எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 09, 2006

83.நஞ்சுண்ட கண்டன்

நேற்று எதிர்பாரா விதமாகச் சுருட்டப்பள்ளி "பள்ளி கொண்டேஸ்வரர்" கோவிலுக்குச் சனி மஹாப் பிரதோஷம் பார்க்கப் போயிருந்தேன். என்னை நன்கு அறிந்தவர்கள் எல்லாம் நான் இந்த மாதிரிப் போவது பார்த்து "உனக்கு இறை அருள் நிறைய இருக்கிறது. இல்லாட்டி உன்னோட உடல் நிலையில் இப்படிப் போக முடியாது." என்று சொல்வார்கள். நான் அதைப் பூரணமாக ஒவ்வொரு முறையும் உணருகிறேன். நேற்றும் அப்படி உணர்ந்த ஒரு பிரயாணம். என்னோட பெருமை அப்புறம். இப்போ அந்த சிவன் பெருமை.

"தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"
இந்தத் தென்னாடுடைய சிவன் எல்லாக் கோவில்களிலும் லிங்க ரூபத்தில் இருக்கிறார். ஆனால் சுருட்டப்பள்ளியிலோ பள்ளி கொண்ட பெருமானாக இருக்கிறார். அதுவும் அன்னையின் மடியில் பள்ளி கொண்டு இருக்கிறார். இந்தக் காட்சி எங்கும் காணக் கிடைக்காத ஒரு காட்சி. மேலும் இந்தக்
கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வாம பாகத்தில் (இடப்பக்கம்) அன்னை உட்கார்ந்திருக்கிறாள். இப்படித் தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தியும் எங்கும் பார்க்க முடியாது. பரமாச்சார்யாள் 72-ம் வருடம் இந்தக் கோவிலில் தங்கி இருந்து தினமும் ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்திருக்கிறார். அப்போதுதான் இந்தக் கோவிலில் உள்ள எல்லாக் கடவுளர்களும் குடும்ப சமேதராகத் தரிசனம் செய்தது பற்றித் தெரிந்து கொண்டு கோவிலின் தலபுராணம் பற்றிக் கூறியதாவது:

பாற்கடலைக் கடைந்த போது வாசுகி கக்கிய "காலம்" என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய "ஆலம்" என்னும் விஷமும் சேர்ந்து வந்த ஆலகால விஷத்தைக் கண்டு அதன் உக்கிரத்தால் அஞ்சிய தேவர்களையும் அசுரர்களையும் பரமேஸ்வரன் உலக நன்மைக்காகத் தான் விழுங்க எண்ணித் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அதை எடுத்து வரச் செய்கிறார். அது ஒரு கருநாவல்பழம்போல் உள்ளது. அதை வெளியே வீசினாலும் சரி, ஆண்டவன் உண்டாலும் சரி, சகல உயிர்களுக்கும் ஆபத்து. ஆகவே ஈசன் "விஷாபகரணமூர்த்தி" ஆகி விஷத்தை முழுங்க அம்பிகைத் தன் தளிர்க்கரங்களால் அதைத் தடுத்து விஷம் உள்ளே போகாதவாறு கண்டத்திலேயே அடக்குகிறாள். விஷத்தை உண்ட ஈசன் "விஷாபகரணமூர்த்தி" என்று அழைக்கப் பட்ட மாதிரி அன்னை அகிலத்தோர் வாழ்வை அமுதம் ஆக்கியதால் "அமுதாம்பிகை" என அழைக்கப் படுகிறாள். அபிராமி அந்தாதியில்
"பொருந்திய முப்புரை செப்புரைசெய்யும் புணர்முலையால்
வருத்திய மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே" என்று அபிராமி பட்டர் இதைத் தான் கூறுகிறார். அன்று முதல் திருநீலகண்டனான ஐயன் கைலாயம் செல்லும் வழியில் விஷம் உண்ட மயக்கம் தீர அம்மை மடியில் படுத்து இளைப்பாறுகிறார். அந்த அரியக் காணக் கிடைக்காத காட்சியைத் தான் நேற்று கண்டு வந்தோம். அன்னை மடியில் ஐயன் படுத்திருக்கச் சுற்றி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பிரான், நாரதர், மார்க்கண்டேயர், இந்திரன், சந்திரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கெளதமர், தும்புரர், வஸிஷ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி, எல்லாரும் இருக்கிறார்கள். மரகதாம்பிகை சன்னதி தனியாக இருக்கிறது. மற்றபடி காமதேனு, கற்பகவிருஷம், மற்ற மூர்த்திகளுடன் தட்சிணாமூர்த்தித் தன் மடியில் அன்னையுடன் காட்சி தருகிறார். மற்றக் கோயில்களில் ஞான தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணாதட்சிணாமூர்த்தி, மேதாதட்சிணாமூர்த்தி என்று இருக்கும். இங்கு மட்டும் இடப்பாகத்தில் தன் மனைவியுடன் காணப்படுகிறார்.
"மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்" என்று கோளறு பதிகத்தில் திருஞானசம்மந்தர் இவரைத்தான் சொன்னாரோ என்னவோ?

இந்தத் தலத்தில் பக்தர்களுக்குப் பெருமாள் கோவில் மாதிரிச் சடாரி சாதித்துத் தீர்த்தமும் பிரசாதமாகத் தருகிறார்கள். பகவானின் பாத தரிசனம் இருப்பதால் சடாரியும், மஹாவிஷ்ணுவும் உடன் இருப்பதால் தீர்த்தமும் தருவதாய்ச் சொல்லுகிறார்கள். சென்னை கோயம்பேட்டில் இருந்துப் புத்தூர் செல்லும் பேருந்துகள் சுருட்டப்பள்ளியில் நிற்கும் என்று சொன்னார்கள். இங்கிருந்துதான் ஆந்திர எல்லை ஆரம்பிக்கிறது. கோவிலும் ஆந்திர மாநில அறநிலையத் துறை வசம்தான் இருக்கிறது. தரிசனம் செய்யப் பணம் நிறைய ஆகிறது. பிரதோஷ நாளில் போனால் தர்ம தரிசனம் கிடையாது. ஒரு ரூபாய் ஒருவருக்குச் செலுத்திப் போய்ப் பார்க்கவேண்டும்.
அதைத் தவிரச் சிறப்புத் தரிசனம் ஒருத்தருக்கு ரூ.50/ என்று வைத்திருக்கிறார்கள்.
-கூகூகூகூகூகூகூகூகூட்ட்ட்ட்ட்ட்ட்டடடடடடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தாங்கவில்லை. என்னால் பிரதோஷ அபிஷேகம் முடியும் வரை நிற்கமுடிந்தது. மஹாதீப ஆராதனைக்கு நிற்கமுடியவில்லை. கூட்டத்தில் மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது. ஆகவே தரிசனம் மட்டும் போதும் என்பவர்கள் சாதாரண நாளில் போவது உத்தமம். பொதுவாக நான் கோவில்களுக்கு சாதாரண நாளில் தான் போவேன்.
நேற்று அப்படி முடியவில்லை.

சங்கரன் கோவில்
கோமதி மகிமையில் பாரதியார் கூறுகிறார்.

"இக்கடலதனகத்தே-அங்கங்
கிடையிடைத் தோன்றும்புன்குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள்:-திசைத்
தூவெளியதனிடை விரைந்தோடும்,
மிக்கதோர் வியப்புடைத்தாம்-இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி, கண்டீர்,
மெய்க்கலை முனிவர்களே!-இதன்
மெய்பொருள் பரசிவன், சக்தி கண்டீர்!

எல்லையுண்டோ இலையோ?-இங்கு
யாவர் கண்டார் திசை வெளியினுக்கே?"
இந்தப் பாட்டை அவர் முடிக்கவில்லை. காரணம் அவர் கண்ட காட்சியில் அவரால் மேற்கொண்டு விளக்க முடியாமல் போனதோ என்னவோ? ஆனால் கோமதி அம்மனுக்காக அவர் எழுதிய வார்த்தைகள் இங்கும் பொருந்துகின்றன.

ஓம் நமச்சிவாய:

17 comments:

 1. நல்ல தரிசனம் அதுவும் சனிப்பிரதோஷ்ம் கொடுத்து வைத்தவர் நீங்கள். எனக்கும் ஒருமுறை போகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது .ஊரிலிருந்து வந்தவுடன் செல்லவேண்டும். எவ்வளவு கி.மீ சென்னயிலிருந்து.? போனவாரம் மயிலை இந்த வாரம் கயிலை. ஜமாயுங்கள். தி ரா ச

  ReplyDelete
 2. எத்தனை மைல்னு சரியாத் தெரியலை. அநேகமாக 50 கி.மீ.க்குள் இருக்கும்னு நினைக்கிறேன். சாதாரண நாளில் போனால் நிதானமாகத் தரிசனம் செய்யலாம். ஒருமுறை போய்வாருங்கள்,குடும்பத்துடன். பிரதோஷக் கூட்டம் பரவாயில்லை என்றால் அன்றே போகலாம். முதல் முதல் இந்தக் கோவிலில் தான் பிரதோஷ பூஜை ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள்.

  ReplyDelete
 3. பிரதோஷ கூட்டத்துல தைரியமா போய் தரிசனம் பண்ணின உங்களின் பக்தியை மெச்சுகிறேன்.(வயசானாலும் பரவாயில்லைன்னு தைரியமா போயிருக்கீங்க) நான் ஒரே ஒரு வாட்டி தான் பிரதோஷத்துக்கு போயிருக்கேன், அது தான் கடைசி தடவை, ஆனாலும் நம்ம மக்களுக்கு பக்தி அதிகமாயிடுச்சு, கூட்டம் நெட்டித் தள்ளிடுச்சு.

  ReplyDelete
 4. நிஜமாகவே உங்களைப்பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு. என்னால இந்த மாதிரி எல்லாம் இப்போ போக முடியறது இல்லை. ஒரு தடவை திருவெற்றியூர் புற்றிஸ்வரர் பற்றி எழுதுங்கள். நான் திருவெற்றியூரரில் தங்கியிருந்த போது போக தவரினதில்லை.

  ReplyDelete
 5. //"தென்னாடுடைய சிவனே போற்றி!
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!"//
  என்ன இந்த வாரம் சிவ, "சிவா" வாரமா...

  ReplyDelete
 6. வேதா,
  எனக்கு வயசாயிடுச்சுனு சந்தடி சாக்கிலே சொன்ன உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்குத் தண்டனையாக எனக்குத் தினம் 10 பின்னூட்டங்கள் வீதம் ஒரு மாதத்துக்கு அனுப்ப வேண்டும். ஒரு 16 வயசுப் பொண்ணைப் போய் வயசாச்சுங்கறீங்க!

  ReplyDelete
 7. கண் வைக்காதீங்க ஸ்ரீதர்!:-)
  வாங்க, முதலிலே வந்திருக்கீங்க. திருவொத்தியூர் கோவிலுக்குப் போயிருக்கிறேன். அப்போ ப்ளாக் எல்லாம் எழுதலை. பார்க்கலாம். வடிவுடை அம்மன் மனசு வச்சா நடக்கும்.

  ReplyDelete
 8. சிவ, சிவா,
  சிவாவே இப்படிக் கேட்கலாமா?

  ReplyDelete
 9. அப்புறம் TRC Sir,
  அடையாறிலிருந்து பூந்தமல்லி, திருவள்ளூர், பின் ஊத்துக்கோட்டை அங்கிருந்து 2வது கிலோ மீட்டரில் சுருட்டப்பள்ளி இருக்கிறது. 60 கி.மீ. இருக்கும்.

  ReplyDelete
 10. நன்றி வழி சொன்னதற்கு. கூட்டம் இல்லாத நாளில்குடும்பத்துடன் போகலாம் என்று இருக்கிறேன்.போகும்போது சொல்லுகிறேன். திரா ச

  ReplyDelete
 11. அது ஒன்னும் இல்லீங்க எனக்கு 13 வயசு தான, அதனால உங்களுக்கு வயசாச்சுன்னு சொன்னேன், 16 தானே பெரிசு:)
  //இதற்குத் தண்டனையாக எனக்குத் தினம் 10 பின்னூட்டங்கள் வீதம் ஒரு மாதத்துக்கு அனுப்ப வேண்டும்//
  அப்ப ஒரு மாசத்துக்கு அப்புறம் உங்க உண்மையான வயச சொல்வீங்களா?

  ReplyDelete
 12. சீக்கிரம் போயிட்டு வாங்க சார், பக்கத்திலே இன்னும் நிறையக் கோவில் இருக்கு,. சிலது எழுதி இருக்கேன்.

  ReplyDelete
 13. வேதா, வேதா, வேதா, வேதா, வேதா, வேதா, வேதா, வேதா,
  ஒண்ணும் இல்லை வார்த்தையே வரலை. உண்மையான வயசா? நானா? எத்தனை தரம் சொல்றது? 16 வயசுன்னு.

  ReplyDelete
 14. உங்கள் பதிவைக் கண்டவுடன் நாமே பிரதோஷ நேரத்தில் சிவதரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என நினைக்கிறேன். நான் சென்னையில் இருந்தபோதெல்லாம் இந்தக் கோவிலைப் பற்றி தெரியவில்லை. இப்போது இவ்வளவு கூட்டம் என்று வேறு சொல்கிறீர்கள். அடுத்த சென்னை விஜயத்தில் கண்டிப்பாக போக வேண்டும்.

  ReplyDelete
 15. என் ப்ளாக் கிட்டயே வரமாட்டேங்கறீங்களே, உங்க வயச பத்திக் கேட்டதனால கோவமா? நானும் கோவில் பத்தி எழுதியிருக்கேன், கொஞ்சம் வந்து எட்டிப் பாருங்க:)

  ReplyDelete
 16. முதல் வருகைக்கு நன்றி மணியன். இந்தக் கோவிலுக்குப் போவது என்றால் சாப்பாடு எல்லாம் தயார் செய்து எடுத்துப் போங்கள்.

  ReplyDelete
 17. வேதா, ஒரு பத்து நாளாத் தான் உங்க வலைப்பூவிற்கு வரவில்லை. இதோ இப்போ போயிட்டு வந்துட்டேன். எட்டி என்ன? நல்லாவே பார்த்தேன். நீங்க சொல்ற கோவில் எல்லாம் இன்னும் நான் பார்க்கலை.

  ReplyDelete