எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 16, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சனுக்கு முடிவு நெருங்குகிறது!

அவசரம் அவசரமாய் மறுத்தான் நந்தன். “இல்லை, இல்லை இவர்கள் இந்த வீரவிளையாட்டுகள் எதிலும் பங்கெடுக்கப் போவதில்லை. அதிலும் உம்போன்ற திறமைசாலியான மல்லர்களோடு போரிடவே இவர்கள் அறியமாட்டார்கள். நாங்கள் எல்லாம் கிராமத்து மனிதர்கள் தாமே?? இந்த விதிமுறைகள் எங்களுக்குத் தெரியவும் தெரியாது, புரியவும் புரியாது. விட்டுவிடுங்கள் இவர்களை!” நந்தனின் அவசரமான பதிலால் கம்சன் முகத்தில் இகழ்ச்சி கலந்த சிறு புன்னகை தோன்றியது. சாணூரனோ விடவில்லை. இரு சகோதரர்களுக்கும் எதிரே நின்றுகொண்டான். ஒவ்வொருவரையும் உற்றுக் கவனித்தான். அந்தப் பந்தலில் இருந்த அனைவர் கவனமும் அங்கே தான் இருந்தது. உள்ளூர் மக்களுக்கு அவர்களையும் அறியாமல் கிருஷ்ண, பலராமர்களிடம் மிதமிஞ்சிய பாசம் தலை தூக்கி இருந்தது. இந்தச் சவாலை அவர்கள் ஒத்துக் கொள்ளவேண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால் யாதவத் தலைவர்களோ இதில் இருக்கும் சூக்ஷ்மமான சூழ்ச்சியை எண்ணி மனம் கலங்கினர். அடுத்து நடக்கப் போவது என்னவோ என்று கலக்கமாய்ப் பார்த்தனர்.

அவர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குப் பின்னாலே தான் அரசமகளிர் அமரும் உப்பரிகை இருந்தது. அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த தேவகிக்குக் கீழே நடப்பது என்னவெனப் புரிய நேர்ந்ததும் கலங்கிப் போனாள். சாணூரன் எங்கே? கிருஷ்ண, பலராமர்கள் எங்கே? ஆண்டவா? இது என்ன கொடுமை? ஏன் இப்படி நடக்கிறது? பயத்திலும், கலக்கத்திலும் முகம் வெளுத்த தேவகி கைப்பிடிச் சுவரின் ஓரமாய்ச் சென்று தன் மனதுக்குள் இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டாள். மீண்டும் கீழே என்ன நடக்கிறது எனக் கவனித்தாள். “உங்கள் தந்தைக்கு வயதாகிவிட்டது. அவரை ஏன் கேட்கிறீர்கள்? அவரின் அநுமதியை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” சாணூரன் இருவரையும் ஏளனத்தோடு பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘இந்த ஊருக்கு உள்ளே வந்ததுமே நீங்கள் இருவரும் காட்டிய வீரத்தைப் பற்றி ஊரே பேசிக் கொண்டிருக்கிறது. மேலும் விருந்தாவனத்திலும் நீங்கள் இருவரும் சாகசங்கள் செய்தீர்களாமே? காதில் விழுந்ஹது. இருவருமே தேர்ந்த மல்லர்கள் எனவும் கேள்விப் பட்டேனே? அது பொய்யா? “ சாணூரன் கேலி செய்வதைப் புரிந்து கொண்டனர் யாதவத் தலைவர்களும், நந்தனும், கிருஷ்ண, பலராமர்களும். ஆனாலும் கிருஷ்ணனோ, பலராமனோ பதில் ஏதும் பேசவில்லை.

சாணூரனே மீண்டும் அவர்களை மல்யுத்த மேடைக்கு அழைத்தான். இருவரையும் போட்டிக்கு அழைக்கும் விதமாய்த் தன் தோள்களையும், தொடைகளையும் இரு கைகளாலும் தட்டி சப்தத்தை எழுப்பினான். அவன் எழுப்பிய சப்தத்தைக் கண்டு அவன் சீடர்களில் ஒருவன் கையில் இருந்த சங்கால் நீண்ட ஒலி எழுப்பினான். யாதவத் தலைவர்களின் நெஞ்சம் திக் திக் கென அடித்துக் கொண்டது. கம்சனுக்கோ அடுத்து என்ன நடக்கப் போகிறது எனப் புரிந்துவிட்டது. சிரிப்பை அடக்கும் விதமாய்த் தன் மீசையில் கைகளைப் போட்டு முறுக்கிக் கொண்டு, தான் சிரிப்பது வெளியே தெரியாவண்ணம் கவனித்துக் கொண்டிருந்தான். பலராமனுக்கோ சாணூரனின் அலட்டல் பொறுக்க முடியவில்லை. தந்தை அநுமதியை வேண்டி அவர் முகத்தையே பார்த்தான். நந்தனோ அசைந்து கொடுக்கவில்லை. சாணூரன் மீண்டும் கேலி செய்தான். “ஏன் உன் தகப்பன் முகத்தையே பார்க்கிறாய்? “ இப்போது அவன் குரல் அந்தப் பகுதி முழுதும் கேட்கும் வண்ணம் எதிரொலித்தது. இப்போது நேரிடையாகவே கண்ணனைக் கண்டு, “ நீ மல்யுத்தம் செய்வாய் அல்லவா?” என்று கேட்டான் சாணூரன். கிருஷ்ணனுக்கு அவன் எண்ணம் புரிந்தது. என்றாலும் மிகவும் மென்மையாக, “உன்னுடனா? நான் மிக மிகச் சிறியவன், உன்னைவிட” என மறுமொழி தந்தான்.

அவன் விட்ட சவாலை எதிர்கொள்வது தான் சரியானது என்றே கிருஷ்ணன் உள்ளூர நினைத்தான். ஆனாலும் சாணூரனின் எண்ணம் அவனுக்கு நன்கு புரிந்ததால் தன்னை விடாது வற்புறுத்தினால் ஒழியத் தான் இதை ஒப்புக் கொள்ளக் கூடாது என்னும் முடிவில் இருந்தான். “ஹா, வா, வா, நந்தனின் மகனே, இந்தக் கிழவன் உனக்கு மல்யுத்தத்தில் சில பிடிகளைச் சொல்லித் தருவேன். அவற்றாஇ நீ என்னிடமிருந்து கற்றுக் கொண்டாயானால் வாழ்நாள் பூராவும் என்னை மறக்கமாட்டாய்!’ என்றான். மீண்டும் தொடைகளைத் தட்டினான். கிருஷ்ணனை அழைத்தான். கண்ணனோ உறுதியாக மறுத்தான். சாணூரனோ கிருஷ்ணனை எழுப்பி வலுக்கட்டாயமாய் மேடைக்குத் தள்ள முனைந்தான். அக்ரூரர் தன்னையும் அறியாமல் கூச்சலிட்டார். “இல்லை, இல்லை, இது சரியில்லை, சாணூரா, நீ ஒரு சிறுவனோடா மோதப் போகிறாய்?” யாதவத் தலைவர்களில் கொஞ்சம் தைரியம் வந்த சிலரும் ஆக்ஷேபித்தனர். வசுதேவனும் செய்வதறியாது தவித்தார். அனைவருக்கும் சாணூரனின் கொலைவெறித் தாக்குதல் பற்றி நன்கு தெரியும். அவன் விதிகளை மீறாமலேயே தன்னுடைய இந்தப் பெரிய உடலால் எதிராளியை வீழ்த்திக் கீழே தள்ளி அவர்கள் எலும்புகளைச் சுக்கு நூறாக உடைப்பான் என்பதை அறிந்திருந்தார்கள். யாதவப் பெண்மணிகள் அமர்ந்திருந்த உப்பரிகையில் இருந்தும் ஆக்ஷேபம் செய்து கூச்சல்கள் வந்தன. ஆனால் வழக்கம்போல் சூது அறியாத கிராம மக்களோ கிருஷ்ணனைத் தனிமைப் படுத்திச் சாணூரன் அழைத்ததை கிருஷ்ணனுக்குக் கிடைத்த மாபெரும் கெளரவம் என்றும் அதைக் கிருஷ்ணன் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் நினைத்தனர். அருமையானதொரு விளையாட்டைப் பார்க்கப் போகிறோம். அவர்களில் சிலர் காலையில் ருக்மிக்கு நேர்ந்தவைகளை நேரில் பார்த்திருந்தனர். ஜெயஸ்ரீ கிருஷ்ணா! என்ற கோஷம் முழங்கியது.

கிருஷ்ணனோ சற்றும் பயமே இல்லாமல் சாணூரனையே பார்த்தவண்ணம் இருந்தான். சாணூரன், “என்னைக் கண்டு பயப்படுகிறாயா சிறுவனே?” என வினவினான். அப்போது கம்சனைப் பார்த்த அக்ரூரர் அவன் உள்ளுக்குள் சாணூரனின் இந்தக் காரியத்தால் மகிழ்வது புரிய, அங்கே இருந்த வண்ணமே கம்சனைப் பார்த்து, “ அந்தகர்களின் தலைவனே, இது நியாயமே இல்லை, நீதி இல்லை, ஒரு சிறுவன் ஒரு பெரிய மல்யுத்த வீரனோடு போர் புரியவேண்டும் என்பதை தர்மசாஸ்திரங்களே ஒத்துக் கொள்ளாத ஒன்று. முதலில் இதை நிறுத்து.” என்றார். கம்சன் வாயே திறக்கவில்லை. ஆனால் சாணூரன் மீண்டும் கண்ணனைப் பார்த்து, “என்ன பயமா?” என்று கேட்டான். ‘என் தந்தை என்னைத் தடுத்தார்,” கண்ணன் உடனடியாகப் பதில் சொன்னான். ‘ஹா, ஹா, உன் தந்தையல்லவா? அப்படித் தான் செய்வார். உனக்குக் காட்டில், அல்லது யமுனைக்கரையில் பெண்களோடு ஆடிப் பாடத் தான் தெரியும். உன் தந்தைக்கு அது தெரியும் அல்லவா? அதான் தடுத்திருக்கிறார்.” இப்போது வெளிப்படையாகவே கேலி செய்தான் சாணூரன். கண்ணனோ அமைதியாக, “ஆம், நான் ராஸ் விளையாடுவேன், அதுக்கு என்ன இப்போ?” என்று கேட்டான். பின்னர் மெதுவாகத் தன் தந்தையாக அதுவரை அனைவராலும் நம்பப்படும் நந்தனைப் பார்த்து இருகைகளையும் கூப்பி வணங்கி, “தந்தையே, இதற்கு மேலும் என்னை நீங்கள் தடுக்கலாகாது.” என்றான்.

பின்னர் தன் தலைப்பாகை, தலை அலங்காரங்கள் போன்றவற்றைக் களைந்து தன்னருகில் இருந்த உத்தவனிடம் கொடுத்தான். அரங்கத்துக்குச் சென்று தானும் மல்யுத்தத்திற்குத் தயாரானான். அவன் நின்ற முறையே அழகாயும் அலாதியாகவும் இருந்தது. பார்ப்பவர்கள் மனதில் நம்பிக்கையைத் தூண்டும் விதமாய் இருந்தது. “சாணூரா, நான் தயார், “என்றான் கண்ணன். ஜெய ஜெயஸ்ரீகிருஷ்ணா! என்ற கோஷம் அந்த அரங்கை நிறைத்தது.

பலராமனுக்கு உள்ளுக்குள்ளாகக்கோபம் பொங்கிக் கொண்டு இருந்தது. அவனை முதலில் சாணூரன் அழைத்த போதே அவன் யுத்தம் செய்யத் தயாராகிவிட்டான். ஆனாலும் அவன் உள் மனம் இது சரியான நேரமல்ல என எச்சரித்தது. தன் தம்பியிடமிருந்து அதற்கான நேரம் வந்துவிட்டதற்கான அடையாளச் சைகை வரவேண்டும். காத்திருந்தான் பலராமன். தன்னைவிட ஆழ்ந்து யோசிக்கும் தம்பி எடுக்கும் பல முடிவுகள் சரியானதாய் இருப்பதை பலராமன் இதற்கு முன்னர் பலமுறை கண்டிருக்கிறான். ஆகவே காத்திருந்தான். கண்ணன் சாணூரனின் சவாலை ஏற்றுக் கொண்டதும், இதற்கெனவே காத்திருந்தாற்போல் முஷ்திகன் பலரரமனிடம் வந்தான். “ஹே, நீ?? நீ என்ன செய்யப் போகிறாய்? இப்படி ஒதிய மரம்போல் வளர்ந்திருக்கிறாயே? இன்னும் என்ன தயக்கம்? அல்லது நீ ஒரு பெண்ணா? பேடியா?” அவன் கேள்வியால் பலராமனின் கோபம் அதிகரித்தது. ஏற்கெனவே கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த அவன் கோபம் அதிகரிக்கவே முஷ்டியை ஓங்கி முஷ்திகன் முகத்தில் ஒரு குத்து விட, அவன் தடுமாறித் தன் முகத்தைப் பொத்திக் கொண்டு கீழே விழுந்துவிடாமல் இருக்கச் சமாளித்துக் கொண்டிருந்தான். பலராமனும் அரங்குக்குள் நுழைந்தான்.

மல்யுத்தம் ஆரம்பமாயிற்று.

12 comments:

 1. ஆகா..நல்ல விறுவிறுப்பு தலைவி ;))

  ReplyDelete
 2. ஆஹா! பதிவு முடிவு நெருங்குதா? ஜாலி ஜாலி!
  :P :P :P

  ReplyDelete
 3. ஆகா அருமை. கட்டுரை வேகம் எடுத்துவிட்டது. நான் சபரிமலை போனதால் பதிவுகளைப் படிக்கவில்லை இன்று ஒட்டு மொத்தமாக படித்தேன். நன்றி. சாணுரான், முஸ்திகனின் வீழ்ச்சிப் பதிவுக்காய் ஆவலுடன் காத்துள்ளேன். இந்த தொடருக்காக இந்த சிறியவன் ஒரு விருது அளித்தேன். தாங்கள் பெற்றுக் கொள்ளவில்லையா? தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் மன்னிக்கவும். நன்றி.

  ReplyDelete
 4. தெரிந்த கதை என்றாலும் நீங்கள் விவரிக்கும் விதம் அருமை. கண்முன்னே கண்ணனும் ,பலராமனும் நிற்கிறார்கள்.
  ஜெய் ஸ்ரீகிருஷ்ணா.

  ReplyDelete
 5. வாங்க கோபி,சென்னை வந்திருக்கீங்களா??? நன்றிப்பா.

  ReplyDelete
 6. திவா.

  பதிவு முடிவு தான் நெருங்குது. அதாவது கம்சனின் கொடுமைக்கு! மற்றபடி

  ஓயுதல் செய்யோம் - தலை
  சாயுதல் செய்யோம் -உண்மைகள்
  சொல்வோம் - பல நன்மைகள்
  செய்வோம்!
  :))))))))))))))) ஸோ நோ ஜாலி ஜாலி! புரியுதா??? :P

  ReplyDelete
 7. வாங்க பித்தனின் வாக்கு,
  ஹிஹிஹி. அ.வ.சி. எந்தப் பதிவுக்கு விருது கொடுத்தீங்கனு புரியலை. உங்க பேரைப் பார்த்ததுமே படிச்சுப் பார்க்காமலே க்ளிக்கி இருக்கும் பின்னூட்டங்களில் ஒண்ணாய் இருக்கும். பார்க்கிறேன். கவனக்குறைவுக்கு மன்னிக்கவும். நன்றி விருது கொடுத்ததுக்கு. நீங்கதான் என்னை மன்னிக்கணும்.:(

  ReplyDelete
 8. வாங்க வல்லி, உடல் நலம் தேவலையா??? உங்க பதிவுகள் எல்லாமும் அருமைதான், தொடர்ந்து படிக்கிறேன்.

  ReplyDelete
 9. @geetha madam

  miga arumaya elutharenga.. neenga ,valli madamlam eluthina padichapuram ennoda blogla wastenu tonuthu enaku.. romba nalla elutharenga.. valtha vayathu iurkanu teriyala. best wishes

  http://lksthoughts.blogspot.com/2009/12/blog-post.html

  ReplyDelete
 10. அச்சோ, அதுக்குள்ள முடியப் போகுதா? :(

  ReplyDelete
 11. @கவிநயா, கம்சனுக்குத் தான் முடிவு நெருங்குகிறது. பதிவுகளுக்கு இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 12. நான் விருது கொடுத்தது ஒரு பதிவுக்கு அல்ல. கண்ணனின் மொத்த தொடருக்கும். எனக்கு இந்த தொடர் மிகவும் பிடித்துள்ளது. நன்றி.

  ReplyDelete