எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 26, 2021

நம்பெருமாளைப் பார்க்க முடியலையே! :(

இங்கே ஶ்ரீரங்கத்துக்கு  வந்து சுமார் பத்து வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனாலும் நம்ம ரங்கு (நம்பெருமாள்) ஒவ்வொரு முறையும் பங்குனி மாசத் திருவிழாவின் போது உறையூருக்குப் போக எங்க தெரு வழியாத் தான் போயிட்டு அதே வழியாத் திரும்பியும் வரார்னு எனக்கு/எங்களுக்கு நேத்திக்குத் தான் தெரியும். அசடு மாதிரிப் பத்து வருஷமா இந்த விஷயமே தெரியாமல் நம்பெருமாளைப் பார்க்காமல் இருந்திருக்கோமேனு நினைச்சால் மனசு கஷ்டமா இருக்கு. அவரானால் ரங்க நாயகிக்குத் தெரியாமல் திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிறாரா அதனால் விடிகாலை மூன்றிலிருந்து நான்கு மணிக்குள்ளாக (ரங்கநாயகி கண் அசரும் நேரம்) உறையூருக்குப் போகிறார். அங்கே போய்க் கல்யாணம் ஆகிச் சேர்த்தி எல்லாம் முடிஞ்சப்புறமா கமலவல்லியை அங்கேயே விட்டுட்டு எங்கே ரங்கநாயகிக்குத் தெரிஞ்சுடுமோனு உடனேயே அடிச்சுப் பிடிச்சுண்டு ஓட்டமா ஓடி வரார். போகும்போது கல்யாணம் பண்ணிக்கப் போற குஷியிலே நிதானமாக ரசிச்சுக் கொண்டு போனவர் திரும்பி வரச்சே விழப்போகும் அடியை நினைச்சு ஓட்டமா ஓடி வரார். இன்னிக்குக் காலம்பர 3 மணிக்குத் திரும்பி இருக்கார். அதுவும் தெரியாமல் போச்சு. எங்க வீட்டில் வேலை செய்யும் பெண் கூப்பிடறேன் மாமினு சொல்லிட்டுக் கூப்பிடவே இல்லை. 

ஆனால் போகும்போது பார்த்திருக்காங்க அந்தப் பெண்மணி. அப்போவும் எங்களைக் கூப்பிடலை. இன்னிக்குக் காலம்பர இங்கேயே ஷண்முகா கல்யாண மண்டபம் காரங்க நம்பெருமாளுக்கு மரியாதை எல்லாம் செய்து சுமார் 20 நிமிடங்கள் போல் இங்கேயே நின்னுட்டு இருந்திருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தெரியவே இல்லை. என்ன போங்க! அம்பேரிக்கா போகும் முன்னர் ரங்குவைப் பார்த்தது. பெரிய ரங்குவைத் தான் பார்க்க முடியலை. இவரையாவது பார்ப்போம்னா அதுவும் முடியலை. எப்போக் கொடுத்து வைச்சிருக்கோ தெரியலை. நன்றி மாலை மலர்! 

இங்கே வந்ததும் இன்னிக்கு இருக்கு அவருக்கு. மட்டையடித் திருவிழா! 
ரங்கநாயகித் தாயாருடன் நம்பெருமாளின் சேர்த்தி சேவை. இப்போது ஶ்ரீரங்கத்தில் இந்த மட்டையடித் திருவிழா நடந்து வருகிறது. இன்னிக்குத் தான் நம்பெருமாள் உறையூரிலிருந்து திரும்பி இருக்கிறபடியால் அநேகமா இன்னிக்கு ஆரம்பிச்சிருக்கும்.

இவை எல்லாம் 2018 ஆம் ஆண்டிலோ என்னமோ எடுத்த படங்கள். சுமார் 2 வருஷங்களாக நம்பெருமாளைப் படம் எடுக்கவே வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பார்க்கவும் முடியாமல் போகிறது. அவர் தான் மனசு வைச்சு தரிசனம் கொடுக்கணும்.

25 comments:

 1. விரைவில் தரிசனம் கிட்டட்டும். நாங்களும் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பு (அங்க வந்திருந்தபோது) பெரிய பெருமாளைத் தரிசனம் செய்தோம், தாயாரையும். ஆனால் இராமானுசர் மனசு வைக்கலை. அரை மணி நேரம் காத்திருந்திருந்தால் தரிசனம் செய்திருக்கலாம்.

  ReplyDelete
 2. மட்டை அடிக்குப் பயந்து வேலை செய்யும் பெண்ணும் சொல்ல வில்லை போலிருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. துரை, அந்தப் பெண் எனக்குத் தெரியும் என நினைத்திருக்கிறார். இந்த விஷயமே எனக்கு/எங்களுக்குப் புதுசு! :(

   Delete
 3. அவனருள் இன்றி ஆவதொன்றும் இல்லை...

  அவனை நினைப்பதே அவன் நம்முள் இருப்பதால் தான்!...

  ரங்கா.. ரங்கா!...

  ReplyDelete
 4. மிக அருமையான வைபவம். ரங்கன் வாசலில் நின்றும் ,
  உங்கள் உதவியாளர் அழைக்காமல் விட்டிருக்கிறாரே,:(

  உங்கள் உறக்கத்தைக் கெடுக்க வேண்டாம் என்று
  நினைத்துவிட்டாரோ என்னவோ.
  இப்படி அர்த்தராத்திரியில் திருடன் மாதிரி இவர்
  ஆற்றைக் கடந்து போவதும் வருவதும்

  சரியான கூத்துதான்.
  சித்தப்பா பெண் படங்கள் அனுப்பி இருந்தாள்.
  அடைய வளைஞ்சான் தெருவில் தான் இருக்கிறாள்.

  அரங்கனிடம் மஹாப் பிரேமை.

  அவன் உங்கள் மனக்கண்ணில் காட்சி கொடுப்பான் பாருங்கள்.
  அடியார்களை விட்டுக் கொடுக்க மாட்டான்
  அன்பு கீதாமா,.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. எனக்குத் தெரியும்னு நினைச்சிருந்திருக்கார். நேத்திக்குப் பெருமாள் சீக்கிரமா ஓடிட்டாராம். உங்கள் பதில் 2019 ஆம் ஆண்டிற்கான சேர்த்தி சேவையைப் பார்த்து மகிழ்ந்தேன். அரங்கனை விரைவில் தரிசிக்க முடிந்தால் நல்லது.

   Delete
 5. இத்தனை வருடங்களில் இந்த விஷயம் தெரியாதிருந்திருப்பது மிக்க ஆச்சர்யம்தான்!  அடுத்த முறையாவது தரிசனம் வாய்க்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவு அசடாக இருந்திருக்கோம். :( அரங்கன் தரிசனம் விரைவில் கிடைக்கப் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கேன்.

   Delete
 6. இதோ...    உங்கள் தளத்தில் என்னை " நீ ரோபோ இல்லைன்னு சொல்லு" என்று கேட்டு டிக் மார்க் வாங்கிட்டுதான் கமெண்ட்டை வாங்கிக்கிட்டிருக்கு!

  ReplyDelete
 7. அனுராதா ப்ரேம்குமார் தளத்தில் படங்கள் நல்லா வந்திருக்கு.

  ReplyDelete
 8. அடடா, உங்களுக்கு தெரியாம கூட திருவரங்கத்தில் ஒண்ணு நடக்குதா என்ன? So sad. He will give you dharshan soon maami

  ReplyDelete
  Replies
  1. ஏடிஎம், அதானே! அரங்கனுக்குக் கூட இப்படி எல்லாம் செய்யத் தெரிஞ்சிருக்கு! பாருங்க! :))))

   Delete
 9. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. ஸ்ரீ ரெங்கநாதனின் உறையூர் விஜயம் பற்றி தெரிந்து கொண்டேன். படங்கள் அருமை. திருச்சி அருகேயுள்ள உறையூர் காட்டன் சேலைகள்தான் எங்கள் அம்மா மிகவும் விரும்பி அணிவார். இது அந்த உறையூர்தானே...?

  மட்டையடி திருவிழா 1ம் பகுதி படித்து பல விபரங்கள் அறிந்து கொண்டேன். ஸ்ரீ ரங்கன் தங்கள் அருகிலேயே இருக்கிறார். உங்களுக்கும் விரைவில் அவன் தரிசனம் கிடைக்கட்டும். நானும் அவனைப் பார்க்க மிகவும் பிரியபடுவதால் என்னையும் வெகு விரைவில் அழைக்கட்டும்.பிரார்த்தனை செய்து கொண்டேயுள்ளேன். அவன் விருப்பம் எப்போதோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, இங்கேயே இருக்கோமே தவிர உறையூருக்கு இன்னமும் போகவில்லை. பருத்திச் சேலைகளும் பார்க்கவோ வாங்கவோ இல்லை. மட்டையடித் திருவிழா அனைத்தும் முடிந்தபோது படித்துப் பாருங்கள். விரைவில் உங்களுக்கும் அரங்கன் தரிசனம் கிட்டட்டும்.

   Delete
 10. உங்களுக்கு தெரியாமல் இப்படியொரு விசயமா ? நம்புவதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது.

  அடுத்தமுறை தரிசியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி. நமக்குத்தெரியாமல் எத்தனையோ இருக்கே! அதில் இதுவும் ஒன்று.

   Delete
 11. அரங்கன் தரிசனம் விரைவில் கிடைக்க பிரார்த்தனைகள்.
  2018ல் எடுத்த படங்கள் முன்பு பகிர்ந்து இருப்பது பார்த்த நினைவு இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி. நன்றி.

   Delete
 12. விரைவில் அரங்கனின் தரிசனம் கிடைக்கட்டும். திருவரங்கத்தில் நிறைய வைபவங்கள் உண்டு - வருடம் முழுவதும் கொண்டாட்டம் தானே அங்கே.

  ReplyDelete
 13. என்னாது பத்து வருசமாகத் தெரியாமல் போச்சா?:)) கர்:)) அந்த ரங்கப்பெருமாளே ரத்தக் கண்ணீர் விடுவார் இதைக் கேட்டால்:))

  கில்லர்ஜியைப்போல நீங்களும் ஊரில இருந்தாலும் அம்பேரிக்காவில இருக்கும் நினைப்பில இருக்கிறீங்க போல கீசாக்கா:)) ஹா ஹா ஹா.

  திருட்டுக் கல்யாணத்தை நீங்க அக்செப்ட் பண்ண மாட்டீங்கள் எல்லோ:)) அதனாலதான் பெருமாளும் ஒளிச்சு ஒளிச்சு ஓடியிருக்கிறார்:))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, அதிரடி, நீங்க சொல்லி இருப்பதும் சரியான காரணம் தான். திருட்டுக் கல்யாணம் என்பதால் தான் பெருமாள் ஓடி ஒளிஞ்சிருக்கார். :)))))

   Delete
 14. உங்களுக்கு என்னை நினைவிருக்குமோ இல்லையோ தெரியாது (supersubra ). ஆனால் சுமார் 10, 12 வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் தமிழில் எழுதுவது பற்றி உங்கள் கேள்விக்கு பதில் சொன்ன ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு தூரம் பயணப்பட்டுவிட்டீர்கள். எத்தனை தமிழ் கட்டுரைகள் எத்தனை புத்தகங்கள் . மலைக்க வைக்கிறது உங்கள் எழுத்து பணி . நான் Retire ஆகி 2 வருடம் பொழுதை வீணே கழித்து பிறகு சென்ற கொரோனா வருடத்தில் புதிதாக android mobile ல் program எழுத கற்று கொண்டு எழுதிய slokasaagar என்ற மென்பொருளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.எல்லா ஸ்லோகங்களையும் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அர்த்தத்த்த்துடன் படிக்கும் வசதியுடன் இருக்கிறது. தேவையானவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
  இந்த மென்பொருளில் லலிதா சோபனம் என்ற ஸ்லோகம் சேர்க்க இணையத்தில் உலாவியபோது உங்கள் தளத்தில் வந்து முட்டி நின்றேன். நன்றி

  https://play.google.com/store/apps/details?id=com.supersubra.sloka_saagar

  ReplyDelete