எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 30, 2006

78. பாரதி கண்ட புதுமைப்பெண்

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.
அமிழ்ந்து பேரிருளாமறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்
உதயகன்னி உரைப்பது கேட்டீரோ!"

புதுமைப் பெண்ணைப் பற்றிய பாரதியின் கற்பனை இது. ஆனால் இன்றைய பெண்ணோ என்றால்? எப்படி இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நாள் (இது டோண்டு சார் சொல்ற சமீபம் இல்லை. நிஜமாவே ஒரு 2 நாள் முன்பான சமீபம்) தற்செயலாக ஒரு மெகா சீரியல் பார்க்க நேர்ந்தது. நான் மெகா சீரியல் பார்க்க நேர்ந்த கதை அப்புறம். ஆனால் அந்த சீரியலில் ஒரு பெண் யாருக்கோ பெண் பார்க்கப் போகிறாள். அது யாருக்கு என்றால் அவள் கணவனுக்காம். அவளுக்குக் குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொல்லி விட்டதால் கணவனின் சந்தோஷத்துக்காக அவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறாளாம். அவளே போய்ப் பெண் பார்த்துக் கணவனையும் பார்க்கச் சொல்லுகிறாள். அந்தக் கணவனோ "நான் உனக்குத் துரோகம் செய்ய மாட்டேன். உனக்குக் குழந்தை பிறக்காது என்றால் பரவாயில்லை. மனசில் நீ இருக்கையில் வேறு ஒருத்தியோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடியாது." என்கிறான். அவன் இந்த மாதிரிச் சொன்ன பிறகும் கூட அவளுக்குப் புரியவில்லையா? என்ன? கணவனின் சந்தோஷம் தன்னுடன் வாழ்வதுதான் என்று, அவன் சொல்லச் சொல்ல அவள் மீண்டும் மீண்டும் அவனை வற்புறுத்துகிறாள். கணவனின் உண்மையான சந்தோஷம் முதல் மனைவியுடன் தான் என்று தெளிவாகத் தெரிந்த பிறகும் வற்புறுத்துகிறார்கள். என்ன மாதிரிப் பெண் இவள் என்று எரிச்சல் தான் வந்தது. கணவனைச் சந்தோஷப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு அவனுக்கு அவள் செய்யப்போகும் காரியத்தினால் கிடைக்கப் போகும் நன்மைதான் என்ன? ஒன்றுமே இல்லை. மூன்று பேரின் வாழ்க்கை நரகமாகப் போகிறது..

அது தான் போயிற்று என்றால் இன்னொரு சீரியல் பார்த்தால் அது வேறே ஒரு பாடம் சொல்லுகிறது. இத்தனைக்கும் அது பிரசித்தி பெற்ற "ஏவிஎம்" காரர்களின் தயாரிப்பு. அதில் ஒரு பெண் சொல்கிறாள், மற்றொரு பெண்ணிடம், அந்த மற்றொரு பெண்தான் கதாநாயகி என்று நினைக்கிறேன். "எனக்குக் கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.நானும் என் கணவரும் சோதனைக்குழாய் முறைக் குழந்தைக்கு முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். அப்போது தான் தெரிய வந்தது என் கணவருக்கு இன்னொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதும், அவள் கரு உண்டாகி இருப்பதும். அந்தப் பெண்ணையே என் கணவருக்குத் திருமணம் செய்து வைத்தேன். இப்போது அவளுக்குக் குழந்தை பிறந்து அது என்னை "அம்மா" என்று கூப்பிடுகிறது." என்று தான் தன் கணவருக்கு மறு மணம் செய்வித்ததை ஒரு சந்தோஷத்தோடு நியாயப்படுத்திப் பேசுகிறாள். ஒழுக்கம் என்பது இவர்களுக்கு என்ன விலை, எங்கே கிடைக்கும் என்ற அளவில் போய்விட்டது. இப்போது எல்லாம் குழந்தை இல்லை என்றால் யாரும் இடிந்து போய் விடுவது இல்லை. ஒன்று தத்து எடுத்துக் கொள்கிறார்கள். அல்லது வேறு வழிகளில் மனத்தைச் செலுத்தி அமைதி தேடுகிறார்கள். இது ஒரு பெரிய விஷயமே இல்லை. இதை நியாயப்படுத்தி இரண்டு சீரியல்கள். அதிலும் "ஏவிஎம்" மாதிரித் தயாரிப்பாளர்கள் எடுக்கும் சீரியலில் இந்த மாதிரி வருகிறது என்றால் ஆச்சரியமாக இருந்தது. அதை அதிகம் பார்ப்பதும் பெண்கள் தான். பார்த்து ரசிப்பவர்கள் மனதில் இந்த போதனை பசுமரத்தாணியாகப் பதிந்தால்? எங்கே போகிறது நம் கலாசாரம்?.

இது தான் போச்சு என்றால் கணவனையே கொன்ற இரண்டு பெண்களை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டுமாம். ஒருத்தியின் கணவனுக்கு வயது அதிகம், இன்னொருத்தியை வற்புறுத்தி இருக்கிறார்கள் என்பது மனித நேயக்காரர்கள் பேசும் பேச்சு. கணவனைப் பிடிக்கவில்லை என்றால் வக்கீல் மனைவிக்கு விவாகரத்துக் கேட்டால் கிடைக்காதா? இரண்டு குழந்தைகள் பிறந்துப் பத்து வருஷம் வரை கணவனுக்கும் தனக்கும் உள்ள வயசு வித்தியாசம் தெரியாமல் போய்விட்டதா? அப்படி ஒன்றும் படிக்காத பெண் போலவும் இல்லை. இன்னொரு பெண்ணோ நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர். அவர் நினைத்தால் திருமணத்தையே தடுத்திருக்க முடியும். போலீஸிடம் என் வீட்டில் வற்புறுத்துகிறார்கள் என்று சொல்லி இருக்கலாம். அல்லது காதலனுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அவளுடைய காதல் வாழ்வுடன் எந்த வகையிலும் சம்மந்தப்படாத ஒரு அப்பாவியைக் கொன்று விட்டு இப்போது பத்திரிகைகள் எல்லாம் இதற்கு மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு பார்க்கச் சொல்லுகின்றன. அந்த அப்பாவியைக் கொல்லும்போது அவர்கள் இருவருக்கும் எந்த மனிதாபிமானம் இருந்தது? ஏன் அவர்கள் இருவரும் மனிதர்கள் இல்லையா? அந்தப் பையனின் தாய், தந்தை எப்படித் துடிப்பார்கள்? இது என்ன நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தானா?

"சாத்திரங்கள் பலபல கற்பராம்!
என்ன சாத்திரம் கற்றார்கள். கள்ளக்காதல் என்ற புதிய சாத்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

"சவுரியங்கள் பலபல செய்வராம்."
முறையில்லாக் காதலனுடன் வாழ சவுரியங்கள் பலசெய்து கொள்கிறார்கள்.

"மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்"
தங்கள் வாழ்வின் கடந்தகாலத்தை அழிக்கிறார்கள்.

"மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம்."
எந்த மூட நம்பிக்கையை அழித்தார்கள்? அதற்குப் பதில் கட்டிய கணவனை அழித்தார்கள்.

"காத்து மானிடர் செய்கை அனைத்தையும்
கடவுளர்க்கினிதாகச் சமைப்பராம்."
கடவுளே! கடவுளே! எந்தக் கடவுளுக்கு இனிது இவர்கள் செய்தது?

"ஏத்தி ஆண்மக்கள் போற்றி வாழ்வராம்:
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!"
எந்த ஆணும் இனிமேல் கல்யாணம் என்றால் யோசிக்கும்படிச் செய்து விட்டார்கள். செய்தித்தாளைத் திறந்தால் தினமும் இந்த மாதிரி செய்திதான். எந்த இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்பது? பெண்ணின் பெருமையைக் குலைக்கிறார்களே!எல்லாரும் இப்படி இல்லை, வாஸ்தவம்தான். ஆனால் பெண்களுக்கு ஒரு சிறுமை ஏற்படுவது பெண்களால்தான். எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கிறது. நிச்சயம் பாரதி இன்று இருந்தால் தற்கொலை பண்ணிக்கொண்டுச் செத்திருப்பார். கடவுள் காப்பாற்றட்டும் பெண்களை.

Thursday, June 29, 2006

77. நன்றி, நன்றி, நன்றி.

"காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."

இப்போ இந்த நிலைமையில் தான் நான் இருக்கேன். 24-ம் தேதி சனிக்கிழமை என் பதிவுகள் காணாமல் போனதும், திரு மஞ்சூர் ராஜாவின் உதவியால் திரும்ப வந்ததும் இன்னும் மறக்க முடியாது இந்த சூழ்நிலையில், நம்ம "நாகை சிவா" மற்றும் ஒரு மறக்க முடியாத உதவி செய்திருக்கிறார். அதுதான் என் "எண்ணங்களை"த் தமிழ்ப் படுத்தியது. எங்கோ இருந்து கொண்டு என்னைப் பார்க்காமலேயே எனக்கு உதவி செய்ய இத்தனை நல்ல உள்ளங்கள் இருப்பதைப் பார்த்தால் நான் வலைப்பூ வைத்திருப்பதும், அதில் எழுதுவதும் எனக்கு எத்தனை பலன்களைத் தந்திருக்கிறது என்று பிரமிப்பாக இருக்கிறது. எனக்கு எழுதவோ, சொல்லவோ வார்த்தைகள் இல்லை. நன்றி என்ற ஒற்றைச் சொல்லால் இதை கொச்சைப் படுத்த விரும்பவில்லை.

Wednesday, June 28, 2006

76.வேலையில் சேர்ந்தேன்.

பஸ்ஸுக்குள் கடுமையான வாக்குவாதம். எல்லாம் என்னை எங்கே இறக்கி விடுவது என்றுதான். பஸ்ஸில் இருந்த எல்லாரும் ஆட்சேபித்தார்கள், நான் காலரா ஆஸ்பத்திரியில் இறங்குவதற்கு. அந்தப் பொண்ணு ஊருக்குப் புதுசு போல இருக்கு. எங்கேயோ போய் எப்படி வழி தேடும்? என்று பேசிக் கொண்டார்கள். எனக்கு பயம் அதிகரித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அப்போது ஒரு பெண்மணி பஸ்ஸில் ஏறினார். அவர் ஏதோ இடம் சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டு உட்கார்ந்த சமயம் பஸ்ஸில் எல்லாரும் பேசிக் கொள்வதைப் பார்த்து விட்டு என்ன விஷயம்? என்று கேட்டார். .உடனே ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள் என்னைத் தவிர. அந்தப் பெண்மணி விவரம் புரியாமல் பேசாமல் உட்கார்ந்திருந்த என்னிடமே விவரம் கேட்க நான் அரை மனதுடன் என்னைப் பற்றிச் சொன்னேன். உடனேயே அந்தப் பெண்மணி, "அட, கரண்ட் ஆஃபீஸா? நாங்க அங்கே தான் பணம் கட்டுறோம். எங்க வீடு இருக்கும் தெருவுக்குப் பின்னாலே சந்திலே இருந்து மெயின் ரோடுக்குப் போகலாம். அந்தச் சந்து முனையிலேதான் இருக்கு ஆஃபீஸ். மெயின் ரோடிலே போனால் பணம் கட்டுமிடமும், சந்து முனையிலே ஆஃபீஸும் இருக்கு. ஆஃபீஸரைப் பார்க்கறதுனா அப்படித்தான் போகணும்."என்றாள். எனக்கு உயிர் வந்தது. "கொஞ்சம் நான் இறங்க வேண்டிய ஸ்டாப் சொன்னீங்கன்னா" நான் இழுத்தேன். அதுக்குள் அந்தப் பெண்மணி, "அது என்ன அப்படிச் சொல்லிட்டே? உன்னைத் தனியாப் போக விடுவேனா? நான் இறங்கும் போது கூட இறங்கு. நான் உன்னைக் கொண்டு விடறேன்." என்றாள்.

பஸ் கண்டக்டரில் இருந்து எல்லாருக்கும் நிம்மதி. நான் அந்தப் பெண்மணியுடன் இறங்கினேன். திருவொத்தியூர் ஹை ரோடுக்கு இணையாக அதன் பின்னால் உள்ள ஒரு ரோடில் இறங்கினோம். அங்கிருந்து ஒரு 10 நிமிஷ நடை. உடனே ஆஃபீஸ் வந்து விட்டது. அந்தப் பெண்மணி சொன்ன மாதிரி சந்து முனையில் ஆஃபீஸ் நுழையும் இடம். மெயின் ரோடில் பணம் கட்டும் கவுண்ட்டர் முதலியன இருந்தன. என்னை விட்டு விட்டு அந்தப் பெண்மணி போய் விட்டார். ஆஃபீஸில் நுழைந்ததும் உடனேயே முதலில் ஆஃபீஸர் அறை வந்ததால் நேரே அங்கே போய் என் கடிதத்தைக் காட்டியதும் அவர் பார்த்து விட்டு,"அப்போவே மெயின் ஆஃபீஸில் இருந்து நீங்கள் வரப் போகும் செய்தி வந்தது. ஏன் இத்தனை நாழி? திரும்ப அம்பத்தூர் போயிட்டு வரீங்களா?" என்றார். "இடம் தெரியவில்லை. அலைந்தேன்." என்று சொன்னதும், உடனே அவர்,"மெயின் ஆஃபீஸை விட்டு வெளியே வந்தால் உடனே அங்கேயே பஸ் நிற்குமே?" என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "பக்கத்தில் ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டாப் தான் இருக்கிறது." என்றேன். "அங்கே இருந்துதான். திருவொத்தியூர் போகும் பஸ்ஸில் அங்கே ஏறினால் தண்டையார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இறங்கினால் நேரே ஆஃபீஸ்." என்றார். என் அசட்டுத்தனத்தை நினைத்து நொந்து போனேன். அங்கே நான் பார்க்கும் சமயம் பஸ் எதுவும் இல்லை. அதனாலும் அங்கே இருந்து பஸ் கிளம்பும் என்பது தெரியாத காரணத்தாலும் அங்கே கேட்கவே எனக்குத் தோன்றவில்லை. சரி, என்று என் கணவருக்கு போன் செய்யப் போனேன். அதற்குள் joining report டைப் செய்து வரவே அதில் கையெழுத்துப் போட்டேன். "கீதா சாம்பசிவம்" என்று. மாலை 4-30க்கு வேலையில் சேர்ந்த முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். 5 மணிக்கு ஆஃபீஸ் முடிகிறது. இவருக்கு ஆஃபீஸ் 3-30க்கே முடிந்து விடும். ஆகையால் எங்கே போன் செய்வது என்றும் புரியவில்லை. அதற்குள் மேலே என்னுடைய இடத்திற்கு அழைத்துப் போனார்கள். நான் மாடி ஏறும்போது வெளியில் இருந்து வந்தது யார் என்கிறீர்கள்? என் கணவர்தான். எப்படி வந்தார்? எனக்கும் ஆச்சரியம்தான்.

Tuesday, June 27, 2006

75. அடங்க மறுத்த மனசாட்சி.

இன்னிக்கு இன்னும் இணைய இணைப்புக் கிடைக்கவில்லை. முதலில் வந்தது 2 நிமிஷம் கூட ஆகலை, உடனே போயிடுச்சு. எப்போ வரும் தெரியாது. அதற்குள் எழுதி வேணா வச்சுக்கலாம்னு எழுத ஆரம்பிச்சேன். "நேத்திக்கு," னு எழுத ஆரம்பிச்சதும் "நிறுத்து" னு ஒரு கூக்குரல். "யாரு" பயத்துடன் பார்த்தேன். "நான் தான் உன்னோட மனசாட்சி." என்றது. "இது என்ன புதுசா? நான் தமிழ் சினிமாவெல்லாம் ரொம்பப் பாக்கறதில்லை." என்றேன். "அலட்டாதே! என்ன எழுதப்போறே?" என்று கேள்வி வந்தது. "இது என்ன கேள்வி? நேத்திக்கு சாயந்திரம் நடந்ததை எழுதப் போறேன்." இது நான். "அப்படியா? அப்போ பாதிலே விட்டிருக்கே அது?" மனசாட்சியின் கேள்வி. "இது என்ன கேள்வி? அப்புறம் எழுதுவேன்." நான். "ஓஹோ~ ரொம்பப் பெரிய எழுத்தாளினு நினைப்போ? பெரிய சஸ்பென்ஸ் கொடுக்கிறியாக்கும்?" கேள்வி வந்தது. "அதெல்லாம் இல்லை. இது கொஞ்சம் வித்தியாசமான காமெடியாயிருக்குமேனு தான்......." நான் இழுத்தேன். "ஆஹா, தெரியுமே, உன் காமெடி எல்லாம். ஒருத்தர் ஒண்ணு சொல்லக்கூடாதே உடனே தலை கழுத்திலே நிக்காதே!' அதட்டல் வந்தது. "என்ன சொல்றே நீ? என் தலை எங்கே போகும்? என் கழுத்திலே தான்...." நான் முடிக்கவில்லை. "என்கிட்டேயே ஜோக் அடிக்கிறியா?" என்று கோபமாகக் கேள்வி வரவே, "இப்பொ என்ன செய்யறது?" என்றேன் ஈனஸ்வரத்தில். நான் செய்வது அறியாமல் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த என் கணவர், "என்ன, மறுபடி ஏதாவது தப்புப் பண்ணிட்டியா?" என்று கேட்டார். "இல்லை, மூளையே குழம்பிக் கிடக்கு. எதை எழுதறதுனு தெரியலை. யோசிக்கிறேன்." என்றேன். "அட, அது வேறேயா?" என்றார். "எது வேறேயா?" நான் கேட்டேன். "அதான், உனக்கு மூளை குழம்பி இருக்குன்னியே! ஆச்சரியமா இல்லை! உனக்கு மூளை இருக்குங்கறது?" என்று கேட்டார். நான் பல்லைக் கடித்த கடியில் கடைவாய்ப் பற்கள் கீழே விழுந்து விட்டது. எழுத்தாளியாக இருப்பது என்றால் இம்மாதிரி விமரிசனங்களையும் ஏற்கும் பக்குவம் வர வேண்டும் என்று (வேறே வழி?) என்னை நானே தேற்றிக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.
*********************
அப்பாடி, ஒரு வழியாகக் கனெக்ஷன் வந்து விட்டது. இனிமேல் வெளியிடத் தடை எதுவும் இல்லை.
**********************
பஸ் போய்க் கொண்டு இருந்தது. ஒரு வழியாக செகண்ட் லைன் பீச் வந்து விட்டது. ராயபுரம் பழைய ஸ்டேஷன் என்பதால் பீச் ஸ்டேஷனில் இருந்து அங்கே போய் விட்டால் அப்புறம் நடக்கும் தூரம் என்றார்கள். பார்க்கலாம், என்பது என் நினைப்பு. பீச் ஸ்டேஷனில் போய் விசாரித்தால் தான் ராயபுரம் ஸ்டேஷன் போக வேண்டும் என்றால் செண்ட்ரல் தான் போக வேண்டும் என்றும், அதுவும் அங்கே அப்படி ஒண்ணும் லோக்கல் வண்டி எல்லாம் நிற்காது என்றும் புரிந்தது. காலையில் கிளம்பும்போது சாப்பிட்டது. ப;சி வேறு, துக்கம் வேறு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. ஸ்டேஷனில் வேலை செய்த ஒருத்தரிடம் போய் என்னுடைய வேலையில் சேரும் கடிதத்தைக் காட்டிக் கேட்டபோது அதை அவர் கையில் வாங்காமலே "இ.பி.ஆஃபீஸ்தானே, இதோ இப்படிப் போய்த் திரும்பினால் அந்த பாங்க்கிற்கு அடுத்த கட்டிடம், கீழே காஷ் கவுண்டர். மேலே ஆஃபீஸ். " என்றார். அப்பாடி, இவ்வளவு கிட்டத்தில் இருக்கிறதே என்று சந்தோஷத்துடன் அந்த ஆஃபீஸுக்குள் நுழைந்தேன். அங்கே போய் மேலதிகார் யார் என விசாரித்து விட்டு என் கடிதத்தைக் காட்டினால் அவர், "இது DCA/Royapuram, இல்லைம்மா, DCA/Chennai, நீ போக வேண்டிய ஆஃபீஸ் தண்டையார் பேட்டையில் இருக்கிறது. நீ தினமும் எப்படி அம்பத்தூரில் இருந்து வருவே? பேசாம இந்த ஆஃபீஸ் கேட்டிருக்கக் கூடாதோ?' என்றார். "எனக்குத் தெரியவில்லை. தண்டையார் பேட்டைக்கு எப்படிப் போவது?" என்று கேட்டேன். "நாளைக்குப் போயேன். இப்போவே மணி 2 ஆகிறது." என்றார். "இல்லை, வழி சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்." "சரி, 6.-ம் நம்பர் பஸ்ஸில் போ." என்றார். "இறங்க வேண்டிய ஸ்டாப்?" "போலீஸ் ஸ்டேஷன்." " சரி, சார். தாங்ஸ்." மறுபடி பஸ் ஸ்டாண்டு. இன்னிக்கு எப்படியும் போயே ஆகணும்னு ஒரே வெறி வந்தது. 6.-ம் நம்பர் பஸ் வந்தது. நானும் ஏறினேன். கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டேன். "போலீஸ் ஸ்டேஷன்" ரொம்பப் பெருமையாக இடம் தெரிந்த் நிம்மதியில் சொன்னேன். கண்டக்டர் "இப்படி மொட்டையாச் சொன்ன எப்படி? எந்தப் போலீஸ் ஸ்டேஷன்? இந்த ரூட்டில் மூன்று வருகிறது." என்றார். "கடவுளே, இது என்ன சோதனை?" என்று நினைத்துக் கொண்டு இ.பி.ஆஃபீஸ், இருக்கிறதே அங்கே" என்றேன். "அடப் பாவமே, அதுக்கு இந்த 6-ம் நம்பரில் ஏன் ஏறினே? 6-C இல்லே போகும்? இது ராயபுரம் வழியாப் போய்க் காலரா ஆஸ்பத்திரி ரோடு போகும். அதுக்கு முன்னாலேயே திருவொத்தியூர் ஹை ரோடிலே இருக்கு நீ சொல்ற ஆஃபீஸ். காலரா ஆஸ்பத்திரியிலே இருந்து ரொம்ப தூரம் திரும்ப நடக்கணும்." என்றார். "ராயபுரம் தான் போட்டிருக்கு." நான். "ஆஃபீஸ் பேரு அதும்மா. ஆனால் இருக்கிற இடம் திருவொத்தியூர் ஹை ரோடு. நான் எத்தனை நாளா இந்த ரூட்டிலே இருக்கேன். தெரியுமா? நீ எங்கே இறங்கி எப்படி போவே? இது என்னடா தொந்திரவு?" என்று கண்டக்டர் வாய் விட்டுப் புலம்பவே என் மனம் கலங்கியது.
**********************
"என்ன, லிங்க் வந்ததா? எழுதியாச்சா?" என் கணவர் கேட்க, நான் லிங்க் சரியாக வராத எரிச்சலில் இருந்தேனா? "என்னவோ எழுதினேன், மண்ணாங்கட்டி." என்றேன். "பரவாயில்லை, அதைக்கூட எழுதலாமா?" அவர். "ஏன், என்ன விஷயம்?"அப்பாவியாக நான். "இல்லை, உன் மண்டைக்குள் இருக்கிறதை வெளியில் கொட்டி இருக்கியே, அதான் கேட்டேன்." என்று சொல்ல மறுபடி நான் பல்லைக் கடிக்கப் பல் விழுந்தது நினைவுக்கு வர வாயை மூடிக் கொண்டேன்.

Monday, June 26, 2006

74. நான் வேலைக்குப் போனேன்.

நான் மின்வாரியத்தில் வேலைக்குப் போனது பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அது கல்யாணத்துக்கு முன்னேயே பரிக்ஷை எழுதி நேர்முகத்தேர்வும் முடிந்து தேர்ச்சி பெற்றுவிட்டு பணியில் சேரும் தேதிக்காகக் காத்திருந்த நேரம் திடீரென்று 15 நாளில் கல்யாணம் ஆகி அதன் பின் ஒரு மாதத்தில் எல்லாம் சென்னை வந்து, அம்பத்தூரில் குடித்தனமும் தொடங்கியாச்சு. அதற்கு அப்புறம்தான் பரமக்குடிக்குப் போய் வேலையில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது. மதுரைன்னாலும் பரவாயில்லை. பரமக்குடினா என்ன செய்யறது? பாட்டியோட பிறந்த ஊர். ஆனால் யாரும் தெரிஞ்சவங்க கிடையது. அப்பா அந்த உத்தரவை அப்படியே எங்களுக்குத் திருப்பி இருந்தார். அதை எடுத்துப் போய் மின்வாரியச் சேர்மனைப் போய்ப்பார்த்து விவரம் சொல்லிச் சென்னைக்கு மாற்றல் கேட்டு அதுவும் வந்து விட்டது. ஆனால் எங்கே போய்ச் சேருவது என்று எந்த விவரமும் அதில் குறிப்பிடவில்லை. மவுண்ட் ரோடு ஆஃபீஸில் இருந்து வந்திருந்தது. மேலும் அங்கே தான் போய்ச் சேர்மனைப் பார்த்து பேட்டி கொடுக்கவும் போனோம். ஆகையால் அங்கேயே போய்க் கேள் என்று சொல்லி விட்டு என் கணவர் அவர் ஆஃபீஸ் கிளம்பினார். அப்போதுதான் ஊரில் இருந்து வந்திருந்தோம். அன்றுதான் அவர் மறுபடி வேலையில் விடுமுறை முடிந்து சேருவதால் மறுபடி விடுமுறை போட முடியாது. ஆதலால் "நீ தான் உன் சித்தி வீட்டில் இருந்திருக்கிறாயே! சென்னை ஒன்றும் புதிது இல்லை. போய்ப் பார்த்துவிட்டு எனக்கு ஒரு போன் செய்." என்று கூறினார். நானும் பெரிசாகத் தலை ஆட்டி விட்டேன். என் கடைசி நாத்தனார் வேறே அப்போ எங்களுடன் இருப்பதற்கு வந்திருந்தாள். அவளுக்கு முன்னால் எனக்குத் தெரியாது என்று எப்படிக்கூறுவது? பேசாமல் இரண்டு பேரும் கிளம்பினோம். அம்பத்தூரில் ரெயில்வே ஸ்டேஷனில் சென்னை ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டு, "ஜாக்கிரதை! போனதும் போன் பண்ணு." என்றார். அவர் ஆவடிப்ப்பக்கம் போக நான் எதிர்திசை வண்டிக்குக் காத்து நின்றேன்.
***********
சித்தி வீட்டில் இருந்தேனே ஒழிய எங்காவது போக வேண்டும் என்றால் முப்பாத்தம்மன் கோவில், அல்லது தி.நகர் போஸ்ட் ஆஃபீஸ். இதோடு சரி. என் தம்பிகளை பள்ளியில் இருந்து அழைத்துவர எப்போவாவது சித்தி அனுப்புவார். அதுவும் ராமகிருஷ்ணா பள்ளியைச் சேர்ந்த சாரதா வித்யாலயா. அப்போது இருபாலாரும் படிக்கும் பள்ளியாக இருந்தது. அது கூடச் சில சமயம் சித்தியும் வருவார். திருவல்லிக்கேணியில் என் பெரியப்பா இருந்தார். அவர் திருமணம் ஆகாதவர் என்பதாலும், அவர் தங்கி இருந்தது மான்ஷன் என்று அழைக்கப்படும் அறை மாதிரி என்பதாலும் அவருடன் தங்காமல் சித்தியிடம் தங்கினேன். பெரியப்ப இருந்த வீட்டில் 10 பேர் அது மாதிரி தங்கி இருந்தார்கள். அங்கே போவது என்றால் முன்கூட்டியே பெரியப்பா சொல்வார்,. இந்தத் தேதிக்கு வா என்று. அப்போது போவேன். நேரே 13-ல் ஏறினால், "ரத்னா கஃபே' எதிரே உள்ள ஸ்டாப்பில் இறங்கினால், ரத்னா கஃபே பக்கத்துதெரு சாமிப்பிள்ளை தெருவில் பெரியப்பா இருந்தார். இப்போ ரத்னா கஃபே இருக்கா தெரியாது. அங்கே போனால் பெரிய தெரு பிள்ளையாரைப் பார்த்து ஒரு "ஹாய்" சொல்லிவிட்டுப் பார்த்தசாரதியிடம் செளக்கியம் விசாரித்துவிட்டு, பாரதி இருந்த தெரு வழி வந்தால் பெரியப்பா சாப்பிடும் மாமி மெஸ். சில சமயம் அங்கே, சில சமயம் ரத்னா கஃபே, சிலசமயம் ராயர் மெஸ் என்று ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுப்பார். அவர் தண்ணீர் கூடக் குடிக்க மாட்டார்.திருவல்லிக்கேணியில் இருந்து திரும்ப கோஷா ஆஸ்பத்திரி வாசலில் ஏற்றி விட்டால் தி.நகர். சிலசமயம் பெரியப்பாவும் கூட வருவார். இந்த மாதிரி போய்விட்டு நான் என்ன சென்னையைப் புரிந்து கொள்வது? உண்மையில் ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது.
**********
செண்ட்ரலில் இறங்கி வெளியே வந்து, மவுண்ட் ரோடுக்கு எந்த பஸ் போகும் என்றால் எல்லாரும் விசித்திரமாய்ப் பார்த்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன, எதுவும் போகாதா?" என்று அப்பாவியாய்க் கேட்டேன். உடனே ஒருத்தர் வந்து "என்னம்மா, ஊருக்குப் புதுசா?" என்றார். கதைகளில் படித்த ஏமாற்று வேலைகள் நினைவுக்கு வரவே நான் பதிலே பேசவில்லை. எல்லா பஸ்ஸும் மவுண்ட் ரோடு வழியாத்தான் போகும்னு அப்புறம் தான் தெரிஞ்சது. கையில் ஒரு முறை அட்ரஸைப் பார்த்துக் கொண்டேன். வரும் வண்டியில் ஏறலாம் எனத் தீர்மானித்து ஏதோ ஒரு வண்டியில் ஏறினேன். கடவுளே, அது பாதியில் திரும்புமாம், வேறு வழியில் போய் விடும். மின்வாரியம் வரை போகாதாம். மவுண்ட் ரோடு போஸ்ட் ஆஃபீஸில் இறக்கி விட்டார்கள். அங்கே இருந்து மறுபடி பஸ் பிடித்து இம்முறை கண்டக்டரிடம் முன் கூட்டிச் சொல்லி வைத்து விட்டதால் ஸ்டாப் வந்ததும் இறங்கினேன். உள்ளே போனால் ஒரே சமுத்திரம். ஆட்கள் வருவதும், போவதுமாக இருக்கிறது. யாரை என்ன கேட்பது என்று ஒன்றும் புரியவில்லை. திகைப்புடன் ஒரு ஊழியரிடம் போய் எனக்கு வந்த கடிதத்தைக் காட்டினேன். அவர் யாரிடமோ சொல்ல அவர் வேறு யாரையோ கூப்பிட ஒரு வழியாக நான் போக வேண்டிய செக்க்ஷனுக்குள் போனேன். அங்கே உள்ள அதிகாரியிடம் என் கடிதத்தைக் காட்டினேன். அவர் என்னிடம் "முதல் நாள் தனியாவே வந்திருக்கியே? சென்னை பழக்கமா? உன் ஊர் மதுரைனு போட்டிருக்கே?" என்று கேட்க நான் அவரிடம் எல்லா விவரமும் சொன்னேன். "நீ அம்பத்தூரில் இருந்து வரியா? அப்போ DCA/Chennai office அல்லது DCA/Royapuram இரண்டில் ஒன்று சரியாக இருக்கும். எது உனக்குச் சரியாக இருக்கும்?" என்றார். எனக்கு இரண்டுமே எங்கு இருக்கிறது என்று தெரியாது. ஆகவே சும்மா இருந்தேன். அதற்குள் அவரே "DCA/Royapuram messenger இப்போ தான் வந்தார். அங்கே ஆள் இல்லாமல் ரொம்பக் கஷ்டமா இருக்காம். நீ அவர் கூடவே போயிடு." என்றார். நானும் "சரி" என்றேன். உடனே ஒரு லெட்டெர் டைப் செய்து கொடுத்தார். "அந்த மெசெஞ்சர் வெளியிலே இருப்பார் பாரு", என்றார். அதற்குள் ஒருத்தர் "அவர் அப்போவே போயிட்டார் சார்". என்றார். "சரி, நீ எப்படிப் போவே?" என்றார் என்னிடம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு வெளியில் வந்தேன்.பைத்தியக்காரத் தனமாக ஆஃபீஸ் இருக்குமிடம் கேட்கவில்லை. மறுபடி உள்ளே போனேன். கேட்டதற்கு ராயபுரம் ஸ்டேஷனில் இருந்து நடக்க முடிந்தால் நடக்கலாம் என்றார்கள். அவர்கள் நினைத்தது அம்பத்தூரில் இருந்து தினமும் போக நான் கேட்பதாக. ஒருத்தர் பேசின் பிரிட்ஜ் சிபாரிசு செய்தார். இன்னொருத்தர் செண்ட்ரல் தான் நல்லது என்றார். ஆகவே ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்லவே குழம்பிப்போய் வெளியில் வந்த நான் பீச் செல்லும் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். கண்டக்டரிடம் ராயபுரத்துக்கு டிக்கெட் கேட்க அவர் "இது போகாது." என்று சொன்னார். "எங்கே போகிறது?" நான்.
"செகண்ட் லைன் பீச்." கண்டக்டர்.
"சரி, அங்கேயே கொடுங்கள்." நான்.
பஸ் போய்க் கொண்டிருந்தது. மணி ஏற்கெனவே மத்தியானம் 12க்கு மேல் ஆகி விட்டது.

Sunday, June 25, 2006

73. காக்காய் கொண்டு போச்சு

விதி வலிதுனு பதிவு போட்டு ஒரு நாள் ஆகலை. அது உண்மைனு நிரூபணம் ஆகி விட்டது. எப்படினு கேக்கறீங்களா? நேத்திக்குப் பதிவு ஒண்ணும் போட வேண்டாம்,தமிழ் மணம் பதிவுகள் சில படித்து விட்டு முத்தமிழுக்கு ஏதாவது எழுதலாம் என்று முடிவு செய்து தமிழ்மணம் பார்க்கும்போது காசியின் மட்டுறுத்தல் அறிவிப்பைப் பார்த்தேன். எப்போதும் பார்த்து விட்டுக் காசியின் பதிவிலே போய்ப் பின்னூட்டம் கொடுத்துவிட்டு வருவது வழக்கம். அது மாதிரி செய்யலாம் என்று நினைத்துப் போனேன். அப்போது ஒரு விபரீத ஆசை வந்தது. இன்னும் கருவிப் பட்டைநிறுவவில்லையே, இப்போது முயன்றால் என்ன? என்பது தான் அது. ஏற்கெனவே ஒரு முறை முயன்றேன். வரவில்லை. அத்தோடு விட்டு விட்டேன். நேற்று என்னுடைய ஆசை அதிகமாகவே அந்தப் பக்கத்துக்குப் போனேன். அப்போ தான் என்னோட எல்லாப் பதிவையும் காக்கா கொண்டு போச்சு.
கருவிப்பட்டை பதிக்கும் முறை சொல்லி இருக்கும் பக்கத்திற்குப் போய் அதில் சொல்லி
இருந்தபடி,
என்னுடைய templateஐத் திறந்து
வைத்துக் கொண்டு கருவிப்பட்டை
பதிக்கும் முறை பற்றிச் சொன்னபடியெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தேன். எல்லாம் முடித்து விட்டுக் கடைசியில் மறு வெளியீடுக்கு குறிப்பிட்டதையும் செய்து விட்டுப் பார்த்தால் ஒரே அதிர்ச்சி. ஒன்றுமே வரவில்லை. வெறும் வெற்றுப் பக்கங்கள் மட்டும் தான். என் மனம் என்னிடம், "நான் தான் சொன்னேனே, நீ கேக்கலை" என்று கிண்டல் செய்ய,நான் "இல்லை, இல்லை, இப்போது வரும் "என்றேன். மறுபடி republish allஐச் சொடுக்கினேன். இம்முறை வந்தது வெறும் தலைப்புக்கள் மட்டும். சரி தலைப்பில் தேடினால் கிடைக்கும் என்று ஒன்று ஒன்றாகப் பொறுமையாகச் சொடுக்கினால் வந்தது வெறும் வெற்றுப் பக்கங்கள் தான். ஹி,ஹி,ஹி, சிரிப்பு ஒலி. என் மனம் தான்.
"நான் தான் சொன்னேனே,உனக்கு வராதுனு." கெக்கலி கொட்டிச் சிரிக்கிறது. "தேடு" பகுதியில் போய்த் தேடினால் எல்லாம் இருக்கிறது. சரி என்று recover all blogs போட்டுப் பார்த்தால் எல்லாம் வந்தது. அதைப் publish கொடுத்து விட்டுப் பார்த்தால் மறுபடி தலைப்புக்கள் மட்டும் திரும்ப வந்திருக்கின்றன்.செய்வது அறியாமல் திகைத்து உட்கார்ந்திருந்தேன். அப்போது என் கணவர் வந்தார். என் முகத்தையும், கிட்டத் தட்ட நான் அழும் நிலையில் இருப்பதையும் பார்த்துப் பயந்து போய் விட்டார். "என்ன ஆச்சு?"
நான்: என் பதிவுகளைக் காணவில்லை.
அவர்:காணவில்லையா? என்ன புதிசாச் சொல்லறே?
நான் நடந்ததை விவரித்தேன். "உன் கையும், காலும் சும்மாவே இருக்காதே. பரவாயில்லை, மறுபடி எழுது."
நான்: என்ன, 72 பதிவுமா? அதிலும் சில பின்னூட்டங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அவர்:அப்படி என்ன வந்தது?
நான்;உங்களுக்கு என்ன தெரியும்? என் தமிழ் எழுத்தைப் பாராட்டி எழுதறாங்க. மேலும் ஒருத்தர் "தேவன்" எழுதற மாதிரி இருக்குனு வேறே சொல்லி இருக்காரு.
அவர்:வஞ்சப் புகழ்ச்சியாயிருக்கும். பாவம்.
நான்:யார் பாவம்? நானா?
அவர்:நீ இல்லை. "தேவன்" தான். இப்போ இருந்து இருந்தால் உன்னோடு சேர்த்துச் சொன்னதிலே நொந்து போய் எழுதறதையே விட்டிருப்பார்.
நான்:உங்களுக்குப் பொறாமை. அதான்.நான் இப்போ என்ன செய்யறது சொல்லுங்க. அதை விட்டுட்டு.
அவர்: உன் friends யாரையும் கூப்பிட்டுக் கேளேன்.
நான்:இன்னிக்குச் சனிக்கிழமை. ஜாஸ்தி யாரும் இருக்க மாட்டாங்க. எல்லாரும் நம்மளை மாதிரி வீட்டிலே இருந்து பதிவு போடறதில்லையே. சில பேர் சனிக்கிழமைனா இருக்கவே மாட்டாங்க."
அப்படியும் மனதில் ஒரு யோசனை தோன்றவே உதவி கேட்டு ஒரு பதிவு எழுதினேன். அது போச்சா, போகலையானும் தெரியலை. ஒரே வேதனை தாங்கலை. சரி, இதையே முத்தமிழ்க்குழுமத்திலே சொல்லி உதவி கேட்போம்னு ஜி-மெயிலுக்குப் போனேன். அங்கே நல்லவேளையாக உதவிகேட்டு எழுதினதை அழிக்காமல் வைத்திருந்ததால் அப்படியே போட்டு விட்டு உட்கார்ந்தேன். சற்று நேரத்துக்கு எல்லாம் மஞ்சூர் ராஜா என் அழைப்பைப் பார்த்துவிட்டு அவரும் யாராவது உதவ முடியுமா? எனக்கேட்டு எழுதினார். அப்புறம் டெலஸ்கோப்பிலே பார்த்த மாதிரி என் நிராதரவான நிலையைப் புரிந்து கொண்டு உடனேயே சாட்டிங் வந்தார். (நான் பொதுவாக நானாக யாரையும் சாட்டிங் கூப்பிடுவது கிடையாது. முக்கியமான காரணம் எல்லாரும் வேலைக்குப் போகிறவர்கள் என்பதுதான். அவரவர் வேலையில் இருக்கும்போது நான் வீட்டில் இருந்து கொண்டு சாட்டிங் கூப்பிடுவது முறை ஆகாது என்றுதான். யாராவது முத்தமிழில் கூப்பிட்டால் சாட்டிங் செய்வதுடன் சரி.) ஆகவே தான் இப்போதும் யாராவது மெயில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து உட்கார்ந்து இருந்தேன். திரு மஞ்சூர் ராஜாவைச் சாட்டிங்கில் பார்த்ததும் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.உடனே அவரிடம் நான் செய்த எல்லாவற்றையும் சொல்லவே அவர் வந்து என் ப்ளாகில் பார்த்து விட்டு மிகவும் அருமையான முறையில் templateஐயும் மாற்றி விட்டு எல்லா பதிவையும் திரும்பக் கண்டு பிடித்துக் கொண்டுவந்தார். நடுவில் என்னைக் கூப்பிட்டுப் பதிவுகள் எல்லாம் இருக்கின்றன. கவலை வேண்டாம், என்றும் வேலை முடித்து விட்டு மறுபடி கூப்பிடுவதாகவும் சொன்னார். அதே மாதிரி வேலை எல்லாம் முடித்து விட்டுக் கூப்பிட்டுச் சொன்னார். எனக்கு உயிர் வந்தது.மீண்டும் சிரிப்பும் வந்தது.

"எந்நன்றி கொன்றார்க்கும், உய்வுண்டாம், உய்வில்லை, செய்
நன்றி கொன்ற மகற்கு."

இன்று நான் இந்த மாதிரி ஒரு பதிவு போட திரு மஞ்சூர் ராஜா தான் காரணம். "நன்றி" என்று வெறும் வாய்வார்த்தையால் சொன்னால் உடனே மறந்து போவேன். அதனால் சொல்லப் போவது இல்லை.

Saturday, June 24, 2006

HELP HELP HELP

முத்தமிழ் அன்பர்களுக்கு, தமிழ் மணம் நண்பர்களுக்கு,
அவசர உதவி தேவை. இன்று தமிழ்மணம் கருவிப்பட்டை நிறுவும் சமயம் என்னுடைய 72 வலைப்பதிவும் திரும்ப வரவில்லை. Republish all blogs சொடுக்கியும் வரவில்லை. என்ன செய்தால் வரும்? வெறும் தலைப்புக்கள் மட்டும் வருகிறது. எடிட் செய்து திரும்ப வெளியிட்டாலும் வரவில்லை. உதவி, ரொம்ப அவசரம். நன்றி. அதில் உதவி கேட்டு பதிவு போட்டாலும் வரவில்லை.