எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 28, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

ஜராசந்தன் யார்????

சில நாட்கள் முன்னர் தேவகியைப் பத்திப் பார்த்தோம், அவள் ஏன் துன்பம் அனுபவிக்கிறாள் என.இங்கே அது போலவே ஜராசந்தன் பற்றியும் கொஞ்சம் அறிந்து கொண்டோமானால் பின்னால் ஜராசந்தனின் வதம் வரும்போது புரிய வசதியாக இருக்கும். மகத நாட்டு மன்னன் ஆன பிருஹத்ரதன் காசி தேசத்து இளவரசிகளை மணம் புரிந்தான். சகோதரிகள் இருவரும் ஒற்றுமையாக இருப்போம் என மன்னனிடம் வாக்குக் கொடுத்திருந்தனர். அதன்படியே இருவருக்குமிடையே எந்தவிதமான சண்டை, சச்சரவும் இல்லாமல் இருந்ததைப் போல் இருவருக்கும் ஒருசேர புத்திரப் பேறும் இல்லாமல் இருந்தது. மனம் வருந்திய மன்னன் கக்ஷீவான் என்னும் முனிவரின் புதல்வன் ஆன சண்ட கெளசிகன் என்ற ரிஷியிடம் சென்று இதற்கான பரிகாரம் கேட்டான். முனிவர் மனம் மகிழும்படியாகப் பணிவிடைகளையும் செய்துவந்தான். அவன் சேவைகளால் மனம் மகிழ்ந்த முனிவரும் அவனுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும்படியாக ஈசனை வேண்டிக் கொண்டு மந்திர உச்சாடனங்கள் பலவும் செய்து ஒரு மாம்பழத்தில் அந்த மந்திரங்களை உருவேற்றி மன்னனிடம் கொடுத்தார்.

மன்னனும் அரண்மனைக்கு வந்தவன் அதை இரு மனைவியருக்கும் பகிர்ந்து அளித்தான். இருவரும் சரிபாதி மாம்பழத்தைச் சாப்பிட்டனர். பின்னர் கருவுற்றனர். மனம்மகிழ்ந்த மன்னனும், அரசியரும் குழந்தைப் பேறை எதிர்பார்த்திருக்கப் பிறந்ததோ ஒரு குழந்தையின் சரிபாதி. ஒரு பாதி முகம், ஒரு கை, உடலின் ஒரு பாதி, ஒரு கால் என ஒரு மனனவிக்கும், மற்ற பாதி இன்னொரு மனைவிக்குமாய்க் குழந்தை பிறந்திருந்தது. கலங்கிய சகோதரிகள் அந்தக் குழந்தையைப் பிண்டங்கள் என எண்ணிக் கொண்டு பணிப்பெண்ணிடம் கொடுத்துக் காட்டிலோ அல்லது வேறெங்காவதோ வீசி எறியச் சொன்னார்கள். பணிப்பெண்ணும் துணியில் சுற்றிக் காட்டில் வீசி எறிந்தாள். அங்கே ஜரா என்னும் அரக்கி ஒருத்தி இருந்தாள். அவள் அரச உடையுடன் ஒரு மூட்டை கிடந்ததைக் கண்டு அதைப் பொறுக்கி எடுத்து இரு கூறுகளாய்க் கிடந்த குழந்தையின் பாகங்களை ஒன்று சேர்க்கக் குழந்தைக்கு உயிர் வந்தது. குழந்தை அரசனுடையது என்பதையும் புரிந்து கொண்டு அவள் குழந்தையை அரசனிடமே ஒப்படைத்தாள். அரக்கியால் குழந்தை முழுமை பெற்றதால் அவள் பெயரை வைத்தே குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயரிட்டான் மகத நாட்டு மன்னன்.

ஜராசந்தன் பல்வேறு தவங்களையும் புரிந்தான். அதன் மூலம் பல வரங்களைப் பெற்றான். தனக்கு நிகர் யாருமில்லை என்று மகத நாட்டுச் சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்து வந்தான். எவராலும் வெல்லமுடியாத வரத்தையும் பெற்றான். அஸ்தி, ப்ராப்தி என்ற தனது இரு மகள்களையும் அண்டை நாட்டு யாதவகுலத் தலைவன் உக்ரசேனனின் மகன் ஆன கம்சனுக்கு மணம் புரிவித்து வைத்திருந்தான். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வந்த கம்சனுக்கு அவன் போட்ட ஒரே நிபந்தனை திருமணம் செய்து கொண்டு கம்சனே அரசன் ஆக முடிசூட வேண்டும் என்று. அதன்படியே தன் தந்தையான உக்ரசேனரைச் சிறையில் அடைத்துவிட்ட கம்சன் தான் அரியணை ஏறித் தன்னைத் தானே சக்கரவர்த்தி எனப் பிரகடனம் செய்து கொண்டிருந்தான். கொடுங்கோல் ஆட்சியும் புரிந்தான் கம்சன். இந்தக் கம்சனைத் தான் கண்ணன் வதம் செய்தார். ஆனாலும் ஜராசந்தன் அப்போதும் அழியாமல் கண்ணனைத் துரத்தித் துரத்தி யுத்தம் செய்வான். தன் மருமகன் இறந்ததற்குப் பழி வாங்குவான். கிட்டத் தட்டப் பதினாறு முறைகள் போர் நடந்தும் வெல்ல முடியாத ஜராசந்தனைக் கடைசியில் தந்திரமாய்க் கண்ணன் பீமனை விட்டுக் கொல்லச் செய்வார். அது பின்னர் வரும்.
*************************************************************************************

கர்ணன் யார்??

அடுத்துப் பஞ்ச பாண்டவர்களைப் பற்றிப் பார்க்கும் முன்பாக அவர்களில் மூத்தவன் ஆன குந்தியின் பிள்ளை கர்ணனின் பிறப்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். இவை எல்லாம் நம் கதை தொடரும்போது புரிதலுக்கு வசதியாக இருக்கும். பலரும் ஆழ்ந்து படிக்கவில்லையோ என்றும் தோன்றுகிறது. சில விஷயங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கணும். அப்படிப்பட்ட ஒரு விஷயம் இது. அனைவரையும் சிரமப் படுத்துவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
கர்ணன் யார் என்று சில நாட்கள் முன்னர் துளசிதளத்தில் சூடு பறக்கப் பதிவுகளும், பின்னூட்டங்களும் போய்க் கொண்டிருந்தது. கர்ணனுக்கும் ஒரு முன் பிறவிக் கதை உண்டு. அதன்படியே தான் அவன் கர்ணனாய்ப் பிறந்து நடந்தவை எல்லாம். சஹஸ்ர கவசன் என்றொரு அசுரன் வழக்கம்போல் தவங்கள் செய்து தன் உடலை ஆயிரம் கவசங்கள் காக்கவேண்டும் எனக் கேட்க அவ்வாறே அவன் உடலுக்கு ஆயிரம் கவசங்கள் ஏற்பட்டன. அதனாலேயே அவனுடைய உண்மையான பெயர் நமக்கு இன்னும் தெரியவில்லை. சஹஸ்ர கவசன் என்ற பெயராலேயே தெரிந்து கொள்கின்றோம். ஆயிரம் கவசங்களைப் பெற்றது மட்டுமில்லாமல், தன்னை எவராலும் கொல்லவோ, வெல்லவோ முடியாது. கடுந்தவம் இயற்றிக் கொண்டு போர் புரிபவர் யாரோ அவர்கள் மட்டுமே கொல்ல முடியும், வெல்ல முடியும் என்றும் வரம் வாங்கிக் கொண்டு விட்டான். யாரானாலும் ஒன்று தவம் செய்யமுடியும், அல்லது போர் புரிய முடியும். இரண்டும் ஒருசேர யாரால் செய்ய இயலும்? அதுவும் ஒரே நபரிடத்தில்? இனி நம்மை வெல்ல இப்பூவுலகில் மட்டுமில்லை, ஈரேழு பதிநாலு லோகங்களிலும் யாரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தான் சஹஸ்ர கவசன்.

அனைவரும் காக்கும் கடவுள் ஆன மஹாவிஷ்ணு தான் இதற்கு உதவவேண்டும் என அவரை வேண்ட அவரும் தன்னை இருவேறு வடிவங்களாக மாற்றிக் கொண்டார். ஒரு வடிவம் நரன், மற்றொரு வடிவம் நாராயணன். நாராயணன் தவத்தில் ஆழ்ந்திருக்க, நர வடிவில் இருந்த விஷ்ணு சஹஸ்ர கவசனோடு சண்டை போடுவார். பின்னர் நரன் தவம் செய்ய ஆரம்பிக்கும்போது நாராயணன் சண்டை போடுவார். இப்படியே தவமும், போரும் மாறி மாறி நடந்து 999 கவசங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. கடைசியாய் ஒரு கவசமும், காது குண்டலங்களும் இருந்தன. அப்போது நரன் போருக்கு வர, சஹஸ்ர கவசன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி சூரியனிடம் தஞ்சம் அடைந்தான். இவன் ஒரு அரக்கன், வாங்கிய வரங்களை முறை தவறிப் போர் செய்யப் பயன்படுத்துகிறான் என்பதை அறியாத சூரியனும் அவனைக் காத்ததோடு அல்லாமல், தக்க சமயத்தில் பூவுலகில் பிறக்க வைப்பதாகவும் உறுதி அளித்தார்.அவனைப் பாதுகாத்து வந்தார். விஷயம் தெரிந்த மஹாவிஷ்ணு இவனுக்கு மரணம் தன்னாலோ அல்லது தன்னில் ஒரு பாதியான நரனாலோ தான் ஏற்படும் என்று சொல்லி விட்டார். அவன் உடலைத் துளைத்து எடுத்தார். அப்போது அவனின் சக்தியைத் தன்னுள் பாதுகாத்து வைத்துக் கொண்ட சூரியன் குந்தி துர்வாசரின் வரத்தைப் பற்றிப் பரிசோதிக்கும்போது சஹஸ்ர கவசனின் சக்தியோடு தன் சக்தியையும் சேர்த்து ஒரு குழந்தையாக குந்திக்கு அளித்தான். சஹஸ்ர கவசனின் மிச்சம் இருந்த ஒரு கவசத்தோடும், குண்டலங்களோடும் குழந்தையாய்ப் பிறந்தவனே கர்ணன் ஆவான். நரன் அர்ஜுனன் ஆகவும், நாராயணன் கண்ணனாகவும் பிறந்தனர். இவர்கள் இருவருமே கர்ணனின் மரணத்திற்கும் காரணமாக ஆயினர். இதுவே கர்ணன் கவச, குண்டலங்களோடு சூரியனின் மகனாய்ப் பிறந்ததின் கதை ஆகும்.

8 comments:

 1. அம்மா அலுவலக பணிச்சுமை காரணமாய் தங்களின் தொடரைப் படிக்க முடியவில்லை. இன்று அனைத்துப் பகுதிகளையும் படித்தேன். சகஸ்ரகவசனின் கதை நான் இன்றுதான் முதலில் கேள்விப் படுகின்றேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 2. unga blog link engayo miss pannitu ivlo naal varama miss panniten. innikuthan officela work illama freeya irunduchi. ore mucchila padichiten

  ReplyDelete
 3. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா...

  ReplyDelete
 4. வாங்க பித்தனின் வாக்கு, அலுவலக வேலைதான் முதல்லே. அப்புறம்தான் இதெல்லாம். இது எங்கேயும் போகாது. அதனால் என்ன?? நேரம் கிடைக்கும்போது வந்து பார்ப்பதற்கு மகிழ்ச்சி. நன்றி.

  ReplyDelete
 5. வாங்க எல்கே, அதான் ஃபாலோ அப் கொடுத்திருந்தீங்க போல?? அப்படியும் காணாமப் போச்சா? இன்னொருத்தர் கூட பதிவு திறக்க முடியலையேனு கேட்டுட்டு இருந்தார். இப்போ வருதா தெரியலை! :)))))))

  ReplyDelete
 6. வாங்க மேனகாசத்தியா, முதல் வரவு?? வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 7. //வாங்க எல்கே, அதான் ஃபாலோ அப் கொடுத்திருந்தீங்க போல?? அப்படியும் காணாமப் போச்சா?//

  athu ippathana tandhen..veetu systemla favl;a unga blogs iruku...ana last 2 weeks veetla guest jasti system use panalla..office system format pannen athula link vittu pochu

  ReplyDelete
 8. மறு வரவுக்கும், விளக்கத்துக்கும் நன்றி எல்கே. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் கடமைப்பட்டிருக்கேன். மீண்டும் நன்றி.

  ReplyDelete