குட்டிக்குஞ்சுலு பள்ளிக்குப் போக ஆரம்பித்து விட்டது. முன்னெல்லாம் விளையாட்டுக்கு "நான் பிசி" என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே ஓடும். இப்போ நிஜம்மாவே பிசி. அதிலும் பள்ளியில் சுமார் ஒன்றரை மணி நேரம் விளையாட விடுகிறார்களாம். அதில் கொட்டம் அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தால் விளையாடியபோது ஏற்பட்ட அழுக்கை நீக்கக் குளிப்பாட்டும்போதே தூங்கி விடுகிறதாம். பாவம்! அதுக்குப் பாலும் அங்கே சரியாய்க் கிடைப்பதில்லை. இங்கே பள்ளிகளில் உணவு அம்பேரிக்கா மாதிரி அவங்க கொடுப்பதில்லை. நாம் தான் கொடுத்து அனுப்பணும். குஞ்சுலுவுக்கு அதைச் சாப்பிடத் தெரியவில்லை/அல்லது பிடிக்கலை. அது வேறே! நாமெல்லாம் பள்ளியில் படிக்கையில் பள்ளி அருகேயே வீடு இருந்ததால் மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வந்திருப்போம். நாங்க வந்தோம். ஆனால் இங்கெல்லாம் அப்படி இல்லை. குஞ்சுலுவுக்கு இங்கே பல்லி, கரப்பான், மரவட்டை, மற்றச் சில ஊர்வன போன்றவற்றைப்பார்க்க முடிகிறதாம். ஆகையால் வீட்டுக்குள் எப்போதும் செருப்பு அணிந்து கொண்டே இருக்கின்றனர். குஞ்சுலு தனியாக வீட்டுக்குள் சுற்றி விளையாடவும் யோசிக்கிறது. நாளடைவில் எல்லாம் பழகி விட்டால் இந்தியா வந்தால் அதற்குப் புதுசாகத் தோணாது. எங்க அப்பு என்னிடம் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் "பாட்டி, பல்லி இன்னமும் இருக்கா?" என்று கேட்பாள். நானும் பல்லியைப் படம் எடுத்து வாட்சப்பில் அனுப்பி இருக்கேன். அப்புவுக்கு இந்தியா பிடிக்கும். சொல்லப் போனால் இங்கே வந்து எங்களுடன் இருந்து எங்களைப் பார்த்துக்கவும் அவளுக்கு ஆசை!
*********************************************************************************
ஒரு வழியாக "அத்திமலைத் தேவன்" ஐந்து பாகங்களையும் முடித்துவிட்டேன். கடந்த ஒரு மாதமாகச் சமைத்தேன், சாப்பிட்டேன், வேலைகள் செய்தேன், எல்லாம் அன்றாட நிலவரப்படி நடந்து வந்தாலும் ஏதோ வேறே காலத்தில் இருந்தாப்போல் ஒரு எண்ணம். இவ்வுலகில் இருப்பவை கண்களில் பட்டாலும் மனதில் பதியாமல் இருந்தது,குஞ்சுலுவைத் தவிர்த்து. இப்போ அத்திமலைத் தேவனை முடிச்சதும் நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் இருக்கிறது. அத்திமலைத் தேவன் என்னும் ஒரு புத்தகம் வெளிவந்ததும் அதைப் படித்துவிட்டு ஆதி வெங்கட்,, அவர் மகள் ரோஷ்ணி ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு படித்ததையும் ஆதி விவரித்திருந்தார். அப்போதெல்லாம் அவ்வளவு மனதைக் கவரவில்லை. அதன் முக்கியக் கரு அத்திவரதர் என்பது குறித்த விபரம் அப்போது தெரிந்து கொள்ளவில்லை. பின்னர் நாளாவட்டத்தில் தெரிய வந்தது. நரசிம்மா அதற்கு முன்னர் எழுதிய சில நாவல்களை ஆதியிடமிருந்து வாங்கிப் படித்திருந்தேன். இதை யாரிடமிருந்து வாங்கிப் படிப்பது? ரொம்ப யோசனை! அப்போத் தான் திடீரென எதிர்பாராவிதமாகப் புத்தகங்கள் கிடைத்தன. கொடுத்தவருக்கு நன்றி சொல்லி விட்டுச் சீக்கிரம் திருப்பணுமே என்னும் எண்ணத்தில் படிக்க ஆரம்பித்தாலும் நடு நடுவில் தொடர முடியாமல் பிரச்னைகள். அத்தி வரதர் காஞ்சிக்குச் சென்று அடையும் வரை எப்படி அக்ஞாதவாசம் இருந்தாரோ அம்மாதிரி நானும் புத்தகத்தைத் தொடாமலேயே சில/பல நாட்கள் இருக்க நேர்ந்தது. அப்புறமா ஒருவழியாகத் தொல்லைகள் கொஞ்சம் குறைந்து புத்தகத்தைத் தொடர முடிந்தது.
***********************************************************************************
பல்லவர்கள் சரித்திரம் எனக்குக் கல்யாணம் ஆன புதுசில் முதல் முதல் காஞ்சி போனப்போத் தெரிய வந்து ஆச்சரியமா இருந்தது. ஆனால் அப்போவும் முழு விபரங்கள் தெரியாது. பின்னர் நாளாவட்டத்தில் "தெய்வத்தின் குரல்" புத்தகம் மூலம் காஞ்சிப் பெரியவர் பல்லவ குலத்தைப் பற்றிச் சொல்லி இருப்பது குறித்துத் தெரிய வந்தது. அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் என்பதும், பாரத்வாஜ கோத்திரம் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் அதில் காம்போஜத்தைப் பற்றியோ தேவராஜ மார்க்கம் பற்றியோ குறிப்பிட்டிருந்ததாய் நினைவில் இல்லை. நரசிம்மா தொண்டை நாட்டுக்காரர் தானே! அதனால் பல்லவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கார் போல என நினைத்தால் அவர் எங்கேயோ போய்விட்டார். சாணக்கியன் காஞ்சிபுரத்துக்காரர் என்பதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போகிறார். ஆனால் இதில் ஒரு விஷயம் எனக்குப் புதிதல்ல. அது தான் அசோகனின் கொலை வெறி! இது ஹிந்தி படிச்சிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. அசோகனின் கொலைவெறியை வைத்து ஹிந்தியில் நாவல்கள், பாடல்கள், நாடகங்கள் என வந்திருக்கு. நான் விஷாரத் படிக்கையில் தெரிந்து கொண்டேன். தன் சொந்த அண்ணனையே காதல் போட்டியிலும்/அரியணைப் போட்டியிலும் கொன்றுவிட்டு அசோகன் பட்டத்துக்கு வந்தான் என்பதைத் தெரிந்து கொண்டிருந்தேன். கலிங்கத்துப் போர் அவன் மனதை மாற்றியது என்றாலும் அதற்கான வலுவான காரணங்களை "அத்திமலைத் தேவன்" மூலமே அறிந்து கொண்டேன்.
போதி மரம் குறித்த தகவல்கள் புதியவை. அது அசோகன் மனைவியால் சிதைக்கப்பட்ட தகவலும் புத்தம் புதிது. ஆம்ரபாலியை நாடகமாகப் படித்திருக்கேன் ஹிந்தியில்! இதில் நிறைய விபரங்கள். தாய் வயிற்றில் இருந்த பிம்பிசாரனைக் குழந்தையாகப் பாதுகாத்த முறையும், அதுவும் தாய் இறந்த பின்னரும், செலுகஸ் நிகேடார் மகளை சந்திரகுப்தன் மணந்து கொண்டான் என்பதை நாம் படிச்சிருக்கோம். ஆனால் பிம்பிசாரன் அவளுக்குப் பிறந்த பிள்ளை அல்ல என்பது புதிது! அவன் சந்திரகுப்தனின் இந்திய மனைவிக்குப் பிறந்தவன் என்னும் செய்தியை இப்போது அறிந்தேன். தேவ உடும்பர மரம் பற்றியும் ஸ்ரீதள மணி பற்றியும் புதிதாக அறிந்தேன். ஸ்ரீதள மணி மாலை உக்ரோதயமாக மாற்றப்பட்டு தன் உக்கிரத்தைக் காட்டி வந்து கடைசியில் ஒருத்தருக்கும் கிடைக்காமல் கடலடியில் மறைந்தது நானே சொந்தமாக எதையோ இழந்து விட்டாற்போல் ஒரு எண்ணம்.
என்ன தான் புத்திசாலியாகவும் ஓர் அரசையே உருவாக்கும் சாமர்த்தியம், திறமை நிறைந்திருந்தாலும் சாணக்கியர் செய்த தவறு தேவ உடும்பர மரம் பற்றியும் அத்திமலைத் தேவன் பற்றியும் வடக்கேயும் போய்ச் சொன்னது தான். அதன் விளைவுகள் அசோகனின் மகள், மகன், அவர்களுடன் வந்த ஆம்ரபாலி எனத் தொடர்ந்தாலும் ஒரு கட்டத்தில் வடக்கே இருந்து வந்த மன்னர்களுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத் தெற்கே இருந்த சேர, சோழ, பாண்டிய வம்சங்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள சொந்த, பந்தங்கள், விருப்பு, வெறுப்புகள் என ஆரம்பிக்கின்றன. அதற்குள் விரிவாக நாளைப் பார்ப்போம்.
தொடரும்!
குஞ்சுலுவுக்கு புதிய இடம் விரைவில் பழக்கத்துக்கு வரட்டும்.
ReplyDeleteபடித்த நூல்களைப்பற்றிய அலசல் நன்று தொடரட்டும்...
அத்தி மரத்தேன் நான் இதுவரை குடித்ததில்லை.
நன்றி கில்லர்ஜி. குஞ்சுலு பழகி விடும். புத்தகங்கள் பற்றி நிறைய அலச ஆவல் தான்! அத்திமரத்தில் தேனா? கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் இந்தப் புத்தகங்கள் ஐந்து பாகங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 750 பக்கங்கள். உங்களால் பொறுமையாக உட்கார்ந்து படிக்க முடியுமா? சந்தேகமே!
DeleteI think he meant "Athimalai Thevan" , not "Then".
DeleteRajan
அவர் சொல்லி இருப்பது "தேன்" தான் திரு ராஜன். ஏனெனில் குடித்ததில்லைனு சொல்லி இருக்காரே!
Deleteyep, you are correct. This tree (athi, fig) does not flower and hence no nectar..... it bears the fruit directly without any flower.!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஓ.. அங்கெல்லாம் பாலர் பள்ளிகள் திறந்தாகி விட்டதா? தங்கள் பேத்தி விரைவில் நன்கு எல்லாம் சாப்பிடும்படியாக வளர்ந்து,புதுப் பள்ளிக்கு பழக்கமாகி நல்லபடியாக படிக்க இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
அத்திமலைத் தேவன் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்தமை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அந்த நூலைப்பற்றி நன்கு விமர்சனம் செய்துள்ளீர்கள். சேர, சோழ பாண்டிய, பல்லவ, மெளரிய சரித்திரங்கள் பள்ளியில் படிக்கும் போது நினைவுக்குள் நன்றாக இருந்தது. அதன் பின் தொடரும் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. (எங்கே.. நம் சரித்திரத்தை புரட்டவே நேரம் கிடைக்காமல், நாட்கள் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது.:)) ) இப்போதும் படிக்க சரியாக நேரங்கள் அமையவே மாட்டேன் என்கிறது. நீங்கள் அனைத்தையும் நன்றாக நினைவு வைத்து கூறுகிறீர்கள். இதைப் பார்க்கும் எனக்கும் இந்தப் புத்தகத்தை படிக்க ஆர்வம் மேலிடுகிறது. பார்ப்போம்.. என் ஆவல் நிறைவேறுகிறதாவென்று.... மீண்டும் நாளை/இன்று தொடரும் தங்கள் சரித்திரப் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, இது கிட்டத்தட்ட ப்ளே ஸ்கூல் மாதிரினு நினைக்கிறேன். கல்வியாண்டு அங்கெல்லாம் ஆகஸ்ட் - செப்டெம்பரில் ஆரம்பிக்கும். யு.எஸ்ஸிலும் அப்படித் தான்! எங்க குழந்தைகள் படிச்ச கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆகஸ்டில் ஆரம்பிக்கும்.
Deleteசரித்திரக்கதைகளின் ருசி சாதாரண நாவல்களில் ஏது? எனக்கு மிகவும் பிடித்தவை சரித்திர நாவல்களே! இது கிடைக்கும்னு எதிர்பார்க்கவில்லை. திடீரெனக் கிடைத்ததோடு அல்லாமல் படித்ததும் திடீரெனப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு வழியாக நேற்றோடு முடிச்சுட்டேன்.
Deleteஅத்தி மலைத்தேவன் குறித்த உங்கள் வாசிப்பனுபவம் நன்று. நான் இன்னும் படிக்கவில்லை. தமிழகம் வரும்போது தான் படிக்க வேண்டும் - நேரம் எடுத்து!
ReplyDeleteவாங்க வெங்கட், அனுபவங்கள் நிறைய. இங்கே குறிப்பிடுவது கொஞ்சமே! கட்டாயமாய் நேரம் எடுத்துக் கொண்டு படியுங்கள்!
Deleteகுகு வுக்கு புதிய இடம் பழகி வருவது மகிழ்ச்சி. குழந்தைகள்தானே.. எளிதில் பழகி விடுவார்கள். பல்லி எல்லாம் கு கு வைக் கவர்ந்த பொருட்களாக இருப்பது ஆச்சர்யம்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், அங்கே யு.எஸ்ஸில் எல்லாம் கரப்பு, பல்லிகள்னு பார்க்க முடியாது. வண்ணாத்திப் பூச்சிகள் வசந்த காலத்தில் வரும். அப்போப் பெரும்பாலோருக்குப் போலன் அலர்ஜி என்னும் நோயும் கூடவே வரும்! இஃகி,இஃகி, இஃகி! இங்கே குழந்தைக்கு மரவட்டை முதற்கொண்டு பார்க்க முடிகிறது. :)))))
Deleteஎன் தங்கையின் பேத்தி சற்றே முரட்டுத்தனம் காட்டினாலே சுருங்கி விடுகிறாள். முரட்டுத்தனம் என்றால் அவளுக்கு அவள் அமர்ந்திருக்கும் இடத்தில் காற்று உரைக்கவில்லை என்று தங்கை அவளைத் தன்னருகே அழைக்க, அவள் மென்மையாக மறுக்க, இவள் சும்மா இங்கே வா என்று தூக்க, அவள் முகம் சுருங்கி, உதடு பிதுங்கி நின்றது கஷ்டமாகவும் இருந்தது. இப்படி வளர்ந்தால் பின்னர் எப்படி வலுவானவளாக வளர்வாள் என்கிற கவலையும் வந்தது!
ReplyDeleteவேண்டாம்னா விட்டுடணும் ஶ்ரீராம். அதோடு தங்கை பெண் வேலைக்குப் போகிறாரோ? குழந்தையை வெளி மனிதர்கள் பார்த்துக்கறாங்களோ? வலுவில் எல்லாம் குழந்தையைத் தூக்க வேண்டாம். தூக்காமலே விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தால் தானாக வருவாள்.
Deleteஅத்திமலை தேவன் பற்றி அழகாக சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு அந்த மாதிரி சொல்ல வரவில்லை.
ReplyDeleteநீங்க வேறே! உங்களைப் போல் சொல்லத் தெரியலைனு நான் நினைச்சேன்.
Deleteஸ்ரீராம் எப்போதுமே வேறு கோணத்தில் எழுதுவார்... விமர்சனம் போல எழுதமாட்டார் என்பது என் அபிப்ராயம். நல்ல எழுத்துத் திறன் உள்ளவர் (அவருக்குப் பாராட்டு கிடையாது. அந்த ஜீனைத் தானம் செய்த அப்பாவுக்குத்தான் ஹாஹா)
Deleteஆமாம், ஶ்ரீராம் எழுதுவதை விட நான் எழுதுவது நல்லா இருக்குனு ஶ்ரீராமே சொல்வது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteஎப்பவுமே நமக்கு நம் சரக்கைவிட அடுத்தவங்க சரக்கு மதிப்புள்ளதா தோன்றும். கீதா அக்கா எழுதி இருப்பதில் அவர்களுக்கு இதில் எல்லாம் இருக்கும் ஆழ்ந்த அறிவு வெளிப்படுகிறது. நான் மேலோட்டமா எழுதுகிறேன்.
Deleteஹாஹாஹாஹா!
Deleteதெய்வத்தின் குரல் என்னிடம் இருந்தாலும் படித்ததில்லை. படிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteகட்டாயமாய்ப் படியுங்க! ஏதோ ஒரு பாகம் தவிர்த்த மற்ற ஆறு பாகங்கள் உள்ளன. அதில் ஒன்றே ஒன்றை மட்டும் எடுக்கும்படி வைச்சிருக்கேன். மற்றவை தேடணும். :( எனக்கே கிடைக்காது.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteகுஞ்சுலு மனம் கோணாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
சீக்கிரம் பழகட்டும்.
வெறும் மரவட்டையோடு அந்த ஊர்ப்பூச்சிகள் இருக்கும் வரை கவலை இல்லை.
மற்ற குழந்தைகளோடு விளையாடுவதும் நீந்துவதும் நல்ல
பயிற்சிகள். குழந்தைகள் மகிழ்ச்சியே நம்
மகிழ்ச்சி.
வாங்க வல்லி. அதுக்கு எல்லாம் ஆச்சரியங்கள் தானே இந்த வயசில்! விளையாடிட்டு வீட்டுக்கு வந்து உடனே தூங்கிடறது. பாவமா இருக்கும் தூங்கறச்சே பார்த்தால்!
Deleteதெய்வத்தின் குரல் வீட்டில் இருந்தாலே
ReplyDeleteமங்கலம். அவர் அருள் நம்முடன் இருக்கும். சின்னத்தம்பி
அப்படியே பெரியவாளுடன் ஒன்றி விடுவான்.
கண்ணில் நீர் வராமல் அவரைப் பற்றி அவனால்
பேசமுடியாது.
வல்லி, நீங்க சொல்வது உண்மை. பல சந்தேகங்களுக்கும் நிவர்த்தி கிடைக்கும். மனமும் ஆறுதல் பெறும்.
Deleteஇங்கே ஒரு பழைய கால ராணி கதையை
ReplyDeleteஅப்படியே சீரியலாக எடுத்து ஒளிபரப்புகிறார்கள்.
மனம் அந்த சூழலில் இருந்து விடுபட
கொஞ்சம் நேரமாகிறது. ஸ்ரீ நரசிம்மாவின் எழுத்தும் எனக்கு
மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.
நீங்கள் படித்து சொல்லுங்கள் அதுவே எனக்குப்
போதும்.
இந்திரா சௌந்தரராஜனையும் படிக்காமல்
விட்டது அதனால தான்.
என் தற்போதைய கவலை, சிங்காரமும் செங்கமலமும் விரைவில்
ஆனந்தமாகக் குடித்தனம் செய்யும் காலத்தை
எட்டிவிடத்தான்....அதை நோக்கியே இருக்கிறது:)))))))))
அந்தத் தமிழும் அந்த வர்ணனையும்
எப்போதும் எனக்கு இதம்.
பெரிய சரித்திரம், அதன் சூழ்ச்சிகள் ,தெளிவுகள்
பாரமாகிவிடுகின்றன.
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அட? நரசிம்மாவின் எழுத்து மன அழுத்தம் கொடுக்கிறதா? !!!!!!!!!!!!!!!!! எனக்கு அப்படி எல்லாம் தெரியலை. ஒருவேளை உங்களைப் போல் நான் ஆழ்ந்து ஒன்றிப் போவதில்லைனு நினைக்கிறேன். அடுத்த பதிவை இன்னிக்கு எழுதணும். நீங்க படிப்பது ராவ்பகதூர் சிங்காரமா? கொத்தமங்கலம் சுப்புவிடம் கொஞ்சி விளையாடுமே தமிழ்!
Deleteவல்லிம்மா... நரசிம்மாவின் எழுத்து மன அழுத்தம் தருகிறதா? ஏன்? ரொம்ப சுவாரஸ்யமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர் அம்மா அவர்.
Deleteஒருவேளை அவருக்கு அன்றைய நாட்களில் எழுதிய சரித்திரக்கதைகளில் நாம் படித்த/பார்த்த சரித்திர நாயக, நாயகிகளின் குணாதிசயங்களை மாற்றி விட்டது ஏற்கமுடியலையோ என்னமோ! முக்கியமா வந்தியத் தேவன், குந்தவை!
Deleteஅத்திமலைத்தேவன் பற்றிய அறிமுகம் சுவை. படிக்கத் தோன்றுகிறது.
ReplyDeleteநன்றி.
Deleteபேத்தி உங்களுடன் இருந்து உங்களைப் பார்த்துக்கொள்ளணும் என்று நினைத்துப் பேசுவதே நெகிழ்ச்சி. அந்தப் பேத்திக்கு 10 வயது இருக்குமா? குஞ்சுலுவுக்கு கொஞ்ச நாளில் பழகி, அம்பேரிக்காவே மறந்தாலும் ஆச்சர்யம் இல்லை.
ReplyDeleteஅமெரிக்காவில் ஸ்டூடண்ட்ஸுக்கு அங்க உள்ள கேண்டீனில் உணவு வாங்கிக்கலாமா இல்லை அவர்களே இந்த வகுப்புக்கு இந்த உணவு (வெஜ், நான் வெஜ் ப்ரிஃபெரென்ஸ் தவிர) என்று கொடுத்துவிடுவார்களா?
வாங்க நெல்லை, அவளுக்குப் பதினான்கு வயதாகிவிட்டது. இந்த வருஷம் பத்தாவது போகிறாள். அவள் குழந்தையிலிருந்தே என்னிடம் ஒட்டுதல் அதிகம். ஆனால் இங்கே உள்ள பள்ளிகள் அவளுக்குப் பிடிக்காது. விடுமுறைக்கு அவ அம்மாவிடம் (பெண்ணிடம்) என்னைப் பாட்டி, தாத்தாவிடம் அனுப்பு என்பாள்.
Deleteஅம்பேரிக்காவில் பப்ளிக் பள்ளி/தனியார் பள்ளி எதுவானாலும் சாப்பாடு பள்ளியில் எனில் முன் கூட்டியே பணம் கட்டிவிட்டு சைவ உணவா/அசைவ உணவா என்று சொல்லிடணும். அதற்கேற்றாற்போல் உணவு கொடுப்பார்கள். வெள்ளிக்கிழமை கட்டாயமாய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சீஸ் பிட்சா தான். வேறே உணவு இருக்காது. குட்டிக் குஞ்சுலு அங்கே தனியாரால் (குஜராத்தியர், ஸ்வாமி நாராயண் கோவிலைச் சேர்ந்தது) நடத்தப்பட்ட ப்ளே ஸ்கூல் போய்க் கொண்டிருந்தது. அங்கேயும் முதலில் மருமகள் உணவு வீட்டில் இருந்து தான் கொடுத்து வந்தாள். பின்னால் அது சாப்பிடுவதில்லை என்பதால் பள்ளியில் முழுக்க முழுக்க சைவ உணவு என்பதால் அவங்களைக் கொடுக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தாள். இப்போ இங்கே பள்ளியில் எந்தக் குழந்தைக்குமே உணவு கொடுப்பதில்லை. பிரிட்டிஷ் பள்ளி. ஆசிரிய ஆசிரியர்கள் அனைவருமே ஆங்கிலேயர்கள். உணவு வீட்டில் இருந்து தான் கொடுக்கணும். அது பழகக் குழந்தைக்குக் கொஞ்ச நாட்கள் ஆகும்னு நினைக்கிறேன்.
Deleteஅத்திமலைத் தேவன் - மிகுதியையும் விமர்சனத்தில் படித்துவிட்டுச் சொல்கிறேன்.
ReplyDeleteம்ம்ம்ம்ம் விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
Deleteபேத்தி துர்கா பள்ளி போய் வருவது மகிழ்ச்சி. அதுவும் விளையாடுவது மிகவும் நல்லது.
ReplyDeleteபேரனும் சிறு வயதில் ஊருக்கு வந்தால் முதலில் பல்லியை விரட்ட சொல்வான்.
மாயவரத்தில் நிறைய பல்லிகள் வீட்டில் இருக்கும் என்ன பேசினாலும் உச் கொட்டும்.
அதை கேட்க அவனுக்கு வியப்பாக இருக்கும்.
தெய்வத்தின் குரல் முன்பு கல்கியில் வரும் கல்கி கதைகள் தொகுப்பு எடுத்து வைத்து இருப்பதில் நிறைய இருக்கிறது படிப்பேன்.
அத்திமலைத் தேவன் கதை படிக்கும் ஆவலை உண்டாக்கி இருக்கிறது உங்கள் விமர்சனம்.
கல்கியின் பார்த்திபன் கனவு படித்து கொண்டு இருக்கிறேன். முன்பே படித்த கதை இருந்தாலும் படித்து வருகிறேன் மீண்டும். மகன் வீட்டில் புதுமை பித்தன் கதைகள், பொன்னியின் செல்வன் எல்லாம் இருக்கு படிக்க வேண்டும்.
வாங்க கோமதி! அப்புவுக்குப் பல்லி என்றாலே அலர்ஜி! ஒரு பல்லியைப் பார்த்துவிட்டால் போதும் அந்த இடத்திலிருந்து ஓடி விடுவாள். தனியாக அந்த அறையில் இருக்க மாட்டாள்.
Deleteநீங்க சொல்வது கல்கியில் மஹாபெரியவரின் பொன்மொழிகள் என நினைக்கிறேன். தெய்வத்தின் குரல் திரு ரா. கணபதி அவர்களால் தொகுக்கப்பட்டு ஆறு/ஏழு பாகங்களாக வந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஐநூறு பக்கங்கள். இணையத்தில் காமகோடி/ஆர்க் பக்கத்தில் எல்லாப் பாகங்களும் படிக்கக் கிடைக்கும். அதனாலேயே புத்தகத்தைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு படிக்கச் சோம்பல். தேவையான தகவல்களை இணையம் மூலமே பெற்றுக் கொண்டு விடுகிறேன்.
கல்கியில் பெட்டி செய்தி போல் கதைகளுக்கு இடையில் தெய்வத்தின் குரல் என்று மஹா பெரியவரின் பொன்மொழிகள் வரும். தலைப்பு தெய்வத்தின் குரல்தான். ஊரில் கல்கியில் வந்த தொடர்கதை பொன்னியின் செல்வன் எடுத்து வைத்து இருக்கிறேன் . அதிலிருந்து படம் எடுத்து அனுப்புகிறேன்.
Delete@கோமதி, அவை என்னிடமும் உள்ளன. இது நான் சொல்வது முற்றிலும் வேறு. https://www.kamakoti.org/kamakoti/newTamil/newtamil.html இந்தச் சுட்டியில் பாருங்கள். ஏழு பாகங்களும் கிடைக்கும்.
Deleteவணக்கம் மேடம்.
ReplyDeleteபடிக்கத்தூண்டும் நூல் அறிமுகம்.
சீக்கிரம் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் நூல்களை ஒரு மாதம் தனியாக ஒதுக்கி படிக்கும் ஆர்வம் உள்ளது.
விரைவில் செய்கிறேன்.
தொடர்ந்து உங்கள் அறிமுகம் வரும் நாளை எதிர்ப்பார்க்கிறேன்.
பேத்தி வெளிநாட்டில் இருந்தும் நெருக்கமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி.
வாங்க அர்விந்த், முதல் வருகையோ? வந்ததுக்கு மகிழ்ச்சியும், நன்றியும். காலச்சக்கரம் நரசிம்மாவின் நூல்கள் நான் படித்தவை குறித்து அநேகமாய் விமரிசனம் செய்திருக்கேன். இது ஒரு மாதமாகப் படிக்க ஆரம்பித்து இப்போத்ஹ் தான் முடிஞ்சது. தொடர்ந்து விமரிசனம் வரும். படித்துக் கருத்துச் சொல்லுங்கள். பேத்தியைக் குழந்தையிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கோம். இரண்டு பக்கத்துத் தாத்தா/பாட்டிகளையும் அவளுக்குத் தெரியும்.
Deleteஅன்புள்ள கீதாம்மா, மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அத்திமலைத்தேவன் படிக்க வேண்டும் என்னும் ஆவலை தூண்டுகிறது! பொன்னியின் செல்வனை 20 ஆண்டுகள் முன் என் கல்லூரி நாட்களில் படித்த பொழுது இப்படியே தான் , அந்த காலத்திலேயே சஞ்சரித்தேன்! அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்!
ReplyDeleteவாங்க வானம்பாடி, சுவாரசியம் தான். திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்தது. சரித்திர ஆதாரங்களைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார். பொன்னியின் செல்வனை நான் முதல் முதல் படிச்சப்போ ஏழு வயசு! நம்ப முடியுமா? ஆனால் அப்போத் தான் படிச்சேன். ஆனால் அப்போ முழுசும் கிடைக்கலை. அதன் பின்னர் முழுசும் கிடைச்சுப் படிச்சப்போ சுமார் பதினைந்து வயது இருக்கும். அடுத்த பதிவு விரைவில் வரும்.
DeleteTake care of kuttu kunjulu! my love to little kid!
ReplyDeleteகுஞ்சுலு சமர்த்தாக இருக்கு! சாப்பாடு தான் பிரச்னை. மற்றபடி அது நன்றாக விளையாடுகிறது. பால் கன்டென்ஸ்ட் மில்க் போல் இருக்கும் போல! அதை எடுத்து நீர் ஊற்றிக் கரைத்துக் கொடுக்க வேண்டி இருக்கு! அதான் கொஞ்சம் பிரச்னையா இருக்கு!
Deleteஹாஹா குட்டி குஞ்சுலு போலத்தான் எங்க மகளும் ..ஸம்திங்ஸ் மூவிங் on தி wall என்றா:) இங்கிலாந்தில் எலியாச்சும் பார்க்கலாம் ஆனா எங்க மக 5 வயசு வரைக்கும் ஜெர்மனி அதனால் ஒண்ணுமே தெரில :)எல்லாத்தையும் பார்த்து வளரட்டும் குழந்தை .பேத்திகளுக்கு தாத்தா பாட்டிமேல் அபார பிரியமுண்டு ..........................செலூகஸ் நிகேடர் பிம்பிசாரர் !!! ஆஆ வரலாற்றில் படித்த நினைவு
ReplyDeleteஹூஸ்டனில் தோட்டத்தில் சுப்புக்குட்டியார்/ பூச்சி வகைகள் பார்க்கலாம். முயல்கள் குழி பறித்துக் குட்டி போட்டு விட்டுத் தோட்டத்தில் பூமிக்கு அடியில் விளைவதை எல்லாம் சாப்பிட்டுட்டுப் போயிடும். குட்டிகள் சமர்த்தாகக் குழிக்குள் தூங்கிட்டு இருக்கும். பார்க்கவே அழகு!
Deleteகுஞ்சுலுவுக்குப் புதிய இடம் பழக வேண்டும்... குழந்தை கல்வி கேள்விகளில் பாட்டியைப் போல் பிரகாசிப்பதற்குப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்...
ReplyDeleteநன்றி துரை. அவ அம்மாவும் அப்பாவும் கூடப் படிப்பில் கெட்டிக்காரர்களே! குழந்தை நோய் நொடி இல்லாமல் ஆயுசோடு நன்றாக இருந்தால் போதுமானது. பிரார்த்தனைகளுக்கு ரொம்ப நன்றி.
Delete