எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 06, 2008

கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்- 7


அம்பி சுக்லபட்ச சதுர்த்திக்கும், சங்கட சதுர்த்தி விரதம் இருக்கும் கிருஷ்ணபட்ச சதுர்த்திக்கும் உள்ள முக்கியத்துவம் பற்றிக் கேட்டிருந்தார். பொதுவாய் சுக்கில பட்சத்தில் சந்திரன் வளர ஆரம்பிப்பான். அமாவாசை கழிந்த நான்காம் நாள் வரும் அந்த சதுர்த்தியில் சந்திரனைப் பார்த்தால், சந்திரன் வளருவது போல் துன்பமும் வளரும் என்பதாலேயே அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்கும்படி சொல்லப் படுகின்றது. அதே பெளர்ணமி கழிந்த நான்காம் நாள் விரதம் இருப்பவர்கள் அன்றைய சந்திரனைப் பார்த்துவிட்டே அன்று விரதம் பூர்த்தி செய்யவேண்டும் என்பதும் எழுதப் படாத விதி. ஏனெனில் சந்திரன் தேய ஆரம்பிப்பான். துன்பமும் அது போல் தேய்ந்து போகும் என்ற நம்பிக்கையும், விரதம் இருக்க வேண்டிய விதியும் அப்படி இருப்பதே காரணம். சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் சங்கட ஹர சதுர்த்தியிலே தான் ஆரம்பிப்பார்கள். சந்திரன் எப்படித் தேய்ந்து போவானோ அதே போல் துன்பமும் தேயவேண்டும் என்பதாலேயே இந்த விரதத்துக்கே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவதுண்டு. ஆவணிமாதச் சதுர்த்தி விநாயகரின் பிறந்த தினமாய்க் கொண்டாடப் படுகின்றது.

இதன் பின்னர் வரும் சங்கட சதுர்த்தியில் இருந்தோ, அல்லது இந்த ஆவணிமாத விநாயக சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, மறு வருஷம் ஆடி மாதம் வரும் மகா சங்கடசதுர்த்தியில் இருந்து, பதினைந்தாம் நாள் வரும் ஆவணிமாத சுக்லபட்ச சதுர்த்தியில் (விநாயக சதுர்த்தி அன்று) விரதம் பூர்த்தி ஆகும். இது மாதிரியும் இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் சங்கட சதுர்த்தி அன்று இரவு மிக மிக தாமதமாய் வரும் சந்திரனைப் பார்த்துவிட்டே உணவு உட்கொள்ள வேண்டும். இது கஷ்டம் என்று நினைப்பவர்கள் மகாசங்கட சதுர்த்தியில் விரதம் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் கழித்து வரும் விநாயக சதுர்த்தியிலும் முடித்துக் கொள்ளலாம். விரதம் இருப்பது என்பது மனத்தூய்மைக்காகவே. உடல்நலக் கேடு உள்ளவர்களால் தொடர்ந்து விரதம் இருக்க முடியாது என்பதால் இப்படி வைத்துக் கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்களையும் விநாயகரோ அல்லது வேறு கடவுளர்களோ ஒன்றும் சொல்லப் போவதில்லை. உடல்பலமும், மனபலமும் உள்ளவர்கள் மேற்கண்ட முறைகளில் விரதம் இருக்கலாம்.
*************************************************************************************

இப்போ இந்த விநாயக சதுர்த்தி ஒரு சமூகப் பண்டிகையாக மாறியது எப்போ என்றால் 1893 லோகமான்ய திலகரால் ஆரம்பிக்கப் பட்டது. அன்று வரையிலும் வீடுகளில் மட்டுமே வணங்கப் பட்டு வீட்டின் கிணற்று நீரிலோ, அக்கம்பக்கம் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கப் பட்ட விநாயகரை, சமுதாய ஒற்றுமைக்காகவும், அனைத்து விழாக்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து ஜாதி, இன வேறுபாடு இல்லாமல் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்டது. மேலும் திலகரின் காலத்தில், ஆங்கிலேயரால் கையாளப் பட்ட பிரித்தாளும் கலை மெல்ல, மெல்ல வெற்றி பெற்று வந்து கொண்டிருந்தது. இது அனைத்தையும் முறியடிக்கவும், பக்தி மார்க்கத்தின் மூலம் மக்களை எழுச்சி பெறச் செய்து சுதந்திர வேள்வியில் பங்கு பெறச் செய்யவுமே இது அவரால் ஏற்படுத்தப் பட்டது. மிக மிகப் பெரிய விநாயகரின் சிலைகளை நிறுவி, மகாராஷ்டிரத்தின் புனே நகரில் முதன் முதல் ஆரம்பிக்கப் பட்ட இந்த சதுர்த்தித் திருவிழா, மெல்ல, மகாராஷ்டிரத்தின் மற்ற நகரங்களுக்கும் பரவி, மகாராஷ்டிராவில் உள்ள அஷ்ட விநாயகர் கோயில்களிலும் பிரசித்தி பெற்று, இன்று மகாராஷ்டிரத் தலை நகர் ஆன மும்பையின் மிகப் பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகின்றது. எனினும், நம் தமிழ்நாட்டில் ஒரு சில சமூகத்தினரே வீதியில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்திவிட்டு, அந்த விநாயகரை அன்றே நீர்நிலைகளில் கரைத்து வந்தனர்.

ஊடகங்களின் விளைவுகளாலும், மக்கள் அங்குமிங்கும் இடம் பெயர்ந்த காரணத்தாலும் இன்று விநாயக சதுர்த்தி நம் தமிழ்நாட்டிலும் பெருமளவில் சமூக விழாவாய்க் கொண்டாடப் படுகின்றது. மகாராஷ்டிரத்தில் 10 தினங்கள் நடைபெறும் இந்த விழா இங்கே 5,7, 9 நாட்களில் ஒவ்வொரு குழுவினர் ஒவ்வொரு நாள் என்று அரசு அறிவிப்புக்கு ஏற்ப விழாவை முடிக்கின்றனர். இந்த விநாயகர் பரவலாய் நம் நாடுமுழுதுமே வணங்கப்படும் ஒரு தெய்வமாய் இருந்து வருகின்றார். எவ்வளவு சிறிய கிராமமாய் இருந்தாலும் கிராமத்தின் நுழைவாயிலிலோ, அல்லது கிராமத்தின் குளக்கரை அல்லது ஆற்றங்கரையிலோ ஏதேனும் ஒரு மரத்தடியில் விநாயகர் உட்கார்ந்திருப்பார். இந்தியாவைத் தவிர, வெளிநாடுகளில் விநாயகருக்கெனத் தனிக் கோயில்கள் உள்ளன. அவற்றில் நேபாளத்திலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், யு.எஸ்ஸிலும் குறிப்பிடத் தக்க வகையில் அமைந்துள்ளன. இத்துடன் விநாயகர் விஸர்ஜனம் பெறுகின்றார். விநாயகர் பற்றி எழுத நிறைய இருக்கின்றது. அஷ்ட விநாயகர் பற்றியும் எழுத ஆவல். எனினும் இப்போது இதை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

கணபதி பப்பா மோரியா
மங்கல மூரத்தி மோரியா

2 comments:

  1. வாரத்திற்கு நாட்கள் ஏழு எனப்போல, பதிவுகள் ஏழிட்டு, தும்பிக்கையான கெட்டியாக பிடித்துக்கொள்ள செய்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  2. விநாயகர் பற்றியும் விரதங்கள் பற்றியும் விவரமான பதிவுகள் தந்தமைக்கு நன்றி அம்மா.

    ReplyDelete