நேற்றே எழுத ஆரம்பிச்சேன். உட்கார முடியலை. போய்ப் படுத்துட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக வெளி உலகத்திற்கே செல்லாமல் இருந்துட்டு திடீர்னு போனதாலோ என்னமோ தெரியலை. உடல் அசதி/வலி/நடக்க/உட்கார முடியாமல் பிரச்னை! இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. என்றாலும் இப்போதெல்லாம் அடிக்கடி பதிவுலகுக்கு வர முடியாமல் தான் போகிறது.
கிட்டத்தட்ட ஒன்றரை வருஷங்களாகக் குலதெய்வம் கோயிலுக்குப் போக முடியலை. 2019 செப்டெம்பரில் அம்பேரிக்கா போகும் முன்னர் போனது தான்! அதன் பின்னர் அங்கே இருந்து வந்த பின்னர் போக முடியாமல் ஆகிவிட்டது. எப்போடா போவோம்னு காத்திருந்தோம். இங்கே உள்ளூரில் உள்ள ரங்குவையே போய்ப் பார்க்க முடியலை. சுமார் ஒன்றரை வருஷங்களாக எங்குமே போகாமல் இருந்துட்டு இப்போத் தான் ஞாயிறு அன்று குலதெய்வம் கோயிலுக்குப் போனோம். அங்கே போவதுன்னாச் சும்மாவா? பொய்யாப் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை, மாரியம்மன் மாவிளக்குக்கு மாவுனு எல்லாம் தயார் செய்துக்கணுமே! அதோட கோயிலில் அபிஷேஹம் செய்ய வேண்டிய பொருட்கள், மாலை, பூக்கள், பழங்கள், தேங்காய்கள்னு எல்லாமும் தயாராகக் கொண்டு போயிடணும். அங்கே ஒண்ணும் கிடைக்காது. கிராமம் தானே!
சனிக்கிழமையே காலை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டுப் பிரசாதங்கள் எல்லாம் தயார் செய்து கொண்டேன். மற்ற சாமான்களையும் தயார் செய்து கொண்டு வண்டிக்கும் தொலைபேசிச் சொல்லிட்டு ஞாயிறன்று காலை மூன்று மணிக்கே எழுந்து வீடு சுத்தம் செய்தல் போன்ற வழக்கமான வேலைகளை முடித்துக் கொண்டு மாவிளக்குப் போட்டதும் சாப்பிட இட்லி தயார் செய்து அதை அலுமினியம் ஃபாயிலில் வைத்து எடுத்துக் கொண்டு இருவருக்கும் காஃபியும் எடுத்துக் கொண்டேன். அவருக்குச் சர்க்கரை இல்லாத காஃபி எனில் எனக்கு அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தது என்பதால் இரண்டு ஃப்ளாஸ்க்! அதைத் தவிர அவருக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குடி நீர். எனக்குப் பானைக் குடி நீர். அதுவும் தனியாக! எல்லாம் தயார் ஆனதும் வண்டியும் வந்தது. ஒரு பத்து நிமிஷம் தாமதம். ஆனாலும் பரவாயில்லை. கிளம்பினோம். ஏழரை மணிக்கெல்லாம் கும்பகோணம் வந்தாச்சு. இறங்கலை. அப்படியே நேரே கிராமத்திற்குப் போனோம்.எட்டேகாலுக்குப் போயாச்சு கோயிலுக்கு!
சாமான்களை எல்லாம் இறக்கிவிட்டுக் கோயிலில் போய் மாவிளக்கை வெல்லம் சேர்த்துத் தயார் செய்தேன். வெயில் காரணமாகவும், பாகு வெல்லம் காரணமாகவும் கொஞ்சம் இளகினாற்போல் தான் இருந்தது. இப்போத் தான் ஏத்திடுவோமே, சரியாயிடும்னு நினைச்சால் கோயிலுக்கு திமுதிமுவெனச் சிலர் வந்தார்கள். அவங்க குழந்தை பிறந்து முதல் முதல் குழந்தையை எடுத்துக் கொண்டு நேர்த்திக்கடனுக்கு வந்திருக்காங்க போல! அபிஷேஹம் தவிர்த்துப் பிரசாதம் எல்லாம் சொல்ல, கடையில் போய் சாமான்களை வாங்கிக் கொண்டு அதன் பின்னர் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் , சுண்டல், எலுமிச்சைச் சாதம்னு தயார் செய்ய ஆரம்பித்தார் பூசாரி. அது சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. அதன் பின்னர் அபிஷேஹம் ஆரம்பித்து அலங்காரங்கள் முடிந்து நான் மாவிளக்குப் போடும்போது நெய்யை விடவும் கர்பகிரஹச் சூட்டிலும் வெயில் காரணமாயும் நெய்யும் ஓட ஆரம்பிக்க ஒரு மாதிரிச் சமாளித்துக் கொண்டு திரியைப் போட்டு விளக்கை ஏற்றினேன். அங்கேயே நின்று கொண்டிருந்தேன். கீழே இறங்கிக் காமிராவை எல்லாம் எடுத்து வரவில்லை. அதுக்குள்ளே மாவிளக்குத் திரி முழுவதும் முடிந்து மலை ஏறி விடுமோனு பயம்.
அதோடு கர்பகிரஹத்தினுள் நுழையும் படிகளில் ஏறி ஏறி இறங்க முடியலை. யாரானும் உதவி தேவைப் படுகிறது. எல்லாவற்றையும் உத்தேசித்து அங்கேயே நின்றுவிட்டேன். இம்முறை ரொம்ப நடக்கவே முடியாமல் கஷ்டமாக வேறே இருந்தது. வீட்டுக்குள்ளேயே நடந்து கொண்டிருந்து விட்டதால் நடப்பதே புதுமையாகவும் ஆகி விட்டது. எல்லாம் முடிந்து தீப ஆராதனை எடுத்துவிட்டுக் கீழே இறங்குவதற்குள்ளாகப் போதும், போதும்னு ஆகிவிட்டது. வெளியே நின்றிருந்த ஒரு பெண்மணி கையைப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார். இவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை. ஒரு வழியாக மாரியம்மன் கோயிலில் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு அங்கேயே இட்லி சாப்பிட்டுக் காஃபியும் குடிச்சு முடிச்சு அங்கே இருந்து பெருமாள் கோயிலுக்குக் கிளம்பினோம். பெருமாள் ஊர் ஆரம்பிக்கையிலேயே இருப்பார். ஆனால் முதலில் மாரியம்மனைப் பார்த்துக் கொண்டு பின்னர் வரணும் என்பதால் அதை முடித்துக் கொண்டு வந்தோம். பட்டாசாரியார் பாவம் இரண்டு மணி நேரமாகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைத் தான் எங்களுக்கு மதிய உணவு கொண்டுவரச் சொல்லி இருந்தோம்.
பெருமாளுக்கு ஆராதனைகளை முடித்துக் கொண்டு பட்டாசாரியார் கொடுத்த பிரசாதங்களை (மதியத்துக்காக) புளியோதரையும், தயிர் சாதமும் வாங்கிக் கொண்டு கருவிலி நோக்கிச் சென்றோம். நாங்கள் சென்ற வண்டி வேறே காலைத் தூக்கி வைத்து ஏற வேண்டி இருந்ததுனா உள்ளேயும் அரை அடிக்கும் மேல் கீழே காலை வைக்கணும். அது வேறே ஒவ்வொரு முறை வண்டியில் இருந்து இறங்கும்போதும், திரும்ப ஏறும்போதும் பிரச்னையாகவே இருந்தது. ஆகவே காமிரா கொண்டு போகாததால் மொபைலில் படங்கள் எடுக்க நினைச்சு மொபைலையும் என் பைக்குள்ளேயே வண்டியில் வைச்சுட்டுத் தான் போனேன். படம் எடுக்க முடியலையே என்று வருத்தம் தான். ஆனால் ஏறும்போதும் இறங்கும்போதும் இருவருக்குமே கஷ்டமாக இருந்ததால் வேண்டாம்னு வைச்சுட்டேன். மாரியம்மனை மட்டும் படம் எடுத்திருந்தேன். அது மட்டும் போடுகிறேன்.
கருவிலி சிவன் கோயிலை முடித்துக்கொண்டு அங்கிருந்து அந்த ஊரில் சுமார் 2000 ஆண்டுகளாக இருக்கும் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போனோம். ஏப்ரல் 2 ஆம் தேதி தான் அந்தக் கோயிலுக்குப் பல வருஷங்கள் கழிச்சுக் கும்பாபிஷேஹம் செய்தார்கள். அந்தக் கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாம். செம்பியன் மாதேவி இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருப்பதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இந்தக் கோயிலை இப்போது புனர் நிர்மாணம் செய்தது பரவாக்கரையைச் சேர்ந்த மாணிக்கவேல் என்னும் காவல்துறை அலுவலர். பணி ஓய்வு பெற்று வந்ததும் சரித்திரத்திலும் பழமையான கோயில்களிலும் ஈடுபாடு கொண்ட அவர் இந்தக் கோயில் பற்றிக் கேள்விப்பட்டுச் சொந்த ஊரான பரவாக்கரையை விட்டுப் பக்கத்து ஊரான கருவிலிக்கு அருகே உள்ள கூந்தலூரில் தங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் வேலைகள் செய்து திருப்பணிகளை முடித்துக் கும்பாபிஷேஹமும் செய்து வைத்திருக்கிறார்.
இந்தக் கோயிலில் சப்தகன்னிகள் இருப்பதாலும் சப்த முனிகள் இருப்பதாலும் இது மிகப் பழமை வாய்ந்த கோயில் என்பது புரிய வந்தது. கோயிலின் படங்கள் கும்பாபிஷேஹ சமயத்தில் எடுக்கப்பட்டவை வந்துள்ளன. அவற்றை எல்லாம் பின் வரும் நாட்களில் ஒவ்வொன்றாகப் பகிர்கிறேன். இந்தக் காத்தாயி அம்மன் கோயிலுக்குப் போனோம். அங்கே நடுவில் பச்சையம்மனும் வலப்பக்கம் மாரியம்மனும் இடப்பக்கம் காத்தாயி அம்மனும் இருந்தார்கள். வெளியே பெரிய மைதானத்தில் (இப்போத் தளம் போட்டுவிட்டார்கள்.) எனக்கு அது தான் கொஞ்சம் வருத்தம். கர்பகிரஹத்தில் கூட கல் தளங்களை அகற்றிவிட்டு டைல்ஸ் போட்டிருக்காங்க. இதனால் அந்தக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கும் விபரங்கள் முற்றிலும் அழிந்து யாருக்குமே தெரியாமல் போய்விடும். இதை யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை. எல்லோருமே அரசியல் தலைவர்கள் உள்பட தமிழன்/தமிழ் தொன்மை வாய்ந்தது. உலகின் மூத்த முதல் குடிமக்கள். தமிழ் தான் முதலில் தோன்றியது என்றெல்லாம் பெருமை பேசிக் கொள்வார்கள். ஆனால் தமிழனின் தொன்மையையும் வரலாற்றையும் பேசும் விஷயங்களை அடியோடு அழித்துவிட்டு நாகரிகம் என்னும் பெயரில் தேவையற்ற அலங்காரங்களைச் செய்து கோயிலின் புனிதத்தையும் தொன்மையையும் கெடுத்துவிடுவார்கள். பல கோயில்களிலும் திருப்பணி என்னும் பெயரில் இந்தக் கொடுமை தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
தொடரும்! படங்களை வலையேற்றிவிட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்.
எப்படியோ சிறப்பாக தரிசனம் முடித்து வந்தமைக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteபடம் பிறகு வருமா ?
வாங்க கில்லர்ஜி. படங்கள் போடத் தான் முயற்சி செய்கிறேன். காத்தாயி அம்மன் கோயில் படங்களை வலையேற்ற முடியலை. பார்க்கிறேன்.
Deleteபயணமா ஆ என்று மலைக்க வைக்கும் நேரம். ஆனால் வெற்றிகரமாக சென்று வந்து விட்டீர்கள் போல. ரொம்பவே களைப்பாக உணர்கிறீர்கள் என்று தெரிகிறது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், களைப்பா! எழுந்துக்கவே வேண்டாம்னு இருக்கு! இப்போவும் பூத்தொடுத்து முடித்துப் படுத்துவிட்டுத் தான் வரேன். முன்னெல்லாம் மத்தியானங்களில் படுக்கவே மாட்டேன். இப்போல்லாம் முடியறதில்லை. :(
Deleteநாங்கள் கூட 2019 ல் குலதெய்வம் கோவிலுக்குப் போனது. சென்ற வருடம் போகமுடியாத வருத்தம் இருந்தது. தீநுண்மி பயம் குறைந்திருந்த முதல் இரண்டு மாதங்களில் சென்று வந்திருக்கலாம்.என் மகன்கள், அண்ணன் மகன் என்று அலுவலக ஷிஃப்ட் ஒருத்தருக்கு ஓகே என்றால் இருவருக்கு இப்போ இல்லை நிலைமையினால் இன்னும் போகவில்லை.
ReplyDeleteநாங்க கொரோனா மட்டும் காரணம் இல்லை; ஒரு வருஷம் போகக் கூடாது என்பதால் போகவில்லை. இல்லைனா இந்த ஒன்றரை வருடங்களில் 3, 4 முறை போயிருப்போம்.
Deleteமாரியம்மன் படம் மட்டும் இதில் போடுகிறேன் என்று அதையும் போடவில்லை. வெயில் எப்படி? இங்கு கொளுத்துகிறது.
ReplyDeleteஹாஹாஹா, படம் போடுகிறேன் என்று தானே சொல்லி இருக்கேன். வரும், வரும்!
Deleteவெயில் நன்றாகவே காய்கிறது. மணத்தக்காளி பிழைத்துப் போய்விடும். :))))
Deleteஇப்போதான் இங்கு மழை.... பொதுவா வெளியில் அவ்வளவு வெயில் இல்லை. ஆனால் வீட்டில் கொஞ்சம் கசகசன்னு இருக்கு. இன்னும் ஒரே மாதம்தான்.... பிறகு நன்றாக இருக்கும்.
Deleteஉண்மை. சென்னை/தமிழ்நாடு தவிர்த்த மற்ற ஊர்களில் ஏப்ரல், மே இரு மாதங்கள் மட்டுமே கோடையின் கடுமையை அனுபவிக்க நேரிடும். இங்கே வருஷம் 365 நாட்களும் வெயில்க் கொடுமை தான்! ஆனால் அதுவும் தேவையாத் தான் இருக்கு.
Deleteஅன்புள்ள கீதாம்மா, தாங்கள் குலதெய்வம் கோவில் சென்று வந்தது மிக்க மகிழ்ச்சி! கோவில் சென்று வந்தால் மனக்குறை தீரும். இனி எங்கும் செல்லாமல் வீட்டிலேயே safe ஆக இருங்கள். நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteவாங்க வானம்பாடி, வெயிலைப் பொருட்படுத்தாமல் போயிட்டு வந்துட்டோம். ஏ.சி. ஓடியும் வண்டியில் சூடு தான் அதிகம்! அது வேறே உடம்பெல்லாம் ராஷஸ்! :(
Deleteஎப்படியோ தரிசனம் நல்லபடியா ஆனதில் மகிழ்ச்சி. உண்மை தான், வீட்டில் இருந்து இருந்து வெளில போகனும்னாலே கஷ்டமா இருக்கு.Body get used to it I guess
ReplyDeleteவாங்க ஏடிஎம், தி/கீதா சொல்லி இருக்காப்போல் கொஞ்சம் நடந்து நடந்து பயிற்சி பண்ணினால் சரியாயிடும்னு நினைக்கிறேன். உடல் அப்போது சொன்னதைக் கேட்கலாம்.
Deleteஅட... இந்தச் சமயத்தில் தைரியமாக பயணம் மேற்கொண்டுவந்துவிட்டீர்களே.... ரொம்பவே ரிஸ்க்தான்.
ReplyDeleteகோவில் தரிசனம் சிறப்பாக நடந்தது பற்றி மகிழ்ச்சி.... புளியோதரையும் தயிர்சாதமும் நீங்களே எடுத்துச் சென்றிருக்கலாமே..
படங்கள் பிறகு போடுவீர்கள் என்று நினைக்கிறேன்.
வாங்க நெல்லை. அந்த நாளுக்காக எவ்வளவு ஆவலுடன் காத்திருந்தோம்! ரிஸ்க் தான் என்றாலும் மாரியம்மனை நினைத்துக் கொண்டு போயிட்டு வந்துட்டோம். புளியோதரையும் தயிர்சாதமும் நானே பண்ணி எடுத்துக்கலாம் தான். ஒரு முறை பட்டாசாரியாரிடம் வாங்கிச் சாப்பிடலாமே என்பதோடு அவருக்கும் கொஞ்சம் பண உதவி செய்தாப்போல் இருக்கும்.
Deleteகோவில் கும்பாபிஷேகத்தின்போது பழசு மாறாமல் இவங்களால புதுப்பிக்கத் தெரியலை. கர்ப்பக்ரஹம் சுத்தமா இருக்கணும்னு டைல்ஸ் போட்டுடறாங்க.
ReplyDeleteகொஞ்ச வருஷத்துல கோவிலின் பழமை காணாமல்போயிடும்.
REACH FOUNDATION மூலம் போனால் பழமை மாறாமல் புதுப்பித்துத் தருகின்றனர். நான் அதில் உறுப்பினராக இதற்காகவே சேர்ந்தேன். இணையம் மூலம் பழக்கம் தான். ஓரிரு முறை அவர்களைத் தொடர்பும் கொண்டேன். அவங்களோட நிபந்தனைகள்/கட்டளைகள் ஆகியவை எங்களுக்கு மட்டுமில்லாமல் ஊர் மக்களுக்கும் ஒத்துவரும்னு தோன்றவில்லை. என்ன செய்ய முடியும்? கிராமத்துக் கூட்டத்தில் என்ன முடிவு செய்யறாங்களோ அது தான் ஏற்க வேண்டி வந்தது. ஆகவே பெருமாள் கோயில் மதில் சுவர்களில் இருந்த கல்வெட்டுக்களின் மேல் பூச்சுப் பூசி மறைத்திருப்பதைக் கண்டு வருந்தத் தான் முடிந்தது. இத்தனைக்கும் பெரும்பாலான முயற்சிகள் நாங்கள் தான் செய்து கொடுத்தோம்.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteதளராத மனம் என்றும் வாய்க்கட்டும்.
உடலும் ஒத்துழைக்கட்டும்.
இது இமாலய சாதனை!!
சென்று வந்ததில் நிம்மதி கிடைத்துக் குழந்தைகள்க்ஷேமமாக இருக்கட்டும்.
நமக்கு வேண்டியது அதுதானே.
தனித்தனியாக எத்தனை ஏற்பாடுகள்.
வெளியே சென்று வர கால கூசத்தான் செய்கிறது.
விரல்கள் கூட வலிக்கிறது.
அம்மனும் பெருமாளும் உங்களுக்குத் துணை இருக்கட்டும்.
கோவில் நிலைமை மாறி இருப்பதை நானும் 2019இல் கவனித்தேன்.
என்ன செய்யலாம் காலங்கள் மாறிப்
பழைய சொத்துக்களைக் காவு கொடுக்கின்றனர்.
பத்திரமாக இருங்கள்.
வாங்க வல்லி, உண்மை தான். நீங்கள் சொல்வது போல் கால் விரல்கள்/கை விரல்கள் வலிக்க்த் தான் செய்கின்றன. இந்த அழகில் நாளைக்கு ஒரு நிச்சயதார்த்தம் இங்கே தான் பக்கத்தில்/ ஆனால் அதற்கு சுமார் 200 பேர் வருவாங்களாம். போகலாமா/வேண்டாமா என்னும் குழப்பம்.என்னோட முடிவு வேண்டாம் என்பதே!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. குலதெய்வம் கோவிலுக்கு நீண்ட நாட்கள் கழித்து சென்று வழிபட்டு வந்ததற்கு வாழ்த்துகள். நீங்கள் எழுதிய பதிவை பார்த்து படித்ததும், நாங்களும் உங்களுடன் எல்லா கோவிலுக்கும் வந்து தரிசனங்கள் செய்த திருப்தியை தந்தது.
நீண்ட நாட்களாக வீட்டிலேயே இருந்து விட்டு, தீடிரென வெளியில் சென்றால் ஒரு மாதிரிதான் உள்ளது. தாங்களும் இதனால்தான் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். ஆனாலும் குலதெய்வத்தை தரிசித்த திருப்தி கிடைத்துள்ளது. பெருமாள் நல்லபடியாக உடல் அசதி, வலிகள் நீங்க அருள் புரிவார். படங்களை நிதானமாக போடுங்கள். உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. மிக்க நன்றி. காத்தாயி அம்மன் கோயில் படங்களை வலையேற்றும் விதம் புரியாமல் இருக்கேன். முயன்று பார்த்துவிட்டு அவற்றையும் சேர்த்துப் போட எண்ணம். உடம்பைக் கவனமாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கேன். என்றாலும் இப்போதெல்லாம் விரைவில் அசதி வருகிறது. வெயிலும் ஒரு காரணம். கருத்துரைக்கு மிக்க நன்றி.
Deleteகோவில் சென்று வந்திருப்பதில் மகிழ்ச்சி. கவனமாக இருங்கள்.
ReplyDeleteவாங்க வெங்கட்! நன்றிப்பா.
Deleteகுலதெய்வம் கோவில் போய் பிரார்த்தனை செய்து வந்து விட்டீர்கள். இனி எல்லாம் நலமாகும். மகள் உடல் நலம் எப்படி இருக்கிறது?குலதெய்வ பிரார்த்தனை மனதில் நிம்மதி, மனநிறைவு தரும். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteவெயில் அங்கு எல்லாம் அதிகமாக இருக்குமே!
எங்கள் குலதெய்வ கோவிலில் 28.06. 21 ல் திங்கட்கிழமை கும்பாபிஷேகம் பத்திரிக்கை அனுப்பி இருக்கிறார்கள்.
வாங்க கோமதி. மகள் கொஞ்சம் போல் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூப், வேகவைத்த காய்கள், கஞ்சி எனச் சாப்பிடுகிறாள். க்ளூட்டன் ஃப்ரீ ப்ரெட் சாப்பிடுகிறாள். மெல்ல மெல்லச் சரியாகணும். மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு வயிறு வாங்கி அம்மன் வயிற்றில் வைக்கச் சொன்னோம். இனி அவள் பார்த்துப்பாள்.
Deleteகீதாக்கா ரொம்ப மாதங்கள் கழித்து ஆஜர். ஆனால் தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன். பார்ப்போம்
ReplyDeleteகாலுக்கான பயிற்சி பண்ணுங்க அக்கா உங்களுக்குச் சொலல்த் தேவையில்லைதான்...நீங்களே பார்த்துப்பீங்கதான்
எப்படியோ எல்லா கோயிலும் குடும்பக் கோயில் உட்பட தரிசனம் செய்தது மகிழ்ச்சியான விஷயம். உடம்பையும் பார்த்துக்கோங்க அக்கா வெயில் அதிகமா இருன்திருக்குமே
கீதா
வாங்க தி/கீதா, உங்கள் வரவில் மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள். பதிவுகளும் எழுத ஆரம்பிப்பீர்கள் என நம்புகிறேன். உங்களை ஓரிருமுறை தொடர்பு கொண்டேன். போகவில்லை. பின்னர் விட்டு விட்டேன். ஆனால் நினைச்சுப்பேன். காலுக்கான பயிற்சியை நீங்க சொல்றாப்போல் செய்ய ஆரம்பிக்கணும். எங்கேயுமே போகாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தது தான் இப்போப் பிரச்னை!
Deleteகுல தெய்வ வழிபாடு சிறப்புடன் நடந்தது.. மகிழ்ச்சி... கண்களில் காட்சிகள் விரிகின்றன... ஸ்ரீ சர்வாங்க சுந்தரி அம்பிகையையும் சற்குண நாதரையும் தரிசிக்க வேண்டும்.. வெகு நாள் ஆசை..
ReplyDeleteமேலும் படங்களைக் காண்பதற்கு ஆவல்...
வாங்க துரை, விரைவில் சர்வாங்கசுந்தரி சமேத சற்குணேஸ்வரர் தரிசனம் கிட்டட்டும்.
Deleteகுல தெய்வம் கோவிலுக்கான பிரயாணத் தகவல்கள் வழக்கம்போல மிகுந்த சுவாரஸ்யத்தை அளித்தது. கூடவே சரித்திர புகழ்பெற்ற காத்தாயி அம்மன் கோவிலைப்பற்றிய தகவல்கள் அறிய மகிழ்வாக இருந்தது.
ReplyDeleteமிகுந்த உடம்பு வலி, கால் வலியை அனுபவித்திருக்கிறீர்கள் என்றறிய வருத்தமாக இருந்தது.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை! நெடு நாட்கள் வெளியே போகாமல் வீட்டிலேயே இருந்து விட்டு திடீரென்று வெளியே போகும்போது அப்படித்தான் உடலை பாதிக்கிறது. எனக்கும் அது போல பாதிப்பு ஏற்பட்டது.
கவனமாக உடல் நலத்தைப்பார்த்துக்கொள்ளுங்கள்!
வாங்க மனோ! காத்தாயி அம்மன் படங்களைத் தான் எப்படிக் கொண்டு வரதுனு தெரியலை. வாட்சப்பில் இருந்து மெயிலுக்கு அனுப்ப முயற்சி செய்தால் போகவே இல்லை. பார்க்கணும். கால் வீக்கம் இன்னமும் சரியாகவில்லை. ஒரு வாரமாவது ஆகும் போல! :)))))
Delete