும் இதே அனுபவம் .இவ்ளோ ஏன் அதிரடி கூட என்னை  நம்பறதில்லை .நான் எப்பவும்  கம்பியூட்டர் கார்ட் மேக்கிங் வாக்கிங் இதைத்தான் செய்றேன் வீட்டு வேலை செய்யாம ஒளிகிறேன்னு சொல்றார் அதிரடி .என் பழக்கம் மத்த்வங்க  10 நிமிஷத்தில் செய்வதை 5  நிமிஷத்தில் முடிப்பேன் :) அப்படிதான் 7 காய்வகைக்கூட்டு செஞ்சு ஒருமுறை நாத்தனாரை அதிர வைச்சேன் :) .இது மாதிரி நிறைய வேகவேகமா முடிக்கும் பழக்கம் எனக்கிருக்கு .கூட்டு செஞ்சுக்கிட்டே சப்பாத்தியையும் சுட்டுடுவேன் .நிறையபேர் ஒவ்வொண்ணா செய்றதால்தான் பிரச்சினையே :) எனக்கு தினமும் சமைப்பது பழக்கம் ஒரு கூட்டு ஒரு அப்பளம் ஒரு சாம்பாரோ குழம்போ அதோட முடிச்சிடுவேன்எனக்கு ஆரம்பத்தில் எதுவும் தெரியாததுதான் ஆனாலும் நான் பழகிட்டேன் :).  .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், நானும் விரைவாக முடிப்பேன் தான். இப்போவும்! நீங்க சொல்றாப்போல் ஒரு பக்கம் சப்பாத்திக்கான கூட்டு, இன்னொரு அடுப்பில் சப்பாத்தி எனப் பண்ணிடுவேன். ஒரு காலத்தில் இரண்டு தோசைக்கல்லைப் போட்டுக் கொண்டு தோசை வார்த்துக் குடும்ப நபர்கள் 20 பேருக்கு மேல் வார்த்துப் போட்டிருக்கேன். இப்போவும் சில சமயங்கள் 2 தோசைக்கல் போட்டு வார்க்கும்படி இருக்கும். எங்க வீட்டில் ரசம் தினம் வேண்டும். குழம்பு கொஞ்சமாய் ஏதானும். சாம்பாரெல்லாம் குறிப்பிட்ட நாட்களில் தான். குழம்பு வைக்கலைனால் எலுமிச்சை சாதம், புளியோதரை, தக்காளி சாதம், ஜீரா ரைஸ், துவையல்கள் எனப் பண்ணிடுவேன். எப்படியும் 3 வேண்டும்.

      Delete
  2. உடல் வாகிற்கும் உணவிற்கும் சம்பந்தமே கிடையாது .இது புரியாம பலர் உணவை கட்பண்ணு ,எக்ஸர்சைஸ் செய்னு அட்வைஸா கொட்டுவாங்க .நம் மக்களுக்கு இளைச்சாலும் தப்பு கொஞ்சம் பூசினவாகாயிருந்தாலும் தப்பு :)
    உங்க கணவர் மற்றும் நீங்க பார்க்கும்போது எங்கப்பா அம்மா தான் நினைவுக்கு வராங்க :) நார்த்தங்கா க்ளாக்காய் நெல்லிக்கா ,கிச்சிலிக்கா மற்றும் எல்லா ஊறுகாயும்  எங்கப்பாதான் சூப்பரா போடுவார் எங்கம்மாவை நெருங்கவே விட மாட்டார்  :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால் புரிந்து கொள்பவர்கள் மிகக் குறைவு. அதோடு என் புக்ககத்தில் எல்லோருமே உயரம், ஒல்லி. ஆகவே அவங்களுக்குக் கொஞ்சம் குண்டாக இருப்பவர்களைப் பார்த்தாலே சிரிப்பு வந்துடும். உங்க அப்பா, அம்மாவை எங்களில் பார்ப்பதற்கு நன்றி. இங்கே மாமா ஊறுகாயெல்லாம் போடமாட்டார். எல்லா ஊறுகாயும் நான் தான் போடுவேன். :))))

      Delete
  3. கடைசி வரி சொன்னிங்களே அதுதான் சரியான ஐடியா :) அவரையே சமைக்க சொல்லிடுங்க :)ஈஸி சமையல் சொல்லிக்கொடுங்க :) ஸ்ஸ்ஸ்ஸ் யப்பப்பா மூணு வாரம் லீவ் கண்மூடி திறக்கறதுக்குள்ளே எனக்கு முடியுது :) ஜாலியா இருந்தது கிடைச்ச நேரம் கம்பியூட்டரில் உலாவி மீண்டும் வேலை துவங்குது .இனி நேரம் கிடைக்கும்போது எட்டி பார்ப்பேன் :)

    ReplyDelete
    Replies
    1. @ஏஞ்சல், இஃகி,இஃகி,இஃகி, மாமா கல்யாணத்துக்கு முன்னால் சமைச்சுச் சாப்பிட்டுட்டுத் தான் இருந்தார். எனக்கு முடியாதப்போ சமைச்சும் போட்டிருக்கார். ஆனால் இப்போ முடியுமானு தெரியலை.
      அட! நீங்க இனிமேல் வருவது கஷ்டமா? என்ன போங்க! நஈங்களும் அதிரடியும் இல்லைனா எத்தனை கருத்துரை வந்தாலும் அது நிறைவே அடைவதில்லை! :(

      Delete
  4. //இட்லி மாவு அரைக்கும்போது குழவியை எந்த திசையில் சுற்றுவாய்? //

    இப்படி எல்லாம் இருக்கா என்ன?  சாதாரணமாக பிரதட்சணமாகத்தான் சுற்றுவோம்.  நடுநடுவில் அப்ரதட்சணமாகவும் சுற்றுவதுண்டு.  இதில் என்ன கணக்கு?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், அப்பிரதக்ஷணமாய்ச் சுற்றுபவர்கள் உண்டு என்பதோடு அவங்களுக்கு மதுரை பெரிய நகரம் என்பதால் அங்கே நாகரிகம்னு பெயரிலே அரைக்கல்லாம் மாட்டாங்க, கிராமத்து வேலைகள் தெரியாது என்னும் எண்ணம் உண்டு. எங்க வீட்டிலேயும் தயிர் கடைஞ்சு வெண்ணெய் எடுப்பாங்கன்னால் சிரிப்பு வரும். மாடே இல்லாமல் வாங்கற பாலில் எப்படி வெண்ணெய் எடுக்க முடியும்? நீ பொய் சொல்றே என்பார்கள். ஆனால் நான் இப்போவும் வாங்கற பாலில் தான் வெண்ணெய் எடுக்கிறேன். பின்னாட்களில் அவங்களுக்கும் புரிஞ்சது, கறந்து வாங்கறோம் என்பது.

      Delete
  5. இவ்வளவு வேலைகளையும் பொறுமையாகச் செய்வதற்கே பாராட்ட வேண்டும்.  சமீப காலங்களில் நான் ரொம்ப சோம்பேறி ஆகி வருகிறேன்.  அதற்கு முன்னால் சோம்பேறியாக இருந்தேன்.  இப்போ ரொம்பச் சோம்பேறி!  பனி முடித்து வந்தால் படுக்க தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், இப்போவும் வேலை செய்யும் பெண் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் சில நாட்கள் நான் தான் எல்லா வேலைகளையும் செய்யும்படி ஆகிறது. முன்னைப் போல் இல்லாமல் கொஞ்சம் நேரம் எடுக்கும். நீங்க அலைச்சல் வேலை என்பதோடு இப்போக் கொஞ்சம் தூரமாகவும் ஆகிவிட்டதே உங்கள் அலுவலகம். முன்னால் எனில் உங்கள் வளாகத்திலேயே இருந்தது.

      Delete
  6. வெளியில் வாங்குவதற்கு நான் அஞ்சுவதே இல்லை.  தயங்குவதும் இல்லை.  விதம் விதமாக ஆங்காங்கே வாங்கிப் பார்த்துவிடுவேன்!  நன்றாக இல்லாவிட்டால் தொடர மாட்டேன்.  அவை நன்றாய் இல்லை என்று சொவ்லதைவிட, நம் டேஸ்ட்டுக்கு ஒத்துவரவில்லை என்று சொல்லலாம்!

    ReplyDelete
    Replies
    1. நம்மவர் வாங்கறேன் என்றே சொல்கிறார் ஶ்ரீராம், எப்போவும் போல் நான் தான் குறுக்கே விழுந்து தடுத்துக் கொண்டிருக்கேன். முடியலைனா அது வேறு விஷயம். இப்போ அப்படி மோசமா இல்லையே! ஆனால் ஒன்று உண்மையிலேயே நன்றாய் இல்லை என்றால் தான் நல்லா இல்லைனு சொல்லுவோம். இந்தப் புது காடரர் கூட சமையல் பரவாயில்லைனு தான் சொல்லி இருக்கேன், பார்த்தீங்க இல்லையா? பூரி, கிழங்கில் தான் சொதப்பிட்டார்.

      Delete
  7. உங்கள் கண் அறுவை சிகிச்சை எப்போது?  கண்களுக்கு ஓய்வு கொடுத்து வருகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் தம்பி குடும்பம் வருவதாக இருந்தது. அது அடுத்த மாதம் நடுவில் மாத்தி இருக்காங்க. ஆகவே அவங்க வந்துட்டுப் போனதும் பெப்ரவரி 20 தேதி வாக்கில் பார்க்கணும். கண்களுக்கு ஓய்வு தான் நிறையக் கொடுக்கிறேனே!

      Delete
  8. //உப்பு புளி பருப்பு அடையாளம் தெரிஞ்சால் போதும், சமையல்காரராக// - இது யாரைத் தாக்கறாங்கன்னு தெரியலையே... யாரா இருக்கும்? அவரா? இருக்காது. இந்த மேடமா? அதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஓ..அவரா? ஆனால் அவர் ஆடிக்கொருமுறை அமாவாசைக்கு ஒரு முறைன்னுதானே செய்முறை எழுதறார்? யாரா இருக்கும்? ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. // ஓ..அவரா? ஆனால் அவர் ஆடிக்கொருமுறை அமாவாசைக்கு ஒரு முறைன்னுதானே செய்முறை எழுதறார்? யாரா இருக்கும்? ஹாஹா//

      Garrrrrrrrrrrrrrr haaahaaaaa :)

      Delete
    2. ஹாஹாஹா! நெல்லை, புரிஞ்சாச் சரி! எந்த மேடத்தையும் சொல்லலைனு புரிஞ்சது தானே!

      Delete
    3. ஏஞ்சல், நெல்லை வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டார். நுணலும் தன் வாயால் கெடும்! இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  9. உலக இயல்பு, கொஞ்சம் உடம்புல சதை போட்டிருந்தால், அதிகாலைல எழுந்திருங்க, 4 கிலோ மீட்டர் நடங்க, உப்பைக் குறைங்க, இனிப்பு சாப்பிடாதீங்க, கொஞ்சம் வேலை செய்யணும், சேர்லயே உட்கார்ந்திருக்கக்கூடாது என்று சகட்டுமேனிக்கு பார்க்கிறவங்க டாக்டரா ஆயிடறாங்க. அதுமட்டுமல்லாமல், சின்ன வயசுல ஒல்லியா இருப்பயே..ஏதேனும் உடல் பிரச்சனையா என்று பயமுறுத்தறாங்க. இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விடவேண்டியதுதான்.

    சாப்பாட்டுக்கும் உடலுக்கும் சம்பந்தம் இல்லைனு நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நெல்லை. ஆனால் என் அம்மா பக்கம் உயரம், பருமன். அம்மா மட்டும் கொஞ்சம் உயரக்குறைவு. அப்பா பக்கம் எல்லோரும் ஆறடிக்குக் கொஞ்சம் கூட! ஆனால் அப்பா உயரக்குறைவு. நாங்க எல்லோரும் அதைக் கொண்டு பிறந்துட்டோம், அதனால் எல்லோரும் ஐந்தரை அடிக்குக் கீழே தான். ஆகவே உடம்பு கொஞ்சம் பெருத்தாலும் தெரிஞ்சுடும். அதை ஆரோக்கியம்னும் நிறையச் சாப்பிடறாங்கனும் சொல்வாங்க. அதைப் பார்த்தால் என்ன சொல்வது> சாப்பாடுக்கும் உடலுக்கும் சம்பந்தமே இல்லை.

      Delete
  10. தைராய்டுக்கு இந்த இந்தக் காய் சாப்பிடக் கூடாது என்ற நியூஸ் எனக்குப் புதிது.

    ReplyDelete
    Replies
    1. மருத்துவர் எழுதியே கொடுத்துடுவாரே! சர்க்கரை நோயாளிகள் கூடக் கிழங்கு வகைகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் எப்போவோ ஒரு முறை சாப்பிடுவது உண்டு. தைராயிடுக்குக் காலை வெறும் வயிற்றில் மருந்து எடுத்துக் கொள்கையில் கட்டாயமாய் முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, நூல்கோல், முள்ளங்கி சேர்க்கக் கூடாது.முன்னெல்லாம் முள்ளங்கி ரொட்டி, சாம்பார், முள்ளங்கிக் கறி எனப் பண்ணுவேன். இலையைக் கூட விட்டு வைத்ததில்லை. இப்போ முள்ளங்கி வாங்கியே ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது.

      Delete
  11. ஒரு பூரி செட் வாங்கி அதை இவ்வளவு தூரம் பிரிச்சு மேஞ்சுட்டீங்களே...?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கில்லர்ஜி, நாங்கல்லாம் வெறும் வாயையே மெல்லும்போது அவல் கிடைச்சால் விடுவோமா?

      Delete
  12. நான் மாமியாராக இருந்து, 'எல்லாம் தெரியும்' என்று சொல்லிக் (பீத்திக்)கொள்ளும் மருமகள் வந்தால், அப்படியா அம்மா....இனிமேல் எல்லாவற்றையும் நீயே செய்துவிடேன்... என்று சொல்லிடுவேன். என்ன சரிதானே..

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் பீத்திக்கல்லாம் இல்லை. எங்க வீடுகளிலேயே சமையல் தான் 12,13 வயது ஆனால் சொல்லிக் கொடுப்பாங்க. மற்றச் சுற்று வேலைகள் எல்லாம் செய்துடலாம். சமையலில் உப்பு, காரம் அமையறதும், திட்டமாகச் சமைப்பதும் தான் முக்கியம்னு சொல்வாங்க. ஆனால் எங்க புக்ககத்தில் நேர் மாறாகச் சமையல் சொல்லி எல்லாம் கொடுக்க மாட்டாங்க. பொதுவாக வேலைகளே சொல்லிக் கொடுக்க மாட்டோம், தானாக வந்துடும் என்பாங்க. நானெல்லாம் அவ்வளவு புத்திசாலி இல்லை. சொன்னால் தான் புரியும்னு இருக்கும் ரகம்.

      Delete
    2. நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் எப்போவுமே நான் தான் எல்லா வேலைகளையும் செய்து வந்திருக்கேன் என்பதைச் சொன்னால் நம்பவா போறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  13. //ரங்க்ஸையே சமைக்க// - ஏதோ கம்ப சூத்திரம் மாதிரி சொல்றீங்க. கபர்தார்... ஆண்கள்லதான் 'நள பாகம்' 'பீம பாகம்'னுலாம் ஆட்கள் இருக்கு. நினைவிருக்கட்டும். ஹாஹா.

    Jokes apart..விரைவில் உங்களுக்கு சுமாராவது செய்யத் தெரிந்த கேடரர் கிடைக்கட்டும். என்னைக் கேட்டால் பேசாம சாம்பார், ரசம் வாங்கிக்கொண்டு, காய் சரியில்லைனா அப்பளாம் பொரிச்சு மேனேஜ் பண்ணிக்க வேண்டியதுதான். இதோ வடு, மாங்காய் சீசன் வந்தாச்சே

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, என்ன சப்போர்ட் அவருக்கு? அவரால் இப்போல்லாம் முன்போல் சமைக்க முடியாது. காஃபி வரைக்கும் போட்டாலே பெரிய விஷயம். சாம்பார், ரசம் மட்டும் 50 ரூபாய்க்கு மேலே இருந்தால் தான் எந்தக் காடரரும் கொண்டு வந்து தருவாங்க. இல்லைனா போய் வாங்கணும். தினம் தினம் அலைய முடியுமா? அதோடு என்றோ ஒரு நாள் அப்பளம், வடாம், வறுவல் போட்டுக்கொண்டு சாப்பிடலாம். தினம் முடியாது.

      Delete
  14. கடைசி ஐடியா கலக்கல்.., :)

    அடுத்தவர்கள் சமைத்து சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டம்தான். நம் கைப்பக்குவம் அவர்களுக்கும் வராதே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், சமையல் வாசம் உங்களை உடனே இழுத்து வந்திருக்குப் போல! இஃகி,இஃகி! அடுத்தவங்க சமைச்சால்னு எல்லாம் இல்லை. இந்தக் காடரர்கள் சமைச்சால்! நம் கைப்பக்குவத்தையும் எதிர்பார்க்கலை. சுமாராகச் சாப்பிடும்படி இருந்தால் போதுமே! எங்கே! :(

      Delete
  15. அட ராமா. கீதாமா. இப்படி எல்லாமா நடக்கும்?
    உங்க சமையலுக்கு நான் சாட்சி. இத்தனை குறிப்புகள் சமைக்காமல் கொடுக்க முடியுமா.

    அனியாயமா இருக்கே:(

    என்னை எங்க வீட்டில் ஆங்கிலம் தெரியாது{ தெற்கிலிருந்து
    வருவதால்} என்று சொன்ன நினைவு.
    சினிமாவைப் பற்றி என்ன கேட்டாலும் எங்க ரேவதி சொல்லி விடுவாள்:))))))))))
    Pre judgemental......
    அப்போ எல்லாம் வருத்தம் வந்தது.
    இதே தைராய்ட் எனக்கும் இருக்கு.
    உடம்புக்கு என்ன !!!அது பாட்டு கொண்டாடிக்கட்டும்.
    இத்தனை வேலைகள் செய்ததால் தான்
    இப்பொழுதும் எழுத முடிகிறது.
    ஒரு நல்ல கேடரர் இருக்கக் கூடாதோ.
    இவ்வளவு தில்லுமுல்லா செய்வார்கள். கேட்கவே சகிக்கவில்லைமா.

    கண் சிகித்சைக்கும் அடுப்புக்கும் ஆகாது.
    அத்ற்குள் நல்ல வழி பிறக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நிறையச் சமைச்சதே தப்போனு நில சமயம் தோணுது! :)))) எல்லாப் புக்ககங்களிலும் அவங்க வீட்டுப் பெண்களை விட மருமகள்கள் ஒரு படி கீழேனு தான் நினைப்பாங்க போல!
      உங்களுக்கும் தைராய்ட் இருக்கா? அட? நல்ல காடரர் என்பதே அரிதாகத் தான் இருக்கு. இந்த விஷயத்தில் சென்னையில் மாம்பலத்தில் கொஞ்சம் பரவாயில்லை. அதிலும் அறுசுவை நடராஜனின் தம்பி வைச்சிருக்கும் காமாட்சி மெஸ் மிளகு குழம்பில் இருந்து எல்லாமும் நன்றாகப் பண்ணறாங்க. இங்கேயும் ஒரு பெண் மிளகு குழம்புனு கொடுத்தாங்க. அதில் மிளகு எவ்வளவோ அதைவிட 3 மடங்கு வெல்லம்! :(

      Delete
  16. என் கண் ஆப்ரேஷன் சமயத்தில் ருசியாக சமைத்து கொடுத்தவரை அன்புடன் நினைத்து பார்க்க வைக்கிறது உங்கள் பதிவு. எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தவர் .

    இரண்டு கண்களும் செய்து கொண்டேன். முதல் கண் அறுவை சிகிட்சை செய்து கொண்ட போது மாமியார், மாமனார் மாயவரத்திற்கு வந்து இருந்தார்கள் . அவர்களுக்கும் சேர்த்து நன்றாக செய்து கொடுத்தார் சமையல் செய்பவர். பெரிய கல்யாணங்களுக்கு சமையல் செய்பவர் எங்களுக்கு ஒரு மாதம் செய்து கொடுத்ததை மறக்க முடியாது.
    அடுத்த கண் செய்து கொண்ட போதும் நானே செய்து கொடுக்கிறேன் என்று முன் வந்து செய்து கொடுத்தார்.

    உங்களுக்கு நல்ல சமையல் செய்து தருபவர்கள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, கும்பகோணம், மாயவரத்தில் இன்னமும் இப்படி எல்லாம் செய்பவர்கள் இருக்காங்கனு நினைக்கிறேன். இங்கே கொஞ்சம் அரிதாகவே காண முடியும். காசுக்குச் செய்பவர்களே ஏனோதானோ என்றுதான் செய்யறாங்க. எப்படியோ குறைந்தது ஒரு மாதம் ஓட்டியாகணும்.

      Delete
  17. நான் சமைப்பேன் என்று நம்புவதற்கும் பலருக்கு கஷ்டம்! காரணம் சமையலை பற்றி பேச மாட்டேன். எப்போதும் கையில் புத்தகம் இருக்கும். நான் மஸ்கட்டில் இருந்த பொழுது வேலைக்குச் சென்ரு கொண்டிருந்தேன், நாடகத்தில் நடித்தேன், புத்தகங்களில் எழுதினேன் ஒரு பெண் என்னிடம்,"வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்பீர்கள், அதனால்தான் இத்தனையும் செய்ய முடிகிறது" என்றார்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, சமையல் மட்டுமில்லை, எழுதுவதையும் கிண்டல் அடிச்சவங்க/அடிக்கிறவங்க உண்டு. என்னத்தை எழுதப் போறே! எல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே என்பார்கள். சரி நீ எழுதிக்கொடு! உன் பெயரில் நான் போடறேன் என்றால் முழிப்பாங்க! வீட்டு வேலைக்கு நான் கடந்த 2 வருடங்களாகத் தான் ஆள், தேள் எல்லாம். நானே தான் எல்லாம் செய்து வந்தேன். என்னை நானே, "சகலகலாவல்லி" என்று பீத்திக் கொள்வேன் என் கணவரிடம்.

      Delete
  18. உங்கள் கண் பிரச்சனை சரியாகவும், நல்ல காடரர் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி பானுமதி!

      Delete
  19. வணக்கம் சகோதரி

    நலமா? நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்கள் கண் சிகிச்சை நல்லபடியாக நடந்து நீங்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நாம் எத்தனை வேலைகள் செய்தாலும் நம்மை குறை கூறுபவர்கள் ஏதாவது குறை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். அதில் அவர்களுக்கு என்ன லாபமென்று அவர்களுக்கே தெரியாது. நம்மாலும் தெரிந்து கொள்ளவும் முடியாது. உங்களைப் பற்றி நாங்கள் அறிவோம். நீங்கள் வீட்டு வேலைகளுடன், தினசரி சமையலும், பண்டிகைகளுக்கு படசணங்கள் பலவும் செய்யும் திறமைசாலி என்பதை உங்கள் பல பதிவின் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம். பல பதிவுகளில் உங்களின் கை மணத்துடன் கூடிய திறமையான பக்குவமான முறைகளை நீங்கள் பதிந்திருப்பதே சான்று.

    உங்கள் கண் பிரச்சனை சரியாகும் வரை நல்ல இடத்தில் சமையல் சாப்பாடு கிடைக்க வேண்டும் என்று நானும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்கள் உறவுகளில எவராவது வந்து இந்த சமயத்தில் உதவ மாட்டார்களா? யாரையேனும் உதவிக்கு கொஞ்சம் அழைத்துப் பாருங்களேன்.

    எனக்கும் அன்று உங்கள் பதிவில் வந்து சொன்ன மாதிரி நெட் பிரச்சனை படுத்தி விட்டது. அதை ஒரு பதிவாக்கி என் தளத்தில் போட்டு விட்டு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

    மற்றும் சகோதரி கோமதி அரசு அவர்கள் மனந்தேறி பதிவுலத்திற்கு வந்திருப்பதை கண்டும் மிக மகிழ்ச்சியடைந்தேன். உங்களின் விட்டுப் போன பதிவுகளையும், மற்றும் வலையுலக உறவுகளின் பதிவுகளையும் இனிதான் நெட் சரி வர வரும் போது படிக்க வேண்டும்.

    இதற்கு முன் ஒரு கருத்துரை எழுதி வெளியிடும் போது அதை காக்கா அநியாயமாக அப்படியே கொத்திக் கொண்டு போய் விட்டது. இது எப்படியோ? உங்கள் அன்பான பகிர்வினுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, உங்க பதிவுக்கும் காலம்பர வந்து கருத்துப் போட்டேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கணினியில் சார்ஜ் இல்லை. அது தானாக அணைந்து விட்டது. என்ன கருத்துரை போட்டேன் என்பதைச் சேமிக்கவும் முடியலை. இப்போப் போய் ஏதோ எழுதிட்டு வந்திருக்கேன். நீங்கள் இங்கே வந்து கருத்துரை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. உறவுகள் யாரையும் கூப்பிடுவதாக இல்லை. எல்லோருக்கும் அவங்க அவங்க பிரச்னைகள் நிறைய இருக்கு. இணையம் இங்கேயும் இப்போ நாலைந்து நாட்களாக அடிக்கடி போயிட்டுப் போயிட்டு வந்துட்டு இருந்தது. இப்போ 2 நாட்களாகப் பரவாயில்லை.

      Delete
  20. என்னையும் இப்படித்தான் இந்த உலகம் நம்ப மாட்டேங்குது மாமி. YouTubeல சமையல் வீடியோ கூட போட்டு காட்டியாச்சு, ஆனாலும் நம்ப மாட்டேங்கறாங்க.  சிலருக்கு அப்படி ஒரு ராசி தான் போங்க, same pinch :)

    வீட்டு வேலையும் அப்படித் தான், இப்ப கொரோனால இருந்து வீட்டு வேலைக்கும் ஆள் இல்லை, உள்ள, வெளிய, மாடி, சுத்து எல்லாமும் நானே செய்யறேன். கமெண்ட் என்ன தெரியுமா? "வீட்ல என்ன பத்து பேரா இருக்கீங்க? பாப்பாவும் வளந்துட்டா". இவங்ககிட்ட நாலு நாளுக்கு என் பொண்ணை அனுப்பி வெக்கணும், ஹா ஹா ஹா. அடுத்த வாரத்துல இருந்து ஆள் சொல்லி இருக்கேன், ஒத்து வருதானு பாப்போம்  

    நமக்கெல்லாம் நல்ல மனசு, அதான் சரிரம் பூசினாப்ல இருக்கு you know, so dont worry :) 

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஏடிஎம், நம்பிட்டோமுல்ல! இஃகி,இஃகி,இஃகி!
      சரி,சரி, போனாப் போகுது, முன்னைக்கு இப்போ இட்லி நல்லா வரதுனு சொல்றதாலே ஏத்துக்கலாம். ஆள் வந்தால் போதாது, நீங்க சொல்றாப்போல் ஒத்து வருதானு பார்க்கணும். அதான் முக்கியம். அதுக்குத் தான் நான் ஆளே வைச்சுக்கலை. இப்போ இந்தப் பெண்மணி கொஞ்சம் ஒத்து வரார். என்ன ஒரு பிரச்னைன்னா வாரம் 3 நாட்கள் விடுமுறை எடுத்துப்பார். ஆனால் முன்கூட்டிச் சொல்லிடுவார்! :)))))

      Delete
  21. Wishing you to get a good catering service by the time you go for surgery. Take care. "இதுக்கு நானே செஞ்சுக்கலாம் போங்கப்பா" Moment தான். Goodluck to you on that too :) :) :)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஏடிஎம், கடைசியிலே நானே தான் செஞ்சுக்கப் போறேனோ என்னமோ! பார்ப்போம். எப்படியும் ஃபெப்ரவரி 20 தேதிக்குப் பின்னர் தான்! விருந்தினரெல்லாம் வராங்க. வந்து போனப்புறமா வைச்சுக்கணும்.

      Delete
  22. அதிசயமாக எஙகள் ப்ளாக் மூலம் தொடர்பு கிடைத்தது. இப்படிதான் உலகம். நன்றாக சமைக்கத் தெரிந்திருப்பதால் மற்றவர்களுடையதை ஏற்றுக் கொள்வதில் சிரமம் என்று சொல்லுவார்கள். சுலபமாக ஒரு ரஸம்,கறி என்று இப்போதே உங்களவருக்குப் பயிற்சி அளித்து விடுங்கள். குக்கரில் வேக வைக்க மாட்டேன். அது இது என்று சொல்லாமல் சில ஸுலபமாக கற்றுக் கொடுங்கள். தப்பாக நினைக்க வேண்டாம். ஆனால் நீங்கள் காஸ் அருகில் போகக் கூடாது. இது என் உத்தரவு அபிமானமாக அனபுடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா, உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. எங்கள் ப்ளாக் மூலமே பார்த்து வாங்க. தொடர்ந்து வருகையை எதிர்பார்க்கிறேன். நீங்க சொல்றபடி செய்யணும்னு தான் நினைக்கிறேன். பார்ப்போம். எல்லாம் இறைவன் அருளால் நல்லபடியாகப் பொழுது கழியும்னு நம்பிக்கை இருக்கு.

      Delete
  23. நல்ல பதிவு... ஆனால்
    எனக்குத் தான் வருத்தம்... விரிவாக கருத்து எழுத முடிய வில்லையே என்று...

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை துரை, வந்ததும் கருத்துச் சொன்னதுமே போதும். நன்றிப்பா.

      Delete
  24. இந்தக் காலத்தில் கேடரர்களை எல்லாம் நம்பாதீர்கள்... அதற்கெல்லச்ம் விரிவான காரணங்கள் இருக்கின்றன.. முடிந்த வரைக்கும் நமது பார்வையில் சமையல் ஆகட்டும்... ஆனாலும் அப்படியெல்லாம் நிகழ்வதில்லை...

    இறைவன் அருளால் எல்லாம் நலமாகட்டும்..

    ReplyDelete
    Replies
    1. பார்ப்போம். முன் கூட்டியே அமர்க்களம் பண்ணுகிறேனோ? என்னும் எண்ணமும் உண்டு. ஆனால் இதன் மூலம் யாரானும் ஶ்ரீரங்கத்துக்காரங்க படிச்சு நல்ல காடரராகச் சொல்லலாமே என்னும் நப்பாசையும் உண்டு. எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு. ஆகவே இதுக்கும் கிடைச்சுடும்.

      Delete