எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 29, 2009

எல்லாரும் புதுமையான பொருட்காட்சி பார்க்க வாங்க!

சின்ன வயசிலே சர்க்கஸோ, பொருட்காட்சியோ பார்த்ததே இல்லை. பொருட்காட்சி முதல்லே பார்த்தது பதினைந்து வயசிலே. கல்யாணம் ஆகி வந்ததும் ஒரு தரம் சென்னையிலே சுற்றுலாப் பொருட்காட்சிக்கும், தேனாம்பேட்டை காங்கிரஸ் கண்காட்சிக்கும் போனேன். காங்கிரஸ் கண்காட்சி அப்போ ரொம்பவே பிரபலமான ஒன்று. நிறைய விஷயங்கள் சேகரிக்கலாம். சரித்திரத் தகவல்கள் பல இடம் பெற்றிருக்கும். பயனுள்ள கண்காட்சியாக இருந்தது. அதுக்கப்புறமா செகந்திராபாத்திலே இருக்கும்போது அங்கே சர்க்கஸ் வந்தது, கூடவே பொருட்காட்சியும். எங்க பெண்ணும், பையரும் குழந்தைங்க அப்போ. அவங்களுக்குக் காட்டணும்னு நம்ம ரங்ஸுக்கு ஆசை அதனால் சனி, ஞாயிறுனா கூட்டம் அதிகம் இருக்கும்னு வார நாட்களின் ஒருநாள் அவர் ஆப்பீச்சுக்கும், பொண்ணுதான் அப்போப் படிச்சுட்டு இருந்தா, அவ பள்ளிக்கும் ஒருநாள் விடுமுறை போட்டுட்டு முதல்லே சர்க்கஸுக்கும், அப்புறமா பொருட்காட்சிக்கும் போனோம். வாழ்நாளில் முதலும் கடைசியுமா சர்க்கஸ் பார்த்தது அப்போத் தான். அதுக்கப்புறமா பல பொருட்காட்சிகள், கண்காட்சிகள். யு,எஸ்ஸில் கிறிஸ்துமஸ் சமயம் நடக்கும் பல்வேறு காட்சிகள், விழாக்கள். வட மாநிலங்களின் சாத்தம், ஆட்டம் என கிருஷ்ண ஜன்மாஷ்டமிக் கொண்டாட்டங்களின் கண்காட்சிகள், அருமையான ஒன்று. இப்படிப் பல பொருட்காட்சிகள் பார்த்து இப்போப் பொருட்காட்சிக்கே போகறதில்லை. இப்போ எதுக்கு இதெல்லாம்னு கேட்கறிங்க இல்லை???? போனவருஷம் ஆன்மீகப் பொருட்காட்சி சென்னையில் நடை பெற்றதுனு பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டேன். நாங்க அப்போ பரோடா போயிட்டோம். அதனால் பொருட்காட்சிக்குப் போகமுடியலை. மேலும் போன வருஷம் தான் ஆரம்பம். போதிய விளம்பரம் இல்லை. மேலும் மொழி ஒரு பிரச்னையாக உள்ளூர் மக்களுக்கு இருந்திருக்கிறது. பெரும்பாலும் ஆங்கிலமாகவே அமைய சிலருக்குப் புரிதலில் பிரச்னையும் இருந்திருக்கிறது. அது பற்றி ஒரு விமரிசனம் படித்துவிட்டு நானும் ஏதோ இரண்டு வரி எழுதி இருந்தேன்.

இந்த வருஷமும் அந்தப் பொருட்காட்சி இந்த மாதம் 24-ம் தேதி ஆரம்பித்து, 28-ம் தேதி வரையில் நடைபெறுகிறது என தினசரிப் பத்திரிகைகள், வாரப் பத்திரிகைகள், சில குறிப்பிட்ட தொலைக்காட்சி சானல்கள் மூலம் தெரிந்து கொண்டோம். ஆனால் பொருட்காட்சி நடக்குமிடம் திருவான்மியூர். நாங்க இருப்பது வடமேற்கு என்றால் அது தென் கிழக்கு. சரியான எதிரெதிர் மூலைகள். எங்கே????னு பெருமூச்சு, சிறுமூச்சு, மூச்சை அடக்கும் பயிற்சினு எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். இந்த அழகிலே கால்வலிக்குச் சாப்பிடும் மாத்திரையின் பக்கவிளைவுகள் வேறே அதிகமா இருந்தது. கனவெல்லாம் காணாதேனு ஒரே அதட்டல் நம்ம ரங்க்ஸ் கிட்டே இருந்து. ஆசை இருக்கு தாசில் பண்ணனு வழக்கமான டயலாக் வேறே. நொந்து நூலாகிக் கிடந்தேன். வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

என் நிலைமையைப் பார்த்து பயந்து போன அவர் ஏகப்பட்ட கண்டிஷன்களோட கூட்டிட்டுப் போக சம்மதிச்சார். எல்லாத்துக்கும் ஒத்துண்டாச்சு. ஞாயிறன்று போக முடிவு செய்தால் அன்னிக்குனு பார்த்து என் தம்பி, மதுரையிலே இருந்து அண்ணா, மன்னி, (பெரியப்பா பையர்) எல்லாரும் வரதாச் சொல்லி இருந்தாங்க. திங்களன்று கடைசிநாள் பொருட்காட்சிக்கு. எப்படிப் போறது? அன்னிக்கு வாரத்தின் முதல் நாள், அதோட, பொருட்காட்சிக்குக் கடைசிநாள், வைகுண்ட ஏகாதசி வேறே. சரிதான்! பொருட்காட்சி ஆசையையே வழிச்சுத் துடைச்சுப் போட்டுட்டுப் பேசாமல் இருந்தேன். ஞாயிறன்று காலையிலே என் தம்பி தொலைபேசி, உங்க வீட்டுக்கு இந்த முறை வரலைனு சுபச் செய்தியைத் தெரிவிக்க, உடனடியாக அதிரடி மந்திராலோசனைக் கூட்டம் நடத்தி அன்னிக்குப் பொருட்காட்சிக்குச் செல்லுவது பற்றிய அவசரச் சட்டமும் உடனடியா அமுலுக்குக் கொண்டு வந்து, அதை என் அண்ணாவிடமும் சுபஸ்ய சீக்கிரமாத் தெரிவிச்சாச்சு. அவரும் பச்சைக்கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட, அன்னிக்கு மத்தியானமா, ரங்க்ஸ் எமகண்டம் வரப் போறது, சீக்கிரமா வீட்டை விட்டு வெளியே போனு என்னை விரட்ட, (அவர் குளிக்கப் போகக் கூட இதெல்லாம் பார்ப்பார், இதுக்குக் கேட்கணுமா? :P) நானும் கணவனே கண் கண்ட தெய்வம்னு அவர் சொல்லை மீறாத மனைவியாக சரியாய்ப் பதினொரு மணி ஐம்பத்தைந்து நிமிஷங்களுக்கு வீட்டுக்கு வெளியே வந்தேன்.

பலகை போட்டு வண்டியை இரண்டரை அடி கீழே இருக்கும் சாலையில் ஏற்கெனவே இறக்கியாச்சு. ஆனால் அங்கே இருந்து வண்டியிலே போகமுடியாது. கொஞ்ச தூரம் நடந்து போய் அடுத்த தெருவிலே தான் ஏறிக்கணும். கைலை யாத்திரையை விடக் கஷ்டமான பயணம். அதைக் கடந்து அடுத்த தெருவுக்கு வந்து வண்டியிலே ஏறிட்டுப் பேருந்து நிலையத்துக்கு வந்து வண்டியை வச்சுட்டுத் திருவான்மியூர் போகும் பேருந்து இல்லைங்கறதாலே திநகர் பேருந்தைப் பிடிச்சு உட்கார்ந்தோம். பேருந்தும் உடனே கிளம்பிடுச்சு. ஞாயிற்றுக்கிழமைனாலும் பொங்கல் புதுத்துணிகள் வாங்க அநேகமாய்த் திருத்தணி, திருப்பதினு அக்கம்பக்கம் ஊர்க்காரங்க எல்லாம் திநகர் நோக்கிப் படைஎடுக்கிறாங்க போல! அவ்வளவு கூட்டம்! விவேக் அருகேயே பாண்டி பஜார், பனகல் பார்க்னு நிறுத்திடறாங்க. அங்கிருந்து திநகர் பேருந்து நிலையம் போகத் தான் நம்ம பேருந்துக்கு ஒரு மணி நேரம் ஆகுது. போறாத்துக்கு அந்தச் சின்னப் பாலத்திலே வண்டிகளை வேறே வரிசையா நிறுத்திடறாங்க. பாலம் தாங்குமானு பயமா இருக்கு! கீழேயும் போக்குவரத்து நெரிசல், மேலேயும் போக்குவரத்து நெரிசல். நடைபாதைகளிலோ கேட்கவே வேண்டாம். ஜனக்கூஊஊஊஊஊட்டம். எல்லாரும் இந்தக் கூட்டத்தில் ஒருத்தரை ஒருத்தர் அடையாளம் கண்டு, என்ன பேசி, எப்படிப் பார்த்து, எப்படித் தேர்ந்தெடுக்கிறாங்கனு எனக்கு ஆச்சரியமாவும் இருந்தது. நமக்குச் சரியா வராதுனும் நினைச்சுண்டேன். பட், தோளில் ஒரு தட்டல்! திரும்பிப் பார்த்தால், அட, நம்ம ரங்க்ஸ், இறங்கு, பேருந்து நிலையத்துக்குள்ளே போகாது, பர்க்கிட் ரோடிலேயே நிறுத்தறாங்க. உள்ளே போய்த் திருவான்மியூர் பேருந்தைப் பிடிக்கலாம்கறார். ஆமாம் இல்லை, அட, நாம ஆன்மீகப் பொருட்காட்சி பார்க்க இல்லை கிளம்பி இருக்கோம்???? அதை விட்டுட்டேனே??? ஹிஹிஹி, நாளைக்குப் பார்ப்போமா?? இரண்டு நாளா உடம்புதான் படுத்தினதுனா ஆற்காட்டாரும் நினைச்ச நேரம் விசிட். இந்தப் பதிவையே இப்போ மூணாம் தரமாக் கொடுக்கிறேன், போகுதா பார்க்கலாம்.

4 comments:

 1. ம்......... அப்புறம்????

  ReplyDelete
 2. த்யாகராய நகர் பனகல் பார்க், பாண்டி பஜார், உஸ்மான் ரோடு போன்ற இடங்களில் நாம் காண்பது மக்கள் காட்சி.

  பொருள் காட்சி என்று சொல்வதானால் அங்கே நடை பாதை கடைகளில், வண்டிகளில் விற்கும் குடை, துணி, காதணிகள், காலணிகள், சுண்டல், இளநீர், சிப்ஸ் போன்றவை.

  ReplyDelete
 3. இருங்க துளசி, முதலில் போணியா???

  ReplyDelete
 4. வாங்க குப்பன், யாஹூ, பொருட்காட்சி என்றால் பல்வேறு விஷயங்களையும் தொகுத்துக் கொடுக்கும் அரங்கங்களின் நிகழ்ச்சிகள், அவற்றின் செய்முறைகள் எனப் பலவும் உண்டு. உதாரணமாய்ப் போலீஸ் அரங்கம் என்றால் மக்கள் சேவையில் அவர்களின் பங்குங்கறதில் ஆரம்பிச்சு, மக்கள் எப்படிப் போலீசை அணுகவேண்டும் என்பது வரையிலும் சொல்முறை விளக்கங்கள், செய்முறை விளக்கங்கள், போட்டிகள், பரிசுகள் என இருக்கும். போலீஸ் அரங்கமும், கோளரங்கங்களின் செயல்பாடுகளும் மிக மிக அருமையாக இருக்கும்.

  ReplyDelete