எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 09, 2008

அழகு தெய்வம்- நவராத்திரி நாயகியர் - 10

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

அம்மா= அம்மா என்றால் அன்பு, அம்மா என்றால் பொறுமை, அம்மா என்றால் பாசம், அம்மா என்றால் இனிமை. அம்மா என்ற ஒரு வார்த்தையே நாம் அனைவருக்கும் எத்தகையதொரு நிம்மதியையும், பாசத்தையும், ஆறுதலையும் தருகின்றது. எத்தனை வயது ஆனாலும் அம்மா இருந்தால் என்ற எண்ணம் எழுவதையும், அம்மா நினைவு வருவதையும் மறுக்கவோ, மறைக்கவோ முடியலையே! பெண்கள் அனைவரிடமும் தாய்மை சக்தி ( இன்றைய பெண்கள் வேண்டாம்னு சொன்னாலும், உறைந்தே இருக்கின்றது. அதை எவராலும் மாற்றவோ, மறைக்கவோ முடியாது. தேவையான சமயங்களில் தன்னை மீறி வெளிப்பட்டே ஆகும்.) பட்சிகள் ஆகட்டும், புழு, பூச்சிகள் ஆகட்டும், மிருகங்கள் ஆகட்டும் அனைத்திலும் பெண் இனமே குழந்தை பெறுகின்றது. ஏதோ சில குறிப்பிட்ட ஊர்வன?? (மீன்??) இனத்தில் மட்டுமே ஆண் கர்ப்பம் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆகவே அந்த அன்னை என்னும் சக்தியாக உறைகின்றவளே தேவி தான். அவளின் சக்தி இல்லை எனில் தாய்மை என்பது கேலிக்கூத்தாக இருக்குமோ??அந்த தாய் வடிவான சக்தியாக உறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

20. யா தேவீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
ப்ராந்தி என்றால் சுற்றுதல் என்ற அர்த்தமும், ஸ்திரமற்ற தன்மையைக் குறிக்கும் என்ற பொருளிலும் வருகின்றது. மாயை, என்ற அர்த்தமும் வரும். காட்சிப்பிழை, பொய்த்தோற்றம் என்றும் சொல்லலாம். பூமியின் சுழற்சியையும் எடுத்துக் கொள்ளலாம். இறை சக்தி இல்லை எனில் பூமி சுற்றுவது எங்கே?? என்றாலும் நமக்குத் தோன்றும் மாயையைக் களைய அன்னையின் சக்தி வேண்டுமல்லவா?? அந்த மாயைத் தோற்றுவித்து, அதன் மூலம் நம்மைப் பண்படுத்தி, நல்வழியில் திருப்பி, நம்மைப் பூரண சரணாகதி அடையச் செய்யும், மாயா தேவி என்னும் சக்தியாக இருக்கும் அந்த அன்னைக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

21. இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம:

அனைத்து உயிரிகளிடத்திலும் உறைந்திருக்கும் இந்திரியங்களை அடக்கி ஆள்பவளாய் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
அகிலம் பூராவும் வியாபித்து, நாம் நிற்பது, நடப்பது, பார்ப்பது, கேட்பது, பேசுவது, முகர்வது, உண்ணுவது என அனைத்தை இயக்கங்களிலும் தானே சர்வமுமாய் நிறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள்.

22. சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
சிதிரூபேண= சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை ஆட்டுவிக்கும் சக்தி?? என்று அந்த உணர்வாய் உறைபவளே நம் ஆன்மாவே அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து வியாபித்துப் பரவி இருக்கின்றாள் . அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.

1 comment:

  1. எங்கும் நிறைந்திருக்கும் அன்னைக்கு நமஸ்காரங்கள். நன்றி கீதாம்மா.

    ReplyDelete