எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 27, 2008

திருமணத் தம்பதிகளை வழிப்பறி செய்தவன் யார்? - 1

தென் தமிழ்நாட்டிலே பாண்டியநாட்டுத் தலங்களிலே, சிவனுக்கென நவ கைலாயங்களும், விஷ்ணுவுக்கென நவ திருப்பதிகளும், தாமிரபரணிக் கரையோரமாய் அமைந்துள்ளது. இவை அனைத்தையுமே சென்ற வருடம் சென்று பார்த்துவிட்டு வந்தோம், திருநெல்வேலியிலே தங்கிக் கொண்டு. முதலில் நாங்கள் போனது நவ திருப்பதிகள் தான். எல்லாமே தாமிரபரணிக் கரை தான். எல்லாத் திருப்பதிகளுமே திருக்குறுங்குடித் தொழிலதிபர் ஆன டி.வி.எஸ். சுந்தரம் அவர்களின் குடும்பத்தினரால் பரம்பரையாக நிர்வாகம் செய்யப் படுவதால் மிக மேன்மையான நிர்வாகமும், சுத்தமான கோயில்களுமாய் நன்றாகவே இருக்கின்றன. என்றாலும் இவற்றைப் பற்றி இன்னமும் எழுதவில்லை, அதற்குக் காரணம் தாமிரபரணியின் வரலாறு சரியாகத் தெரியாத காரணத்தாலேயே. இப்போக் கொஞ்சம் தேடிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். கூடிய சீக்கிரம் கிடைக்கும் எனவும் நம்பிக்கை இருக்கின்றது. அதற்கு முன்னோடியாக இப்போது எழுதப் போவது திருநாங்கூர் திவ்யதேசங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம். மொத்தம் பதினோரு திவ்யதேசங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாய் நான் பார்க்க நினைத்தது திருவாலி, திருநகரி திவ்ய தேசங்களே. திருமங்கை ஆழ்வாரின் சரித்திரத்தோடு தொடர்புடைய தலங்களில் இது முக்கியமானது.
***********************************************************************************

சோழவளநாடு. அங்கே ஒரு சிற்றூர் திருக்குறையலூர் என்ற பெயரில். ஊரில் தான் குறை என வருதே தவிர, முற்றிலும் குறையற்ற அந்த ஊரில் ஆலிநாடர் என்ற ஆண் மகன் ஒருவர் சோழநாட்டின் படையில் இருந்தார். அவரின் மனைவி பெயர் வல்லித் திரு ஆகும். இருவருக்கும் பிள்ளைக்கலி தீர்க்கத் தோன்றினான் ஒரு பிள்ளை. இந்தப் பிள்ளை வளர்ந்து பெரிய மனிதன் ஆகி அந்த ஈசனையே ஆட்டி வைக்கப் போகின்றான் என அறியாத பெற்றோர் அவனுக்கு நீலன் எனப் பெயரிட்டனர். மகன் வளர்ந்தா. ஒரு குறையுமின்றி அனைத்துக் கலைகளும் கற்றுத் தேர்ந்தான், முக்கியமாய்ப் போர்க்கலை. மொழியறிவும், நூலறிவும் மிகுந்திருந்த அந்தப் பிள்ளைக்கு இயல்பாகவே கவி பாடும் திறனும் சேர்ந்து கொண்டது. சோழநாட்டு மன்னன் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒருவனைச் சும்மா விடலாமா என எண்ணிக் கொண்டு அவனைத் தன் படைத்தலைவனாகவும் ஆக்கிக் கொண்டான்.

மன்னன் சேவையிலும் குறையேதும் வைக்கவில்லை, குறையலூர்ப் பிள்ளை. மிகத் திறத்துடனேயும், வீரத்துடனேயும் இருந்து வந்தான். பகைவரை எளிதில் வென்ற அவனுக்கு மன்னன் "பரகாலன்" என்ற பட்டப் பெயரையும் அளித்துச் சிறப்பித்ததோடு அல்லாமல், அவன் பிறந்த அந்த நிலப் பகுதிக்குத்திருவாலிநாடு என்ற பெயரோடு அந்த நீலனையே சிற்றரசனாக்கி மகிழ்ந்தான். சிற்றரசன் ஆன நீலனும் மன்னன் சேவையில் மனமகிழ்ந்திருந்த நேரம். எல்லாமும் நன்றாக எத்தனை நாட்கள் இருக்கும்?? மாறுதல் ஒன்றைத் தவிர மாறுதலுக்கு உட்பட்டவையே அனைத்தும் அல்லவா??

மேலும் நீலன் "நாற்கவிப்பெருமாள்" என்பவரை வாதத்திலும் வென்று அவனுடைய நாற்கவி என்ற பட்டத்தையும் தனக்குரியதாக்கிக் கொண்டு விட்டானே?? இனி என்ன பாக்கி?? திருமணம் தான் பாக்கி. நீலனுக்கும் திருமண ஆசை வந்துவிட்டது. ஆனால் அவனுக்கு நிகரான பெண்ணரசி எங்கே பிறந்துள்ளாளோ?? சாதாரணப் பெண்ணை அவன் மணக்க முடியுமா?? தெய்வீக மங்கை ஆன சுமங்கலை என்பவள் ரிஷி ஒருவரைக் கேலி பேசியதால் கிடைத்த சாபத்தால் பூலோகப் பெண்ணாக வாழ வந்தாள். அவள் தாயின் கருவிலே தோன்றாமல் திருநாங்கூர் என்னும் ஊரில் உள்ள ஒரு அல்லித் தடாகத்தில் குழந்தையாய்த் தோன்றி இருந்தாள்.
அவளை மருத்துவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்தார். அல்லி மலரில் தோன்றிய அல்லியை விட மென்மையான மங்கைக்குக் குமுத வல்லி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார் மருத்துவர். குமுதவல்லியை ஒருநாள் பார்த்தான் திருவெள்ளக் குளம் வந்த நீலன். குமுதவல்லி தேவலோகப் பெண்ணாய் இருந்த போது வைகுந்தவாசனின் வைகுந்தத்தில் அவனருகில் சாமரம் வீசும் பணியைச் செய்து கொண்டிருந்தமையால் இப்போதும் அவளுக்குத் திருமாலின் மேல் அளவு கடந்த பற்று இயல்பாகவே இருந்து வந்தது.

குமுதவல்லியைக் கண்டதும் அவள் மீது கரைகாணாக் காதல் கொண்ட திருமங்கை மன்னனோ மணந்தால் குமுதவல்லி, இல்லையே திருமணம் வேண்டாம் எனச் சொல்ல, குமுதவல்லியின் வளர்ப்புத் தந்தையிடம் பெண் கேட்டுச் சென்றனர். குமுதவல்லியோ, தான் தீவிர வைணவர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாயும், பன்னிரு திருமண் தரித்து, வைணவ இலச்சினையும் பெற்று, வந்தால் திருமணம் செய்து கொள்வதாய் நிபந்தனை விதிக்க, நீலனும் அதற்குக் கட்டுப்பட்டு திருநரையூர் நம்பியிடம் வைணவ இலச்சினைகள் பெற்று, பன்னிரு திருமண்ணும் தரித்து வைணவக் கோலத்தில் வர, குமுதவல்லியோ, தான் மேற்கொண்டிருக்கும் நோன்பு முடிய ஓராண்டு ஆகும் எனவும், அதுவரை தினமும் ஆயிரம் பேருக்கு உணவு அளிக்கும்படியும் நீலனிடம் சொல்ல நீலன் குமுதவல்லியின் மீதுள்ள மிதமிஞ்சிய ஆசையில் அதற்கும் கட்டுப் படுகின்றான். விருந்துகள் ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளும் நீலனின் அரண்மனையில் ஆயிரம் வைணவர்களுக்கு விருந்து.

7 comments:

 1. சூப்பரு, தொடர் எழுதறதுல உங்களை மிஞ்ச முடியாது போல...

  ReplyDelete
 2. ம்ம். அப்புறம்?

  //மாறுதல் ஒன்றைத் தவிர மாறுதலுக்கு உட்பட்டவையே அனைத்தும் அல்லவா??//

  சரிதான். ஆனா உங்க ப்ரொபைல பாத்தா உங்க ஆசை இதுக்கு மாறா இல்ல இருக்கு?

  ReplyDelete
 3. ம்... அப்புறம்? சீக்கீரம் சொல்லுங்க கீதாம்மா :)

  ReplyDelete
 4. //தாமிரபரணியின் வரலாறு சரியாகத் தெரியாத காரணத்தாலேயே. இப்போக் கொஞ்சம் தேடிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். கூடிய சீக்கிரம் கிடைக்கும் எனவும் நம்பிக்கை இருக்கின்றது.//

  ஹிஹி, சீ சீ இந்த பழம் புளிக்கும்னு சொல்லிச்சாம் ஒரு நரி. :p

  //ஆனா உங்க ப்ரொபைல பாத்தா உங்க ஆசை இதுக்கு மாறா இல்ல இருக்கு?//

  புரபைல் மட்டும் தானா? இன்னும் நிறைய இருக்கு திவாண்ணா. :))

  கதை நல்லா இருக்கு. கேஆரெஸ் கிட்ட காப்பி ரைட்ஸ் எல்லாம் வாங்கியாச்சா? :))

  ReplyDelete
 5. mmmmm,உங்களை எல்லாம் மாதிரி எழுத முடியாதே, அதான் இப்படியாவது எழுதலாமேனு! :P

  @திவா,
  சொந்தமாய் நினைப்பதற்கும், இதுக்கும் வேறுபாடு இருக்கே??? என்னோட அடிப்படைக் குணம் என்னவோ அது மாறாமல் அப்படியே இருக்க விரும்பறேன்னு அர்த்தம் ஃப்ரொபைலில் இருக்கிறதுக்கு! ஓகேயா???

  ReplyDelete
 6. @கவிநயா, இந்தக் கதை அத்தனை த்ரில்லிங்கா இல்லைனு சிலர் கருத்து, அதான் கொஞ்சம் இடைவெளி விடறேன். :))))

  @அம்பி, புத்தகமும் அனுப்பலை, இதிலே பேச்சு வேறேயா?? இருங்க, நீங்க கொடுக்கலைனா எனக்குப் புத்தகமே கிடைக்காமலா போகும்?? கேஆரெஸ் கிட்டே காப்பிரைட் மட்டுமில்லை, இதற்கான யூட்யூபே வரபோகுதே?

  ReplyDelete
 7. // என்னோட அடிப்படைக் குணம் என்னவோ அது மாறாமல் அப்படியே இருக்க விரும்பறேன்னு அர்த்தம் ஃப்ரொபைலில் இருக்கிறதுக்கு! ஓகேயா??? //

  ஓகேதான். அது உங்க விருப்பம். அப்படி யாரும் இருக்க முடியாதுன்னுதான் நீங்களே எழுதிட்டீங்களே!
  :-))

  ReplyDelete