அங்கே புயல் என்றால் நம்ம ஊரில் வர மாதிரி இல்லை. ஊரே காலி பண்ணும்படி இருக்கும். காற்றின் வேகமும் அதிகம். மின்சாரமும் கிடையாது. முன்னராகவே மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள். குறைந்த பட்சமாய் 4,5 நாளைக்காவது சமைத்து வைத்துக் கொள்ளவேண்டும், அங்கேயே இருக்கும் பட்சத்தில். காபி, டீ, பால் போன்ற சூடான பானங்களோ, உணவைச் சுட வைத்துச் சாப்பிடுவதோ முடியாது. மின்சாரம் இல்லை என்றால் அடுப்பே இல்லையே?? யு.எஸ்ஸில் மிகச் சில இடங்களில் தான் எரிவாயு அடுப்புக்கள் உள்ளன. அட்லாண்டா அம்மாதிரியான ஒரு நகரம். மற்ற இடங்களிலும் எங்கேயே தேடிப் பார்த்தால் ஒரு சில குடியிருப்புகளில் கிடைக்கலாம். மற்றபடி எல்லாவற்றுக்கும் மின்சாரம் தான். தண்ணீரும் கிடைக்காது. ஊரெல்லாம் தண்ணீரில் மிதக்கும்போது குடிக்க நல்ல தண்ணீர் தேவையானதைப் பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். அடுப்பு மூட்ட முடியாது. மண்ணெண்ணை கிடைக்காது. கிடைத்தாலும் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் மூட்ட முடியாது. காற்றின் வேகத்தில் வீடுகள் தாக்குப் பிடிப்பதே அதிசயம்.
ஒரு சில இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் பிய்த்துக் கொண்டு வருவதுண்டு. ஆனால் சென்ற வருஷம் நாங்கள் இருந்தபோது இந்த ஹரிகேன் எங்களை ஏமாற்றி விட்டது என்றே சொல்லலாம். ஆனால் வந்திருந்தால் ஊருக்குத் திரும்பி இருக்க முடியுமா சந்தேகமே. விமானம் புறப்பட்டிருக்க முடியாது. அந்த வகையில் சரிதான் என்றாலும், இந்த வருஷம் செப்டம்பரில் ஐக் ஹரிகேன் வந்தே விட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz118vLGdhfaCtOv7IIATbnnPLOwLKJJhHzELWmvp0nwsgVVzqK8e9n-Rcd9kulWE3mngPRvUzaA1XI7nCPHZewfeG0lcWvv5dwp71j8AhqqiNkKFyf75uGLaIA8wOUYk_ZceJ/s320/18_68_091308_ikemorning.jpg)
ஹூஸ்டனில் எங்கே பார்த்தாலும் தண்ணீர். பக்கத்தில் உள்ள கால்வெஸ்டன் அநேகமாய்க் காலி செய்து விட்டார்கள். சென்ற வருஷம் தொழிலாளர் தினத்துக்கு முதல் நாள் தான் அங்கே போய் பீச், கடல் என்று எல்லாவற்றையும் சிறியதொரு கப்பலில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்தோம். அந்த ஊர் இப்போது பார்க்கும் கோலத்தில் இல்லை. ஹூஸ்டனில் உள்ள எங்கள் பையருக்கு நேற்றுத் தொலைபேசி அழைப்புக் கொடுத்த போது அழைப்பே போகவில்லை. தொலைபேசிக்கு என இருந்த டவர் விழுந்துவிட்டதாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiApEJ1dI33mc4A0gPEbH8VQ7kIVg3dsDkTNnoE6CaYHfB3HLCR8c-tpDMyXrRpJDgxcBYRxdr3N25Ndh3VeozEwFJiFYjfj3jzEVwrcGEG8cOy1et9UifkalrI1YrfmafGYpQp/s320/12_68_c320Houston.jpg)
செல் பழக்கமே இல்லாமல் இருந்த எங்களுக்கு இப்போது அவசரத்திற்கு அது தான் கை கொடுக்கின்றது என்று சொல்லலாம். செல்லில் தண்ணீர் புகுந்துவிடும் என்று வீட்டில் வைத்துவிட்டுச் சென்றிருந்ததால், செய்தியைப் பதிவு செய்து வைத்தோம். பின்னர் இரவு வெகு நேரம் கழித்துத் தொடர்பு கொண்டு பேசினார். அவங்க அபார்ட்மெண்டில் தண்ணீர் வந்தது தவிர வேறு தொந்தரவு இல்லை என்றாலும் பக்கத்து ப்ளாகில் உள்ள கட்டிடத்தில் ஜன்னல்கள் விழுந்து, அதுவும் வீட்டுக்குள் விழுந்திருக்கும் போலிருக்கு. ஒரே அமர்க்களமாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfr36TncypjlQ2yt38-wjlgqvnJcfCcaosj-7CHSwghRIkBhPAT_Cm9UhqXHCiimz4UlBrGykZlmE92RkTxrS2ebnmTWfm5yRu5yrpVn0FrPk3jU5WFdzRCIuNPmt7t9_xJCWr/s320/0_68_091408_ike6_320+hurricane.jpg)
இப்போ ஹூஸ்டனில் curfew அறிவிப்புச் செய்திருக்கின்றனர். ஒன்றரை மில்லியன் மக்களுக்கு மேல் மாட்டிக் கொண்டு தவிப்பதாயும் சொல்கின்றனர். எங்க பையரும் அதில் ஒருவர். :(((((((( இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். அவர்கள் துன்பம் தீரப் பிரார்த்திப்போம்.
கவலைப்படாதீங்க, உங்க பையர், குடும்பத்துடன் நலமாக இருப்பார்.
ReplyDeleteகவலை வேண்டாம்....நிச்சயமாக நல்ல படியாக இருப்பார்.
ReplyDeleteஉங்க உடம்பு படுத்தறது ஏன்னு இப்பதானே தெரியுது.
ReplyDeleteநாராயணன் இருக்கான். பாத்துப்பான்.