எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 30, 2008

அழகு தெய்வங்கள்- நவராத்திரி நாயகியர் - 1

நவராத்திரிக்குத் தனிச்சிறப்பு உண்டு. பெண்களுக்கு மட்டுமான பண்டிகை என்றும் சொல்லலாம் என்றாலும், ஆண்களின் பங்கில்லாமல் இது நிறைவேறாது. பெண் தெய்வம் ஆகிய சக்திக்காகவும், அவள் தன் சக்தியால் அசுரத் தனங்களை ஒழித்து வெற்றி கொண்டதைக் கொண்டாடவும் ஏற்படுத்தப் பட்ட பண்டிகை இது. தேவியரின் சக்தியை மூன்று வகையாய்ப்பிரிக்கின்றோம். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூவகைப்படும் சக்திகளின் ஆதிசக்தி ஸ்ரீலலிதை ஆவாள். சக்தி உபாசகர்களால் பெரிதும் கொண்டாடப் படும் இந்த நவராத்திரி , அவரவர் வீட்டு வழக்கங்களின்படியே கொண்டாடப் படுகின்றது. என்றாலும் அம்பாளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவமாய் நினைத்துச் சிறப்பித்து, அந்த, அந்தப் பருவத்திற்கு ஏற்றாற்போல் சிறப்பாக வழிபட்டு அதற்கு உகந்த நைவேத்தியங்கள் செய்து, அலங்காரங்கள் செய்து வழிபடுவது பலராலும் பின்பற்றப் படுகின்றது.

அசுர சக்தி மேலோங்க, மேலோங்க மக்கள் மனதில் பயம் ஏற்படுகின்றது. ஆகவே பயம் போக்கும் துர்கைக்காக முதல் மூன்று நாட்களும், பயம் நீங்கி செல்வம் அடைய லக்ஷ்மியை நினைந்து அடுத்த மூன்று நாட்களும், அறிவையும், ஞானத்தையும் பெறக் கடைசி மூன்று நாட்களையும், முறையே துர்கா, லட்சுமி, சரஸ்வதி வடிவில் வைத்துப் பூஜிக்கின்றோம். இந்த நவராத்திரி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அந்த முறைப்படி ஒவ்வொரு வகையாய்க் கொண்டாடப் படுகின்றது. அண்டை மாநிலம் ஆன கேரளாவில் கடைசி 2 நாட்கள் சரஸ்வதி பூஜையும், அதை அடுத்த விஜயதசமியும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விமரிசையாகக் கொலு வைத்து, பிறரை அழைத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், பரிசுப் பொருட்கள், சுண்டல் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு நாளுக்கும் உகந்த நைவேத்தியமும் பண்ணுவதுண்டு.

ஒரே சக்தியின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே பிரம்மா, விஷ்ணு, ருத்திரனாய்த் திகழ்கின்றது. சத்வ குணம் காக்கும் விஷ்ணுவாகவும், ரஜோ குணம் படைக்கும் பிரம்மாவாகவும், தமோ குணம் அழிக்கும் ருத்ரனாகவும் காட்சி தருகின்றது. சகலருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் அழிக்கும் ஸ்ரீமகாலட்சுமியும் இவளே, அனைவருக்கும் கல்வியையும், ஞானத்தையும் தரும் சரஸ்வதி என்பவளும் இவளே! அச்சப்படுவோருக்கு “நான் இருக்கிறேன்! பயமில்லை, ஜெயமுண்டு!” எனச் சொல்லி பயத்தைப் போக்கி வீரத்தை உண்டு பண்ணுபவளும் இவளே. அனைத்துக்கும் மேலான பரப்பிரும்மமும் இவளே.

இன்றைய நைவேத்தியம் புட்டு. சாதாரணமா வெள்ளிக்கிழமைக்குச் செய்வாங்க. ஆனால் நான் செவ்வாய்க்கிழமையும், நவராத்திரி முதல்நாளுமான இன்னிக்கே செய்துட்டேன். ஏனெனில் வெள்ளிக்கிழமை எல்லாருமே புட்டு செய்வதால் நம்ம புட்டு போணி ஆகாதே! அதான். இது இட்டிலிப் பானையில் வேக வைக்கும் புட்டு இல்லை. அரிசியை ஊற வைத்து சிவப்பாய் வறுத்து, மாவாக்கி, அந்த மாவில் வெந்நீர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து உதிர், உதிராகக் கலந்து ஊற வைத்ததும், 3 மணி நேரம் கழித்து வெல்லம் பாகு உருண்டை உருட்டும் பதத்தில் எடுத்துக் கொண்டு அதில் கலக்கவேண்டும். இது சீக்கிரம் கெட்டுப் போகாது. படம் திராச சார் உபயம், போன நவராத்திரிக்கு அவர் போட்டது. :))))))))

இப்போதைய சேர்க்கை:

நேற்றுத் திங்கள் அன்றில் இருந்து பொதிகைத் தொலைக்காட்சியில் மாலை 6-30 மணிக்கு வேளுக்குடியின் கீதை உபதேசம் வரும் நேரத்தில் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக "பராசக்தியின் பத்து பரிணாமங்கள்" என்ற தலைப்பிலே நிகழ்ச்சித் தொடர் ஆரம்பித்து உள்ளார்கள். கட்டாயமாய்த் தொலைக்காட்சி அந்த நேரம் பார்க்கும் வாய்ப்புடையவர்கள் தவற விடவேண்டாம். அன்னையின் தசமஹா சக்தியைக் குறிப்பிடும் விதமாய் அமைந்த முத்துசாமி தீட்சிதரின் நவாவர்ணப் பாடல்களும், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியும் நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றது. பாடல் பாடுபவர் கெளசல்யா சிவகுமார், தோழிகள். விளக்கமும் கெளசல்யாவே கொடுக்கின்றார். மிக அருமையான விளக்கங்கள். நேற்றுக் காலி என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் அருமை. காலி என்பதே நாம் காளி என்று சொல்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வடமொழியில் "ள" எழுத்துக் கிடையாது. நாம் தான் காளி என மாற்றிக் கொண்டுள்ளோம். தட்சிண காலி என்பதற்கு தென்புறம் என்ற திசையை மட்டும் குறிக்கும் அர்த்தம் இல்லை என்பதையும் நேர்மையான, திறமையான காலத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கவளே காலி என்பதையும் முக்காலத்தையும் அவள் கட்டுப்படுத்தும் விதத்தையும், முத்தொழிலும் புரிகின்றவளே அவள் என்பதையும் நன்கு எடுத்துச் சொன்னார்.

4 comments:

 1. போன வருஷ புட்டா? சரி சரி :)

  பொதிகை பார்க்கும் வாய்ப்பு இல்லையே :( 'காலி' மாதிரி விஷயங்கள அப்பப்ப பதிவுல சேர்த்து விடுங்க :) நன்றி கீதாம்மா.

  ReplyDelete
 2. //படம் திராச சார் உபயம், போன நவராத்திரிக்கு அவர் போட்டது//

  அதானே பாத்தேன். என்னடா நீங்க செஞ்ச புட்டு கூட நல்ல நிறமா வந்ருக்கே?னு எனக்கு ஒரே டவுட்டு. :)))

  முடிஞ்சா உங்க புட்டையும் போட்டோ புடிச்சு போடுங்க பாப்போம். :p

  ReplyDelete
 3. பத்தில்லாத புட்டு...ஹிஹிஹி :)

  ReplyDelete
 4. கவிநயா, ஹிஹிஹி, ஓசிப் புட்டு! காலி மாதிரி விஷயங்கள் என்ன?? மத்ததும் நிறைய வரும். :))))

  @அம்பி, வந்து சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க, எங்க வீட்டுப் புட்டை! நறநறநறநறநற :P:P:P

  @மெளலி, அதே!! மறுநாள் இருந்தாலும் சாப்பிட்டுக்கலாமே! அதனால் தான். :)))))))))))

  ReplyDelete