zomato
அநேகமாக இந்த வீடியோவைப் பார்க்காதவங்க இருக்க முடியாது. இதில் Zomato என்னும் குழுமம் சம்பந்தப்பட்டிருப்பதும் அனைவரும் அறிவோம். இந்தப் பெயரில் உணவுகளைத் தரமாகவும் சூடாகவும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலேயே கொண்டு சேர்க்கவென்று குழுமம் ஒன்று 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஹரியானாவில் குருகாவ் என்னும் நகரில் ஆரம்பித்திருக்கின்றனர். இதன் தலைமை அலுவலகம் குருகாவ் தான். பின்னர் இந்தியா முழுதும் விரிவடைந்து, உலக அளவிலும் பெயர் சொல்ல ஆரம்பித்துள்ளது.
இதன் முக்கிய வேலையே நகரங்களில் உள்ள முக்கியமான நல்ல தரமான உணவு தயாரிக்கும் ஓட்டல்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வர முடியாமல் அல்லது ஓட்டலில் போய்ச் சாப்பிட்டு வருவதற்குக் கூட நேரமில்லாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் குறிப்பிடும் உணவை அதாவது வாடிக்கையாளர் விரும்பும் உணவை இணையம் மூலம் அந்தக் குறிப்பிட்ட ஓட்டலில் ஆர்டர் செய்தால் இந்த அமைப்பினர் அந்தக் குறிப்பிட்ட உணவை வாடிக்கையாளர் சார்பாக அவங்க குறிப்பிட்டிருக்கும் ஓட்டலில் சென்று உணவைப் பெற்று வந்து வாடிக்கையாளரிடம் சேர்ப்பது தான். இதில் அவர்கள் வாடிக்கையாளரிடம் இந்தச் சேவைக்காகக் குறிப்பிட்ட தொகையை உணவின் விலையோடு சேர்த்து வாங்கிக் கொள்வார்கள்.
இது வீட்டில் பெரும்பாலும் தனியாக இருக்கும் நபர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு உதவி என்னும் காரணத்தில் செய்யப்படுகிறது. அதோடு இல்லாமல் இப்போது பெரும்பாலான குடும்பங்களில் ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்வதால் இரவு உணவைச் சமைக்க நேரம் இல்லாமல் தவிக்கும் இல்லத்தரசிகளுக்கு ஓர் வரப்பிரசாதம் எனச் சொல்லப்படுகிறது. திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுச் சமைக்க முடியாமல் போனாலும் அவர்களுக்கும் இது உதவும். பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட மற்றும் Swiggy என்னும் இன்னொரு சேவைக் குழுவும் இதில் ஈடுபட்டிருக்கிறது. இவர்களின் சேவை குறித்துத் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களும் வருகின்றன.
இவர்களில் முதலில் குறிப்பிட்ட zomato குழுவின் ஊழியர்களில் ஒருவர் தான் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய உணவை எடுத்து எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு அதுவும் அவர்கள் கொடுத்திருக்கும் ஸ்பூனாலேயே எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப அதையே மிச்சத்தை மூடி அவர் எச்சல் செய்து சாப்பிட்ட ஸ்பூனையும் நாக்காலேயே நக்கித் துடைத்து வைக்கிறார். இதை எவரோ ஃபோட்டோ எடுத்து அது வாட்ஸப்பிலும், முகநூலிலும் பரவி விடவே zomato அந்த ஊழியரை வேலையை விட்டு நீக்கி விட்டதாகச் சொல்லி இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கேட்டதா என்றெல்லாம் தெரியவில்லை. அதோடு வாடிக்கையாளர் யார் எனவும் தெரிவிக்கவில்லை. இவை எல்லாம் தனிப்பட்ட விஷயம் என எடுத்துக் கொண்டாலும் ஊழியர் இப்படிச் செய்தது அநாகரீகம் என்பதோடு ஆரோக்கிய ரீதியாகக் கெடுதல்களை விளைவிக்கக் கூடியது என்பதை யாரும் உணரவில்லை. அந்த ஊழியருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். அவருக்குச் சாப்பிடக் கூட நேரம் கொடுக்காமல் வேலை வாங்கியதால் பசி தாங்க முடியாமல் இப்படிச் செய்தாராம். அப்படியே வைத்துக் கொண்டாலும் அவர் தனக்கெனத் தனியாக உணவுப் பொட்டலங்களை வாங்கி வைத்துக் கொண்டு அங்கேயே அந்த ஓட்டலிலேயே ஓரிடத்தில் அமர்ந்து சாப்ப்பிட்டுவிட்டுக் கிளம்பி இருக்கலாமே! வழியில் நிறுத்தி உணவை எடுத்துத் திருடிச் சாப்பிடுவதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட உணவை முழுவதும் சாப்பிட்டிருக்கலாமே! இதெல்லாம் எதுவும் செய்யாமல் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை மூடி வைக்கிறார். இது பசியின் காரணமாகச் செய்வதா?
இவருக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்துள்ளன. குரல் கொடுப்பவர்களுக்கு இப்படி நேர்ந்திருந்தால் பொறுத்துக் கொண்டு அந்த உணவை வாங்கிச் சாப்பிட்டிருப்பார்களா? இப்போது மட்டுமல்ல எப்போதுமே நோய் பரவுவது எச்சில் மூலமும் தான் என்பது பல வகைகளில் நிரூபணம் ஆகி உள்ளது. வீட்டில் உள்ளவர்களே ஒருத்தருக்கொருத்தர் எச்சில் உணவைப் பகிர்ந்து கொள்வதே சரியில்லை என்னும்போது இப்படி யாரோ ஒருத்தர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் இருந்து பிறழ்ந்து வாடிக்கையாளரின் உணவிலிருந்து எடுத்துச் சாப்பிடுவது எந்த வகையில் நியாயம்? வரவர எதற்குத் தான் ஆதரவு என்றில்லாமல் போய்விட்டது! தவறு செய்பவர்களை ஆதரிப்பதே இப்போதைய நியாயமாக மாறி வருகிறது.
இப்படி இருந்தால் நம் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லிக் கொடுப்போம்? பள்ளியில் இன்னொருத்தர் உணவை நீ எடுத்துச் சாப்பிடு என்றா? உன் இஷ்டத்துக்கு நீ இருக்கலாம் அதை யாரும் கேட்க மாட்டார்கள் என்றா? ஏற்கெனவே பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளோ மற்ற ஒழுக்கங்களைச் சுட்டிக்காட்டும் படிப்போ, அதைக் குறித்த தகவல்களோ, பெரியோர்களைப் பற்றிய சரித்திரங்களோ இல்லாமல் பார்த்துக் கொண்டாச்சு! அதோடு நீதிமன்றங்கள் வேறே தப்புச் செய்யலாம் எனத் தீர்ப்புக் கொடுத்தாச்சு. நாமெல்லாம் சொல்வதைக் கேட்டால் இப்போதைய குழந்தைகள் நாம் நம் சிறு வயதில் பெரியவங்களோட அராஜகத்துக்கு அடிமைகளாகவே இருந்திருக்கோம் என்றே நினைப்பார்கள்.அநியாயங்கள் எல்லாமே நியாயம் என ஆகி வருகிறது. இது தான் கலி முத்திவிட்டது என்பதன் அடையாளமோ?





