எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 12, 2007

பிள்ளையார் சுழி ஏன் போடணும்?




எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், வியாசரின் மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்லத் தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதி வந்தவர் பிள்ளையார் தான். அதுவும் எப்படி? வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார். இவர் எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயமே வந்துடுச்சாம், என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதற வேகத்துக்கு நம்மால் சொல்ல முடியாது போலிருக்கேன்னு. உடனே என்ன செஞ்சாராம் தெரியுமா? நான் சொல்ற ஸ்லோகங்களோட அர்த்தத்தைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று பிள்ளையாரிடம் சொல்லி விட்டார். வேதமுழு முதல்வனான பிள்ளையாரைச் சோதனை போட்டால் சரியா வருமா? அவரும் அப்படியே சரின்னு அர்த்தம் புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்தாராம். இதுக்காகவே ரொம்ப யோசித்து, யோசித்துச் சிக்கலான பதங்களையும், அரத்தங்களையும் கொண்ட ஸ்லோகங்களை வியாசர் சொல்ல விநாயகர் மெளனமாய் அதன் பொருளை உணர்ந்து எழுதி வந்தார். பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில், பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள "மானா" என்னும் கிராமத்தில் உள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.

பிள்ளையார் சுழிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சுழி என்பதே வளைசல், வக்ரம் என்றுதான் அர்த்தம். விநாயகரின் தும்பிக்கை வளைந்து சுருட்டிக் கொண்டு இருக்கிறது அல்லவா? பிள்ளையார் சுழி எப்படிப் போடுகிறோம்? முதலில் ஒரு வட்டம், அதுவும் அரை வட்டம், பின் ஒரு நேர்கோடு. பொதுவாய்ச் சக்கரங்கள் சுற்றுவதற்கு மத்தியில் ஒரு அச்சு வேண்டும். அந்த அச்சு வளையாமல் நேராக இருந்தால் தான் சக்கரம் சுற்றும். நாம் தீபாவளிக்கு விஷ்ணு சக்கரம் சுற்ற ஒரு நேரான கம்பியைத் தான் உபயோகிக்கிறோம் இல்லையா? அது போல்தான். இந்த உலகும், கிரகங்கள் அனைத்தும் வட்டமாய்த்தான் சுற்றி வருகின்றன, சூரிய சந்திரர் உள்பட. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஆதாரமான சக்தி இருக்கும் இல்லையா? அது ஒரு நேர்கோடாய்த் தான் இருக்க முடியும். இதை நினைவு கூரவும் நாம் வட்டத்தை அரை வட்டமாய்ப்போட்டு விட்டுப் பின் ஒரு நேர்கோடு போடுகிறோம். மின்சாரம் எடுக்க எப்படி நீர்த்தாரையில் இருந்து சக்கரங்களை இணைத்து, அதாவது வட்டத்தில் இருந்து நேர்க்கோடாக மின்சாரத்தை எடுக்கிறோமோ அது போல்தான் இதுவும்.
"அ" "உ" "ம" மூன்றும் இணைந்தது தான் "ஓம்" என்னும் பிரணவம். அதை ஆங்கிலத்தில் எழுதும்போது "AUM"என்றே எழுத வேண்டும். இந்த அரை வட்டத்தில் ஆரம்பித்து நேர்கோடாக முடிகிற பிள்ளையார் சுழிக்கு இது தான் அர்த்தம். சிவசக்தியின் ஐக்கியத்தையும் குறிக்கிறது. "அ" என்ற சிருஷ்டியில் ஆரம்பித்து "உ" என்ற எழுத்தால் காப்பாற்றப் பட்டுக் கடைசியில் "ம" என்னும் எழுத்தால் சம்ஹாரம் செய்யப் படுகிறோம் அல்லவா? இந்த மூன்றில் நடுவில் உள்ள காக்கும் எழுத்தையே பிள்ளையார் சுழியாகப் போட்டு, அனைத்துக்கும் ஆதாரமும் இவரே, முடிவும் இவரே, சரணும் இவரே என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, August 11, 2007

விட்டுட்டேன், சத்தியமாத் தொந்திரவு செய்ய மாட்டேன்! :D

இதை முதல்லே இந்தப் பதிவுகள் பக்கம் போடலாமா, வேணாமானு ரொம்ப யோசிச்சேன். அப்புறம் இந்தக் கவிதைகள், ஸ்லோகங்கள், பாடல்கள் இவற்றில் உள்ள பொருளை நாம் உணர வேண்டுமானால் சொற்களை மாற்றிப் போட்டுப் படிக்க வேண்டி உள்ளது. இது எல்லா மொழிக்கும் பொருந்தும். ஆகவே இந்தப் பதிவுப் பக்கத்துக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை மனதில் வைத்து இங்கேயே எழுதுகிறேன்.
*************************************************************************************

பாண்டவர்கள் வனவாசம் போனதும் நம் அனைவருக்கும் தெரியும். அதில் கடைசி ஒரு வருஷம் அவர்கள் அறிந்தவர், தெரிந்தவர் கண்களில் படாமல் அக்ஞாதவாசம் இருக்க வேண்டும் என்ற கட்டளையை ஒட்டி, விராட நாட்டுக்கு வந்து அக்ஞாத வாசம் செய்கின்றனர். அவர்களை எப்படியாவது வெளிக் கொணர நினைத்த துரியோதனனும், அவனுடைய சகோதரர்களும், பாண்டவர்களின் ராஜ பக்தியை நன்கு உணர்ந்து, விராட அரசனுக்குக் கெடுதல் செய்தால் பாண்டவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று விராட நாட்டின் எல்லையில் உள்ள பசுக்கள் மந்தைக்கு வந்துப் பசுக்களை எல்லாம் பிடித்துக் கொண்டு போக ஆரம்பித்தனர். இது அதிகம் ஆகி பசுக்களின் சொந்தக்காரர்கள் விராட அரசனிடம் முறையிடவே, பசுக்களை ஓட்டிச் செல்பவருடன் போர் நடத்துவதற்காக விராட அரசகுமாரன் உத்தரகுமாரனைத் தயார் செய்கின்றனர். பயந்த சுபாவம் கொண்ட விராட இளவரசனின் தேரோட்டியாக வருவது வீரம் நிறைந்த அர்ஜுனனன். அவன் இருப்பதோ பெண் வேஷத்தில். அரசனையும், இளவரசனையும் சமாதானப் பேச்சுக்களால் தைரியம் சொல்லிவிட்டு விராட இளவரசனின் பயத்தைப் போக்கும் விதமாய்த் தானே வில், அம்பு எடுத்துப் பாணங்கள் மழை பொழிகிறான் அர்ஜுனன். அப்போது கெளரவரின் படைகளுடன் வந்திருந்த பீஷ்மர் ஒரு பெண்ணா இப்படி வில்லில் விளையாடுவது என அதிசயிக்க உடன் வந்த துரோணருக்குத் தன் மாணாக்கனை அடையாளம் தெரிந்து விடுகிறது. ஆனால் அது அர்ஜுனன் தான் என்று அனைவருக்கும் தெரியும் படி சொல்லி விட்டால் பின் அவர்களின் அக்ஞாதவாசம் வெளிச்சத்துக்கு வந்து விடும் அல்லவா? ஆகவே மறை பொருளில் பதில் சொல்கிறார். மேலோட்டமாய்ப் பார்த்தால் முன் பதிவில் கண்ட அர்த்தம் தான் வருகிறது அல்லவா?

"நதீஜலம் கேசவநாரி: கேது: நகாஹவ்யோ நாம நகாரிஸூனு:
ஏஷாங்கநா வேஷதர: கிரீடி ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:"
என்பது ஸ்லோகம்.
நதீஜலம் கேசவநாரிகேது என்று வருவதை, "நதீஜ+லங்கேச+வநாரிகேது" என்று பிரித்துக் கொள்ள வேண்டும். நதீஜ என்பது இங்கே உண்மையில் பீஷ்மரைக் குறிக்கிறது. கங்கையின் மைந்தர் அல்லவா? அடுத்து லங்கேச வநாரி கேது= லங்கேசன் என்றால் ராவணன், வநாரி=வனங்களை அழித்த சத்துருவை, கேது=கொடி
"ராவணனின் வனங்களை அழித்த அனுமனைத் தன் கொடியாகக் கொண்ட" என்று அர்த்தம் வரும்.

நகாஹவ்யோ நாம= நகம் என்றால் மரம் அல்லது மலை என்று முன்பே பார்த்தோம். மரத்துக்கு அர்ஜுனன் என்றும் வடமொழிப் பெயர் உண்டு. ஆகவே இங்கே அருஜுனனின் பெயரை மறைமுகமாய்க் குறிக்கிறது. அடுத்தது நகாரிஸூநு= இந்த இடத்தில் மலைகளின் விரோதிக்குப் பிள்ளை என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். மலைகளின் கர்வத்தைத் தன் வஜ்ராயுதத்தால் அடக்கியவன் இந்திரன். இந்திரனுடைய வரத்தால் பிறந்தவன் அர்ஜுனன். ஆகவே நகாஹவ்யோ நாம நகாரி ஸூநு= என்பது அருஜுனனைக் குறிக்கிறது.

ஏஷ அங்கனா வேஷதர:கிரீடி= கிரீடி என்பது அருஜுனனின் சிறப்புப் பெயர். அவனின் வீரத்தைப் பாராட்டி இந்திரனால் கொடுக்கப் பட்டது. ஏஷ அங்கனா வேஷதர=பெண் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அர்ஜுனன் என்ற பொருள் வரும்.

கடைசியில் (இத்தோடு விட்டு விடறேன், ஜூட்!) ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:
இதில் ஜித்வா வயம்= ஜித்வா வ+யம், நேஷ்யதி, ச+அத்ய, க+ அவ: எனப் பிரித்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல் முதலில் பொருள் கொள்ள வேண்டியது ச அத்ய= மேலும் இப்போது, யம்=எந்த துரியோதனனை (இங்கே மறை பொருளாய்க் குறிக்கும்) ஜித்வா=ஜெயித்து, வ=உங்களுடைய, கா=பசுக்களை, நேஷ்யதி=ஓட்டிப் போகப் போகிறான், அ=அவனை, அந்தத் துரியோதனனை, அவ:=அவனைக் காப்பாற்றுங்கள்."

"கங்கையின் மைந்தரே! மலைகளின் விரோதியான இந்திரனின் பிள்ளையான அருஜுனன் தான் பெண்வேஷம் தரித்து வந்திருக்கிறான். துரியோதனால் கவர்ந்து செல்லப் பட்ட பசுக்களைத் திரும்ப அவன் ஓட்டிச் செல்லப் போகிறான். இவனிடம் இருந்து துரியோதனனைக் காப்பாற்றுங்கள்.' இது தான் துரோணர் மறை முகமாய்ச் சொன்னது. ஆகவே எதிலும் நேர் பொருள் ஒன்று இருக்கும். மறை பொருள் வேறேயாக இருக்கும். தமிழிலும் பழங்காலத்தில் எழுதிய சித்தர்களின் ஓலைச் சுவடிகளில் மிகுந்த மறை பொருள் உண்டு. அவற்றைப் பற்றி இந்தத் தலை சுற்றலில் இருந்து நீங்க எல்லாம் மீண்டு வந்து தெளிந்த பின்னர் எழுதறேன்.

Friday, August 10, 2007

"குட்டு" உடைந்து விட்டது! எனக்கு இல்லை!

"மகா பாரதக் குட்டு" என்ற வார்த்தையை முதன் முதல் "தெய்வத்தின் குரல்" புத்தகத்தின் மூன்றாம் பகுதியில் தான் பார்த்தேன். இது நாம் பிள்ளையாருக்குக் குட்டிக் கொள்ளும் குட்டு என்று சொல்ல முடியாது. இது வேறே இதை "GHUDDU" என்று உச்சரிக்க வேண்டும். இந்த உச்சரிப்பினால் அர்த்தமே மாறி விடுகிறது. யாரையாவது பார்த்து உன்னோட விஷயம் வெளியிலே தெரிஞ்சு போச்சுன்னு சொல்றதுக்கு நாம் பொதுவாய், "உன் குட்டு உடைஞ்சு போச்சு" என்போம் அல்லவா? இந்த அர்த்தம் தான் அதுக்கு. இதுக்கும் மகாபாரதத்துக்கும் என்ன சம்மந்தம்? இதோ சொல்றேன்.

பொதுவாய்க் கவிதைகளையோ, அல்லது செய்யுளையோ பதம் பிரித்துப் பார்த்து அர்த்தம் எழுதச் சொல்லுவார்கள். நம் வலை உலகத் திருப்புகழ் மணியான திரு விஎஸ்கே மிகவும் அனாயாசமாய் இவ்வாறு திருப்புகழின் பதம் பிரித்து அர்த்தம் சொல்லுவதைப் பார்த்துப் பொறாமைப் பட்டிருக்கேன். அதே மாதிரி முத்தமிழில் ஒருத்தர் இருக்கார். நாயன்மார்களுக்குச் சேவை செய்து கொண்டு, அந்தாதியும், திருப்புகழின் சந்தத்திலேயே கவியும், சிலேடைக்கவிகள் எழுதிக் கொண்டும், எந்த வார்த்தைக்காவது நமக்கு அர்த்தம் தெரியலைன்னால் இவரைக் கேட்டால் போதும், அர்த்தம் சொல்லுவதோடு அதற்கான சுட்டியும் கொடுத்து விடுவார். இவரைப் பார்த்துப் பொறாமைப் பட்டால் நடக்கிற வேலை இல்லைனு விட்டுட்டேன். தமிழிலேயே இம்மாதிரி பதம் பிரிக்கும்போது அர்த்தங்கள் மாறி வரும்போது வடமொழியில் கேட்கணுமா? அங்கேயும் உச்சரிப்பிலும் அர்த்தம் மாறும், பதம் பிரிக்கும்போதும் அர்த்தம் மாறுகிறது. அது தான் எப்படின்னு பார்க்கப் போகிறோம். இது நான் ஆராய்ந்து பதம் பிரித்து, வேலை மெனக்கெட்டு செய்யவில்லை. மகாஸ்வாமிகள் எடுத்துக் காட்டி உள்ளார். அதை நான் இங்கே எடுத்துக் கையாள்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இருக்குன்னு பெருமையாத் தான் இருக்கு.

மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்லப் பிள்ளையார் எழுதி வந்தார்னு நாம் எல்லாரும் அறிந்து வச்சிருப்போம். நடுவிலே பேசக் கூடாதுன்னு விதி வேறே. அதையும் ஒத்துக் கொண்டார் பிள்ளையார். வியாசர் சொல்லும் வேகத்துக்குக் குறையாமல் எழுத வேண்டும். சரி, தலை ஆடியது பிள்ளையாருக்கு. இந்தப் பிள்ளையார் பொல்லாதவாராச்சே. தன் தந்தத்தை உடைத்துக் கொண்டு எழுத ஆரம்பிச்சவரோட வேகத்துக்கு வியாசரால் ஈடு கொடுக்க முடியவில்லை. பார்த்தார் வியாசர்! என்னடா இது, இவர் வேகத்துக்கு நாம் சொல்ல முடியலைனால் சரியா வராதேன்னு நினைச்சுப் பிள்ளையாரிடம் அர்த்தமும் புரிஞ்சுக்கணும்னு இன்னொரு நிபந்தனை போட்டார். பிரணவஸ்வரூபமே பிள்ளையாராக வந்திருக்கும்போது, அதனிடம் ஆணையாவது, ஆனையாவது! இந்த ஆனை அதுக்கும் தலையை ஆட்டியது. வாய் திறக்கவில்லையே! மூச்! வியாசர் நடு நடுவில் சிக்கலான பதங்கள் உள்ள ஸ்லோகங்களாய்ச் சொல்லிக் கொண்டே வந்தார். அதில் ஒரு ஸ்லோகமும், அதன் மேலோட்டமான அர்த்தமும் பார்ப்போமா?

"நதீஜலம் கேசவநாரி:கேது:நகாஹ்வயோ நாம நகாரிஸூனு:
ஏஷாங்கநாவேஷதர: கிரீடி ஜித்வா வயம் நேஷ்யதி சாத்ய காவ:"

மேலோட்டமாய் இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தைப் பார்த்தோமென்றால்,
"நதீஜலம்=ஆற்றுத் தண்ணீர்,
கேசவநாரி கேது:= கேசவனுடைய ஸ்த்ரீயின் அடையாளம்
நக= மலை அல்லது மரம் நகாஹவ்யோ நாம=நகம் என்று (அதாவது மரம் அல்லது மலை) பேர் உள்ளவன்
நகாரிஸூனு:=மேற்சொன்ன இந்த நகத்தின் விரோதியின் பிள்ளை
ஏஷாங்கனா வேஷதர கிரீடி= கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பெண் வேஷக் காரன்
ஜித்வா= ஜெயித்து
வயம்= நாங்கள்
நேஷ்யதி= கொண்டு போகிறான்
சாத்ய (ச, அத்ய)= ச= மேலும், அத்ய= இப்போது
காவ:=பசுக்கள்.

கிரீடம் வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பெண்வேஷக் காரன் ஆற்றுத் தண்ணீர். கேசவனுடைய ஸ்திரீயின் அடையாளம், மலை அல்லது மரம் என்ற பேர் உள்ளவன். மலை அல்லது மரத்துக்கு விரோதியின் பிள்ளை. நாங்கள் ஜெயித்து மேலும் பசுக்கள் கொண்டு போகிறான்." அர்த்தம் புரியுதா? தலை சுத்துதா? இந்த ஸ்லோகம் பிறந்த நிகழ்ச்சியும், இந்த ஸ்லோகத்தைச் சொன்னவராக வியாசர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதையும், இந்த ஸ்லோகத்தைக் கேட்டவரும், அதன் காரணமும் உண்மையான அர்த்தமும் நாளைக்குப் பார்ப்போமா?

டிஸ்கி: எல்லாருக்கும் புரியணும்னு கொஞ்சம் எளிமையாத் தான் தர முயற்சி செய்திருக்கேன். புரியாதவங்க மன்னிக்கவும். புரியாத இடத்தில் தெரிந்த விளக்கம் கொடுக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

பல்/(மும்)முனைத் தாக்குதலில் தலைவி! எச்சரிக்கை!

ஒரு வாரமாவே எனக்கு நேரம் சரியில்லை, எல்லாம் ஹெட் லெட்டர். முந்தாநாள் பாருங்க, இந்த அபி அப்பா கிட்டே சரபர் படம் எடுங்கன்னு சொல்லிட்டுக் காபி ஆத்தப் போனேன். என்ன, தலையும், புரியலை, வாலும் புரியலையா? அது ஒண்ணுமில்லை, அமெரிக்கா வந்ததிலே இருந்து நான் காலையிலே களப்பணி ஆற்ற உட்கார்ந்து விடுவதைத் தெரிந்து கொண்டு, தொண்டர்கள், தங்கள் வேண்டுகோளுடனும், மனுக்களுடனும் எனக்கு மெயிலிக் கொண்டிருப்பார்கள், அல்லது கூகிளில் "சாட்"டிக் கொண்டிருப்பார்கள். நானும் காபி ஆற்றும் நேரம் முடிஞ்சு போச்சுன்னா கொஞ்சம் நிம்மதியா உட்கார்ந்து கடமை ஆற்றுவேன், கூடவே அப்போ அப்போ களப்பணியும். அப்போ முந்தாநாள் மாட்டிக் கொண்ட அபி அப்பாவிடம் வேலை மெனக்கெட்டு லிங்க் கொடுத்து, சரபர் படம் எடுத்து என்னோட ப்ளாகில் போடச் சொல்ல நினைத்து, லிங்க் மட்டும் கொடுத்து, படத்தை எடுங்க, வரேன்னு சொல்லிட்டு, என்னோட மறுபாதிக்குக் காபி ஆத்தப் போனேனா? அவசரக் குடுக்கை! நானில்லை, அபி அப்பாதான், படத்தை எடுத்து அதை மெயில் பண்ணிட்டு உட்கார்ந்திருக்கார். என்ன அவசரம்னு கேட்டதுக்கு, இதோ ஆணி பிடுங்கிட்டு வரேன்னு போனவர்தான், இன்னிக்குத்தான் வந்தார், கூடவே கைப்புள்ளைக்கும், வேலை இல்லா வெட்டிக்கும் தகவல் கொடுத்துட்டு!

மனுஷனுக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன்னு தெரியலை, இன்னிக்கு ஒரு பக்கம் கைப்புள்ள, அம்பி நம்பர் கொடுங்க, மெயில் அட்ரஸ் கொடுங்கனு அம்பியின் இணைபிரியா நண்பனாக மாறப் போறேன், அவரோட அனுபவம் ஒரு மாதம் அதிகம் ஆனதால் பூரிக்கட்டை அடி வாங்கறதிலே எக்ஸ்பர்ட் ஆயிட்டார்னு கேள்விப்பட்டேன்னு தொணதொணப்பு, நானும் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு ஒரே ஆர்வம்! அடுத்த மாசம் தனிக்குடித்தனம் வைக்கப் போறார் போலே! :P இன்னொரு பக்கம் அபி அப்பா, ஏதோ கேட்கிறார். நடுவிலே இந்த வேலை இல்லா வெட்டி, வந்து இவர் எங்கே இருந்து வந்தார்? யாரு அனுப்பிச்சாங்கனு புரியலை, ராம், ராம், ஒரே ஊரா இருந்துட்டு இப்படி என்னைப் பழி வாங்கலாமா? தமிழா அது? என்ன மொழியிலே எழுதறார்னே புரியலை, அறுத்துத் தள்ளிட்டார். இந்த லட்சணத்திலே மதுரை ப்ளாகிலே வேறே எழுத ஆரம்பிச்சிருக்கார். யாரு படிக்கிறது? எனக்கு ஏன் இந்தத் தண்டனைனு புரியலை! :P இது யார் செய்த சதி? எதிர்க்கட்சிகளா? அம்பியா? நேத்திக்கு வேலை மெனக்கெட்டு அம்பியோட பேசினதுக்கு இதுவா பரிசு? சேச்சே நட்புக்குத் துரோகம் செய்யலாமா? இப்படி மும்முனைத் தாக்குதல் நடக்கும்போதே அபி அப்பாவுக்கும், கைப்புள்ளக்கும் மெசெஞ்சர் வேலை வேறே பார்க்க வேண்டி வந்துடுச்சு. இவர் மெயில் ஐடியை அவருக்கும், அவர் ஐடியை இவருக்கும் கொடுத்ததும் அடுத்த நிமிஷம் இரண்டு பேருமே ஆளே காணோம். என்ன அநியாயம், ஒண்ணுமே புரியலையே? யார் செய்த சதி இது? அபி அப்பா, கைப்புள்ள உங்களுக்கே இது நல்லா இருக்கா? ஒரு அப்பாவியை இப்படியாப் பழி வாங்கறது?

இதெல்லாம் பத்தாதுன்னு இந்த வேலை இல்லா வெட்டியோட தொந்திரவு வேறே. தமிழ்னு சொல்லிட்டு வேறே ஏதோ மொழியில் பயமுறுத்தல், அறுவை, பின்னூட்டம் போடுவேன்னு மிரட்டல் எல்லாம். நான் எங்கே இருக்கேன்னு கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு பூகோளம் தெரியும்னு காட்டிட்டு ஒரு அலட்டல்! :P நான் எழுதற பதிவு ஒண்ணும் நல்லா இல்லைனு விமரிசனம். ஆன்மீகம், சமையல் தவிர வேறே எழுதவே மாட்டீங்களா பெண்கள் அப்படின்னு ஒட்டுமொத்தமாப் பெண்குலத்தை ஒரு தாக்கு! பெண்குலமே திரண்டு எழுக! வேலை இல்லா வெட்டியைப் பழி வாங்குங்க! தோள் கொடுப்பீர் தொண்டர்களே! இந்தச் சமயம் பார்த்துக் கண்ணபிரான் வேறே சைகிள் காப்பிலே சான்ட்ரோ ஓட்டாதீங்கனு கவுண்டர் மூலமா மெசேஜ் கொடுத்து மிரட்டல்! அம்பிக்குக் கவுண்டரோட ஆதரவு இருக்குனு மறைமுகமாச் சொல்லிக் காட்டறார். இந்தக் கவுண்டமணி, செந்தில் காமெடி சினிமாவிலே கூட நான் ரசிக்க மாட்டேனே! :P கடவுளே, நான் யார் முகத்திலே விழிச்சேன்! ஒண்ணுமே புரியலியே! மொத்தத்தில் இந்த வாரமே நம்மது இல்லைங்க!

Tuesday, August 07, 2007

அதெல்லாம் மாற மாட்டோம், அப்படியே இருப்போம்!

இன்னிக்கு வேறே யாருமே கிடைக்கலை, இன்னிக்கு என்ன? கொஞ்ச நாளாவே இப்படித்தான் இருக்கா? அதனாலே என்னோட மறுபாதியைத் தான் ஒரு வழி பண்ணலாம்னு இந்தப் பதிவு! நிச்சயமாய் அவர் படிக்க மாட்டார்ங்கிற தைரியம் தான்! அமெரிக்கா வந்ததிலே இருந்து கிழக்கும், மேற்குமா இருக்கிற , எப்போதும், என்னை ஒரு "அசடு" என்று நம்பிக்கொண்டிருக்கும் என்னோட மறுபாதிக்குப் பொழுதே போகவில்லை. மெம்பிஸில் இருந்த வரைக்கும், காலை எழுந்ததும் தோட்டம், மாலையில் பிறகு தோட்டம்னு போய்த் தோட்டக்கலையில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார். மிச்ச நேரம் என்ன செய்யறது? அங்கே தமிழ்ப்புத்தகத்துக்கும் வழி இல்லை. விஜய் டி.வியின் மறு ஒளிபரப்பையே எத்தனை நேரம் பார்க்கிறது? அங்கே தான் நான் கை கொடுத்தேன்! கணவனுக்கு உதவிய காரிகை என்ற பெயரும் பெற்றேன். எப்படிங்கிறீங்களா, கீழே படிக்கவும்.

இந்த அமெரிக்காவில் அது அபார்ட்மென்ட் வீடானாலும் சரி, தனி வீடானாலும் சரி, சமையல் அறையில் எல்லாம் "கிட்சன் காபினெட்" என்று சொல்லப் படும் முறையில் உள்ள தனித்தனியான சிறு சிறு அலமாரிகள்தான். அதில் நம்ம ஊர் அரிசிப்பானை எல்லாம் வைக்கவே முடியாது. ஒரு அடி, ஒரு அடி உயரத்தில் 3 தட்டுக்கள் போட்டு மின் அடுப்புக்கு இரு பக்கமும், இரு அலமாரியும், மின் அடுப்புக்கு மேலே உள்ள இடத்தில், மைக்ரோவேவ் அடுப்பும், அதுக்கு மேலே சிம்னியும், அதுக்கும் மேலே இன்னொரு தட்டே இல்லாத அலமாரியும் இருக்கும். கவுன்டர் என்று பொதுவாக அழைக்கப் படும் மேடை மின் அடுப்பைச் சுற்றி இருக்கும். அங்கங்கே மின் இணைப்புக்கள் இருக்கும். இந்த மின் இணைப்புக்களில் மிக்ஸி, ப்ரெட் டோஸ்டர், ரைஸ் குக்கர், காஃபி மேக்கர் போன்றவை வைத்து இடம் மீதி இருந்தால் உங்கள் அதிர்ஷ்டம். கிரைண்டரை வைக்கணும்னா எதையாவது எடுத்து வச்சுட்டுத் தான் வைக்கணும். அப்புறம், அது பட்டர் ஃப்ளைனால் வாரி அடிச்சுக் கார்பெட் எல்லாம் வீணாகிறது தனிக் கதை! அது அப்புறமா! இந்தக் கவுன்டரின் பக்கம் சுவர் என்று ஒன்று இருந்தால் ஒரு அலமாரி அதிகமாய் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் கவுன்டர் பாதி திறந்து டைனிங் டேபிள் போடும் இடத்தை நோக்கியோ அல்லது, லிவிங் ரூமைப் பாதி தடுத்துக் கொண்டோ இருக்கும். அந்த இடத்தில் என்னத்தை சாமான்கள் வைத்து என்னத்தை சமைக்கிறது? நமக்கா உப்பில் இருந்து, புளிவரை கிலோ, கிலோவாக வாங்கிப் பழக்கம். இங்கே கிடப்பது என்னவோ 225கிராம் பாக்கெட்டுகளில் புளி, சரி தொலையுதுன்னு ஒரு 5,6 பாக்கெட்டுகள் வாங்கலாம். ஆனால் கடுகு பாருங்க ஒரு கிலோவுக்குக் குறைஞ்சு கிடைக்காது! அது மாதிரியே ஏலக்காய், முந்திரிப்பருப்பு எல்லாம் குறைந்த பட்சமா ஒரு கிலோ வாங்கியே தீரணும்.. விசித்திரமான பாக்கிங் இங்கே! சுக்குப் போட்டு வெந்நீர் குடிக்கணும்னு சுக்குக் கேட்டால் என்னோட ஜென்மம் தீர்ந்து பரம்பரைக்கும் கூட வரும்படி சுக்குக் கொடுத்திருக்காங்க! என்னத்தைச் சொல்றது? அப்புறம், அரிசி, பருப்பு, இத்யாதி, இத்யாதி!

எங்கே வைக்கிறது? அதிர்ஷ்டம் இருந்தால் "பான்ட்ரி" எனப்படும் அலமாரி ஒன்று கூடுதலாய் அபார்ட்மென்டில் இருக்கும், தனி வீடுகளில் இவை கண்டிப்பாய் உண்டு, சமையல் அறையிலேயே. கொஞ்சம் அரிசி, பருப்பு வகைகளைக் கண்மறைவாக வைத்துக் கொள்ளலாம். என்ன கஷ்டம் என்றால் இந்த அலமாரிகள் எல்லாம் மூன்று தட்டு என்று சொன்னேன் அல்லவா? மூன்றாவது தட்டு 6 அடி உயரத்தில் இருக்கும். அங்கே என்ன சாமானை வைப்பது? எப்படி எடுப்பது? அதுவும் அடுப்புக்கு மேலே இருக்கும் அலமாரியில் சிலசமயம் முக்கியமான பாத்திரமோ, மளிகைப் பொருளோ இருந்தால் எம்பி, எம்பிக் குதிக்க வேண்டியது தான். அப்புறம் நானாக மனம் நொந்து போய், "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்"னு விட்டுட வேண்டி வரும். இதை எல்லாம் முன்கூட்டியே யோசித்து என்னோட அப்பா! (எவ்வளவு பெரிய தீர்க்க தரிசி அவர்?) எனக்கு 6 அடி உயரத்தில் மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைத்து விட்டார். இப்போ எவ்வளவு உபயோகமா இருக்கு என்பதோடு எவ்வளவு உபத்திரவம் (நறநறநற) என்பதும் நாளைக்குச் சொல்கிறேன்.

சும்மா "ஜாலி"யா ஒரு பதிவு!

இந்தத் தியாகராஜன் சொன்னதை வச்சு நேத்து மீனாட்சி கோவிலுக்குப் போனபோது புத்தகம் ஜெயமோகனுதும், சீனி.விஸ்வநாதனோடதும் படிக்கக் கேட்டால், ஹிஹிஹினு சொல்லிட்டாங்க. வேறே வழியே இல்லாமல் மற்றப்புத்தகங்களோட அரை மனசா வந்தேன். என்ன ஒரு செளகரியம்னால் மெம்பிஸில் நான் ப்ளாக் திறக்கறதுன்னால் எனக்கு நானே ஒரு "ஷொட்டு"க் கொடுத்துக்கணும். அப்படியும் சில சமயம் இந்த செக்யூரிட்டி பக்கத்திலேயே ஒட்டிட்டு வந்து கண்காணிக்கும். சமாச்சார் போட்டு இந்தியச் செய்திகள் படிக்காட்டி என்னோட மறுபாதிக்கு ஜென்மம் சாபல்யம் ஆகாது. அதில் அங்கே ஹிந்து பார்த்தாலே செக்யூரிட்டி வந்து மிரட்டும். இங்கே அதெல்லாம் இல்லை. குமுதம்.காமில் போய்ப் பதிவு செய்து எல்லாப் புத்தகங்களையும் படிச்சாச்சு! ஆனால் இந்த தமிழா.காமிற்குப் போய் இ-கலப்பை கேட்டால் மட்டும் டாலரில் பணம் வேணும்னு பிடிவாதமா இருக்கு. சரி இப்போதைக்கு இந்த "ஜஃப்னா"வோடயே திருப்திப் பட்டுக்கலாம்னு இருந்துட்டேன். இதிலே நான் பதிவு போடறதைப் பார்த்துப் பொறாமைப் பட்டு யாருமே வரதில்லை. எல்லாம் வயித்தெரிச்சல்தான், வேறே என்ன? அன்னிக்குக் கூடப் பாருங்க, கைப்புள்ளை, வேலை மெனக்கெட்டுக் கூப்பிட்டுப் பேசி விட்டுப் பின்னர் "டுபுக்கு"வின் பதிவிலே போய்ப் பின்னூட்டம் கொடுத்துட்டு வந்துட்டார். நான், என்னனு கேட்டேனா? அதுக்கப்புறம் ஆளே காணோம்!

இந்த அபி அப்பா ஒண்ணு, வேலை மெனக்கெட்டு நான் பாட்டுக்குக் காபியோட சேர்ந்து கடமை ஆற்றும்போது கூப்பிட்டு "கீதாம்மா, புதுப் பதிவு போடறேன்"னு சொன்னதும், அப்பாடா, இப்போவாவது முதல் பின்னூட்டத்துக்கு முந்திக்கலாம்னு பார்த்தால், மனுஷனுக்குக் கழுகுக் கண். பின்னாலேயே வந்து இன்னும் 20 நிமிஷம் ஆகும்னு மிரட்டல். என்னத்தைச் செய்யறது? நம்ம பதிவு போட்டால் பின்னூட்டம் போடக் கூட ஆளே வரதில்லை. அப்படியும், பெருந்தன்மையோடும், தாயுள்ளத்தோடும், அவங்களுக்குப் பின்னூட்டம் போடலாம்னு பார்த்தால், இப்படியா ஒருத்தர் வந்து மிரட்டுவார்? நறநறநற, கைப்புள்ள, நீங்க கேட்டாப்பல நறநற போட்டாச்சு! இது இல்லாத பதிவும் ஒரு பதிவான்னு கேட்டீங்களே? :P

இந்த தி.ரா.ச. சார் பாருங்க, எப்போப் பார்த்தாலும் பிசி, பிசினு சொல்லிட்டு, அம்பியோட பதிவு, கண்ணபிரானோட பதிவு, வல்லி சிம்ஹனோட பதிவுனு பின்னூட்டம் போட்டுட்டு இருப்பார். அதான் எல்லார் மேலேயும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம், இந்தியா வந்ததும்னு முடிவு செஞ்சிருக்கேன். அம்பி தான் தி.ரா.ச. சார் சொன்னாப்பல கொஞ்சம் பயம். வந்து பின்னூட்டம் போட்டுடறார். ஆனாலும் சரித்திரம் எழுதினால் வரதில்லை! பிடிக்காத பாடம், புரியாத பாடம், அதனால். கார்த்திக்குக்கு சினிமா பார்க்கவே நேரம் இல்லை. வேதா(ள்), எப்போக் கேட்டாலும் பிசிங்கறாங்க. புலி எங்கே பதுங்கி இருக்குனு தெரியலை, டெல்லி போயிட்டு திரும்ப சூடான் போகப் போறேனு சொல்லிட்டு எங்கே வேட்டைக்கு போயிருக்கோ அல்லது பதுங்கி இருக்கோ தெரியலை! மணிப்ரகாஷ் கல்யாணம் செய்துக்க இந்தியா போயிருக்காராம். க்ர்ர்ர்ர்ர்ர் சொல்லவே இல்லை! இப்படி உண்மைத் தொண்டர்கள் எல்லாம் அக்ஞாதவாசம் செய்யறாங்களா? யார் மண்டையை உருட்டறதுன்னு ஒண்ணும் புரியலை. போர்க்கொடியும் மத்தவங்களும் யூனியன் எல்லாம் மெயிலில் ரொம்ப பிசி. ச்யாம் எல்லாம் இங்கே வர வழியை மறந்து போயாச்சு! டிடி அக்காவும் சரி, எஸ்கேஎம் அக்காவும் சரி மறந்தே போயிட்டாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... இந்த எஸ்கேஎம், பாருங்க, இங்கே இருக்கும்போது மணிக்கணக்காக் கூப்பிட்டுப் பேசுவாங்க, இப்போ மெயில் கொடுத்தால் பதிலே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ கண்ண பிரான் வ.வா.சங்கத்துக்கு எழுதிட்டாரான்னு பார்க்கப் போனால் அங்கேயும் ஒண்ணும் காணோம். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்., யாருமே கிடைக்கலையே?

Thursday, August 02, 2007

ஹூஸ்டனா? சென்னையா?

ம்ம்ம்ம்ம்,., மதுரை மீனாட்சி படமும், ஹூஸ்டன் மீனாட்சி படமும் பதிவிலே போட எடுத்தேன். மதுரை மீனாட்சி படம் அப்லோடே ஆகலை. வல்லிசிம்ஹன் எப்படித்தான் இவ்வளவு நல்லாப் படம் காட்டறாங்களோ? பெருமூச்சுத் தான் விட வேண்டி இருக்கு. ஹூஸ்டன் மீனாட்சி கோவில் படம் அப்லோட் செஞ்சு பதிவிலேயும் போட்டேன். அப்புறம் பார்த்தால் அதிலே என்னோட திருமுகம் நல்லாத் தெரியுது. சரி வேணாம்னு டெலீட் செஞ்சுட்டேன். ம்ம்ம்ம்., மனசு இருந்தால் போடப் பார்க்கிறேன். கட்டாயமாய்த் திருமுகத்தை எடுத்துட்டுத் தான். இங்கே வந்து 4 நாள் ஆகியும் இன்னும் சிதம்பர ரகசியம் ஆரம்பிக்க முடியலை. கவனமா எழுத வேண்டிய விஷயம் இல்லையா? சும்மா நான் பாட்டுக்கு எழுதமுடியாதே! ஏற்கெனவே எழுதறதுக்கே பின்னூட்டமே வராமல் ஆள் விரட்டி, விரட்டிக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு. இந்த நாகை சிவா, மதுரையம்பதி, தி.ரா.ச. இவங்க எல்லாம் மத்த பதிவுகளிலே எல்லாம் எனக்கு முன்னாலேயே போய்ப் பார்த்து விசாரிச்சுட்டு வராங்க. இங்கே எட்டியே பார்க்கிறதில்லை. நறநறநறநற. எல்லாம் தலை எழுத்து!
*************************************************************************************

அமெரிக்காவில், அதாவது யு.எஸ்ஸில் "ஃப்ரீவே" எனப்படும் "ஹைவே"யில் போவது பற்றிப் பார்த்தோம். இந்த மின் அடுப்பு பத்தி ஒரு தகவல் சொல்லியே ஆகணும். ஆரம்பத்தில் சூடு இல்லாத மாதிரி இருந்தாலும் சமையல் செய்யும் நேரம் போகப் போக சூடு அதிகமா இருக்குமாதலால் அடுப்புக் கிட்டே நின்னு யாரும் சமைக்காதீங்க. எனக்கு இந்த 4 மாசத்திலே கையில் தோல் நிறமே மாறிப் போச்சு! :(((((((. மேலும் முன்னால் உள்ள பர்னரில் சமையல் செய்து கொண்டே பின்னாலும் வைக்காதீர்கள். சுட்டுக் கொள்ள நேரும். இங்கேயே இருந்து பழக்கம் ஆனால் கூட சில சமயம் கவனக் குறைவு ஏற்படலாம். கூடியவரை பின்னாலேயே வைத்துச் சமைக்கவும். நம்ம ஊர் அலுமினியம் வாணாய், இரும்பு தோசைக் கல் எல்லாம் சரிப் படாது. வாணாய் எல்லாம் நாட்டியம் ஆடுது, அப்பளம், வடாம், வடை, பஜ்ஜி செய்வதானால் கூடத் தட்டையான அடிப்பாகம் உள்ள கூடியவரை நான் ஸ்டிக் பாத்திரங்களே உபயோகிக்கவும். இங்கே உள்ள டிஷ்-வாஷர் என்னதான் நீங்க சோப்புப் போட்டாலும் நம்ம ஊர் வாணாய்க்கு எல்லாம் மசிந்து கொடுக்காது. தவிர தீ படுவது நடுவில் மட்டும்தான் இருக்கும். சுற்றிப் படாது. எரியும் கம்பிகள் வெளியே தெரியும். கூடிய வரை தட்டையான அடிப்பாகம் உள்ளதிலேயே சமைப்பது நல்லது.மறந்து போய்க் கையை வச்சுட்டோம்னா அவ்வளவு தான், பயமுறுத்தறதுக்காகச் சொல்லவில்லை. கவனம் இருக்கவேண்டும். இந்தியாவின் காஸுக்குப் பழகிவிட்டுத் திடீரென மாறும்போது கட்டாயம் ஒரு 2 நாளுக்காவது தடுமாறும்.


ஹூஸ்டன் மீனாட்சி கோவிலுக்கு வந்த மறுநாளே போனோம். முக்கியமா அங்கே உள்ள நூலகத்துக்குத் தான். 2 வருஷங்களில் நூலகம் முகமே மாறி விட்டதோடு அல்லாமல் பல புத்தகங்களை விலைக்கு எனச் சொல்லி விட்டார்கள். போன முறை படித்த மாதிரி புத்தகங்கள் அவ்வளவாய்க் கிடைக்கவில்லை. இங்கே உள்ள மீனாட்சி கோவில்தான் யு.எஸ்ஸிலேயே மிகப் பழமையானது எனச் சொல்கின்றனர். சிலர் பிட்ஸ்பர்க் வெங்கடசலபதி என்று சொல்கின்றனர். போன முறை மதுரைக் காரர்களே இருந்த கோவிலில் இப்போது நிர்வாகமும் மாறி இருப்பதாய்த் தெரிகின்றது. இங்கே உள்ள "பாரதி கலை மன்றம்" 25 வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டது. பொங்கல் சமயம் பெரிய விழா நடக்கும். தனி ஆடிட்டோரியம் உள்ளது. கோவில் சொசைடி மூலம் பல நற் சேவைகள் நடைபெறுகிறது. தமிழர்கள் அதிக அளவில் இங்கே இருப்பதாயும் சொல்கின்றனர்.

பொங்கல் மட்டுமில்லாமல் தீபாவளி, நவராத்திரி போன்ற சமயங்களில் கூடக் கோவிலை ஒட்டிய மைதானத்தில் சாப்பாடுத் திருவிழா மட்டுமின்றித் துணிவகைகள், சேலைகள், மற்றும் பல்வேறுவிதமான இந்தியப் பொருட்கள் விற்பனைக்கு வரும். கூட்டம் சொல்லி முடியாது. ஆகவே கோயில் கமிட்டி உறுப்பினர்களின் வாகனங்கள் மட்டும் கோவில் வளாகத்தில் அனுமதிப்பார்கள். மற்றவர்கள் வண்டியை ஒரு மைல் தூரத்தில் இருக்கும் தனிப்பட்ட அனுமதி வாங்கப் பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கும் மினி பஸ்களில் போய்வர வேண்டும். நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழ்த் திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் போன்றவை மட்டுமில்லாது தமிழும் கற்பிக்கப் படுகிறது. 2 அல்லது 3 உடுப்பி ஹோட்டல்களும் இருக்கின்றன. பொதுவாக எல்லாமே இங்கே முழு சைவ உணவு விடுதிகள் தான். இரண்டும் கலந்த இந்திய உணவு விடுதிகள் ஒன்றிரண்டுதான் உள்ளன. உணவு விடுதிகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரிசையில் நின்று நம் தேவைக்கான ஆர்டரைக் கொடுத்தால் நமக்கு என்று குறிப்பிட்ட வரிசை எண் கொடுத்து விடுவார்கள். பின்ன்னர் அந்த எண் ஒட்டப்பட்ட தட்டுக்களில் நம்முடைய உணவு நம்மைத் தேடி வரும். என்ன, கொஞ்சம் நேரம் ஆகும்.