எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 27, 2026

கல்யாணமாம், கல்யாணம், நம்ம மீனாக்ஷியின் கல்யாணம்!

 சமீப காலமாக முகநூலில் அறிமுகம் ஆன நண்பர் திரு வினோ மோகன் அவர்கள் எப்போவும் அந்தக் காலத்து அழகிய ஓவியங்களை அதிலும் பெரும்பாலும் ஆனந்த விகடனில் திரு கோபுலு அவர்களால் வரையப்பட்ட ஓவியங்களைப் பகிர்ந்து அவற்றில் அவர் பாணியில் மிகவும் ஆழ்ந்த ரசனையோடு கூடிய பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். எனக்கு அவருடைய வர்ணனையும் கற்பனா சக்தியும் கண்டு பிரமிப்பாக இருக்கும். அநேகமாக விடாமல் பார்த்துவிடுவேன். சில சமயங்கள் உடனே போக முடியாது. இந்தப் பதிவையும்ம் முதலிலே படிச்சாலும் ஓவியம் அதில் இல்லை. பின்னர் அவரோட டைம்லைனுக்கே போய்ப் பார்த்தால் நம்ம மீனாக்ஷியின் கணவன் சுந்தரேசர் வளையல் விற்ற படலத்தைத் திரு கோபுலு வரைந்திருந்தார். என்ன அழகு, என்ன அழகு, உண்மையிலேயே சுந்தரேசர் தான். அங்கே அவருக்குப் போட்ட பின்னூட்டக்கருத்துக்களையும் புதிதாக எழுதிய மீனாக்ஷி கல்யாணம் பற்றிய கருத்தையும் சேர்த்து ஒரே பதிவாக்கி இங்கே பகிர்கிறேன். இந்த யோசனை கூட அவர் சொன்னது தான். "மதுரை மாநகரம்" வலைப்பதிவில் மதுரை பத்தி நிறைய எழுதினாலும் இப்போக் கும்பாபிஷேஹமும் அதைத் தொடர்ந்த விவரணையும் மீண்டும் பழைய மதுரையை நினைக்க வைச்சது. 

அங்கே நான் கொடுத்த கருத்துகள்.

சித்ரலேகா ஓவியங்கள் ஆனந்த விகடனில் "சிலம்புச் செல்வம்" என்னும் பெயரில் வந்து கொண்டிருந்த சிலப்பதிகாரம், மணிமேகலை தொடரில் நிறையப் பார்த்திருக்கேன். ஆனால் இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விகடன் அட்டையைக் காண முடியலை. 

 இங்கே உங்கள் டைம்லைனுக்கு வந்து தான் ஓவியத்தைப் பார்க்க நேர்ந்திருக்கு. அருமையான ஓவியம். ஈசன் வளையல் செட்டியாக வந்த படலம். மதுரையில் ஒவ்வொரு ஆவணி மாதமும் ஆவணி மூலத் திருவிழா என நடக்கும்.. அப்போது ஒரு நாள் ஈசன் வளைச் செட்டியாக வருவார். அப்போது ஸ்வாமி, அம்மன் புறப்பாடு எங்கள் ஆவணி மூல வீதிகள் வழியாகவே போகும். மாலை ஆறு மணியிலிருந்தே வாசலில் வரும் இறைவன், இறைவியைக் காணக் கோலமெல்லாம் போட்டு வைத்துவிட்டு அர்ச்சனைத் தட்டோடு ரெடி ஆகிவிடுவோம். மூல நக்ஷத்திரத்தன்று புட்டுத் திருவிழா. ஈசன் வந்திக்கு மோக்ஷம் அளிக்க அவளுக்காக வைகை நதி வெள்ளைத்தைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் என்னும் கணக்கில் வந்திக்காக ஈசன் மண்வெட்டி, கடப்பாரை, தலையில் மணல் அள்ளக் கூடை சகிதம் போவார். இந்நிகழ்ச்சி மதுரையில் வைகைக்கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பில் ஒவ்வொரு வருஷமும் நிகழ்வாக நடக்கும். அப்பா, அண்ணா, தம்பி எல்லாம் போவார்கள். கூட்ட நெரிசல் காரணமா என் போன்ற பெண்களை அழைத்துச் செல்ல மாட்டார்கள். என்றாலும் எங்கள் வீதி வழியே ஈசன் போவார். அதே போல் வளையல் திருவிழாவில் வீட்டுக்கு வீடு வளையல் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொள்வதோடு கறுப்பு வளையல்களும் பிரசாதம் போலக் கொடுப்பார்கள். சின்னதாக இருக்கும். மதுரையில் யார் வீட்டில் குழந்தை பிறந்தாலும் புண்யாஹவசனத்தின் போது இந்தக் கறுப்பு வளையல்களையே குழந்தைகளுக்கு அணிவிப்பார்கள். குழந்தையின் ஒவ்வொரு குளி முறையின் போதும் ஒவ்வொரு வளையலைக்கழற்றி உடைத்துப் போட்டு மஞ்சள் நீரால் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்துக் கொட்டுவார்கள்.

 Vino Mohan, அருமையான பதிவு. நல்லதொரு கூட்டுக்குடும்ப வாழ்வு வாய்த்திருக்கிறது உங்களுக்கு. கிட்டத்தட்ட எனக்கும் சிறு வயதில் இப்படியான அனுபவங்களே. நான்கு வயதிலேயே பள்ளியில் சேர்த்துவிட்டார் அப்பா. கூடுதலாக வயதைச் சொல்லி. அப்போதிலிருந்து படிப்பு ஆரம்பித்த பின்னரும் இதே போல் புத்தகங்களே பெருந்துணையாக எனக்கும் இருந்தது. நாங்களும் மதுரை வாழ்வில் பற்பல பஜனைகள், கதாகாலட்சேபங்கள் எனப் போவோம். இரவு ஏழரைக்குள் சாப்பாட்டை முடிச்சுட்டு எட்டுமணிக்கு நடக்கும் கதாகாலட்சேபத்துக்குப் போய்விட்டு இரவு பத்து பத்தரைக்கு வீட்டுக்கு வந்து படுத்துப்போம். பயமே தெரியாத நாட்கள் அவை. மதுரையிலேயே வசித்த தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டுக்குப் போனால் கொண்டாட்டம் தான். விதம் விதமான விளையாட்டுக்கள். எல்லாமும் வீட்டிலே இருந்தவண்ணம் விளயாடுவது தான். பின்னர் புத்தகப்படிப்பு என இனிமையான நாட்கள். தொடர்ந்து மீனாக்ஷிக்கு நடக்கும் உற்சவங்கள். என மறக்க முடியாத அனுபவங்கள்.

 பிற்சேர்க்கை

அதிலும் மீனாக்ஷி கல்யாணத்தன்று வீட்டில் வேலையே நடக்காது. காலம்பரவே எல்லோரும் எழுந்து குளித்துவிட்டு அவசர அவசரமாகச் சமைச்சு வைப்பார்கள். அவசர சமையல்னாலும் பாயசம், வடை எல்லாம் இருக்கும். நம்ம வீட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆச்சே.  பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் ஓடி ஓடி வாசலுக்கு வந்து கோயிலில் இருந்து சுந்தரேசர் கிளம்பிட்டாரா? மீனாக்ஷிக்குச் சீர் போயாச்சானு வந்து வந்து பார்ப்போம். காலம்பரவே முதல் முதலாக சுந்தரேசர் அலங்காரத்தில் ஈசன் தன் பூத கணங்கள் புடை சூழக் கல்யாணம் பண்ணிக்கப் போவார். சொக்கநாதரை அலங்காரம் பண்ணி வீதி வழியாக கூட்டிப் போவார்கள். அதன் பின்னர் மீனாக்ஷிக்கான சீர் வரிசை யானை மேல் அம்பாரியிலும், பல்லக்கிலுமாகப்போகும். அப்போவே கோயிலுக்குப் போகக் கிளம்பிடுவோம். முகூர்த்தம் எத்தனை மணிக்குனு கேட்டுண்டு மொத்த வீடும் (நான்கு குடித்தனங்கள். ஒரு குடித்தனத்தில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து நபர்) எல்லோருமாகச் சேர்ந்தே போவோம்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு போவோம். குறுக்கு வழியாகக் கல்யாண மண்டபம் போயிடுவோம். வடக்கு கோபுரம் வழி போனால் சீக்கிரம் கல்யாண மண்டபத்தை அடையலாம். இப்போல்லாம் அங்கே மீனாக்ஷி கல்யாணம் நடப்பதில்லை என்றார்கள்.  அப்பாவுக்குத் தெரிஞ்ச அல்லது வீட்டுக்கார மாமிக்குத் தெரிஞ்ச பட்டர் எங்களுக்கு இடம் போட்டு வைச்சிருப்பார். மேடை உயரமாக இருக்கும். என்றாலும் தூரத்திலிருந்து பார்க்கணுமே. மற்றபடி இப்போதைப் போல் எல்லாம் டிக்கெட், பாஸ் என்றெல்லாம் இருக்காது. அப்போது பி.டி.ராஜன் தான் அறங்காவலர். பழனிவேல் ராஜனெல்லாம் உத்தம பாளையத்தில் வக்கீல் தொழில் பண்ணிக் கொண்டிருந்தார். அரசியலில் மும்முரமாக ஈடுபடவில்லை. எல்லாச் சடங்குகளும் நடந்து முடிந்து முறைப்படி மாங்கல்யாதாரணம் ஆகும்போது பதினோரூ மணி ஆகிடும். அதன் பின்னர் அங்கே வந்திருக்கும் பெண்மணிகளில் பலரும் தாங்களும் பழைய தாலிச்சரடை நீக்கிவிட்டுப் புதுசாகக் கட்டிக் கொள்வார்கள். அதன் பின்னர் எல்லோரையும் வரிசையாகக் கல்யாணம் ஆன தம்பதியரைப் பார்க்க அனுமதிப்பார்கள். கூட்டம் முண்டி அடிச்சாலும் விரைவில் கூட்டம் ஓர் ஒழுங்குக்கு வந்துடும். ஸ்வாமியையும் அம்மனையும் கிட்டக்கப்போய்ப் பார்த்துட்டு வீடு திரும்புவோம். வந்ததும் தான் சாப்பாடு. பின்னர் மாலை அலங்காரம் பண்ணிப் பல்லக்கில் போகத் தயாராக இருக்கும் மீனாக்ஷியைக் கோயிலில் வைத்தே பார்த்துட்டு வருவோம். 

21 comments:

  1. அழகான படம். சிதரலேகா அம்பிலிமாமா புத்தகத்தில் அழகாய் வரைவார்.
    வினோ மோகன் பக்கத்தை நானும் பார்ப்பேன் .
    நான் மதுரை வந்து செட்டில் ஆனதும் தான் மதுரை திருவிழாக்கள் பார்த்தேன்.
    வளையல் விற்ற திருவிழா இன்ன்மையில் நன்மை தருவார் கோயிலில் பார்த்தேன்.
    இறைவன் வளையல் விற்பவராக வந்ததையும் கோயிலில் கருப்பு வளையல் எல்லோருக்கும் கொடுத்ததையும் பதிவு போட்டு இருக்கிறேன்.
    சிறு வளையலை என் தங்கை மருமகள் குழந்தை உண்டாகி இருந்தாள் அவளிடம் கொடுத்தேன்.
    குழந்தை பிறந்ததும் காப்பிடும் நாள் அந்த வளையல்களை முதலில் போட்டார்கள்.
    நீங்கள் சொல்லுகிற மாதிரி குழந்தை குளித்தவுடன் மஞ்சள் நீரில் வளையளை கழற்றிப்போட்டு திருஷ்டி சுற்றி போடுவார்கள் வீதியில்.

    புட்டுத்திருவிழாவும் இரண்டு முறை பார்த்து இருக்கிறேன். அதையும் பதிவு போட்டு இருக்கிறேன்.

    கல்யாணம் இரண்டுமுறை பார்த்து இருக்கிறேன், இப்படி கூட்டம் இருந்தது இல்லை. இப்போது சாதா நாளில் கூட மீனாட்சியை வணங்க பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டி உள்ளது.

    உங்கள் மலரும் நினைவுகள் அருமை. வீதி உலா வரும் விழாக்கள் எல்லாம் நீங்கள் பார்க்கலாம் உங்கள் வீட்டுக்கு அருகில் இல்ல்லையா? என் தங்கையும் வடக்கு மாசி வீதி என்பதால் எல்லா திருவிழாக்களையும் பார்ப்பாள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. மதுரை நினைவுகள் எல்லாம் எப்போதுமே பசுமையாக நினைவில் இருக்கின்றன. இதே போல் தான் மார்கழி மாத அனுபவங்களும்.கோயில் கோயிலாகப் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னரே குளிச்சுட்டுக் கிளம்பிப் போவோம். என்னாலும், தம்பியாலும் முடிஞ்ச கோயில்களைப் பார்த்துட்டுப் பின்னர் வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் பிரசாதம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவோம். அதன் பின்னரே சாப்பிட்டுட்டுப் பள்ளிக்குப் போவேன். தம்பிக்கெல்லாம் வீட்டில் இருந்து நடந்தே போகும் தொலைவில் சேதுபதி உயர்நிலைப்பள்ளி இருந்ததால் அவங்கல்லாம் ஒன்பது மணிக்குக் கிளம்பினால் போதும். பின்னாட்களில் அண்ணா சென்னை, ஹோசூர் என உத்தியோகம் காரணமாக்ப் போய் இருந்தமையால் வீட்டில் நாங்க இருவரும் அம்மா, அப்பாவும் தான்.

      Delete
    2. இப்போல்லாம் அழகர் ஆத்தில் இறங்குவதைத் தான் சித்திரைத் திருவிழா என்கின்றனர். ஆனால் நாங்க மீனாக்ஷி கோயிலில் உற்சவத்துக்குக் காப்புக்கட்டிக் கொடியேத்தும்போதே சித்திரைத் திருவிழா ஆரம்பம் என்போம். அந்தச் சமயங்களில் ஸ்வாமி புறப்பாடு கீழ வாசலில் இருந்து பிரதக்ஷிணமாகத் தெற்கு மாசி வந்து பின்னர் மேல மாசி வீதி வந்து அங்கிருந்து வடக்கு மாசி வீதி/மேல மாசி வீதி முனையில் இருக்கும் நேரு ஆலால சுந்தரர் கோயிலைத் தாண்டி வடக்கு மாசி வீதி வழியாகக் கீழ மாசி வீதி போய்ப் பின்னர் கீழ வாசல் போய் கோயிலுக்குள் செல்வார்கள். அஷ்டமிச் சப்பரம் கூட மாசி வீதிகள் வழியாத் தான் போகும். ஆனால் இந்த ஆவணி மூல உற்சவம் மட்டும் ஆவணி மூல வீதிகளில் தான் நடக்கும். ஆகவே நாங்க திருக்கல்யாணம் முடிஞ்சதும் பூப்பல்லக்கு, மறுநாள் தேரெல்லாம் பார்க்க மாசி வீதிகளுக்குத் தான் போவோம். எங்க வீட்டில் இருந்து வடக்கு மாசி வீதி கிட்டக்க. சங்கீத விநாயகர் கோயில் தெரு வழியாக (சேதுராமன், பொன்னுச்சாமி வீடு) வடக்குக் கிருஷ்ணன் கோயில் போய்விட்டால் (கோயில் வடக்கு மாசி வீதி மத்தியில் உள்ளது) கோயிலின் படிகளில் உட்கார்ந்த வண்ணம் காத்திருக்கலாம். பெரிய பெரிய கல் படிகள். அந்தக் காலத்துக் கட்டுமானம். இப்போ இருக்கோ டைல்ஸ் போட்டுவிட்டார்களோ தெரியலை. அங்கே உட்கார்ந்த வண்ணம் பார்த்தால் ஸ்வாமி ஆலால சுந்தர விநாயகர் கோயிலுக்கருகே வரச்சேயே கீழே இறங்கி ஸ்வாமி பார்க்கத் தயாராய் இருப்போம். வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் எல்லாம் அங்கே அப்படி உட்கார்ந்து தான் பார்ப்போம். ராப்பத்து, பகல் பத்து உற்சவம், கடைசி நாள் திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரம் எல்லாமும் பார்க்கலாம்.

      Delete
  2. எனக்கும் மதுரையின் பழைய நினைவுகள் வருகின்றன.  இப்போது அந்தக் காட்சியெல்லாம் பார்க்க முடியாது என்பது சோகம்.  

    ReplyDelete
    Replies
    1. இப்போ இருப்பது மதுரையே அல்ல. அதனால் தான் அந்த வருத்தத்தில் தான் எபி வாட்சப் குழுவில் கோமதி சொன்னதுக்கு நான் மறுப்புத் தெரிவிச்சேன். அதுவும் இந்த வருஷம் கொடுமைகள் எல்லாம் அரங்கேறின. :) நான் 76 வரையிலும் மதுரைக்கு அடிக்கடி போவேன், வருவேன். அது வரையிலும் ஸ்வாமியைப் பார்க்கவோ அம்மனைப் பார்க்கவோ கஷ்டப்பட வில்லை. எப்போ வேண்டுமானாலும் கோயிலுக்குப் போவோம். பார்த்துட்டு வருவோம். சில சமயங்கள் இரண்டு தரம் கூடக்கோயிலுக்குப் போவேன். கல்யாணம் ஆகும் முன்னர் எங்க வீட்டில் கூடத்தில் இருந்த மாமியும், இன்னொரு மாமியும் நானுமாகச் சுமார் பத்து பத்தரைக்குக்கோயிலுக்குப் போவோம். எல்லா ஸ்வாமிகளையும் பார்த்துக் கொண்டு நிதானமாக சித்தர் சந்நிதி வந்து 12 பிரதக்ஷிணம் செய்வோம். சில நாட்கள் அங்கேயே காத்திருந்து உச்சிகால தீபாராதனை பார்ப்போம். மாலை நேரங்கள் போனால் பள்ளியறை தீபாராதனையும் அப்போப் பிரசாதமாகக் கொடுக்கப்படும் அந்தப்பாலும். இப்போ எல்லாம் இப்படி நடக்குதோ இல்லையோ! மீனாக்ஷி எப்படி இருக்காளோ யாருக்குத் தெரியும்?

      Delete
    2. எபி வாட்சப் குழுவில் இல்லையே கீதா.
      நான் சிறு வயதில் பள்ளி போகா வயதில் மதுரையில் இருந்தேன், அப்புறம் 71 ஆம் ஆண்டும், 72 ஆம் ஆண்டும் மதுரையில் இருந்தேன் அப்புறம் மதுரையில் இல்லை.மீண்டும் 2015 ஆம் ஆண்டு மதுரை வந்து விட்டேன். மதுரை மாறி தான் இருக்கிறது.

      Delete
    3. நீங்க இல்லை கோமதி அரசு. அவங்க மதுரையில் எங்க தெருவில் எதிர்சாரியில் இருந்தாங்க. என் அம்மாவழியில் தூரத்துச் சொந்தம். கோமதி ஸ்ரீநிவாசன்னு பெயர். என்னை விடப் பெரியவங்க. தற்செயலாகக் கண்டு பிடிச்சாங்க. ஆனாலும் என்னால் தொடர்பைத் தொடர முடியலை. இப்படி வாட்சப்பில் பார்ப்பது தான். கௌதமன் வீட்டுக்குப் பக்கத்து வீடு பெங்களூரில்னு கௌதமன் சொன்னார் ஒரு தரம். அதை வைச்சு எபி வாட்சப் குழுவில் இருக்கார். பதிவுகள் எல்லாம் பார்ப்பதோ படிப்பதோ இல்லை. அதிகம் சங்கீதம் பத்திப் பேசுவாங்க.

      Delete
    4. இப்போக் கும்பாபிஷேஹத்தின் போது எனக்கு நேரலையின் லிங்க் அனுப்பினாங்க. எனக்கு இந்த அரசியல்வாதிகள் செய்த/செய்யும் விஷயங்களால் மனம் ரொம்பவே வருத்தமாய் இருந்தது. ஆகவே நான் பார்க்கப் போவதில்லைனு சொன்னேன். அப்போச் சொன்னாங்க நாமல்லாம் மீனாக்ஷியோடயே வாழ்ந்தவங்க இல்லையா? எப்படி மறக்க முடியும்னு சொன்னாங்க. அது என்னமோ உண்மை தான். ஒவ்வொருத்தரும் மீனாக்ஷியை அவங்க வீட்டுப் பெண்ணாகவே நினைப்பாங்க. அந்தக் கோயிலா இப்போ இருக்கு? :(((((

      Delete
    5. "​நம்ம வீட்டு பெண்ணாகவே நினைப்பாங்க..." நீங்கள் சொல்லும் அந்த உணர்வுகளை எல்லாம் உணர முடிகிறது.

      Delete
  3. நீங்கள் கோவில் அருகிலேயே குடி இருந்ததால் இதெல்லாம் சாத்தியமாகி இருக்கிறது.  நாங்கள் வெளியே தள்ளி ரேஸ்கோர்ஸ் காலனியிலும், புதூரிலும், நாராயணபுரத்திலும், வாசித்தோம்.  சித்திரைத் திருவிழா சமயம் எங்கள் ஏரியா  ஜேஜே என்றிருக்கும்.  கோவில் பக்கம் வந்து பார்த்தது ரொம்பக் குறைவு.

    ReplyDelete
    Replies
    1. சித்திரைத் தேரோடு மீனாக்ஷிக்கான திருவிழா முடிஞ்சது. சில சமயம் தேரன்று மாலை சில சமயம் மறுநாள் மாலை எதிர்சேவை நடக்கும். இது சித்ரா பௌர்ணமி வருவதைப் பொறுத்து ஒரு நாள் முன்னே பின்னே வரும். பெரும்பாலும் அழகர் ஆத்தில் இறங்குவதைத் தான் சித்திரைத் திருவிழா என்கிறார்கள். உண்மையில் மீனாக்ஷி கோயிலில் ஆரம்பிக்கும் திருவிழா அழகர் கிளம்பி மதுரை வரும் நோக்கத்துடன் ஆற்றைத் தாண்ட ஆற்றில் இறங்குவதும் பின்னர் பற்பல மண்டகப்படிகளோடு மண்டூகருக்கு அழகர் மோக்ஷம் அளிப்பதுமாக முழுக்கவும் அழகர் திருநாளாகி விடுகிறது.

      Delete
    2. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.  அது எனக்கும் தெரிந்திருந்தாலும் சித்திரைத் திருவிழா என்றால் கூட்டம் ஊர் முழுக்கக் கூடும் அந்த நிகழ்வுதான் மனசில் நிற்கிறது!

      Delete
  4. மீனாட்சி கல்யாணம் ஓரிருமுறை பார்த்திருக்கிறேன்.  தாலி வாங்கி உறவினர்க்கெல்லாம் அனுப்புவோம்.  இதோ பேரனோ பேத்தியோ வரவாகப்போகிறது.  நீங்கள் சொன்ன அந்த கருப்பு வளையல் வாய்ப்பில்லை பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீடுகளிலே ஏதோ சொந்தப் பெண்ணின் கல்யாணம் போல் அமர்க்களமாய் இருக்கும். நானெல்லாம் பட்டுப்பாவாடை, தாவணியோடு உம்மாச்சி பார்க்கப் போவேன். வெளி ஊர்களில் இருந்தெல்லாம் யாத்ரிகர்கள் வருவார்கள். அப்போல்லாம் மேலாவணி மூல வீதி, வடக்காவணி மூல வீதியெல்லாம் கிட்டத்தட்ட அக்ரஹாரம் தான். ஆகவே வெளியூர்களில் இருந்து வரும் வயதான முதியோர்கள் எங்க தெருவில் யார் வீட்டுத் திண்ணையிலாவது தங்குவார்கள். பின்னர் வீட்டுக்குள் வந்து வீட்டுக்காரங்களிடமோ எங்களிடமோ கேட்டுக் கொண்டு குளிச்சுத் துவைச்சு யார் வீட்டிலாவது குமுட்டி கேட்டுக் கரி வாங்கி வந்து கொண்டு வந்திருக்கும் சின்ன வெண்கலப்பானையில் சாதமும், பருப்பும் சேர்த்துப் போட்டு வடித்து யார் வீட்டிலாவது உப்பும், மோரும் வாங்கிக் கொண்டு சாப்பிடுவார்கள். அந்த ஒரு வேளை தான் அவங்க சாப்பிடுவது. நாங்க யாராவது இட்லி, தோசைனு கொடுத்தால் வாங்க மாட்டாங்க. காஃபி அல்லது மோர் கொடுப்போம். அதைச் சிலர் வாங்கிப்பாங்க. சிலர் வேண்டாம்னு சொல்லிடுவாங்க.

      Delete
    2. அழகர் வரும்போதும் திரும்பும்போதும் கூடும் கூட்டத்தின்போது எங்கள் வீட்டுத் திண்ணையில் இடம்பிடிக்கும் சில குடும்பங்கள் எங்கள் வீட்டு கழிவறையை பயன்படுத்த அனுமதி கேட்பதுண்டு.  அவர்கள் எல்லோரும் சௌராஷ்டிரா காரர்கள்.

      Delete
  5. ஆனால் அந்தத்திருவிழா நாட்கள் எல்லாம் மதுரையைப் பார்க்க வேண்டுமே....   ஊரே அல்லகல்லோலப்படும்.

    ReplyDelete
    Replies
    1. எதிர்சேவைக்கெல்லாம் நாங்க குடித்தனக்காரங்க அத்தனை பேரும் அப்பாவுடைய நண்பர் பரமசாமி வாத்தியார் வீட்டு மண்டகப்படி நடக்கும் மண்டபத்துக்குப் போயிடுவோம். அங்கே அழகர் அரை மணிக்கும் மேலாகத் தங்குவார். பல்லக்கைத் தொட்டுக் கொண்டு பக்கத்தில் நிற்கலாம். எல்லாமும் பார்க்கலாம். அம்மா மேற்பார்வையில் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் தயாராகும். ஓலைப்பெட்டியில் வைத்துக் கொடுப்பார்கள். தெருவெல்லாம் விநியோகம் நடக்கும்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    மதுரை மீனாக்ஷி கல்யாணம் விவரணங்களை படித்துத் தெரிந்து கொண்டேன்.படிக்கும் போதே நன்றாக உள்ளது. வளையல்கள் விற்ற திருவிளையாடலை சித்திரமாக கண்டு களித்தேன். அதையெல்லாம் தொகுத்து பதிவாக போட்டு வரும் பக்தருக்கு பாரா ட்டுக்கள்.

    உங்களுக்கு மதுரை மாநகரில் நடைபெற்ற விழாக்களை கண்டு களிக்க, அப்போது பெரும் வாய்ப்பு கிடைத்திருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் திருமங்கலத்தில் இருந்த போதும் அந்த மாதிரி விழாக்களுக்கு சென்றதில்லை. கூட்டம் அதிகமென எங்கும் சென்றதில்லை. இன்று உங்களது பதிவில் படித்து ஆனந்தம் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. என்ன கூட்டமாக இருந்தாலும் அது மதுரையில் இருந்தவரை பெரிதாகத் தெரியலை. பின்னாட்களில் மதுரையில் இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் போய்ப் பார்த்தது இல்லை. ஆகவே இப்போதைய நிலைமை புரியலை. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ரொம்பவே நன்றி கமலா. திருமங்கலத்தில் எங்களுக்குச் சொந்தக்காரர் எல்லாம் இருந்தாங்க. இப்போல்லாம் அப்பா/அம்மா அங்கே இல்லைனு ஆனப்புறமாத் தொடர்பே இல்லை.

      Delete
  7. மதுரை, ஸ்ரீரெங்கம் போன்ற உற்சவங்கள் நிறைய நடக்கும் ஊர்களில் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு இரண்டும் வாய்த்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. ஆனாலும் மதுரையில் சின்ன வயசில் இருந்தே இருந்ததாலும் வீடும் கோவிலுக்கு மிக அருகே இருந்ததாலும் அது அனுபவமே தனி தான். ஸ்ரீரங்கத்தில் அப்படி இல்லை. என்றாலும் அரையர் சேவைக்கு, ராப்பத்து, பகல்பத்துக்கெல்லாம் போயிருக்கோம். ஜேஷ்டாபிஷேஹம், பூச்சாண்டி சேவை போன்றதுக்கும் தீபாவளி, சித்திரை வருஷப்பிறப்புக்கெல்லாமும் போக முடிஞ்சது. சேர்த்தி சேவைக்குத் தான் போகவே முடிந்ததில்லை. கூட்டம் அதிகமாக இருக்கும்.

      Delete