எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 27, 2008

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கண்ணனை எங்கே ஒளித்து வைக்கிறது??? பகுதி 15

வசுதேவருக்கு ஒரு நிமிஷம் அந்தப் பரம்பொருளே எதிரே வந்து நின்று கொண்டு தான் குழந்தையாக அவதரித்திருப்பதைச் சொன்ன மாதிரி இருந்தது. தன்னைத் தானே மயக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டார் வசுதேவர். குழந்தை அழகென்றால் அவ்வளவு அழகு! கையில் எடுத்தாலே பூப் போன்ற அதன் மிருதுவான மேனியும், தாமரை மலர் போன்ற முகமும், அதில் ஜொலிக்கும் இருகண்களும், குட்டிக் குட்டிக் கால்களும், கைகளும், செப்புப்போன்ற செவ்வாயும், மருதோன்றி இட்டாற்போல் சிவந்த இரு குட்டிப் பாதங்களும் தொடும்போதே மனதில் இனம்புரியாத நிம்மதியும், ஆனந்தத்தையும் உணர வைத்தது. சொர்க்கத்திலே தான் இருப்பதுபோல் உணர்ந்தார் வசுதேவர்.

ஆனால் இப்படியே இருந்தால்?? அடாடா?? கம்சன் வந்துவிடுவானே? அவனுக்குத் தெரியும் முன்னர் செய்யவேண்டிய காரியங்களை மறந்தே போனேனே?? நல்லவேளையாகப் பூதனையும் இன்னும் வந்து சேரவில்லை. மழை தடுக்கின்றது போல் அவளையும். வசுதேவர் குழந்தையையும், தேவகியையும் சற்று நேரம் தனியே விட்டுவிட்டுக் கையில் இரு விளக்குகளை எடுத்துக் கொண்டார். மாளிகையின் மேன்மாடத்தில் இருந்து யமுனை நதியும், அதைத் தாண்டி அக்கரையில் கோகுலமும் தெரியும் வண்ணம் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றார். தன் கையில் இருந்த விளக்குகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஆரத்தி எடுப்பதுபோல் பாவனை செய்தார். உற்றுக் கவனித்தார். அக்கரையில் இருந்து மெல்லிய வெளிச்சம் சுற்றிச் சுற்றி வந்தது. வசுதேவர் திரும்பி வந்து குழந்தையைக் குளிப்பாட்டினார். தேனின் இனிமையைக் குழந்தையின் நாக்கில் வைத்தார். “தேவகி, நான் இப்போது போக வேண்டும்.” என்றார் வசுதேவர்.

தேவகியின் கண்களில் கண்ணீர். என்றாலும் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு, இப்படிப் புயலும், மழையுமாய் இருக்கின்றதே? எப்படிச் செல்வீர்கள்? யமுனையில் திடீரென வெள்ளம் வந்துவிட்டால்??” என்று ஐயத்தைக் கிளப்பினாள். “இறைவன் சித்தப்படி நடக்கும்” என்று சொன்ன வசுதேவர், காவலாளிகள் என்ன செய்கின்றனர் என்பதைக் கவனித்தார். பூதனையும் இன்னும் திரும்பவில்லை, காவலாளிகளும் தூங்குகின்றனர் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். குழந்தையை ஒரு கம்பளியில் சுற்றினார் வசுதேவர். கூடையில் வைத்தார். தோளில் கூடையை வைத்துக் கொண்டு கிளம்பினார். வைக்கும் முன்னர் கூடையில் இருந்த குழந்தையை ஒருமுறை பார்த்தார். நடப்பது எதுவும் அறியாத அந்தச் சின்னஞ்சிறு சிசு, தன் கால்விரலை வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தது. இரு பர்லாங்குகள் சென்ற வசுதேவர், இயற்கையாக யமுனை நதியின் ஆழம் குறைந்து கோகுலம் செல்லுவதற்கென ஏற்பட்ட ஒரு இடத்தில், நதியில் இறங்கி நடக்கலானார். கொஞ்ச தூரம் செல்வதற்குள்ளே வசுதேவர், ஏதோ நிழல் போன்ற ஒன்று தன் மேலும், கூடையில் இருந்த குழந்தையின் மேலும் குடை போல் கவிந்திருப்பதாய் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார். மழை நின்று விட்டிருந்தது. கரிய மேகம் ஒன்று ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷனைப் போல அவர்மேலும், கூடையிலிருந்த குழந்தையின் மேலும் கவிந்து இருப்பதைக் கண்டார். குழந்தை பயந்துவிடுவானோ என்று பார்த்தால் தூக்கத்தில் குழந்தை மோகனமாய்ச் சிரித்தது. வாயிலிருந்து விரலை எடுக்காமலேயே சிரித்த அந்தக் குழந்தையை அள்ளி எடுக்கத் துடித்த மனதைக் கட்டுப் படுத்திக் கொண்ட வசுதேவர் சீக்கிரமாய் ஆழம் குறைந்த அந்தப் பகுதியைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்.
*************************************************************************************

கோகுலத்தில் என்ன நடந்தது என்று பார்ப்போமா? வசுதேவர் நதியைக் கடக்கிறதுக்குள்ளே நாம் போய் எட்டிப் பார்த்துடலாம். பல வருஷங்கள் சென்ற பின்னர் கருத்தரித்த யசோதையைக் கண்ணும், கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டான் நந்தகோபன். கோகுலத்து மக்களுக்கும் யசோதை இத்தனை வருஷம் சென்ற பின்னர் கருக்கொண்டது பற்றி சந்தோஷத்துடனேயே பேசிக் கொண்டனர். கூடவே தங்கள் குலத் தலைவனும், இப்போது கம்சனின் சிறையில் இருப்பவரும் ஆன வசுதேவரின் மனைவியான தேவகிக்குப் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை தான் யாதவ குலத்தை ரக்ஷிக்கப் போகும் குழந்தை என்பதும், அந்தக் குழந்தையால் தர்மமே நிலைநாட்டப் பட்டு உலக க்ஷேமத்திற்கென உதிக்கப் போகும் குழந்தை எனவும், அரசல் புரசலாய்ச் செய்தி வந்து காதில் விழுந்த வண்ணம் இருக்கின்றது. எப்போப் பிறக்கும் எனத் தெரியவில்லை.

சிராவண மாதம் பெளர்ணமி கழிந்த எட்டாம் நாள் காலை யசோதைக்குக் குழந்தை பிறந்துவிடுகிறது. பெண் குழந்தை. ஆனால் இந்தச் செய்தி வெளியே யாருக்கும் தெரிவிக்கப் படவில்லை. யசோதை அறையைவிட்டு வெளியே வரவில்லை. பூரண மயக்கத்திலேயே இருப்பதாய்ச் சொல்லப் பட்டது. நந்தன் கர்காசாரியாரைச் சென்று ரகசியமாய்ச் சந்திக்கின்றான். சில நிமிடப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் யமுனைக்கரையில் மதுராவிலிருந்து வரும் வழியில் நந்தனும், கர்காசாரியாரும் காத்திருக்க, எதிர்க்கரையில் வசுதேவர் இறங்குவது இங்கே நிழல் போல் தெரிகின்றது. ஏற்கெனவே விளக்குகளின் சமிக்ஞை மூலம் செய்திப் பரிமாற்றம் நடந்திருப்பதால் தயாராய்க் காத்திருக்கின்றனர் இருவரும். வசுதேவர் வந்து சேருகின்றார். நந்தன் கையிலிருந்த கூடை வசுதேவர் கைக்கும், அவர் கைக்கூடை நந்தன் கைக்கும் மாறுகின்றது. வசுதேவர் கண்களில் இருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் கொட்டுகின்றது. பேச்சு வர மறுக்கின்றது.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக்கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருகியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!"

"நந்தா, நந்தா, என் நண்பா, என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன் உனக்கு நான்? இது உன் குழந்தை அல்லவோ?? யசோதை பெற்றெடுத்த பெண்ணல்லவோ?? எப்படி இந்த உதவிக்கு நான் பதில் உதவி செய்யப் போகின்றேன்? என் நன்றியை எவ்வகையில் காட்டப் போகின்றேன்?" என்றெல்லாம் புலம்பினார். நந்தன் வசுதேவரின் கால்களில் வீழ்ந்தான். "அரசே, நீங்கள் எங்கள் தலைவர், நாங்கள் உங்கள் குடிமக்கள். இது என்னுடைய கடமை. எங்களிடம் இருப்பதே உங்களிடம் நாங்கள் கொடுக்கவே. அனைத்தும் உம்முடையதே!" என்று பணிவுடன் சொன்னான். கர்காசாரியாரின் கைகளில் இருந்த கூடையை நந்தன் வாங்கும்போது கூடையை மூடி இருந்த துணி விலகுகின்றது. அதனுள் இருந்த குழந்தையின் நீலமேக வண்ணம் பளிச்சிட அதன் எதிரொலி போல், விண்ணிலும் மிகப் பிரகாசமாய் ஒரு மின்னல் தோன்றி மறைய, அந்த வெளிச்சத்தில் குழந்தையைப் பார்த்த நந்தன் மனதில் இனம் புரியாப் பரவசம்.நந்தா, நந்தா, எத்தனை அதிர்ஷ்டசாலி அப்பா நீ? அந்தப் பரம்பொருளே இப்போது உன் கையில். ஈரேழு பதினான்கு உலகத்தின் செல்வமெல்லாம் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு பொருள் உன்னிடம் இப்போது.

5 comments:

  1. அருமை...அருமை...கலக்குறிங்க தலைவி ;))

    ReplyDelete
  2. அருமை அம்மா. கண் பனிக்கக் கண்டேன். பரவசம் மிகக் கொண்டேன். மிகவும் அருமை.

    ReplyDelete
  3. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இன்னிக்குதான் இந்த தொடரை படிக்க ஆரம்பித்தேன்! ரொம்ப நல்லா இருக்கு கீதாம்மா! எனக்கு ஒவ்வொரு கண்ணன் லீலையும் தம்பி நட்ராஜை ஞாபகப்படுத்துது!

    ReplyDelete
  4. @கோபி,
    @கவிநயா, ரொம்பவே நன்றி, உண்மையிலேயே சில நிகழ்வுகளை எழுதும்போது கண் பனிக்க மட்டுமில்லை, கண்ணீர் வந்து அன்று வேறு ஏதும் செய்யமுடியாமலும் இருக்கு!

    புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்!

    @அபி அப்பா, குழந்தையோட இத்தனை நாட்கள் இருந்துட்டீங்க, நினைவு வரும் கட்டாயமாய், நட்ராஜை நீங்கள் கண்ணனின் உருவாய்ப் பார்க்கக் கொடுத்து வச்சிருக்கீங்க, ஆசிகள், உங்களுக்கும், குழந்தைகளுக்கும்.

    ReplyDelete
  5. அப்படியே அந்த ஆல்-இலைக் கிருஷ்ணனது தாத்பர்யத்தையும் சொல்லிடுங்களேன் கீதாம்மா...

    ReplyDelete