எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 24, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - இரண்டாம் பாகம்

தேவகியின் பிள்ளை!


உலகமே ஸ்தம்பித்து நின்றாற்போல் நின்றனர் மதுராவின் மக்கள். ஒருவாறு சமாளித்துக் கொண்டு பார்த்தால் கம்சன் கொல்லப் பட்டது உண்மையே. இதோ அவர்களின் ரக்ஷகன்! கடைசியில் வந்தே விட்டான். நாரதர் சொன்னது சரியாகிவிட்டதே? மக்கள் இனம் புரியாத மகிழ்வில் குதித்தனர். ஆடிப் பாடினர். ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டார்கள். சிலர் கண்ணனைக் கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்ல முயன்றனர். ஆனால் அங்கே இருந்த மகத வீரர்களோ??? முதலில் திகைத்தாலும் பின்னர் சமாளித்துக் கொண்டனர். ஆஹா, அவர்கள் நாட்டுச் சக்கரவர்த்தியின் மாப்பிள்ளையும், சக்கரவர்த்தியான ஜராசந்தனின் பிரியத்துக்கு உகந்தவனும் ஆன கம்சன், யாதவர்களின் தலைவன் கொல்லப் பட்டுவிட்டான். அதுவும் ஒரு சிறுவனால். இதோ ப்ரத்யோதா, இன்று வரையிலும் கம்சனுக்கு விஸ்வாசமிக்கவனாய்க் கருதப் பட்டான். என்ன காரியம் செய்துவிட்டான்? நம் தளபதி வ்ருதிர்கனனைக் கொன்றுவிட்டானே?? யாதவத் தலைவர்கள் மேல் ஆத்திரத்துடன் பாய்ந்தனர் மகத வீரர்கள். இன்னும் ஒரு நிமிஷம் சென்றிருந்தாலும் இருநாடுகளுக்கு இடையேயான மாபெரும் யுத்தமாக மாறி இருக்கும். ஆனால் அதோ அது யார்? அட, நம் பலராமன் தான்.

பலம் பொருந்தியதொரு அரக்கனைப் போல் காட்சி அளித்த அந்த இளைஞன், தற்சமயம் யாதவர்களுக்குத் தலைவனைப் போல் மாறிவிட்டிருந்தான். சண்டையிட ஆரம்பித்த மகத நாட்டு வீரர்களுக்கும், யாதவர்களுக்கும் இடையே சென்று தன் முட்கள் நிரம்பிய கதையைச் சுழற்றிக் கொண்டே ஆத்திரம் அடங்காமல் மகதவீரர்களைப் பார்த்து, “எவனாவது தன் ஆயுதத்தைத் தூக்கினால் இந்த என் கதையால் ஒரே போடுதான்!” என்று சொன்னான். அவன் குரலும் உச்சரிப்பின் அழுத்தமும் அவன் சொன்னதைச் செய்வான் என்று காட்டியது. அனைவரும் அவன் ஆணைக்குக் கீழ்ப்படிந்தனர். அனைவரது ஆயுதங்களும் கீழே வீசி எறியப் பட்டன. இவ்வளவில் வசுதேவர் அக்ரூரரைக் கலந்து ஆலோசித்தார். ப்ரத்யோதாவும் சேர்ந்து கொண்டான். பின்னர் அவர்களின் ஆலோசனையின் பேரில் வெளி நாடுகளில் இருந்து வந்திருந்த அரச விருந்தினர்களை அவர்களின் இருப்பிடம் கொண்டு செல்லும் வேலையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும், மாளிகையின் பொறுப்பையும் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னான். அவ்வாறே வந்திருந்த விருந்தினரைச் சமாதானம் செய்து அனைவரையும் அவரவர் இடத்தில் கொண்டு சேர்த்தான். அக்ரூரரோ கம்சனின் உடலை மாளிகையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். கூட்டம் கலைய ஆரம்பித்தது. அனைவரும் ஜெயஸ்ரீ கிருஷ்ணா என முழங்கிக் கொண்டே கண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லிய வண்ணம் சென்றனர். சிலர் கண்ணனின் கால்களில் விழுந்தும் வணங்கினார்கள்.

அவர்களின் உற்சாகத்தைப் பார்த்த கண்ணனோ கம்சனின் ரத்தம் தோய்ந்த தன் கைகளை உயர்த்தி மக்களைப் பார்த்து, கொண்டாட்டங்களுக்கு இது சமயம் இல்லை, அனைவரும் அமைதியாகக்கலைந்து செல்லுங்கள் என்றான். என்ன ஆச்சரியம்??? அனைவரும் கண்ணன் சொல்படியே நடந்து கொண்டனர். கண்ணனோ நந்தனைத் தேடிச் சென்றான். என்னதான் வசுதேவனின் மகன் தான் என்பது தெரிந்திருந்தாலும் தன்னை வளர்த்த நந்தனைக் கண்ணனால் ஒதுக்க முடியவில்லை. நந்தன் இருக்குமிடம் தேடிச் சென்று, அவனை நமஸ்கரித்து, “தந்தையே, நான் செய்த இந்தக் காரியத்திற்காக என்னை மன்னிப்பீர்களா? ஆனால் எனக்கு வேறு வழியே தெரியவில்லை.” என்று மிகப் பணிவோடும், உருக்கத்தோடும் சொன்னான். “குழந்தாய், என் அருமைக் குழந்தாய், “ நந்தனால் மேற்கொண்டு பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. குரல் தழுதழுக்க அவன், “நூறாண்டு வாழ்வாய் அப்பா” என வாழ்த்தினான் தன் அருமைப்பிள்ளையை.

உத்தவனிடமிருந்து தன் துணிமணிகளை வாங்கிக் கொண்ட கண்ணன் நந்தனைப் பார்த்து, “தந்தையே, தாங்கள் கூடாரத்திற்குச் செல்லுங்கள். நான் அரண்மனைக்குச் சென்று பார்த்துவிட்டு, கம்சனின் உடல் தகனம் செய்யப் பட்டதும் வந்துவிடுகிறேன்.” என்றான். கண்ணன் அரண்மனைக்குச் செல்லத் திரும்பினான்.

கண்ணனுக்காக அங்கே காத்திருந்தது??? வேறு யார்? தேவகியே தான். அவள் பிள்ளை, அவளுடைய எட்டாவது பிள்ளை, அவள் குலத்தைக்காக்கவெனவேப் பிறப்பெடுத்த பிள்ளை அதோ நிற்கின்றான் வளர்ப்புத் தந்தையிடம் பேசிக் கொண்டே. எத்துணை உரிமையாகவும், அன்பாகவும் பேசுகிறான்? என்னிடமும் இப்படிப் பேசுவானா? ஆஹா, அவன் பிறந்த அந்த நிமிடம்??ம்ம்ம்ம் எனக்கு இன்னும் அது மட்டும் நினைவில் இருக்கு. அப்புறம்தான் அவனைக் கொண்டு போய்விட்டனரே?? என்ன ஒரு அழகான குழந்தை?? ஒரு நிமிஷம் தான் கண்ணாரக் காண முடிந்தது. அடடா???? அந்த யசோதைதான் என்ன பாக்கியம் செய்திருக்கிறாள்? இவனின் ஒவ்வொரு விளையாட்டையும், ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நிமிஷமும் கண்டு களித்திருப்பாளே? முகம் பார்த்துச் சிரித்துக் கண்களால் பேசி இருப்பானே? குப்புற விழமுடியாமல் அழுதிருப்பானோ? ம்ம்ம்ம் நான் பக்கத்தில் இருந்தேன் என்றால் குப்புறத்தி விட்டிருப்பேனே! பாவம் குழந்தை குப்புறத்திக்கும்போது முகவாயில் அடி பட்டிருக்குமோ?? தவழ்ந்து செல்லும்போது மரங்களைச் சாய்த்தானாமே? மரங்கள் மேலே விழுந்திருந்தால்??? ப்ரத்யோதாவின் மனைவியான பூதனை கூட இவனைப் பார்த்து மனசு மாறிவிட்டாளாமே? இவனை பார்த்தால் யார் தான் மனம் மாற மாட்டார்கள்?? அந்த நிமிடத்தில் தேவகி கண்ணனைத் தான் வயிற்றில் தாங்கியதில் இருந்து பெற்ற வரையிலும் இருந்த அத்தனை இன்ப, துன்பங்களையும் மீண்டும் அநுபவித்தாள்.

திருமணம் நடந்த இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் துன்பம், துன்பம், துன்பம். துன்பம் மட்டுமே. வேறு எதையும் காணமுடியவில்லை. அடுத்தடுத்து ஆறு குழந்தைகள் அண்ணனான கம்சனால் கொல்லப் பட்டனவே? அந்தக் குழந்தைகள் எப்படித் துடித்திருக்கும்?? இதோ கதையைச் சுற்றிக் கொண்டு சம்ஹாரத்துக்குக் காத்திருக்கானே, ஏழாவது பிள்ளை, இந்த ஏழாவது குழந்தை பலராமன், பிறக்கும்போதே ஒரு வயதுக் குழந்தை போலப் பெரிய குழந்தை. அப்பப்பா, இவனை வெளியே எடுப்பதற்குள் என்ன பாடு?? அரண்மனை வாசிகளுக்குத் தெரியாமல் வெளியே எடுத்து கோகுலத்துக்கும் அனுப்பி இந்த எட்டாவது பிள்ளைக்குத் தோழன் வேண்டுமென அதற்கும் ஏற்பாடுகள் செய்து?? எல்லாம் எதற்காக?? இந்த ஒரு நாளுக்காகவன்றோ? ஆனால், ஆனால் இது நடந்து முடியும் வரையில் நான் பட்ட பாடு, தவித்த தவிப்பு. நான் பெற்றெடுத்த இந்தக் குழந்தைகள் வளர்வதைக் கண்ணால் கூடக் காணமுடியாமல் தவித்த தவிப்புக்கு இன்றுதான் முடிவு வந்திருக்கிறது. அதிலும் கண்ணன் மதுராவுக்கு வந்துவிட்டான் எனத் தெரிந்ததில் இருந்தே அவனைக் காண ஆவலுடம் காத்திருந்தேன். ஆனால் அவன் வாவில்லை. என்னவோ என யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கர்காசாரியார் வந்தார். கம்சனைக் கொன்று முடிக்காமல் தாயைக் காண விரும்பவில்லை கண்ணன் என்னும் செய்தியைச் சொன்னார். என் குழந்தைக்குத் தான் எவ்வளவு உறுதி?? மேலும் கர்காசாரியார் கண்ணன் இப்போது அரண்மனைப்பக்கம் வருவது அவன் உயிருக்கே ஆபத்து என்றும் சொன்னார்.

அதுக்காகப் பேசாமல் இருந்தாச்சு. இங்கே இந்தச் சண்டையைக் காண வந்தால் இந்தச் சாணுரன் கண்ணனைக் கொன்றே விடுவான் போல் அல்லவோ இருந்தது? ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் இப்போது சேர்ந்திருப்பது இந்தக் கண்ணனுக்காகவன்றோ? நாம் செய்த சபதத்துக்காகவன்றோ? கண்ணனுக்கு ஏதேனும் நேர்ந்தால் நாமும் தீக்குளிப்பதாய்ச் சொன்னோமல்லவா? அதனால் அல்லவோ இப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து கம்சனை எதிர்க்கக் கிளம்பி உள்ளார்கள்? என் இறைவா, அது நடக்கவேண்டுமே? சாணுரன் கண்ணனைக் கீழே வீழ்த்திக் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்தபோது அதைக் காணச் சகிக்காமல் தேவகி அந்த இடத்தில் இருந்து சென்றாள். பின்னர் அவளுக்குச் செய்தி கொண்டு வந்த பெண் சொன்னாள் கம்சனைக் கண்ணன் கொன்றுவிட்டதாய். ஓட்டமாய் ஓடி வந்தாள் தேவகி அந்த உப்பரிகையில் நின்று அந்த அரங்கினுள் கண்ணன் இருக்குமிடம் தேடினாள். அதோ கண்ணன், தன் வளர்ப்புத் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கிறான். இது என்ன நந்தன் கிளம்புகிறானே? கண்ணனும் அவனோடே சென்றுவிடுவானோ? அவனைக் கூப்பிடலாம். கண்ணா, என் கண்ணா, என் செல்வமே, என் குழந்தையே, தேவகிக்கு வாய் திறந்து திறந்து மூடியது. பேச்சு வரவில்லை. அவள் நெஞ்சை இத்தனை வருஷத்துத் துக்கமும் சேர்ந்து கொண்டு ஒரு மலைபோல் அமர்ந்து கொண்டு நசுக்கிக் கொண்டிருந்தது. அந்த மலை நகன்றால் அல்லவோ அவளால் பேச முடியும்???

கண்களிலிருந்து தாரையாகக் கண்ணீர் கொட்டத் தன்னிரு கைகளையும் நீட்டிய வண்ணம் பேச முடியாமல் தவித்த தேவகி கண்ணன் இருக்குமிடம் பார்த்தவண்ணம் நின்றாள். கண்ணன் தகப்பனிடம் பேசிவிட்டுத் திரும்பியவன் உப்பரிகையில் நின்ற தேவகியைக் கண்டான். ஆஹா, இது என்ன அவள் பிள்ளை அவளை அடையாளம் கண்டு கொண்டானா? இதோ சிரிக்கின்றானே அவளைக் கண்டு?? அவள் கனவில் கூட ஒரு முறை இம்மாதிரிக் கண்ணன் சிரித்திருக்கிறான் அல்லவோ?? இதோ அடுத்த அடியில் அவளிடம் கண்ணன் வந்துவிடுவான். இதோ அவளிடம் வந்தே விட்டான்.

தேவகியின் பார்வையைப் பொங்கி வந்த கண்ணீர்ப் பிரவாகம் மறைத்தது.

6 comments:

 1. அப்பாடி. தேவகியை எப்போ பார்ப்பான்னுதான் நானும் நினைச்சுக்கிட்டே இருந்தேன்...

  ReplyDelete
 2. ம்ம்ம் பார்த்தாச்சே! இனி கண்ணன் குழந்தையும் அல்ல, இளைஞன், பொறுப்புகள் கூடி, பொறுப்புகளை நிறைவேற்றும் பொறுப்பான இளைஞனாகக் காட்சி கொடுப்பான்.

  ReplyDelete
 3. கண்ணனும் தேவகியும் காணும் கணத்தை எதிர்பார்க்கிறேன்.
  குறையில்லாமல் எழுதி வருகிறீர்கள் கீதா. வெகு அருமை.

  ReplyDelete
 4. Miga arumai.. unga nadai romba simplea nalla iruku

  - LK
  http://lksthoughts.blogspot.com/2009/12/blog-post_24.html

  ReplyDelete
 5. @கவிநயா,
  வல்லி,
  எல்கே மூவருக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 6. அற்புதமாக எழுதியுள்ளீர்கள். பாகம் ஒன்று முடிந்த விதமே தெரியவில்லை. மீண்டும் மீண்டும் படிக்கச் சொல்லும் தொடர். நன்றி. தேவகியைப் பார்த்த பின்னர், இளவரசு மற்றும் ருக்மணியைக் காணும் கட்டம் படிக்க ஆவலாய் உள்ளேம்.

  ReplyDelete