எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 09, 2006

57. ஒரு சினிமா விமரிசனம்.

இரண்டு நாளாகப் பேப்பரைப் பார்த்தால் ஜாம்நகர் செய்தி. தொலைக்காட்சியைப் பார்த்தால் ஜாம் நகர் செய்தி. இப்படி ஜாம் நகரைப் பற்றிச் செய்தியைக் கேட்டதில் இருந்தும், படித்ததில் இருந்தும், அதிலும் அந்த "அம்பேர்" தியேட்டரில் "ஃபானா" திரைப்படம் வெளியான செய்தி தெரிந்ததில் இருந்து என் மனம் துடிக்க ஆரம்பித்து விட்டது. உடனே ஜாம் நகர் நினைவுகள் வந்து முட்டி மோதிக் கொண்டு ஒரே டிராஃபிக் ஜாம் மூளையில். எதை எழுதுவது எதை விடுவது என்று புரியவில்லை. ஏற்கெனவே ராஜஸ்தானில் இருந்து கிளம்பி "காண்ட்வா" வரை வந்து விட்டு அம்போ என விட்டிருக்கிறேன். அதன் பரம் ரசிகர்களான திரு TRC அவர்களும், அம்பியும் என்னவோ ஏதோ என்று புரியாமல் தவிக்கிறார்கள். (அம்பி, TRC Sir, இரண்டு பேருக்கும் செலவில்லாமல் ஒரு விளம்பரம் கொடுத்து விட்டேன்.) அவர்கள் அப்படியே தவிக்கட்டும் என்று விட்டு விட்டு "அம்பேர்" தியேட்டர் பற்றிய சில செய்திகள் இதோ:

அம்பேர் தியேட்டருக்குப் பக்கத்தில் தான் நாங்கள் இருந்தோம். நாங்கள் இருந்த பகுதி ஊருக்குள் இருந்தாலும் இதுவும் மிலிட்டரி கண்டோன்மெண்டைச் சேர்ந்தது தான். ஜாம் நகரில் மட்டும் ஏனோ கண்டோன்மெண்டின் ஒரு பகுதி நகரத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. அதில் தான் என் கணவரின் அலுவலகம் மற்றும் எங்கள் குடி இருப்பும் இருந்தது. மிலிட்டரி சப்ளை டெப்போ இருந்ததால் அதைச் சேர்ந்தவர்கள் குடும்பங்களும், எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பமும் இருந்தன. ராஜா காலத்திலேயே சொலேரியம் அமைத்திருக்கிறார்கள். நாங்கள் இருந்த சமயம் வேலை செய்யவில்லை. ஆனால் பேர் என்னமோ சொலேரியம் ரோடுதான். அந்த ரோடின் கடைசியில் என்றால் மிகக் கடைசியில் எங்கள் வீடு இருந்தது. ஒரு மர்ம, மற்றும் ஆவி உலகைப் பற்றிய கதைகள் எல்லாம் எடுக்கும்படியான அமைப்பைக்கொண்ட வீடு அது. வருபவர்கள் எல்லாம் பயப்படுவார்கள்.எங்களைத் தவிர. பக்கத்தில் சப்ளை டெபோவின் பின் வாசல் சந்து வழியாகப் போனால் உடனே அம்பெர் தியேட்டர் வரும். சனி, ஞாயிறுகளில் தமிழ்ப்படம் காலைக் காட்சி போடுவார்கள். என்னமோ தமிழ் நாட்டில் இருக்கும்போது தியேட்டர்களிலேயே குடி இருந்த மாதிரி நினைப்புடன் நான் வரும் எல்லாப் படத்துக்கும் போகலாம் என்று சொல்வேன். மெஜாரிட்டி கிடைக்காது. இதுவே நசீராபாத்தில் இருக்கும்போது எல்லாரும் அடித்துப் புடைத்துக் கொண்டு வருவார்கள். அங்கே திறந்த வெளி அரங்கம் தான். படைவீரர்களுக்கு இலவசம். எங்களைப் போன்ற அதிகாரிகளுக்கு நம்புங்கள் 1-30 ரூதான் டிக்கெட். இது ஊருக்குள் இருக்கும் தியேட்டருக்கும் பொருந்தும். ஆகவே சினிமா பார்ப்பது என்பது தான் அங்கே ஒரு சுவாரசியம். அதுவும் நல்ல வெயில் காலத்தில் இரவு 8 மணிக்குப் பின் தான் படம் பார்க்க முடியும். அதுவரை வெளிச்சம் இருக்குமே. அந்த மாதிரி அனுபவத்திற்குப் பின் மூடிய தியேட்டருக்குள் படம் பார்ப்பது என்றால் எனக்கும் பிடிக்கவில்லை தான். ஆனால் அது பாலச்சந்தர் படம். ஏதோ சஸ்பென்ஸ் உள்ள படம் என்றும் விமரிசனங்களில் படித்திருக்கிறேன். ஆகவே, குழந்தைகள் இருவரையும் விட்டு விட்டு, நாங்கள் மட்டும் படம் பார்க்கப் போனோம். (குழந்தைகள் தனியாகவா என்று கேட்கிறீர்களா? நாங்கள் இருந்தது ஆர்மி கண்டோன்மெண்ட். சிவில் ஆட்கள் அப்படி எல்லாம் நுழைய முடியாது. பால்காரர் கூட அனுமதியுடன் தான் வரமுடியும்.) நாங்கள் போகும் போது படம் ஆரம்பிக்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. புத்தகம் படிப்பது என்றாலும் அட்டைப் பெயரில் இருந்து கடைசியில் எழுதும் printed and published by so and so வரை படித்தால் தான் எனக்குத் திருப்தி. அதே மாதிரி படம் பார்க்க வேண்டுமென்றால் censor certificate-ல் இருந்து ஆரம்பித்துப்பார்க்க வேண்டும்.

படம் ஆரம்பித்தது. ரஜினிகாந்த் படம் வேறே. எடுத்த எடுப்பில் மகன் ரஜினி காந்த் அப்பா ரஜினிகாந்தைத் திட்டுவதுடன் ஆரம்பித்தது. சரி, ஃப்ளாஷ் பாக் என்று நினைத்தோம். சற்று நேரத்திற்கெல்லாம் சரிதா, லட்சுமி பேச படம் "சுபம்" என்று போட்டார்கள். என்னடா இது பாலச்சந்தர் டெக்னிக் புது மாதிரியா வந்திருக்குனு நினைச்சோம். கிளம்பலாமா என்னனு புரியலை. 1/2 மணி நேரம்தான் ஆகி இருந்தது. அதற்குள் மறுபடி படம் ஓட ஆரம்பித்தது. இப்போது இடைவேளையில் இருந்து ஆரம்பித்தது. ஒரே தலை சுற்றல். எல்லாரும் படத்தை நிறுத்தச் சொன்னாரகள். படம் நின்றதும் விஷயம் என்னவென்று கேட்டால் படப் பிரதி இடைவேளையில் இருந்து ஆரம்பித்துத் தான் வந்திருப்பதாகவும் மற்றொரு பிரிண்ட் வரவில்லை என்றும், குழப்பத்தில் எதைக் காட்டுவது என்று புரியவில்லை என்றும் சொன்னார்கள். கடவுளே என்று நொந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்தோம். டிக்கெட் காசைக் கொடுத்து விட்டார்கள். அதெல்லாம் அங்கே ரொம்ப கரெக்ட்டாக இருப்பார்கள். அதற்குப் பின் நான் தியேட்டரில் படமே பார்க்கவில்லை. குறிப்பிட்ட படங்கள் மட்டும் பார்ப்பதால் தியேட்டர் போவது ஒரு அலுப்பான விஷயமாகப் போய் விட்டது.
ஹூஸ்டனில் இருந்த போது எங்கள் பையன் ஒரு மலையாளப்படம் dvd கொடுத்துப் பார்க்கச் சொன்னான். "காக்காய், குயில்" என்ற அந்தப் படம் மிக அருமை. மோஹன்லாலுடன் சுரேஷ் பாபு என்று நினைக்கிறேன். நடிப்பு, கதை, தயாரிப்பு எல்லாமே நன்றாக இருந்தது. வேலை கிடைக்காத இரண்டு நண்பர்கள் வயதான பணக்காரத் தம்பதியிடம் பேரன் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். உண்மையான பேரன் இல்லை. ஒருத்தன் தன் உடலைத் தொட்டுப் பார்த்துக் கொள்ள அனுமதிக்க மற்றொருவன் குரல் மட்டும் கொடுக்கிறான். தம்பதியர் நினைப்பதோ ஒருத்தன் தான் என்று. இரண்டு பேரின் ஏமாற்று வேலையைக் கண்டுபிடிக்கும் ஊர்க்காரர்களை நண்பர்கள் ஏமாற்றுவதும், பின் தாத்தா, பாட்டிக்கு விஷயம் தெரிவதும், உடலாய் இருந்தவன் ஓடிப் போவதும், குரலாய் இருப்பவன் என்ன செய்வது என்று தவிக்கும்போது போனவன் மனசு கேட்காமல் திரும்ப வருவதும், தாத்தா, பாட்டி இருவரையும் ஏற்றுக் கொள்வதும் மிக அருமை. இவ்வளவு யதார்த்தமான படங்கள் தமிழில் வருவது இல்லை.

சூர்யா நடித்த சில படங்கள் நன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நான் பார்த்த வரை "கஜினி" பரவாயில்லை. பிதாமகனில் சூர்யா நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் லைலாவுடன் அவர் ஆடும் ஆட்டங்கள் எந்தக் கிராமத்திலும் நடக்காத ஒன்று. கிராமம் பூரா ஒரு வாலிபன் ஒரு இளம்பெண்ணை உப்பு மூட்டை போலத் தூக்கிக் கொண்டு ஓடுவது நடக்கவே முடியாத ஒன்று. பெரியகுளம் வடகரையில் எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பெரியகுளம் மாதிரி ஊரில் (போன வருடம் கூடப் போனேன்) இந்த மாதிரி எல்லாம் நடக்காது. மேலும் அந்தப் பெண்ணை அவள் வீட்டில் என்ன தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்களா என்றும் புரிய வில்லை. எப்போதும் சூர்யா&பார்ட்டி கூடவே சுற்றுகிறாள். அவள் படித்துக் கொண்டிருந்த படிப்பு என்ன ஆனது? இந்த மாதிரிக் கதா நாயகிகள் எல்லாம் தமிழ் சினிமாவில் தான் வருவார்கள்.
இப்போது போன வாரம் "சண்டக்கோழி" (சண்டைக்கோழி இல்லை)படம் கடைக்காரர் ரொம்ப சிபாரிசு செய்து கொடுத்தார். ஆனால் பார்க்க முடியவில்லை.வெளியே போகும்படி ஆகிவிட்டது. அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டோம். பார்த்தால் எப்படி என்று எழுதுகிறேன். அதுவரை பெரிதாக எதிர் பார்த்து வந்தவர்களுக்கு ரொம்ப நன்றி. ஏமாற்றத்துக்கு வருத்தங்கள்.

14 comments:

 1. சில சமயங்களில் ஒரு நாலு வார்த்தை தமிழ்ல எழுதவே ரொம்ப கஷ்டப்படுவேன்..எப்படி இந்த விசைபலகையைத் தட்டி அடிக்கிறதுன்னு.. நீங்க எப்படி இவ்ளோ பெரியதை அடிக்கிறீங்க கீதா. நீங்கள் படம் பார்த்ததை சொன்ன விதம் அருமை. தமிழ் உங்களுக்கு இழுத்த பக்கமெல்லாம் வருது..

  ReplyDelete
 2. இந்தப் பதிவு நீங்கள் எழுதியதா இல்லை உஷா அவர்கள் எழுதியதா?
  :-)))

  ReplyDelete
 3. //புத்தகம் படிப்பது என்றாலும் அட்டைப் பெயரில் இருந்து கடைசியில் எழுதும் printed and published by so and so வரை படித்தால் தான் எனக்குத் திருப்தி. அதே மாதிரி படம் பார்க்க வேண்டுமென்றால் censor certificate-ல் இருந்து ஆரம்பித்துப்பார்க்க வேண்டும்.//

  ha haaa, sema comedy,
  visit here:
  http://mkarthik.blogspot.com/2006/06/blog-post_09.html

  he has referred you.. :)

  ReplyDelete
 4. கார்த்திக்,
  பழகினா எல்லாம் வரும். மேலும் எனக்குத் தமிழ்த் தட்டச்சு தெரியும். ஆகவே இ-கலப்பையை இறக்கினால் போதும். ஆனால் இறக்கிவிட்டு அதைத் திறக்காமலேயே அடிக்க வரலியே என்று முட்டாள் தனமாக நான் தவிச்சது உங்களுக்குத் தெரியாது. Winzip வேணும்னு எல்லாம் தெரியாது. அப்புறம் நண்பர் ஒருவர் open பண்ணியே அனுப்பிச்சார். அதுக்கு அப்புறம் தான் அடிக்க ஆரம்பிச்சேன். தமிழ் தாய் மொழி ஆச்சே.

  ReplyDelete
 5. லதாஆஆஆஆஆஆஆ,
  இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதி கடைசிலே புகழ் எல்லாம் உஷாவுக்கா? கொடுமைடா சாமி,ஒருபக்கம் கரண்ட் கட், மறுபக்கம் update பண்ணுகிறேன் பேர்வழி என்று Tata Indicom Broadband connection link போய்ட்டுப் போய்ட்டு வரும். போனா எப்போ வரும்னே தெரியாது. இதிலே நான் ப்ளாக் எழுதறேனே என்னைப் பாராட்ட வேண்டாமா?

  ReplyDelete
 6. அம்பி, இன்னிக்கு என்ன எல்லாருக்கும் விளம்பரம் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க? கார்த்திக் ப்ளாகில் டுபுக்கு, இதிலே கார்த்திக்குக்கா?

  ReplyDelete
 7. //வருபவர்கள் எல்லாம் பயப்படுவார்கள்//

  நீங்க போனதும் பேய் போயிருச்சா????

  //சுரேஷ் பாபு என்று நினைக்கிறேன்//

  மோகன்லால் & முகேஷ்

  அந்த படம் லண்டன் என்று தமிழில் வந்தது.

  ReplyDelete
 8. என்னங்க கீதா, ஒரு பத்து நாள் வலைப்பக்கம் வரல அதுக்குள்ள இத்தனை பதிவு போட்டு இருக்கின்றீர்க்கள். செம பார்முல இருக்கீங்க போல.
  பொறுமையா படித்து விட்டு சாவகாசமாக பின்னூட்டம் இடுகின்றேன்.

  ReplyDelete
 9. வேதா, படமே பார்க்கலை. பெயர் எப்படித் தெரியும். விஜய் நடிச்சு நான் பார்த்தது, பூவே உனக்காகனு நினைக்கிறேன். படம் எல்லாம் லாஜிக்கோட வருதா? அதுவும் தெரியாது. சினிமாவே வெறுத்துப் போகும்படித் தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப அதேதான்.

  ReplyDelete
 10. மனசு,
  அந்த வீட்டில் பெரிய பெரிய பாம்போட எல்லாம் குடித்தனம் நடத்தி இருக்கேன். பேய் எல்லாம் எம்மாத்திரம்?
  அப்புறம் அது சுரேஷ் கோபினு நினைக்கிறேன். எனக்கு நடிகர்கள் அவ்வளவாத் தெரியாது. தமிழிலே கெடுத்து இருப்பாங்களே.

  ReplyDelete
 11. வாங்க சிவா,
  நீங்க நல்லெண்ணாத்தூது சங்கம் சார்பா போயிருக்கிறதா சொன்னாங்க. ஐ.நா. அனுப்பி வைச்சதாமே? தூது எல்லாம் முடிஞ்சதா? சங்கத் தலைமையை சூடான்ல ஒத்துக்கிட்டங்களா? மெதுவாப் படிங்க. படிச்சுட்டுப் பின்னூட்டம் இடுங்க.

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. கொஞ்சம் என்னத்தை விமர்சிச்சிருக்கீங்கன்னு பார்க்கலாம்னு வந்தா.. யக்கோவ்.. எம்புட்டு எழுதிருக்கீங்க!!! மெதுவா வாரேன்.. வர வர உங்க பதிவெல்லாம் ரொம்ப நீஈஈஈளமா போய்டுச்சு!!

  ReplyDelete
 14. அம்மா பொன்ஸ், ஏதோ இந்த தலைவலி நினைவு வந்துச்சே உங்களுக்கு அதுவரை சந்தோஷம். வாங்க வாங்க மெதுவாவே வாங்க.

  ReplyDelete