எனக்கு முதல் முதல் அத்தி வரதர் பற்றிய தகவல் நான் கல்யாணம் ஆகி வேலைக்குப் போனப்போக் கூட வேலை பார்த்த ஶ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கனகவல்லி என்னும் சிநேகிதி மூலம் தெரிய வந்தது. ஆனாலும் அப்போ எல்லாம் இத்தனைத் தகவல்கள் தெரியாது/யாரும் சொல்லவில்லை. 40 வருடங்களுக்கு ஒரு முறை அத்தி வரதர் வெளியே வருவார் என்பது மட்டுமே தெரிய வந்தது. ஏன் உள்ளே வைச்சிருக்காங்க என்பதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. சிலர் அவரை வெளியே வைக்கக் கூடாது எனவும், அதோடு இல்லாமல் அந்நியப் படையெடுப்பின்போது அத்திவரதர் மறைத்து வைக்கப்பட்டதாகவும் சொன்னார்கள். ஆனால் யாருமே அக்கினியிலிருந்து தோன்றியவர் எனச் சொல்லவில்லை. அதை முதலில் நரசிம்மா மூலமே தெரிந்து கொண்டேன். என் வாழ்நாளில் 79 ஆம் வருடம் ஒரு முறை அத்தி வரதர் வெளி வந்திருக்கிறார். அப்போ நாங்க சிகந்திராபாதில் இருந்தோம். ஆனால் இம்முறை அத்தி வரதர் வந்தப்போ நடந்தாப்போல் கோலாகலக் கொண்டாட்டங்கள், கூட்டங்கள், விமரிசனங்கள் ஏதும் அப்போ இருந்ததாய்த் தெரியலை. அல்லது முழுக்க முழுக்கக் குடும்பச் சூழ்நிலையில் முழுகி இருந்த எனக்குத் தெரியலை.
காஞ்சிக் கோயிலில் அத்திவரதர் மூழ்கி இருக்கும் அனந்த சரஸ் குளமும், அதன் மண்டபத்தில் ஆடிய நடிகை (கோழி கூவுது விஜி) க்கு நேர்ந்த துயரச் சம்பவங்கள் பற்றியும் அறிய நேர்ந்தபோது உண்மையிலேயே அதிர்ச்சி! இப்படியும் நடக்குமா என்பது! ஆனால் நடந்திருக்கே! நரசிம்மாவுக்கும் அத்தி வரதர் அந்நியப் படையெடுப்பில் பின்னமாக்கப்பட்டதாகச் சொல்லி இருக்காங்க. அவர் முழுத்தகவல்களுக்குகாகவும் தேடி அலைந்திருக்கார். காஞ்சியின் தல வரலாற்றிலும் அத்தி வரதர் தோன்றிய விதம் சொல்லப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எனக்குப் புதிது. அத்தி மரத்தை மஹாவிஷ்ணு என்பார்கள். வீட்டில் அத்திமரம் இருப்பதையும் விசேஷம் எனச் சிலரும், இருக்கக் கூடாது எனச் சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அகத்தி வேறே அத்தி வேறே! அந்த அத்திமரம் பற்றி நாம் அறியாத பல தகவல்களைச் சொல்கிறார் நரசிம்மா! அத்திமரம்/பூவரசு எனவும் தேவ உடும்பரம் எனவும் பெயர் பெற்றிருப்பதாய்ச் சொல்கிறார். அதோடு அல்லாமல் இது உக்கிரத்தைத் தணிக்கும் என்பதாலேயே கோபத்துடன் பாய்ந்த வேகவதியான சரஸ்வதியின் உக்கிரம் அத்திமரத்துண்டுகளைப் போட்டதும் நிதானம் கொண்டதாயும் தெரிவிக்கிறார்.
எல்லாவற்றையும் விட ஆச்சரியத்தில் ஆழ்த்துகிற தகவல் என்னன்னா புத்தர் ஞானம் பெற்றது இந்த தேவ உடும்பர அத்திமரத்தினடியில் தான் என்கிறார். புத்தருக்கு ஞானம் கிடைத்ததாலே போதி மரம் என்னும் பெயரைப் பெற்றதாகவும். இந்த தேவ உடும்பர அத்திமரம் தென்னாட்டில் காஞ்சியிலும் வடக்கே புத்த கயாவில் புத்தர் ஞானம் பெற்ற இடத்திலும் இருந்ததாயும், வடக்கே இருந்த தேவ உடும்பர அத்தி மரத்தைத் தான் அசோகன் வலிந்து மணந்து கொண்ட கலிங்கத்து இளவரசி திஸ்ஸரக்கா நாசமாக்கினதாயும் சொல்கிறார். ஆனால் இந்த மரத்தின் தன்மை இதன் வேர்/பூ/விதையை இன்னொரு மரத்தில் நட்டால் உடனே அந்த மரத்தோடு இணைந்து மீண்டும் ஜனிக்கும் என்பதும் ஆச்சரியமான செய்தி. அப்படி வந்தது தான் இப்போது நாம் அனைவரும் பார்க்கும் போதி மரம் என்றும் சொல்கிறார். அதோடு இல்லை, சிவன் கையிலிருக்கும் உடுக்கை இந்த தேவ உடும்பர அத்திமரத்தால் செய்யப்பட்டது எனவும் சொல்கிறார். அதனாலேயே இதை"உடம்ரூ" என அழைத்த வட இந்தியர்கள் இப்போது கொச்சையாய் "டம்ரூ" எனச் சொல்வதாயும் சொல்கிறார்.
அத்திமரம் அஷ்டமாசித்திகளையும் அளிக்க வல்லதாம்.தத்தாத்ரேயர் நின்று கொண்டிருப்பது தேவ உடும்பர அத்திமரத்தின் கீழ்தான் என்கிறார்கள். வடமொழியில் இந்த மரம் "காஞ்சி" என அழைக்கப்பட்டதால் இந்த மரங்கள் நிறைந்திருந்த காஞ்சியைக் காஞ்சி என்னும் பெயராலும் "அத்திவனம்" என்னும் பெயராலும் அழைக்கப்பட்டதாய்ச் சொல்கிறார். புத்தகயாவில் இருந்தது இந்த மரம் தான் என்றும் இப்போதுள்ள அரசமரம் அல்ல என்றும் திட்டவட்டமாய்ச் சொல்லுகிறார். இதன் விதையை வேறொரு மரத்தில் விதைத்தால் அது வளர்ந்து மூல மரத்தைப் பிளந்து கொண்டு வந்துவிடும் தன்மை உள்ளது என்கிறார்.
இத்தகைய சக்தி வாய்ந்த அத்திமரம் வடக்கே பாழ்பட்டுவிட்டதை அறிந்து கொண்டு தெற்கே இருக்கும் அத்திமரத்தையும், அத்தி வரதனையும் தேடிக்கொண்டு பல மன்னர்கள் படை எடுத்து வருகின்றனர். அவர்களில் சமுத்ரகுப்தனும் ஒருவன். ஆனால் இங்கே வந்ததும் மனம் மாறிப் பல்லவர்களோடு சமரசம் செய்து கொண்டு தான் வந்ததற்கு அடையாளமாகச் சித்ரகுப்தன் கோயிலைக் கட்டிவிட்டுச் செல்வதாய்க் கூறுகிறார் நரசிம்மா. அந்தச் சித்ரகுப்தன் கோயில் நாம் இப்போது பார்க்கும் இடத்தில் யமனுடைய கணக்குப் பிள்ளையாகக் காட்சி தந்தாலும் சமுத்ரகுப்தன் கட்டும்போது அவனை நினைத்துக் கட்டவில்லை என்கிறார்.
உபபாண்டவர்களைக் கொன்ற அஸ்வத்தாமாவுக்குக் கண்ணன் கொடுத்த சாபத்திலிருந்து நீங்க முடியாமல் பரசுராமரின் ஆலோசனையின்படி அவன் தெற்கே வந்து அத்தி வனம் எனப்படும் அத்திவரதர் இருப்பிடத்திற்கு வந்து தவம் செய்ய வருகிறான். அங்கே அவன் உடல்நிலையைக் கூடக் கருதாமல் ஓர் பெண் மணந்து கொள்ள அவள் மூலம் இரு பிள்ளைகளைப் பெறுகிறான் அஸ்வத்தாமா. அவர்களில் தொண்டைச்செடி மாலையுடன் இருக்கும் புலிசோமா என்னும் பெயருள்ள பிள்ளையின் வம்சாவழியினரே பல்லவர்கள் என்னும் பெயருடன் நாட்டை ஆளத் தொடங்குகின்றனர். இன்னொரு பிள்ளையான அஸ்வதன் என்பவன் தன் தாயுடன் செல்கிறான். அவன் தான் சாவகத் தீவு என அப்போது அழைக்கப்பட்ட காம்போஜத்தின் அரசனாகிறான். அவர்கள் கடைப்பிடிப்பது தேவராஜ மார்க்கம் எனப்படும் தெய்விக நெறி. இங்கேயோ புலிசோமா அத்திவரதரையே குலதெய்வமாய்க் கொண்டு தேவராஜனாக வணங்கி வருகிறான். அத்தி வரதரை ஸ்தாபிதம் செய்யும்போது குபேரன் யக்ஷ நேத்திரக் கற்களால் ஆன மாலை ஒன்றைச் செய்து அத்திவரதருக்கு அளிக்கிறான். அந்த மாலையை சித்திரை மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தன்று அத்தி வரதருக்கு அணிவித்தால் அன்றைய தினம் விண்ணில் ஏற்படும் ஒளி மிகப் பிரகாசமாகக் காம்போஜம் வரையும் தெரியுமாம். மேலும் அப்போது அத்திவரதர் கிழக்கே பார்த்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததால் ஒவ்வொரு சித்திரை ஹஸ்தத்தன்றும் காம்போஜத்தில் பூகம்பமும் ஏற்படுமாம். காஞ்சிக்கு நேர் கோட்டில் காம்போஜத்தின் தலைநகரான தரும நகரம் இருக்கிறதாயும் சொல்கிறார். காஞ்சியிலும் ஒரு தரும நகரம் இருந்திருக்கிறது.
அதே போல் அக்காலத்தில் தக்ஷசீலா/நாளந்தாவைப் போல் காஞ்சியின் முக்கூடல் கடிகை எனப்படும் பல்கலைக்கழகமும் மிகவும் பிரபலமாக இருந்து வந்திருக்கிறது. மாணவர்கள் நானா திசைகளிலிருந்தும் வந்து கல்வி கற்றுக்கொண்டு செல்வதும் போவதுமாக இருந்திருக்கின்றனர். கிட்டத்தட்டக் கதையையே சொல்கிறேனோ? தெரியலை. ஆனால் பல்லவர்கள் காலம் அஸ்வத்தாமாவின் மகனில் இருந்து ஆரம்பிக்கிறது. சிம்ம விஷ்ணு காலத்தில் பிரபலம் அடைகிறது. அத்திவரதருக்காகவும், அவருடைய ஶ்ரீதள மணிமாலைக்காகவும் பலரும் வருகின்றனர். அதனால் ஏற்படும் சிக்கல்கள்! அத்திவரதரை வைத்துக் கொண்டு அஸ்வமேத யாகம் செய்தால் நினைத்தது நடக்கும் எனவும் மொத்த பாரதத்தையும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வந்துவிடலாம் எனவும் பல மன்னர்கள் அத்தி வரதரை அடையவும் தேவ உடும்பர மரத்தின் பட்டைகளுக்காகவும் போர் தொடுக்கின்றனர். அவர்கள் முயற்சி பலித்ததா?
தொடரும்!
என்னவோ தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவது போல இருக்கிறது. மீதியையும் படித்துவிட்டுச் சொல்கிறேன்.
ReplyDeleteஅதெல்லாம் இல்லை நெல்லை. நான் கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன். அதுக்கே ஶ்ரீராம் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிக்கொண்டிருக்கார்.
Deleteநெல்லை இங்கேயே புத்தகச் சுருக்கத்தைப் படித்து விடலாம் என்று பார்க்கிறார்!!!!!
Deleteஹாஹாஹா, அதில் சுவாரசியம் இல்லையே!
Deleteகீசா மேடத்துக்கு விமர்சனம் எழுதுவது கஷ்டம்னு நினைக்கிறேன். அவங்களுக்கு நிறைய தகவல்கள் தெரியும் என்பதால் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டுச் சொல்லி அதில் சந்தேகமோ அல்லது புது விஷயம் என்றோ சொல்லிவிடுகிறார். புத்தக விமர்சனம் ஒரு பக்கத்துக்கு மேல் எழுதினால், உள்ளடக்கங்கள் நிறையச் சொல்லவேண்டிவரும்.
Deleteஸ்ரீராம் - கதைச் சுருக்கம் படித்தாலும், புத்தகத்தில் ஆசிரியர் எப்படி அதனைக் கொண்டுபோகிறார் என்று படிப்பதில்தான் சுவாரசியம் இருக்கு. பொன்னியின் செல்வன் கதையை 5 பக்கங்களுக்குள் யாரேனும் சொன்னாலும், கதையைத் திரும்பப் படிப்பதற்கு அது இடைஞ்சலாக இருக்காது. இவர் (நரசிம்மா) நிறைய தகவ்ல்களோடு எழுதுகிறார், நல்ல திறமை...ஆனாலும் எனக்கு கதை லாஜிக்கலா இல்லையே, நிறைய வலிந்து எழுதியிருக்கிறாரே, அட டுபாக்கூரா இருக்கே என்றுதான் தோன்றும்.
ஸ்ரீ
ஒரு விதத்தில் கஷ்டம் தான் நெல்லை. புத்தக விமரிசனத்தை நான் எழுதவே ஆரம்பிக்கவில்லை என்பதே உண்மை. இது ஶ்ரீராமுக்கும் புரிஞ்சிருக்கும். அதில் உள்ள சில முக்கியத் தகவல்களையே சுவாரசியம் கூட்டுவதற்குப் பகிர்ந்துள்ளேன். எழுநூறு பக்கங்கள் கொண்ட முதல் பாகத்தின் விமரிசனம் இதோடு முடிந்தது. அடுத்த பாகங்கள் எப்படினு யோசித்துக்கொண்டு இருக்கேன். நரசிம்மா டுபாக்கூரெல்லாம் இல்லை. இதை நான் உண்மையாகவே மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். கதையில் தர்க்கரீதியான ஒத்துக்கொள்ளக் கூடிய வரலாற்றுத் தகவல்கள்/கல்வெட்டுத் தகவல்கள் உள்ளன. ஒத்துக்கொள்வதும் ஒத்துக்கொள்ளாததும் நம் இஷ்டம். ஆனால் இதைப் படித்த பின்னர் எனக்கு வந்தியத் தேவன் மேலோ/குந்தவையின் மேலோ கருத்துகள் மாறவில்லை. என் கருத்து எனக்கு. நரசிம்மாவின் கருத்து அவருக்கு. நான் இரண்டையுமே ரசித்தேன்/ரசிக்கிறேன்/ரசிப்பேன். சங்கதாராவையும் இப்படித் தான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு படித்தேன். ஆனால் அதில் தர்க்கரீதியாக எனக்கும் தெரியலை. ஆனால் இதில் அப்படி இல்லை.
Deleteகுந்தவையைப்பற்றி நரசிம்மா எழுதிய நாவலைப் படித்த பிறகுதான், எனக்கு, இது என்னடா டுபாக்கூரா இருக்கு என்று தோன்றியது. May be அதற்குக் காரணம், கல்கி ஒவ்வொரு வரலாற்று நாயகர்/நாயகியின் குணாதிசயங்களாக நம்மிடம் கொண்டு சேர்த்தது, நம் மனதில் பதிந்தது.
Deleteஅவரே அதை ஒத்துக்கொள்கிறாரே நெல்லை! ஆனால் சோழர்கள் குறித்து அவருக்குப் பொதுவாக ஒரு அடிமன வெறுப்பு இருக்கோனும் தோணும். தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் அனைவருமே சோழர் காலத்தைப் பற்றி மட்டுமே பெருமையாகச் சொல்லுவார்கள். பல ஆய்வுகளும் சோழர் காலக் கல்வெட்டுக்களையே ஆய்வு செய்திருக்கின்றனர். குடவோலை முறைத் தேர்தல்/ தண்ணீர் வடிகால் அமைக்கும் முறை/நிர்வாகம்/கோயில்கள் பராமரிப்புனு எதை எடுத்தாலும் சோழர்கள் தான் முன்னுக்கு நிற்பார்கள். அதோடு இல்லாமல் சோழர்கள் சிறந்த சிவ பக்தர்கள் என்றும் சொல்வார்கள். ராஜராஜ சோழனைப் பற்றி நரசிம்மா சொல்லி இருப்பது ஒரு விதம். ஆனால் என் நண்பர் திவாகர் எழுதிய எம்டன் நாவலில் அவனை "சிவபாதசேகரன்" எனவும் யோக முறையில் தன் உயிரைத் தானே நீக்கிக் கொண்டதாயும் குறிப்பிட்டிருப்பார். கடைசி நாட்களில் ராஜராஜ சோழன் அரியணையை மகனுக்குக் கொடுத்துவிட்டு இறைவன் நினைப்பில் தியானம்/யோகம் என இருந்ததாயும் சொல்கிறார்.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஅழகாகச் சொல்கிறீர்கள்.
எத்தனை செய்திகளைக் காவியமாக
நரசிம்மா சொல்கிறார்.!!!
அத்திவரதன், அத்தி மரம், காம்போஜம் என்று எத்தனை விவரங்கள்!!!
சாதாரண உழைப்பில்லை இது.
மஹாப் பிரம்மாண்ட யக்ஞம்.
உத்தமமான புத்தகம்.
நீங்கள் சொல்லித் தெரிந்து கொள்வதில்
எனக்கு மிக மகிழ்ச்சிமா.
அடுத்த அத்தியாயத்துக்காகக் காத்திருக்கிறேன்.
வாங்க வல்லி, இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்னும் விதமாக நாவலில் ஏகப்பட்ட செய்திகள்.வரலாற்றுக்குறிப்புகள். உண்மையில் நரசிம்மா அந்தக்காலத்துக்கே தான் போனதோடு இல்லாமல் நம்மையும் கூட்டிச் செல்கிறார்.
Deleteஇவ்வளவு விவரங்களையும் சொல்ல வேண்டாம் என்றே நான் சொல்லவில்லை. படிப்பவர்கள் கதைச்சுருக்கம் போல இங்கேயே படித்து விட்டால் அதை வாங்கும், படிக்கும் சுவாரஸ்யம் போய்விடும் என்பதோடு, அது எழுத்தாளருக்கு செய்யும் அநீதி என்றும் தோன்றியது. கிட்டத்தட்ட முழு வரலாற்றையும் சுருக்கமாக சொல்லி வருகிறீர்கள்.
ReplyDeleteஹிஹிஹி, இங்கே நான் கதைச்சுருக்கம்னு நினைச்சுச் சொல்லலை. உண்மையில் அத்திமரம் என்பதைப் பற்றியும், அத்தி வரதர் என்பவரைப் பற்றியும் பெரும்பாலானவர்கள் அறிய மாட்டார்கள். ஆகவே அத்திமலைத்தேவனைப் படிக்க ஒரு தூண்டுகோலாக அமையும் என எதிர்பார்த்தேன்.
Deleteஆனாலும் நான் இதைத் தான் குறிப்பிட்டிருந்தேன், உங்களைப் போல் எனக்கு எழுத வராது என! வளவளனு நான் எழுதுவேன். நீங்க சுருக்கமாக விஷயத்தைத் தொட்டும் தொடாமலும் செல்வீர்கள். அந்தக் கலை எனக்கு இல்லை/வராது.
Deleteநீங்கள் சொல்வது சரியாய் இருக்கலாம். இந்த விவரங்கள் ஆர்வத்தைத் தூண்டலாம் என்று தோன்றுகிறது.
Deleteநான் ஒரு விஷயம் மட்டும் சுவாரஸ்யம் காட்டி அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருந்தேன். நீங்கள் எல்லாவற்றையும் அழகாய்க் கவர் செய்கிறீர்கள்.
Deleteம்ம்ம்ம் ஶ்ரீராம், நான் ஐந்து பாகங்களையும் தனித்தனியாக விமரிசிக்க எண்ணி இருக்கேன். அலுப்புத்தட்டுவதாய்த் தோன்றினால் நிறுத்திடுவேன். :))))
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. அத்திவரதரைப்பற்றி எனக்கும் தெரியாது. தற்போது இந்த தடவை பிரபலம் ஆனதிலிருந்துதான் அவரைத் தெரிந்து கொண்டேன். நீங்கள் அழகாக விளக்கியுள்ளீர்கள். நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். தங்களது விமர்சனமே சுவாரஸ்யமான ஒரு சரித்திர கதையை படித்த திருப்தியை தந்தது. மற்றுமொருமுறை படித்து மனதில் ஏற்றிக் கொள்கிறேன். அருமையான இடத்தில் ஆசிரியரைக் போன்று நீங்களும் தொடரும் போட்டு விட்டீர்கள்.விரைவில் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. நீங்க ரசித்ததுக்கு நன்றி. ஶ்ரீராம் கதைச் சுருக்கத்தைத் தருவதாய்ச் சொல்கிறார். உண்மையில் அவர் கொடுத்திருக்கும் முன்னுரையைத் தான் நான் இங்கே குறிப்பிட்டிருக்கேன். இஃகி,இஃகி, கதையை எழுதுவதெனில் சாமானியமாக நடக்கும் விஷயமா அது?
Deleteதெரியாம சொல்லிட்டேன்.. ஒவ்வொருத்தர் கிட்டயும் என் பேரைச் சொல்லணுமா!!!!!
Delete@ஶ்ரீராம், ஹெஹெஹெஹெஹெ! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா!
Deleteஅத்திமலைத் தேவன் - உங்கள் வழி சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன் - நூல் விரைவில் படிக்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது.
ReplyDelete@வெங்கட், பல விஷயங்கள் இருக்கின்றன. வரலாறு மட்டும் இல்லை. பூகோளமும் நன்றாக அறிந்து வைத்திருப்பதால் சில நுணுக்கமான செய்திகளைச் சொல்லுகிறார். அதை நம்மால் மறுக்கவும் முடியாது.
Deleteநிறைய விஷயங்கள் சொல்லியிருக்கீங்க ..பெரிய புத்தகமோ ? கொஞ்சம் நாள் பதிவுகள் வராத காரணம் புரிந்தது .புத்தகத்தில் ஆழ்ந்துட்டிங்க :) ஒருவர் தனது வாழ்நாளில் இருமுறை அத்தி வரதர் தரிசனம் செய்ய வாய்ப்புண்டு இல்லையா .
ReplyDeleteவாங்க ஏஞ்சல்! பெரிய புத்தகங்கள். ஐந்து பாகங்கள். எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட நான்காயிரம் பக்கங்கள். ஒவ்வொரு பாகமும் எழுநூறு பக்கங்களுக்குக் குறைவில்லை. உண்மையில் புத்தகத்தில் ஆழ்ந்து தான் போனேன். எல்லோருக்கும் இரு முறை அத்திவரதர் தரிசனம் கிட்டி விடுமா என்ன? அதற்கும் நாம் கொடுத்து வைச்சிருக்கணுமே! ஆனால் சிலர் 3 முறை கூடப் பார்த்திருக்காங்க!
Deleteபிரமிப்பாக இருக்கின்றது..
ReplyDeleteநிறைய யோசிக்க வேண்டும்..
ஆமாம், யோசிக்கணும் தான்! யோசிக்க யோசிக்கச் சில விஷயங்கள் புரிந்தாலும் பலது இன்னமும் மறைவாகவே இருக்கின்றன.
Deleteதிருக்குளத்தின் நீராழி மண்டபத்தில் (கோழி கூவுது) விஜி ஆடினது எதற்காக!.. எந்தப் படத்திற்காக?..
ReplyDeleteதுரை, நரசிம்மா இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கார். ஆனால் நடிகை பெயரைச் சொல்லவில்லை. சம்பவங்களை அவர் குறிப்பிட்டது பற்றியும் விஜிக்குத் தான் கால்களில் பிரச்னைகள் வந்ததாலும் இவர் தான் எனப் புரிந்து கொண்டேன். ஆனால் அப்போதே கோயில் ஊழியர் ஒருவர் அங்கே படப்பிடிப்பு நடத்தக் கூடாது எனத் தடுத்திருக்கார். அந்தப் படம் வெளிவந்ததாய்த் தெரியவில்லை. இதன் பிறகு விஜியின் பட உலக மார்க்கெட் சரிவடைந்ததாகவும் உடல்நலக்கேடு முக்கியமாய்க் கால்கள் கொடுத்த பிரச்னையும் அவர் கால்களுக்கு மாற்றிச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையும் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை ஒதுங்கிக் கொண்டதும் சேர்ந்து அவர் தற்கொலைக்குக் காரணம் ஆனது என்பதை அப்போதே சொல்வார்கள்.
Deleteஅத்திமலை தேவன் உங்கள் மனதை கவர்ந்த மாதிரி படிப்பவர்கள் மனதையும் கவர்வார் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteவிமர்சனம் செய்வது ஒரு கலை. அதை சிறப்பாக செய்து இருக்கிறீர்கள்.
வாங்க கோமதி! எனக்குத் தெரியலை. ஆனாலும் பொதுவாகவே சொல்லணும்னு நினைக்கிறேன். விரிவாகச் சொன்னால் கதையின் உள் கரு புரிந்து விடும்.
Delete