எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 14, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - தொடர்ச்சி!


கண்ணன் கடைசியாக் கதை சொன்னது இங்கேபார்க்கவும். இனி கண்ணன் சொல்லப் போகும் கதையின் தொடர்ச்சி.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இங்கே மதுராவில் வசுதேவருக்கும், தேவகிக்கும் இந்தச் செய்தி சென்றது. கிருஷ்ணன் பிழைத்தது பற்றிய மகிழ்ச்சி இருந்தாலும் , கம்ஸன், எப்படியோ அறிந்து கொண்டு விடுவான் என நினைத்துக் கவலை அடைந்தனர். கர்காசாரியார் அவர்களுக்குக் கண்ணன் எவ்வாறு ஒவ்வொரு நிகழ்வில் இருந்தும் தப்புகின்றான் எனவும், அவன் ஒரு அற்புத இறை சக்தி பெற்ற குழந்தை எனவும், சாட்சாத் அந்த வாசுதேவனே வந்து குழந்தையாகப் பிறந்திருக்கின்றான் எனவும் சொல்லுகின்றார். தேவகிக்கும் இதில் நம்பிக்கை அதிகம் ஏற்படுகின்றது. தன்னுடைய குழந்தையாகத் தான் சீராட்டிப் பாராட்டி வரும் கண்ணன் சிலையைக் கையில் எடுத்துக் கொண்டு கண்ணீர் வழியப் பிரார்த்திக்கின்றாள். ஆனால் வசுதேவருக்கோ? தன் மகன் ஒரு சிறு குழந்தை எனவும், ஒவ்வொரு முறை அவன் தப்புவதும் ஏதோ ஒரு அதிசயத்தால் அன்றி, அதில் அவனுடைய திறமையோ, அல்லது அற்புதமோ நிகழ்த்தவில்லை எனவும் உறுதியாய் நம்புகின்றார்.

கம்ஸன் எவ்வாறேனும் தங்கள் மகன் கோகுலத்தில் வளருவதைக் கண்டு பிடித்து விடுவான் என அஞ்சுகின்றார் வசுதேவர். தன் சந்தேகத்தை கர்காசாரியாரிடமும், அக்ரூரரிடமும் பகிர்ந்து கொள்கின்றார். அக்ரூரர் வசுதேவரை சமாதானம் செய்கின்றார். வசுதேவரின் இந்தப் பதட்டமும், பயமும் கம்ஸனைச் சந்தேகம் கொள்ளச் செய்யும், எனவும், ஏற்கெனவேயே கோகுலத்தை ஒரு இண்டு, இடுக்கு விடாமல் துருவிப் பார்க்கச் சொல்லிக் கம்ஸன் ஆணை எனவும் சொல்கின்றார். வசுதேவரின் ஒரு சிறிய பதட்டமும் கம்ஸனைச் சந்தேகம் கொள்ளச் செய்யும் என்பதால், இப்போது அமைதி காக்கவேண்டியது அவசியம் எனவும் எடுத்துரைக்கிறார். அப்போது கர்காசாரியார் சொல்கின்றார்: “ வசுதேவா, வாசுதேவ கிருஷ்ணனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அவன் நம்மை மட்டுமின்றி தர்மத்தை நிலைநாட்டவும் பிறந்துள்ளான். யாராலும் அவனுக்கு ஒரு சிறிய காயம் ஏற்படும் அளவுக்குத் தீங்கு விளைவிக்க முடியாது. என்றாலும் நாம் கொஞ்சம் கவனமாய் நடக்கவேண்டும். பூதனையின் மரணத்துக்குப் பழிவாங்கவேண்டும் என ப்ரலம்பனைத் தூண்டிக் கொண்டிருக்கின்றான். ஆனால் ப்ரலம்பனோ, கம்ஸனுக்கு பழி வாங்கும் உணர்வைக் கைவிடும்படி அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறான்.

என்றாலும் ஒரு ஆபத்து என்னவென்றால் ஒவ்வொரு வாரமும், அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையாவது நான் கோகுலம் சென்று உனக்குக் குழந்தை பற்றிய தகவல்களை அளித்து வருகின்றேன். என்னால் செல்ல முடியாவிட்டால் நந்தன் வந்து சொல்கின்றான். ஆகையால் எவ்வாறேனும் கம்ஸன் இதை அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மேலும் அனைவருடைய கவனமும், பாதுகாப்பும் கிருஷ்ணனைச் சூழ்ந்தே இருப்பதும் அவன் கவனத்துக்குத் தப்பாது. உடனே புரிந்து கொள்வான் கம்ஸன், இவன் தேவகியின் எட்டாவது மகன் என. “ என்றார் கர்காசாரியார்.

“என்ன செய்யலாம் குருவே?” என்று வசுதேவர் கேட்டார். “ ம்ம்ம்ம் நீங்கள் இங்கேயே இருந்தால் கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளுக்காகத் தவிப்பீர்கள். கிருஷ்ணனின் நலத்துக்காகப் பாடுபடுவீர்கள். ஆகவே, இங்கிருந்து சென்று விடுங்கள், இருவருமே. கொஞ்ச நாட்களுக்காவது. ஆம் வசுதேவரே, அது தான் நல்லது, உங்களுக்கு மட்டுமின்றி, வாசுதேவ கிருஷ்ணனுக்கும். “ என்றார் கர்காசாரியார். “ஆஹா, வாராது போல் வந்த மாமணியான என் கண்ணனை விட்டுப் பிரிவதா? நாங்கள் இங்கே இல்லாதபோது எங்கள் அருமைக் கண்மணிக்கு என்ன நேரிடுமோ?” எனத் தவிக்கின்றார் வசுதேவர். “அதான் நான் இங்கேயே தானே இருக்கப் போகின்றேன்.” என்றார் கர்காசாரியார். உடன் தொடர்ந்து,”நான் கோகுலத்திற்கே சென்று தங்கவும் முடியும். என்னை போன்ற வயதான, ஒரு பிராமண ஆசாரியன் கோகுலம் செல்வதையும், அங்கே தங்குவதையும் யாரும் சந்தேகக் கண்ணோடு பார்க்க முடியாது. நான் வேண்டுமானால் நந்தனிடம் முன் கூட்டியே சொல்லிச் சில பூஜைகள், வழிபாடுகள், ஜபங்கள் என நடத்த ஏற்பாடுகள் செய்யச் சொல்கின்றேன். அதை வைத்து நான் கொஞ்சம் அதிக நாட்கள், அல்லது மாதங்கள் கோகுலத்திலேயே தங்க முடியும்.” என்று கர்காசாரியார் கூற அக்ரூரர் அதை முழு மனதோடு ஆதரிக்கின்றார்.

தேவகியின் மனம் உடைந்து போகுமே எனக் கவலைப் படுகின்றார் வசுதேவர். ஆனால் நான்கு தினங்கள் முன்னால் பறவைகள் பிடிப்பவன் கிருஷ்ணனையும் ஒரு பறவை போல் பிடித்து வந்து கம்ஸனிடம் ஒப்படைக்க முயன்று இறுதியில் தன் முடிவை எட்டியதைச் சொல்கின்றார் கர்காசாரியார் ரகசியமாய். கிருஷ்ணனைப் பற்றிக் கவலை வேண்டாம் வசுதேவா, அவன் கடவுள், தன்னைத் தானே காத்துக் கொள்வான், என்றும் உறுதிபடச் சொல்கின்றார். அக்ரூரரோ முடிவே செய்துவிட்டார். ஆனால் வசுதேவரோ அரை மனதுடனே இருக்கின்றார். தேவகிக்கு நான்கு நாட்கள் முன்னால் நடந்த இவ்விஷயம் தெரியவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றார். தேவகி ஏற்கெனவேயே பாதி உயிர் போனவளாய் ஒரு நடமாடும் பொம்மை போல் நடமாடிக் கொண்டிருக்கின்றாள். அவள் ஜீவனெல்லாம் கிருஷ்ணனிடமே இருக்கின்றது. அரைக் கணமே பார்த்திருக்கும் அந்தக் குழந்தையிடமே அவள் தன் உயிரை வைத்திருக்கின்றாள். அவனுக்கு ஏதாவதொன்றென்றால் அவளால் தாங்க முடியாது எனச் சொல்கின்றார் வசுதேவர்.

“கண்ணா, என் கண்மணியே!” என்ற தீனக் குரல் கேட்க மூவரும் திரும்பிப் பார்க்கின்றனர். அரை மயக்கமாய் இருக்கும் தேவகி, நிற்கக் கூட முடியாமல் தள்ளாடியவளாய் அங்கே இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டு, “ ஆர்ய புத்ர, நாம் இங்கிருந்து செல்வதே என் கண்ணனுக்கு உயிர் கொடுக்கும் என்றால் உடனேயே கிளம்புங்கள், இங்கிருந்து சென்று விடுவோம், எப்படியோ என் கண்ணன் , என் உயிர், என் கடவுள், உயிரோடு இருக்கவேண்டும், நான் இறந்தால் தான் அவன் உயிர் தரிக்குமென்றால் அதற்கும் நான் தயார்” என்றாள்.

3 comments:

 1. அப்பாடி! ஒரு வழியா கண்ணன் வந்துட்டான்.

  //அரைக் கணமே பார்த்திருக்கும் அந்தக் குழந்தையிடமே அவள் தன் உயிரை வைத்திருக்கின்றாள்.//

  இதைப் படிக்கையில் கண்ணீர் வந்துருச்சு அம்மா :(

  ReplyDelete
 2. ம்ம்ம்...

  \\\கண்ணா, என் கண்மணியே!” என்ற தீனக் குரல் கேட்க மூவரும் திரும்பிப் பார்க்கின்றனர். அரை மயக்கமாய் இருக்கும் தேவகி, நிற்கக் கூட முடியாமல் தள்ளாடியவளாய் அங்கே இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டு, “ ஆர்ய புத்ர, நாம் இங்கிருந்து செல்வதே என் கண்ணனுக்கு உயிர் கொடுக்கும் என்றால் உடனேயே கிளம்புங்கள், இங்கிருந்து சென்று விடுவோம், எப்படியோ என் கண்ணன் , என் உயிர், என் கடவுள், உயிரோடு இருக்கவேண்டும், நான் இறந்தால் தான் அவன் உயிர் தரிக்குமென்றால் அதற்கும் நான் தயார்” என்றாள்.\\\

  அருமையான வரிகள் தலைவி...தாய்மையுடன் இருக்கு ;)

  ReplyDelete
 3. ///அரைக் கணமே பார்த்திருக்கும் அந்தக் குழந்தையிடமே அவள் தன் உயிரை வைத்திருக்கின்றாள்.//

  இதைப் படிக்கையில் கண்ணீர் வந்துருச்சு அம்மா :(//

  அரை நாள் மட்டுமே பாத்த பேத்தி மனசிலேயே இருக்காளே. அதனால ஆச்சரியமா இல்லை!

  ReplyDelete