![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLb7mHZZI65Vlt6yMM7NwWFQvQloDKQ3Q0AqRAjGkPT6ud_JHbrqHXa7t4wTRr3UB05iqCAaa27SLw4XHy784zIoWtBkJfyHv6dAin0d_5xxuLlLlEATGdEtwseyuqWz70LHvN/s320/images.jpg)
அருணகிரிநாதர் எழுதிய "கைத்தல் நிறைகனி..." பாடல், சிவராஜயோகத்தை சார்ந்தது.
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
அக வழிபாட்டிலும் இது சித்தர் முறையிலான சிவராஜ யோகத்தை சேர்ந்தது. இதை அறிந்தவர் மிகவும் குறைவு. எங்காவது ஒன்றிரண்டு பேர் உண்மையில் இதை அறிந்தவராக இருப்பர்.
மேலெழுந்தவாரியாக இதில் உள்ள யோக விளக்கத்தை சொல்ல ஆசைப்பட்டேன். தகுதி இல்லையானாலும் ஆசையின் உந்துதலாலும், இங்கிருக்கும் அன்பர்களுடன் ஏதாவது அளவளாவ விருப்பம் கொண்டதாலும் எழுதுகிறேன். சிவயோகமெனில் என்ன என்பது குறித்து ஒரு மேலெழுந்தவாரியான ஒரு idea கிடைக்கும் என்று நம்புகிறேன். மற்றபடி வேறு உபயோகம் ஒன்றும் இருக்காது. (வழக்கம் போலவே).
இது ஒரு சாராரின் வழி. (One school of thought). கண்டிப்பாக அனைவரும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்று தெரிந்துக் கொண்டால் தவறேதுமில்லை அல்லவா?
கைத்தல நிறைகனி, அப்பமோடு அவல் பொரி கப்பிய கரிமுக
நான்குவிதமான உணவுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
1. கனி
2. அவல்
3. பொரி
4. அப்பம்
அப்படியே உண்ணும் கனி; இடித்து உண்ணும் அவல்; பொரித்து உண்ணும் பொரி; சமைத்து உண்ணும் அப்பம் என நான்கு விதம். ஔவையாரும் பால், தேன், பாகு, பருப்பு என இதே போல் நான்கு விதமாக கூறுயிருக்கிறார் பாருங்கள்.
சிவயோகத்தில் நான்கு விதமாக எல்லாம் வல்ல பரசிவனுக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
யோகத்தில் சரியை = கனி
யோகத்தில் கிரியை = அவல்
யோகத்தில் யோகம் = பொரி
யோகத்தில் ஞானம் = அப்பம்
யோகத்தில் சரியை:
யோகத்தில் தூல உடலில் செய்யபடும் முதல் நிலை பயிற்சி பக்குவம் ஏதுமின்றி அப்படியே செய்யப்படுகிறது. இதில் உடலும் நாடிகளும் சுத்தமாகின்றன். உள்ளிருக்கும் பரமனுக்கு பலன் அப்படியே அளிக்கப்படுகிறது. ஸ்தூல பஞ்சாக்ஷரி என்பது இங்கே மந்திரமாகிறது. ஒவ்வொரு எழுத்தையும் எப்படி ஸ்தாபிப்பது எனும் வல்லமை முழுமை பெற்றவரால் தரப்படுகிறது. மூச்சை வாசியாக்குவதும், சுழுமுனை அறிவும், அதன் திறப்பும், மனதை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதலும் பெரியவர்களின் திருவுளத்தால் பயிற்சியாளர் உடனே பெறுகின்றனர். அதனால் தான் இப்பயிற்சி சாத்தியமாகிறது. இதையே தீக்ஷை எனும் சொல்லால் குறிப்பிடுகின்றனர்.இந்த முதல் நிலை பயிற்சியை சாம வேதம் என்று குறியீடாக சொல்வர். இதில் காண்பான், காணப்படும் பொருள், காண்பது மூன்றும் அறியப்படுகிறது.
இந்த பயிற்சியின் விளைவால் ஏற்படும் பலன் கனியை ஒக்கும். அதை உள்ளிருக்கும் பரமனுக்கு அர்ப்பணிப்பதே கனியை புசித்தல் என்பதாகும். கைத்தலம் என்பது உள்ளங்கை. அது அபயத்தை குறிப்பது. இந்த முதல் பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலனை சாதகன் அர்ப்பணிக்கும்போது பயம் குறைய ஆரம்பிக்கிறது. விதை, தோல் என எதையும் விடாமல் யானை விழுங்குவதை போன்று நாம் அர்ப்பணித்ததை இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.
யோகத்தில் கிரியை:
யோகத்தில் சூக்கும (சூக்ஷும) உடலில் செய்யும் இரண்டாம் நிலை பயிற்சி சிறிது பக்குவம் பெற்ற பிறகு கிடைக்கிறது. அரிசி இடிக்கப்படு அவலாவதை போன்று.
"ஆடிப் பொற் சுண்ணம் இடித்து நாமே" என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடும் நிலையாக இதை சிவயோகிகள் குறிப்பிடுவர்.சூக்ஷும பஞ்சாக்ஷரி இங்கே மந்திரமாகிறது. பிராணவாயு சுழுமுனையில் பிரவேசிக்க ஆரம்பித்தவுடன் சாதகன் இந்த இரண்டாவது தீக்ஷையை பெறுகிறார் என்று சொல்லப்படுகிறது. ஆதாரங்களும், வழியும் குருவின் வல்லமையால் சாதகன் நேரடியாக அறிகிறான். அந்த ஆதாரங்களிலும், வழியிலும் வாயுவை கொண்டு செய்யக் கூடியதை செய்யும் திறனை குருவால் பெறுகிறான் என்று கூறப்படுகிறது. அப்படி செய்து அதனால் விளையும் பலனை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறான். இதில் அவனால் அளிக்கப்படும் பலனில் கனியில் இருப்பது போல விதையோ, ஓடோ, தோலோ இல்லை. எனவே இதில் இறைவனுக்கு அளிப்பது இன்னும் உயர்வானதாக இருக்கிறது. அப்படி அளிக்கப்படும் சாதகனுக்கு அச்சம் பெருமளவில் நீங்க தொடங்குகிறது. இருவகை செல்வமும் கிட்ட ஆரம்பிக்கிறது. இதைதான் குசேலர் அவல் தந்த கதையாக சொல்லப்படுகிறது என்று இவர்கள் கூறுகின்றனர்.
அடுத்து...)
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் இன்னும் கொஞ்சம் புரிகிறாற் போல இருக்கிறது. ஸ்ரீகாழியூரரின் விளக்கத்துடன் சேர்த்து உங்கள் புரிதலையும் தரலாமே கீதாம்மா? என்னைப் போன்றோருக்கு உபயோகமாக இருக்குமே.
ReplyDeleteஇதை உன்னிப்படித்து சிந்திப்பதே உபாசனை. அதனால் நீங்களே யோசியுங்க!
ReplyDeleteகவிநயா, உண்மை, திவா சொல்லுவது. கொஞ்சம் யோசியுங்களேன், முடியாதது ஒன்றில்லை, மேலும் என்னோட புரிதலைக் கொண்டு நீங்கள் புரிந்து கொள்வது, இதில் எந்த அளவு உங்களுக்குப் பயன் இருக்கும்?? இல்லையா? மெயில் போடுகின்றேன், கொஞ்சம் சாவகாசமாய்.
ReplyDelete