எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 01, 2010

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

ஹிஹிஹி, சஸ்பென்ஸ் வைக்கிறேன்னு திவா சொல்றார், இது கூட இல்லைனா யாரு வந்து படிப்பாங்க?? அதான், நீங்க எல்லாம் நினைக்கறாப்போல் முக்கியமான ஆளுங்க யாரும் இல்லை அவங்க. எங்களுக்குத் தெரிஞ்சவங்க. அங்கே நின்றிருந்த இருவரும் வேறு யாரும் இல்லை. இங்கே அம்பத்தூரில் விவேகாநந்தா வித்யாலயா பள்ளிகளின் தாளாளரும், தலைமை ஆசிரியையுமே ஆகும். அதுக்குள்ளே அவங்களும் எங்களை அடையாளம் கண்டு கொள்ள ஒரு நிமிடம் நாங்க பேசிக் கொண்டோம். அதற்குள் வெங்கையா நாயுடு அங்கே வர, தாளாளர் பொறுப்பில் இருந்தவர் அவரோடு பேசிக் கொண்டே செல்ல, தலைமை ஆசிரியையும் பின் தொடர்ந்தார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...... கூட்டணி பத்தி என்னை ஒருவார்த்தை கூடக் கேட்காமல் சென்ற வெங்கையா நாயுடுவின் கட்சியை நானும் புறக்கணிப்பது என்ற முடிவை எடுக்க, நாங்களும் எங்கள் பார்வையை அரங்கங்களுக்குள் செலுத்தினோம்.

பல இயக்கங்களும் நடத்தி வரும் சமூக சேவைகள் பட்டியலிடப் பட்டிருந்தன. திருவாவடுதுறை ஆதினமும் அவர்களின் வெளியீடான புத்தகங்களும் ஆதீனத்தின் அரங்கில் காணக்கிடைத்தது. அதிலே ஆடல்வல்லான் என்ற புத்தகம் பல நாட்களாய்ப் படிக்க நினைத்தது இருந்தது. கையில் எடுத்துப் பார்த்தேன் விலையை. நான் ஆட ஆரம்பிச்சுட்டேன். கீழே விழுந்துடறதுக்குள்ளே புத்தகத்தை அதன் இருப்பிடத்தில் திரும்ப வச்சுட்டு மருவாதையா இடத்தைக் காலி செய்தேன். திருப்பனந்தாள் காசிமடம் செய்துவரும் தமிழ்த்தொண்டுகள் பட்டியல் இடமுடியாதவை. அண்ணாமலைப்பல்கலைக்கழகம் வாயிலாகப் பல்வேறு தமிழ்நூல்களை மலிவுப் பதிப்புகளாய்க் கொடுத்துவருவதோடு பழைய கோயில்களுக்குப் புனர் நிர்மாணம் செய்யும்போது வேண்டிய அஷ்டபந்தன மருந்து குறைந்த விலையிலும் கொடுத்து உதவுகிறது. தமிழுக்கும், கல்விக்கும் முதலிடம் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது காசிமடம். திருப்பனந்தாளிலேயே நிறையப் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்க ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி கற்கிறார்கள். தமிழ் இலக்கிய நூல்களும் தரமாக மிகக் குறைந்த விலையில் வெளியிடப் படுகிறது. "ஸ்ரீகுமரகுருபரர் "பெயரில் ஒரு மாதப் பத்திரிகையும் வருகிறது. கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும், கல்விக்கும் மாபெரும் சேவை செய்து வருகிறது. இந்த மடத்தின் அரங்கமும் அவை வெளியிட்டு வருகிற புத்தகங்களும் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

வெங்கையா நாயுடு முன்னாலே போக நாங்க மெதுவாப் பார்த்துண்டே பின்னாலேயே போனோம். சேவாபாரதி, சேவாலயா போன்றவர்களின் அரங்கங்கள் அருமையாக இருந்தது. இன்னொரு பக்கம் அருணாசல பிரதேசத்தில் விவேகாநந்தா யுவகேந்திராவின் வேலைகள் பற்றிய ஒரு நேர்முக வர்ணனை. அருமையாப் பாடுபட்டு அங்கே போய் மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்கள். முக்கியமா அங்கே போக்குவரத்துக்கு மக்கள் அவதிப்படுவதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் தேவையான வசதிகளை அவர்கள் இருக்குமிடமே கொடுக்க முயல்கின்றனர். அர்ஷவித்யா குருகுலம் ஸ்வாமி தயாநந்த சரஸ்வதியின் இயக்கம் செய்யும் சேவைகளையும் பட்டியல் போடமுடியவில்லை. எண்ணற்ற பள்ளிகள், மருத்துவமனைகள், மகளிர் மேம்பாட்டு இயக்கங்கள், தமிழ் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள், யோகா வகுப்புகள், ரத்ததான முகாம்கள், இலவச மருத்துவ சிகிச்சை மையங்கள் என அனைத்தும் பட்டியல் போடப் பட்டு எவை எவை எங்கே எங்கே எப்போது நடந்தது, இனி நடக்கப் போகிறது என அனைத்தையும் கூறினார்கள். எல்லா இடங்களிலும் மாணவ, மாணவியர் கூட்டம், அவர்களை ஆகர்ஷிக்கும் வண்ணம் அவர்களுக்கேற்ற கேள்வி, பதில் போட்டிகள், பரிசுகள் எனக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

நாங்க படிக்கும் காலத்தில் வீரர்களின் வரலாறுகள், புராதன மஹான்களின் வரலாறுகள், எனப் படிச்சோம். வீரம் செறிந்த கதைகளைப் படிக்க முடிந்தது. பாரதியின் தேசபக்திப் பாடல்களும், நாமக்கல் கவிஞரின் பாடல்களும் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை(இந்தக் காலப் பிள்ளைகளுக்கு இவங்களைத் தெரியுமா) அவர்களின் பாடல்களுமே அதிகம் படிச்சிருக்கோம். ஆங்கிலத்தில் என்றால் ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பாடல்கள் இடம்பெறும். ஆனால் இப்போதோ??? இவை எதுவுமே பள்ளியில் அறவே கிடையாது. குடிமைப் பயிற்சி என்றொரு வகுப்பும் இருந்தது. நல்ல குடிமகனாக வாழவும், நடத்தைகளையும் கற்றுக் கொடுத்தனர். இன்றைக்கு இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் நம் நாட்டைப் பற்றிய கருத்து அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறாப்போல் இல்லையோனு தோணுது. வீரசிவாஜியைப் பற்றிய கதையே தவறான முறையிலேயே சொல்லப் படுகிறது. அதே போல் ராமாயணம், மஹாபாரதம் போன்றவையும் முக்கியமாய் கிருஷ்ணர் ஒரு பெண் பித்தர் எனச் சித்திரித்துக் கூறுவதுமே மேலோங்கி இருக்கிறது. அவை எல்லாம் மாறவேண்டுமானால் மாணவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளைக் கட்டாயம் பார்த்து நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வது அவசியமே. அந்த வகையில் மாணவ, மாணவியர்களின் வரவு மகிழ்வைத் தந்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அரங்கம் ஒரு கோயில் போலவே காட்சி அளித்தது. அனைவரும் கால் நடையன்களைக் கழற்றி வைத்துவிட்டே உள்ளே செல்லவேண்டும். உள்ளேயும் பிரசாதம் போல் வெங்கடாசலபதி படம் தருகின்றனர். கூடவே வேங்கடேச சரணாகதி தீக்ஷை மந்திரம் புத்தகமும் கொடுத்தாங்க. அடுத்துக் காஞ்சி மடத்தின் அரங்கம். இங்கேயும் நடையன்களைக் கழற்றி வைக்கணும். உள்ளே ஆசாரியாளின் பாதரக்ஷைகள் வைக்கப் பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அங்கேயும் காஞ்சி காமகோடி பீடத்தினரால் நடத்தப்படும் ஜனகல்யாண் இயக்கம் பற்றிய குறிப்புகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், இந்து மிஷன் ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள், குழந்தைகளுக்காக நுங்கம்பாக்கத்தில் நடத்தப்படும் சைல்ட் ட்ரஸ்ட் மருத்துவமனை, சங்கர நேத்ராலயாவின் செயல்பாடுகள் என அனைத்துமே அடுத்தடுத்து சொல்லப் பட்டிருந்தன.

ஸ்ரீபுரம் நாராயணி அம்மாவின் கோயில் பற்றிய வர்ணனைகள், நாராயணி அம்மாவால் நடத்தப்படும் சமூகசேவைகள் என அனைத்தும் ஒரு பெரிய அரங்கில் சொல்லப் பட்டிருக்கின்றது. ஸ்ரீபுரம் கோயிலின் பல்வேறு கோணங்களில் ஆன படங்களும் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. ராஷ்டிரிய சேவிகா சமிதியின் அரங்கமே எனக்கு மிகவும் பிடித்தது. அகண்ட பாரதம் அங்கே அமைக்கப் பட்டு நாடு சுதந்திரத்துக்கு முன்னர் இருந்த நிலைமையைக் குறிக்கப் பட்டிருந்தது. ஒரு இடத்தில் பாரதாமாதா சிற்பம் வடிவமைக்கப் பட்டு, சேவிகாப் பெண்டிரின் சேவைகளைப் பற்றியும் சொல்லி மாளாது. மலைவாழ் மக்களுக்கென ஒரு தனி அரங்கம் நிர்மாணிக்கப் பட்டிருந்தது. ஊட்டியில் இருந்து பல மலைவாழ்மக்களும் வந்து தங்களுக்குச் செய்யப் படும் சேவைகள் பற்றியும் இனி செய்யவேண்டியவை பற்றியும் விளக்கி இருந்தனர். பல மாதங்கள் தொடர்ந்து வேலை செய்திருந்தாலே இத்தனை அழகாகப் படங்கள் மூலமும், காட்சிப் பொருட்கள் மூலமும் விளக்கமுடியும். அனைவருக்கும் நல்ல பயிற்சியும் அளிக்கப் பட்டிருந்தது.

இம்முறை அனைவருமே நல்ல தமிழிலேயே பேசினார்கள். சொல்லப் போனால் ஹரித்வாரத்தில் இருந்து வந்திருந்த காயத்ரி மந்திர அறக்கட்டளை, ராஜஸ்தான் இளைஞர்கள் அறக்கட்டளை, குஜராத் ஸ்வாமிநாராயண் கோயிலின் சேவகர்கள் என அனைவருமே தமிழ் தெரிந்த வடநாட்டினராகவோ, தமிழ்நாட்டில் வாழ்க்கை நடத்தும் வடநாட்டினராகவோ நியமிக்கப் பட்டிருந்தனர். ஆங்காங்கே தொலைக்காட்சிப் பெட்டிகளும் வைக்கப் பட்டு யார், யாருக்கெல்லாம் தொலைக்காட்சி சானல்கள் இருக்கின்றனவோ அவர்கள் தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டிருந்தனர். யோககுரு ராம்தேவ் அவர்களின் யோகா அரங்கமும் மிகப் பெரியதாக இருந்தது. எனக்குத் தெரிஞ்சு விஸ்வதரிசனம் என்ற ஒன்றே தமிழின் ஒரே பக்தி சானல் என நினைக்கிறேன். அதுவும் எஸ்சிவி மூலம் கேபிள் இணைப்புப் பெற்றிருந்தால் கிடைக்காது எனவும் நம்புகிறேன். அவங்க நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்தது.

தெலுங்கில் பக்திசானல்கள் என்றே தனியாக நாலைந்து இருக்கிறது. இந்த மார்கழி மாதம் பூராவும் அவற்றில் திருப்பாவை பற்றி விளக்கங்களும், திருப்பாவை பாடச் சொல்லிக் கொடுப்பதும் நடப்பதாக திரு வெங்கட்ராம் திவாகர் கூறி இருக்கிறார். நாம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு திருப்பாவைக்கோ, திருவெம்பாவைக்கோ என்ன செய்கிறோம்??? குறைந்த பட்சமாய் ஆங்காங்கே இருக்கும் சிறு கோயில்களிலாவது சிறிய அளவில் திருப்பாவை, திருவெம்பாவைப் பள்ளிகளை அமைத்து மார்கழி மாதமாவது சொல்லிக் கொடுக்கலாம். இதை அரசு தான் செய்யணும்னு இல்லாமல் ஒவ்வொரு காலனி மக்களும் அவங்க அவங்க காலனிக் குழந்தைகளுக்காக இதைச் செய்யலாமே?? கவிநயா மற்ற மதங்களின் அரங்கங்கள் பற்றி ஒண்ணும் சொல்லலையேனு கேட்டிருக்கார். அந்த அரங்கங்கள் எதுவும் கண்களில் படவில்லை, அதோடு இது முழுக்க முழுக்க ஹிந்து இயக்கங்கள் செய்துவரும் சமூகப் பணிகளைப் பற்றிய ஒரு தெளிவைக் கொடுக்கும் வண்ணமே அமைக்கப் பட்டிருப்பதாயும் தெரிய வந்தது.

இதைத் தவிர நகரத்தார் சமூகம் தங்கள் கோயில்கள் பணிகள், அறப்பணிகள் பற்றிய அரங்கம் ஒன்றையும், செளராஷ்டிரா சமூகம் மதுரையில் இருந்து வந்து தமிழகத்தில் தாங்கள் செய்துவரும் இறைத்தொண்டு,சமூகத் தொண்டுகள் பற்றியும் அரங்கங்கள் நிர்மாணித்துச் சொல்லுவதையும் வடமாநிலங்களின் பிரபலமான அகர்வால் சமூகம், ஸ்வாமிநாராயண் இயக்கம் போன்றவற்றின் அரங்கங்களும் அருமையாக வடிவமைக்கப் பட்டிருந்தன. தமிழ் ஹிந்து.காம் தளத்தின் ஒரு சிறிய அரங்கமும் அங்கே காணப்பட்டது. ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை, வேதாத்திரி மஹரிஷியின் வாழ்க வளமுடன் போன்ற இயக்கங்கள் பழங்குடியினருக்கும், மலைவாழ் மக்களுக்கும் செய்துவரும் தொண்டுகள் அவர்களின் அரங்கங்கள் மூலம் தெரியவருகிறது. கடைசியில் கவியோகி சுத்தாநந்த பாரதி அவர்களின் சீடர்கள் இருவர் ஒருவர் பெயர் வெங்கட்ராமன், கவியோகியின் நேரடி சீடர், மற்றொருவர் அவர் பையரோ, மாப்பிள்ளையோ அறியேன். இருவரும் மிகக் கஷ்டப் பட்டு கவியோகியின் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்கின்றனராம். ஏதாவது உதவி செய்யுங்கள் என்று எங்களைக் கேட்க, (இந்த ஐந்து நாட்களில் அந்த அரங்கத்துக்குப் போனது நாங்க மட்டுமோனு தோணிச்சு எனக்கு).நாங்க ஒரு பாட்டம் எங்க குறையைச் சொல்லி அழுதிட்டு அவர் கொடுத்த அறிமுகச் சீட்டையும், புத்தகப் பட்டியலையும் வாங்கிட்டுக் கிளம்பினோம். திரும்பறச்சே பரிட்சை பேப்பர் மாதிரி ஒரு கேள்வி, பதில் பேப்பரைக் கொடுத்து எழுதச் சொல்றாங்க. ஏற்கெனவே விலாசம், பேரு எல்லாம் வாங்கி வச்சிருக்காங்க, இதிலே ஃபெயிலாயிட்டா என்ன பண்ணறதுனு கூட்டமா இருக்குனு பரிட்சை எழுதாமக் கிளம்பி வந்துட்டோம். எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான். வேறே என்ன செய்யறது??? சில அரங்கங்கள் பற்றிக் குறிப்பிட விட்டுப் போயிருக்குனு நினைக்கிறேன். கூடியவரையிலும் முக்கியமானவற்றைச் சொல்லியாச்சு.

மொத்தத்தில் பயனுள்ள கண்காட்சி. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் இது போன்ற ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்து, மக்கள் மத்தியில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்பவேண்டும். படங்களை உடனடியாகச் சேர்க்க முடியலை, காமிராவைக் கொஞ்சம் சரிக்கட்ட வேண்டி இருந்தது. இந்தப் படங்களிலும் காஞ்சி காமகோடி பீடத்தின் அரங்கப் படங்களும், திருப்பதி தேவஸ்தானத்தின் அரங்கப் படங்களும், மற்றும் சில முக்கியமான அரங்கங்களின் படங்களும் தவறுதலாக நீக்கப் பட்டிருக்கின்றன. நேற்று ஸ்கந்தாஸ்ரமம் சென்று அங்கே படம் எடுக்கும்போது காமிராவை வாங்கி வச்சுட்டாங்க. அங்கே எடுத்த படங்களை நீக்கும்போது மேற்குறிப்பிட்ட படங்களும் தவறுதலாய் நீங்கிவிட்டன.

9 comments:

 1. போகும் போது கையிலே ஒரு கேமரா கொண்டு போகக் கூடாதா!

  //எனக்குத் தெரிஞ்சு விஸ்வதரிசனம் என்ற ஒன்றே தமிழின் ஒரே பக்தி சானல் என நினைக்கிறேன் //

  பெங்களூரில் சங்கரா சானல் (மைசூர்லகூட )வருதே! சென்னை-ல கிடையாதா?

  //அனைவரும் கால் நடையன்களைக் கழற்றி வைத்துவிட்டே....//

  ’நடையன்’ இப்படியும் ஒரு தமிழ் வார்த்தை இருக்கா !!

  மூணு பதிவுக்கான மேட்டரை ஒரு பதிவுக்குள்ளேயே அடக்கிட்டிங்களே !

  ReplyDelete
 2. திரும்பிப் போங்க, மூணு பதிவாத் தான் போட்டிருக்கேன், எல்லாரும் புதுமையான பொருட்காட்சி பார்க்க வாங்க ங்கற பதிவிலே ஆரம்பிக்குது. :P:P:P

  இதிலே இருந்து என்ன தெரியுதுன்னா ஒழுங்கா பாடம் படிக்கறதில்லைனு புரியுது! இம்பொசிஷன் கொடுக்கணும்னு நினைக்கிறேன். :D

  ReplyDelete
 3. ம்ம்ம்ம்ம்?? இப்போத் தான் பார்க்கிறேன், காமிரா எடுத்துட்டுத் தான் போனோம், ஆனால் என்னவோ பிரச்னை காமிராவில், படங்கள் வரலை! :))))))))

  சென்னையிலே ஆன்மீகத்திற்கு தமிழ் சானல் என்றால் எப்போவாவது வரும் பொதிகையின் நிகழ்ச்சிகளும், தினம் காலை ஐந்தரையிலிருந்து ஏழுவரை வரும் ஜெயா தொலைக்காட்சியும் தான். தனிப்பட்ட சானல்கள் எதுவும் இங்கே வரமுடியாத அளவுக்கு மெகாசீரியல்களின் ஆக்கிரமிப்புகள். மக்கள் அதைப் பார்ப்பாங்களா??? ஆன்மீக சானல்கள் பார்ப்ப்பாங்களா??? உறவு கூட இப்போ சீரியல்களில் வரவங்க தான்! :P:P:P:P

  ReplyDelete
 4. "நடையன்" தமிழ்வாணன் பயன்படுத்திய சொல். இப்படித் தான் சொல்லிட்டிருந்தேன் முன்னாலே எல்லாம், அப்புறமா விட்டுப் போய் எனக்கே தெரியாமல் இந்தக் கட்டுரையில் இடம் பிடிச்சிருக்கு. :))))))))))

  ReplyDelete
 5. //திரும்பிப் போங்க, மூணு பதிவாத் தான் போட்டிருக்கேன் //

  நான் சொல்ல வந்தது இந்த ஒரு பதிவையே (போட்டோ எல்லாம் சேர்த்து) மூணா போட்டு இருக்கலாம்னு தான். :))

  ReplyDelete
 6. Innum niraiya spiritual groups romba interesting aahavum, oru kaasu kooda vaangaama, than sontha kaalkalilaeyae ippadi niraya saevaikalai makkalukku seykira amaippukalum irukku . unfortunately avaalukku advertisement um illai freengaruthunaalaeyo ennamo , mathippum illai . Sameepaththil naangal samrakshana enra oru amaippai senru parthoam. sree sathya sai mathiri avarkaloada amaippum pala nalla kaariyangalai oru paisa vangama silent aa seyyaraanga. manasu negizhnthathu.

  ReplyDelete
 7. வாங்க ஜெயஸ்ரீ, தாய்நாட்டுக்கு நல்வரவு. பல அமைப்புகள் இதில் பங்கு பெறவில்லைதான். இதிலே பங்கு பெற்ற அமைப்புகளிலும் எல்லாமே நமக்கு நன்கு தெரிந்தவைனும் சொல்லமுடியாது. அடுத்த வருஷம் அனைத்து அமைப்புகளும் பங்கு பெற்று இன்னும் அருமையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

  ReplyDelete
 8. நல்ல கட்டுரை இது நான் சுற்றிப் பார்த்த மாதிரி இருந்தது. அப்புறம் பதிவர்களுக்கு ஒரு தகவல்.

  திருப்பனந்தாள் காசி மடம், காசியில் கோதார்காட் என்று சொல்லும் கோதாரிஸ்வரர் கோவிலின் அருகில் உள்ளது. இந்தக் கோவிலும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மடத்தில் குறைவான வாடகையில் நிறைவாய் தங்கும் வசதி உள்ளது. இங்கு தினமும் மதியம் மட்டும் ஆகாரம் தருவார்கள். கொஞ்சம் காரமான(மிளகு) தென்னிந்திய சாப்பாடு தருவார்கள். இங்கு எதிரில் உள்ள தமிழர் கடையில் சொல்லிவிட்டால் நாம் காலை,இரவு எந்நேரமும் நமக்கு சாப்பாடு மற்றும் இட்டிலி தோசை கிடைக்கும். இங்கு எதிரில் ஒரு செட்டியார் கடை உள்ளது. ஒரிஜினல் ஸ்படிகம், ருத்திராட்சம் மற்றும் காசிச் செம்பு கிடைக்கும். நல்ல குறைவான விலை(பேரம் கிடையாது). அவர்கள் நாம் சுத்திப் பார்க்கவும்,சடங்குகள் செய்யவும் ஏற்பாடு செய்து தருவார்கள். நன்றி.

  ReplyDelete
 9. திருப்பனந்தாள் காசிமடம்

  ஹிஹி, பித்தனின் வாக்கு, இங்கே பாருங்க, ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கேன்.

  ReplyDelete