எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 04, 2014

வந்தோம், வந்தோம், மும்பை வந்தோம்

 பொதுவா எங்க வீட்டிலே என்னோட புடைவைகள் தான் இரவலாகப் போகும்.  இப்போ முதல் முறையா எனக்கு இந்த அனுபவம். இங்கே பக்கத்தில் உள்ள கடையில் போய் உள்ளாடைகளும், ஒரு புடைவையும் வாங்கலாம்னு போனால் அந்தக் கடையில் உள்ளாடைகள் கிடைத்தன.  ஆனால் புடைவையே இல்லையாம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நினைச்சுட்டு ஒரு குர்த்தா வாங்கிக் கொண்டேன்.  சல்வார் இருந்தது. இப்போ போட்டுக்கற சுடிதார் அல்லது லெக்கீஸ் எல்லாம் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.  ஆகையால் அது கிட்டேயே போகலை. குர்த்தா கழுத்து பாகம் ரொம்பவே டைட்டாகப் போச்சு.  தலையே உள்ளே நுழையலை. :( அதை ஆல்டெர் பண்ணிப்போட்டுக்கவும் நேரம் இல்லை. ஆகவே மாமியார் கொடுத்த ஒரு காட்டன் புடைவையைக் கட்டிக் கொண்டேன். ஈரமான ப்ளவுசையே நனைத்துப் போட்டுக் கொண்டேன்.

ஏர் இந்தியாவில் தொலைபேசிக் கேட்டதில் முதலில் நம்பிக்கையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.  சரி, சாமான் போனது போனதுதான்னு நினைச்சேன்.  ஆனாலும் விடாமல் அவர்களைத் தொடர்பு கொண்டதில் மத்தியானம் 12 மணி போல் நம்பிக்கை ஊட்டும் தகவல் வந்தது.  பெட்டியைக் கண்டு பிடித்து மும்பை கொண்டு வந்து விட்டதாகவும்  இங்கே அலுவலகத்தில் தான் இருப்பதாகவும், கூரியர் மூலம் அனுப்புவதாகவும் சொல்லி விட்டு விலாசத்தைச் சரி பார்த்துக் கொண்டனர்.

அந்தக்கூரியர் காரர் நம்பரைக் கேட்டு வாங்கிக்கலை.அதுக்குள்ளே அவங்க தொலைபேசியை வைச்சுட்டாங்க.  மத்தியானம் 3,4 மணிக்கு வரும்னு எதிர்பார்த்தால் சாயந்திரம் ஆகியும் வரவே இல்லை.  மறுபடி தொலைபேசியே கதினு உட்கார்ந்து ஒரு வழியா கூரியர் எடுத்து வரும் நபரின் தொலைபேசி எண்ணை வாங்கித் தொலைபேசிக் கேட்டதில் இன்னும் இரண்டு பேருக்குக் கொடுக்கணும் எனவும், அது முடிஞ்சதும் கடைசியா நெருல் வருவதாகவும் சொன்னார்.  அவர் வரும்போது இரவு பத்தே கால் மணி ஆச்சு.  அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.  அதுக்கு மேல் வீட்டுக்குப் போக வேண்டும்.மறுநாள் அலுவலகம் போகணும். :)  நம் ஒருத்தரால் எத்தனை பேருக்கு தொந்திரவுனு நினைச்சேன். :(

Sunday, August 03, 2014

மதுரைக்காட்சிகள் சில

https://www.youtube.com/watch?v=wqhHygKtuCY&feature=youtu.be


மதுரை குறித்த பழைய வீடியோ காட்சி ஒன்று குழும நண்பர் மூலம் கிடைச்சது பகிர்ந்துள்ளேன். வருடம் 1956 ஆம் வருடமாம். :)

 மதுரைக்காட்சிகள் சில பார்வைக்கு.  காலம்பர இதைப்போடறச்சே பொண்ணு தொலைபேசியில் அழைக்க, அவசரத்தில் சேமிப்பதற்கு பதிலாக பப்ளிஷ் அழுத்தி இருக்கேன்  அதுக்குள்ளே வா.தி. அவசரம் அவ்சரமாப் பார்த்துட்டு கமென்டிலே திட்டி இருக்கார்.  இஃகி இஃகி  கொஞ்ச நாளைக்கு இஃகி இஃகினு தான் சிரிச்சாகணும். :P

Saturday, August 02, 2014

வந்தோம், வந்தோம், மும்பை வந்தோம்.

மைத்துனன் டெல்லியில் இருந்து மும்பை வந்ததில் இருந்தே கூப்பிட்டுட்டு இருந்தார்.  ஆனால் சென்னை மாதிரி மும்பையும் எனக்கு அலர்ஜிங்கறதாலே யோசனை! ஆனால் ரங்க்ஸுக்கு அவங்க அம்மாவைப் பார்க்கணும்னு இருந்திருக்கு. அதோட பண்டரிபுர் போகணும்னு வெறே ஆசை. ஆனால் நான் பண்டரிபுர் வரலை. என்னால்  நிக்க முடியாதுனு சொல்லிட்டேன். :(ஆகவெ நேத்துப் பல்லவன்லே  கிளம்பி மாலை 3- 45க்கு ஏர் இந்தியாவில் மும்பை வந்தோம். டிக்கெட் ஏற்கெனவே கன்செஷனில் வாங்கி இருந்தோம். ஆனால் ஏர் இந்தியாவில் இதான் முதல் பயணம்.  கொஞ்சம் யோசனையாவே இருந்தது.  அதோடு எல்லோருமே மும்பையில் மழை கொட்டுவதாகச் சொன்னார்கள். அது   வேறே விமானம் இறங்க பிரச்னை இல்லாமல் இருக்கணுமேனு கவலை.

ஆனால் கவலை வேறு விதத்தில் வந்தது. :) சரியான நேரம் மும்பை வந்துட்டோம். சாமான் பெற்றுக் கொள்ளும் இடம் வந்தால் முதலில் ரங்க்ஸின் பெட்டி வந்தது.  சரி, என் பெட்டி பின்னால் வரும்னு நினைச்சேன்.  கன்வேயர் பெல்ட் நின்னும் போயாச்சு.  பெட்டி வரலை. ஸ்ரீரங்கத்தில் கிளம்பும்போது   ரங்க்ஸ்   தனி யாக   ஒரு செட் ட்ரெஸ்  வைச்சுக்கோனு சொன்னார்.  நான் பெட்டியே வராமல் போகும்னு நினைக்கவே இல்லை.  ஆகவே தனியா எதுவும் வைச்சுக்கலை. மொத்தத் துணியும் மும்பைக்கு வராத அந்தப் பெட்டியில் தான். என்ன பண்ணுவதுனு ஒண்ணுமே புரியலை. யோசிச்சிட்டு இருந்தோம்.

ஏற்கெனவே நான் மும்பைக்கு முதல் முதல் வந்த கதை அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும். அதுக்கு அப்புறமும் மும்பை வந்தப்போ எல்லாம் பிரச்னைகள் தான்.  இம்முறையும் இப்படி ஆயிடுச்சேனு ஒரேயடியா அப்செட்.  இன்னமும் பெட்டி வந்தபாடில்லை.  என் வாழ்நாளிலேயே முதல்முறையாக உடுத்த உடைஇல்லாமல் நிற்பது இப்போது தான். இதுவும் அவனருள் தான். :) மற்றவை விபரமாகப்பின்னர்

Wednesday, July 30, 2014

திருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே!

இன்று ஆடிப்பூரம். அம்மன் கோவில்களிலே திருவிழாப் போல் கூட்டம் நெரியும். சகலவிதமான அம்மன்களுக்கும் வளைகாப்புப் போல் வளையாலேயே அலங்காரம் செய்து, மகிழுவார்கள். அம்மன் அழகா, வளை, அழகா, அதைக் காண வரும் பெண்கள் அழகா எனப் போட்டி போட்டு அனைவரும் அம்மன் அருளை நாடிப் போகும் நாள். இந்த நாள் இனிய நாளாக சுதந்திரத் திருநாளாகவும் அமைந்து விட்டது. மேலும் ஆடிப் பூரம் ஆண்டாளின் திருநட்சத்திரம். ஆண்டாளுக்கு, அண்ணனாக இருந்து அவள் எப்போவோ வேண்டிக் கொண்ட வேண்டுதலை நிறைவேற்றித் தந்ததைப் பற்றி, நம் கண்ணபிரான் ஒரு அருமையான கவிதை எழுதி இருக்கிறார். அவர் அளவுக்கு எனக்கு எழுத வராது.

திருவாடிப் பூரத்து ஜெகத்து உதித்தாளை, திருப்பாவை முப்பதும் செப்பினாளை, பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடியைப் போற்றிப் பாடுவோம். ஆண்டாளின் தமிழ் அழகுத் தமிழ், கொஞ்சு தமிழ், எளிமைத் தமிழ். அந்தக் காலத்திலேயே மழையின் விஞ்ஞான தத்துவத்தைப் பாடல் மூலம் காட்டியவள். அவள் தமிழை மட்டும் ஆளவில்லை. நம் மனங்களையும் ஆள்கிறாள். அவள் பாடல்களிலே இறைவனின் பத்து அவதாரங்களையும், அதன் சிறப்புக்களையும் குறிக்கிறாள். கூடவே அவள் பயன்படுத்திய தமிழ் வார்த்தைகள். உக்கம்= விசிறி, தட்டொளி=கண்ணாடி. கண்ணாடியைத் தமிழில் "தகளி" எனவும் சொல்வார்கள். இந்த அருமையான வார்த்தைகள் எல்லாம் இன்று எப்படி மறைந்து ஒழிந்து போயிற்று என நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது.

அது போலே எதிர்மறைப் பொருளைக் குறிக்கும் சொல்லையும் ஆண்டாள் கையாண்ட பாணி வியக்கத் தக்கது. செய்வோம்=செய்யோம், முடிப்போம்=முடியோம், உண்போம்=உண்ணோம், ஓதுவோம்=ஓதோம், இந்த வார்த்தைகளும் வழக்கொழிந்து போய் விட்டது. தட்டொளி எப்போதில் இருந்து கண்ணாடி ஆயிற்று? புரியலை! செய்ய மாட்டோம்னு எப்போதில் இருந்து கூற ஆரம்பித்தோம்? புரியலை! ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை, அனைவரின் மனங்களையும் தான்.

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!




பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப்பூரம் ஆகும். ஆண்டாளின் இயற்பெயர் கோதை ஆகும். திருமாலின் மூன்று சக்திகளாய்க் குறிப்பிடப் படும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி என்ற மூவரும் சேர்ந்து ஓருருவாய் வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததாய் ஐதீகம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கே முதல் மரியாதை. கருவறையில் ஆண்டாள் வலப்புறம் இருக்க இடப்புறம் கருடாழ்வாரோடு பெருமாள் காட்சி அளிப்பார். இந்த அமைப்பு வேறெந்தப் பெருமாள் கோயிலிலும் காண முடியாத ஒன்றாகும். எம்பெருமானின் பல்வேறு ஆயுதங்களும் அவரின் சங்கும் எம்பெருமானின் அம்சங்களாகவே போற்றப்படுகின்றன. அந்த அம்சங்கள் யாவும் சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்றவை பூமியில் ஆழ்வார்களாக அவதரித்துப் பெருமானின் புகழை இனிய தமிழ்ப்பாமாலைகளால் பாட பார்த்தாள் பிராட்டி! தான் மட்டும் என்ன சளைத்தவளா? அவளும் பூமியில் அவதரித்தாள். எம்பெருமானைத் தவிர வேறொருவரை மனதாலும் நினைக்க இயலாது என்பதை அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே உறுதிபடத் தெரிவித்தாள். தான் சூடிக்களைந்த மாலையையே ரங்கமன்னாருக்கும் அளிக்க அவனும் மிகவும் உவப்புடன் அதை அணிந்து கொண்டான்.ஆனால் இதை ஒரு நாள் நேரில் பார்த்த பெரியாழ்வாரோ மனம் நொந்து போய் அந்த மாலையை ரங்கமன்னாருக்குச் சாற்றவில்லை. ஆனால் என்ன அதிசயம்! அன்றிரவே ரங்கன் ஆழ்வாரின் கனவில் வந்து ஆண்டால் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனத் தெளிவுபடக் கூறினான். மேலும் கோதை யார் எனவும், அவள் தனக்கெனவே, தன்னைத் துதிக்கவும், பாமாலைகளால் வாழ்த்திப் பாடவுமே அவதரித்தவள் என்பதையும் தெளிவாக்கினான். பெரியாழ்வார் தாம் துளசி வனத்தில் கண்டெடுத்த குழந்தைச் செல்வம் சாட்சாத் தாயாரின் அம்சமே என்பதை உணர்ந்து கொண்டு எம்பெருமானையே மனதால் ஆண்ட அவளைத் தம் வாயால் அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்க ஆரம்பித்தார். ஆண்டாளும் தினமும் பெரியாழ்வார் கட்டிக்கொடுக்கும் மாலையைத் தான் சூடிக்கொண்டே ரங்கனுக்கு அனுப்பி வைத்தாள். அதோடு மட்டுமா? ரங்கனுக்கும் தனக்கும் திருமணம் நடப்பதாயும் கனவு கண்டாள்! அதுவும் எப்படி!

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!

என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம்

மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு குறிப்பிடுகிறாள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்றும் கூறும் ஆண்டாள், அவள் காலத்திலேயே சகோதரர்கள் உடனிருக்கத் தான் பொரியிட்டதையும் கூறுவது

வரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டு
எரிமுகம் பார்த்தென்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்!

திருமணச் சடங்குகள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையிலும் மாறாமல் இருப்பதையும் இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை. அனைவர் மனதையும் ஆண்டாள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மதுரைக் கள்ளழகரிடம் விண்ணப்பமும் வைக்கிறாள். அதற்காக அவருக்கு அக்கார வடிசில் சமைத்துப் படைப்பதாகவும் ஆசை காட்டுகிறாள். அதுவும் எவ்வளவு! எல்லாம் நூறு தடாவாம்.

நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நேர்ந்து வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ!

ஆஹா! தடான்னா என்ன சும்மாவா! பெரிய பெரிய அண்டாக்கள். அதிலே நூறு தடா வெண்ணெய் காய்ச்சி, நூறு தடா அக்கார வடிசில். இதிலே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியவை என்னன்னா, மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் எனக்குத் தெரிந்து அண்டாக்களில் தான் சமைப்பார்கள். இதுவும் ஆண்டாள் காலத்திலேயே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அது போகட்டும்! இந்தப் பிரார்த்தனையை வாய்மொழியாக நேர்ந்து கொண்டதோடு இல்லாமல் பாமாலையாகவும் பொறித்து வைத்த ஆண்டாளுக்குத் தன் காலத்தில் இதை நிறைவேற்ற முடியவில்லை. அவளுக்கு எப்படியோ ரங்க மன்னார் தன்னை ஏற்றுக்கொண்டானேனு சந்தோஷம். ஓட்டமாய் ஓடிவிட்டாள். தன் மனதுக்கினியவளிடம் அவள் பிரார்த்தனையை நினைவும் செய்யவில்லை அந்த வடபத்ரசாயி!

ஆனால் இதற்கெனப் பொறுப்பு வேறொருத்தரிடம் கொடுக்கப் பட்டுவிட்டது என்பதும், அதுவும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவரால் நிறைவேற்றப்பட்டதையும் நாம் அறிய வருகிறோம். ஆம். ஸ்ரீராமாநுஜர் அவதரித்து, உபதேசம் பெற்றுத் தம் கொள்கைகளைப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் திருமாலிருஞ்சோலைக்கும் சென்றிருந்தார். அங்கே ஆண்டாளின் வாய்மொழிப் பிரார்த்தனையையும், அது நிறைவேறாமல் இருந்ததையும் அறிந்து கொண்டவர் அவளுக்காகத் தாம் அதை நிறைவேற்றி வைக்கிறார். அத்துடன் அதை மறந்தும் விட்டார். அதன் பின்னர் சில திவ்ய தேசங்கள் சென்று ஆண்டாளின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார். அங்கே சந்நிதிக்குள் நுழைகிறார் ஸ்ரீராமாநுஜர். ஜலங், ஜலங், ஜலங், சலங்கைச் சத்தம், க்ணிக், க்ணிக், க்ணிக், மெட்டி ஒலி. ஓர் அழகான விக்கிரஹம் போன்ற பெண்ணுரு இளநகையுடன் நடந்து வருகிறது. பெண்ணா? விக்கிரஹமா?? கோயிலில் பூஜை செய்யும் பட்டாசாரியார்களில் இருந்து அனைவரும் திகைப்புடன் பார்க்க, கருவறையில் அர்ச்சாவதாரமாக இருந்த ஆண்டாளைக் காணவில்லை.

அவள் தான் நடந்து வருகிறாள். அதுவும் ஸ்ரீராமாநுஜரைப் பார்த்து, “என் அண்ணாரே!” எனக் கூப்பிட்ட வண்ணம் வருகிறாள். அனைவருக்கும் வியப்பு.. இப்படி ஆண்டாளாலேயே அண்ணன் என அழைக்கப்பட்டதால் ஆண்டாள் ஸ்ரீராமானுஜரை முன்னிறுத்தி, “பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே “கூறப்படுகிறாள். இப்படிப் பல வகையிலும் சிறப்புப் பெற்ற ஆண்டாளை ரங்க மன்னார் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாயும் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வருமாறும் கட்டளையிட்டானாம். அதன்படி ஸ்ரீரங்கம் சென்றனர் இருவரும். அங்கே சந்நிதிக்குச் செல்லும் போதே ஆண்டாள் திடீரென ஒளிமயமாகக்கருவறையில் ஐக்கியம் ஆகப் பெரியாழ்வார் பரிதவித்துப் போனாராம். ஒரு சிலர் காவிரிக்கரையிலேயே குளிக்கையில் ஆண்டாள் மறைந்ததாகவும் சொல்கின்றனர். ஆனால் எப்படியோ ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெருமானோடு ஐக்கியமானது குறித்துச் சந்தேகமே இல்லை. பெண்ணைப் பெருமாளிடமே ஒப்படைத்தாலும் பெண்ணைப் பெற்றவருக்கு மன வருத்தம் இருக்குமே. புலம்புகிறார்.

ஒருமகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’

என்றெல்லாம் புலம்பினாராம் ஆண்டாளின் பிரிவாற்றாமை தாங்காமல். அதன் பின்னர் ரங்க மன்னாரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். தன் மகளை ஊரறிய, உலகறிய ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள் எனக் கெஞ்சினாராம். மாமனார், மாப்பிள்ளை ஹோதா அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலந்த்திலும் உண்டு போலும்! :D பின்னர் மனமிரங்கிய ரங்கன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஒருபங்குனி உத்திரத் திருநாளில் கோதையைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம். அதோட போச்சா! அங்கேயே தங்கிவிட்டான் வீட்டோடு மாப்பிள்ளையாக!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது.







இது ஒரு மீள்பதிவு.  இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டுப் பகிர்ந்துள்ளேன். 

Sunday, July 27, 2014

எங்கே என்னோட மதுரை????

என்னத்தைச் சொல்றது?  ஒரு சிலர் புகழோ புகழுனு புகழறதைப் பார்த்தால் நாம இப்படி எழுத வேண்டி இருக்கேனு இருக்கு. ஆனால் உள்ளதைத் தானே எழுதி ஆகணும். ம்ம்ம் ஊர் எப்படி எப்படி எல்லாம் முன்னேற்றம் அடையுதுனு அவங்க சொல்றாங்க. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை வீதியை நல்லாப் பராமரிக்கிறது பத்திச் சொல்றாங்க பாசமலர்.

//மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் சிமிண்ட் பாதை போடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
கோவிலில் நுழையும் எல்லா வழிகளிலும் பாதுகாப்புச் சோதனை..விமான நிலையங்கள் தோற்று விடும்.
கோயில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி கிடைத்துவிட்டதாகக் கேள்வி.//

சரிதான், சிமிண்ட் பாதை மட்டும் போட்டால் சரி, ஆனால் மக்கள் மனசிலும் சிமிண்டாலேயே மூடிக்கிட்டிருக்காங்க போல. கோவிலில் நுழையும் எல்லாவழிகளிலும் பாதுகாப்புச் சோதனை தவிர்க்கமுடியாது தான். ஆனால் உள்ளே போனால் தரிசனம் கிடைக்கும்கிற நிச்சயம் உண்டா?? கோவில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் வந்தால் நகரின் நெரிசல் குறையுமா? அதிகம் ஆகுமா? ஏற்கெனவே நின்ன இடத்தில் இருந்து நகருகிறதே இல்லை யாரும். அதிலும் மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் கூடும் இடத்தில் கோபு ஐயங்கார் கடை வாசலில் ஆரம்பிச்சால் மேலகோபுர வாசலும் தாண்டி தெற்கு கோபுர வாசலையும் தாண்டி, சொக்கப்ப நாயக்கன் தெருவையும் தாண்டி நெரிசல் தாங்கலை. கீழ வாசல் கேட்கவே வேண்டாம். எந்த வழியிலே நுழைஞ்சாலும் இதே தொல்லை தான். போன வருஷம் நாங்க போனப்போவே தரிசன வரிசை வெளியே வந்துடுச்சு.

நாங்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு போனோம். எங்களோடு பத்து, இருபது பேர் வந்தாங்க. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நுழைவு வாயில் வழியாக நுழைந்தோம் அவ்வளவு தான். பிறகு திருப்பதியை விட மோசம். திருப்பதியிலே ஒரு செகண்டாவது பார்த்துடலாம். இங்கே மீனாட்சி தெரியவே இல்லை. அதுக்குள்ளே அதே வழியாக மொத்தக் கூட்டத்தையும் அவங்க இஷ்டத்துக்குப் பணம் வாங்கிக் கொண்டு கோயில் ஊழியர்கள் உள்ளே விட நெரிசலில் சிக்கிக் கொண்ட நான் வெளியே வரமுடியாமல் தவிக்க, வெளியே வந்துவிட்ட என் கணவரும், பையரும் அங்கே இருந்த பெண் காவலரிடம் சொல்லி என்னை மீட்கச் சொல்ல, அவங்க பேசாமல் இருக்க,ஊழியர்களின் இந்த வேலையைக் கண்டு பட்டர்கள் சத்தம் போட, ஊழியர்கள் லட்சியமே செய்யவில்லை. அப்புறமாய் ஒருவழியாய் எங்க பையர் என்னை வெளியே கொண்டு வந்தார். மூச்சு முட்டிப் போய்விடும்போல் ஆயிடுச்சு. இதுவும் முன்னேற்றத்தில் ஒரு வகை போல.

வளர்ச்சி என்பது ஒரு புராதன நகரின் ஆன்மாவைச் சிதைக்கிறாப் போல் ஆகிவிட்டதே என்று வருத்தமாய் இருக்கு. இன்று காலை ஒரு வெளிநாட்டுத் தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஜெர்மனியின் ஒரு புராதன நகரைக் காட்டினாங்க. புராதனச் சின்னங்களை அவங்க எல்லாம் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பது நாம் கட்டாயமாய் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. மேலும் சுற்றுலாப் பயணிகளையும் எவ்வகையில் அவங்க திறம்பட திருப்திப் படுத்தறாங்க என்பதும் கவனிக்கணும். ஆனால் நாம அவங்க உடை, உணவு, மொழி, கலாசாரம்னு மாத்திக்கிறோமே தவிர எது வேணுமோ அதை விட்டுடறோம்.

எங்க மீனாட்சி, எங்க மீனாட்சி என்று பெருமையாய்ச் சொல்லிப்போம். அவள் கடைக்கண் பார்வையால் அனைவரையும் ரட்சிக்கிறாள்னு சொல்லுவோம். அந்தக் கண்களை சிமெண்ட் போட்டு மூடிக் கொண்டாள் போல. ஓயாமல் சலிக்கும் கண்களால் இப்போ பக்தர்களைப் பார்ப்பதில்லைனு வச்சிருக்கா போல. மதுரை நகரம் இருக்கு. ஆனால் மீனாட்சி அங்கே இல்லை. எங்க அம்மாவின் அழகே போய், அவளின் ஆன்மாவே போய் நகரம் இப்போது புது வண்ணம் பூசிக் கொண்டு, புது வடிவம் எடுத்துக் கொண்டு புத்தம்புதுமையாய் இருக்கு. இது என்னோட மதுரை இல்லை. ஒரு வேளை 25 வருஷமாய் எந்த வகையிலும் மாறாமல் இருக்கும் அம்பத்தூரைப் பார்த்துட்டே இருக்கிறதாலே இப்படித் தோணுதோ?? :((((((((

எங்கே என்னோட மதுரை????????? :((((((((

இது பழைய பதிவு என்றாலும் இப்போதும் மதுரையின் நிலைமை இப்படித் தான் இருக்கிறது.  இன்றைய தொலைக்காட்சிச் செய்தியில் மதுரைக் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்னு பார்த்தேன்.  உடனே நினைவு வந்தது.  இது 2007 ஆம் ஆண்டில் சென்றபோது எழுதியது.   சமீபத்தில் சித்திரைத் திருவிழாவுக்குச் சென்றிருந்த என் தம்பி குடும்பம் சொன்னதையும் கேட்டதால் ஏற்பட்ட மன வருத்தம்.  இப்போதெல்லாம் திருக்கல்யாணம் ஆனதும் அம்மனையும், சுவாமியையும் பார்க்கவே முடிவதில்லையாம்.  முன்னால் எல்லாம் இஷ்டத்துக்கு மூன்று முறை, நான்கு முறை போவோம்.  இப்போ ஒரு தரம் பார்க்கவே முடியலை என்று சொன்னார்கள்.  இது வளர்ச்சியா?  வீக்கமா?

Friday, July 25, 2014

மீண்டும் ஒரு பயணத்தின் கதை!

இன்னிக்குக் காலம்பர சீக்கிரமா எழுந்து குலதெய்வம் கோயிலுக்குப் போகணும்னு முடிவு எடுத்திருந்தோம்.   ஃபாஸ்ட் ட்ராக்கில் வண்டிக்குப் பதிவு செய்து ஐந்தரைக்கு வரச் சொல்லியாச்சு.  வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணியில் இருந்து பனிரண்டு வரை ராகுகாலம் என்பதால் அதற்கு முன்னாடி மாவிளக்குப் போடணும்னு எண்ணம். ஆனால் ஐந்தேமுக்கால் ஆகியும் வண்டி வரலை. வண்டி நம்பர், ஓட்டுநர் நம்பர் எல்லாம் ஐந்து மணிக்கே வந்துடுச்சு.   ஃபோன் பண்ணிக் கேட்டால் அந்த ஓட்டுநர் சாவகாசமாய் நான் வரமாட்டேன் அப்படினு சொல்றார்.  என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நம்ம ரங்க்ஸே இன்னிக்குப் பதட்டம் அடைஞ்சுட்டார்.  மறுபடி ஃபாஸ்ட் ட்ராக்கிற்குத் தொலைபேசிக் கேட்டால் அவங்க ஓட்டுநரோடு பேசிட்டுச் சொல்றோம்னு சொன்னாங்க.


ஓட்டுநரை சமாதானம் செய்திருப்பாங்க போல.  ஆனால் ரங்க்ஸ் அந்த ஓட்டுநர் வரவேண்டாம்னு சொல்லிட்டார்.  வேறே வண்டி அனுப்பச் சொல்லி அது வரச்சே ஆறே கால் ஆயிடுச்சு.  நல்லவேளையா அபிஷேஹ சாமான்கள், மாலை, பூ, பழங்கள், தேங்காய் உள்பட ஶ்ரீரங்கத்திலேயே வாங்கிட்டோம். அதுக்கேத்தாப்போல் கும்பகோணம் எட்டரைக்குத் தான் கண் விழித்திருந்தது. எந்தக் கடைகளும் திறக்கலை.  துளசி மாலை மட்டும் அங்கே வாங்கிக் கொண்டோம்.  வழியிலே செல்லை எதுக்கோ எடுத்துப்பார்த்தா சுத்தம்!  சார்ஜே இல்லை.  நேத்திக்கே போட்டிருக்கணும் போல!  நல்லவேளையா ரங்க்ஸ் செல்லை எடுத்து வந்திருந்தார்.  அதன் மூலம் கோயில் பூசாரிக்குத் தகவல் சொல்லியாச்சு.  பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்கும் தகவல் சொல்லியாச்சு.

செல் தான் இருக்கேனு நான் காமிரா எடுத்துட்டுப்போகலை! :( படங்கள் எடுக்க முடியலை. கும்பகோணத்திலிருந்து பரவக்கரை வரும் வழியில் அரசலாற்றங்கரையிலும், பாசன வாய்க்காலிலும் தூர் வாரி இருந்தது தெரிந்தது.  பாராட்ட வேண்டிய விஷயம் தான்.  சில குளங்கள் தூர் வாரப்பட்டுக் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த   3 நாள் மழையில் நிரம்பியும் இருந்தது.  செல்வதற்கே கஷ்டமாய் இருந்த சாலையும் செப்பனிடப்பட்டு இருந்தது.  இப்படி நல்ல விஷயங்களாக் கண்ணிலே படறதேனு ஆச்சரியமா இருந்தது.  அதற்கேற்ப  திருஷ்டிப் பரிகாரமும் கிடைத்தது.  :(  அரசலாற்றங்கரையில் கரை ஓரமாய்ப் பெரிய பெரிய பள்ளங்கள் வெட்டி  தண்ணீருக்காக ஊற்றுத் தோண்டி இருந்தனர்.  தண்ணீரைக் குழாய் மூலம் மேலே ஏற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தது. எல்லாம் சரிதான்.

அந்த மேட்டின் அருகேயே தோண்டிய மணல் ஒரு சின்னக் குன்றாக இருந்தது.  அதோடு பள்ளமும் கிட்டத்தட்டப் பத்தடிக்கும் மேல் ஆழம்.  தண்ணீர் வரும் நாட்களில் இந்தப்பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி, ஆற்றிலும் தண்ணீர் ஓடும்போது கரையருகே பள்ளம் இருக்கிறது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும்? அந்த அந்த கிராமத்துக்காரங்களுக்கே நினைவில் இருக்கப்போவதில்லை. அதோடு அருகிலிருக்கும் மேடு?  அதில் எத்தனை பேர் புதைந்து போகும் சாத்தியம் இருக்கிறது என்பதையும் யாரும் நினைவில் வைத்திருக்கப் போவதில்லை.  நம் வேலை எப்படியானும் ஆனால் சரினு இஷ்டத்துக்குப் பள்ளம் தோண்டி நதியை வறண்டு போக வைப்பதோடு ஆபத்துக்கும் வழி தேடுகிறோம்.  அப்புறமா அரசாங்கம் வந்து அதுக்கும் நஷ்ட ஈடு கொடுக்கணும்.   என்னத்தைச் சொல்றது!

ஊருக்குள்ளே நுழையும்போதே முதலில் இருக்கும் பொய்யாப் பிள்ளையார் கோயில் இருக்கும் அழகு கண்ணில் ரத்தம் வர வைத்தது. பிள்ளையாருக்கு நெய்க்கொழுக்கட்டை பண்ணிக் கொண்டு போய்க் கொடுத்தேன்.  ரொம்ப சந்தோஷமா இருந்தது அவருக்கு. பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டும் அவரைக் கவனிப்பாங்க.

மாரியம்மன் கோயிலில் மாவிளக்குப் போட்டுட்டுப் பெருமாள் கோயிலிலும் தரிசனம் முடித்துக் கொண்டு நேரே கருவிலி சென்றோம்.  அங்கே சர்வாங்க சுந்தரி அம்பாளுக்கு லக்ஷார்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  உறவினர் திரு கண்ணன் வந்திருந்தார்.  நேற்றுத் திரு ராய. செல்லப்பாவுடன் பேசுகையில் என்னைக் குறித்தும் பேசினதாய்த் தெரிவித்தார்.  அட, நம்மை நினைவு கூர்ந்திருக்கிறாங்களே என மகிழ்ச்சியாக இருந்தது.



கருவிலி கோயிலின் ராஜகோபுரம்.  படம் சமீபத்தில் தான் எடுக்கப்பட்டது.  ராஜகோபுரமும் இப்போது தான் பத்து ஆண்டுகளுக்குள்ளாக கட்டப்பட்டது.  கோயில் சீந்துவாரின்றிக் கிடந்தது.  நான் புக்ககம் போன புதிதில் குடிக்க நல்ல தண்ணீர் இந்தக் கோயில் கிணற்றிலிருந்து தான் கொண்டு வருவோம். அப்போது வயதான ஒரு குருக்கள் மட்டுமே கோயிலில் தன்னந்தனியாக இருப்பார்.  அவர் வீடு எதிரே தான்.  இப்போது அவரின் பிள்ளை தான் கோயிலைப் பார்த்துக் கொள்கிறார்.  ஆனால் அப்போது அந்தக் கோயிலுக்குத் தினமும் போனது நானும், என் கடைசி நாத்தனாருமாகத் தான் இருக்கும். இப்போதோ எங்கெங்கிருந்தோ வந்து வழிபடுகின்றனர்.  இந்தக் கோயிலுக்குத் தான் திரு கிருஷ்ண மூர்த்தி (கல்கி வைத்தியநாதனின் தம்பி)  தன் செலவில் திருப்பணிகள் செய்வித்தார்.  இப்போதும் கோயிலில் எல்லா முக்கிய தினங்களிலும் இவரின் பங்கு நிச்சயம் இருக்கும்.

சர்வாங்க சுந்தரி ஏற்கெனவே நல்ல உயரம்.  இன்னிக்கு அலங்காரத்தில்  என் கண்ணுக்கு அம்பாள் விஸ்வரூபமாய்த் தெரிய, ரங்க்ஸுக்கோ அம்மன் சோகமாய் இருப்பதாய்ப் பட்டிருக்கிறது.  அப்புறமா ரங்க்ஸின் செல்லப் பிள்ளையாரைப் பார்த்தோம்.  அவருக்கு யாரோ பூ வைச்சிருந்தாங்க.  அதிலே அவருக்கு ரொம்ப சந்தோஷம்.  சுவற்றில் மிகச் சிறிய அளவில் ஆறங்குலமே இருப்பார் அந்தப்பிள்ளையார்.  அவர் சிறுவனாய் இருந்தப்போவிருந்தே இந்தப் பிள்ளையார் தான் நெருங்கிய நண்பர்.  தினம் எண்ணெய் முழுக்காட்டிக் குளிப்பாட்டிப் பூ வைத்து நிவேதனம் செய்வாராம்.



இது முன்னர் ஒரு முறை எடுத்த படம்.  இவர் தலைக்கு மேல் திருவாசிபோல் வந்திருக்கும் இடத்தில் தான் ஒரு சின்ன ஓட்டை இருக்கிறது.  அதில் தான் பூ வைக்கின்றனர்.  இன்றும் யாரோ வைத்திருந்தனர்.  கருவிலியை முடிச்சுட்டுப் பின்னர் கும்பகோணம் வழியா ஶ்ரீரங்கம் வரச்சே மூன்றரை மணி ஆயிடுச்சு! 

Thursday, July 24, 2014

ஒரு பாராட்டு, ஒரு குறை, ஒரு சிரிப்பு!

இம்முறை சென்னை சென்றபோது பாண்டி பஜார் வழியா வந்தப்போ மயக்கமே வந்தது.  என்ன இது?  ஏதோ மாற்றம்னு ஒண்ணுமே புரியாமல் பார்த்தப்போ, நாங்க போயிட்டிருந்த ஆட்டோவின் ஓட்டுநர், நடைபாதைக்கடைகள் எதுவுமே இப்போ இல்லைங்க, அவங்களுக்குத் தனியாகக் கட்டிக் கொடுத்து  இங்கே இருந்து எடுத்துட்டாங்கனு சொன்னார்.  உண்மையில் நல்ல விஷயம் தான். சென்னை மாநகராட்சியைப் பாராட்ட வேண்டும்.  நடைமேடையில் நடக்க முடியாமல் தெருவில் நடக்கலாம்னா, அந்த வழியாச் செல்லும் பேருந்துகள், கார்கள் போன்றவற்றிலிருந்து தப்பி ஒதுங்க இடம் இருக்காது.

 இரு பக்கமும் வண்டிகளை நிறுத்தி இருப்பாங்க.  அதற்கெனத் தனி கான்ட்ராக்ட் இருக்கு.   அவங்க வந்து பணம் வசூல் பண்ணுவாங்க.  ஆனால் அன்னிக்கு வண்டிகளும் குறைவாவே இருந்தது.  இத்தனைக்கும் வார முதல்நாள் திங்கள் கிழமை.  இப்போ வண்டிகள் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அந்த ஆட்டோ ஒட்டுநர் கூறினார்.  சென்னையில் வழக்கமான குப்பைகள் குறையவில்லை.  போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.  முகத்தை முகமூடி போட்டு மூடிக் கொண்டாலும் வண்டிகளின் புகை இருமலை வரவழைக்கிறது.  லஸ் சர்ச் ரோடில் பயணிக்கையில் ரேவதியின் வீட்டைப் பார்த்து  ரேவதி இருந்தால் போயிருக்கலாம்னு பேசிக் கொண்டோம்.  மரங்கள், செடிகள் எல்லாம் பசுமையாகவே இருந்தன.


சென்னை ஆட்டோக்களில் இம்முறை பயணம் செய்தப்போ மீட்டர் போட்டாலும் அதற்கு மேலே பத்தோ அல்லது இருபதோ கேட்டு வாங்குகிறார்கள் என்பதும் தெரிகிறது.  அதே குறைந்த தூரம் எனில் 30 ரூபாய் ஆகும் தூரத்துக்குக் குறைந்தது ஐம்பது கேட்கின்றனர். மீட்டர் போட்டால் 25 ரூபாய் கூட ஆகாது!   மாம்பலத்தில் இருந்து மயிலாப்பூர் கிழக்கு மாட வீதிக்கு மீட்டரில் 80 ரூபாய் ஆச்சு.  ஆட்டோ ஓட்டுநருக்கு 100 ரூபாய் கொடுத்தோம்.  திரும்பும் போதும் அதே! இப்போது இங்கே ஶ்ரீரங்கத்திலும் ஆட்டோக்காரங்க அதிகம் கேட்க ஆரம்பிச்சாச்சு.  எங்க வீட்டில் இருந்து மலைக்கோட்டை போக 150 ரூபாயில் ஆரம்பிச்சுப் பேரம் பேசிக் கடைசியில்  120க்கு வராங்க.  மீட்டர் போட்டால் 80 ரூபாய் தான் ஆகும்.  இங்கேயும் மீட்டர் ஆட்டோ அறிமுகம் எல்லாம் நடந்து செல்பேசி எண் எல்லாம் கொடுத்திருக்காங்க.  அந்த அலுவலகத்துக்குத் தொலைபேசினால் மதியம் 3-30 -க்கு நாம் கிளம்பணும் என்றால் 3-00 மணிக்குப் பேசுங்கனு சொல்றாங்க.  அப்படிப் பேசினால் அந்தக் கடைசி நிமிடத்தில் ஆட்டோ வராதுனு சொல்லிடறாங்க.  ஒவ்வொரு முறையும் கூப்பிட்டுப் பார்த்துட்டுப் பின்னர் இங்கே ஆட்டோ ஸ்டான்ட் ஆட்டோவிலேயே போகிறோம்.  இவங்க 100 ரூபாய்க்கு வருவாங்க. ஆனால் காத்திருந்து திரும்பக் கூட்டி வரதில்லை.


நேத்துத் திருச்சி சென்று திரும்புகையில் ஒரு உணவு விடுதியில் உணவு வகைகளின் பட்டியல் போட்டிருந்தது.  அதிலே எலிமிச்சை சாதம், கருவப்பிள்ளை சாதம் இரண்டையும் பார்த்துட்டுத் திகைப்பாப் போச்சு.  அப்புறமாத் தான் புரிஞ்சது எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை என்னும் கருகப்பிலை சாதம் என.   புளியஞ்சாதம் பண்ணலை போல.  இல்லைனா புலியஞ்சாதம்னு எழுதி இருப்பாங்களே!  தமிழ் என்னமாய் விளையாடுதுனு நினைச்சேன்.   அப்புறமாத் தெப்பக்குளத்துக்கு எதிரே ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையின் தமிழ்ப் பெயர்ப்பலகையில்" இக்கின்பாதம்ஸு"  எனத் தூய தமிழில் போட்டிருந்ததைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.  எ.கொ.இ.ச. என நினைத்துக் கொண்டேன்.  சும்மா ரொம்ப நாளாச்சே என எண்ணங்களின் மொக்கைப் பதிவு ஒன்று. :)