எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 19, 2021

நான் போட்ட எட்டு! (2007 ஆம் ஆண்டு)

எட்டுப் போட்டிருக்கேன், பாருங்களேன்!

எட்டுப் போடறது எவ்வளவு கஷ்டம்னு வண்டி லைசென்ஸ் இந்தியாவிலே வாங்கறவங்களுக்குத் தெரியும். இப்போ என்னடான்னா நம்ம இ.கொ. வந்து எட்டு போடுன்னு மிரட்டறதோடு இல்லாமல், எட்டு ஆள் வேறே பிடிக்கச் சொல்றார். எல்லாம் ஹெட் லெட்டர். வேறே என்ன? அதிலும் சாதனையா வேறே இருக்கணுமாமே! நான் ப்ளாக் எழுதறதே ஒரு சாதனைன்னு சொன்னால் அது பப்ளிஷ் ஆகிறது அதைவிட சாதனை. வரவர கணினி கிட்டே வரக் கூட முடியாமல் ஆணிகள் அதிகமா இருக்கு. "சிதம்பர ரகசியம்" ஒரு பக்கம் வா, வான்னு கூப்பிடுது, இன்னொரு பக்கம் "பம்பாய் ராயல் நேவி" புரட்சி என்னை அநாதையா விட்டுட்டியேனு கேட்குது. முதலில் இந்த எட்டைப் போட்டுடறேன். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

படிப்பிலே நல்லாப் படிப்பேன்னாலும், சாதனை எல்லாம் ஒண்ணும் பண்ணினதில்லை. இந்தக் கணக்கு வந்து காலை வாரும். அதிலும் கணக்கு டீச்சருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம், அம்பிக்கும் எனக்கும் மாதிரி. எனக்குக் கூட ரொம்ப நாளா ஒரு சந்தேகம் என்னோட கணக்கு டீச்சர் தான் அம்பியா மறுபிறவி எடுத்து வந்திருக்காங்களோன்னு. :P 

1. கணக்கே வராத நான் பள்ளி நாட்களில் எடுத்துப் படித்தது அக்கவுன்டன்ஸியும், காமர்ஸும். நாளாவட்டத்தில் பாடத்தில் விருப்பம் அதிகரிக்கவே, பின்னால் ஆடிட்டர் ஆகலாம் என்ற ஆசையும் இருந்தது. இத்தனைக்கும் அம்மாவோட விருப்பம் வேறேயா இருக்க அப்பா தன் விருப்பப் படி என்னை அதிலே சேர்த்திருந்தார். ஒரு இ.கொ. மாதிரியோ, ஒரு தி.ரா.ச. மாதிரியோ, ஒரு மணிப்பயல் மாதிரியோ ஆடிட்டராய் வந்திருக்கணும். பாருங்க, உங்க எல்லாருக்கும் போட்டியே இல்லாமப் போச்சு! ஒரே சாதனை பாதிப் படிப்பில் கல்யாணம் செய்து கொண்டது தான். இதுவும் அப்பாவின் விருப்பம்தான். ஆகவே திருமணம் ஆகிப் பத்து வருஷம் கழித்துப் பட்டம் மொழிப்பாடத்தில் வாங்க முடிந்ததே ஒரு சாதனை தான் என்னளவில்.

 2.நான் படிச்ச நாட்களில் என் தோழிகள் அனைவரும் "ஷுக்லா" புத்தகம் வைத்துப் படிக்க எனக்குக் கிடைத்ததோ என்னோட அப்பா படிச்சு, மாமாவுக்குக் கொடுத்து, பின்னால் பெரியப்பா பையன், என்னோட அண்ணா அனைவருக்கும் வந்து அதுவரை கிழியாமல் இருந்த "சுப்ரமணியம்" புத்தகம் தான். நான் ரொம்ப அடம் பிடித்ததன் பேரில் அப்பா யார் கிட்டேயோ போய்க் கேட்டு நான் பிறக்கும் முன்னேயே பப்ளிஷ் செய்யப் பட்ட "பாட்லிபாய்" புத்தகம் வாங்கிக் கொடுத்தார். அதை நான் கல்யாணம் செய்து கொள்ளும் வரை விட்டுப் பிரியவே இல்லை. அரை மனத்துடன் "பிரியா வடை" கொடுத்தேன், அதுக்கு.(ஹிஹி, வடைன்னா போதும், ஒரு சின்ன மாலையே போட்டுக்கும் இது) அடைப்புக்குறிக்குள் வழக்கம் போல் ம.சா. தான். நறநறநற. எனக்கு அப்புறம் படிச்ச என் தம்பி "ஷுக்லா" புத்தகம் புத்தம்புதியதாய் வாங்கிக் கொண்டதைப் பார்த்து அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டதும் ஒரு சாதனை தான்.

 3. கொஞ்சமாவது ஆங்கிலம் எனக்கு வருதுன்னா என்னோட ஆசிரியைகள் தான் காரணம். முதலில் ஆரம்பிச்சு வச்ச ரூபி டீச்சர், பின்னர் பள்ளி இறுதி நாட்களில் பாடம் சொல்லிக் கொடுத்த மிஸ்.ஜேகப் இருவரும் ஆங்கிலப் பாடம் நடத்துவதே தனி சுகம். அதுவும் மிஸ் ஜேக்கப் ஆங்கிலக் கவிதைகளுக்கு நடித்தே காட்டுவார், எங்களையும் நடித்துக் காட்டச் சொல்லுவார். ஒரு முறை நாங்கள் அனைவரும் பேசி வைத்துக் கொண்டு ஆசிரியையைத் திகைக்க வைத்தோம். வில்லியம் வொர்ட்ஸ்வொர்த்தின் ஒரு கவிதையில், "Books, 'tis an endless strife, come, hear the woodlands cry என்ற , வாசகங்கள் வரும். அதை என்னை நடித்துக் காட்டச் சொல்லும் போது நான் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விட்டு வெளியே சென்று சைகை காட்ட மொத்த வகுப்பும் என்னோடு வெளியேற திகைத்த ஆசிரியை பின்னர் நினைத்து நினைத்துச் சிரித்ததும் ஒரு சாதனை தான். 

4. பரிட்சை நாட்களில் அப்பாவுக்குத் தெரியாமல் பாட புத்தகங்களுக்குள் கதைப் புத்தகமோ, ஆனந்தவிகடனோ, கல்கியோ படிக்கிற சுகம் இனி எப்போ வரும்? சொல்லுங்க? அதுவும் ஒரு சாதனை தான். (என்னடா, அப்பா, அப்பான்னே சொல்றேன்னு பார்க்கிறீங்களா< எங்க வீட்டிலே அப்பா ஆட்சிதான். ரொம்பக் கண்டிப்பான அப்பா.) 

5.முதல் முதலில் ராஜஸ்தான் வரை வந்ததே ஒரு சாதனைதான் என்றால் அப்புறம் பல இடங்களுக்கும் ஊர்களுக்கும் போனது மற்றொரு சாதனை. இதில் இதுவரை யாருமே முறியடிக்காத விஷயம் முதல்வகுப்புக்கு டிக்கெட் வாங்கி விட்டு மூன்றாம வகுப்பில் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்கார்ந்து போனது தான் அதிகம். இதை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை.

 6. அமெரிக்கா எல்லாம் வருவேன்னு நினைச்சே பார்க்கலை. நான் போக ஆசைப் பட்ட இடம்னு பார்த்தால் இங்கிலாந்து ஒன்றுதான். அதுவும் அதிகமான அகதா க்ரிஸ்டி கதைகளின் வர்ணனையைப் படித்ததால் இருக்கலாம். அயர்லாந்தின் வடமுனையைப் பற்றிய அவரின் வர்ணனை ஒரு கதையில் வரும். அவரின் துப்பறியும் நிபுணர் ஆன " Hercule Poirot" அங்கே போயிருப்பார். அந்த இடம் செல்ல ஆசை. 

7. இரண்டு முறை அமெரிக்கா வந்தும் எந்த இடமும் சுற்றிப் பார்க்காமல் இருப்பதும் நாங்களாய்த் தான் இருக்கும். அதுவும் ஒரு சாதனைதான். சூழ்நிலையும், சந்தர்ப்பங்களும் அம்மாதிரி அமைகின்றது. ஆகவே போக முடியவில்லை. தவிர, சாப்பாடு வேறே ஒரு பிரச்னை. 

8. என்வாழ்நாளில் நிஜமான சாதனை என்றால் "திருக்கைலாய யாத்திரை" சென்றது தான். உண்மையில் நான் போவதாய் இல்லை. என் கணவர் தனியாகப் போக இருந்தார். என்னை அதிலே இழுத்துவிட்டது ட்ராவல்ஸ் ஏஜென்ட் தான். மனதில் எந்த உணர்வுகளும் இல்லாமல் தான் பிரயாணத்தை ஆரம்பித்தேன். வெற்றியாக முடித்து வைத்தது இறைவன். மற்றபடி நான் வலைப்பக்கம் ஆரம்பித்து எழுதுவது ஒரு சாதனை என்றால் அதன் மூலம் இத்தனை நண்பர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதும், ஒரு சாதனை தான். மெய் சிலிர்க்க வைக்கும் சாதனை! இது ஒன்றுதான். மனம் நெகிழ்ந்து போகிறது. *********************************************************************************** 

திரு ஜிஎம்பி அவர்கள் எட்டெட்டு வாழ்க்கைப் பதிவைப் பார்த்ததும் முன்னர் போட்ட எட்டுகள் நினைவில் வந்தன. அப்போதெல்லாம் அடிக்கடி தொடர் பதிவு இருக்கும்.  2007 ஆம் ஆண்டில் போட்ட எட்டு இது. இதற்குப் பிறகும் போட்டிருக்கும் நினைவு இருக்கு. தேடிப் பார்க்கணும். இது ஒரு மீள் பதிவு. 


எட்டுப் போடுங்க!  பழைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். இதிலே கீழே நான் அழைத்தவங்க பெயர்கள் இருந்தன. அதை மட்டும் எடிட் செய்துட்டுப் பதிவை மட்டும் போட்டிருக்கேன். 


புதுப்பதிவு போடத்தான் ஆசை! ஆனால் இப்போ வேணாம்னு தள்ளிப் போட்டிருக்கேன். அது வரைக்கும் நான் உங்க எல்லோருடைய நினைவில் இருக்கணுமே! அதான் மீள் பதிவு!

36 comments:

 1. எட்டும் எட்டு
  எட்டிடும் எட்டு
  கரும்பதன் கட்டு
  தமிழ்த் தேன்சொட்டு...

  பள்ளியின் நாட்களில்
  ஆனந்தச் சிட்டு
  பாவையாய் பூவையாய்
  மங்கலம் இட்டு
  தமிழையும் தொட்டு
  வழிநடைக் கண்டதும்
  வாஞ்சையின் பட்டு...

  சொன்னதும் சொல்வதும்
  அறிவினில் பட்டு..
  படிப்பவர் மனதினில்
  ஆனந்த மெட்டு..

  கயிலையைத் தொட்ட
  கனிவுடன் இட்டேன்..
  அக்கையின் பதிவினில்
  என் தமிழ் தொட்டு..

  ReplyDelete
 2. ஆஹா, பெரும்பேறு பெற்றேன்.நன்றி, நன்றி, நன்றி.

  ReplyDelete
 3. எட்டுப் போட்டதை, சேவை மாதிரி சொல்லியிருக்கீங்க. திரும்பவும் வந்து படிக்கிறேன்.

  இணையம் என்று சொன்னதும் இணைய நண்பர்கள் அனைவரும் நினைவுக்கு வருகின்றனர். சிலர் இணையத்திலிருந்து ரிடையர் ஆகிவிட்டனர். தமிழ்மணம் போன்று ஒன்று இல்லாத்தால் பலரது இடுகைகள் மிஸ் ஆகின்றன.

  இன்றைக்கு மனசில் கீசா மேடம் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சே என நினைத்தேன். போன வருடம் போட்ட வடகத்தை, லேசா ஜலம் தெளித்து இப்போவும் காயப்போட்டிருக்கீங்க. தொடர்ந்து எழுதணும்னு கேட்டுக்கறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை. திரும்பவும் வந்து உங்களோட கருத்தைச் சொல்லுங்க. அப்போ எழுதினவர்களில் ரேவதி தவிர்த்து யாரும் இப்போ எழுதுவது இல்லை. பதிவுகள் போடுவதை நானாகக் குறைத்திருக்கிறேன். அதோடு "அத்திமலைத் தேவன்" படிச்சுட்டுச் சீக்கிரம் திருப்பிக் கொடுக்கணும். மேலும் வீட்டில் கொஞ்சம் வேலைகள். மைத்துனனின் வருஷ ஆப்திகம் வருவதால் அதற்கான முன்னேற்பாடுகள். மாமாவின் வருமானவரிக் கணக்குக்காகச் சொந்த வேலைகள் கணினியில் என்று பொழுது போய்விடுகிறது.

   Delete
  2. என்னை மறந்திட்டீங்க. ராஜாஜி என்றாலே நண்பர் கோ.வி.கண்ணனுக்கு இளப்பம் தான். மூதறிஞர் காலத்து கல்வித் திட்டம் பற்றி என்னவெல்லாம் வாதாடி வாதாடி களைச்சுப் போயிருக்கோம் என்று நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது.

   இன்னிக்கு தேதிலே தேர்தல் மேடைகளில் கூட ராஜாஜியை நினைவு கொள்கிற ஒரே ஒருத்தர் திரு. பழ. கருப்பையா தான்.

   Delete
  3. // மாமாவின் வருமானவரிக் கணக்குக்காக...//

   டி.வி. சீரியல்களில் கணவரை இப்படித்தான் அழைப்பார்கள்.. :))

   அது சரி, நாங்களெல்லாம் ஜூலையில் தானே வ.வ. கணக்கை சமர்ப்பிப்பது?

   இப்போ ஏப்ரலில் 15H --ச்சோட சரி..

   Delete
  4. //ராஜாஜி என்றாலே நண்பர் கோ.வி.கண்ணனுக்கு இளப்பம் தான்//

   1963 கல்கண்டு இதழில் தமிழ்வாணன் சொல்லி இருக்கிறார்... "படிச்ச ராஜாஜி கூட இலவச பள்ளிக்கூடங்கள் திறக்கவில்லை.  ஆனால் காமராஜர் திறந்திருக்கிறார்..   சீக்கிரமே நம் தமிழ்நாடும் கேரளா போல நூறு சதவிகித படித்தவர்களை பெறும்"

   Delete
  5. உங்களை மறக்கவில்லை ஜீவி சார். எங்க காலத்தில் அதாவது 2005/2006 ஆம் ஆண்டில் எழுத ஆரம்பித்தவர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கேன். நீங்க அதன் பின்னர் 2,3 ஆண்டுகள் கழித்து எழுத வந்த நினைவு. ஜீவா நாங்க எழுதிய கால கட்டத்தில் தான் ஆரம்பித்தார்னு நினைக்கிறேன்.

   Delete
  6. தொலைக்காட்சித் தொடர்களில் சொல்லும் "மாமா" வேறே! நெல்லை, ஸ்ரீராம் மற்றும் சிலர் என் கணவரை மாமா என அழைப்பதால் குறிப்பிட்டிருக்கேன். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் அத்தை மகனைக் கூட மாமா என அழைக்கின்றனர். அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

   Delete
  7. காமராஜர் எந்த இலவசப் பள்ளிகளையும் திறக்கவில்லை. அரசுப் பள்ளிகளை அதிகரித்தார்.பலரும் எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அரசியல்வாதிகள் அவர்களுக்குப் பிடித்தவர்களை ஒரு மாதிரியாகவும், பிடிக்காதவர்களை ஒரு மாதிரியாகவும் குறிப்பிடுகின்றனர். ராஜாஜி சொன்னது காலை பள்ளி/மாலை தொழிற்கல்வி. அதுவும் அவரவர் குலத்தொழில் எனில் இன்னமும் எளிது என்பதே! ஏனெனில் ஓர் தச்சரின் பிள்ளைக்குத் தச்சுவேலையின் நுணுக்கங்கள் எளிதாய்ப் புரியும். பரம்பரையாக வருவது. அதே போல் அந்தக் கால மருத்துவத் தொழில் பார்த்தவர்களுக்கும்/ நாவிதர்களே பெரும்பாலும் மருத்துவம் பார்த்திருக்கின்றனர். ஆகவே அவர்கள் குழந்தைகள் மருத்துவத்தில் ஈடுபடலாம். இப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது தவறான பிரசாரங்களின் மூலம் முழுவதும் நிராகரிக்கப்பட்டு ராஜாஜியையும் அவமானப் படுத்தினார்கள். எனக்குத் தெரிந்து பல பிராமணச் சிறுவர்கள் பள்ளி நேரம் போகக் குறிப்பிட்ட நேரங்கள் காலை/மாலை வேதம் கற்கின்றனர். என் அண்ணா பிள்ளையும் அப்படி வேதம் கற்றார். புட்டபர்த்தியில் படித்தபோது அங்கே நடந்த பல வைதிகக் காரியங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இதில் அவமானமோ, வருத்தமோ ஏதும் இல்லை. நமக்குத் தெரிந்த கலையை நாம் போற்றிப் பாதுகாக்கவேண்டும். இன்றைக்குப் பாரம்பரியத் தச்சர்களோ, நாதஸ்வர வித்வான்களோ இல்லை. கல்யாணங்களிலும் நாதஸ்வரத்தின் இடத்தைச் செண்டை மேளம் பிடித்து விட்டது. அதன் கூச்சல் தாங்க முடியவில்லை. கை,கால்கள் பதற ஆரம்பித்துவிடுகின்றன.

   Delete
  8. ராஜாஜி சொன்னது தான் பிற்கால பாலிடெக்னிக்கான ஆரம்பம் என்றும் கொள்ளலாம்.

   Delete
 4. கில்லர்ஜியிடம் சொல்லி இதை தொடர் பதிவு ஆக்கி விட வேண்டியது தான்...!

  ReplyDelete
  Replies
  1. செய்ங்க திரு தனபாலன். நன்றி. கில்லர்ஜியைக் காணோம்!

   Delete
 5. ஒரு எட்டு எட்டி பழைய எட்டுப் பதிவைப் பிடிச்சுட்டீங்க..   அப்போல்லாம் நாங்க வலையுலகம் பக்கமே வரலை.  

  ReplyDelete
  Replies
  1. 2005 நவம்பரில் ஆரம்பிச்சு, 2006 ஏப்ரலில் தமிழில் எழுத ஆரம்பிச்சேன் ஸ்ரீராம். பதினைந்து வருடங்கள் முடிந்து விட்டன. அப்போ என்னுடன் நட்பாக இருந்தவர்களில் இளைய தலைமுறைகளே அதிகம். என் வயசுனு சொல்லப் போனால் ரேவதி, துளசி ஆகிய இருவரும் பின்னர் வந்த தி.ரா.ச எனப்படும் டிஆர்சி, தி.வா. கபீரன்பர் இன்னும் சிலர். இப்போ யாருமே எழுதுவது இல்லை. தி.ரா.ச, தி.வா இருவரும் முகநூலில் முழுகி முத்தெடுக்கின்றனர். ரேவதி, துளசி, நான் மூவரும் இன்னமும் வலைப்பக்கங்களில் எழுதுவதை விடவில்லை. துளசியும் நடு நடுவில் இடைவெளி கொடுப்பார்.

   Delete
 6. தொடர்பதிவு எல்லாம் நான் வந்தப்புறமும் ரொம்ப ஜரூரா வந்து கொண்டே இருந்ததது.  சில தொடர் பதிவுகளில் நாங்களும் - நானும் கலந்து கொண்டிருந்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. @ஶ்ரீராம், பல விஷயங்களுக்குப் பல தலைப்புக்களில் தொடர் பதிவு நானும் போட்டிருக்கேன்.

   Delete
 7. கயிலாய யாத்திரை செல்லும் ஆசை எனக்கும் இருக்கிறது.  ஆனால் அது நிறைவேறுமா என்று தெரியவில்லை.  எங்கே...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், அவனருள் இருந்தால் கட்டாயம் நிறைவேறும். சொல்லப் போனால் மாமா என்னை அழைத்துச் செல்வதாகவே இல்லை. எனக்கு ஆஸ்த்மா தொந்திரவு இருப்பதால் அங்கெல்லாம் என்னால் பயணம் செய்ய முடியாது என்று அவருக்கு மட்டுமே ஏற்பாடு செய்தார். ஆனால் நாங்கள் சென்ற ட்ராவல்ஸ்காரர் வீட்டுக்குப் பணம் வாங்க வந்தப்போ சீன விசாவுக்கு என்னோட பாஸ்போர்ட்டையும் வாங்கிச் சென்றார். எனக்கும் கிடைத்துவிட்டது விசா. அரை மனதாகத் தான் கூட்டிச் சென்றார். கடைசியில் மேலே போனதும் அவருக்குத் தான் மூச்சுத் திணறல். நான் நன்றாக இருந்தேன். கீழே இறங்க இறங்கத் தொந்திரவு ஆரம்பித்தது.

   Delete
  2. ஸ்ரீராம் யாத்திரை என்று சொன்னாலே அவர் போட்டிருந்த பூரியும் தக்காளித் தொக்கும் படம்தான் என் கண்ணில் தெரியுது.

   நானும் உங்களோட வர்றேன் ஸ்ரீராம். என் மனைவி வரமாட்டாங்க.

   Delete
  3. ஹா.. ஹா... ஹா... . வெல்கம்... வெல்கம்... அந்த சாக்கிலாவது எனக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும்!

   Delete
  4. நெல்லை, உங்கள் மனைவியும் வரலாமே! அங்கே தான் முக்திநாத்துக்குப் போகும் வழி இருக்கு. ராமாநுஜருக்கும் அங்கே சந்நிதி உண்டு. மூலவரோடு ராமானுஜரும் அங்கே உட்கார்ந்திருப்பார். மானசரோவரில் குளிப்பதும் கொடுத்து வைக்கணும். மஹாவிஷ்ணுவே தனக்குள் அஜபா ஜபமாக ஈசன் நாமத்தைச் சொல்லிக் கொண்டு அவன் ஆட்டத்தை மானசிகமாகப் பார்த்து ரசிக்கிறார். உங்க மனைவி போனால் என்ன ஆயிடும்? மனைவியுடனேயே கட்டாயம் போங்க!

   Delete
 8. வணக்கம் சகோதரி

  ஸ்வாரஸ்யமான பதிவு. தலைப்பை பார்த்ததும், இப்போதெல்லாம் மொட்டை மாடியில் கூட, நடைப்பயிற்சியின் ஒரு வகையான எட்டு போட்டு நடைப்பயிற்சி செய்கிறார்களே.. அந்த மாதிரி நீங்களும் "எட்டில்"நடந்த கதையை பற்றியதாய் இருக்குமென்று நினைத்தேன்.ஆனால், தொடர் பதிவுகளில் கலந்து கொண்டு வெற்றிகரமாக எட்டு போட்டுள்ளீர்கள். உங்கள் வாழ்வில் நடந்ததை எட்டாக பிரித்து சாதனைப் பட்டியல் இட்டது பதிவை சுவாரஸ்யமாக்கி உள்ளது. படிப்பிலும்,அனுபவங்களிலும் நல்ல திறமைசாலி நீங்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  நீங்கள் தந்த சுட்டிக்கும் சென்று அங்கும் படித்து, கருத்திட்டவர்களின் அன்பான கருத்துக்களையும் படித்து வந்தேன். முதலில் சற்று புரியவில்லை எனினும், இரண்டுமுறை படித்ததும் கலாய்த்தல்கள் புரிந்தன. அப்போது உண்மையிலேயே பதிவுலக நாட்கள் சுவாரஸ்யமாகத்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த மாதிரி மீள்பதிவுகள் எனக்குப் புதிதுதான். இதனால் நீங்கள் என் நினைவுகளில் என்றும் இருப்பீர்கள். இம்மாதிரி பதிவுகளை வரவேற்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா. அப்போதிருந்த நண்பர்கள் பலரும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவங்களுக்கு ஈடு கொடுத்து நானும் வம்பு பண்ணியதால் அனைவரும் என்னைத் "தலைவி" என்றே அழைப்பார்கள். ஹிஹிஹி இது "நமக்கு நாமே" திட்டத்தின் படி வந்தது. பல தொடர்பதிவுகள் அப்போதெல்லாம்! அழைப்பு வரும். வம்பும், தும்புமாக ருசிகரமான மறக்க முடியாத நினைவுகளைக் கொண்ட நாட்கள்.

   Delete
 9. ஹை சூப்பர் எட்டு :) எங்க சித்தப்பா கூட பாடியிருக்கறே எட்டு எட்டானு :) ஷுக்லா ?? அப்படினா என்ன ?எங்க வீட்டிலும் அப்பா ஆட்சிதான் :) அகதா கிறிஸ்டியின் கதைகள் எங்க அம்மாவின் மூலமே எனக்கு அறிமுகமாச்சு புது பதிவுகள் எழுதும்வரைக்கும் பழைய பதிவுகளை மீண்டும் பகிருங்கள் . டைம் மைண்ட் எல்லாம் சரியானதும் புதிய பதிவுகள் எழுதுங்க 

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல்! அக்கவுன்டசிக்கு சுப்ரமணியம், பாட்லி பாய், ஷுக்லா ஆகியோரின் புத்தகங்களைத் துணையாகக் கொள்ளுவார்கள். என் அப்பா படிக்கையில் இருந்த சுப்ரமணியம் புத்தகம் தான் நான் வைத்துக் கொண்டிருந்தேன். பாட்லிபாய் புத்தகம் நண்பர் ஒருவரிடம் இரவல் வாங்கியது. தம்பி பி.காம் படிக்கையில் அப்பா அவனுக்கு ஷுக்லா வாங்கிக் கொடுத்தார். கிறிஸ்டி எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். இவருக்கு அடுத்து எனக்குப் பிடித்தவர் இர்விங் வாலஸ்! அவ்வப்போது பழைய பதிவுகளையும் பகிர்கிறேன்.

   Delete
  2. இர்விங் வாலஸ் எனக்கும் பிடிக்கும், ஆனால் அவர் ஏடாகூடமான்னா எழுதுவார்

   Delete
  3. அதெல்லாம் இல்லை நெல்லை. நன்றாகவே எழுதுவார். எனக்குப் பிடிச்சது அவருடைய The Man நாவல். அது தான் அவருடைய மாஸ்டர்பீஸ் என்னைப் பொறுத்தவரை!

   Delete
 10. அருமையான மீள் பதிவு.
  உங்கள் திறமைகளை சொல்கிறது. பன்முகத்திறமை வாய்ந்தவர் நீங்கள்.
  பழைய பதிவில் வந்த பின்னூடங்களை படித்து வந்தேன்.
  கயிலாய யாத்திரை நல்லபடியாக போய் வந்ததை நானும் நினைத்துப் பார்க்கிறேன்.நீங்கள் சொல்வது போல் இறைவன் தான் அந்த பயணத்தை நல்லபடியாக முடித்து கொடுத்தார்.
  சகோ துரைசெல்வராஜூ அவர்கள் கவிதை மிக அருமை.
  படிப்பவர் மனதில் ஆனந்த மெட்டுதான்

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! Jack of all trades and master of none! என்பார்கள். அதற்கு என்னை உதாரணம் காட்டலாம். உண்மையில் ஈசன் அருள் இல்லைனா கயிலை யாத்திரை போயிருக்கவே முடியாது தான்!

   Delete
 11. எட்டடுக்கு வாழ்க்கையை சொல்லிய விதம் சுவாரஸ்யம்.

  ஒவ்வொருவரும் தனது பாதையை திரும்பி பார்த்தால் அதில் சாதனைகள் ஒளிந்து இருக்கும்.

  தொடரட்டும் இன்னும்.... 8கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி. பலருக்கும் சாதனைகள் இருக்கும் தான். உங்களிடமும் பிரமிக்க வைக்கும் சாதனைகள்.

   Delete
 12. எட்டு சுவாரசியம்.

  ReplyDelete
 13. ஸ்வாரஸ்யம். முன்பெல்லாம் அவ்வப்போது தொடர் பதிவுகள் வந்த வண்ணமே இருக்கும். நாங்களும் சில தொடர்பதிவுகளில் பங்கெடுத்துக் கொண்டதுண்டு.

  ReplyDelete
 14. ஆஹா! உங்களுக்கும் எனக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமை நன்றாகப் படித்தாலும்  கணக்கில் வீக், என்றாலும் அக்கவுண்டென்சி, படித்தது. முதலில் நாங்களும்(நானும் என் சகோதரியும்) பாட்லிபாய்  புத்தகம்தான். அதில் பவுண்டு ஷேர்லிங்கில் கொடுக்கப் பட்டிருக்கும். அதன் பிறகுதான் சுக்லாவுக்கு மாறினோம். 

  ReplyDelete
 15. இகொ இகொ என மனசு பூரா நாந்தான் இருக்கேன் போல!! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. மதரே மதரே மதரே...

  ReplyDelete