எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 16, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!


ஐந்து சகோதரர்களுடன், கண்ணனும், பலராமனும் சந்திப்பு!


மூன்று நாட்கள் கடந்துவிட்டன. உபநயனத்திற்குக் குறிக்கப் பட்ட நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது மதுரா நகரிலே திடீரென ஒரே கோலாகலம், ஆட்டம், பாட்டம், அரண்மனையின் அனைத்து மக்களுக்கும், சேடிப் பெண்களிடையிலேயும் ஒரே பரபரப்பு. அரண்மனையின் இளவரசிகளுக்குள்ளேயும் சளசளவென்ற பேச்சுக்கள். அனைவரும் பேசியது ஒன்றே. அது ஹஸ்தினாபுரத்தில் இருந்து சக்கரவர்த்தியான ஸ்வர்கீய பாண்டுவின் விதவை மனைவி குந்தி தன் ஐந்து புத்திரர்களுடன் கிருஷ்ண, பலராமர்களின் உபநயனத்தில் கலந்து கொள்ளவென வந்து கொண்டிருக்கிறாள் என்ற செய்தியே. அவளுடன் கூட வருவது விதுரர் என்பவராம். திருதராஷ்டிரனுக்கும், பாண்டுவிற்கும் கடைசி சகோதரராம். ஹஸ்தினாபுரத்தின் இப்போதைய அரசனும் பிறவிக்குருடனும் ஆன திருதராஷ்டிரனின் சபையின் முக்கிய மந்திரியாம். மிகவும் புத்திசாலியும், விவேகியும் ஆவாராம். சட்டதிட்டங்களை நன்கு அறிந்து வைத்திருந்ததோடு மன்னனைச் சரியான வழியிலும் நடத்துவதற்கு முயன்று வருகிறாராம்.

கண்ணனுக்கு ஹஸ்தினாபுரத்தைப் பற்றியும் குரு(KURU என்பதே சரியான உச்சரிப்பு) வம்சம் பற்றியும் மேலும் தகவல்கள் கூறினார்கள். தங்கள் யாதவ குலம் எப்படி பரதமன்னனின் ஒரு கிளையோ அது போல குரு வம்சமும் பரத மன்னனின் வம்சத்தின் ஒரு கிளைதான் என்பதையும் கூறினார்கள். ஜராசந்தனுக்குப் பின்னர் ஆர்ய வர்த்தத்தின் பலம்பொருந்திய அரசாட்சி அவர்கள் கையில் இருக்கிறதென்றும் கூறப்படது. திருதராஷ்டிரனுக்குக் கண் தெரியாது என்றாலும் அவனுக்கு உதவியாக பலமும், வீரமும் பொருந்திய ஞாநியான பீஷ்மர் என்பவர் துணை இருந்தார் என்றும், அந்த பீஷ்மர் கங்கையின் புத்திரர் என்றும், பரசுராமரால் பயிற்றுவிக்கப் பட்டவர் என்றும் சொல்லப் பட்டது. அனைவரும் அவரைப் பிதாமஹர் என்றே அழைக்கின்றனர் என்றும் கூறினார்கள். ஹஸ்தினாபுரத்தின் அனைத்து வீரர்களுக்கும் என உள்ள ஆயுதப் பயிற்சிக் கூடமும், வேத, சாஸ்திரப் பயிற்சிக் கூடமும் பரசுராமரின் மற்றொரு சீடரான துரோணாசாரியார் என்பவரால் நடத்தப் பட்டு வருவதாகவும், வில் வித்தையில் இந்த துரோணாசாரியார் மிகத் தேர்ந்தவர் என்றும் கூறினார்கள். இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஹஸ்தினாபுரத்து மன்னர்களாகட்டும், மற்றவர்களாகட்டும், அனைவரும் வேத வியாஸரின் வழிகாட்டலிலேயே சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆயிற்று, இவை அனைத்தையும் கண்ணன் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அதோ, அரண்மனை வாயிலில் ஆரவாரம்!

ஆம்,, குந்தி உள்ளே வந்துவிட்டாள். நேரே வசுதேவரின் மாளிகைக்கே முதலில் வந்த குந்தி ஒருவரும் சொல்லாமலேயே கண்ணனை அடையாளம் கண்டுகொண்டாள். அவனைக் கட்டி அணைத்து, “பொல்லாதவனாய் இருக்கிறாய் என்று கேள்விப்பட்டேனே, வாசுதேவகிருஷ்ணா, உன்னைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.” என்று சொன்னாள். அவள் அணைப்பில் ஒரு தாயின் மாசற்ற அன்பு தென்படுவதைக் கண்ணனால் உணர முடிந்தது. தன் மற்றொரு அத்தைக்கும் இவளுக்கும் எவ்வளவு வேறுபாடு?? கண்ணன் முகத்தில் புன்னகை அரும்பியது. அவன் கவனம் அவளுடைய ஐந்து புத்திரர்கள் பால் சென்றது. அதே நேரம் குந்தி வசுதேவரின் கால்களில் விழுந்து எழுந்தாள். தேவகியைக் கட்டி அணைத்த குந்தி சற்று நேரம் வாய்விட்டு அழுதாள். இரு பெண்களும் தங்கள் மண வாழ்க்கையில் பல்வேறு விதமான துன்பங்களைச் சந்திருப்பது அவர்களைப் பிணைக்கும் ஒரு கயிறாகவே விளங்கிற்றோ???

கண்ணன் குந்தியின் ஐந்து புத்திரர்களையும் பார்த்தான். மூத்தவன் யுதிஷ்டிரன், தன்னை விட மூன்று வயது பெரியவனாய் இருப்பானோ?? ஆம், அப்படித்தான் இருக்கும், ஆனாலும் அவன் முகத்தில் மிக, மிகப் பெரியவன் போல் ஒரு முதிர்ச்சி, ஓர் அமைதி, நிதானம், கம்பீரம். வயதுக்கு மீறிய அந்த முதிர்ச்சியைக் கண்டதுமே கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது கண்ணனுக்கு. அடுத்தவன் பீமன் தன் அண்ணனைவிட ஒரு பிடி கூட வளர்ந்திருப்பானோ? இருக்கலாம்?? ஆனால் அவனுடைய உடல் பருமனும், உடல்கட்டும் அதைச் சொல்லவிடவில்லை. ஆனால் அவன் முகம், எப்போதும் ஏதோ யாரையோ கேலி செய்வது போல் தோற்றமளிக்கும் முகம், கிண்டல் செய்யும் கண்கள், வெடிச்சிரிப்பாய்ச் சிரிக்கும் சுபாவம், அவன் மிகவும் ஹாஸ்ய உணர்வு உள்ளவன் என நிரூபித்துக் கொண்டிருந்தது. தன்னைவிடப் பெரியவனான அவனைக் கண்ணன் நமஸ்கரிக்கக் குனிந்த போது முதுகில் விழுந்தது, “பட்” என்ற ஓர் அடி. யுதிஷ்டிரனைப் போல் தலையைத் தொட்டு ஆசீர்வதிக்கவில்லை இவன். இந்த ஓர் அடியால் நான் உனக்கு நண்பனே எனக் காட்டிவிட்டான். கண்ணன் நிமிர்ந்து பார்த்து வெளிப்படையான அவன் போக்குப் புரிந்துவிட்டது எனக் காட்டும் விதமாய் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

அடுத்து மூன்றாமவன். என்னைப் போல் இருக்கிறானோ? இல்லை, இல்லை, என்னுடைய உடலைவிடச் சிறிய உடலாக, மெலிந்த உடலாக உள்ளது. தூக்கத்தில் கூட வில்லையும், அம்புகளையும் பிரிய மாட்டான் போலிருக்கிறதே? பெரிய வில்லாளியோ?? மிகவும் புத்திசாலி என்று கண்கள் காட்டிக் கொடுக்கிறது. உடல் அமைப்பு நல்ல வாட்டமாய், வடிவாய் இருக்கிறான். மேலும் மிகவும் ஒழுங்கையும், கட்டுப்பாடையும் கடைப்பிடிப்பவனாகவும், பெரியோருக்கு மிகவும் மரியாதை கொடுப்பவனாகவும் இருக்கிறான் போல. அட, இதென்ன?? நம்மையும் நமஸ்கரிக்கிறானே? ஆஹா, நாம் அவனை விடப் பெரியவனா?? சரிதான். கண்ணன் மனதில் என்னவோ ஒரு நிறைவு, இவன் அனைவரையும் விட நம்மை மிகவும் கவர்ந்துவிட்டானே? அவனைக் கீழே இருந்து எழுப்பிக் கண்ணன் அணைத்துக் கொண்டான். கடைசியில் அந்த இரட்டையர்கள், இன்னமும் குழந்தைத் தனம் போகவில்லை. பாவம், தாயை இழந்த குழந்தைகள் என்றாலும் குந்தி அத்தை அந்தத் துன்பம் தெரியாவண்ணம் தன் குழந்தைகள் போலவே வளர்த்துவருகிறாளாமே?? சிறிய குழந்தைகள், அவர்களும் அதைப் புரிந்து கொண்டு அனைவரையும் விழுந்து விழுந்து நமஸ்கரிக்கின்றனர். ஐவரும் ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிவதும் இல்லையே? எங்கே போனாலும் சேர்ந்தே போகிறார்களே??

பெரியோர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பேச்சுக்களோடு ஐக்கியமாகி அங்கிருந்து மெல்ல மெல்ல அகன்றனர். அதுக்காகவே காத்திருந்தது போல் பாண்டவர்களில் இரண்டாமவனான பீமன் கண்ணனைப் பார்த்து, கண் சிமிட்டிக் கொண்டு, “என்ன கண்ணா? உண்மையைச் சொல்லு, உன்னைப் பற்றிச் சொல்லுவது எல்லாம் உண்மையா, கதையா?? நீ நிஜமாவே கோபியரோடு ஆடுவாயா?? அப்புறம் இந்த சாகசங்கள் எல்லாம்?? நிஜமா நீயே செய்தவையா? என்னாலே நம்பமுடியலையே???” அட்டகாசமாய்ச் சிரித்த வண்ணம் கேட்டான் பீமன். இதே கேள்வியை வேறு எவரேனும் கேட்டிருந்தால் அவர்கள் கண்ணனைக் குறை கூறிக் கேலி செய்யக் கேட்டார்கள் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் பீமனின் உள்ளத்திலிருந்து வந்த இந்தக் கேள்வி அந்த இளைஞர்களிடையே சிரிப்பையே வரவழைத்தது. கண்ணனோ, “ நீ குறிப்பாய் எதைச் சொல்கிறாய், புரியவில்லை. ஒவ்வொன்றாய்க் கேளு. எதுனு சொல்லு.” கண்ணன் சிரிப்பை அடக்கமுடியாமலேயே பதில் சொன்னான். "நீங்கள் ஹஸ்தினாபுரத்துக்காரர்கள் இதைவிட அழகாய்க் கதை கண்டு பிடிப்பீர்களே??""

"ஓஓ கண்ணா, பேச்சை மாற்றாதே! நீ சிறு குழந்தையாய் இருக்கும்போதே பூதனை, பகாசுரன் (Bakasura), கேஷி, அரிஷ்டா ஆகியவர்களைக் கொன்றாயாமே?? மேலும் அந்தப் பயங்கரப் பாம்பான காலியனை அடக்கினாயே?? அப்புறமா நிஜமாவே கோவர்தன மலையைத் தூக்கிட்டியா?? உண்மையாய் என்ன நடந்ததுனு சொல்லுப்பா!" பீமனின் வேண்டுகோள்.

"அப்புறம் அந்த கோபஸ்திரீகள்?? அவங்களோடு நீ ராஸ் நடனம் ஆடினது? அதுவும் உண்மையா? ராதையாமே ஒரு கோபிகை? அவளைக் கல்யாணம் செய்து கொண்டது? அதுவும் உண்மையா??" இது அர்ஜுனன் கேட்டது. அவங்க நிஜமாவே தன்னைப் பற்றிக் கேள்விப் பட்டு வியந்து தன்னை மிகவும் உயர்வாய் நினைப்பது அவர்கள் கேள்விகள் கேட்கும் விதத்திலேயே புரிந்தது. இத்தனை நட்போடும், பாசத்தோடும், அன்புடனும் தன் அத்தை குழந்தைகள் தன்னோடு பழகுவார்கள் என்பதைக் கண்ணன் துளியும் எதிர்பார்க்கவில்லை. அவன் கண்களில் நீர் துளிர்த்தது. பீமனின் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கொண்டு அவனோடு நெருங்கிய வண்ணம், " நீ என்ன நினைக்கிறாய் பீமா?? நான் என்ன செய்திருப்பேன் என உனக்குத் தோன்றுகிறது?? அல்லது அவைகளை நானாகவே கண்டு பிடித்திருப்பேனா??" கண்ணனின் கண்களோடு முழு உடலும் சிரித்தது.

பலராமனுக்குப் பொறுக்க முடியவில்லை. வெடித்தான் அவன். கிட்டத்தட்ட உளறிக்கொட்டினான் என்றே சொல்லவேண்டும். "ஆமாம், கம்சனைக் கொன்றது, சாணுரனைக் கொன்றது, முஷ்திகனைக் கொன்றது எல்லாமும் எங்கள் கற்பனையில் உதித்தவையே! போய் மதுராவின் மக்களைக் கேளுங்களேன்! ஏன் எங்களைக் கேட்கிறீர்கள்?"

அதுவரையில் வாய்மூடிக் கொண்டிருந்த யுதிஷ்டிரன் அப்போது குறுக்கிட்டான். அவன் குரலிலேயே பணிவும், விநயமும், மன்னிப்புக் கேட்கும் தொனியும் தெரிந்தன. அவன் மிக மிகப் பணிவோடு, "சகோதரா, மன்னித்துவிடு, பீமனின் சார்பாய் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இவன் ஒரு அவசரக்குடுக்கை. இப்படித்தான் ஏதாவது கேட்டு வைப்பான். ஆனால் உங்கள் தலைவர்களின் ஒருவரான ஷங்கு என்பவர் எங்களை அழைக்க ஹஸ்தினாபுரம் வந்தபோது உங்கள் இருவரின் செயல்களையும் பற்றிக் கதை, கதையாகச் சொன்னார். அதனால் எங்களால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள், என்ன செய்ய முடியும் உங்களால் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் இருவரில் ஒருவர் என்ன நடந்தது என்பதை விளக்கமாய்ச் சொல்லுங்கள். நாங்கள் கேட்க ஆவலோடு இருக்கிறோம்." என்றான். பின்னர் கிருஷ்ணன் பக்கம் திரும்பி, மென்மையான குரலில் உறுதி தொனிக்க, "பீமனைத் தவறாய் எடுத்துக்கொள்ளாதே கிருஷ்ணா! அவன் பேசுவதே அப்படித்தான். மனதில் எதையும் வச்சுக்கத் தெரியாது அவனுக்கு! நீங்கள் இருவரும் செய்த சாகசங்களில் அவன் மதி மயங்கி அவற்றைப் பற்றியே அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான். அனவரதமும் அதே நினைப்பும் அவனுக்கு. அவன் மனம் பூரா இவையே நிறைந்துள்ளன." என்றான்.

பீமன் தன் அண்ணனையே சற்றே கேலியுடனே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை அவனால் அடக்கமுடியவில்லை.

டிஸ்கி: ரொம்பக் கேட்டதில் கூகிளார் இந்தப் படம் தான் கொடுத்தார். திரெளபதியும் இருக்கிறதுக்கு மன்னிக்கவும். இனிமேல் தான் திரெளபதி சுயம்வரமே, அதுக்குள்ளே படத்திலே போடும்படி ஆயிடுச்சு! :( கோபி கேட்ட பாண்டவர்கள் பிறந்தது பற்றிய விஷயம் எழுதி வச்சேன். அந்த டாகுமெண்ட் கிடைக்கலை. மறுபடி எழுதிப் போடணும். கோபியும் இப்போ பிசி. அதனால் கொஞ்சம் நேரம் எடுத்துக்கறேன்.

4 comments:

 1. படம் எப்படி இருந்தால் என்ன கீதா. இவ்வளவு விஷயங்களைச் சேகரித்துக் கொடுக்கிறீர்களே.
  அதற்கே ரொம்ப நன்றி சொல்லணும்.
  பீமனைப் பற்றி விவரிக்கும் போதே புன்னகை தோன்றுகிறது.

  ReplyDelete
 2. \\கடைசியில் அந்த இரட்டையர்கள், இன்னமும் குழந்தைத் தனம் போகவில்லை. பாவம், தாயை இழந்த குழந்தைகள் என்றாலும் குந்தி அத்தை அந்தத் துன்பம் தெரியாவண்ணம் தன் குழந்தைகள் போலவே வளர்த்துவருகிறாளாமே?? \\

  என்ன தலைவி இது..அப்போ இந்த இருவர் யாரோட குழந்தைகள்??

  \\கோபி கேட்ட பாண்டவர்கள் பிறந்தது பற்றிய விஷயம் எழுதி வச்சேன். அந்த டாகுமெண்ட் கிடைக்கலை. மறுபடி எழுதிப் போடணும். கோபியும் இப்போ பிசி. அதனால் கொஞ்சம் நேரம் எடுத்துக்கறேன்.
  \\\

  நானே மறந்துட்டேன்..உங்கள் ஞாபகத்துக்கு மிக்க நன்றி...நேரம் கிடைக்கும் போது போடுங்கள் ;))

  ReplyDelete
 3. மீண்டும் நன்றி வல்லி.

  ReplyDelete
 4. கோபி, நகுலனும், சகாதேவனும் மாத்ரி என்ற பெயருடைய பாண்டுவின் இரண்டாம் மனைவியின் குழந்தைகள். கொஞ்சம் பொறுங்கள். அவங்க கதையை விரிவாய் எழுதி வச்சிருந்தேன். எந்த டாகுமெண்ட்னு தேடணும்! :))))))))))))

  ReplyDelete